என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    நம்மை சீராட்டி, பாலூட்டி, கல்வி கற்க வைத்து, வேலை வாய்ப்பு மற்றும் மண வாழ்க்கையும் ஏற்படுத்தி கொடுத்த பெற்றோரை இன்றைக்கு எத்தனை பேர் மதிக்கிறார்கள்.
    வளர்ந்து வரும் இன்றைய நவீன உலகில் பெற்றோர்களின் நிலை பரிதாபத்துக்கு உரியதாக இருக்கிறது. ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளை சிறுவயது முதல் பெரியவனாகும் வரை தங்களது அரவணைப்பில் வளர்த்து ஆளாக்குகிறார்கள். அதாவது பிறந்ததில் இருந்து மூன்று வயது வரை அக்குழந்தைகளுக்கு பேசக் கற்றுக் கொடுக்கிறார்கள்.

    அதற்கு பிறகு பள்ளிக்கூடங்களில் சேர்த்து கல்வி அறிவையும், மற்றவற்றை பற்றியும் அறிய வழி செய்கின்றனர். பள்ளிப் படிப்புடன் அவர்களுக்கு பாட்டு, நடனம், விளையாட்டு, கணிப்பொறி கல்வி போன்றவற்றையும் பகுதி நேரமாக கற்கவும் ஏற்பாடு செய்து கொடுக்கின்றனர். பள்ளிப் படிப்பை முடித்தவுடன், கல்லூரிகளில் சேர்த்து மேல் கல்வி பயிலவும் போராடுகின்றனர்.

    கல்லூரி படிப்பை முடித்தவுடன் அவர்களின் தகுதிக்கேற்ப ஒரு நல்ல வேலை வாய்ப்பினையும் ஏற்படுத்தி வருகின்றனர். அதன்பிறகு, நல்ல இல் வாழ்க்கையும் அமைத்து கொடுக்கின்றனர். இது ஒவ்வொரு பெற்றோரின் கடமை என்றாலும், அவ்வாறான பெற்றோருக்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டாமா?. நம்மை சீராட்டி, பாலூட்டி, கல்வி கற்க வைத்து, வேலை வாய்ப்பு மற்றும் மண வாழ்க்கையும் ஏற்படுத்தி கொடுத்த பெற்றோரை இன்றைக்கு எத்தனை பேர் மதிக்கிறார்கள்.

    அவர்களின் தியாகத்தை போற்றுகிறார்கள். பலபேர் பெற்றோர் செய்த அனைத்தையும் மறந்து விட்டு, அவர்களை நிர்கதியாக விட்டு விடுகிறார்கள். பல பெற்றோர் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படுகிறார்கள். ஆகவே, நம்மை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களை நாம் மதிக்க வேண்டும். தாயும்-தந்தையும் நம் இரு கண்களை போன்றவர்கள். அவர்களது உணர்ச்சிகளை புரிந்து கொண்டு அவர்களது ஆயுட்காலம் வரை நம்மோடு வைத்துக் கொண்டு அவர்களிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
    அடிக்கடி தற்கொலை எண்ணம் வந்தால் அது பற்றி பெற்றோரிடமோ, நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ தாமதிக்காமல் தெரியப்படுத்தவேண்டும். மனநல மருத்துவரின் ஆலோசனையை பெறவேண்டும்.
    கடந்த சில வாரங்களாக, நம் கவனத்திற்கு வரும் தற்கொலை சம்பவங்கள், நம்மை பொறுத்தவரை வேதனை தரும் செய்தி. ஆனால் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்திற்கு இச்செயல் வார்த்தைகளால் விவரிக்க முடியாத இழப்பு. காலம் முழுவதும் நீங்காத வலியை உண்டாக்கி சென்றிருக்கும், சோக நிகழ்வு. இத்தகைய தற்கொலையை, ஒருவிதமான மனநோய் என்கிறார், பா.சந்திரசேகர். சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் மனநலத்துறை உதவி பேராசிரியராக பணியாற்றும் இவர், ‘தற்கொலை’ என்ற மனநோய் நமக்குள் எப்படி உருவாகிறது, எப்படி வளர்கிறது என்பதை விளக்குவதோடு, அந்த மனநோயை எப்படி விரட்டலாம், நமக்கு நெருக்கமானவர்களை எப்படி காப்பாற்றலாம் என்பதையும் விரிவாக விளக்குகிறார்.

    * தற்கொலை எண்ணம் எப்படி உருவாகிறது? இது மனநோயா?

    தற்கொலை எண்ணம் உடல் ரீதியாக, மன ரீதியாக, குடும்ப ரீதியாக, சமூக ரீதியாக மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களால் பின்னிப்பிணைந்துள்ளது. மேலும் பொருந்தாத வரையறைகள், அறியாமை, இயல்புக்கு மாறான எதிர்பார்ப்புகள், தவறான கணிப்புகள், எதிர்த்து போராடும் மனவலிமை இல்லாமை இவையே தற்கொலையின் அடிப்படைக் காரணங்கள்.

    எடுத்துக்காட்டாக, தேர்ச்சி பெற்றால் மட்டுமே தன்னை மற்றவர்கள் மதிப்பார்கள் என்பது ஒரு மாணவன் தனக்கு தானாகவே ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு பொருந்தாத வரையறை. மறுமுறை தேர்வெழுதியும் வெற்றி பெறலாம் என்ற அறியாமை. அந்தவகையில் இது ஒரு மனநோயே.

    * மனநோய்க்கான அறிகுறிகள் என்ன?

    ஒவ்வொரு நோய்க்கும் ஒரு அறிகுறி இருப்பதை போல தற்கொலைக்கும் அறிகுறிகள் உண்டு. எப்போதும் சிடு சிடு என இருப்பவர்கள் இயல்புக்கு மாறாக சிரித்து சிரித்து பேசுவதும், எப்பொழுதும் புன்னகையோடு இருப்பவர்கள் திடீரென அமைதியாக இருப்பதும் மிக முக்கிய அறிகுறிகள். மேலும் வெறுத்துப் பேசுவது, தூக்கமின்றி தவிப்பது, தனிமையை விரும்புவது, பிடித்தவற்றை வெறுப்பது, பிரியாவிடை சொல்வது, யாருடனும் கலந்து பேசாமல் மனச் சோர்வாக இருப்பது இவை அனைத்தும் தற்கொலையை தூண்டும் மனநோய்க்கான அறிகுறிகள்.

    * தற்கொலை செய்பவரின் மனநிலை எப்படி இருக்கும்?

    தற்கொலை செய்ய முயற்சிக்கும் ஒருவரின் மன நிலை மூன்று வகைப்படும்.

    1. தடுமாறும் மனநிலை

    இரண்டினுள் எதை எடுப்பது? எதை விடுவது? செய்யலாமா? செய்யக்கூடாதா? என்று முடிவெடுக்க முடியாமல் திணறும் மனநிலை.

    2. உணர்ச்சிப் பெருக்கு மனநிலை

    உணர்வுகளை பாதிக்கும் செயல் ஒன்று நிகழும்போது எடுத்தோம், கவிழ்த்தோம் என்று முடிவெடுக்கும் மனநிலைதான் இது. தேர்வு முடிவுகள் வெளியான நாளில் தோல்வியுற்ற மாணவனின் உணர்ச்சிப் பெருக்கே அவனை தற்கொலைக்கு தூண்டுகிறது.

