என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    • கண் பாதுகாப்பு குறித்துப் குழந்தைகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.
    • குழந்தைகளின் கையில் அலைபேசியைக் கொடுப்பதை கட்டுப்படுத்த வேண்டும்.

    பள்ளி செல்லும் குழந்தைகளிடையே கிட்டப்பார்வைக் குறைபாடு சமீபகாலமாக அதிகரித்து வருவதாக இந்தியா, சீனா, ஐரோப்பா போன்ற நாடுகளில் நடைபெற்ற ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஸ்மார்ட்போன், தொலைக்காட்சி, கணினியை பார்த்து கொண்டிருப்பதுதான் இந்த நிலைமைக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. பெரும்பாலான குழந்தைகள் எந்நேரமும் ஸ்மார்ட்போனும் கையுமாக இருக்கிறார்கள். இல்லையென்றால் கணினி, தொலைக்காட்சி முன் மணிக்கணக்கில் அமர்ந்திருக்கிறார்கள். நம் முந்தைய தலைமுறையில் குழந்தைகள், இந்த அளவுக்குக் கண்ணாடி போடவில்லை.

    கிட்டப்பார்வைக் குறைபாடு ஏற்படுவதற்கு இன்னுமொரு முக்கியக் காரணமாக ஆய்வு சுட்டிக்காட்டுவதைக் கவனிக்க வேண்டும். வீட்டுக்கு வெளியில் குழந்தைகள் விளையாடும்போது, கண்ணின் விழித்திரையில் 'டோபமைன்' என்ற வேதிப்பொருளை அதிகமாக சுரக்கச் செய்கிறது சூரிய ஒளி. அதன்மூலம் விழிக்கோளம் நீட்சி அடைவது தடுக்கப்படுகிறது என்றும் சொல்கிறார்கள். சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் 'டி' கண்களை சுற்றியுள்ள தசைகளிலுள்ள திசுக்கள் நன்றாக வேலை செய்வதற்கும், விழித்திரையில் பிம்பம் தெளிவாக விழுவதற்கும், விழிக்கோளத்தின் இயல்பான வளர்ச்சிக்கும் வடிவத்துக்கும் கூட காரணமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    அந்த காலத்தில் குழந்தைகள் நேரம் கிடைக்கும்போதெல்லாம், வீட்டுக்கு வெளியேதானே விளையாடினார்கள். விடுமுறை என்றால் சொல்லவே வேண்டாம், வீட்டுக்கே வர மாட்டார்கள். அதனால் அவர்களுடைய கண் பாதுகாக்கப்பட்டது. ஆனால், இப்போது அதற்கு நேரெதிராகச் செயல்படுவதுதான் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம். கண் பாதுகாப்பு குறித்துப் குழந்தைகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். குழந்தைகளின் கையில் அலைபேசியைக் கொடுப்பதை கட்டுப்படுத்த வேண்டும்.

    சமூக வலைத்தளங்களைத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இணையம் சார்ந்த அனைத்துத் தேவைகளுக்கும் கணினியையே பயன்படுத்த வேண்டும். ஏற்கெனவே கிட்டப்பார்வைக் குறைபாட்டைக் கொண்டவர்களுக்குப் பவர் அதிகரிக்கும்போது, பார்வையைப் பாதிக்கும் தீவிரப் பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழந்தைகளை வீட்டுக்கு வெளியில் விளையாடச் செய்ய வேண்டும். இதன்மூலம் பார்வைக் குறைபாடு ஏற்படாமல் தடுக்க முடியும். ஏற்கெனவே, கிட்டப் பார்வைக்கு கண்ணாடி அணிந்திருப்பவர்களும் வீட்டுக்கு வெளியில் அதிக நேரம் விளையாடுவதன்மூலம் கண்ணாடி பவர் அதிகரிப்பது தடுக்கப்படுவதுடன், கூடுதல் பாதிப்பு ஏற்படாமலும் தடுக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    • வாசிப்பு பழக்கம் மூளையை சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும்.
    • வாசிப்பு பழக்கம் ஒருவரை புத்திசாலியாக்கும்.

    புத்தக வாசிப்பு பழக்கம், அறிவாற்றல் திறனை மட்டும் மேம்படுத்துவதில்லை. 'மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்யும், வயதாகும்போது நரம்பியல் சார்ந்த கோளாறுகளில் இருந்தும் காப்பாற்றும்' என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. வாசிப்பு பழக்கத்தை தொடரும்போது மேலும் என்னென்ன நன்மைகளை பெறலாம் என்பது பற்றி பார்ப்போம்.

    அல்சைமரை தடுக்க முடியும்: வாசிப்பு பழக்கம் மூளையை சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும். அல்சைமர் போன்ற அறிவாற்றல் திறன் குறைபாடு சார்ந்த நோய்களை தடுக்க உதவும். அல்சைமர் என்பது மூளையை சுருங்க செய்து, மூளை செல்களை சிதைக்கும் ஒருவகை நரம்பியல் கோளாறு சார்ந்த நோயாகும். இதன் விளைவாக, சம்பந்தப்பட்ட நபரின் சமூக செயல்பாடு, நடத்தை, சிந்தனை திறன் குறையும். அப்படிப்பட்டவர்கள் வாசிப்பு போன்ற மன ரீதியான தூண்டுதல் செயலில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும்போது வயது அதிகரிப்பதால் ஏற்படும் டிமென்ஷியா போன்ற பிரச்சினைகள் உருவாகுவதற்கான வாய்ப்புகள் குறையும்.

    மூளையை மேம்படுத்தும்: வாசிப்பு பழக்கம் ஒருவரை புத்திசாலியாக்கும். அல்சைமர் போன்ற நோய்களை தடுப்பதோடு மூளையின் சக்தியை அதிகரிக்கச்செய்யும். மேலும் வாசிப்பு என்பது மூளையின் சிக்கலான நெட்வொர்க்கை மீட்டெடுக்கும் செயல்பாடு என்பதால் சமிக்ஞைகளை முதிர்ச்சியுடன் வெளிப் படுத்த உதவும்.

