என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தைகளுக்கு ஒவ்வாமை வருவது தற்போது அதிகரித்து உள்ளது. தூசு, மாசினால் ஏற்படும் அலர்ஜியும், குழந்தைகள் மத்தியில் பொதுவானதாக உள்ளது.
    ஒவ்வாமை என்ற வார்த்தையை சொன்னாலே, உடனடியாக, தோலில் தடிப்புத் தடிப்பாக வருவது தான், நம் நினைவிற்கு வரும். வெறும், 5 முதல் 10 சதவீதம் மட்டுமே தோலில் தடிப்பாக தோன்றும். அடிக்கடி சளி பிடிப்பது, மூக்கடைப்பு, தும்மல், மூச்சுத் திணறல், ஆஸ்துமா, கண்கள் சிவப்பது, மாத்திரைகள், உணவால் ஏற்படுவது என்று ஒவ்வாமை பாதிப்புகளை நிறையப் பார்க்கிறோம்.

    குழந்தைகளுக்கு ஒவ்வாமை வருவது தற்போது அதிகரித்து உள்ளது. தாய்ப்பாலில் இருந்து வேறு உணவிற்கு மாற தொடங்கும் ஆறு மாதங்களில் இருந்து, உணவு ஒவ்வாமை வருகிறது. உணவுப் பொருட்களால் ஏற்படும் அலர்ஜியானது, 90 சதவீதம் சுவை, நிறம், மணத்திற்காக சேர்க்கப்படும் பொருட்களாலேயே ஏற்படுகிறது.

    ஒரு குழந்தைக்கு, பால் ஒவ்வாமை என்றால், பால் குடித்த, 24 மணி நேரத்திற்குள் முகம், கை, கால் வீங்கி விடும். எத்தனை முறை பால் குடித்தாலும், குடித்த, 24 மணி நேரத்திற்குள் ஒவ்வாமைக்கான அறிகுறிகள் வர வேண்டும். அப்போது தான், அந்த குறிப்பிட்ட உணவால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று சொல்ல முடியும். பால் குடித்தவுடன், ஒவ்வாமைக்கான அறிகுறிகள் இருந்தது. ஆனால், அடுத்த நாள் வரவில்லை என்றால், அது பாலால் ஏற்பட்ட பிரச்சினை இல்லை. வேறு காரணங்களால் இருக்கலாம்.

    குறிப்பிட்ட உணவால் ஒவ்வாமை என்றால், எத்தனை முறை அந்தப் பொருளை சாப்பிட்டாலும், ஒவ்வொரு முறையும் அதே பாதிப்பு வர வேண்டும். குறிப்பிட்ட உணவால் குழந்தைக்கு பிரச்சினை வருகிறது என்ற சந்தேகம் இருந்தால், அதை உறுதி செய்து கொள்ள, நவீன பரிசோதனை வசதிகள் உள்ளன. 20 நிமிடங்களிலேயே எந்த உணவால் ஒவ்வாமை வருகிறது என்பதை கண்டுபிடித்து விட முடியும். அலர்ஜி ஏற்படுத்தும் உணவை தெரிந்து, தவிர்ப்பது பாதுகாப்பான வழி. உலகம் முழுவதிலும் இதைத் தான் பின்பற்றகின்றனர்.

    இது தவிர, தூசு, மாசினால் ஏற்படும் அலர்ஜியும், குழந்தைகள் மத்தியில் பொதுவானதாக உள்ளது. மூக்கடைப்பு, தும்மல், மூச்சிரைப்பு போன்ற அறிகுறிகள் அடிக்கடி வருகிறது, அலர்ஜியால் ஏற்பட்ட பாதிப்பு என்று தெரியாமலேயே சிகிச்சை எடுப்பர். இது ஏதோ வெளிப்புறத்தில் காற்று மாசு அதிகம்; அதனால், வருகிறது என்று நினைக்கிறோம். ஆனால், வீட்டிற்குள்ளேயே இருக்கும் பிரச்சினை இது.

    வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள், வளர்ப்பு பிராணிகளின் ரோமம், கரப்பான் பூச்சியால் வரும் அலர்ஜி என வீட்டுக்குள்ளும் பல்வேறு காரணங்கள் உள்ளன. இதை பரிசோதித்து அறியவும் வசதிகள் உள்ளன.
    குழந்தை வயதுக்கு ஏற்ப அவர்களின் தனிப்பட்ட மற்றும் சில காரணங்களை பொறுத்து ஒரு குழந்தைக்கு தேவைப்படும் தூக்கத்தின் அளவு மாறுபடுகிறது.
    குழந்தை வயதுக்கு ஏற்ப அவர்களின் தனிப்பட்ட மற்றும் சில காரணங்களை பொறுத்து ஒரு குழந்தைக்கு தேவைப்படும் தூக்கத்தின் அளவு மாறுபடுகிறது.

    பிறந்த குழந்தை எவ்வளவு நேரம் தூங்கும்

    1-4 வாரம் ஆன குழந்தையின் தூங்கும் நேரமானது 15 முதல் 18 மணி நேரம் வரை நீடிக்கும். பிறந்த குழந்தையின் உட்புற உயிரியல் கடிகாரம் அல்லது சர்காடியன் ரிதம் இல்லாதால் தூங்கும் நேரமானது பகல்நேரம் மற்றும் இரவுநேரம் சுழற்ச்சிகளுடன் தொடர்பில் இருப்பதில்லை. உண்மையில் பிறந்த குழந்தை தூங்கும் நேரம் ஒரு குறிப்பான நேரமே இருக்காது.

    1-4 மாதம் ஆன குழந்தையின் தூங்கும் நேரம்:

    1-4 மாதங்கள் ஆன குழந்தை தூங்கும் நேரம் நாள் ஒன்றுக்கு 14-15 மணி நேரம் வரை இருக்கும்.  இந்த மாத குழந்தைகளின் தூங்கும் நேரமானதுஒரு வடிவத்திற்கு வந்திருப்பதை நீங்கள் உணர்விர்கள். 1-4 மாதம் ஆன குழந்தையின் நீண்ட தூக்கமானது 4 முதல் 6 மணி நேரம் வரை இருக்கும்.