    3. இறுக்க மனநிலை

    தான் நினைப்பதற்கு மாறாகவும் நடக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலை இதற்குள்ளே அடங்கும். ‘தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்குவேன்’ என்று உறுதியாக நினைக்கும் மாணவன் 96 மதிப்பெண்கள் வாங்கி சிறப்பாகத் தேர்ச்சியுற்ற பிறகும் தற்கொலை செய்துகொள்வது இவ்வகை.

    * தற்கொலை மனநோயில் இருந்து விடுபட என்ன செய்யவேண்டும்?

    ஒருவரால் தன்னைத்தானே அழித்துக்கொள்ள முடியும் என்றால் அம்மனிதனால் தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளவும் முடியும். ஆதலால் உணர்ச்சிப் பெருக்கு மனநிலை உடையவர்கள் யோகா, தியானம், உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் மனநிலையை சமநிலைப்படுத்தலாம். அத்தோடு நம்பிக்கையூட்டும் சொற்பொழிவுகளை கேட்பதும், மகிழ்ச்சி தரும் நூல்களை படிப்பதும், பிடித்த இசையை கேட்பதும் என மனதை வேறு ஏதாவது ஆக்கப்பூர்வமான செயல்களில் திசை திருப்பவேண்டும்.

    அடிக்கடி தற்கொலை எண்ணம் வந்தால் அது பற்றி பெற்றோரிடமோ, நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ தாமதிக்காமல் தெரியப்படுத்தவேண்டும். மனநல மருத்துவரின் ஆலோசனையை பெறவேண்டும். ‘104’ தொலைபேசி மருத்துவ ஆலோசனையும் பெறலாம்.

    * ஆசிரியர்கள் என்ன செய்யலாம்?

    ‘தேர்வு’, ‘மதிப்பெண்’ மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை மாணவர்களுக்கு உணர்த்தி, முக்கியமாக பாடங்களோடு வாழ்க்கை திறன் கல்வி, பிரச்சினைகளை கையாளும் திறனை கற்பிக்கவேண்டும். தேர்வுக்கு எப்படி தயாராவது, தேர்வை எப்படி எதிர்கொள்வது, தோல்வியை எப்படி ஏற்றுகொள்வது போன்ற வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

    பள்ளி, கல்லூரிகளில் தகுதி வாய்ந்த மருத்துவர்கள், மனநல ஆலோசகர்களை அழைத்து உடல்நலம், மனநலம் சம்பந்தப்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

    மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்துவது தொடர்பான தலைப்புகளில் கவிதைகள், கட்டுரைகள், ஓவியங்கள், சொற்பொழிவுகள் நடத்தப்படவேண்டும்.

    * அரசு, எத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளலாம்?

    அரசு அலுவலகங்கள், காவல் துறை, போக்குவரத்துத்துறை, வங்கிகள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகளில், மனநலம் படித்தவர்களை ‘மனநல சமூகப்பணி’, ‘மருத்துவ உளவியல்’, ‘மனநல செவிலியர்’ போன்ற பொறுப்புகளில் பணியமர்த்தி, தற்கொலை எண்ணம் முளைவிடும்போதே கிள்ளி எறியலாம்.

    மனநலம் தொடர்பான ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கலாம். மனநலம் சார்ந்த படிப்புகளை அனைத்து தனியார் மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் ஆரம்பிக்கலாம்.

    ஆரம்ப சுகாதாரப் பணியாளர்களைக் கொண்டு கிராமப்புறங்களில் தற்கொலை விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
    பெற்றோர், நண்பர்கள் செய்ய வேண்டியவை?

    தற்கொலை எண்ணம் உள்ளவரிடம் கவனமாகப் பேச வேண்டும். பொறுப்பில்லாமல் பேசும் சில வார்த்தைகள் அவர்களை தற்கொலைக்கு தூண்டிவிடும். தற்கொலை மனநோய் அறிகுறிகள் தென்படுபவர்களிடம், அதிக நேரம் பேசுங்கள். அவர்களை சிறிது நேரம் கூட தனிமையில் விடாதீர்கள். அந்நபரின் மன வேதனைகளை உள்வாங்கிக்கொண்டு, மனவேதனையை குறைக்க முயலவேண்டும். ‘நீ தனி ஆள் இல்லை, நான் உன்னுடன் இருக்கிறேன், இருப்பேன்’ என பேசி அவர்களுக்குள் நம்பிக்கையை விதைக்க வேண்டும். அந்நேரத்தில் தற்கொலை செய்பவரின் மனக்குமுறல் வெளிப்படும். பின்னர் அதிலிருந்து அவரை மீட்டு விடலாம்.

    பா.சந்திரசேகர்
    நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவ்வபோது தகப்பனாக உங்களின் குணாதிசயங்களை மதிப்பீடு செய்ய வேண்டும். அப்படிப்பட்ட 10 சரியில்லாத பழக்க வழக்கங்களை பற்றி தான் இப்போது பார்க்கலாம்.
    ஒரு ஆண் தந்தையாக மாறும் போது அவனுடைய பொறுப்புகள் பன்மடங்கு அதிகரிக்கிறது. நல்லதுக்கும் கெட்டதுக்கும் உள்ள வேறுபாட்டை உங்கள் குழந்தைக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது உங்களது பொறுப்பாகும். யாருமே நூறு சதவீதம் ஒழுங்கு கிடையாது; நம் அனைவரிடமும் ஏதாவது குறை இருக்கவே செய்யும். ஆனாலும் கூட நாம் நம் குழந்தைகள் சிறந்தவற்றை கற்க முயற்சி செய்கிறோம். நம்முடைய சரியற்ற பழக்க வழக்கங்கள் குழந்தைகளுக்கு வந்து விடக்கூடாது என்பதில் குறியாக இருப்போம். முதலில் இது கஷ்டமான வேலையாக இருக்கும். ஆனால் காலப்போக்கில் அது தரும் பலனை நீங்கள் உணர்வீர்கள்.

    நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவ்வபோது தகப்பனாக உங்களின் குணாதிசயங்களை மதிப்பீடு செய்ய வேண்டும். இதனால் தீய பழக்கங்களை கை விட்டு, சிறந்தவற்றை கடைப்பிடிக்கலாம். அப்படிப்பட்ட 10 சரியில்லாத பழக்க வழக்கங்களை பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம். இவற்றை நீங்கள் கொண்டிருந்தால் உடனடியாக நீங்கள் நிறுத்த வேண்டும்….

    1. நீங்கள் ஒரு விதிமுறையை போட்டால், அதனை பின்பற்ற வேண்டும். ஒரே விஷயத்திற்கு சில நேரங்களில் நீங்கள் கண்டிப்புடனும், சில நேரங்களில் அப்படி இல்லாமலும் இருப்பதாக உங்கள் குழந்தைகள் உணர்ந்தால், ஒழுக்கத்தை அவர்கள் மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். நீங்கள் அமைத்திருக்கும் எல்லைகளின் முக்கியத்துவத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது.

    2. உங்கள் குழந்தைக்கு நீங்கள் ஒரு பாறையாகவும் நங்கூரமாகவும் இருக்க வேண்டும். அப்போது தான் உங்கள் குழந்தை உங்களை முழுமையாக சார்ந்திருக்கும். தங்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் நீங்கள் அவர்களுடன் இருப்பீர்கள் என்பதில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்படாமல் இருப்பது மிகவும் முக்கியமாகும்.

    3. உங்கள் குழந்தையுடன் சிறந்த பந்தத்தை உண்டாக்க, ஸ்மார்ட் கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்துடனான உங்களது போதையை நீக்க வேண்டும். உங்களது குழந்தைகளுடனும் நீங்கள் தரமான நேரத்தை ஒதுக்க வேண்டும்.