    மன அழுத்தம் குறையும்: புத்தகங்களை படிக்கும்போது அதில் இடம்பெற்றிருக்கும் சாராம்சத்திற்குள், இலக்கியத்துக்குள் மனம் நுழைந்துவிடும். அது நிஜ வாழ்க்கையில் எதிர்கொண்ட சிக்கல்களை ஒதுக்கிவைத்துவிடும். அது பற்றிய எண்ணங்களை மறக்கடித்துவிடும். மேலும் புத்தகம் படிப்பது மன அழுத்தத்தால் ஏற்படும் உணர்வை குறைக்க உதவும். இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் வழிவகுக்கும். மனதுக்கு ஓய்வையும் அளிக்கும். அதனால் மன அழுத்தத்தில் இருக்கும்போது மற்ற செயல்களில் கவனம் செலுத்துவதை விட புத்தகம் வாசிப்பது சிறந்தது.

    மனச்சோர்வு: மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கமாக உணரும் தனிமைப்படுத்துதல் மற்றும் அன்னியமான உணர்வை வாசிப்பு பழக்கம் கட்டுப்படுத்தும். அத்துடன் வாசிப்பு பழக்கம் கற்பனை உலகுக்குள் அழைத்து செல்லும். பிரச்சினைகளுக்கு தற்காலிக வடிகாலாகவும் அமையும். பொதுவாகவே மனதில் எதிர்மறை எண்ணங்கள் குவியும்போது மனச்சோர்வு ஏற்படக்கூடும். நல்ல புத்தகங்களைப் படிப்பதன் மூலம் அந்த இடத்தை நேர்மறையான எண்ணங்களால் நிரப்ப முடியும். நேர்மறையான ஆற்றலும் உருவாகும்.

    தூக்கம்: இரவில் தூங்க செல்வதற்கு முன்பாக டி.வி., செல்போன், சமூக ஊடகங்களில் நேரத்தை செலவிடுவதற்கு பதிலாக புத்தகம் படிப்பது சிறப்பானது. தினமும் தூங்குவதற்கு முன்பு புத்தகம் வாசிப்பது மனதை நிதானப்படுத்த உதவும். இரவில் ஆழ்ந்த தூக்கத்தை பெறுவதற்கு ஊக்குவிக்கும். உடலுக்கு பயிற்சி கொடுப்பதற்கு உடற்பயிற்சியை நாடுவது போல, மூளைக்கும் பயிற்சி கொடுக்க வேண்டும். வாசிப்புதான் மூளைக்கான சிறந்த பயிற்சியாக அமையும்.

    • குழந்தைகள் பேசும்போது கவனச்சிதறலுக்கு இடம் கொடுக்காதீர்கள்.
    • குழந்தைகளின் கண்களை பார்த்தவாறே அவர்களின் பேச்சை ரசித்து கேளுங்கள்.

    இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மற்றும் பதின்வயதினர் படிப்புடன் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட கேட்ஜெட்களுடன் பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார்கள். ஆன்லைன் கல்வி முறையும் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. மின்னணு சாதனங்களிலேயே மூழ்கி கிடப்பதால் பெற்றோருடன் செலவிடும் நேரம் குறைவாக உள்ளது.

    அதனால் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொண்டால் பெற்றோரிடமிருந்து போதிய ஆலோசனைகள் அல்லது வழிகாட்டுதல்களை பெற முடியாமல் தடுமாறும் நிலை நிலவுகிறது. பெற்றோர்-குழந்தைகள் இடையேயான பாசப்பிணைப்பும் பலவீனமடைந்துவிடுகிறது. சுயமாகவோ அல்லது தவறான நபர்களின் வழிகாட்டுதலின் படியோ செயல்பட்டு தவறான முடிவை எடுக்கிறார்கள்.

    பதின்ம வயதை எட்டும் குழந்தைகள் மனதில் சந்தேகங்கள், கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கும். பெற்றோரிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் அவர்களிடத்தில் இருக்கும். அதற்கான வாய்ப்பை பெற்றோர் வழங்கினால் மட்டுமே அவர்கள் மனம் திறந்து பேசுவார்கள். பெற்றோரின் பார்வையில் அவர்கள் பேசும் விஷயங்கள் சாதாரணமாக தெரியலாம். அவர்களுக்குள் எழும் சந்தேகங்களுக்கு தீர்வை முன் வைத்தால் மட்டுமே தொடர்ந்து பெற்றோரிடம் ஆர்வமாக பேசுவதற்கு முயற்சிப்பார்கள். அவர்கள் பேசுவதை காதுகொடுத்து கேட்கவில்லை என்றால் நாளடைவில் பெற்றோரிடம் பேசும் நேரம் குறைந்து போய்விடும்.

    குழந்தைகள் பேசும்போது கவனச்சிதறலுக்கு இடம் கொடுக்காதீர்கள். கண் தொடர்பு அவசியமானது. அவர்களின் கண்களை பார்த்தவாறே அவர்களின் பேச்சை ரசித்து கேளுங்கள். குழந்தைகள் சில விஷயங்களை நேரடியாகச் சொல்லாமல், பேச்சுக்கு இடையே குறிப்பிடுவார்கள். அதனை பெற்றோர்களாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    • சுவாச நுண் குழல் அழற்சி வைரஸ் உள்பட பல்வேறு வைரஸ்கள் தற்போது பரவுகிறது.
    • காய்ச்சல், சளி மற்றும் இருமல் ஆகியவை குழந்தைகளுக்கு பொதுவாக பரவுகிறது.

    சென்னையில் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து கொண்டே செல்கிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள், இளம் வயதினர் அதிக பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

    சென்னையில் உள்ள பெரும்பாலான அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் உள்நோயாளிகள் பிரிவு நிரம்பி வழிகிறது. இதேபோல வெளிநோயாளிகள் பிரிவிலும் வழக்கத்தை விட 25 சதவீதம் பேர் கூடுதலாக காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

    காய்ச்சல், சளி மற்றும் இருமல் ஆகியவை குழந்தைகளுக்கு பொதுவாக பரவுகிறது. காய்ச்சல் 3 அல்லது 4 நாட்களில் குறைந்தாலும், இருமல் குறைந்தது 2 வாரங்களுக்கு நீடிக்கிறது. இருமலுக்கு மருந்து கொடுத்தாலும், அது அடங்க மறுப்பதாக டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள்.