    4-12 மாதம் குழந்தை தூங்கும் நேரம்:

    4-12 மாதம் ஆன குழந்தையின் தூங்கும் நேரமானது 15 மணி நேரம் இருப்பது மிகவும் சிறந்தது. 11 மாதம்  வரை உள்ள குழந்தை, தூங்கும் நேரமானது 12 மணி நேரம் தான் இருக்கும். உண்மையாக இந்த மாத குழந்தைகளுக்கு ஆரோக்கியமான தூக்கம் என்பது மிகவும் அவசியம். பொதுவாக இந்த மாதக் குழந்தையின் தூக்கமானது நாள் ஒன்றுக்கு மூன்று சிறுதூக்கம் தொடர்ந்து ஆறு மாதம் வரை இருக்கும். எனவே அந்த நேரத்தில் அவர்கள் இரவில் தூங்குவதற்கு உடல் திறன் கொண்டிருப்பார்கள்.

    இந்த வயது குழந்தையின் தூக்கத்தின் உயிரியல் தாளங்கள் முதிர்ச்சியடைந்த நிலையில் உள்ளதால், வழக்கமாக கால இடைவெளிகளை தூங்குவது பொதுவாக இந்த காலத்தின் பிற்பகுதியில் நிகழ்கிறது. குழந்தையின் காலை சிற்றுண்டிக்கு பிறகு சிறுதூக்கம் பொதுவாக 9 மணியில் இருந்து 1 மணிநேரம் வரை இருக்கும். குழந்தையின் மதிய சிறுதூக்கம் 2 மணிக்கு தொடர்ந்து 1 அல்லது 2 மணி நேரம் வரை நிகழும். பிற்பகல் பிற்பகுதியில் சிறுதூக்கமானது 3 முதல் 5 மணி நேரம் வரை நிகழும், இந்த இடைவெளி நேரமானது வேறுபடும்.

    1-3 வயது ஆன குழந்தை தூங்கும் நேரம்:

    இந்த வயது குழந்தைகளுக்கு 14 மணி நேரம் தூக்கம் போதுமானது. இந்த வயது குழந்தைகள் காலை அல்லது மாலை வேளை சிறுதூக்கத்தை இழப்பார்கள். நாள் ஒன்றுக்கு ஒரு முறை மட்டுமே பகலில் தூங்குவார். இந்த வயது குழந்தைக்கு 14 மணி நேரம் தூக்கம் தேவைப்படும் போது அவை வழக்கமாக 10 மணி நேரம் மட்டுமே கிடைக்கும். எனவே நாள் ஒன்றுக்கு ஒரு குட்டிதூக்கம் தேவைப்படும். அதுவும் ஒன்று முதல் மூன்றரை மணி நேரம் வரை இருக்கலாம். இவர்களின் இரவு தூங்கும் நேரமானது 7 மணி முதல் 9 மணிக்குள் தூங்கி, காலை 6 மணி முதல் 8 மணிக்குள் எழுந்திருப்பார்கள்.
    ஊரடங்கு காரணமாக கடைகள் தொடர்ந்து அடைக்கப்பட்டு கிடப்பதால், குழந்தைகள் இதுவரை விரும்பி சாப்பிட்ட நொறுக்குத்தீனி வகைகள் கிடைக்காததால் பாரம்பரிய தின்பண்டங்களை சுவைக்க தொடங்கியுள்ளனர்.
    இந்தக்கால குழந்தைகள் சாப்பாட்டைவிட பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு வரும் சிப்ஸ் உள்ளிட்ட நொறுக்கு தீனிகளை அதிகம் விரும்பி சாப்பிட்டனர். அதிலும் பீசா, பர்க்கர், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள், சாக்லெட்டுகள் என்றால் கேட்கவே வேண்டாம். எந்த பல்பொருள் அங்காடிக்கு சென்றாலும் அங்கு குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இதுபோன்ற நொறுக்குத்தீனி வகைகள்தான் பிரதானமாக இருக்கும்.

    இதுபோன்றவற்றை அதிகம் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் எவ்வளவோ கூறினாலும் அதை குழந்தைகளும் கேட்பதில்லை. பெற்றோரும் வாங்குவதை நிறுத்தவில்லை.அப்படிப்பட்ட நிலையை கொரோனா வந்து அடியோடு மாற்றிவிட்டது. ஆம்! கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் இதுபோன்ற நொறுக்குத்தீனிகள் குழந்தைகளுக்கு கிடைக்கவில்லை.

    இதையடுத்து வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக சுண்டல், வடை போன்ற பாரம்பரிய திண்பண்டங்களை பெரியவர்கள் செய்து கொடுக்க தொடங்கியுள்ளனர். சில பெண்கள் யூ-டியூப் வீடியோக்களை பார்த்து இதுமாதிரி பலகாரங்களை செய்து தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள்.ஆரம்பத்தில் இவற்றின் மீது அதிக நாட்டம் கொள்ளாத குழந்தைகளும் தற்போது இந்த திண்பண்டங்களை விரும்பி சுவைக்க தொடங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் கடந்த ஒரு மாதத்தில் நம் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

