என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    நகர்ப்புற அடுக்குமாடி வீடுகளில் குட்டி பசங்களுக்கான பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்கவேண்டியது முக்கியம்.
    நகர்ப்புற அடுக்குமாடி வீடுகளில் குட்டி பசங்களுக்கான பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்கவேண்டியது முக்கியம். குழந்தைகள் எல்லா இடங்களிலும் சுற்றி வரக்கூடியவர்கள் என்ற நிலையில் மாடிப்படிகளில் ஏறி இறங்கி விளையாடுவதை எல்லா நேரங்களிலும் தடுக்க முடிவதில்லை. குறிப்பாக அவர்களது பாதுகாப்பை கருத்தில்கொண்டு பால்கனி மற்றும் மாடிப்படிகளில் கச்சிதமான தடுப்பு முறைகளை கையாளவேண்டும்.

    மேற்கண்ட இடங்களில் பொருத்தப்படும் ‘சேப்டி கேட்’ எனப்படும் தடுப்பு கதவுகள் மற்றும் ‘ஹேண்ட் ரெயில்’ என்று சொல்லப்படும் கைப்பிடி அமைப்புகள் ஆகியவை போதுமான உயரத்தில் இருக்குமாறு கவனித்துக்கொள்ளவேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட வீடுகளில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு அம்சங்களில் கவனிக்க வேண்டிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

    * சின்ன குழந்தைகள் மாடிப்படிகளில் ஏறுவது அல்லது இறங்குவது ஆகியவற்றை தவிர்ப்பதற்கு மாடிப்படிகளின் நுழைவுப்பகுதியில் சிறியதாக ‘சேப்டி கேட்’ அமைப்பது நல்லது. அந்த கேட் 1 மீட்டருக்கும் குறைவான உயரத்தில் இருந்தால் போதுமானது. மரம் அல்லது அலுமினியம் போன்ற பொருட்களால் அதை அமைத்துக்கொள்ளலாம்.



    * மாடிப்படிகளில் கைப்பிடி சுவர் அமைப்புகள் 1 மீட்டர் உயரத்துக்கும் அதிகமாக இருப்பது நல்லது. அதை விடவும் உயரம் குறைவாக இருக்கும் பட்சத்தில் குழந்தைகள் அதன்மீது ஏறியும், இறங்கியும் சறுக்கி விளையாடும் வாய்ப்புகள் இருக்கின்றன.

    * மாடிப்படிகளுக்கு வழவழப்பான டைல்ஸ் வகைகளை பதிப்பதை தவிர்த்து விடவேண்டும். மேலும், கிரானைட், மார்பிள் போன்றவை அட்டகாசமான தோற்றம் கொடுப்பவையாக இருந்தாலும் வழுக்கும் தன்மை கொண்டதாக இருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். அதனால் சொரப்பான மேற்பரப்பு கொண்ட டைல்ஸ் வகைகளை பயன்படுத்தலாம்.

    * தரை மட்டத்திலிருந்து குறைவான உயரத்தில் கண்ணாடி ‘ஷோ-கேஸ்’ போன்றவற்றை குழந்தைகள் உள்ள வீடுகளில் அமைக்கும்போது தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துகொள்ளவேண்டும். மேலும், கண்ணாடிகள் உறுதியாக இருக்கவேண்டும்.



    * குழந்தைகள் பயன்படுத்தும் மேஜை முனைகள் கூர்மையாக இருப்பது கூடாது. அவ்வாறு இருந்தால் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேஜைகளின் கார்னர் பாதுகாப்புக்காக பொருத்தப்படும் ‘பிளாஸ்டிக் பிட்டிங்குகள்’ கடைகளில் கிடைக்கின்றன.

    * பொதுவாக, குழந்தைகளுக்கான கட்டில் அதிக உயரமாக இருக்கக்கூடாது. மேலும், கட்டிலின் ஓரத்தில் தக்க தடுப்புகள் பொருத்திவிட்டால், தூக்கத்தில் புரண்டு கீழே விழுவது தவிர்க்கப்படும்.

    * புதியதாக ‘போர்வெல்’ அமைக்கப்பட்ட மனைகளில், குழாய்கள் பொருத்தப்படும் வரையில் அவற்றை கச்சிதமாக கோணிகள் கொண்டு மறைத்து நன்றாக கட்டி மூடி வைக்கவேண்டும். குழந்தைகள், சிறுவர்கள் இருக்கும் வீடுகளில் உள்ள கிணறுகளுக்கு தக்க மூடி அல்லது வலை போட்டு மூடப்பட்டிருப்பது நல்லது.
    தேர்வுகளில் வெற்றி பெறவும், தோல்வியை தவிர்த்து வெற்றி பெறுவது குறித்தும், தோல்வியை வெற்றியாக மாற்றுவது எப்படி என்பது குறித்தும் அறிந்துகொள்ளலாம்.
    தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும், தேர்வுகளில் வெற்றி பெறவும் உதவும் குறிப்புகள் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது. தோல்வியை தவிர்த்து வெற்றி பெறுவது குறித்தும், தோல்வியை வெற்றியாக மாற்றுவது எப்படி என்பது குறித்தும் இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

    ஒருவருக்கு வாழ்க்கையில் எப்போதும் வெற்றி நிரந்தரமாக கிடைப்பதில்லை. சில நேரங்களில் தோல்வியையும் சந்திக்க நேரிடும். சிலர் ஆண்டு இறுதித்தேர்வில் வெற்றி பெறமுடியாமல் போகலாம். அதுபோன்ற நிலையில் அவர்கள் மீண்டும் தங்கள் பாடங்களை படித்து தேர்வு எழுதும் நிலை உருவாகும். இதற்காக மனம் வருந்தக்கூடாது. நடந்து முடிந்தவற்றுக்காக யாரையும் குறை சொல்வதோ, குற்றம் கற்பிப்பதோ கூடாது. தவறுகளை திருத்திக்கொள்ள முன்வரவேண்டும். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு இனிமேல் எந்த தவறும் செய்யாமல் இருக்க வேண்டும். எனவே தோல்வி வந்தால் துவண்டுபோய்விடாமல் முன்னேற வேண்டும்.

    எந்த ஒரு செயலின் வெற்றிக்கும் முயற்சி மிக அவசியம். முயற்சியே செய்யாமல் இருந்தால் வெற்றி கிடைக்காது. ஒரு செயலில் தோல்வி வரமால் இருக்கவேண்டும் என்றால் அதை வெற்றிப்பாதையில் கொண்டுசெல்ல முயற்சி செய்யவேண்டும். குறிப்பாக பள்ளிப்பாடங்கள் புரியவில்லை என்று படிக்காமல் இருப்பதைவிட தெரியாததை தெரிந்துகொள்ள முன்வரவேண்டும். ஆசிரியர்களிடம் அணுகி சந்தேகங்களை தெரிவித்து தெளிவு பெறவேண்டும்.

