search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தஞ்சை தெற்கு வீதியில் உள்ள ஒரு வீட்டில் பாட்டியிடம் கதை கேட்டு மகிழ்ந்த குழந்தைகளை படத்தில் காணலாம்.
    X
    தஞ்சை தெற்கு வீதியில் உள்ள ஒரு வீட்டில் பாட்டியிடம் கதை கேட்டு மகிழ்ந்த குழந்தைகளை படத்தில் காணலாம்.

    பாட்டி சொல்லும் கதையை ஆர்வத்துடன் கேட்கும் சிறுவர்-சிறுமிகள்

    ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கியுள்ள சிறுவர்-சிறுமிகள் டி.வி. பார்த்தும், செல்போனில் விளையாடியும் அலுத்துப்போய் விட்டனர். இதனால் பாட்டி சொல்லும் கதையை ஆர்வத்துடன் கேட்டு மகிழ்கின்றனர்.
    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. முன்பெல்லாம் விடுமுறை என்றால் உறவினர்கள் வீடுகளுக்கு செல்வது உண்டு. அப்படி செல்லவில்லை என்றாலும் குழந்தைகள் தங்களது நண்பர்களுடன் ஆடி, பாடி மகிழ்வார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் விடுமுறை விடப்பட்டாலும் சிறப்பு வகுப்பு, பரதநாட்டியம், கராத்தே என தங்கள் குழந்தைகளுக்கு கூடுதல் திறமைகளை வளர்க்கும் முயற்சியில் பெற்றோர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    கொரோனா வைரஸ் பரவுதை தடுக்க பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டாலும் சிறப்பு வகுப்பு எதுவும் நடத்தக்கூடாது என கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டதால் வெளியூரில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கும் குழந்தைகளை அழைத்து கொண்டு பெற்றோர்களால் செல்ல முடியவில்லை. வீட்டை விட்டு வெளியேயும் செல்ல முடியாது. அருகில் உள்ள மைதானத்திற்கு சென்று நண்பர்களுடனும் சேர்ந்து விளையாட முடியாது.

    இதனால் குழந்தைகள் அனைவரும் அவரவர் வீட்டுக்குள்ளேயே சிறைபட்டு கிடக்கிறார்கள். எவ்வளவு நேரம்தான் டி.வி. பார்ப்பது, செல்போனில் விளையாடுவது என்று அலுத்துப்போய் விட்டனர். ஊரடங்கு காரணமாக ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலை வேறுவழியின்றி பெரியவர்கள் ஏற்றுக்கொண்டு உள்ளனர். பாவம்... குழந்தைகள் என்ன செய்வார்கள்?. அவர்களை பாதுகாப்பாக வைத்திருப்பதோடு, மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கும், பெரியவர்களுக்கு உள்ளது.

    இதனால் தஞ்சை மாநகரில் பாட்டி, தாத்தாக்கள், நமது பாரம்பரிய விளையாட்டு களான பல்லாங்குழி, பரமபதம், தட்டாங்கல், குச்சிகளை அடுக்குதல், ஆடுபுலி ஆட்டம் போன்ற விளையாட்டுக்களை தங்களது பேரன், பேத்திகளுக்கு சொல்லி கொடுத்து குடும்பத்தோடு விளையாடி மகிழ்கின்றனர்.

    மேலும் நீதி போதனைகளை சொல்லக்கூடிய கதைகளையும் குழந்தைகளுக்கு பாட்டிகள் எடுத்து கூறி வருகின்றனர். இதை கேட்டு மகிழ்ந்த சிறுவர், சிறுமிகள் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள சிறுவர், சிறுமிகளையும் அழைத்து வந்து கதை கேட்கும்படி கூறி வருகின்றனர். இதன் மூலம் குழந்தைகளுக்கு நன்றாக பொழுதுபோவதுடன், வீட்டில் இவர்களது சேட்டை இன்றி பெற்றோர்களும் நிம்மதியுடன் இருக்கின்றனர். இது குறித்து 5-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கூறும்போது, நான் பாட்டி சொல்லும் கதையை கேட்பதுடன், ஓவியத்தில் ஆர்வம் இருப்பதால் ஓவியமும் வரைந்து வருகிறேன். மேலும் டி.வி. பார்த்து பொழுதை கழித்து கொண்டு இருக்கிறேன் என்றார். பலர், யோகா கற்பதுடன், புத்தகம் படிக்கும் பழக்கத்தையும் வளர்த்து வருகின்றனர்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை டி.வி., செல்போனின் தாக்கத்தில் இருந்து விடுவித்து செய்தித்தாள், புத்தகம் போன்றவைகளை கொடுத்து வாசிக்கும் பழக்கத்தையும், பாரம்பரிய விளையாட்டுக்கள் மீதும் கவனத்தை திசை திருப்பி அவர்களை நல்வழிப்படுத்த முன்வர வேண்டும். 
    Next Story
    ×