    இதனால் இரவு தூங்குவதற்கு முன்பு, ஒரு தேக்கரண்டி தேன் வெது, வெதுப்பான சுடு நீரில் கலந்து குடிக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். காய்ச்சல், சளி, இருமல் தொல்லையால் சில குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் விடுப்பு எடுத்து வருகிறார்கள்.

    சமீப காலங்களில் காய்ச்சல், சளி மற்றும் இருமல் வேகமாக பரவுவதற்கு வானிலையில் நிலவும் மாற்றம் ஒரு காரணமாக கருதப்படுகிறது. அதே சமயத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், வெளியே நடமாடாமல் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்ற நடைமுறை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் அந்த காலக்கட்டங்களில் காய்ச்சல் பரவலுக்கான வாய்ப்பு கணிசமாக குறைந்து இருந்தது.

    தற்போது கொரோனா பரவல் குறைந்ததையடுத்து அரசு பல்வேறு தளர்வுகளை அளித்துள்ளது. இதனால் வைரஸ்கள் வேகமாக பரவும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்கின்றன. சுவாச நுண் குழல் அழற்சி வைரஸ் உள்பட பல்வேறு வைரஸ்கள் தற்போது பரவுகிறது.

    இதனால் கடுமையான காய்ச்சல், நடுக்கம், கடும் களைப்பு, தலைவலி, உடல்வலி, தொண்டையில் வறட்சி, வாந்தி, வயிற்று வலி ஆகியவை ஏற்படுகிறது. இதில் இருந்து தப்புவதற்கு, கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், முககவசம் அணிய வேண்டும் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

    • சிறு வயதில் இருந்தே உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை உண்டாக்கும்.
    • குழந்தைகள் ஒழுக்கத்துடன் செயல்படுவதற்கு விளையாட்டு கற்றுக்கொடுக்கும்.

    தெருக்களில் ஓடி ஆடி விளையாடும் குழந்தைகளை பார்ப்பது அரிதாகிக் கொண்டிருக்கிறது. டிஜிட்டல் உலகம் வீடியோக்கள் வடிவில் விளையாட்டுகளை வேடிக்கை பார்க்க வைத்துக்கொண்டிருக்கிறது. அதனால் ஓரிடத்தில் முடங்கியபடியே குழந்தைகள் வீடியோ கேம்களை பார்த்து ரசிக்கிறார்கள். அதில் இருந்து மீள வைப்பதற்கு உடல் ரீதியான விளையாட்டுக்களில் குழந்தைகளை ஈடுபடவைப்பதுதான் ஒரே வழி. குழந்தை பருவத்திலேயே விளையாட்டு ஆர்வத்தை விதைப்பதன் மூலம் அவர்களின் தனித்திறன்களையும், வளர்ச்சியையும் ஊக்குவிக்கலாம். அதற்கு விளையாட்டு எவ்வாறு உதவுகிறது என்று பார்ப்போம்.

    1. மன - உடல் ஆரோக்கியம்:

    உடல் மற்றும் மன ரீதியாக ஆரோக்கியமாக இருப்பதற்கு விளையாட்டு உதவும். தேவையற்ற சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் சரியான பாதையில் செல்வதற்கு வழி நடத்தும். குழந்தை பருவத்தில் இருந்தே பல்வேறு விளையாட்டுகளில் கவனம் செலுத்துவது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும். உடல் பருமன் பிரச்சினையில் இருந்தும் விலக்கி வைக்கும். உடல் சம நிலையை பேணவும் உதவும். மன ரீதியாக தோல்விகளை எவ்வாறு கையாள்வது என் பதையும் கற்றுக்கொடுக்கும். மன அழுத்தத்தின் போது அமைதியாக இருப்பது எப்படி என்பதையும் சொல்லிக்கொடுக்கும்.

    2. குழு செயல்பாடு:

    கூடைப்பந்து, கால்பந்து, கிரிக்கெட் போன்ற குழு விளையாட்டுகளை விளையாடுவது குழுவாக ஒன்றிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை அறிய உதவும். ஒவ்வொரு வீரரையும் மதிக்கவும், மரியாதை யுடன் நடத்தவும், அவர்களுடன் இணைந்து பணியாற்றவும் கற்றுக்கொடுக்கும். பள்ளி, கல்லூரி வாழ்க்கைக்கு பின்பு அலுவலக பணியில் சக ஊழியர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும் திறனை வளர்க்கவும் உதவும்.

    3. ஒழுக்கத்தை கற்றுத்தரும்:

    குழந்தைகள் ஒழுக்கத்துடன் செயல்படுவதற்கு விளையாட்டு கற்றுக்கொடுக்கும். அதிகாலையில் பயிற்சி செய்வதற்கு சீக்கிரமாக எழும் உணர்வை ஏற்படுத்திக்கொடுக்கும். சிறு வயதில் இருந்தே உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை உண்டாக்கும். உணவு விஷயத்தில் சுய கட்டுப்பாட்டை பின்பற்ற வைக்கும். துரித உணவுகளை தவிர்த்து ஊட்டச்சத்துமிக்க உணவுகளை சாப்பிடும் வழக்கம் இயல்பாகவே ஏற்படும். மனரீதியாக வலிமையாக செயல்படுவதற்கும் விளையாட்டு வழிகாட்டும்.

    4. சமூக செயல்பாடு:

    இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் செல்போன்களில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். அது வீட்டை விட்டு வெளியேறி விளையாடும் ஆர்வத்தை குறைத்துவிடுகிறது. நண்பர்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை மறக்கடித்துவிடுகிறது. நண்பர்களுடன் குழுவாக சேர்ந்து விளையாடும்போது தகவல் தொடர்பு திறன் வலுப்படும். சமூகத்துடன் தொடர்பு கொள்ளும் திறனும் மேம்படும். உணர்வுகளை சரியாக வெளிப்படுத்துவதற்கும் வித்திடும்.