    4. உங்கள் குழந்தையுடன் நண்பனாக பழக முயற்சி செய்யும் போது, முதலில் நீங்கள் ஒரு தந்தை என்பதை மறந்து விடாதீர்கள். காலம், பணம் மற்றும் அறநெறிகளின் மதிப்பை உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள உங்கள் குழந்தைக்கான வரம்புகளையும் குறிப்பிட்ட எல்லைகளையும் நீங்கள் வரையறுக்க வேண்டும்.

    5. உங்கள் குழந்தைகள் என்ன கேட்டாலும் அதற்கு சரி என சொல்வதன் மூலம் உங்கள் குழந்தையின் மீதான அன்பை நீங்கள் காட்ட வேண்டியதில்லை. சொல்லப்போனால், இதனால் நிராகரிப்புகளை கையாளுவதில் அவர்கள் திறனற்றவர்களாகி விடுவார்கள். அதனால் தேவைப்படும் போது முடியாது என சொல்வது அவசியமாகும்.

    6. உங்கள் வீட்டிற்கு அலுவலகத்தை கொண்டு வராதீர்கள். உங்கள் குடும்பத்திற்கும் உங்கள் நேரம் தேவை. உறவுகளை மதிக்கவும் பொக்கிஷமாக வைத்திருக்கவும் உங்கள் குழந்தைக்கு தேவையான பண்பு இது.

    7. உங்கள் விருப்பம் போல் உங்கள் குழந்தைகள் நடக்க அவர்களை அச்சுறுத்துவது அவர்களை கிளிர்ச்சி செய்வர்களாக மாற்றி விடும். அவர்களின் தனித்துவத்தை பாராட்டுங்கள்.

    8. உங்கள் குழந்தைகளை பிறருடன் தொடர்ச்சியான முறையில் ஒப்பீடு செய்தால் அது அவர்களின் சுயமரியாதையை குறைக்கும். அவர்களின் நம்பிக்கையை இழக்கச் செய்து விடாதீர்கள்.

    9. குழந்தைகளின் மனதில் என்ன ஓடுகிறது என்பதை கேளுங்கள். மாறாக உங்களது தத்துவங்களையே அவர்களிடம் திரும்ப திரும்ப கூறி கொண்டிருக்காதீர்கள்.

    10. நீங்கள் அதிகமாக புகைப்பிடித்தாலோ அல்லது மது அருந்தினாலோ, உங்கள் குழந்தைகள் முன்னால் அவற்றை செய்யாமல் குறைத்துக் கொள்ளுங்கள்.
    இயல்பை விட அதிக உடல் எடை கொண்டிருக்கும் குழந்தைகள், நீரிழிவு மற்றும் இதயம் சார்ந்த உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
    உடல் பருமன் பிரச்சினையை முன் கூட்டியே கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது கடுமையான நோய் அபாயத்தை குறைக்கும். சிறு வயதிலேயே அதிக உடல் எடையுடன் இருப்பதற்கு அதிக கலோரிகளை உட்கொள்வது, போதுமான உடற்பயிற்சிகளில் ஈடுபடாதது முக்கிய காரணங்களாகும். உணவுப் பழக்கத்தில் முக்கியமான மாற்றங்களை செய்வதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.

    இயல்பை விட அதிக உடல் எடை கொண்டிருக்கும் குழந்தைகள், நீரிழிவு மற்றும் இதயம் சார்ந்த உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. உடல் பருமன் கொண்ட குழந்தைகள் சக குழந்தைகளுடன் விளையாடுவதற்கோ, பிற உடல் இயக்க செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கோ சிரமப்படுவார்கள்.

    காலை (எழுந்ததும்):

    பாதாம் பருப்பு-5, வால்நெட்-2, இரவில் ஊறவைத்த உலர் அத்திப்பழம் - 1 சாப்பிடலாம்.

    காலை உணவு:

    உப்புமா, தோசை அல்லது இட்லியுடன் இரண்டு வேகவைத்த முட்டைகள் சாப்பிடலாம். 100 கிராம் பன்னீரும் சாப்பிட வேண்டும்.

    மதிய உணவு:

    சப்பாத்தியுடன் பருப்பு, காய்கறி கலந்த குருமா தயாரித்து சாப்பிடலாம். சிறிதளவு கோழி இறைச்சியையும் சேர்த்துக்கொள்ளலாம். 100 கிராம் பன்னீரும் உட்கொள்ளலாம்.

    மதிய உணவுக்கு பின்:

    சாப்பிட்ட அரை மணி நேரம் கழித்து எலுமிச்சை ஜூஸ் பருகலாம்.

    மாலை:

    மக்காச்சோளத்தை வேகவைத்து சாப்பிடலாம். மசாலா பூரியும் ருசிக்கலாம். சென்னா மசாலாவும் சாப்பிடலாம். எலுமிச்சை, புதினா கலந்த ஜூஸ் தயாரித்தும் பருகலாம்.

    இரவு உணவு:

    காய்கறிகள் சேர்க்கப்பட்ட புலாவ் தயாரித்து சாப்பிடலாம். காய்கறிகளை வறுத்து சாலட்டாகவும் ருசிக்கலாம். அரிசி சாதத்தில் காராமணி குழம்பு ஊற்றி ருசிக்கலாம்.

    தூங்கச் செல்வதற்கு முன்பு:

    150 மி.லி. பாலில் ஏலக்காய், குங்குமப்பூ கலந்து பருகலாம்.
    சிறு வயதிலேயே அதிக உடல் எடையுடன் இருப்பதற்கு அதிக கலோரிகளை உட்கொள்வது, போதுமான உடற்பயிற்சிகளில் ஈடுபடாதது முக்கிய காரணங்களாகும்.
    வளர்ந்த நாடுகளில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளில் 25 சதவீதம் பேர் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். இயல்பை விட அதிக உடல் எடை கொண்டிருக்கும் குழந்தைகள், நீரிழிவு மற்றும் இதயம் சார்ந்த உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. உடல் பருமன் கொண்ட குழந்தைகள் சக குழந்தைகளுடன் விளையாடுவதற்கோ, பிற உடல் இயக்க செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கோ சிரமப்படுவார்கள்.

    உடல் பருமன் பிரச்சினையை முன் கூட்டியே கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது கடுமையான நோய் அபாயத்தை குறைக்கும். சிறு வயதிலேயே அதிக உடல் எடையுடன் இருப்பதற்கு அதிக கலோரிகளை உட்கொள்வது, போதுமான உடற்பயிற்சிகளில் ஈடுபடாதது முக்கிய காரணங்களாகும். உணவுப் பழக்கத்தில் முக்கியமான மாற்றங்களை செய்வதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.

    குழந்தைகள் பெரும்பாலும் தண்ணீர் அதிகம் பருகமாட்டார்கள். திரவ உணவுகளை சாப்பிடுவதற்கும் ஆர்வம் காட்டமாட்டார்கள். நொறுக்குத்தீனிகளைத்தான் விரும்பி சாப்பிடுவார்கள். அதனை தவிர்த்து நாள் முழுவதும் திரவ உணவுகளை குறிப்பிட்ட இடைவெளியில் உட்கொள்வதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். அதற்காக வெறுமனே பழ ஜூஸ் மட்டும் கொடுக்கக்கூடாது. தண்ணீர், எலுமிச்சை ஜூஸ், இளநீர் போன்ற பிற திரவ உணவுகளை சாப்பிட வைக்கலாம். இது உடல் நலனை பேண உதவும் ஆரோக்கியமான பழக்கமாகும். உடல் எடையை குறைக்கவும் உதவும்.