    அதில் பல நமது வாழ்வாதாரத்தையே பாதிக்கக்கூடியவை. இருந்தபோதும் இதுபோன்ற ஒருசில நல்ல மாற்றத்தையும் கொடுத்துள்ளது என்று குடும்பத்தலைவி ஒருவர் கூறினார்.
    அறிவையும், புத்துணர்ச்சி தரும் புதிய சிந்தனையையும் வளர்க்கும் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை இன்றைய தலைமுறையினரிடம் ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
    இன்றைக்கு நம் சமூகத்தில் பெரும்பாலான குடும்பங்களில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லை. பெற்றோர் புத்தகங்களை வாசிக்கும்போது, குழந்தைகளின் ஆரோக்கியமான மனவளர்ச்சிக்கான சாத்தியங்கள் கூடுகின்றன. நாம் சாப்பிட, தூங்க நேரம் ஒதுக்குவது போலவே புத்தக வாசிப்பிற்கும் ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அந்த நேரங்களில் படித்தே தீருவது என்று உறுதி எடுத்துகொள்ளுங்கள். காலையில் அன்றைய செய்தித்தாள்கள் பார்ப்பதுபோல காலை , மதியம் மற்றும் இரவு உணவு உண்ணும் நேரங்களில் படிக்க முயற்சி செய்யுங்கள். இதுவே கிட்டத்தட்ட ஒரு நாளில் ஒரு மணிநேர வாசிப்பாக ஆகிவிடும். இது ஒரு நல்ல தொடக்கமாக மட்டுமே இருக்கும். இதற்கு மேலும் நீங்கள் நேரம் ஒதுக்கலாம்.

    கிட்டத்தட்ட எல்லாருக்குமே தங்கள் வாழ்க்கை, தங்கள் வேலை, தங்கள் குடும்பம் என்ற கவலைகளும் அக்கறைகளும் ஆர்வங்களும் தங்களைச் சுற்றியே அமைகின்றன. இவற்றில் எதுவுமே சமூகத்தின் தொடர்பு இல்லாமல் தனித்து இயங்குவதில்லை. ஆனால், பொதுவாக யாருமே இதை ஆழமாக உணர்வதில்லை. இதனாலேயே பல நடைமுறை சிக்கல்கள் அவரவர் வாழ்க்கையில் தோன்றுகின்றன. இப்படி தோன்றும் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் சரிவர கையாள வேண்டும் என்றால், ஒவ்வொருவரும் தங்களை மீறி, தங்களுடைய குறுகிய உலகத்தை தாண்டி பார்க்க வேண்டும். இப்படி பார்க்க உதவுவதுதான் வாசிப்பு பழக்கம். இது மிக குறுகிய நோக்கம் என்றாலும் பயனுள்ளது. ஆனால், இதைவிட முக்கியமான உந்துதல் வாசிப்புக்கு பின்னால் செயல்படுகிறது.

    இலக்கியத்தை வாசிப்பது மட்டும் வாசிப்பு என்று பரவலாக மக்கள் நினைக்கிறார்கள். வாசிப்பு எந்த துறையை சார்ந்தும் இருக்கலாம். தன் தொழில் தொடர்பாக வாசிப்பதை நாம் வாசிப்பு என்று கொள்ள முடியாது. பல துறை புத்தகங்களையும் வாசிக்கும் போதுதான் ஒருவருடைய வாசிப்பு வளமானது என்று நாம் கூறலாம். இலக்கியம் ஒரு பகுதிதான். வரலாறு, பொதுமக்களுக்கான அறிவியல், வாழ்க்கை வரலாறு, அரசியல், இசை என்று வாசிப்பு பல துறைகளையும் உள்ளடக்கியிருக்கும்போதுதான் நம் உலகம் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைகிறது.

    ஒவ்வொரு புத்தகத்தின் மூலமும் உணர்வுகள், மொழி, பண்பாட்டு அடையாளங்கள், உலக நடப்பு என்று பல விஷயங்கள் நமக்குள் பாய்ந்த வண்ணம் இருக்கின்றன. வாசிப்பு என்பது புத்தகங்களை ஒரு முறை வாசிப்பது மட்டுமல்ல, மிக முக்கியமான புத்தகங்களை நாம் அடிக்கடி வாசிக்க வேண்டும். ஒவ்வொரு முக்கியமான புத்தகமும் நம்முடன் நெருங்கிவந்து நம் வாழ்க்கையின் கணங்களை வளமாக்க செய்வதை உணர்வது அற்புத அனுபவம்.

    நம்மை ஏமாற்றாத, ஒரு சிறந்த நண்பன் புத்தகம் என்பார்கள். இந்த நண்பனை உயிர் நண்பனாக ஏற்றுக்கொண்டவர்கள், புகழ் உச்சியில் அமர்ந்திருக்கிறார்கள். பலர் சாதனையாளராகவும், சிலர் புரட்சியாளராகவும் மாறியிருக்கிறார்கள். ‘அடிமைகளின் சூரியன்’ எனப் போற்றப்பட்ட ஆபிரகாம் லிங்கன், புத்தகங்கள் படித்தே உயர்ந்தவர். அவர் தச்சுத் தொழிலாளியின் மகனாக பிறந்து, புத்தக படிப்பினால் தேசம் புகழ திகழ்ந்தார். ‘ஜார்ஜ் வாஷிங்டன் வரலாறு’ என்ற புத்தகத்தை இரவல் வாங்கி படித்தவருக்கு அமெரிக்காவின் குடியரசு தலைவராக வேண்டும் என்ற ஆசை ஏற்பட, அதுவே அமெரிக்க வரலாறாக மாறியது. லண்டன் நூலகத்தில், இருபது ஆண்டுகள், அரிய நூல்களை படித்து ஆய்வு செய்த காரல்மார்க்ஸ், உலகின் பொதுவுடைமை தந்தையாக உயர்ந்தார்.

    காஞ்சீபுரத்தில் இருந்து, முதுகலை பட்டதாரியான ஓர் இளைஞன், சென்னை நோக்கி சென்றான். முடிவில் தமிழகத்தின் முதல்வராக திரும்பினான் என்று பேரறிஞர் அண்ணாவை புகழ்வார்கள். அவர், சென்னை கன்னிமாரா நூலகத்தில் உள்ள பெரும்பாலான புத்தகங்களை படித்தவர். நூலகம் திறக்கும்பொழுது உள்ளே நுழைபவர், இரவில் அது மூடப்படும்பொழுது தான் வெளியே வருவாராம். அமெரிக்க மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டபோதும், அவர் அரிதான நூல் ஒன்றை படித்து கொண்டிருந்தார்.

