என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    தவறான சேர்க்கையால், பெண்களை நயவஞ்சகமாக ஏமாற்றி கொலைக்கும் காரணமாகி, தன் வாழ்க்கையையே கெடுத்துக்கொண்ட மயக்கமருந்து பெண்ணின் கதை இது.
    பெண்களை நம்பவைத்து ஏமாற்றிய `மயக்கமருந்து பெண்' வெளிப்படுத்தும் பதறவைக்கும் உண்மைகள்

    மனித சமூகத்தில் மோசமான மனிதர்களும் உண்டு. அதனால்தான் நல்ல மனிதர்களை அடையாளங்கண்டு அவர்களிடம் பெண்கள் தங்கள் வாழ்க்கையை ஒப்படைக்கவேண்டும். தவறான மனிதர்களுடன் இணையும்போது அந்த பெண்களும் தவறான வழிக்கு சென்று தீராத பழி பாவத்துக்கு ஆளாகிவிடுகிறார்கள். தவறான சேர்க்கையால், பெண்களை நயவஞ்சகமாக ஏமாற்றி கொலைக்கும் காரணமாகி, தன் வாழ்க்கையையே கெடுத்துக்கொண்ட மயக்கமருந்து பெண்ணின் கதை இது.

    பெண்ணின் கொலைக்கு உடந்தையாக இருந்ததால் தண்டனை பெற்று சிறையில் வாடிக்கொண்டிருக்கும் சந்தியா (பெயர்மாற்றம்), நெஞ்சை பதறவைக்கும் தனது உண்மைக்கதையை சொல்கிறார்:

    ‘‘சிறுவயதில் இருந்தே நான் ரத்தத்தை பார்த்து வளர்ந்தவள். அப்பா ஆடுகளை வெட்டி வியாபாரம் செய்பவர். ஆடுகளையும், சில நேரங்களில் மாடுகளையும் வீட்டின் பின்பகுதிக்கு கொண்டு சென்று, கொன்று, அறுப்பார். அவைகள் உயிரை விடும் நேரத்தில் எழும் அலறல் சத்தமும், பீறிட்டு வழியும் ரத்தமும் காலப்போக்கில் எனக்குள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத அன்றாடக் காட்சிகளாகிவிட்டது.

    வெட்டிப்போட்ட ஆடுகளையும், மாடுகளையும் சுத்தப்படுத்தி கறியாக்க ஆண்கள் வருவார்கள். அவர்களோடு சேர்ந்து நானும் அந்த வேலையை பார்ப்பேன். எனக்கு பத்து வயதாக இருந்தபோது ஒரு நாள் எனது அம்மாவுக்கும்- அப்பாவுக்கும் சண்டை வந்தது. அப்பா, அம்மாவை குத்திக்கொன்றுவிட்டார். அதன் பின்பு அப்பா எங்கே போனார் என்றே குழந்தைகளான எங்களுக்கு தெரியாது.

    அதன் பின்பு நாங்கள் அனாதை இல்லத்திற்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. என் சகோதரர்கள் ஓரிடத்திலும், நான் இன்னொரு இடத்திலும் வளர்ந்தேன். நான் பள்ளிப்படிப்பை முடித்ததும், தூரத்து சொந்தமான உறவினர் ஒருவர் வந்து என்னை அவரோடு அழைத்துச்சென்றார். கொஞ்ச காலம் கடந்ததும் என்னைவிட மிக அதிக வயது கொண்ட ஒருவரை எனக்கு திருமணம் செய்துவைத்தார். நான் அவருக்கு மூன்றாவது மனைவி. அவரோடு வாழ்ந்து நான் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தேன். அவருக்கு என் மேல் கொஞ்சமும் அன்பு கிடையாது. அதனால் நான் அவரையும், குழந்தைகளையும் தவிக்கவிட்டுவிட்டு என்னுடன் சினேகம் காட்டிய ஒருவனோடு சென்றுவிட்டேன்.

    நாங்கள் சட்டப்படி திருமணம் செய்துகொள்ளவில்லை. அவன் ஒரு திருடன் என்பது எனக்கு தெரியும். ஆனாலும் அவன் என்னை நேசித்ததால், அவனை என்னால் புறக்கணிக்க முடியவில்லை. அவன் எனக்கும் திருட்டுத் தொழிலுக்கு பயிற்சி கொடுத்தான். நிறைய தங்க நகைகள் அணிந்து செல்லும் பெண்களின் வீடுகளை கண்காணித்து என்னிடம் சொல்வான். அவர்கள் தனியாக இருப்பார்கள். அந்த பெண்களுக்கு உறவினர்களும் இருக்கமாட்டார்கள்.

    நான் அவர்களிடம் அறிமுகமாகி நட்பு பாராட்ட முயற்சிப்பேன். முதலில் சில நாட்கள் அவர்களை பார்த்து சிரிப்பேன். தொடக்க நாட்களில் சிரிக்காவிட்டாலும் அடுத்தடுத்த நாட்களில் என் முயற்சிக்கு வெற்றிகிடைத்துவிடும். அவர்கள் என்னை பார்த்து சிரித்துவிட்டால் எனக்கு வெற்றிதான். எப்படியாவது அவர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்திவிடுவேன்.