    உடல் எடையை நிர்வகிப்பதில் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. முழு தானியங்களை உட்கொள்வதன் மூலம் குழந்தை பருவ உடல் பருமனை சமாளிக்க முடியும். காலை உணவாக ஓட்ஸ் சாப்பிட வைக்கலாம். இது குடல் இயக்கம் சீராக நடைபெறவும், எடை மேலாண்மையை பராமரிக்கவும் உதவும்.

    நொறுக்குத்தீனிக்கு மாற்றாக பழ சாலட் கொடுப்பது முக்கியமானது. இது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதோடு மட்டுமல்லாமல் உடல் எடையை சீராக வைத்திருக்கவும் உதவும். தினமும் இரண்டு வகை பழங்களை உண்ணலாம்.

    காலையில் எழுந்தவுடன் ஒரு கைப்பிடி ‘நட்ஸ்’ உட்கொள்ளலாம். இவை அதிக ஊட்டச்சத்து மிக்கவை. ஆரோக்கிய நன்மைகளை வழங்குபவை. எனவே இதனை தவிர்க்கக்கூடாது. தினமும் முந்திரி அல்லது பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள் சாப்பிடலாம். ஆனால் அதிகம் சாப்பிடக்கூடாது.
    தினமும் குறிப்பிட்ட நேரத்தை தந்தை ஒதுக்கி கங்காரு முறையை கையாளுவதன் மூலம் குழந்தையுடன் ஆழமான பிணைப்பை உருவாக்கிக்கொள்ளலாம். கங்காரு முறையை பின்பற்றும்போது அப்பாக்கள் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
    கங்காரு தனது குட்டியை எப்போதும் வயிற்றோடு சுமந்து கொண்டிருக்கும். அதற்கு ஏதுவாக அடி வயிற்று பகுதியில் பை அமைந்திருக்கும். அந்த பையில் தாயின் அரவணைப்போடு குட்டி வளரும். அதுபோலவே பச்சிளம் குழந்தைகளை மார்போடு அரவணைத்த நிலையில் வைத்திருப்பது கங்காரு பராமரிப்பு முறை எனப்படுகிறது. இது தாய்க்கும், சேய்க்கும் இடையே நேரடியாக சரும தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்க உதவும். குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் அல்லது எடை குறைவாக பிறந்த குழந்தைகளுக்கு கங்காரு முறை பராமரிப்பு தேவைப்படும்.

    கர்ப்ப காலத்தில் மட்டுமின்றி தாய்ப்பால் கொடுக்கும்போதும் தாய் தனது குழந்தையுடனான தொடர்பை வலுப்படுத்திக்கொள்ள முடியும். தந்தைக்கு அத்தகைய நெருக்கமான தொடர்பு பந்தம் இல்லாத குறையை கங்காரு முறை பராமரிப்பு நிவர்த்தி செய்யும். ஆனால் குழந்தை பிறந்த உடனேயே இந்த முறையை கையாளக்கூடாது. சில வாரங்கள் கழித்தோ, குழந்தைக்கு பெற்றோரின் அரவணைப்பு தேவைப்படும்போதோ இந்த முறையை கையாளலாம். தினமும் குறிப்பிட்ட நேரத்தை தந்தை ஒதுக்கி கங்காரு முறையை கையாளுவதன் மூலம் குழந்தையுடன் ஆழமான பிணைப்பை உருவாக்கிக்கொள்ளலாம். கங்காரு முறையை பின்பற்றும்போது அப்பாக்கள் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

    தந்தை குழந்தையை வெற்று மார்போடு அரவணைத்த நிலையில் வைத்திருப்பது நல்ல பயனை கொடுக்கும். அப்படி தந்தை-குழந்தை இருவருடைய சருமமும் ஒன்றிணைந்த நிலையில் இருந்தால்தான் தந்தையின் ஸ்பரிசம் குழந்தைக்கு கிடைக்கும். குழந்தையின் பசி அல்லது மன அழுத்தம் பற்றிய உணர்வுகளை அறிந்துகொள்ள முடியும்.

    குழந்தையை கங்காரு நிலையில் வைத்திருக்கும்போது மொபைல்போன் மற்றும் பிற மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அது கவன சிதறலை தவிர்க்க உதவும். முழு கவனமும் குழந்தை மீது பதிவதற்கு ஏதுவாக அமையும்.

    கங்காரு நிலையில் குழந்தை ஏதேனும் அசவுகரியத்தை உணர்கிறதா? என்பதையும் கவனிக்க வேண்டும். குழந்தையின் கழுத்தும், தலையும் நேரான நிலையிலும், ஒரு பக்கம் திரும்பியவாறும் தந்தையின் மார்போடு இணைந்திருக்க வேண்டும். குழந்தையின் மூக்கு, வாய் பகுதி ஏதேனும் துணி கொண்டு மூடப்பட்டிருக்கக்கூடாது. எந்த நிலையில் வைத்திருந்தாலும் குழந்தையின் முகம் எப்போதும் பார்க்கும் நிலையில் இருக்க வேண்டும்.

    கங்காரு பராமரிப்பை மேற்கொள்ளும்போது வசதியான இடத்தில் உட்கார வேண்டும். நண்பர்கள், குடும்பத்தினர் யாருடைய தொடர்பும் இல்லாமல் அமைதியான சூழலை உருவாக்கிக்கொள்ள வேண்டும். குழந்தையை வெற்று மார்பின் மீது மெதுவாக வைத்து, அரவணைப்புக்காக ஒரு போர்வையை போர்த்தலாம். தாய்-தந்தை இருவருமே ஒரே நேரத்தில் கங்காரு முறையை கையாளலாம். இது குடும்ப பிணைப்புக்கு வழிவகுக்கும்.

    காய்ச்சல், சளி, இருமல் என ஏதேனும் நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளாகி அவதிப்பட்டால், கங்காரு பராமரிப்பை தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில் புதிதாக பிறந்த குழந்தைக்கு நோய்த்தொற்று பரவுவதற்கு வழிவகுத்துவிடும். குழந்தைக்கு கங்காரு பராமரிப்பை கொடுப்பதற்கு முன்பு நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிப் படுத்திக்கொள்ளுங்கள்.

    கங்காரு பராமரிப்பின்போது வாசனை திரவியங்கள் அல்லது டியோடரண்டுகளை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏனெனில் அவை குழந்தையின் மென்மையான சருமத்தை எரிச்சலூட்டும். தடிப்புகள், சிவத்தல் மற்றும் ஒவ்வாமைகளை ஏற்படுத்தும். அதுபோல் குழந்தையும் எந்தவிதமான சருமம் சார்ந்த நோய்த்தொற்றாலும் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்வதும் முக்கியம்.

    கங்காரு பராமரிப்பு மூலம் தந்தையர்கள் தங்கள் உணர்வு மற்றும் உடல் ரீதியான ஆதரவை குழந்தைக்கு வழங்க முடியும். அது மட்டுமல்லாமல், பிறந்த குழந்தைக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். அதனால் கங்காரு பராமரிப்பை தாய் மட்டுமின்றி அப்பாவும் கொடுக்க வேண்டும்.
    தேர்வு தோல்வி பயம், மதிப்பெண் குறைவு மற்றும் இதர காரணங்களுக்காக தற்கொலை செய்யும் எண்ணத்தை மாணவ சமுதாயம் அடியோடு தவிர்க்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
    தோல்விகளை வெற்றிப்படிக்கட்டுகளாக்கி முன்னேறிச்சென்று வாழ்வில் சாதனை படைத்தவர்கள் நம் நாட்டில் ஏராளம் இருக்கிறார்கள். படித்தவர்கள் மட்டுமின்றி படிக்காத மேதைகள் பலரின் வரலாறுகளையும் நாம் படித்து இருக்கிறோம். ஆனால் பலர் போதிய மதிப்பெண் கிடைக்கவில்லை, தங்களது கனவு நனவாகவில்லை என்று மனதளவில் துவண்டு தன்னம்பிக்கை இழந்து தற்கொலைக்கு ஆளாகும் தற்போதைய சூழல் அனைத்து தரப்பு மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

    உயிரைவிட தேர்வு பெரிதல்ல...