    வகுப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது மிகவும் கவனமாக பாடங்களை கவனிக்க வேண்டும். இதையே ‘கற்றலின் கேட்டல் நன்று’ என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். எனவே வகுப்பறையில் ஆசிரியர் பாடங்களை நடத்தும்போது கவனமாக கேட்டு அறிந்துகொள்ள வேண்டும். அப்போது சந்தேகம் எதுவும் ஏற்பட்டால் அதை ஆசிரியரிடம் கேட்டு அறிந்துகொள்ள தயங்க கூடாது.



    படிக்கும்போது பாடங்கள் தொடர்பான கருத்துக்களை குறிப்பாக எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். இந்த குறிப்புகளை அடிப்படையாக வைத்து படிக்கும்போது பாடங்கள் எளிதாக புரியும். எதையும் மனப்பாடம் செய்யவேண்டும் என்பதில்லை. நன்றாக புரிந்து படிக்க இந்த குறிப்புகள் உதவும். மேலும் இந்த குறிப்புகள் மூலம் பாடங்களை நினைவுபடுத்திக்கொள்ளமுடியும்.

    ‘எதையும் நாளை செய்வோம்’ என்று தள்ளிப்போடக்கூடாது. எந்த ஒரு செயலையும் உடனுக்குடன் முடிக்கவேண்டும். இதை படிப்பு விஷயத்தில் மிகவும் கவனமாக கையாள வேண்டும். வகுப்பில் ஆசிரியர் நடத்தும் பாடங்களை அன்றாடம் உடனுக்குடன் படித்துவிடவேண்டும். இல்லை என்றால் படிக்க வேண்டிய பாடங்கள் சேர்ந்துகொண்டே போகும். பின்னர் கடைசி நேரத்தில் மொத்தமாக அனைத்தையும் படிக்கவேண்டிய நெருக்கடி ஏற்படும்.

    கற்றலில் குறைபாடு எதுவும் இருந்தால் அதை உடனுக்குடன் சரிசெய்துகொள்ளவேண்டும். எனவே உங்கள் குறைபாடுகளை தயக்கமின்றி பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடம் தெரிவித்து அதற்கு தீர்வு காண வேண்டும். உங்கள் மீது உண்மையான அன்பு கொண்டவர்கள் உங்களை நிச்சயம் நல்வழிப்படுத்துவார்கள்.
    இன்று பல பெற்றோர் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அதிக கவலை கொண்டவர்களாக இருக்கின்றனர். எனவேதான் அவர்களைக் கண்காணித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
    சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எங்கேயும் எப்போதும் கண்ணும் கருத்துமாய் பாதுகாப்பார்கள். அவர்களின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டே இருப்பார்கள். பார்த்துப் பார்த்து உணவூட்டுவார்கள். சிறு உடல்நல பாதிப்பு என்றாலும் துடித்துப் போய் ஆஸ்பத்திரிக்கு ஓடுவார்கள்.

    இப்படிப்பட்ட பெற்றோரை பிற பெற்றோரும் வியப்பாய் பார்ப்பார்கள். ‘பெத்தவங்கன்னா இப்படித்தான் இருக்கணும்’ என்பார்கள்.

    ஆனால், குழந்தைகளை கண்ணுக்குள் வைத்துக் கவனித்துக்கொள்ளும் ‘அதீத அக்கறை’ பெற்றோரால் அக்குழந்தைகளுக்கு அபாயம்தான் அதிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். குழந்தை எங்கே கீழே விழுந்து காயம்பட்டுக்கொள்ளுமோ என்று மேற்கண்ட பெற்றோர் கருதி விளையாடாமல் தடுப்பதால், அவர்களின் எடை கூடும் அபாயம் அதிகரிக்கிறதாம்.

    இதுதொடர்பான ஆய்வை அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். அவர்கள், பூங்காவுக்கு வரும் குடும்பங்களைக் கவனித்தனர். அப்போது, அதீத அக்கறை பெற்றோர் தங்கள் குழந்தைகள் அதிகம் ஓடியாடாமல், விளையாட்டு அமைப்புகளில் ஏறி விளையாடாமல் பார்த்துக் கொண்டனர். குழந்தைகள் இயல்பாக விளையாடுவதைத் தடுத்த இவர்கள், அவர்களை பெஞ்சுகளில் உட்கார வைப்பதில் கவனமாக இருந்தனர். இத்தகைய பெற்றோர்களை ‘ஹெலிகாப்டர் பெற்றோர்’ என்கிறார்கள் ஆய்வாளர்கள். நம்மூர் பாஷையில் ‘பொத்திப்பொத்தி’ வளர்க்கும் பெற்றோர் எனலாம்.



    “இன்று பல பெற்றோர் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அதிக கவலை கொண்டவர்களாக இருக்கின்றனர். எனவேதான் அவர்களைக் கண்காணித்துக்கொண்டே இருக்கிறார்கள். அதன் விளைவாக, குழந்தைகள் தங்கள் சம வயது நண்பர்கள், அண்டை அயலாருடன் விளையாடும் வாய்ப்பு குறைகிறது. தொலைக்காட்சி அல்லது கணினி முன்னிலையிலேயே உட்கார்ந்திருக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது” என்கிறார், ஆய்வாளர்களில் ஒருவரான டாக்டர் ஜேசன் பொக்காரோ.

    இவர்கள் அமெரிக்காவில் 20 பூங்காக்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார்கள். அங்கு வந்த குழந்தைகளை, விளையாடாமல் ‘தேமே’ என்று உட்கார்ந்திருப்பவை, ஓரளவு ஓடியாடுபவை, ரொம்பத் தீவிரமாக விளையாடுபவை என்று பிரித்தார்கள்.

    தங்கள் ஆய்வின் அடிப்படையில், பொதுப் பூங்கா அமைப்பை வடிவமைக்கலாம், அதன் மூலம் பெற்றோரை ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் குழந்தைகளை நெருங்க முடியாமல், அமர்ந்து கண்காணிக்கும் வகையில் செய்யலாம் என்று இந்த ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றனர்.
    புதுமையான வழிமுறைகளைப் பயன்படுத்தி குழந்தைகளை தூங்க வைப்பது விளையாட்டாகவும், ஆர்வமூட்டுவதாகவும் இருக்கும்.
    உங்கள் குழந்தையின் உடல் மற்றும் மன ரீதியான நலத்திற்கு நல்ல தூக்கம் இன்றியமையாதது. குழந்தை தூங்கும் முறையைப் பற்றியோ, அவர்களை தூங்குவதற்கு பழகச் செய்ய பயன்படுத்தும் வழிமுறைகளைப் பற்றியோ அல்லது தூங்குவதற்கு அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றியதாகவோ இருக்கலாம்.