    சில மாதங்களில் அல்லது ஒரு வருடத்திற்குள் நான் அவர்களை நம்பவைத்து எனது ஆள் சொல்லும் இடத்திற்கு அவர்களை அழைத்துச்சென்றுவிடுவேன். மீதமுள்ள வேலையை அவன் செய்துவிடுவான். கொலையும் நடக்கும். பெரும்பாலும் நகையை பறித்துக்கொண்டு மிரட்டி அனுப்பிவிடுவான். பின்பு அந்த ஊரில் இருந்து இடம்மாறி வேறு ஊருக்கு போய்விடுவோம்.

    நான் கர்ப்பிணியானதும் அடிக்கடி இடம்மாறிச்செல்ல என்னால் முடியவில்லை. அந்த காலகட்டத்திலும் அவன் அந்த பகுதியில் உள்ள சில பெண்களின் விவரங்களை சேகரித்து என்னிடம் தந்தான். நிறைந்த வயிறுடன் நான் சென்றபோது என் ஏமாற்று வேலைகள் எளிதானது. கனமான வயிற்றுடன் சோர்ந்து போய் காட்சியளிக்கையில் நான் சொல்வதை மற்றவர்கள் எளிதாக நம்பிவிடுவார்கள்.

    எனக்கு எதிராக மூன்று வழக்குகளே பதிவாகியுள்ளன. அவற்றில் ஒன்றில் தண்டிக்கப்பட்டுதான் நான் இப்போது சிறைத்தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். கொலையாளிக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருக்கிறார்கள். அவனும் சிறையில்தான் உள்ளான். ஆயுள் தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கிறான்.

    எனக்கு இன்னும் வயது ஐம்பது ஆகவில்லை. பெண்களை ஏமாற்றுவதற்காக என்னை என் காதலன் வேஷம் போடச்சொன்னான். நெற்றியில் எப்போதும் சந்தனமும், குங்குமமும் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பான். அதனால் தினமும் காலையில் கோவிலுக்கு செல்லும் வழக்கம் உருவானது. விலை உயர்ந்த ஆபரணங்கள், புடவைகள் வாங்கித்தந்து எப்போதும் மற்றவர்களை கவரும் விதத்தில் அழகோடு காட்சியளிக்க வேண்டும் என்றான். நானும் நேர்த்தியாக உடை அணிந்து எப்போதும் அழகாகவே வலம் வருவேன்.

    நான் நயவஞ்சகத்தோடு பலரை ஏமாற்றியிருந்தாலும், ஒரே ஒரு பெண்ணை நம்பவைத்து கழுத்தறுத்தது இன்றும் என் நினைவில் இருக்கிறது. நான் கர்ப்பிணியாக இருந்தபோது ஒருமுறை சாலையில் தடுமாறிவிழுந்துவிட்டேன். கைமூட்டில் அடிபட்டுவிட்டது. அப்போது பலரும் உதவிக்கு வந்தாலும் ஒரே ஒரு பெண் என்னை தாங்கிப்பிடித்தார். நான் அவருக்கு நிறைந்த கண்ணோடு நன்றி கூறினேன். இரண்டு நாட்கள் கழித்து நான் கோவிலுக்கு சென்றிருந்தபோது அந்த பெண்மணி என்னை தேடிவந்து, `எப்படி இருக்கிறாய்.. குழந்தைக்கு எதுவும் ஆகவில்லையே?' என்று கேட்டு நலம் விசாரித்தார்.

    `ஸ்கேன் செய்து பார்த்தேன். குழந்தைக்கு எதுவும் ஆகவில்லை. எனக்குதான் முதுகுவலிக்கிறது. பலரும் உதவியது மகிழ்ச்சிக்குரியது. ஆனாலும் நீங்கள்தான் எனது நன்றிக்குரியவர்' என்றேன். என்னை பற்றி நிறைய சோகக் கதைகளையும் கூறி அவரது மனதில் இடம்பிடித்தேன். அவரது நம்பிக்கையை பெற பல காரியங்களை செய்தேன். கோவிலில் அவரது பெயருக்கு ஒரு வழிபாடும் நடத்தினேன். `எனது மூத்த சகோதரி என் மீது மிகுந்த பாசம் கொண்டவர். மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்துபோனார். அவரைப் போன்று நீங்களும் இருக்கிறீர்கள்' என்றும் பொய் சொன்னேன். அவரும் ரொம்ப உருகிப்போய்விட்டார்.

    அடுத்து என் காதலன் சொல்லிக்கொடுத்தபடி அந்த பெண்மணியை நயவஞ்சகமாக ஏமாற்ற திட்டம் தீட்டினேன். `அக்கா எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும். நாளை நான் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு செல்லவேண்டியதிருக்கிறது. என் கணவர் வெளியூரில் இருப்பதால் அவரால் வரமுடியவில்லை. எனக்கு ரத்த அழுத்தம் இருப்பதால் யாராவது ஒருவர் என்னோடு வந்தால் நல்லது. உங்களால் வர முடியுமா? வரமுடியாவிட்டாலும் பரவாயில்லை..' என்றேன். அந்த பெண்மணி உடனே சம்மதித்தார்.