    குறிப்பாக நீட் தேர்வை சொல்லலாம். மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை, நீட் தேர்வில் தோல்வி பயம் என்றெல்லாம் உயிரை மாய்த்துக் கொள்ளும் மாணவச் செல்வங்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மருத்துவம் மட்டுமே படிப்பு அல்ல. அதையும் தாண்டி எத்தனையோ துறைகள் உள்ளன. ஒன்றில் வாய்ப்பு இல்லை என்றால் மற்றொன்றில் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே அது. எத்தனையோ நிறுவனங்களில், துறைகளில் தாங்கள் படித்த படிப்புக்கு தொடர்பில்லாத வேலையில் கால் பதித்து சாதித்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தற்கொலை முடிவுக்கு வருவதென்பது மிகுந்த வருத்தத்துக்குரியது.

    தேர்வு தோல்வி பயம், மதிப்பெண் குறைவு மற்றும் இதர காரணங்களுக்காக தற்கொலை செய்யும் எண்ணத்தை மாணவ சமுதாயம் அடியோடு தவிர்க்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள். உயிரைவிட தேர்வு பெரிதல்ல என்பதே அவர்களின் வலியுறுத்தலாக உள்ளது.

    மன அழுத்தம்

    தற்கொலை எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது என்றும், அதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் எனவும் திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மகாத்மா காந்தி நினைவு அரசு ஆஸ்பத்திரி மனநலப்பிரிவு துறைத்தலைவர் பேராசிரியை டாக்டர் ஏ.நிரஞ்சனா தேவி வழங்கும் அறிவுரைகள் வருமாறு:-

    இன்றைய காலக்கட்டத்தில் நாம் அடிக்கடி அறியும் செய்தி, ‘தேர்வு பயத்தினால் தற்கொலை முயற்சி அல்லது தேர்வு தோல்வியால் தற்கொலை முயற்சி‘ என்பதே. தற்போது பரவலாக பேசப்படும் வார்த்தை மனஅழுத்தம். நம் மனிதகுலம் தோன்றிய காலத்தில் இருந்தே பல்வேறு இன்னல்களை சந்தித்தே வாழ்க்கை பாதையை கடந்து வந்திருக்கிறோம். இயற்கையாகவே நம்மிடம் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்நோக்கும் திறன் இருக்கிறது. எனினும் ஏன் இப்படி நடக்கிறது? என்பதே பெரிய கேள்வியாக எழுகிறது.

    மருத்துவ கனவை திணிக்கும் பெற்றோர்

    நம் மாணவர்களின் கல்வி பெரும்பான்மையான நேரத்தில் பெற்றோர்களின் விருப்பப்படியே முடிவு செய்யப்படுகிறது. குழந்தைகளின் கல்வி பற்றிய முடிவும், பெற்றோரின் முடிவும் வேறுபடுகிறது. பெற்றோர்களின் மருத்துவ படிப்பு கனவு குழந்தைகளின் மீது திணிக்கப்படுகிறது. இதனால், மாணவ-மாணவிகள் தம் விருப்பத்தில் இருந்து பெற்றோரின் விருப்ப பாதையில் பயணிக்க ஆரம்பிக்கிறார்கள். மன அழுத்தத்திற்கான முதல் விதை அப்போதுதான் விதைக்கப்படுகிறது.

    வெற்றிக்கான முயற்சி என்பது உறுதியான பாதை. அந்த பாதையில் மாணவர்கள் தங்கள் அறிவாற்றல், திறன் ஆகியவற்றை ஒருமுகப்படுத்தி தம் இலக்கை நோக்கி முயற்சி பயணத்தில் செல்ல வேண்டும். ஆனால், நாம் நமது எல்லா முயற்சிகளிலும் வெற்றி அடைவது இல்லை என்பதை உணர வேண்டும். தோல்வியும் நம் பாதையில் ஒரு அங்கமாக அவ்வப்போது வரலாம். ஆனால், நாம் உணரவேண்டியது என்னவென்றால், தோல்வி என்பது நம் மீதான முழு மதிப்பீடு அல்ல. அது அப்போதைய அளவீடு மட்டுமே என்பதை உணர வேண்டும்.

    தோல்வியே வெற்றிக்கான பாதை

    நம் முயற்சிகளில் எந்த இடத்தில் தவறினோம், எதை சரி செய்ய வேண்டும். எப்படி திருத்தினால் அதில் வெற்றி கொள்ளலாம் என்பதே நமக்கான பாடம் என புரிதல் வேண்டும். “ஸ்போர்ட்ஸ்மென்ஷிப்“ என்பதில் உள்ள அழகே, வெற்றி,தோல்வியை சரிசமமாய் எடுத்து கொள்ளுதல் ஆகும். தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டும், அதை வெற்றிக்கான பாதையாக மாற்றுவதே வீரனுக்கு அழகு. மாணவ- மாணவிகளுக்கு தளராத தன்னம்பிக்கை மிகவும் அவசியம்.

    இவற்றையெல்லாம் மீறியும் சில மாணவர்களுக்கு தேர்வு முடிவு பற்றிய எதிர்மறை சிந்தனைகள் தோன்றும். தோல்வி பற்றிய பயத்தினால், நம் பெற்றோர் நம்மை கட்டாயமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என சிந்திக்க ஆரம்பித்து தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.

    எனவே, பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் மனதுவிட்டு பேச வேண்டும். வெற்றி, தோல்வியை புரியவைக்க வேண்டும். தனிமையில் விடக்கூடாது. இதில் சில, வெற்றி, தோல்வியை தாங்கும் சக்தி ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது என்பதை பெற்றோரும் கண்டிப்பாக உணருதல் அவசியம்.

    அறிகுறிகள்

    தேர்வு எழுதிய மாணவர்களின் மனநிலையை முதலில் பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, மாணவர்கள் தங்களது இயல்பான நிலையில் இருந்து வேறுபடுவர். பிறருடன் பேசாமலிருப்பது, சரிவர உணவருந்தாதது, தூக்கமின்மை, தோல்வி பற்றியே புலம்பிக்கொண்டு இருத்தல். காரணமில்லாத அழுகை, உடல் தொந்தரவுகள் உள்ளிட்ட அறிகுறிகள் அம்மாணவர்களின் மன அழுத்தத்துடன் இருப்பதை சுட்டிக்காட்டும் அடையாளங்கள்.

    இம்மாதிரியான சமயங்களில் பெற்றோர், மிகவும் கவனமுடன் இருந்து அவர்கள் நலனில் அக்கறையுடன் முழுமையான கண்காணிப்பில் வைத்திருத்தல் அவசியம். அவர்களுடன் அன்பாய்...ஆதரவாய் பேசுவது மிக்க மனபலத்தை கொடுக்கும். தேவைப்படும் சூழ்நிலைகளில் மனநல மருத்துவரின் ஆலோசனை பெறலாம். சிகிச்சை தேவைப்பட்டால் அதையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளுதல் அவசியம் ஆகும்.