    அந்த நூல் முழுவதையும் படித்து முடிக்க வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சையையே ஒரு நாள் ஒத்திவைக்கும்படி மருத்துவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இது, வாசிப்பின் மேல் வைத்த அவரின் நேசிப்பை உணர்த்துகிறது. இந்தியாவின் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, “நான் மறைந்தபின் உடல் மீது மலர் மாலைகளை வைக்கவேண்டாம், என் மடி மீது புத்தகங்களை பரப்புங்கள்” என்று கேட்டுக் கொண்டார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விஞ்ஞானி மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளரும் கூட. அறிவியல் சம்பந்தமான புத்தகங்கள் மட்டுமல்லாது அனைத்து விதமான நூல்களையும் படிக்க ஆர்வம் காட்டியவர். இளைஞர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தும் விதமாக பல புத்தகங்களை எழுதி இருக்கிறார்.

    கல்வி அறிவை போதிக்கும் பள்ளி ஆசானுக்கு அடுத்த இடத்தில் இருப்பவை புத்தகங்கள். வாழ்க்கையில் சிகரம் தொட்ட சாதனையாளர்களின் வரலாறு மட்டும் புத்தகங்களாக பதிவாகவில்லை. அவர்கள் அந்த நிலையை எட்ட கைகொடுத்தவை புத்தகங்களாகவே இருக்கின்றன. இவ்வளவு சிறப்பு மிக்க புத்தகங்கள் சமீபகாலமாக ஒதுக்கப்படுவதாக ஒரு சர்வே கூறுகிறது. ஏனெனில் இன்றைய இளைஞர்களிடம் புத்தக வாசிப்பே குறைந்துவிட்டதாக மற்றொரு சர்வே தெரிவிக்கிறது. விரல் நுனியில் அனைத்து தகவல்களையும் சொடுக்கும் கணினி உலகம், புத்தகங்களையும் கையடக்கமாக கொண்டுவந்து விட்டதால் இப்போது அதில் தான் நிறைய பேர் வாசிக்கிறார்கள் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. அறிவையும், புத்துணர்ச்சி தரும் புதிய சிந்தனையையும் வளர்க்கும் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை இன்றைய தலைமுறையினரிடம் ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

    மணிகண்டன், 9-ம் வகுப்பு,

    அரசு உயர்நிலைப்பள்ளி,

    அளவிடங்கான், சிவகங்கை.
    எந்நேரமும் படிப்பு, படிப்பு என்று இல்லாமல் அவ்வப்போது குடும்பத்தில் உள்ளவர்களுடன் விளையாடி மகிழுங்கள். ஒவ்வொரு விளையாட்டும் அறிவு பூர்வமானது தான்.
    கோடை காலம். வெயில் கொளுத்தி வருகிறது. கொரோனா தாக்கம் இல்லாமல் இருந்திருந்தால் பள்ளி விடுமுறை நாளில் இந்நேரம் மாணவ செல்வங்களாகிய நீங்கள் கடல் உள்ள இடங்களுக்கு சென்று கடல் அலையில் கால் நனைத்தும், குளித்தும் மகிழ்ந்து இருப்பீர்கள். என்ன செய்வது. இந்த ஆண்டு கொரோனா உலக மக்களை பாடாய் படுத்தி விட்டது. இதனால், எங்கு பார்த்தாலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    பொதுமக்கள் வெளியில் வரவே தடை. அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வர நேரிட்டாலும் பல வித சட்டதிட்டங்கள். இதனால், தாய்-தந்தையரின், தாத்தா மற்றும் உறவினர்களின் கரங்களை பற்றிக் கொண்டு எங்கும் செல்ல முடியவில்லை. வீட்டுக்குள்ளேயே அடைபட்டு கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. ஒருநாள் ஊரடங்கு என்றாலே நம்மால், வீட்டிற்குள் இருக்க முடியாது. ஊரடங்கு முடியும் நேரமான 6 மணி எப்ப வரும் என்று காத்துக் கிடப்போம். ஆனால், எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது மாதக்கணக்கில் ஊரடங்கு.

    இதனால், வீடுகளுக்குள் நாள் கணக்கில் முடங்கி கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. எவ்வளவு நேரம் தான் தொலைக்காட்சிகளை பார்ப்பது. இந்த நாட்களை எப்படி கடப்பது?. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்னும் நடைபெறவில்லை. கண்டிப்பாக நடக்கும் என்று அரசு அறிவித்து உள்ளது. ஆகவே, அந்த வகுப்பை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு அருமையான வாய்ப்பு. வீட்டில் இருந்த படியே பாடங்களை படிக்கலாம்.

    தெரியாததை தாய்-தந்தையரிடமோ அல்லது சகோதர-சகோதரியிடமோ கேட்டு தெரிந்து கொள்ளலாம். படித்தது மனதில் நிற்கவில்லை என்றால் எழுதி, எழுதி பாருங்கள். மனதில் பதிந்து விடும். பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்தவர்கள் அடுத்து என்ன படிக்கலாம்?, எந்த கல்லூரியை தேர்ந்தெடுக்கலாம் என்று வீட்டில் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்கலாம். கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு எழுத உள்ளவர்கள் அதற்காக தயார் ஆகலாம்.

    அதற்காக எந்நேரமும் படிப்பு, படிப்பு என்று இல்லாமல் அவ்வப்போது குடும்பத்தில் உள்ளவர்களுடன் விளையாடி மகிழுங்கள். ஒவ்வொரு விளையாட்டும் அறிவு பூர்வமானது தான். சிறுவர்களுக்கு, விளையாட்டு தெம்பு தருகிறது. அன்பும், ஆரோக்கியமும் கொடுக்கிறது. பொறுமையும், பெருமையும் சேர்த்து தருகிறது. ஆகவே, அவரவர் மனநிலை, சக்தி, சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் வீட்டில் பொழுதை கழியுங்கள் ஊரடங்கு முடியும் வரை.
    வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் பயன்பெறுவதற்கு ஏதுவாக பள்ளிக்கல்வி துறை சார்பில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடங்களை இணையவழியில் கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    கொரோனா நோய்த் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் இதன் காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கோடை விடுமுறைக்கு முன்னதாகவே அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இருக்கின்றன.