    புதுமையான வழிமுறைகளைப் பயன்படுத்தி குழந்தைகளை தூங்க வைப்பது விளையாட்டாகவும், ஆர்வமூட்டுவதாகவும் இருக்கும். இது போன்ற சூழல்களை நீங்கள் வெற்றிகரமாக எதிர்கொள்ள உதவும் சில வழிமுறைகளை இங்கே உங்களுக்காக கொடுத்துள்ளோம்.

    உங்கள் குழந்தையை ஒவ்வொரு நாளும் சரியான நேரத்திற்கு தூங்கப் பழக்கும் வழிமுறையாதலால், அவர்கள் தூங்குவதற்கு எப்பொழுதுமே ஒரு குறிப்பிட்ட நேரத்தை தேர்ந்தெடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் தூக்கம் தங்கள் வாழ்வின் ஒரு பகுதி என்று அவர்களை உணரச் செய்ய முடியும்.



    இரவு உணவு சாப்பிடாமல் உங்கள் குழந்தையை படுக்கைக்கு அனுப்ப அனுமதிக்க வேண்டாம். ஏனெனில், அர்த்த இராத்திரியில் 'அம்மா, பசிக்குது' என்று அவர் அடிக்கடி எழுந்து விடுவார். அது போன்ற நேரங்களில் உணவு கொடுத்தால், அன்றைய தூக்கம் கோவிந்தா! எனவே, உங்கள் குழந்தைக்கு நல்ல இரவு உணவை கொடுத்து பின்னர் தூங்கச் செய்யுங்கள்.

    வெந்நீர் குளியலுக்குப் பின்னர், லூஸான மற்றும் வசதியான உடைகளை அணிவதற்கு அவர்களை பழக்கப்படுத்துங்கள். இந்த பழக்கத்தை கடைபிடிப்பதன் மூலம் உங்களுடைய குழந்தையை தூங்கச் செய்யும் முயற்சி மிகவும் வெற்றிகரமானதாக மாறி விடும்.

    ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை நடக்கும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவும். முகத்தை கழுவுதல், துணியை மாற்றுதல், பல் விளக்குதல் அல்லது வெளியே சென்று வருதல் ஆகிய பழக்கங்கள் நல்லது. படுக்கைளில் அவ்வப்போது செய்ய வேண்டிய ஆரோக்கியமான பழக்கங்களைப் பற்றி அவர்கள் அறியச் சொல்லிக் கொடுப்பதும் மிகவும் முக்கியமான பழக்கமாகும்.



    நீங்கள் படிப்பதையெல்லாம் உங்கள் குழந்தை புரிந்து கொள்வாள் என்று நினைக்காதீர்கள். கதைகளை வாசித்துக் காட்டி அவளை தூங்கச் செய்வதை பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு கதை சொல்லிக் கொண்டே படுக்கையில் தூங்குவதற்கான டிப்ஸ்களை அவர்களுக்கு கொடுத்து வந்தால், அவர்கள் வசதியாக தூங்க முடியும்.

    உங்கள் மகனுக்கு ‘குட் நைட்' சொல்வதன் மூலம் இது தூங்குவதற்கான நேரம் என்பதை அவன் அறியச் செய்ய முடியும். இதன் மூலம் உங்கள் குழந்தை தூங்கத் தயாராக முடியும். சில நேரங்களில் அவரை முத்தமிட்டோ அல்லது அணைத்துக் கொண்டே கூட குட் நைட் சொல்லலாம்.

    இவ்வளவு வழிமுறைகளையும் நீங்கள் முறையாக பின்பற்றினாலும், தூங்கும் இடம் பாதுகாப்பானதாக இல்லை என்று உங்கள் குழந்தை நினைத்தால் தூக்கம் வரவே வராது. எனவே, உங்கள் குழந்தைக்கு வசதியானதாக இருக்கும் விஷயங்கள் அனைத்தையும் தூங்கும் இடங்களில் வைக்க வேண்டும். அது ஒரு பொம்மையாகவோ அல்லது தலையணையாகவோ என எதுவாகவும் இருக்கலாம்.
    குழந்தைகளுக்குக் முக்கியமான விஷயங்களை கற்றுக் கொடுத்தாலே போதும், தங்களுடைய எதிர்காலத்தை புரிந்து குறிக்கோளை நிறைவேற்ற முயற்சி செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.
    பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கட்டாயமாக சொல்லிக் கொடுக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் உள்ளன. அவற்றை முறையாகக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்தாலே போதும், குழந்தைகள் தங்களுடைய எதிர்காலத்தை மிக அழகாகப் புரிந்து குறிக்கோளை நிறைவேற்ற முயற்சி செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

    அப்படி குழந்தைகளுக்கு என்னென்ன விஷயங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்?

    நம்மிடம் உள்ள தோற்றம், நிறம், அழகு, செயல், அறிவு, குடும்பம், வாழ்க்கை என்று இவை அனைத்தையும் நாம் நேசிக்க வேண்டும். தன்னைப் பற்றி நாமே இழிவாக கருதக் கூடாது. என்பதை முதலில் குழந்தைகளுக்குச் சொல்லித்தர  வேண்டும்.



    குழந்தைகளை நிறைய பயணிக்கச் செய்ய வேண்டும். பயணங்களின் போது, குழந்தைகளின் அறிவுத்திறன் அதிகரிக்கும்.

    நல்ல நண்பர்களை வாழ்க்கையில் இருக்க வேண்டும். நல்ல நண்பர்கள் இருந்தால் தான் நாமும் நன்றாக இருக்க முடியும் என்பதை குழந்தைக்கு நன்கு புரிய வைக்க வேண்டும்.

    ஒருவரின் வாழ்க்கையில் குறிக்கோள் என்பது மிகவும் அவசியம். அந்த குறிக்கோளை நோக்கி நாம் பயணிக்கும் போது, நம்முடைய வாழ்வில் எளிதில் வெற்றி பெற முடியும் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்.
    குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கி கொடுப்பதாலோ, அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பதாலோ மட்டும் பாசமான பெற்றோர்களாகிவிட முடியாது.
    எல்லா பெற்றோர்களுமே பிள்ளைகளிடம் பாசமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் பாசத்தை பொழிவதில் அவர்கள் கடைப்பிடிக்கும் அணுகுமுறை பிள்ளைகளின் நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது. சில பிள்ளைகள் பெற்றோர்களிடமிருந்து அந்நியமாகிவிடும் நிலைமைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள். ‘எவ்வளவோ பாசத்தை கொட்டினாலும் என் குழந்தை என்னிடம் நெருங்கி பழகுவதில்லை’ என்று குறைப்பட்டுக்கொள்வார்கள்.