    மனநல ஆலோசனை திட்டம்

    இதனை மெய்ப்பிக்கும் வகையில் தமிழக முதல்-அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆகியோரின் சீரிய முயற்சியால் நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அவற்றில் கலந்து கொண்டு அனைத்து மாணவர்கள் மனதளவிலும் உடல் அளவிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    “மனதும், உடலும் ஆரோக்கியமாக இருத்தலே உண்மையான ஆரோக்கியம்“ என உலக சுகாதார அமைப்பு ஆரோக்கியத்தை முறைப்படுத்தி இருக்கிறது. எனவே, தற்கொலை எந்த பிரச்சினைக்கும் தீர்வல்ல!. வாழ்க்கை என்பது அனுபவங்களின் கல்விக்கூடம். அதில் கற்றுக்கொள்ளும் நல்ல பாடங்களின் மூலம் தோல்விகளை வெற்றியாக்கும் முயற்சியில் வீறுநடைபோடுவோம்.

    மாணவர்களுக்கு மனநல ஆலோசனை பெற செல்போன் எண்கள் அறிமுகம்

    ‘நீட்‘ தேர்வு பயத்தில் மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொள்வதை தவிர்க்கும் வகையில் மாவட்டந்தோறும் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்படி, தமிழகத்தில் 1 லட்சத்து 12 ஆயிரம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்ட வாரியாக நீட் தேர்வு எழுதியவர்களின் பட்டியலை பெற்று, மாவட்டந்தோறும் உள்ள ஆலோசனை மையங்கள் மூலம் மனநல ஆலோசனை வழங்கப்பட உள்ளது. ஆலோசனை வழங்க தமிழகத்தில் 333 மனநல நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மாநிலம் முழுவதும் மனநல ஆலோசனை பெற 104 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு அழைக்கலாம். மேலும் மாநில மனநல நிறுவன மையத்தை 91541 54092, 044-26425585, ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மையத்தை 75501 00373, கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி மையத்தை 95227 55978, செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மையத்தை 80721 68415 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இதுதவிர மாவட்டந்தோறும் மனநல ஆலோசனை மைய செல்போன் எண்கள் விவரம் வருமாறு:-

    திருச்சி-94988 59825. கரூர்-94433 10611. புதுக்கோட்டை-94860 67686, அரியலூர்-99443 61515. பெரம்பலூர்-94984 70825.
    பாலியல் தாக்குதல்/வன்முறை, பாலியல் துன்புறுத்தல்/சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது.
    பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 என்பது, இந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமாகும். இச்சட்டம், மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10ம்தேதியும், மக்களவையில் மே மாதம் 22ம் தேதியும் நிறைவேற்றப்பட்ட சட்டமாகும். இதற்கான விதிமுறைகளும் உருவாக்கப்பட்டு, நவம்பர் 14ம் தேதி அரசிதழ் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இச்சட்டம் வரும் முன், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இப்பிரிவுகள், குழந்தைகள், வயது வந்தவர்கள் என்ற வித்தியாசமின்றி வழக்குகளைக் கையாண்டன.

    சட்டத்தின் பொதுவான அம்சங்கள்

    18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல்/வன்முறை, பாலியல் துன்புறுத்தல்/சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது. 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடிய வேண்டும். இது மிகத் தேவையானது. சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங்காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம் என சட்டம் குறிப்பிடுகிறது.

    சில வகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு. உதாரணமாக, காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக் குரியவர்கள். அவர்களே குற்றம் இழைக்கும் போது, அதிக தண்டனை உண்டு என இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது.மாவட்ட அளவில் குழந்தை பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்பட வேண்டும். தனி காவல் துறை பிரிவும் ஏற்படுத்தப் பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தை எங்கு இருந்தால், அக்குழந்தையின் நலனுக்கு உகந்தது என்று பார்க்க வேண்டும். சில சமயம், குடும்ப உறுப்பினர்களே குற்றம் செய்பவராக இருந்தால், அங்கிருந்து குழந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.

    குழந்தையின் நலனே பிரதானம்

    சிறப்பு நீதிமன்றங்கள் இதற்காக நிறுவப்படவேண்டும். வழக்கின் துவக்கத்திலிருந்து இறுதி வரை - புகார் கொடுப்பது, முதல் தகவல் அறிக்கை பதிவு, விசாரணை, வாக்கு மூலம் பதிவு, வழக்கு நடப்பது போன்ற அனைத்திலும் - பாதிக்கப் பட்ட குழந்தைகளின் நலன் மையமாக இருக்க வேண்டும். அதுதான் மிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய அம்சம் என்று சட்டம் கூறுகிறது. உதாரணமாக, “பாதிக்கப்பட்ட சிறுமி/சிறு வரின் சாட்சியம் அவர்களின் வீட்டிலோ அல் லது அவர்கள் விரும்புகிற இடத்திலோ தான் பதிவு செய்யப் பட வேண்டும்.

    துணை ஆய்வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட பொறுப்பில் உள்ள பெண் காவல் அதிகாரி தான் பதிவு செய்ய வேண்டும். அப்போது காவலர் சீரு டையில் அந்த அதிகாரி இருக்கக் கூடாது.”இரவு நேரத்தில், அவர்களைக் காவல் நிலையத்தில் வைத்துக் கொள்ளக் கூடாது. குழந்தை எதை எப்படி சொல்லுகிறதோ, அதை அப்படியே அந்த வார்த்தைகளில் பதிவு செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளி என்றால், குழந்தை பேசுவதைப் புரிந்து கொண்டு எடுத்துச் சொல்ல சைகை மொழி பேசுபவர் அல்லது குழந்தையின் பெற்றோர், உறவினரின் உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.மருத்துவப் பரிசோதனை, பெற்றோர்/உற்றோரின் முன்னிலையில் செய்யப் படவேண்டும்.

    பெண் குழந்தை என்றால், பெண் மருத்துவர் செய்ய வேண்டும். அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க நேர்கிறபோது, மருத்துவர்கள் காவல் துறை அல்லது நீதி துறையின் உத்தரவைக் கோரக் கூடாது.வழக்கு நடக்கும்போது, அடிக்கடி குழந்தை ஆசுவாசப் படுத்திக்கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும்.விசாரணையோ, வழக்கோ, வாக்கு மூலமோ பாதிக்கப் பட்ட சிறுமி/சிறுவரைத் திரும்ப திரும்ப நடந்ததைச் சொல்ல வற்புறுத்தக் கூடாது.குறுக்கு விசாரணை என்ற பெயரில் சங்கடப் படுத்தும் கேள்விகள் அல்லது நடத்தையை சந்தேகிக்கும் கேள்விகளைக் கேட்கக் கூடாது.

    குறிப்பிடத் தகுந்த பிரிவுகள்

    குற்றம் இழைத்தவர்கள் மட்டுமல்ல, குற்றத்தை செய்யும் நோக்கத்துடன் அதற்காக முயற்சித்தவர்களும் குற்றவாளிகள் தான். பாலியல் வன்முறை செய்ய, ஒரு சிறுமியை இழுத்துச் சென்றிருக்கலாம். யாரோ வருகிறார்கள் என்பதற்காக விட்டு விட்டு ஓடியிருக்கலாம். பணம் திருடினாளா என்று பரிசோதிக்கவே தனியாக அழைத்து வந்தேன் என்று ஆசிரியர் கூறலாம். வழக்கு வந்தால், குற்றம் நடக்கவில்லையே என்று தப்பித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால் இச்சட்டம், தப்பிக்கும் வழியை மிகச் சரியாக அடைக்கிறது.