    5. சுயமரியாதை:

    குழந்தைகளிடத்தில் சுயமரியாதை மற்றும் நம்பிக்கையை வளர்க்க விளையாட்டு உதவும். போட்டியில் வெற்றி பெறுவது அல்லது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டிப்பிடிப்பது அவர்களின் தனித்திறன்கள் மீது அதிக நம்பிக்கை கொள்ளச் செய்யும். பயிற்சியாளரின் ஊக்கமும், சக வீரர்களின் பாராட்டும் சுயமரியாதையை வளர்க்க உதவும். எனவே, குழந்தைகளை அவர்களின் விருப்பப்படி விளையாட விடுங்கள். அவர்கள் வளரட்டும்!

    • பிள்ளை வளர்ப்பு என்பது ஒருபோதும் முழுமையாக முடிவடைவதில்லை.
    • எப்போதும் பிள்ளைகளிடம் ஏதேனும் குறை கண்டுபிடித்துக்கொண்டே இருப்பது.

    பள்ளிப் பருவத்தின் மத்தியில் இருக்கும் பிள்ளைகளை வளர்ப்பதுதான் மிகுந்த சிரமமானது, சவாலானது என பெரும்பாலான பெற்றோர் சொல்லியிருப்பதாகத் தெரிவிக்கிறது சமீபத்திய ஆய்வொன்று.

    பருவமடையும் வயது, அதன் தொடர்ச்சியாக ஏற்படும் மனநிலை மாற்றங்கள், கோபம், தனிமை, குழப்ப உணர்வு என டீன் ஏஜில் பிள்ளைகள் எதிர்கொள்ளும் உணர்வுக் கலவையால், பெற்றோருடன் அவர்களுக்கு நிறைய வாக்குவாதங்களும் கருத்து மோதல்களும் வருவதாகவும் அந்த ஆய்வு சொல்கிறது.

    12 முதல் 14 வயது வரையுள்ள பிள்ளைகளை வளர்ப்பதுதான் சவாலான காலகட்டம் எனப் பெற்றோர் தெரிவிப்பதாகச் சொல்கிறது இன்னோர் ஆய்வு. பிறந்த குழந்தைகளைவிடவும், பள்ளிச் செல்லும் குழந்தைகளைவிடவும், வளர்ந்த பிள்ளைகளைவிடவும் 12 - 14 வயதுப் பிள்ளைகளை வளர்ப்பதுதான் சிரமமாக இருக்கிறதாம். தவழும் குழந்தையின் படுத்தலாகட்டும், தடுமாறும் டீன் ஏஜ் பிள்ளையின் தவிப்பாகட்டும்... பெற்றோருக்கு ஒவ்வொன்றுமே ஒருவித போராட்டம்தான்.

    டீன் ஏஜில் அடியெடுத்து வைத்ததும் பிள்ளைகளின் நடவடிக்கையும் அணுகுமுறையும் ஏன் உக்கிரமாக மாறுகிறது என்றால் ரிஸ்க் எடுப்பதில் அவர்களுக்கு அதிகரிக்கும் ஆர்வம் முதல் காரணம்.

    ஒரு செயலால் விளைகிற நன்மைகளை மிகப் பெரிதாகவும் அதன் விளைவுகளை சாதாரணமாகவும் நினைத்துக் கொள்கிறார்கள்.

    சக வயதினருடனும் பெற்றோருடனும் பெரியவர்களுடனும் தொடர்பில் இருப்பதையும் அவர்களுக்குச் சமமாகத் தம்மை நினைத்துக்கொள்வதையும் விரும்புகிறார்கள்.

    நடுநிலை வகுப்புகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு சிறிய குழந்தைகளை விடவும் ஓரளவு அதிக சுதந்திரம் இருக்கும். ஆனாலும், அவர்களுக்கும் அந்த வயதிலும் பெற்றோர் எல்லைகளை வகுத்து, வலியுறுத்த வேண்டியது அவசியம்.

    உங்கள் பிள்ளைகளின் போனை ஆராய்வது, மெசேஜ்களை படிப்பது என்றெல்லாம் எல்லை மீறாதீர்கள். ஆனால், அவர்கள் என்ன செய்கிறார்கள், யாருடன் இணைப்பில் இருக்கிறார்கள், எங்கே போகிறார்கள் என்ற எல்லா விஷயங்களும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

    உங்கள் வேலை, மற்ற கமிட்மென்ட்டுகளைத் தாண்டி, பிள்ளைகளுக்கான நேரத்தை, அது குறைவான நேரமாக இருந்தாலும் முழுமையாக ஒதுக்குங்கள்.

    சமூக ஊடகங்களில் கொட்டிக் கிடக்கும் ஆபத்துகளை அடிக்கடி உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொண்டே இருங்கள். அவற்றில் இருந்து விலகி, பாதுகாப்பாக இருக்கக் கற்றுக்கொடுங்கள்.

    பெற்றோர் மகிழ்ச்சியாக இருந்தால்தான் அவர்களால் அவர்களின் பிள்ளைகளையும், அதே சந்தோஷத்துடன் வளர்க்க முடியும். அதற்கு அடிப்படை முறையான தகவல் தொடர்பு. ஸ்ட்ரெஸ் இல்லாத பெற்றோரால்தான், பிள்ளைகளுக்கு ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கையை வாழக் கற்றுக்கொடுக்க முடியும்.

    எப்போதும் ஏதோ ஒரு ஸ்ட்ரெஸ்ஸில் இருக்கும் பெற்றோரிடம் எந்தக் குழந்தையும் தானாக முன்வந்து பேச விரும்பாது. தங்களுடைய எண்ணங்கள், விருப்பங்கள், பிரச்னைகளை அப்படிப்பட்ட பெற்றோரிடம் பகிரவும் விரும்ப மாட்டார்கள்.

    • பிறந்த குழந்தையை அழகுப்படுத்தும் விதமாக கண் மையால் அழகுப்படுத்தும் அம்மாக்கள் அதிகம்.
    • பாரம்பரியமாக குழந்தைக்கு கருப்பு பொட்டு வைப்பது திருஷ்டியைக் கழிக்கும்.