    அதற்கு என்ன காரணம் என்று யோசித்து பார்க்க வேண்டும். குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கி கொடுப்பதாலோ, அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பதாலோ மட்டும் பாசமான பெற்றோர்களாகிவிட முடியாது. பெற்றோர் மட்டும் ஒருதலைப்பட்சமாக அன்பை பொழிவதில் அர்த்தமில்லை. குழந்தைகளிடம் இருந்தும் அன்பை பெற வேண்டும். அவர்கள் தயக்கமின்றி நெருங்கி பழகுவதற்கான சந்தர்ப்பங்களை அமைத்துக்கொடுக்க வேண்டும்.

    தங்களுடைய தேவைகள் எதுவாக இருந்தாலும் தயக்கமின்றி சொல்வதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்கள் தங்கள் கருத்துகளை சொல்வதற்கு முன்பாகவே, ‘அது உனக்கு சரிப்பட்டு வராது. நீ செய்யும் காரியம் எனக்கு பிடிக்கவில்லை’ என்று கறாராக பேசி அவர்கள் மனதை நோகடித்துவிடக்கூடாது. அவர்களின் செயல்பாடுகள் தவறானதாக இருந்தால் பக்குவமாக எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டும். அவர்கள் உரிமையோடு உங்களுடன் விவாதிக்கும் அளவிற்கு நெருக்கத்தை கொண்டிருக்க வேண்டும்.



    அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து திறந்த மனதுடன் பரிசீலனை செய்ய வேண்டும். தன்னுடைய கருத்துக்களுக்கு பெற்றோர் மதிப்பளிக்கிறார்கள் என்ற எண்ணம் குழந்தைகளிடம் உண்டாக வேண்டும். அப்போதுதான் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கிறது என்ற எண்ணம் அவர்களிடம் தோன்றும். எதுவாக இருந்தாலும் மனம் விட்டு பேச தொடங்குவார்கள்.

    தங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறார்கள் என்ற மனோபாவமே அவர்களிடத்தில் பெற்றோருக்குரிய மரியாதையை ஏற்படுத்தி கொடுத்துவிடும். அதன் பிறகு பெற்றோர்களின் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து அதன்படி நடக்க தொடங்கி விடுவார்கள். பெற்றோர்களும் தமது வயதுக்கு இணையானவர்களுடன்தான் சரிசமமாக பழகவேண்டும், குழந்தைகளிடம் அப்படி பழக வேண்டியதில்லை என்று நினைப்பது தவறு.

    எந்த வயதினரிடமும் அன்புடன் பழகுவதற்கு பாகுபாடு காண்பிக்கக்கூடாது. சிறுவயதில் இருந்தே குழந்தைகளிடம் மனம் விட்டு விவாதிப்பதை பழக்கமாக்கிக்கொண்டால் அவர்கள் சரியான முடிவு எடுப்பதற்கு அடித்தளம் அமைக்கப்பட்டுவிடும். அவர்கள் தவறான முடிவுகள் எடுப்பது தவிர்க்கப்பட்டு விடும். எதுவாக இருந்தாலும் நன்கு ஆலோசித்து சுயமாக இறுதி முடிவு எடுக்கும் பக்குவம் கொண்டவர்களாக விளங்குவார்கள்.
    குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போதே, சற்று திட உணவுகளையும் கொடுக்க ஆரம்பிக்கும் போது தாய்மார்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
    குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போதே, சற்று திட உணவுகளையும் கொடுக்க ஆரம்பிக்கும் போது தாய்மார்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் திடமான உணவுகள் பல உள்ளன. அவை அனைத்தையுமே குழந்தைகளால் சாப்பிட முடியாது.

    ஆகவே குழந்தைகளுக்கு முதல் முதலில் உணவுகளைக் கொடுக்க நினைக்கும் போது, எந்த உணவுகளையெல்லாம் முதலில் கொடுக்கலாம் என்பதைப் பற்றி தாய்மார்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    சிலருக்கு குழந்தைக்கு எப்போது திட உணவுகளைக் கொடுக்க ஆரம்பிக்கலாம் என்பதில் சந்தேகம் இருக்கும். அப்படி குழந்தைகளுக்கு எப்போது திட உணவுகளை கொடுப்பதென்று சந்தேகம் இருந்தால், கீழே கொடுத்துள்ள அறிகுறிகளைக் கொண்டு அறிந்து கொள்ளுங்கள்.

    * உங்கள் குழந்தை நன்கு உட்காரவோ அல்லது தவள ஆரம்பிக்கும் போது திட உணவுகளைக் கொடுக்கலாம்.



    * வாயில் உணவுகளை வைக்கும் போது அதை துப்பாமல், வாயில் வைத்து சப்ப ஆரம்பித்தால், அதுவும் திட உணவுகளை கொடுக்கலாம் என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

    * குழந்தை பிறக்கும் போது இருந்த எடையுடன், தற்போதுள்ள எடையை சோதித்து பார்க்கும் போது, எடையானது இரண்டு மடங்கு அதிகமாக இருந்தால், திட உணவுகளைக் கொடுக்கலாம் என்று அர்த்தம்.

    மேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டால், அவர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை கொடுத்து வந்தால், அவர்களது வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, குழந்தையும் ஆரோக்கியமாக வளர ஆரம்பிக்கும்.

    உருளைக்கிழங்கு பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஆகவே குழந்தைக்கு உருளைக்கிழங்கை கொடுக்கும் போது, அதனை நன்கு மென்மையாக மசித்து, உங்கள் விரலால் ஊட்டி விட வேண்டும்.



    நன்கு கனிந்த வாழைப்பழத்தையும் கொடுக்கலாம். இதனால் அந்த வாழைப்பழத்தில் உள்ள இனிப்பு சுவையினால் குழந்தை விரும்பி சாப்பிட ஆரம்பிக்கும்.

    குழந்தைகளுக்கு முதன் முதலில் கொடுக்க வேண்டிய உணவுப் பொருட்களில் ஒன்று தான் ஆப்பிள். இப்படி ஆப்பிளை குழந்தைக்கு கொடுத்தால், அவர்களது நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும்.

    மீனை கூட குழந்தைக்கு கொடுக்கலாம். அதிலும் சால்மன் மீன் கொடுப்பது தான் மிகவும் சிறந்தது. குறிப்பாக பாதி துண்டு சால்மன் மீனில் ஒரு சிட்டிகை உப்பு தூவி, வாரத்திற்கு ஒரு முறை கொடுத்தால், மீனில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் கிடைத்து, குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

    குறிப்பாக நன்கு வேக வைத்த முட்டையை குழந்தைகளுக்கு வாரம் இரண்டு முறை கொடுத்தால், குழந்தை நன்கு வலுவுடன் வளரும்.
    பிறந்த குழந்தை தாய்ப்பால் குடிக்கவில்லையென்றால் என்பதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளது. இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
    குழந்தை பால் குடிக்கவில்லையென்றால் அது தாய்மார்களுக்கு பெரும் கவலையை உண்டாக்கும். ஏன் உங்கள் குழந்தை பால் அருந்தவில்லை என்பதற்கு ஏராளமான காரணங்களை பட்டியலிடலாம்.