    இந்த நிலையில் வீட்டில் முடங்கி இருக்கும் மாணவர்கள் பயனுள்ளபடி நேரத்தை செலவிடும் வகையில், தனியார் கல்வி நிறுவனங்கள் இணையவழி கல்வியை ஊக்கப்படுத்தி வருகின்றன. வீட்டில் இருந்தபடியே ஆசிரியர்கள் மூலம் கற்பிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டுகின்றன. மாணவர்களும் இணைய வழி கல்வியை ஆர்வமுடன் கற்கின்றனர்.

    அந்த வரிசையில் தற்போது தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறையும் இணையவழி கல்வி மூலம் மாணவர்களுக்கு கற்பித்தல் முறையை வழங்க முன்வந்து இருக்கின்றனர். இதற்காக elearning.tnschools.gov.in என்ற இணையதளத்தை உருவாக்கி இருக்கின்றனர்.

    அதில் உள்ளே நுழைந்ததும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பாடங்கள் தமிழ், ஆங்கிலத்தில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. அதை மாணவர்கள் தேர்வு செய்து பார்க்கலாம்.

    அதுமட்டுமில்லாமல், நீட் தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு என்றும் தனிப்பிரிவு இந்த இணையதளத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இணையதளத்தில் இருந்து கல்வி தொலைக்காட்சிக்கும் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே இதில் சென்றும் கல்வி தொலைக்காட்சியை மாணவர்கள் யூ-டியூப் வாயிலாக பார்க்கலாம்.

    இந்த இணையதளத்தை மாணவர்களை பார்க்க சொல்லி பெற்றோர் அறிவுறுத்த வேண்டும் என்றும், ஆசிரியர்களும் இதன் மூலம் பயன்பெறலாம் என்றும் அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஊரடங்கால் வீடுகளில் முடங்கி இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக ஆசிரியர்கள் பாடம் கற்றுத்தருகின்றனர்.
    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

    1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மட்டும் நடைபெற வேண்டி உள்ளது. அதேபோல பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு தேர்வும் நடைபெறாமல் உள்ளது.

    இந்த நிலையில் சில தனியார் பள்ளி நிறுவனங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்த தொடங்கி உள்ளது. அந்த வகையில், புதுக்கோட்டையிலும் சில தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பித்து வருகின்றனர்.

    புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வருகிற கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 செல்லும் மாணவ-மாணவிகளுக்கு பாடங்களை தற்போது நடத்த தொடங்கி உள்ளனர். இதற்காக தனியாக ஒரு செயலியை உருவாக்கி உள்ளனர். அந்த செயலியை மாணவ-மாணவிகள் தங்களது ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து வைத்துள்ளனர்.

    ஆன்லைன் மூலம் அந்த செயலி வழியாக தினமும் ஆசிரியர் ஒருவர் வீட்டில் இருந்தபடி பாடம் நடத்துகிறார். ஒரே நேரத்தில் 60 முதல் 70 மாணவர்கள் வீட்டில் இருந்தபடி பாடம் கற்றுக்கொள்கின்றனர். மாணவர்களின் செல்போன் திரையில் ஆசிரியரின் முகம் தெரிகிறது. மேலும் அவர் கூறுவதை மாணவர்கள் கேட்டு குறிப்பெடுத்துக்கொள்கின்றனர். மேலும் சந்தேகங்கள் இருந்தால் மாணவ-மாணவிகள் கேள்வி கேட்கின்ற னர். தினமும் ஒரு மணி நேரம் இந்த வகுப்பு நடைபெறுவதாக பள்ளி வட்டாரத்தில் தெரிவித்தனர்.

    பள்ளிகள் திறக்கப்படும் தேதி எப்போது? என தெரியாத நிலையில் தனியார் பள்ளிகள் அடுத்த கட்ட நடவடிக்கையாக இது போன்ற செயலியில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் முறையை தொடங்கி விட்டனர். புதுக்கோட்டை மட்டுமின்றி, திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் ஆன்லைன் மூலமாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் கற்றுத்தருகின்றனர்.

    அரசு பள்ளிகளில் உள்ள நிலை குறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களையும் அவர்களது பெற்றோரையும் தொடர்பு கொண்டு செல்போனில் அவ்வப்போது பேசி வருகின்றனர். மாணவர்களை தினமும் படிப்பில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தி வருகின்றனர். பள்ளிக்கல்வி துறை சார்பில் இணையதளம் தனியாக தொடங்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்த அறிவுறுத்தி உள்ளோம். அடுத்த கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள் தற்போது வரத்தொடங்கி உள்ளன. இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை’ என்றார்.
    முதலில் பெற்றோர் முன்னுதாரணமாக இருந்து புத்தகங்களை வாசிக்க வேண்டும். குழந்தைகளுக்கும் அப்பழக்கம் இயல்பாக மாறிவிடும்.
    குழந்தைப் பருவத்தில் வாசிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தி விட்டாலே போதும் வளர வளர படிக்கும் ஆர்வம் தானாகவே வரும். புத்தகங்களைப் படிக்கும் குழந்தைகள் இயல்பாகவே அறிவுத் திறனையும், கற்பனை ஆற்றலையும், நினைவாற்றலையும் பெற்று விடுகின்றனர். இத்தகைய ஆற்றலால் பள்ளிப் பாடங்கள் படித்தல் கூட எளிதாக வசப்பட்டு விடுகிறது.

