search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இணையவழியில் கல்வி
    X
    இணையவழியில் கல்வி

    வீட்டில் இருந்தபடி மாணவர்கள் பயன்பெற பள்ளிக்கல்வி துறை சார்பில் இணையவழியில் கல்வி

    வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் பயன்பெறுவதற்கு ஏதுவாக பள்ளிக்கல்வி துறை சார்பில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடங்களை இணையவழியில் கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    கொரோனா நோய்த் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் இதன் காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கோடை விடுமுறைக்கு முன்னதாகவே அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இருக்கின்றன.

    இந்த நிலையில் வீட்டில் முடங்கி இருக்கும் மாணவர்கள் பயனுள்ளபடி நேரத்தை செலவிடும் வகையில், தனியார் கல்வி நிறுவனங்கள் இணையவழி கல்வியை ஊக்கப்படுத்தி வருகின்றன. வீட்டில் இருந்தபடியே ஆசிரியர்கள் மூலம் கற்பிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டுகின்றன. மாணவர்களும் இணைய வழி கல்வியை ஆர்வமுடன் கற்கின்றனர்.

    அந்த வரிசையில் தற்போது தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறையும் இணையவழி கல்வி மூலம் மாணவர்களுக்கு கற்பித்தல் முறையை வழங்க முன்வந்து இருக்கின்றனர். இதற்காக elearning.tnschools.gov.in என்ற இணையதளத்தை உருவாக்கி இருக்கின்றனர்.

    அதில் உள்ளே நுழைந்ததும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பாடங்கள் தமிழ், ஆங்கிலத்தில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. அதை மாணவர்கள் தேர்வு செய்து பார்க்கலாம்.

    அதுமட்டுமில்லாமல், நீட் தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு என்றும் தனிப்பிரிவு இந்த இணையதளத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இணையதளத்தில் இருந்து கல்வி தொலைக்காட்சிக்கும் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே இதில் சென்றும் கல்வி தொலைக்காட்சியை மாணவர்கள் யூ-டியூப் வாயிலாக பார்க்கலாம்.

    இந்த இணையதளத்தை மாணவர்களை பார்க்க சொல்லி பெற்றோர் அறிவுறுத்த வேண்டும் என்றும், ஆசிரியர்களும் இதன் மூலம் பயன்பெறலாம் என்றும் அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×