    உங்கள் குழந்தைக்கு பால் மட்டுமே ஆகாரமாக இருந்து, அதனை குழந்தை குடிக்க மறுத்தால் நீங்கள் குழந்தை நல மருத்துவரை உடனே அணுகுதல் மிகவும் முக்கியம். கைக்குழந்தை பால் குடிக்க மறுக்கும் சூழல் பெற்றோருக்கு பிரச்சனை அளிப்பதாகவும், மிகுந்த சவாலாகவும் இருக்கும். இத்தகைய சூழல் திடீரென உருவாகி இருக்குமானால், ஏதேனும் பிரச்சனை என்றோ, உங்கள் குழந்தை ஏதோ அசௌகரியமாக உணர்ந்துள்ளது என்றோ அர்த்தம்.

    அதனாலேயே அது பால் அருந்த மறுத்திருக்கலாம். ஆனால் இத்தகைய சூழல் பிறப்பிலிருந்தே நிலவி வருமானால், குழந்தைக்கு தாயின் மார்பிலிருந்து பால் அருந்துவதில் ஏதோ அசௌகரியம் இருப்பதாகவே அர்த்தம். சில வேளைகளில் பிறந்தவுடன் தாயின் முளைக்காம்பைப் பற்றி பால் அருந்தும் செயலைத் தொடங்குவது குழந்தைக்கு சிரமமாக இருக்கும். சில சமயங்களில் முதல் சில தடவைகளில் சாதாரணமாக பால் அருந்திய குழந்தை போகப் போக அது பால் அருந்த கற்றுக்கொள்ளும் சமயத்தில் சில நேரம் பால் அருந்த மறுக்கலாம்.

    குழந்தை பிறப்பில் இருந்து பால் புகட்டுவதில் எவ்வித பிரச்சனைகளும் இன்றி பல நாட்கள் கழிந்த பின்னரும் கூட இப்பிரச்சனை எழலாம். இதற்குப் பின்னணியில் இருக்கக்கூடிய காரணங்கள் நிறைய உள்ளன. உங்களின் குழந்தை பால் அருந்த மறுப்பதற்கு இவற்றுள் எது காரணமாக உள்ளது என்பதைக் கண்டறிந்தால் தான் அதனை நீங்கள் சரிப்படுத்த முடியும்.



    குழந்தை ஏன் பால் குடிக்கவில்லை என்பதற்கான சில காரணங்கள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன.

    சில சமயங்களில் கைக்குழந்தைகள் பால் புகட்டும் போது மூச்சு விடுவதற்கு சிரமப்படுவார்கள். பாலை உறிஞ்சிக் குடித்து முழுங்குவதற்கு மிகவும் சிரமமாக இருப்பதனால் பால் அருந்த மறுப்பார்கள்.

    சில குழந்தைகள் தங்கள் வாய்க்கு ஒவ்வாத காரணத்தினால் எதையுமே வாய் மூலம் உட்கொள்ள விரும்பாமல் பால் அருந்த மறுப்பர்.

    குழந்தைகள் குறிப்பிட்ட வகை மற்றும் முறையில் பால் புகட்டுதலை விரும்புவார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இம்முறையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அவர்கள் பால் அருந்த மறுப்பர்.

    நோய்தொற்றினால் காதில் ஏற்படக்கூடிய வலி அல்லது வேறு ஏதேனும் அசௌகரியம் காரணமாக குழந்தை அவதிப்பட்டுக் கொண்டிருக்கலாம். குழந்தைகள் தங்களின் அவஸ்தையை அழுகையின் மூலமும், பால் அருந்த மறுப்பதன் மூலமுமே பெரும்பாலும் வெளிப்படுத்துவர்.



    வயிற்றுப் பிடிப்பினால் உண்டாகும் வலியினால் அவதிப்படும் பெரும்பாலான குழந்தைகள் அழுவார்கள். அவர்களை சமாதானப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும். இது பொதுவாக அஜீரணக் கோளாறு, உணவு வகைகளுக்கு கூரிய உணர்வுத் திறனுடன் இருத்தல் அல்லது வேறு ஏதேனும் காரணத்தினாலேயே ஏற்படுகிறது.

    உங்கள் குழந்தை பால் அருந்த மறுத்து, அதற்கான காரணத்தை கண்டறிய இயலவில்லை என்றால், உங்கள் குழந்தைக்கு பாலின் மீது ஒவ்வாமை உள்ளதா இல்லையா என்பதை சோதியுங்கள். சில வேளைகளில் உங்கள் குழந்தைக்கு பாலின் மீது ஒவ்வாமை இருக்கக்கூடும்; அதனாலேயே கூட உங்கள் குழந்தையினால் பால் அருந்த இயலாமல் போகலாம்.

    சில நேரங்களில் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம். அதனால் கூட பால் அருந்த மறுக்கலாம். உண்மையில் உடல்நலக் குறைபாட்டின் முதல் அறிகுறியே பால் குடிக்க முரண்டு பிடிப்பது அல்லது உட்கொள்ளும் பாலின் அளவு குறைதல் போன்றவையேயாகும்.

    சில வேளைகளில் பாலின் வரத்து அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பதை தாய் அறிவதில்லை. அதனால் கூட குழந்தை பால் அருந்த மறுக்கலாம். குழந்தை பால் அருந்த விரும்பாத பட்சத்தில், அதற்கான காரணத்தை கண்டறிவது மிகவும் முக்கியம். மேலும், இந்த பிரச்சனை குறிப்பிட்ட காலத்திற்குள் சரியாகாவிட்டால், குழந்தை நல மருத்துவரை உடனடியாக அணுகி இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பது அவசியம். குழந்தை பிறந்து சில மாதங்களே ஆன நிலையில், குழந்தை பாலை மட்டுமே உட்கொள்ளும் பட்சத்தில் இத்தகைய சூழல் உருவாகுமானால் கூடிய விரைவில் மருத்துவரை அணுகுவது மிக மிக முக்கியம்.
    ஒரு சிறந்த தாயாக இருக்க உங்களிடம் என்னென்ன குணாதிசயங்கள் எல்லாம் இருக்க வேண்டும் என்று இந்த பகுதியில் காணலாம்.
    இந்த உலகத்தில் நம் அனைவருக்கும் மிகவும் பிடித்தது யார் என கேட்டால், அம்மா என்று தான் சொல்வோம். நமது அம்மாவை போல அன்பு, கருணை, பாசத்துடன் நம்மை யாராலும் கவனித்துக்கொள்ளவும், புரிந்துகொள்ளவும் முடியாது என்பது உண்மை. குழந்தை பருவம், இளமை பருவம் எல்லாம் தாண்டி, நீங்களும் ஒரு தாயாக போகிறீர்களா? அப்படி என்றால் ஒரு சிறந்த தாயாக இருக்க உங்களிடம் என்னென்ன குணாதிசயங்கள் எல்லாம் இருக்க வேண்டும் என்று இந்த பகுதியில் காணலாம்.