    பிறந்த குழந்தையே ரோஜாப்பூ போன்று அழகாய் இருக்கும் போது அதை மேலும் அழகுப்படுத்தும் விதமாக கண் மையால் அழகுப்படுத்தும் அம்மாக்கள் அதிகம். பாரம்பரியமாக குழந்தைக்கு கருப்பு பொட்டு வைப்பது திருஷ்டியைக் கழிக்கும் என்று சொல்லிக் கொள்கிறோம். மூத்த முந்தைய தலைமுறையினர் குழந்தைக்கு தேவையானவற்றைக் கூடுமான வரை அவர்களாகவே தயாரித்து பயன்படுத்தினார்கள்.

    பருத்தி துணியில் செய்யப்படும் லங்கோட்டாக்கள், உரை மருந்துகள், மசாஜ் செய்ய செக்கில் ஆட்டிய எண்ணெய்கள் இவற்றுக்கு மத்தியில் கண் ணுக்கு வைக்க கூடிய கண் மைகளையும் தயாரித்தார்கள். குட்டிக் கண்களுக்கு மையிட்டு கண்களை இன்னும் அழகாக காட்டுவதற்கு மை இட்டாலும் திருஷ்டி கழியவே கண் மை என்று சொல்வார்கள்.

    தற்போது எல்லாமே மாறிவிட்டது. கடைகளில் விற்கப்படும் கண்மையில் அதிக அளவு லெட் இருப்பதால் குழந்தையின் கண்களிலும், எலும்பு, மூளை பகுதியிலும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. கண்மை தயாரிக்கப் பயன்படும் பொருள்களில் ரசாயனத் தன்மை கலந்திருப்பதால் சில குழந்தை களுக்கு கண் மை அரிப்பு, கண்களில் நீர் வடிதல், கண்ணில் அலர்ஜி போன்றவை உண்டாகும் வாய்ப்புண்டு. மேலும் விரல் இடுக்குகளில் இருக்கும் தூசு, அழுக்கு போன்றவற்றாலும் தொற்றுப் பரவ நேரிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தப்படும் கண் மை எவ்வித பாதிப்பையும் உண்டாக்காது. அதைத் தயாரிப்பதும் எளிதானதே.

    • குழந்தைகளுக்கு குறைந்தது 10 வயது வரை 12 மணி நேர தூக்கம் அவசியம்.
    • குழந்தைகள் தூக்கமில்லாமல் இருப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம்.

    குழந்தைகளுக்கு போதிய அளவு தூக்கமில்லாமல் இருந்தால் அவர்கள் மனப்பதட்டத்திற்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாவர்கள். குழந்தைகளுக்கு போதிய அளவு தூக்கமில்லாமல் இருந்தால் அவர்கள் மனப்பதட்டத்திற்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாவர்கள் என்று ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. குழந்தைகளுக்கு குறைந்தது 10 வயது வரை 12 மணி நேர தூக்கம் அவசியம்.

    தொடர்ந்து தூக்கமின்மை அல்லது போதிய தூக்கமில்லாமல் இருக்கும்போது, குழந்தைகள் உணர்வு சம்பந்தப்பட்ட பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள் என்று ஹூஸ்டன் பல்க்லைக் கழகம் ஆய்வினை சமர்ப்பித்திருக்கிறது. இந்த ஆய்விற்காக தூக்கமின்மையால் அவதிப்படும் 7-11 வயது வரை உள்ள குழந்தைகளிடம் பரிசோதித்தபோது, இந்த பிரச்சனையால் அவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக காணப்படுகிறது.

    மேலும் நேர்மறை எண்ணங்கள் வரவிடாமல் தடுக்கிறது. இரண்டு நாள் தூக்கமில்லாமல் இருப்பதால் அவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் அதிகமானதோடு, நினைவுத் திறனும் மிகவும் பின்தங்கியிருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

    எப்படி உடற்பயிற்சி, நல்ல ஆரோக்கியமான உணவு, பற்கள் பாதுகாப்பு முக்கியமோ, அதே அளவிற்கு தூக்கமும் குழந்தைகளுக்கு அவசியம் என்று கூறுகின்றனர். உங்கள் குழந்தைகள் காலையில் எழுவது மிக தாமதமாக இருந்தால், அல்லது பகல் முழுவதும் தூங்கி வழிந்தால், அவர்களுக்கு இரவில் போதுமான தூக்கம் இல்லை என்று அர்த்தம்.

    தூக்கமில்லாமல் இருப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். தாமதமாக படுக்கைக்கு செல்வது, அல்லது தூக்கத்தில் இடையூறுகள் இருப்பது என பல காரணங்கள் இருக்கலாம். இவற்றை என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றை சரி செய்வது ஒவ்வொரு பெற்றோரின் கடமை.

    • ஆரோக்கியமான தூங்கும் வழக்கத்தை குழந்தைகளுக்கு பழக்குவது பெற்றோரின் கடமை.
    • குழந்தைகள் அடம்பிடிக்காமல் எளிதாகத் தூங்கச் செய்வதற்கு சில டிப்ஸ்:

    குழந்தைகள் இரவில் சரியாகத் தூங்காமல் அடம்பிடிக்கும்போது, அம்மாக்களின் நிலைமை திண்டாட்டம் ஆகிவிடும். ஆரோக்கியமான தூங்கும் வழக்கத்தை குழந்தைகளுக்கு பழக்குவது பெற்றோரின் கடமை. குழந்தைகள் அடம்பிடிக்காமல் எளிதாகத் தூங்கச் செய்வதற்கு சில டிப்ஸ்:

    நேரத்தைக் கடைப்பிடியுங்கள்: சீரான படுக்கை நேர வழக்கத்தைப் பின்பற்றுவது, குழந்தை எவ்வித இடையூறும் இன்றி தூங்க உதவி செய்யும். தூங்கும் நேரத்தில் குழந்தை ஏதாவது செய்து கொண்டிருந்தால், அதற்கு அனுமதிக்காமல் கண்டிப்புடன் இருக்க வேண்டும். சரியான நேரத்தில் குழந்தை தூங்கச் செல்லும் வழக்கத்தை இது ஏற்படுத்தித் தரும்.