    படிக்கும் போதே மகிழ்ச்சியைத் தருவது புத்தகங்கள் என்பது மறுக்க இயலாத உண்மை. புத்தகங்களைப் படிக்கும் குழந்தைகள் அதில் வரும் பாத்திரங்களை மனதில் காட்சிப் படுத்தும் போதே கற்பனைத் திறன் விரிவடைகிறது. மனம் சோர்ந்திருக்கும் போது ஊக்கத்தையும் தருவது புத்தகங்கள் தான். அறம் சார்ந்த சிந்தனைகளையும் சமூகம் சார்ந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முயல்வது புத்தகங்கள். ஒரு குழந்தையை நேரிய வழியில் நடக்க வைப்பதற்கும் சிறந்த சமூக செயற்பாட்டாளானாக அவனை உருவாக்குவதிலும் பங்கு வகிப்பது புத்தகங்களே.

    புத்தகங்களைப் போன்ற சிறந்த வழிகாட்டி ஏதும் இல்லை. நல்ல நண்பனாக நம்முடன் பயணிப்பவை புத்தகங்கள். நம்சிந்தனையைத் துாண்டவும்,சிந்தனையைப் புதுப்பிக்கவும் உதவுவது புத்தகங்கள். நம் மனதை உழுது, அதில் நல்ல பண்புகளை விதைப்பது புத்தகங்ள். சிறந்த வாசிப்பாளனால் மட்டுமே சிறந்த எழுத்தாளானாக முடியும். புத்தகங்களை வாசிக்கும் குழந்தைகளை சின்ன சின்ன பரிசுகள் கொடுத்து ஊக்கப்படுத்துங்கள்.

    படித்த புத்தகத்தில் உள்ள செய்திகள் பற்றி கலந்துரையாடுங்கள். குழந்தைகளின் பிறந்த நாளில் புத்தகங்களைப் பரிசளியுங்கள். கதைகளை படிக்கும் குழந்தைகளை பின்னர் அவற்றை கூறச் செய்யலாம். கதை சொல்லிகளாக இருந்த பாட்டிகள் விட்டுச் சென்ற வெற்றிடத்தை குழந்தைகளைக் கொண்டு நிரப்புங்கள். பின்னாளில் அவர்களை சிறந்த கதை சொல்லிகளாக உருவாக்கும் நல் வாய்ப்பை புத்தகங்கள் வழங்குகின்றன.

    முதலில் பெற்றோர் முன்னுதாரணமாக இருந்து புத்தகங்களை வாசிக்க வேண்டும். குழந்தைகளுக்கும் அப்பழக்கம் இயல்பாக மாறிவிடும். தேடலை உருவாக்கி அவர்களின் சிந்தனைகளைத் துாண்டிவிடும். புத்தகங்களைப் படிக்கும் போது அவை நம்மை அந்த காலத்திற்கே கடத்திச் செல்லும். இயற்கை காட்சிகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும். வரலாற்றுக் காலத்தின் சுவடுகளில் அவர்களை பதிய விடும். 
    கொரோனா ஊரடங்கு சட்டத்தால் முடங்கி போன குழந்தைகளுக்கு நுங்கு வண்டி விளையாட்டு உற்சாகம் ஊட்டி வருகிறது.
    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு சட்டம் அமலில் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி போய் உள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவர்களும் வீட்டிலேயே முடங்கி போய் உள்ளனர்.

    பல அலுவலகங்களில் வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி வலியுறுத்தி உள்ளதால் அவர்களும் வீட்டைவிட்டு வெளியில் வருவதில்லை. இதன் காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. காய்கறி கடைகள், மளிகை கடைகள், இறைச்சி கடைகள் மட்டும் அரசு குறிப்பிட்ட நேரத்தில் இயங்கி வருகின்றன. அந்த நேரங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

    பகல் ஒரு மணிக்கு பிறகு ஊர் முழுவதும் மயான அமைதி நிலவுகிறது. சென்னை, கோவை உள்பட தொழில் நகரங்களில் தினசரி வாழ்வை பரபரப்பாக வைத்திருக்கும் மக்களுக்கு ஒவ்வொரு நொடியும் யுகமாக கழிகிறது. விஞ்ஞானத்தால் விளைந்த செல்போன் கூட போர் அடிக்க தொடங்கி விட்டது.

    இத்தகைய சூழ்நிலையில் விஞ்ஞான எழுச்சியால் நம்மால் மறக்கக்கடிக்கப்பட்ட பழைய கிராமிய விளையாட்டுகள் தான் தற்போது பலருக்கும் உத்வேகத்தை அளித்து வருகிறது.

    அந்த வகையில் பழைய விளையாட்டுகள் புத்துயிர் பெற்று வருகிறது. பல்லாங்குழி, தாயம், நொண்டி உள்ளிட்ட விளையாட்டுகள் தற்போதைய தலைமுறை குழந்தைகளும் அறியும்படி பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்க கூடிய ஒரு கால நேரத்தை கொரோனா உருவாக்கி இருக்கிறது என்றால் அது மிகையில்லை.

    இப்படி நாம் மறந்து போன விளையாட்டுகள் இப்போது புத்துயிர் பெற்றிருக்கிறது. அந்த வகையில் சிறுவர்களின் விளையாட்டான, நுங்கு வண்டி விளையாட்டு தற்போது எழுச்சி பெற்று இருக்கிறது.

    நுங்கு எடுத்த 2 முழுபப் பனங்காய்களை எடுத்துக்கொண்டு அதில் துளையிட்டு வண்டி சக்கரங்களாக மாற்றம் செய்து, அதில் நீண்ட குச்சியை பயன்படுத்தி வண்டியாக வடிவமைத்து சிறுவர்கள் விளையாடும் காட்சிகளை பார்க்க முடிகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற விளையாட்டுகள் வழக்கத்தில் இருந்தது. காலப்போக்கில் பிளாஸ்டிக், எலெக்ட்ரானிக் பொருட்கள் மோகத்தால் மறக்கடிக்கப்பட்டது. இப்போது பெற்றோர்களே குழந்தைகள் விளையாடுவதற்கு நுங்கு வண்டி செய்து கொடுப்பதை திருவள்ளூர், காஞ்சீபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பார்க்க முடிகிறது.