    1. தாயாக இருக்க முதலில் பொருமை மிகவும் அவசியம். இதை நாம் நமது அம்மாவிடத்தில் உணர்ந்திருக்க கூடும். நாம் எத்தனை தவறுகளை செய்தாலும் அவர் பொருமையாக நம்மை வழிநடத்துவார். அதே பொருமை உங்களிடத்திலும் இருக்க வேண்டும். குழந்தைகள் ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்கும், பால், தண்ணீர் ஆகியவற்றை கொட்டி விட்டு உங்களுக்கு வேலை கொடுக்கும். இது போன்ற சமயங்களில் நீங்கள் பொருமையாக செயல்பட வேண்டியது அவசியம்.

    2. குழந்தைகள் தங்களது பெற்றோரிடம் தான் அதிகமாக தங்களது விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்துகொள்கிறார்கள். ஏன் நாம் கூட அவ்வாறு தான் இருந்திருப்போம், இருக்கிறோம். உங்கள் குழந்தைகளுக்கு எந்த வயதாக இருந்தாலும் சரி, உங்கள் குழந்தைகள் சொல்வதை காது கொடுத்து கேட்க பழகிக்கொள்ளுங்கள். அவர்கள் கூறும் விஷயங்களுக்கு உங்களால் முடிந்த அளவு ஆலோசனை கூறுங்கள். அவர்களை ஊக்குவியுங்கள்.



    3. உங்கள் குழந்தைகள் சொல்வதை புரிந்து கொள்ளாமல் வெறுமனே கேட்பதில் பயனில்லை. எனவே உங்களது குழந்தைகளின் மன உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் பேச்சில் உள்ள கவலை, சோகம், மகிழ்ச்சி போன்றவற்றை புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் தங்களது பள்ளி, கல்லூரிகளில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி கூறினால், அதை உங்களது குழந்தையின் நிலையிலிருந்து யோசித்து புரிந்து செயல்படுங்கள்.

    4. குழந்தைகள் தங்களது பெற்றோர்கள் எப்போதும் ஒரே மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும் என்று தான் எதிர்பார்க்கிறார்கள். அடிக்கடி உங்களது திட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மாற்றிக்கொள்ளுதல் கூடாது. இரண்டாவது குழந்தை பிறந்தால் முதல் குழந்தையின் மீதான அன்பு குறைதல் என்பதும் கூடாது. என்றும் ஒரே மனநிலையுடன் செயல்பட பழகிக்கொள்ளுங்கள்.



    5. குழந்தைகள் அழுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். குழந்தைகளால் அவற்றை வெளிப்படையாக சொல்லிவிட முடியாது. எனவே நீங்கள் தான் குழந்தையின் மனநிலையை புரிந்து நடந்துகொள்ள வேண்டும். டயப்பர் மாற்ற வேண்டுமாக இருக்கலாம், பசியாக இருக்கலாம், ஏதேனும் பூச்சிகள் கடித்திருக்கலாம் குழந்தைகள் அழுவதற்கு என்ன காரணம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியமாகும். பிறந்த குழந்தைகள் மட்டுமல்ல சில வளர்ந்த குழந்தைகளுக்கு கூட தனது அழுகைக்கான காரணம் தெரியாது.

    6. தாயின் அன்பை விட பெரிதாக ஒரு குழந்தைக்கு வேறு எதுவும் கிடைத்துவிட முடியாது. மேலே குறிப்பிட்டுள்ளவைகளை செய்வதை காட்டிலும் குழந்தைகள் மீது அன்பு செலுத்துவது முக்கியமானது. உங்களால் முடிந்த அளவு அன்பை உங்கள் குழந்தைகள் மீது செலுத்துங்கள். அது உங்கள் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியையும் பாதுக்காப்பு உணர்வையும் தரும்.
    பள்ளிக்கு செல்லும் உங்கள் குழந்தைகளுக்கு ஷூ வாங்கும் பொழுது கீழ்கண்ட முறையில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமானது.
    ஷூ அணியாமல் பள்ளிக்கு செல்பவர்களும், வேலைக்கு செல்பவரும் இல்லை எனலாம். உடையைப் போல் ஷூ அணிவதும் அவசியமான ஒன்றாகி விட்டது. ஆனால் ஷூவும் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக செய்யும் முதலீடே. ஆக ஷூ உங்களுக்கோ உங்கள் குழந்தைகளுக்கோ வாங்கும் பொழுது கீழ்கண்ட முறையில் கவனம் செலுத்துங்கள்.

    முதலில் ஒரு பேப்பரில் வெறும் காலுடன் நின்று உங்கள் பாதங்களை முறையாய் வரைந்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் நீங்கள் வாங்கி ஓரம் கட்டிய ஷூக்களை எடுங்கள். இந்த பேப்பரின் மீது வலது, இடது கால் பாதம் வைத்து அளவு சரியாக இருக்கின்றதா என்று  பாருங்கள். பெண்கள் பொதுவில் முன் பக்கம் குறுகிய விதத்திலேயே அணியும் ஸ்டைல் உடையவர்கள். ஆகவே பாதம் முன் பகுதி சற்று அகன்று இருந்தால் இந்த ஷூக்கள் அதிக வலியினைக் கொடுக்கும். எனவே சரியில்லாதவைகளை முதலில் வீட்டிலிருந்து அப்புறப்படுத்துங்கள்.

    கடைக்கு மதிய நேரத்தில் செல்லுங்கள். அந்த நேரத்தில்தான் உங்கள் கால்களின் சரியான அளவினை நீங்கள் எடுக்க முடியும்.
    எந்த மாதிரியான ஸாக்ஸ் அணிவீர்களோ அதனையே அப்போது அணிந்து கொள்ளுங்கள்.



    ஒவ்வொரு முறை ஷூ வாங்கும் பொழுதும் கால் அளவினை எடுங்கள். ஏனெனில் அளவு மாறும் வாய்ப்புகள் அதிகம். இரண்டு காலுக்கும் அளவு வித்தியாசப்படும் வாய்ப்பும் உண்டு.