    மறுநாள் என் காதலன் டிரைவராகி, காரை ஓட்டிக்கொண்டு வந்தான். அந்த பெண்மணி நிற்பதாக சொன்ன இடத்திற்கு சென்று அவரை ஏற்றிக்கொண்டோம். மருத்துவமனையை நோக்கி செல்வதாக சொன்னேன். நான் அவரை யோசிக்கவிடாமல் தொடர்ந்து அவரிடம் பேச்சுகொடுத்துக்கொண்டே இருந்தேன். ஆனாலும் அவர், மருத்துவமனை எங்கே இருக்கிறது? அந்த இடத்தை அடைய இன்னும் எவ்வளவு நேரமாகும்? என்று கேட்டுக்கொண்டே வந்தார்.

    தூரத்தில், ஆட்கள் இல்லாத ஒர்க்‌ஷாப் ஒன்றின் உள்ளே கொண்டு போய் காதலன் காரை நிறுத்தினான். நான் எனது ஹேன்ட்பேக்கில் இருந்து மயக்க மருந்து ஸ்பிரேயை எடுத்தேன். எனது வாயையும், மூக்கையும் பாதுகாப்பாய் துணியால் கட்டிக்கொண்டு, அவரது முகத்திற்கு நேராக அடித்தேன். வழக்கமாக நான் கையாளும் உத்தி இதுதான். முதலில் அந்த பெண்மணி என்னை தாக்க முயற்சித்தாலும் சில நிமிடங்களிலே நினைவிழந்தார். பின்பு அந்த ஒர்க்‌ஷாப்பின் ஷட்டரை என் காதலன் இழுத்து மூடினான்.

    நினைவற்று கிடந்த அந்த பெண்மணியை கீழே இறக்கி, அவர் அணிந்திருந்த நகைகளை எல்லாம் கழற்றினோம். அவரது ஹேன்ட்பேக்கில் இருந்து டெபிட் கார்டையும் எடுத்துக்கொண்டோம். இன்னொரு பவுச்சில் இருந்து அதன் பின்நம்பரையும் எடுத்தோம். அதற்குள் என் காதலன், அந்த பெண்மணியை கொன்றுவிட்டான். பின்பு அவரது உடலை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு கட்டி, அந்த ஷெட்டிலேயே போட்டோம். காரை வெளியே எடுத்தோம்.

    `ரொம்ப நாட்களாக இந்த ஒர்க் ஷாப் மூடிக்கிடக்கிறது. நேற்று இரவுதான் நான் வந்து இதன் பூட்டை உடைத்து திறந்தேன்' என்று கூறி, ஷட்டரை இழுத்து மூடினான். கொலை செய்யப்பட்ட அந்த பெண்மணியின் டெபிட் கார்டை பயன்படுத்தி எவ்வளவு பணத்தை எடுக்க முடியுமோ அவ்வளவையும் எடுத்தோம்.

    அந்த பெண்மணி விதவை. தனியாக வசித்து வந்தார். திருமணமான அவரது மகன் அரசு வேலை பார்க்கிறார். அவர் மனைவியோடு தனியாக வசித்து வருகிறார். அவர் தினமும் இருமுறை அம்மாவுக்கு போன் செய்யும் வழக்கத்தை கொண்டவராக இருந்திருக்கிறார். வழக்கம்போல் காலையில் அவர் தனது அம்மாவுக்கு போன் செய்தபோது அவர், `நான் கோவிலில் வைத்து பழக்கம் ஏற்படுத்திக்கொண்ட நிறை மாத கர்ப்பிணியுடன் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு, மதியம் திரும்பிவிடுவேன்' என்று கூறியிருக்கிறார்.

    இரவு வரை தாயாருக்கு அவர் பலமுறை போன் செய்தும் எடுக்கவில்லை என்பதாலும், வீடு திரும்பவில்லை என்பதாலும் அவர் போலீசில் புகார்செய்துவிட்டார். நான் பிரவசத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன்.

    மகனின் புகாரின் பேரில் போலீசார் கோவிலில் போய் என்னை பற்றி விசாரித்திருக்கிறார்கள். அங்கிருந்தவர்கள் என்னை பற்றிய முழு விபரத்தையும் தெரிவித்துவிட்டார்கள். நான் பிரசவித்த இரண்டாவது நாளில் போலீசார் என்னை மருத்துவமனையிலேயே கைதுசெய்தார்கள். எனது குழந்தை இறந்து பிறந்தது. அதுவும் நல்லதுக்குதான். இல்லாவிட்டால் என்னோடு அதுவும் ஜெயில் வாழ்க்கைதான் வாழ்ந்திருக்கும்.

    அந்த பெண்மணியின் உடலை நான்தான் காட்டிக்கொடுத்தேன். என் காதலனையும் காட்டிக்கொடுத்தேன். அவன் செய்த இதர கொலைகளை பற்றி எனக்கு தெரியாது. அந்த உடல்களை என்ன செய்தான் என்பதும் தெரியாது. தண்டனை காலம் முடிந்து நான் வெளியே செல்லவேண்டும். எனக்கும் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கிறது" என்கிறாள், சந்தியா.

    ஆண்களால் மட்டுமல்ல, பெண்களாலும் பெண்களுக்கு பேராபத்து இருக்கிறது. அதனால் தனியாக வசிக்கும் பெண்கள் அடுத்தவர்களை நம்பி ஒருபோதும் அவர்கள் பின்னால் சென்றுவிடக்கூடாது. அறிமுகமற்றவர்களுடன் நெருங்கவும் கூடாது.