    குற்றத்துக்கு என்ன தண்டனையோ, அதில் பாதியை குற்றம் செய்யும் நோக்கத்துடன் முயற்சிப்பவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறுகிறது.மற்றொரு முக்கிய பிரிவு, பாலியல் வன் கொடுமை குற்றத்தைப் பொறுத்தமட்டில், குற்றம் நடந்தது என்று மனுதாரர் ப்ராசிகியூஷன் தரப்பு நிரூபிக்க வேண்டியதில்லை. குற்றவாளி தான், தான் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுவர், சிறுமியர் பெயரையும், அடையாளத்தையும், சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்பது அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. காவல் துறையும் வெளியிடக் கூடாது என்பது தான் இதன் பொருள்.

    இழப்பீடு/நிவாரணம்

    சிறப்பு நீதிமன்றம் தாமாகவோ, அல்லது பாதிக்கப்பட்டோரின் மனுவின் அடிப்படையிலோ தேவையைப் பொறுத்து இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். இறுதியில், குற்றவாளி தண்டனை பெற்றாலும், விடுவிக் கப்பட்டாலும் நிவாரணம் வழங்கலாம். குற்றவாளியை அடையாளம் காண முடியாவிட்டாலும், தலைமறைவாகப் போய் விட்டாலும் கூட, இழப்பீடு வழங்கலாம். உடல் காயம், மன உளைச்சல், மருத்துவச் செலவு, குடும்பத் தின் பொருளாதார நிலை ஆகியவற்றைக் கணக்கில் எடுக்க வேண்டும்.

    மன/உடல் நிலை சரியில்லாமல் அல்லது விசாரணை, வழக்குக்குச் செல்வதற்காகப் பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் அதையும் கணக்கில் எடுக்க வேண்டும். எச்.ஐ.வி. தாக்கியிருந்தால், கர்ப்பமாகி விட்டால், ஊனமடைந்து விட்டால் அவையும் எடுத்துக் கொள்ளப்பட்டு, இழப்பீடு வழங்கப் பட வேண்டும். மாநில அரசே நிவாரணத் தொகையை வழங்க வேண் டும். நீதிமன்ற உத்தரவு பெற்று 30 நாட் களுக்குள் இது அளிக்கப் பட வேண்டும்.இவ்வளவு வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிந்தால்தானே, பாதிக்கப்பட்ட குழந்தை யும், பெற்றோரும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்? இவை குறித்து அவர்களுக்குக் கூறப்பட வேண்டும் என்பது இச்சட்டத் தின் கீழ் கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது. அதே போல் வழக்கின் விவரம் அவ்வப்போது அவர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.
    மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பெற்றோர் நேரடியாகவோ அல்லது அவர்கள் மிகவும் விரும்புகின்ற நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாகவோ பேசுவது நன்மைகளை ஏற்படுத்தும்.
    குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று இருப்பார்கள். சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும், ஆத்திரமாகவும் வெளிக்காட்டுவார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள்.

    மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பேசுவதற்கு விரும்ப மாட்டார்கள். இருந்த போதிலும், அவர்களுடன் நேரடியாகவோ அல்லது அவர்கள் மிகவும் விரும்புகின்ற நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாகவோ பேசுவது நன்மைகளை ஏற்படுத்தும். இவ்வாறு பேசுவதன் மூலமாக அவர்களுக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கியது எது என்பதை அறிவதற்கு வாய்ப்பு ஏற்படும். அவர்களுடன் உரையாடலில் ஈடுபடும் நேரத்தில் சில விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. அவையாவன;

    * அவர்கள் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும். இது சொல்வதற்கு மிகவும் எளிது, ஆனால் செயல்படுத்துவது கடினம்.

    * அவர்கள் மனத்தில் இருப்பதைப் பேசிக்கொண்டு இருக்கும் போது நடுவே குறுக்கிடுவது, எனக்கு அப்பவே தெரியும் என்பது, அது தான் நீ எப்போதும் செய்யும் தப்பு என்பது, சரியான முட்டாள் நீ என்று அதட்டுவது போன்ற வார்த்தைகளைக் கொட்டக்கூடாது.

    * அவர்கள் நினைப்பதை அவர்களது சொந்த வார்த்தைகளின் மூலமாகவே வெளிப்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். அவர்கள் சொல்லி முடிக்கும் வரையில் பொறுமையாக காத்திருக்க வேண்டும். அவர்கள் பேசுவதைக் கொண்டு எப்படியெல்லாம் கற்பனை செய்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    * குழந்தைகள் சொல்லும் விஷயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள அவ்வப்போது சிறு கேள்விகள் கேட்கலாம். ஆனால் அது அவர்கள் பேசுவதை தடுப்பதாகவோ, எண்ணத்தை திசை திருப்புவதாகவோ இருக்கக் கூடாது.

    * ஆதரவு வார்த்தைகள், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொல்லி அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

    * நான் உன்னை ஒரு வாரமாகக் கவனித்து வருகிறேன். நீ மிகவும் கவலையோடு இருக்கிறாய் என்று சொல்லவேண்டும். இவ்வாறு சொல்வதன் மூலமாக பெற்றோர் தன்னை கவனித்து வருகிறார்கள், தனது நலனில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள். இந்த எண்ணம் அவர்கள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட பெரிதும் உதவும்.

    * இவ்வாறு அவர்களுடன் கலந்துரையாடி மனஅழுத்தத்திற்கான காரணத்தை அறிந்து கொண்ட பிறகு நீங்கள் அதை போக்குவதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியவை.
    குழந்தைகள் வாசிப்பதிலோ, எழுதுவதிலோ ஏதேனும் சிரமங்களை எதிர்கொண்டால் ஒளிரும் திரைகள் முன்பு சிறிது நேரத்தை செலவிட வைக்கலாம் என்கிறது ஆய்வு.
    வாசிப்பு மற்றும் எழுதும் பழக்கத்தை குழந்தைகள் ஆர்வமாக தொடர்வதற்கு ஊக்குவிக்க வேண்டும். இந்த விஷயத்தில் சில பெற்றோர் போதிய அக்கறை காண்பிப்பதில்லை. குறிப்பிட்ட வயதுக்கு பிறகு தாங்களாகவே வாசிக்க, எழுத பழகிவிடுவார்கள் என்று நினைக்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு ஆரம்பகட்டத்திலேயே முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும்.

    இல்லாவிட்டால் பின்னாளில் அறிவாற்றல் குறைபாட்டை ஏற்படுத்திவிடும். குழந்தைகள் வாசிப்பதிலோ, எழுதுவதிலோ ஏதேனும் சிரமங்களை எதிர்கொண்டால் ஒளிரும் திரைகள் முன்பு சிறிது நேரத்தை செலவிட வைக்கலாம் என்கிறது ஆய்வு.

    டி.வி. முன்பு நேரத்தை செலவிடும்போது கவனம் முழுவதும் ஓரிடத்தில் குவிக்கப்படும். அதன் மூலம் குழந்தைகளின் அறிவாற்றல் திறன் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இது குறித்து ஆய்வை மேற்கொண்ட வெஸ்டர்ன் நார்வே பல்கலைக்கழக பேராசிரியர் கோரன் சோடர்லண்ட் குறிப்பிடுகையில், ‘‘வாசிப்பதில் தடுமாற்றம், எழுதுவதில் சிரமம் கொண்ட குழந்தைகளை பள்ளியிலோ, வீட்டிலோ டி.வி. திரை முன்பு அமர செய்யலாம்.