    இளைய தலைமுறை குழந்தைகளும், சிறுவர்களும் ஆர்வத்துடன் நுங்கு வண்டியை ஓட்டி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு வகையில் நம்முடைய பாரம்பரிய விளையாட்டை மீட்டெடுக்கும் முயற்சியாகவும் இந்த காலக்கட்டம் அமைந்துள்ளது.

    பனை மற்றும் அதன் பயன்களை இளைய தலைமுறை அறிந்து கொள்ளவும் தற்போது நிலவும் சூழல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கியுள்ள சிறுவர்-சிறுமிகள் டி.வி. பார்த்தும், செல்போனில் விளையாடியும் அலுத்துப்போய் விட்டனர். இதனால் பாட்டி சொல்லும் கதையை ஆர்வத்துடன் கேட்டு மகிழ்கின்றனர்.
    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. முன்பெல்லாம் விடுமுறை என்றால் உறவினர்கள் வீடுகளுக்கு செல்வது உண்டு. அப்படி செல்லவில்லை என்றாலும் குழந்தைகள் தங்களது நண்பர்களுடன் ஆடி, பாடி மகிழ்வார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் விடுமுறை விடப்பட்டாலும் சிறப்பு வகுப்பு, பரதநாட்டியம், கராத்தே என தங்கள் குழந்தைகளுக்கு கூடுதல் திறமைகளை வளர்க்கும் முயற்சியில் பெற்றோர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    கொரோனா வைரஸ் பரவுதை தடுக்க பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டாலும் சிறப்பு வகுப்பு எதுவும் நடத்தக்கூடாது என கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டதால் வெளியூரில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கும் குழந்தைகளை அழைத்து கொண்டு பெற்றோர்களால் செல்ல முடியவில்லை. வீட்டை விட்டு வெளியேயும் செல்ல முடியாது. அருகில் உள்ள மைதானத்திற்கு சென்று நண்பர்களுடனும் சேர்ந்து விளையாட முடியாது.

    இதனால் குழந்தைகள் அனைவரும் அவரவர் வீட்டுக்குள்ளேயே சிறைபட்டு கிடக்கிறார்கள். எவ்வளவு நேரம்தான் டி.வி. பார்ப்பது, செல்போனில் விளையாடுவது என்று அலுத்துப்போய் விட்டனர். ஊரடங்கு காரணமாக ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலை வேறுவழியின்றி பெரியவர்கள் ஏற்றுக்கொண்டு உள்ளனர். பாவம்... குழந்தைகள் என்ன செய்வார்கள்?. அவர்களை பாதுகாப்பாக வைத்திருப்பதோடு, மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கும், பெரியவர்களுக்கு உள்ளது.

    இதனால் தஞ்சை மாநகரில் பாட்டி, தாத்தாக்கள், நமது பாரம்பரிய விளையாட்டு களான பல்லாங்குழி, பரமபதம், தட்டாங்கல், குச்சிகளை அடுக்குதல், ஆடுபுலி ஆட்டம் போன்ற விளையாட்டுக்களை தங்களது பேரன், பேத்திகளுக்கு சொல்லி கொடுத்து குடும்பத்தோடு விளையாடி மகிழ்கின்றனர்.

    மேலும் நீதி போதனைகளை சொல்லக்கூடிய கதைகளையும் குழந்தைகளுக்கு பாட்டிகள் எடுத்து கூறி வருகின்றனர். இதை கேட்டு மகிழ்ந்த சிறுவர், சிறுமிகள் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள சிறுவர், சிறுமிகளையும் அழைத்து வந்து கதை கேட்கும்படி கூறி வருகின்றனர். இதன் மூலம் குழந்தைகளுக்கு நன்றாக பொழுதுபோவதுடன், வீட்டில் இவர்களது சேட்டை இன்றி பெற்றோர்களும் நிம்மதியுடன் இருக்கின்றனர். இது குறித்து 5-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கூறும்போது, நான் பாட்டி சொல்லும் கதையை கேட்பதுடன், ஓவியத்தில் ஆர்வம் இருப்பதால் ஓவியமும் வரைந்து வருகிறேன். மேலும் டி.வி. பார்த்து பொழுதை கழித்து கொண்டு இருக்கிறேன் என்றார். பலர், யோகா கற்பதுடன், புத்தகம் படிக்கும் பழக்கத்தையும் வளர்த்து வருகின்றனர்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை டி.வி., செல்போனின் தாக்கத்தில் இருந்து விடுவித்து செய்தித்தாள், புத்தகம் போன்றவைகளை கொடுத்து வாசிக்கும் பழக்கத்தையும், பாரம்பரிய விளையாட்டுக்கள் மீதும் கவனத்தை திசை திருப்பி அவர்களை நல்வழிப்படுத்த முன்வர வேண்டும். 
    ஊரடங்கை மாணவர்களுக்கு பயனுள்ளதாக்கும் வகையில், திருக்குறளை கற்று வாட்ஸ்-அப் குரூப்பில் வீடியோவாக அனுப்ப வேண்டும் என ஆசிரியர் உத்தரவிட்டு நடைமுறைப்படுத்தி வருகிறார்.
    கொரோனாவை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. இந்த சமயத்தில், கொரோனாவின் தாக்கம் அறியாமல் சிலர் வெளியே சென்று விளையாடுவதாகவும், வீட்டில் இருக்கும் மாணவர்கள் டி.வி. பார்ப்பது மற்றும் சின்ன, சின்ன சேட்டைகளை செய்து பெற்றோருக்கு இடைஞ்சலையும் உருவாக்குவதாக தெரிகிறது.