    பலாப் பழத்தை போலவே வெளியே கரடு முரடான முள் தோற்றம், உள்ளே இனிப்பு சுவை கொண்ட பழம் என துரியன் பழம் சுவைக்க தூண்டுகிறது. சுவை மட்டுமல்ல, சத்து பொருட்களும் துரியன் பழத்தை பிரபலமாக்கி உள்ளன.
    பலாப் பழம் போலவே தோற்றமளிக்கும் இது, துரியன் பழமாகும். மலேசியாவை பிறப்பிடமாக கொண்டது. பலாப் பழத்தை போலவே வெளியே கரடு முரடான முள் தோற்றம், உள்ளே இனிப்பு சுவை கொண்ட பழம் என துரியன் பழம் சுவைக்க தூண்டுகிறது. சுவை மட்டுமல்ல, சத்து பொருட்களும் துரியன் பழத்தை பிரபலமாக்கி உள்ளன. இதில் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்புச்சத்து, ரிபோப்ளேவின், கார்போஹைட்ரேட், தாமிரம், போலிக் ஆசிட், வைட்டமின் சி, நார்ச்சத்து, துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் என எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

    துரியன் பழம், மஞ்சள் காமாலை மற்றும் நகங்களில் ஏற்படும் நோய்த் தொற்றுக்கு நல்ல மருந்தாகிறது. துரியன் பழத்தில் மாங்கனீசு அதிகம் இருப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கிறது. முகத்தில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்குவதால் இளமையான தோற்றத்தை கொடுக்கும். இப்பழத்தில் காணப்படும் பைரிடாக்சின் மன அழுத்தத்தை போக்குவதோடு தைராய்டு சுரப்பியை சீராக இயங்க வைக்கிறது. ஒற்றைத் தலைவலிக்கு சிறந்த நிவாரணி.

    துரியன் பழம் அதிக மருத்துவத்தன்மை கொண்டது. நறுமண வாசனையுடன் கூடிய துரியன் பழம், இனிப்புச் சுவை உடையது. பழம் மட்டுமின்றி, இதன் இலைகளும், பல மருத்துவப் பண்புகளை கொண்டுள்ளன. மது, புகை, போதை போன்ற தீய பழக்கங்களால், உடல் வலுவிழந்தவர்களுக்கு இந்த பழம், நல்ல மருந்து.

    இவர்கள், வாரம் இருமுறை, துரியன் பழம் சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் வலுவடையும். கொழுப்பு சத்தை கரைத்து, கலோரிகளாக மாற்றி, ரத்தத்தை சுத்தப்படுத்தி, இதயம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். எரிச்சல், கோபம், மன அழுத்தம், மன உளைச்சல், போதிய உடற்பயிற்சியின்மை ஆகியவற்றால், நரம்புகள் எளிதில் பலவீனமடைகின்றன. இந்த குறையை போக்க, துரியன் பழம் பயன்படுகிறது.

    மலச்சிக்கலை நீக்கும் குணம் இந்த பழத்துக்கு உண்டு. செரிமான சக்தியை தூண்டி, நன்கு பசியை ஏற்படுத்தும். விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வல்லது. இந்த பழத்தில் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்புச்சத்து, ரிபோப்ளேவின், கார்போஹைட்ரேட், தாமிரம், போலிக் ஆசிட், வைட்டமின் சி, நார்ச்சத்து, துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் உள்பட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் வாழைப்பழத்தை விட, 10 மடங்கு அதிகமான இரும்புச்சத்து, பாஸ்பரஸ் இந்த பழத்தில் நிறைந்துள்ளன.

    வைட்டமின்கள் பி, பொட்டாசியம், கால்சியம் ஆகியவை, மூட்டுகளையும், எலும்புகளையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்கின்றன. நகங்களில் பிரச்சினை இருக்கும் போது, இந்த பழத்தின் வேர்களை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். மாங்கனீசு அதிகம் இருப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவும். இரும்பு, போலிக் ஆசிட் அதிக அளவு இருப்பதால் ரத்தச் சோகையை குணமாக்கலாம்.

    இளமையிலேயே முதுமைத் தோற்றத்தில் காணப்படுபவர்கள், துரியன் பழத்தை சாப்பிட்டு வந்தால், அதிலுள்ள வைட்டமின் சி சத்தால், முதுமைத் தோற்றத்தை தடுக்கலாம். மன அழுத்தம் மற்றும் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துரியன் பழம் மிகவும் சிறந்தது. ஏனெனில், இதில் பைரிடாக்ஸின் எனும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள், இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், தைராய்டு சுரப்பி சீராக இயங்கும்.
    ஆடைகளை இறுக்கமாக அணிவதால் ஏற்படும் தழும்புகள், அம்மை தழும்புகள், பிரசவ தழும்புகள், முகப்பரு தழும்புகள், அறுவை சிகிச்சை தழும்புகள், தீக்காயத்தழும்புகள் என சருமத்தின் மேற்பரப்பில் மறையாத அடையாளமாக ஒரு சிலருக்கு இருக்கலாம்.
    ஆடைகளை இறுக்கமாக அணிவதால் ஏற்படும் தழும்புகள், அம்மை தழும்புகள், பிரசவ தழும்புகள், முகப்பரு தழும்புகள், அறுவை சிகிச்சை தழும்புகள், தீக்காயத்தழும்புகள் என சருமத்தின் மேற்பரப்பில் மறையாத அடையாளமாக ஒரு சிலருக்கு இருக்கலாம். அவற்றை பக்க விளைவுகள் இல்லாமல் இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி அகற்ற பல தீர்வுகள் உள்ளன. அவை பற்றிய தொகுப்பு..