    அதில் வெளிப்படும் காட்சியும், சத்தமும் அவர்களின் பிரச்சினையை சரிப்படுத்த உதவும், அறிவாற்றல் திறனை அதிகரிக்கக்கூடும் என்பதை கண்டறிந்திருக்கிறோம். எனினும் கூடுதல் ஆய்வு மேற்கொள்ள வேண்டியிருக்கிறது’’ என்கிறார்.
    குழந்தைகள் வளர தொடங்கியதும் சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும். அவற்றுள் பார்வை திறனுக்கு வலு சேர்க்கும் உணவுகளும் இடம்பெற வேண்டும்.
    கம்ப்யூட்டரிலும், செல்போனிலும் கேம்கள் விளையாடுவதுதான் பெரும்பாலான குழந்தைகளின் பொழுதுபோக்காக மாறி இருக்கிறது. அவற்றுடன் அதிக நேரம் செலவிடுவது உடல் நலன், மன நலனுக்கு மட்டுமல்ல கண்களுக்கும் கேடானவை.

    சிறுவயது முதலே கண்பார்வை திறனை சரியான முறையில் மேம்படுத்துவது முக்கியம். ஒவ்வொரு காலகட்டத்திலும் குழந்தையின் பார்வை திறனை பெற்றோர் கண்காணித்து வருவது அவசியமானது. அதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஆரம்பத்தில் சிறிய அளவில் தென்படும் பார்வை குறைபாட்டு பிரச்சினைக்கு கண்ணாடி அணிய கூச்சப்பட்டு மங்கலான பார்வையை நிரந்தரமாக பெற்றவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

    குழந்தை பிறந்ததுமே அதன் பார்வை திறனை மேம்படுத்துவதற்கான விஷயங்களை செய்ய தொடங்கிவிட வேண்டும். ஒரு போதும் குழந்தையின் அறைக்குள் பிரகாசமான விளக்குகளை தொங்கவிடக்கூடாது. குழந்தையின் முகத்திற்கு நேராகவும் விளக்குகளை எரியவிடக்கூடாது. செல்போன், லேப்டாப் போன்ற சாதனங்களை அதன் அருகில் வைத்து பயன்படுத்தக்கூடாது. 5 முதல் 8 மாத குழந்தை களாக இருந்தால் தொட்டிலில் பொம்மை மற்றும் கண்கவர் உருவங்களை தொங்கவிடலாம். அது குழந்தையின் பார்வை திறனை மேம்படுத்த உதவும். அவ்வப்போது வெளி இடங்களுக்கும் குழந்தையை தூக்கி செல்ல வேண்டும். அப்போது தன்னை சுற்றி இருக்கும் பொருட்களை கூர்ந்து கவனிப்பார்கள். அதுவும் அவர்களின் பார்வை திறனை மெருகேற்ற உதவும்.

    குழந்தைகள் வளர தொடங்கியதும் சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும். அவற்றுள் பார்வை திறனுக்கு வலு சேர்க்கும் உணவுகளும் இடம்பெற வேண்டும். பச்சை காய்கறிகளை அதிகமாக கொடுக்க வேண்டும். அதில் இருக்கும் ஜியாசாந்தின், லூடின், துத்தநாகம் போன்றவை கண்புரை அபாயத்தை குறைக்க உதவும். முட்டையின் மஞ்சள் கருவிலும் இத்தகைய சத்துக்கள் நிறைந்துள்ளன. சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மிகுதியாக காணப்படுகிறது. அவையும் கண்புரையில் இருந்து பாதுகாக்கும். பாதாம் பருப்பில் வைட்டமின் இ நிறைந்திருக்கிறது. உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துகளில் பாதி தேவையை இதுவே பூர்த்தி செய்துவிடும். அதனால் பாதாமை தவறாமல் சாப்பிட்டு வருவது நல்லது.
    சிறு குழந்தைகள் தொடர்ந்து செல்போன் பார்த்து கொண்டிருப்பதால் அவர்களுக்கு கிட்ட பார்வை குறைபாடு அதிகரித்து இருப்பதை கண்சிகிச்சை நிபுணர்கள் கண்டுபிடித்தனர்.
    உலகம் முழுவதும் பரவிய கொரோனா பெருந்தொற்று மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் மாற்றிவிட்டது.

    இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதன்காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு மூடப்பட்ட வகுப்புகள் இப்போதுதான் திறக்கப்பட்டு வருகிறது. அதுவும் தொடக்க கல்வி மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கான வகுப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்த வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு இப்போதும் ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடந்து வருகிறது.

    வீடுகளில் தொடர்ச்சியாக சுமார் 5 முதல் 8 மணி நேரம் ஆன்லைன் வகுப்புகளில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்பதால் அவர்களின் கண்களில் கோளாறு ஏற்படுவதாக பெற்றோர் அவர்களை டாக்டர்களிடம் அழைத்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    குறிப்பாக அவர்கள் செல்போன், லேப் டாப் மற்றும் டி.வி.க்களின் முன் அமர்ந்து பல மணி நேரம் தொடர்ச்சியாக பார்த்து கொண்டிருப்பதால் குழந்தைகளுக்கு கண் எரிச்சலும், கண்களில் நீர்வடிவதும் அதிகரித்து இருப்பதாக பெற்றோர் கூறினர்.

    கேரளாவில் குழந்தைகளுக்கு அதிகஅளவு கண் பார்வை பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து கண் சிகிச்சை நிபுணர்கள் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டனர். இதில் தெரியவந்த விபரங்கள் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    சிறு குழந்தைகள் தொடர்ந்து செல்போன் பார்த்து கொண்டிருப்பதால் அவர்களுக்கு கிட்ட பார்வை குறைபாடு அதிகரித்து இருப்பதை கண்சிகிச்சை நிபுணர்கள் கண்டுபிடித்தனர்.

    கிட்டபார்வை குறைபாடு காரணமாக குழந்தைகளுக்கு அருகில் இருக்கும் பொருள்கள் மற்றும் எழுத்துக்கள் தெளிவாக தெரிவது இல்லை. ஆனால் தூரத்தில் இருக்கும் பொருள்கள், எழுத்துக்களை அவர்களால் தெளிவாக பார்க்க முடியும்.

    அதே நேரம் கம்யூட்டர் மற்றும் லேப் டாப்பில் தொடர்ச்சியாக வேலை பார்க்கும் இளைஞர்கள் சிலருக்கு தூரப் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இவர்களுக்கு தூரத்தில் இருக்கும் பொருள்கள் தெரிவதில்லை. ஆனால் அருகில் இருக்கும் பொருள்கள், எழுத்துக்களை தெளிவாக பார்க்க முடியும். இக்குறைபாடு காரணமாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு தொடர்ந்து தலைவலி, கண் வலி மற்றும் கண்களில் நீர்வடிவது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.

    இதுபற்றி கொச்சியை சேர்ந்த கண் சிகிச்சை நிபுணர் மற்றும் பேராசிரியர் கோபால் எஸ் பிள்ளை கூறியதாவது:-

    கொரோனா பரவலுக்கு பின்னர் அதிக அளவில் கண் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டவர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குழந்தைகள் பலரையும் ஆய்வு செய்ததில் அவர்களுக்கு கண்ணில் திசு வளர்ச்சி பாதிப்பு அதிகஅளவில் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் அவர்கள் பிற்காலத்தில் பார்வை இழப்பை சந்திக்க நேரிடும். எனவே ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் குழந்தைகள் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் கண் பார்வை குறைபாட்டையும், இது தொடர்பாக வரும் நோய்களில் இருந்தும் தப்பிக்க முடியும், என்றார்.
    ×