    அமைதியான சூழல்: நிம்மதியான தூக்கம் வர வேண்டுமானால், அமைதியான சூழல் அவசியம். குழந்தைகளுக்கு இதுபோன்ற சூழலை ஏற்படுத்தித் தர வேண்டியது பெற்றோரின் கடமை. குழந்தை உறங்கும் அறையை இனிமையாகவும், அமைதியாகவும் வைத்திருக்க வேண்டும். அறையில் மிகவும் குறைவான வெளிச்சத்தை உணர்வதற்கு, ஜன்னல் திரையை சரியாக அமைக்க வேண்டும். வெளியில் இருந்து சத்தங்கள் அறைக்குள் எட்டாமல் இருக்குமாறு கவனித்துக்கொள்ள வேண்டும். விளக்கு வெளிச்சம் அதிகமாக இல்லாமல், மங்கலான இரவு ஒளியைப் பயன்படுத்தலாம். படுக்கையில் குழந்தையுடன் பேசும்போது, மென்மையான குரலைப் பயன்படுத்தலாம். இது இரவை உணர வைப்பதற்கான அறிகுறி.

    வயிற்றை நிரப்புங்கள்: குழந்தைகளுக்குப் பசியை சரியாகச் சொல்லத் தெரியாது. இரவு நேரத்தில், சரியாக சாப்பிடாமல் பசி உணர்வுடன் இருந்தால், தூக்கம் வராமல் அழும். எனவே, இரவில் குழந்தைகள் வயிறு நிறைய சாப்பிடுகிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். சாப்பிட்ட உடனே தூங்க வைக்காமல், சிறிது நேரம் ஏதாவது ஒரு செயல்பாட்டில் ஈடுபடுத்தலாம். இரவில், தளர்வான உடை அணிவித்தல், தாலாட்டு, தாயின் அருகாமை ஆகியவை குழந்தைக்கு தூக்கம் வரச் செய்யும். குழந்தை தூங்கும் முன் கதை சொல்வது, மெல்லிசையை ரசிப்பது ஆகியவை உறக்கத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

    குழந்தையை அடிக்காதீர்கள்: குழந்தைகள் உறங்கவில்லை என்றால், அதற்காக அடிப்பது, பயப்படும் அளவு மிரட்டுவது போன்ற முறைகளைக் கையாளக்கூடாது. இவ்வகையான பழக்கங்கள் குழந்தைக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இவை குழந்தையின் கற்றல் மற்றும் அறிவு வளர்ச்சியில் பாதிப்பை உண்டாக்கும். பகல் உணவில் சத்து நிறைந்த காய்கறி, கீரைகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்க்க வேண்டும். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

    பொதுவான டிப்ஸ்: இரவில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது, அறையில் விளக்கை அணைத்து அல்லது சிறிய விளக்கை மட்டும் ஒளிர விடலாம். குழந்தைகளின் தூங்கும் இடத்தை அடிக்கடி மாற்றக்கூடாது. லேசாக குழந்தையை ஆட்டி தாலாட்டு பாடலாம். மெதுவாக வருடிவிட்டாலும் குழந்தை தூங்கும் அல்லது முதுகில் லேசாகத் தட்டிக் கொடுக்கலாம். ஈரத்துணி, ஈர நாப்கினை மாற்றி உலர்ந்த துணி நாப்கினை அணிவித்து தூங்க வைத்தால் குழந்தை சீக்கிரமே தூங்கிவிடும்.

    • சிலவகை மருந்துகள் உணவுடன் கலக்கப்படும்போது செயல் திறனை இழப்பதாகத் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றார்கள்.
    • பெரியவர்களது மருந்து மாத்திரைகள் அளவைக் குறைத்து குழந்தைகளுக்குக் கொடுப்பது பயங்கரமானது.

    குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும்போது கவனக் குறைவாகப் பெற்றோர்கள் தவறு செய்வது எல்லா வீட்டிலும் நடப்பதுதான். தெரியாமல் செய்யும் தவறை விட நாம் செய்வது தவறு என்று தெரியாமலே, நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள்தான் அதிகம். அப்படிப்பட்ட தவறுகளை தவிர்க்க வேண்டியது மிக முக்கியம் தாய்மார்கள் செய்யும் சில தவறுகளும், அவற்றின் விளைவுகளும் எப்படி என்று பார்ப்போமா? மருந்தை உணவுடன் கலந்து கொடுப்பது. மருந்து சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு அதை உணவுடன் கலந்து கொடுப்பது பல பெற்றோர்களின் வழக்கம்.

    சிலவகை மருந்துகள் உணவுடன் கலக்கப்படும்போது செயல் திறனை இழப்பதாகத் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றார்கள். எனவே மருத்துவரை கலந்தாலோசித்த பிறகே அப்படிக் கொடுப்பது நல்லது. அப்படியே கொடுப்பதானாலும் முன்கூட்டியே உணவையும் மருந்தையும் கலந்து வைக்காமல், சாப்பிடக் கொடுப்பதற்கு முன் கலக்கவும். ஆண்டிபயாடிக்குகளை சீக்கிரமே நிறுத்துதல்.... உங்கள் குழந்தைக்கு மருத்துவர் பத்து நாட்கள் கொடுக்கச் சொல்லி ஆண்டிபயாடிக் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம். குழந்தைகளின் உடல் நலம் தேறுவது தெரிந்தும் ஐந்து அல்லது ஆறு நாட்களிலேயே மருந்துகளை நிறுத்தக் கூடாது.

    இதனால் அரை குறையாகத் தேறிய குழந்தையின் உடல் நிலை இன்னும் மோசமாகலாம். தேவைப்படாத நேரத்தில் மருந்து கொடுத்தால் சாதாரண தும்மல், இருமல் போன்றவற்றுக்கெல்லாம் மருந்து மாத்திரைகளைக் கொடுத்து குழந்தைகளைப் பழக்க வேண்டியதில்லை. நோய் தீவிரமாகிவிடுமோ என்ற பயத்தில் மருந்துகளைக் கொடுப்பது பக்க விளைவுகளையே ஏற்படுத்தும். பழைய மருந்துகளைக் கொடுத்தால் போனமுறை உங்கள் குழந்தைக்கு ஏற்பட்ட அதே பாதிப்பு இந்த முறையும் ஏற்படலாம்.