    தினமும் முகத்தில் ஆலிவ் எண்ணெய்யை தேய்த்து நீராவியை முகத்தில் சிறிது நேரம் படிய விடலாம். நாளடைவில் முகத்தில் உள்ள துளைகளும், தழும்புகளும் மறையத்தொடங்கும்.

    சந்தன பவுடரை ரோஸ்வாட்டர் அல்லது பாலுடன் கலந்து முகத்தில் பூசி ஒரு  மணிநேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம்.

    பால் அல்லது நீரில் பாதாம் பருப்பை 12 மணிநேரம் ஊறவைத்து அதன் தோலை அகற்றி விட்டு ரோஸ்வாட்டர் விட்டு அரைத்து தழும்புகளின் மீது தடவி வரலாம்

    எலுமிச்சை சாற்றில் பஞ்சை நன்றாக ஊறவைத்து மெதுவாக முகத்தில் ஒற்றி எடுக்க வேண்டும். தோலில் மேற்பரப்பில் சாறு நன்றாக படியும் வகையில் சிறிது நேரம் உலர வைத்து விட்டு பின்னர் முகத்தை கழுவிக்கொள்ளலாம். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, தழும்புகளை மறைய செய்வதுடன் தோலின் இயற்கை நிறத்தை பாதுகாக்கவும் உதவும்.

    தீக்காயம் நன்றாக ஆறிய பிறகு இந்த வழிமுறையை பின்பற்ற வேண்டும். எலுமிசை சாற்றை தினமும், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி 2 நிமிடம் மசாஜ் செய்யவேண்டும். பாதாம் ஆயில், ஆலிவ் ஆயில் இவற்றுள் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தியும் தினமும் இருமுறை தடவி மசாஜ் செய்து வரலாம். அதனால் தழும்புகள் படிப்படியாக மறையத்தொடங்கும்.

    கசகசா, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் தேவையான அளவு எடுத்துக்கொண்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து காயம் காரணமாக ஏற்பட்ட தழும்புகள் மீது தேய்த்து குளித்து வரலாம். நாளடைவில் தழும்புகள் மறையும்.

    தக்காளியை தோல் உரித்து மிக்சியில் இட்டு அரைத்து எடுத்து தினமும் இரவு நேரத்தில் பிரசவ தழும்புகள் உள்ள பகுதியில் தடவ வேண்டும். காலையில் குளிர்ந்த நீரில் கழுவ விடலாம். மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக இந்த முறையை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.

    சோற்று கற்றாழையின் மேல் தோலை நீக்கி அதில் உள்ள ஜெல் போன்ற பகுதியை எடுத்து அறுவை சிகிச்சை தழும்புக்கு மேல் நன்றாக தடவவும். தினமும் இரவில் தடவி காலை குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் நாளடைவில் தழும்பு மறைந்து விடும்.
    பெரிய தட்டுகளில் சாப்பிடும் போது குறைந்த உணவு சாப்பிடும் உணர்வு தோன்றும். இதனால் பசி அடங்காதது போலவே இருக்கும். எனவே சிறிய தட்டுகளில் பொறுமையாக உணவை நன்றாக மென்று சாப்பிடுங்கள்.
    எடையை குறைக்க முயற்சி செய்கிறீர்களா? பிடித்த சாப்பாடு அயிட்டங்களையெல்லாம் விட்டுட்டேன், மாங்கு மாங்குனு நடக்குறேன், ஆனாலும ஒடம்பு கொறயலையேன்று கவலைப்படுபவரா நீங்கள்?

    ஒருவேளை இங்கே குறிப்பிட்டுள்ள ஏதாவது தவறுகளை நீங்கள் செய்து கொண்டிருந்தால் அது கூட உங்கள் எடை குறையாமல் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம்.

    பணிபுரியும் பெண்கள், காலையிலிருந்து வேலை செய்த அலுப்பினால் வீட்டுக்கு வந்தவுடன் அப்படியே சோபாவில் சாய்நது டிவி பார்த்துவிட்டு பொறுமையாக இரவு பத்து மணிக்கு  மேல் சாப்பிட்டால் செரிப்பதற்கு சிரமமாவதுடன் வளர்சிதை மாற்றம் குறைந்து உடலில் கொழுப்பு அதிகம் சேரும்.

    இரவு சீக்கிரமாக தூங்காமல கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன் போன்றவற்றில் மூழ்கி விட்டு தாமதமாக தூங்கி சரியான நேரத்துக்கு எழாமல் இருந்தால் எடைக்கூடும். சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கு பசியைத்தூண்டும் ஹார்மோன்கள் சீராக இயங்காமல், கிடைத்ததையெல்லாம் சாப்பிடச்செய்து எடையை அதிகரித்து விடக்கூடும்.

    நாம் சாப்பிட ஆரம்பித்த இருபது நிமிடங்களுக்கு பிறகே நமது வயிறு நிறைந்து விட்ட உணர்வு மூளைக்கு செல்கிறது. வேகவேகமாக சாப்பிடும் போது வயிறு நிறையாதது போலவே தோன்றுவதால் நம்மை அறியாமலேயே நிறைய சாப்பிடுவோம். மெதுவாக சாப்பிடும் போது வழக்கமாக சாப்பிடும் அளவை விட குறைவாகவே சாப்பிடுவோம்.

