search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளின் கையில் விளையாட்டுப் பொருளாக மாறும் டி.வி. ரிமோட்டுகள்
    X
    குழந்தைகளின் கையில் விளையாட்டுப் பொருளாக மாறும் டி.வி. ரிமோட்டுகள்

    குழந்தைகளின் கையில் விளையாட்டுப் பொருளாக மாறும் டி.வி. ரிமோட்டுகள்

    ஊரடங்கு காலத்தில் வீடுகளில் குழந்தைகளின் கையில் டி.வி. ரிமோட்டுகள் விளையாட்டு பொருளாக மாறி இருக்கின்றன. விளையாட்டின்போது டி.வி. ரிமோட்டுகள் உடைந்து போவதால் பெற்றோர் கலக்கம் அடைகின்றனர்.
    கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. கொரோனாவுக்கு பயந்து பொதுமக்கள் வெளியே சுற்றாமல் வீடுகளிலேயே முடங்கி இருக்கிறார்கள்.

    டி.வி. பார்த்துக் கொண்டும், விரும்பிய புத்தகங்களை படித்தும், குழந்தைகளுடன் விளையாடும் மக்கள் தங்கள் பொழுதை போக்கி வருகிறார்கள். மேலும் உறவினர்கள் நண்பர்களுடன் செல்போனில் கதை பேசி தங்களது பழைய நினைவுகளை அசை போட்டுக்கொள்வதுடன், உறவுகளையும் மேம்படுத்தி வருகின்றனர். ஊரடங்கினால் தங்களது நிம்மதியை தொலைத்தவர்கள் என்றால் அது குழந்தைகள் மட்டும்தான். பட்டாம்பூச்சிகள் போல சுற்றித்திரிந்து விளையாடி மகிழ்ந்த குழந்தைகள் தற்போது சிறைக்கைதிகள் போல வீட்டுக்குள்ளேயே அடைப்பட்டு கிடக்கிறார்கள்.

    தற்போது குழந்தைகளின் ஒரே பொழுதுபோக்கு டி.வி. பார்ப்பது மட்டுமே. அதுவும் தங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை மட்டுமே பார்த்து ரசிக்கிறார்கள். வேறு ஏதாவது நிகழ்ச்சிகளும் சினிமா படங்களும் போட்டுவிட்டால் போதும் மூலைமுடுக்குகளில் சோகமாக அமர்ந்து விடுகிறார்கள். அப்போது கையில் கிடைக்கும் பொருட்களை தங்கள் கற்பனைக்கு ஏற்றபடி நினைத்துக் கொண்டு விளையாடி மகிழ்கிறார்கள்.

    இதனால் தற்போது டி.வி. மற்றும் ஏ.சி. ரிமோட்டுகள், செல்போன் என கையில் கிடைத்த எல்லா பொருட்களையும் கொண்டு ஆசை தீர விளையாடி மகிழ்கிறார்கள்.

    குழந்தைகளின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் பலரது வீடுகளில் தற்போது டி.வி., ஏ.சி. ரிமோட்டுகள் உடைந்துபோகின்றன. பல வீடுகளில் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை போல ரிமோட்டுகளுக்கு ஆபரேஷன் நடந்திருக்கிறது.

    அந்த அளவு ரிமோட்களை செல்லோ டேப் மற்றும் ரப்பர் பேண்ட் கொண்டு சுற்றி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன.

    இன்னும் பலரது வீடுகளில் ரிமோட்டுகள் உடைந்த நிலையில் டி.வி.க்களுக்கு தற்காலிக ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் ரிமோட்டுகள் உள்பட மின்னணு சாதனங்களை அருகில் உள்ள வீடுகளில் இருந்து இரவல் பெறும் நிலை உருவாகி இருக்கிறது.

    தற்போது கடைகள் அடைக்கப்பட்டு உள்ள நிலையில் மின்னணு சாதனங்களை எங்கே போய் வாங்குவது என பொதுமக்கள் பரிதவித்து வருவதை பார்க்க முடிகிறது.

    இதனால் வீடுகளில் உள்ள பெற்றோர் தங்களது குழந்தைகளின் நடவடிக்கையில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டியதாக உள்ளது.
    Next Story
    ×