search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நுங்கினால் செய்த வண்டியை சிறுவன் உற்சாகமாக ஓட்டும் காட்சி.
    X
    நுங்கினால் செய்த வண்டியை சிறுவன் உற்சாகமாக ஓட்டும் காட்சி.

    மீண்டும் புழக்கத்துக்கு வந்த நுங்கு வண்டி விளையாட்டு

    கொரோனா ஊரடங்கு சட்டத்தால் முடங்கி போன குழந்தைகளுக்கு நுங்கு வண்டி விளையாட்டு உற்சாகம் ஊட்டி வருகிறது.
    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு சட்டம் அமலில் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி போய் உள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவர்களும் வீட்டிலேயே முடங்கி போய் உள்ளனர்.

    பல அலுவலகங்களில் வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி வலியுறுத்தி உள்ளதால் அவர்களும் வீட்டைவிட்டு வெளியில் வருவதில்லை. இதன் காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. காய்கறி கடைகள், மளிகை கடைகள், இறைச்சி கடைகள் மட்டும் அரசு குறிப்பிட்ட நேரத்தில் இயங்கி வருகின்றன. அந்த நேரங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

    பகல் ஒரு மணிக்கு பிறகு ஊர் முழுவதும் மயான அமைதி நிலவுகிறது. சென்னை, கோவை உள்பட தொழில் நகரங்களில் தினசரி வாழ்வை பரபரப்பாக வைத்திருக்கும் மக்களுக்கு ஒவ்வொரு நொடியும் யுகமாக கழிகிறது. விஞ்ஞானத்தால் விளைந்த செல்போன் கூட போர் அடிக்க தொடங்கி விட்டது.

    இத்தகைய சூழ்நிலையில் விஞ்ஞான எழுச்சியால் நம்மால் மறக்கக்கடிக்கப்பட்ட பழைய கிராமிய விளையாட்டுகள் தான் தற்போது பலருக்கும் உத்வேகத்தை அளித்து வருகிறது.

    அந்த வகையில் பழைய விளையாட்டுகள் புத்துயிர் பெற்று வருகிறது. பல்லாங்குழி, தாயம், நொண்டி உள்ளிட்ட விளையாட்டுகள் தற்போதைய தலைமுறை குழந்தைகளும் அறியும்படி பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்க கூடிய ஒரு கால நேரத்தை கொரோனா உருவாக்கி இருக்கிறது என்றால் அது மிகையில்லை.

    இப்படி நாம் மறந்து போன விளையாட்டுகள் இப்போது புத்துயிர் பெற்றிருக்கிறது. அந்த வகையில் சிறுவர்களின் விளையாட்டான, நுங்கு வண்டி விளையாட்டு தற்போது எழுச்சி பெற்று இருக்கிறது.

    நுங்கு எடுத்த 2 முழுபப் பனங்காய்களை எடுத்துக்கொண்டு அதில் துளையிட்டு வண்டி சக்கரங்களாக மாற்றம் செய்து, அதில் நீண்ட குச்சியை பயன்படுத்தி வண்டியாக வடிவமைத்து சிறுவர்கள் விளையாடும் காட்சிகளை பார்க்க முடிகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற விளையாட்டுகள் வழக்கத்தில் இருந்தது. காலப்போக்கில் பிளாஸ்டிக், எலெக்ட்ரானிக் பொருட்கள் மோகத்தால் மறக்கடிக்கப்பட்டது. இப்போது பெற்றோர்களே குழந்தைகள் விளையாடுவதற்கு நுங்கு வண்டி செய்து கொடுப்பதை திருவள்ளூர், காஞ்சீபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பார்க்க முடிகிறது.

    இளைய தலைமுறை குழந்தைகளும், சிறுவர்களும் ஆர்வத்துடன் நுங்கு வண்டியை ஓட்டி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு வகையில் நம்முடைய பாரம்பரிய விளையாட்டை மீட்டெடுக்கும் முயற்சியாகவும் இந்த காலக்கட்டம் அமைந்துள்ளது.

    பனை மற்றும் அதன் பயன்களை இளைய தலைமுறை அறிந்து கொள்ளவும் தற்போது நிலவும் சூழல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×