    ஷூவினை அணிந்து எழுந்து நில்லுங்கள். உங்களது நீண்ட விரலுக்கும் ஷூவுக்கும் இடையே அரை இன்ஞ் இடைவெளி இருக்க வேண்டும். நடந்து பாருங்கள். உங்கள் பாதம் படும் ஷூவின் உள் இடம் கடினமாக இல்லாது மென்மையாக இருக்க வேண்டும்.

    மிகவும் இறுக்கமான ஷூக்களை போக போக தளரும் என சொல்லி வாங்காதீர்கள்.

    மிகவும் லூசான ஷூக்களை ‘பிள்ளை சீக்கிரம் வளர்ந்து விடுவான்’ என்று சொல்லி வாங்காதீர்கள். அடிக்கடி தடுக்கி விழுந்து விடுவார்கள். ஷூவின் அடி வழுக்காது இருக்க வேண்டும்.

    இத்தனை முக்கியமாக இப்படி கூறுவதற்கு மருத்துவ காரணங்கள் உள்ளன. முறையற்ற இறுக்கமான ஷூக்களை அணியும் பொழுது கட்டை விரல் அடியில் எலும்பு டிஷ்யூ பெரிதாகி விடும். இதனால் கட்டை விரல் இரண்டாவது விரலை நோக்கித் திரும்பும். இது வலி, வீக்கம் இரண்டினையும் அளிக்கும்.

    * கால் ஆணி உருவாகி வலியும், புண்ணும் ஆகும்.
    * இறுக்கமான ஷூவினால் விரல்கள் சற்று சுருண்டு மடித்துக் கொள்ளும். வெகு நேரம் ஷூ போட்டு இருக்கும் பொழுது தசைகள் வலுவிழக்கும்.
    * இரண்டாவது விரல் முதல் விரல் மீது வந்து மடியும். இதனால் அறுவை சிகிச்சை வரை கூட செல்லும் பிரச்சினை உருவாகும்.



    சர்க்கரை நோயாளிகள் இன்னமும் கூடுதல் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
    குதிகால் வலி ஏற்படும்.
    அதிக உயரம் கூடிய ஷூக்களால் பாதமே பாதிக்கப்படும்.
    இவையெல்லாம் அவசியம் தானா?

    பொதுவில் 75 சதவீதம், 80 சதவீதம் மக்களுக்கு அவர்களின் நடை, பாத அமைப்பு, கால் அமைப்பு இவற்றில் ஏதோ ஒரு வித சிறு பாதிப்பு இருக்கவே செய்யும். அப்போது மேலும் தவறான காலணிகளை அணியும் பொழுது பிரச்சினைகள் கூடவே செய்யும்.
    அதிக சிறிய அளவு ஷூக்களை அணியும் 50 வயதினை கடந்த பெண்களில் அநேகருக்கு ‘ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ்’ எனும் பாதிப்பு ஏற்படுவதாக வெளிநாட்டு ஆய்வுகள் கூறுகின்றன. கால்கள், பாதங்கள் உடலின் எடையினைத் தாங்கி காலம் முழுவதும் நடக்கின்றன. அதனை முறையாய் பாதுகாப்போம்.

    * கால்களை தினமும் வெது வெதுப்பான நீரில் சோப்பு கொண்டு கழுவுங்கள்.
    * மிருதுவான துண்டினால் ஒத்தி எடுங்கள்.
    * கால் களுக்கு ‘மாஸ்ட் ரைசர்’ உபயோகியுங்கள்.
    * கால் நகங் களை சீராய் வெட் டுங்கள்.
    60 வயதிற்குப் பிறகு சருமம் மெலியும். மூட்டுகள் சற்று கடினப்படும் என்பதால் கூடுதல் கவனம் தேவை.
    குழந்தைகளுக்கு சாக்லெட்டை அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் பழக்கம் இருந்தால், அது அவர்களின் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் பிரச்சனைகளை கூட உண்டாக்கி விடும்.
    குழந்தைகளின் மீது சாக்லெட்டின் தாக்கத்தை பற்றி தெரிந்து கொள்ளும் போது, எந்தளவுக்கு சாக்லெட் உட்கொள்ளுவது நல்லது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

    மிதமான அளவில் அவ்வப்போது சாக்லெட்களை உண்ணுவது உங்கள் குழந்தைக்கு தீங்கை விளைவிக்காது. நல்ல தரமுள்ள டார்க் சாக்லெட் மற்றும் கொக்கோவில் இருக்கும் உடல்நல பயன்களை எடுத்துக்காட்ட பல ஆய்வுகள் உள்ளது. அதனால் சாக்லெட் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்துக்கு நேர்மறையான பங்களிப்பை அளிப்பது கண்கூடு.

    ஆனால் பொதுவாகவே நாம் நம் குழந்தைகளுக்கு விலை உயர்ந்த டார்க் சாக்லெட்களை வாங்கி கொடுப்பதில்லை - அப்படி செய்தால் சர்க்கரை அதிகமுள்ள மில்க் சாக்லெட்களுக்கு அடிமையாகி அவர்கள் உடநலம் பாதிக்கப்படும். ஆனால் ஆரோக்கியமான பிற நொறுக்குத்தீனிகளுக்கு பதிலாக சாக்லெட்களையே உங்கள் குழந்தைகள் விரும்புகிறார்கள் என்றால், அதனை நிறுத்த வேண்டிய நேரம் இது. சாக்லெட்டினால் உண்டாகும் பக்க விளைவுகளை பற்றிய ஆய்வுகளை பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால், குழந்தைகளுக்கு எவ்வளவு சாக்லெட் கொடுக்கலாம் என்பதில் தெளிவு ஏற்படும்.

    உங்கள் குழந்தையின் உணவு பழக்கம் சமநிலையோடு இருக்கையில், அவர்களுக்கு மிதமான அளவில் சாக்லெட் கொடுக்கலாம் என்று தான் பல ஆய்வுகள் பரிந்துரைக்கிறது. சாக்லெட்டை அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் பழக்கம் இருந்தால், அது அவர்களின் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் பிரச்சனைகளை கூட உண்டாக்கி விடும். சரி, சாக்லெட் உண்ணுவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் முக்கியமான உடல்நல தாக்கங்களை பற்றி பார்க்கலாமா?



    குழந்தைகளின் உடல் பருமன் என்பது உலகளாவிய அளவில் நாம் சந்திக்கும் பொதுவான பிரச்சனையாகும். சாக்லெட் உண்ணுவதால் ஏற்படும் தீமைகளின் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கிறது உடல் பருமன். இதன் காரணமாக இன்னும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

    இந்த காலத்தில் டப்பியில் அடைக்கப்பட்ட உணவுகள் மற்றும் சாக்லெட்களை குழந்தைகள் அதிகமாக உண்ணுகிறார்கள். அதனால் இந்த நோய் பெரியவர்கள் மட்டும் என்ற பாகுபாடில்லாமல் குழந்தைகளையும் தாக்கும். அளவுக்கு அதிகமான சாக்லெட்டை தொடர்ச்சியாக நீண்ட நாட்களுக்கு உட்கொள்ளும் போது, உடலில் உள்ள இன்சுலின் உணர்திறன் பாதிப்படையும். இதனால் டைப் 2 சர்க்கரை நோய் உண்டாகும்.