    நேரமில்லை என்று காலை உணவை சாப்பிடாமல் தவிர்த்தால் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்காது. பசி உணர்வு அதிகரிக்கும். எனவே போண்டா. பர்கர் என்று நம்மை அறியாமல் நொறுக்குத்தீனிகளை சாப்பிடுக்கொண்டே இருப்போம். இதனால் எடை அதிகரிக்கும்.

    பெரிய தட்டுகளில் சாப்பிடும் போது குறைந்த உணவு சாப்பிடும் உணர்வு தோன்றும். இதனால் பசி அடங்காதது போலவே இருக்கும். எனவே சிறிய தட்டுகளில் பொறுமையாக உணவை நன்றாக மென்று சாப்பிடுங்கள்.

    தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, சோடா போன்ற பானங்கள் குடிப்பது போன்றவற்றால் உடல் எடை அதிகரிக்கவே செய்யும்.

    கோபம், படபடப்பு, பயம், மகிழ்ச்சி போன்ற உணர்வுகளில் இருக்கும் போது நமக்கே தெரியாமல் அதிக அளவு உணவு சாப்பிடுகிறோம். எனவே இதுபோன்ற நேரங்களில் மனம் நிதானமான பிறகு சாப்பிடுவதே சிறந்தது. மேற்கண்டவையெல்லாம் நம்மை அறியாமலேயே நாம் செய்யும் தவறுகள். இதனால் எடையை குறைக்க நாம் எடுக்கும் முயற்சிகள் வீணாகின்றன. இவற்றை கண்டுபிடித்து சரி செய்த கொண்டால் நீங்களும் ஸ்லிம் பியூட்டிதான்.
    பெண்கள் தடம் புரளாமல் ஒழுக்கமாக வாழ வேண்டும். தவறான ஆண்களுடன் உருவாக்கிக்கொள்ளும் ஒழுக்கமற்ற வாழ்க்கை பெண்களை சிறைக்குள் தள்ளி, அவர்களது தலைமுறையினரின் எதிர்காலத்தையும் சிதைத்துவிடுகிறது.
    தப்பான காதலும், தடம்புரளும் வாழ்க்கையும் பெண்களை நினைத்துப் பார்க்க முடியாத சோகத்திற்குள் கொண்டுபோய் தள்ளிவிடும். அதன் பிறகு தப்பை உணர்ந்து அவர்கள் அழுதோ, அரற்றியோ பலனில்லை. சட்டத்தின் பிடியில் சிக்கி, மீண்டு வரமுடியாமல் மீதமுள்ள காலத்தை ஜெயில் கம்பிகளுக்குள் செலவிடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும். தவறுகளுக்கு இடம்கொடுத்து அப்படிப்பட்ட துயரத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறாள், சிந்து (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கானல் நீராகிப்போன தனது வாழ்க்கையை கண்ணீரோடு சிறையில் இருந்து அவள் விவரிக்கிறாள்! சமூகத்திற்கு இது ஒரு பாடம்..!!

    "பெற்றோரை எதிர்த்து, காதலித்தவனோடு ஓடிவிட்ட அம்மாவுக்கு நான் பிறந்திருக்கிறேன். அந்த ஆள் சில வருடங்களிலே என் அம்மாவையும் ஒதுக்கித்தள்ளிவிட்டு சென்றுவிட, நான் யாருக்கும் வேண்டாதவள் ஆனேன். எத்தனையோ விதமான தொல்லைகளுக்கு மத்தியில் எப்படியோ நான் வளர்ந்தேன். என் அம்மா மீண்டும் ஒரு திருமணம் செய்துகொண்டாள். நான் பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு, அருகில் உள்ள வீடுகளில் வேலை செய்தேன்.

    யாருடைய காதல் வலையிலும் விழாமல் திருமண பருவத்தை அடைந்தேன். எனது உறவினர் ஒருவர், ஊரில் உள்ள இளைஞரை எனக்கு திருமணம் செய்துவைத்தார். பத்து பவுன் நகை, மூன்று லட்சம் ரூபாய் ரொக்கம் கொடுத்து எங்கள் திருமணம் நடந்தது. நல்லநிலையில் வாழ நான் ஆசைப்பட்டேன். ஆனால் என் கணவரோ என்னை ஒரு மோசமான பெண் போலவே பார்த்தார். அவர் தனியார் பஸ்சில் டிரைவராக வேலைபார்த்தார். வாய்க்குள் எப்போதும் பான்மசாலா கிடக்கும். அவருக்கு மது, கஞ்சா பழக்கம் இருப்பது பின்னால்தான் எனக்கு தெரியவந்தது.

    அவர் வீட்டிற்கு வரும்போதெல்லாம் பெரிய பை ஒன்றை தூக்கிவருவார். அதில் சிறிய பொட்டலங்கள் நிறைய இருக்கும். ரகசியமாக பலர் வந்து அதனை வாங்கிச்செல்வார்கள். நடுராத்திரிக்குள் அந்த பை நிறைய பணம் சேர்ந்துவிடும். அது சமூகவிரோத செயல் என்பதை நான் உணர்ந்தேன். அவரது நண்பர்களின் வேலையும் அதுதான். போதைப் பொருட்களை விற்றார்கள்.

