search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கங்காரு முறை குழந்தை அரவணைப்பு
    X
    கங்காரு முறை குழந்தை அரவணைப்பு

    கங்காரு முறை குழந்தை அரவணைப்பும்... தந்தையின் உணர்வும்..

    தினமும் குறிப்பிட்ட நேரத்தை தந்தை ஒதுக்கி கங்காரு முறையை கையாளுவதன் மூலம் குழந்தையுடன் ஆழமான பிணைப்பை உருவாக்கிக்கொள்ளலாம். கங்காரு முறையை பின்பற்றும்போது அப்பாக்கள் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
    கங்காரு தனது குட்டியை எப்போதும் வயிற்றோடு சுமந்து கொண்டிருக்கும். அதற்கு ஏதுவாக அடி வயிற்று பகுதியில் பை அமைந்திருக்கும். அந்த பையில் தாயின் அரவணைப்போடு குட்டி வளரும். அதுபோலவே பச்சிளம் குழந்தைகளை மார்போடு அரவணைத்த நிலையில் வைத்திருப்பது கங்காரு பராமரிப்பு முறை எனப்படுகிறது. இது தாய்க்கும், சேய்க்கும் இடையே நேரடியாக சரும தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்க உதவும். குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் அல்லது எடை குறைவாக பிறந்த குழந்தைகளுக்கு கங்காரு முறை பராமரிப்பு தேவைப்படும்.

    கர்ப்ப காலத்தில் மட்டுமின்றி தாய்ப்பால் கொடுக்கும்போதும் தாய் தனது குழந்தையுடனான தொடர்பை வலுப்படுத்திக்கொள்ள முடியும். தந்தைக்கு அத்தகைய நெருக்கமான தொடர்பு பந்தம் இல்லாத குறையை கங்காரு முறை பராமரிப்பு நிவர்த்தி செய்யும். ஆனால் குழந்தை பிறந்த உடனேயே இந்த முறையை கையாளக்கூடாது. சில வாரங்கள் கழித்தோ, குழந்தைக்கு பெற்றோரின் அரவணைப்பு தேவைப்படும்போதோ இந்த முறையை கையாளலாம். தினமும் குறிப்பிட்ட நேரத்தை தந்தை ஒதுக்கி கங்காரு முறையை கையாளுவதன் மூலம் குழந்தையுடன் ஆழமான பிணைப்பை உருவாக்கிக்கொள்ளலாம். கங்காரு முறையை பின்பற்றும்போது அப்பாக்கள் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

    தந்தை குழந்தையை வெற்று மார்போடு அரவணைத்த நிலையில் வைத்திருப்பது நல்ல பயனை கொடுக்கும். அப்படி தந்தை-குழந்தை இருவருடைய சருமமும் ஒன்றிணைந்த நிலையில் இருந்தால்தான் தந்தையின் ஸ்பரிசம் குழந்தைக்கு கிடைக்கும். குழந்தையின் பசி அல்லது மன அழுத்தம் பற்றிய உணர்வுகளை அறிந்துகொள்ள முடியும்.

    குழந்தையை கங்காரு நிலையில் வைத்திருக்கும்போது மொபைல்போன் மற்றும் பிற மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அது கவன சிதறலை தவிர்க்க உதவும். முழு கவனமும் குழந்தை மீது பதிவதற்கு ஏதுவாக அமையும்.

    கங்காரு நிலையில் குழந்தை ஏதேனும் அசவுகரியத்தை உணர்கிறதா? என்பதையும் கவனிக்க வேண்டும். குழந்தையின் கழுத்தும், தலையும் நேரான நிலையிலும், ஒரு பக்கம் திரும்பியவாறும் தந்தையின் மார்போடு இணைந்திருக்க வேண்டும். குழந்தையின் மூக்கு, வாய் பகுதி ஏதேனும் துணி கொண்டு மூடப்பட்டிருக்கக்கூடாது. எந்த நிலையில் வைத்திருந்தாலும் குழந்தையின் முகம் எப்போதும் பார்க்கும் நிலையில் இருக்க வேண்டும்.

    கங்காரு பராமரிப்பை மேற்கொள்ளும்போது வசதியான இடத்தில் உட்கார வேண்டும். நண்பர்கள், குடும்பத்தினர் யாருடைய தொடர்பும் இல்லாமல் அமைதியான சூழலை உருவாக்கிக்கொள்ள வேண்டும். குழந்தையை வெற்று மார்பின் மீது மெதுவாக வைத்து, அரவணைப்புக்காக ஒரு போர்வையை போர்த்தலாம். தாய்-தந்தை இருவருமே ஒரே நேரத்தில் கங்காரு முறையை கையாளலாம். இது குடும்ப பிணைப்புக்கு வழிவகுக்கும்.

    காய்ச்சல், சளி, இருமல் என ஏதேனும் நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளாகி அவதிப்பட்டால், கங்காரு பராமரிப்பை தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில் புதிதாக பிறந்த குழந்தைக்கு நோய்த்தொற்று பரவுவதற்கு வழிவகுத்துவிடும். குழந்தைக்கு கங்காரு பராமரிப்பை கொடுப்பதற்கு முன்பு நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிப் படுத்திக்கொள்ளுங்கள்.

    கங்காரு பராமரிப்பின்போது வாசனை திரவியங்கள் அல்லது டியோடரண்டுகளை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏனெனில் அவை குழந்தையின் மென்மையான சருமத்தை எரிச்சலூட்டும். தடிப்புகள், சிவத்தல் மற்றும் ஒவ்வாமைகளை ஏற்படுத்தும். அதுபோல் குழந்தையும் எந்தவிதமான சருமம் சார்ந்த நோய்த்தொற்றாலும் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்வதும் முக்கியம்.

    கங்காரு பராமரிப்பு மூலம் தந்தையர்கள் தங்கள் உணர்வு மற்றும் உடல் ரீதியான ஆதரவை குழந்தைக்கு வழங்க முடியும். அது மட்டுமல்லாமல், பிறந்த குழந்தைக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். அதனால் கங்காரு பராமரிப்பை தாய் மட்டுமின்றி அப்பாவும் கொடுக்க வேண்டும்.
    Next Story
    ×