    சீரான முறையில், உங்கள் குழந்தை தொடர்ச்சியாக சாக்லெட்களை உட்கொண்டால், அவர்கள் அதற்கு அடிமையாகி விடுவார்கள். இதனால் கையாளுவதற்கு கடிமான சூழ்நிலையை அது உருவாக்கி விடும். சாக்லெட்டை தொடர்ச்சியாக சாப்பிட்டு வருவதால் ஏற்படும் பக்க விளைவுகளில் இதுவும் ஒன்று. அதனால் உங்கள் குழந்தைகள் எவ்வளவு சாக்லெட் உண்ணுகிறார்கள் என்பதில் கவனம் தேவை.

    30 மில்லி அளவிலான பாலில் 5 மி.கி. கஃப்பைன் உள்ளது. கஃப்பைனில் மிதமான சிறுநீர்ப்பெருக்கி குணம் அடங்கியுள்ளதால், உங்கள் குழந்தைக்கு அடிக்கடி சிறுநீர் வரலாம். குழந்தைகள் சாக்லெட் உண்ணுவதால் ஏற்படும் மற்றொரு பக்க விளைவு இது.



    சந்தையில் விற்கப்படும் சாக்லெட்களில் பல மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும். அதில் உள்ள ஏதாவது ஒன்று, உங்கள் குழந்தைக்கு அலர்ஜியை ஏற்படுத்தினால், அது பல பிரச்சனைகளை உண்டாக்கும். பொதுவாக சாக்லெட்களில் பால், நட்ஸ் கலந்திருந்தால் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படலாம்.

    உங்கள் குழந்தை சாக்லெட் அல்லது வேறு ஏதாவது சர்க்கரை உணவுகளுக்கு அடிமையானால், அவர்களை ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள ஆரோக்கியமான உணவுகளை உண்ண வைப்பது கஷ்டமாகி விடும். இது அவர்களின் வளர்ச்சிகள், முக்கியமாக, அறிவுத்திறன் வளர்ச்சியை பாதித்து விடும்.

    சாக்லெட்டில் உள்ள கஃப்பைனின் அளவு குறைவாக இருந்தாலும், சாக்லெட்டை அதிகமாக உட்கொண்டால், அது உங்கள் குழந்தையின் தூக்கத்தில் தொந்தரவுகளை ஏற்படுத்தும்.

    சாக்லெட்டினால் உங்கள் குழந்தையின் உடல்நலத்துக்கு ஏற்படும் தாக்கங்களை இப்போது புரிந்து கொண்டீர்களா? அதனால் உங்கள் குழந்தைகள் எவ்வளவு சாக்லெட் உண்ணுகிறார்கள் என்பதில் கவனம் வையுங்கள்.
    குழந்தை பிறந்து 48 மணி நேரத்திற்குள் குழந்தையின் உடலிலுள்ள செல்களின் எண்ணிக்கையை விட நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரித்து, குழந்தையின் உடலை போர்த்தி கொள்கின்றன.
    தாயின் கருப்பை வாய்வழியாக வெளியேறும் குழந்தையின் உடலை சுற்றி மெல்லிய படலமாக நுண்ணுயிரிகள் போர்த்தி கொள்கின்றன. குழந்தை பிறந்து 48 மணி நேரத்திற்குள் குழந்தையின் உடலிலுள்ள செல்களின் எண்ணிக்கையை விட நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரித்து, குழந்தையின் உடலை போர்த்தி கொள்கின்றன.

    குழந்தைக்கு தாய் பால் ஊட்டுவதன் மூலம் குழந்தையின் உடலில் உருவாகும்,நோய் எதிர்ப்பு சக்தியானது குழந்தையின் உடலை போர்த்தி கொண்டிருக்கும் நுண்ணுயிரிகளுக்கும் எதிராக போராடி குழந்தையை பாதுகாக்கிறது. அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்படும் குழந்தைகள் மீது மருத்துவமனை சுற்று சூழலில் உள்ள நுண்ணுயிரிகள் குழந்தையின் உடலை சூழ்ந்து கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.

    அவை மருந்துகளை எதிர்த்து போராடும் தன்மை உடையதாக காணப்படுகிறது. அதனால் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் கட்டுப்பட அதிக காலம் தேவை படலாம். குழந்தைகளுக்கு வைரஸ் கிருமிகளால் ஏற்படும் சளி, காய்ச்சல் போன்ற சாதாரண பிரச்சனைகளுக்கு நோய் எதிர்ப்பு மருந்து கொடுக்கின்றனர்.

    தேவை இல்லாமல் ஆண்டிபயாடிக் குழந்தையின் உடலில் மீண்டும் மீண்டும் செலுத்தபடுவதால் பாக்டீரியாகளுக்கு எதிராக போராடி உடலை காக்கும் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளும் கட்டுப்படுத்தப்படுகிறது. தொடர்ந்து ஆண்டிபயாடிக் அளிக்கப்படுவதால் நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் செயல்படாமல் முடங்கிவிடுகின்றன. இதனால் நோய்கட்டுப்படாமல் போகின்றது.



    இந்த ஆபத்தான நுண் கிருமிகள் வளராமல் தடுக்க நாம் செய்ய வேண்டியவை.

    1) பிறந்த குழந்தையை தாயின் மேல் சிறுது நேரம் வைத்தல், இதன் மூலம் தாயுடைய உடலின் நுண்கிருமிகள் பாதுகாப்பு கசவம் போல் குழந்தையை சூழந்து கொள்ளும்.

    2) பிரசவ நேரத்தில் மகப்பேறு மருத்துவமனையில் பிரசவம் மற்றும் பச்சிளங்குழந்தை பிரிவு தனியாக மற்ற பிரிவுகளுடன் சேர்ந்து இல்லாமல் இருக்கிறதா என்பதை கவனித்தல் இதன் மூலம் தேவையற்ற கிருமிகள் குழந்தை பிறக்கும் போது அதனை தாக்கி நோய் ஏற்படுத்துவதை தவிர்க்கலாம்.

    3) கழிவுநீர் ஆனது நிலத்தடி நீர், கிணற்றுநீரில் கலக்காதவாறு பார்த்துக் கொள்வது.

    4) தேவையற்ற நோய்களுக்கு ஆண்டிபயாடிக்கை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்ப்பது.

    இப்படி சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க முடியும்.
    ×