    அறிகுறிகள் ஓரே மாதிரி இருப்பதைப் பார்த்து, போன முறை கொடுத்த அதே மருந்து மாத்திரைகளைக் கொடுப்பது ஆபத்தானது. அதே போல காலாவதியான மருந்து, மாத்திரைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். பெரியவர்களுக்கான மருந்தை கொடுத்தல் பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஓரே மாதிரி அறிகுறிகள் தென்படும் போது, பெரியவர்களது மருந்து மாத்திரைகள் அளவைக் குறைத்து குழந்தைகளுக்குக் கொடுப்பது பயங்கரமானது.

    மருந்தின் சக்தியை எதிர் கொள்ள முடியாமல் அது குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக அமையலாம். மருந்துகளின் மேலிருக்கும் லேபில்களைப் படித்து மருத்துவர் பரிந்துரைத்த பட்டியலில் உள்ளவையும், கடையில் வாங்கியவையும் ஒரே மருந்துதானா என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும். பிறகு அதன் லேபிளின் மீதுள்ள எச்சரிக்கைகளையும் கொடுக்கும் முறைகளையும் படிக்க வேண்டும்.

    • குழந்தைகளுக்கு எதிலும் தீவிர கவனம் இருக்காது.
    • ஆசிரியர் பாடம் நடத்தும்போது அவர் சொல்வதை கவனமாக கேட்க வேண்டும்.

    மாணவர்கள் தங்கள் எண்ணங்களை கட்டுப்படுத்தி மனதை ஒருமுகப்படுத்தினால் தான் கல்வியில், வாழ்க்கையில் வெற்றி பெறமுடியும். குழந்தைகளுக்கு எதிலும் தீவிர கவனம் இருக்காது. அவர்களது மனம் அலைபாய்ந்துகொண்டே இருக்கும். அதுபோன்ற நிலையில் இருப்பவர்கள் தங்கள் எண்ணங்களை கட்டுப்படுத்தி மனதை ஒருமுகப்படுத்தினால் தான் கல்வியில், வாழ்க்கையில் வெற்றி பெறமுடியும். அவ்வாறு வெற்றிகளைப்பெற மனதை ஒருமுகப்படுத்துவது எப்படி என்பதை காண்போம்.

    1) இரவில் நிம்மதியான, ஆழ்ந்த உறக்கம் மிக அவசியம். அப்போது தான் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி படிப்பில் கவனம் செலுத்த முடியும். மருத்துவ ரீதியல் ஒரு மனிதனுக்கு தினமும் குறைந்தபட்சம் 8 மணி நேர தூக்கம் அவசியம். சரியான உறக்கம் இல்லை என்றால் உடலும் மனமும் சோர்ந்து கல்வி கற்பதில் தடுமாற்றம் ஏற்படும். எனவே இரவில் நீண்ட நேரம் டெலிவிஷன் பார்ப்பது, திரைப்படங்கள் பார்ப்பது போன்றவற்றை தவிர்த்து சரியான நேரத்திற்கு உறங்கச்சென்று அதிகாலையில் விழித்து படிப்பது நல்லது.

    2) காலை உணவு மிக அவசியம். சிலர் பள்ளிக்குப்புறப்படும் அவசரத்தில் காலை உணவை தவிர்ப்பதுண்டு. இது ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இரவு நீண்ட நேரத்திற்கு பிறகு வயிறு காலியாக இருக்கும். எனவே காலை உணவு சாப்பிட்டால் தான் உடலும், மூளையும் சுறுசுறுப்பாக இயங்க முடியும். இல்லை என்றால் உடலும், மூளையும் சோர்ந்து போகும். ஆர்வமுடன் படிக்க முடியாது. படிப்பதும் மனதில் பதியாது.

    3) ஆசிரியர் பாடம் நடத்தும்போது அவர் சொல்வதை கவனமாக கேட்க வேண்டும். அவர் கரும்பலகையில் எழுதிப்போடும் குறிப்புகளை கவனமுடன் எழுதிக்கொள்ள வேண்டும். ஆசிரியர் பாடம் நடத்தும் போது மனதை அலைபாய விடுவது, கவனக்குறைவாக இருப்பது போன்றவை கூடாது.

    4) ஒவ்வொரு வகுப்பிற்கும் இடையில் சிறிதுநேரம் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். அதாவது ஒரு சில நிமிடங்கள் கண்களை மூடி அமைதியாக இருந்தாலே போதும். இவ்வாறு செய்வதன் மூலம் அடுத்தடுத்த வகுப்புகளை ஆர்வத்துடன் கவனிக்க முடியும்.

    5) வகுப்பறையில் அமரும்போது எப்போதும் நேராக, நிமிர்ந்து அமருங்கள். உடலை வளைத்துக்கொண்டு அமரக்கூடாது.

    6) கவனம் தடைப்படும்போது உடலை அசைத்துக்கொள்ளலாம். கை, கால்களை அசைத்து உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து சுறுசுறுப்பை உருவாக்கலாம். கொஞ்சம் தண்ணீர் குடித்தாலும் உடலில் சுறுசுறுப்பு ஏற்படும்.

    • குழந்தைகளுக்கான ஷாப்பிங் விஷயத்தில் பொறுமை தேவை.
    • குழந்தைகளின் நலனை மனதில் கொண்டு ஷாப்பிங் செய்ய வேண்டும்.

    குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஷாப்பிங் செல்வதற்கு விசேஷ திறமை வேண்டும். தேவையற்ற பொருளை குழந்தை கை காட்டி கேட்டால் மறுப்பு தெரிவிக்காமல் வாங்கிக்கொடுத்தாக வேண்டியிருக்கும். இல்லாவிட்டால் அந்த இடத்திலேயே அடம் பிடித்து அழத் தொடங்கிவிடும். குழந்தைகளை சமாதானப்படுத்துவது என்பது சாதாரண விஷயமல்ல. இப்போதெல்லாம் அத்தியாவசிய தேவைக்காக பொருள் வாங்குவது குறைந்துவிட்டது.