    இந்தநிலையில், ஊரடங்கை மாணவர்களுக்கு பயனுள்ளதாக்கும் வகையில் குமரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் முயற்சி எடுத்துள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:-

    குளச்சல் அருகே கோடிமுனை மீனவர் கிராமத்தில் புனித மிக்கேல் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு வாட்ஸ்-அப் குரூப் உள்ளது. இதில் மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தினர் இணைந்துள்ளனர். பள்ளிக்கு பயனுள்ள நல்ல விஷயங்கள் இதில் பதிவு செய்யப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் ஊரடங்கால் வீட்டில் முடங்கி உள்ள மாணவர்கள், கல்வி கற்க அந்த பள்ளி தலைமை ஆசிரியர் ஜாண் கென்னடி நடவடிக்கை எடுத்தார்.

    அதாவது, முதல்கட்டமாக திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டது. மாணவர்கள் திருக்குறளை மனப்பாடம் செய்து வீடியோவில் பதிவு செய்து பள்ளி வாட்ஸ்-அப் குரூப்பிற்கு அனுப்ப வேண்டும். அந்த வகையில் 1-ம் வகுப்பு மாணவர்களுக்கு 30 திருக்குறளும், 2-ம் வகுப்பிற்கு 45 திருக்குறளும், 3-ம் வகுப்பிற்கு 60 திருக்குறளும், 4-ம் வகுப்பிற்கு 80 திருக்குறளும், 5-ம் வகுப்பிற்கு 100 திருக்குறளும் ஒப்புவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திருக்குறளை ஒப்புவித்து வாட்ஸ்-அப் குரூப்பில் பதிவு செய்தனர்.

    கடந்த ஒரு வாரமாக நடந்து வந்த திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. 2-வது வாரமாக இன்று முதல் நடனம், 3-வது வாரம் பாட்டு, 4-வது வாரம் வாசித்தல் திறன் குறித்த போட்டிகள் நடக்க உள்ளது. இதில், வெற்றி பெறும் மாணவர்களுக்கு பள்ளிக்கூடம் திறந்த பின்பு பரிசுகள் வழங்கப்படும் என்று பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை பொதுமக்கள் பாராட்டினர்.
    ஊரடங்கு காலத்தில் வீடுகளில் குழந்தைகளின் கையில் டி.வி. ரிமோட்டுகள் விளையாட்டு பொருளாக மாறி இருக்கின்றன. விளையாட்டின்போது டி.வி. ரிமோட்டுகள் உடைந்து போவதால் பெற்றோர் கலக்கம் அடைகின்றனர்.
    கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. கொரோனாவுக்கு பயந்து பொதுமக்கள் வெளியே சுற்றாமல் வீடுகளிலேயே முடங்கி இருக்கிறார்கள்.

    டி.வி. பார்த்துக் கொண்டும், விரும்பிய புத்தகங்களை படித்தும், குழந்தைகளுடன் விளையாடும் மக்கள் தங்கள் பொழுதை போக்கி வருகிறார்கள். மேலும் உறவினர்கள் நண்பர்களுடன் செல்போனில் கதை பேசி தங்களது பழைய நினைவுகளை அசை போட்டுக்கொள்வதுடன், உறவுகளையும் மேம்படுத்தி வருகின்றனர். ஊரடங்கினால் தங்களது நிம்மதியை தொலைத்தவர்கள் என்றால் அது குழந்தைகள் மட்டும்தான். பட்டாம்பூச்சிகள் போல சுற்றித்திரிந்து விளையாடி மகிழ்ந்த குழந்தைகள் தற்போது சிறைக்கைதிகள் போல வீட்டுக்குள்ளேயே அடைப்பட்டு கிடக்கிறார்கள்.

    தற்போது குழந்தைகளின் ஒரே பொழுதுபோக்கு டி.வி. பார்ப்பது மட்டுமே. அதுவும் தங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை மட்டுமே பார்த்து ரசிக்கிறார்கள். வேறு ஏதாவது நிகழ்ச்சிகளும் சினிமா படங்களும் போட்டுவிட்டால் போதும் மூலைமுடுக்குகளில் சோகமாக அமர்ந்து விடுகிறார்கள். அப்போது கையில் கிடைக்கும் பொருட்களை தங்கள் கற்பனைக்கு ஏற்றபடி நினைத்துக் கொண்டு விளையாடி மகிழ்கிறார்கள்.

    இதனால் தற்போது டி.வி. மற்றும் ஏ.சி. ரிமோட்டுகள், செல்போன் என கையில் கிடைத்த எல்லா பொருட்களையும் கொண்டு ஆசை தீர விளையாடி மகிழ்கிறார்கள்.

    குழந்தைகளின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் பலரது வீடுகளில் தற்போது டி.வி., ஏ.சி. ரிமோட்டுகள் உடைந்துபோகின்றன. பல வீடுகளில் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை போல ரிமோட்டுகளுக்கு ஆபரேஷன் நடந்திருக்கிறது.

    அந்த அளவு ரிமோட்களை செல்லோ டேப் மற்றும் ரப்பர் பேண்ட் கொண்டு சுற்றி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன.

    இன்னும் பலரது வீடுகளில் ரிமோட்டுகள் உடைந்த நிலையில் டி.வி.க்களுக்கு தற்காலிக ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் ரிமோட்டுகள் உள்பட மின்னணு சாதனங்களை அருகில் உள்ள வீடுகளில் இருந்து இரவல் பெறும் நிலை உருவாகி இருக்கிறது.

    தற்போது கடைகள் அடைக்கப்பட்டு உள்ள நிலையில் மின்னணு சாதனங்களை எங்கே போய் வாங்குவது என பொதுமக்கள் பரிதவித்து வருவதை பார்க்க முடிகிறது.

    இதனால் வீடுகளில் உள்ள பெற்றோர் தங்களது குழந்தைகளின் நடவடிக்கையில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டியதாக உள்ளது.
    ×