    பணம் நிரம்பிய பையை வாங்கிச் செல்ல இளைஞன் ஒருவன் வருவான். பார்க்க நன்றாக இருப்பான். அவனுக்கு என் மீது தனிப்பட்ட ஈர்ப்பு இருந்தது. அவன் நாகரிகமாக நடந்துகொள்வதால் எனக்கும் அவன் மீது இஷ்டம் ஏற்பட்டது. எனக்கும், அவனுக்கும் சமமான வயது. அந்த காலகட்டத்தில் நான் இரண்டாவதாக கர்ப்பமாகியிருந்தேன்.

    எங்களுக்குள் நெருக்கத்தை அதிகரிக்கச்செய்யும் விதத்திலான சில நடவடிக்கைகளில் எனது கணவர் ஈடுபட்டார். பல விஷயங்களுக்காக அவனை எங்கள் வீட்டிற்குள் வர அனுமதித்தார். எங்களுக்குள் தொடர்பு ஏற்பட்டது. `உன் கணவர் இதை எல்லாம் கண்டுகொள்ளமாட்டார். அதனால் நீ அவரை நினைத்து பயங்கொள்ள வேண்டாம்' என்று அவன் சொன்னது எனக்கு முதலில் அதிர்ச்சியளித்தாலும், பின்பு அதனை ஜீரணித்து ஏற்றுக்கொண்டேன்.

    எனக்கு முதலில் மகன் பிறந்திருந்தான். எனது கணவரின் குடும்பத்தினருக்கு பேரனை ரொம்ப பிடிக்கும். இரண்டாவது மகள் பிறந்தாள். நான் பிரசவம் முடிந்து வீடு திரும்பிய பின்பும் அவனுடனான உறவு நீடித்தது. அவன் வீட்டிற்கு வந்துவிட்டு திரும்பும்போதெல்லாம் எனது மாமியார் அவனை மோசமாக திட்டுவார்.

    என் மகளுக்கு இரண்டு வயதானபோது ஒரு நாள் வழக்கம்போல் என் கணவர் பெரிய பையுடன் வீட்டிற்கு வந்தார். அவர் குளிப்பதற்காக சென்றபோது, போதைப் பொருட்கள் தடுப்பு போலீசார் அதிரடியாக நுழைந்து என் கணவரை கைது செய்தார்கள். போதைப் பொருட்கள் இருந்த பையையும் எடுத்துச்சென்றனர்.

    ஒரு வாரம் கடந்த நிலையில் நானும், காதலனான அந்த இளைஞனும் என் கணவரை ஜெயிலில் சந்தித்தோம். அப்போது அவர், `எனக்கு ஜாமீன் கிடைக்காது. தண்டனை கிடைப்பதும் உறுதி. அதனால் இனி இவன் (அந்த இளைஞன்) இஷ்டப்படி நடந்துகொள்' என்றார்.

    அவன் அடிக்கடி வீட்டிற்கு வந்தது எனது கணவரின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. எதிர்த்தனர். நான் அவனோடு சென்றுவிடலாம் என்று கருதியபோது அவன் எனது மகளையும் உடன் அழைத்துச்செல்ல விரும்பவில்லை. எனது கணவரின் பெற்றோரோ, எனது மகனை மட்டும் ஏற்றுக்கொள்வதாகவும்- மகள் தனது மகனுக்கு பிறக்கவில்லை என்றும் சண்டையிட்டனர்.

    எனது கணவர் சிறையில் இருந்து போனில் அவரது பெற்றோரிடம் பேசினார். இரண்டும் தனது குழந்தைகள்தான் என்றும், அவர்களை பராமரிக்க தேவையான பணத்துக்கு ஏற்பாடு செய்வதாகவும் சொன்னார். ஆனாலும் அவரது பெற்றோர் எனது மகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் மகளோடு அந்த காதலனிடம் சரணாகதி அடையும் நிலை எனக்கு ஏற்பட்டது.

    சற்று தூரத்தில் உள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு நாங்கள் குடியேறினோம். அவன் எனது தம்பி என்றும், எனது கணவர் வெளிநாட்டில் வேலைபார்க்கிறார் என்றும் பொய் சொல்லிவிட்டு ஒன்றாக வசித்தோம்.

    ஒரு வருடம் கடந்த நிலையில் அவன் திடீரென்று ஒருநாள் `நம்மோடு வசிக்க இன்னொரு நபரும் வருவார். அக்கம்பக்கத்தினர் கேட்டால், அவர்தான் வெளிநாட்டில் வசித்த உனது கணவர் என்றும்- விடுமுறைக்கு வந்திருக்கிறார் என்றும் சொல். அந்த நபர் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளி. போலீசில் இருந்து தப்பிக்க நம்மிடம் அடைக்கலம் கேட்டிருக்கிறார். கொஞ்ச நாட்களே இங்கு தங்குவார்' என்று சொன்னான். அதற்கு சம்மதம் தெரிவிப்பதை தவிர எனக்கு வேறு எந்த வழியும் இல்லை.