    தங்களின் மகிழ்ச்சிக்காக பொருட்களை வாங்குவதற்கு பலரும் பழகிவிட்டார்கள். அதிலும் குழந்தை ஒரு பொருளை விரும்பி கேட்கும்போது அதை வாங்கிக்கொடுக்காமல் தவிர்க்க முடியாது. பணம் செலவானாலும் பரவாயில்லை, குழந்தை மகிழ்ச்சியாக இருந்தால் போதும் என்ற மன நிலையில் பலரும் இருக்கிறார்கள். விலையை கருத்தில் கொள்ளாமல் குழந்தைகள் விரும்பியதை வாங்கிக் கொடுத்து விடுகிறார்கள். இதை தெரிந்து வைத்திருக்கும் பல நிறுவனங்கள் குழந்தைகளை கவரும் பொருட்களை கடையின் வாசலில் வைத்திருப்பார்கள்.

    ஆடைகள்: குழந்தைகள் எப்போதும் வண்ணங்களை விரும்பும் குணம் கொண்டவர்கள். கண்கவர் வண்ணங்கள் குழந்தைகளை வெகுவாக ஈர்த்துவிடும். அதனால்தான் உடைகள் வாங்கும்போது அவை உடலுக்கு மென்மையாக இருக்குமா? என்பதையெல்லாம் கவனிக்க மாட்டார்கள். ஆடையின் நிறம் பிடித்துவிட்டால் அதைத்தான் எடுத்தாக வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். அந்த ஆடை குழந்தைகளின் உடல் அமைப்புக்கு சவுகரியமாக இருக்கிறதா? என்பதை பெற்றோர்தான் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏராளமான டிசைன்களை கொண்ட உடை அசவுகரியத்தை தரக்கூடும். கனமாக இருக்கும் உடைகளையும் தவிர்க்க வேண்டும். நிறம் மட்டும் பிடித்தால் போதாது. அணிவதற்கும் வசதியாக இருக்க வேண்டும்

    . எந்த உடையாக இருந்தாலும் குழந்தைகள் கொஞ்ச காலமாவது அணிந்து மகிழ வேண்டும். குழந்தைகள் வேகமாக வளர்ந்து கொண்டிருப்பார்கள் என்பதால் ஆடை தேர்வில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதிக விலை கொடுத்து ஆடையை வாங்கிவிட்டு, சில நாட்கள்கூட அணிய முடியாமலும் போகலாம். பண விரயம்தான் மிச்சம். பணத்தை செல வளிக்க தயங்கும் பெற்றோர் கூட குழந்தைகள் விஷயத்தில் ஏமாந்து விடுகிறார்கள். இவர்களுடைய பலவீனத்தை தெரிந்து கொண்டு விலை உயர்ந்த ஆடைகள் சந்தையை அலங்கரிக்கின்றன. அவ்வளவு விலை கொடுக்கும் அளவிற்கு அந்த ஆடையில் என்ன ஸ்பெஷல் இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    காலணிகள்: பொதுவாக காலணிகள் தேர்வு விஷயத்திலும் குழந்தைகளின் கவனம் சிதறும். குழந்தைகளை கவரும் விதமாக ஏராளமான டிசைன்களில் காலணிகள் அணி வகுக்கின்றன. பெரியவர்களின் காலணிகளை விட அவற்றின் விலை அதிகமாக இருக்கும். குறிப்பிட்ட காலம் மட்டுமே அதனை அணிய முடியும். வளரும் குழந்தைகளுக்கு காலணி வாங்கும்போது காலுக்கு மென்மையான, தாராளமாக கால்களில் பொருந்தும் விதமாக இருக்கிறதா? என்று கவனிக்க வேண்டும்.

    பெரியவர்கள் காலணிகளை பல நாட்கள் அணிவதற்கு ஏற்ப பராமரிப்பார்கள். குழந்தைகளால் அவ்வாறு செய்ய முடியாது. சில நாட்களுக்குள்ளாகவே உடைகள், காலணிகளை உபயோகப்படுத்த முடியாமல் போக நேரிடலாம். அதனால் வளரும் குழந்தை களுக்கு அதிக விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் விஷயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    விளையாட்டு பொருட்கள்: குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு பயன்படும் விதமாக விளையாட்டு பொருட்களின் தேர்வு அமைய வேண்டும். அதனை மையமாக வைத்துத்தான் அவர்களின் கற்பனை திறன் வளரும். அதனால் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப விளையாட்டு பொருட்களை வாங்கிக்கொடுக்கலாம். ஆண், பெண் குழந்தைகள் இருவருக்கும் இயல்பாகவே விருப்பங்கள் வேறுபடும். அதற்கேற்ப பொருட்களை தேர்வு செய்ய அனுமதிக்கலாம். கூடுமானவரை வன்முறையை தூண்டும் விளையாட்டு சாதனங்களை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டாம் என்று யுனிசெப் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. விளையாட்டு சாதனங்கள் வாங்கும்போது அது எந்த பொருளில் செய்யப்பட்டது என்பதை பார்த்து வாங்குங்கள். தரமற்ற பிளாஸ்டிக், அலர்ஜி ஏற்படுத்தும் ரசாயனங்கள் கலந்த விளையாட்டு பொருட்களை தவிருங்கள். எப்போதும் பொம்மைகளையே வாங்கிக்கொடுக்காமல் விதவிதமான பொருட்களை பரிசளியுங்கள். குழந்தைகள் அடம் பிடிக்கிறார்கள் என்பதற்காக தேவையற்ற பொருட்களை வாங்கிக் கொடுக்காதீர்கள். குழந்தைகளுக்கான ஷாப்பிங் விஷயத்தில் பொறுமை தேவை. அவர் களின் நலனை மனதில் கொண்டு ஷாப்பிங் செய்ய வேண்டும்.

    ×