    அந்த நபர் எங்களோடு வந்து தங்கினான். முதல் நாளே அவன் மோசமானவன் என்பது தெரிந்துவிட்டது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவன் என்னை மானபங்கம் செய்தான். நான் அழுதேன். அப்போது அவன் `நீ இந்த மாதிரி அழும் வேலையை எல்லாம் என்னிடம் வைத்துக்கொள்ளாதே. நீ எப்படிப்பட்டவள் என்று உன் கணவர் என்னிடம் கூறியிருக்கிறான். உன் கணவனும், இங்கே தம்பியாக நடிக்கும் காதலனும் எனக்கு கீழ்தான் வேலைபார்த்துக் கொண்டிருக்கிறார்கள்' என்றான். அதன் பின்பு அவனுக்கு எதிராக என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அவன் விரும்பியபடி எல்லாம் என்னை இம்சைப்படுத்தினான். எனது மகளை அருகில் உள்ள பள்ளியில் எல்.கே.ஜி.யில் சேர்த்தேன்.

    அவ்வப்போது நானும், என் காதலனும் சிறைக்கு சென்று கணவரை சந்தித்து பேசிவிட்டு வருவோம். அன்று நாங்கள் சிறையில் பார்த்துவிட்டு, திரும்ப வெகு நேரம் ஆகிவிட்டது. இருட்டில் நாங்கள் வீடு திரும்பியபோது அந்த நபர் வீட்டின் முன்னால் இருந்து பீடி புகைத்துக் கொண்டிருந்தான். என் குழந்தையை காணவில்லை. என் உள்ளுணர்வு எச்சரிக்க, கூச்சல்போட்டு அழுதேன்.

    உடனே அந்த நபர், `அழுது ஊரைக் கூட்டாதே. குழந்தை விளையாடியபோது கீழே விழுந்து தலையில் அடிபட்டுவிட்டது' என்றான். நான் அழுதுகொண்டே உள்ளே சென்றபோது, எந்த தாயாலும் தாங்கிக்கொள்ள முடியாத அந்த காட்சியை பார்த்தேன். என் குழந்தையின் உடலை ஒரு பாயில் சுருட்டிவைத்திருந்தான். நான் அந்த பாவியை நோக்கி ஆவேசமாக வந்தபோது என்னை பலவந்தப்படுத்தி மதுவை ஊற்றினான். அதில் போதைப்பொருள் எதையோ கலந்து வைத்திருக்கிறான். மறுநாள்தான் எனக்கு நினைவு திரும்பியது. எனது குழந்தையின் உடல் அங்கு இல்லை.

    அப்போது அவன், என் காதலனை சுட்டிக்காட்டி, `நீ இவனோடு போலீஸ் நிலையம் செல். பள்ளிக்கு போன மகள் திரும்பிவரவில்லை என்று கூறிக்கொண்டு அழுதுகொண்டே நில். மற்றதை எல்லாம் அவன் பார்த்துக்கொள்வான்..' என்றான்.

    அவன் சொன்னதுபோல் போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தோம். ஆனால் போலீஸ் அதிகாரி என் அருகில் வந்து கேள்விகள் கேட்கும் முன்பே, நான் நடந்த உண்மைகள் அனைத்தையும் அவரிடம் சொல்லிவிட்டேன். அடியை தாங்கிக்கொள்ள முடியாமல் என் காதலனும் உண்மையை சொல்லிவிட்டான் என்பதை போலீசார் மூலம் தெரிந்துகொண்டேன்.

    அந்த நபர், நான்கு வயதான என் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றிருக்கிறான். உடலை மறைக்க என் காதலனும் துணைபுரிந்துள்ளான். `குழந்தையை நீ எப்படி அவனிடம் விட்டுச்சென்றிருக்கலாம்? அதனால் நீயும் குற்றவாளிதான்..' என்று பெண் போலீஸ் என்னிடம் சொன்னார். ஐந்து வருடங்கள் கடந்த பின்பே வழக்கு விசாரணைக்கு வந்தது. அதுவரை என்னை ஜாமீனில் எடுக்க யாரும் முன்வரவில்லை.

    எனது குழந்தை பலாத்காரம் செய்யப்பட நானே காரணமாக இருந்துவிட்டேனே? மகள் கொல்லப்பட்டும் அவனை தண்டிக்காமல் நான் அமைதியாகிவிட்டேனே? அது மட்டுமின்றி, குற்றவாளியை காட்டிக்கொடுக்காமல் என் மகளை காணவில்லை என்று புகார் கொடுக்கவும் சென்றுவிட்டேனே.. என்னை எரியும் தீயில் தூக்கிப்போட்டுவிடலாம்.. எவ்வளவு தண்டனை கிடைத்தாலும் அது எனக்கு போதாது..." என்று குமுறுகிறாள் இந்த இளம் பெண்.

    சிறைக் கம்பிகளுக்கு பின்னால் இருந்துகொண்டு தனது வாழ்க்கை கதையை கண்ணீரோடு பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவரிடம் வெளிப்படுத்தியுள்ளாள்.

    பெண்கள் தடம் புரளாமல் ஒழுக்கமாக வாழ வேண்டும். அதற்கு சமூகமும் துணைபுரியவேண்டும். தவறான ஆண்களுடன் உருவாக்கிக்கொள்ளும் ஒழுக்கமற்ற வாழ்க்கை பெண்களை சிறைக்குள் தள்ளி, அவர்களது தலைமுறையினரின் எதிர்காலத்தையும் சிதைத்துவிடுகிறது.
    இந்த வார ரெசிபி ரொம்பவும் சுலபமானது. பழம் சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட இந்த ஃப்ரூட் கபாப்பை விரும்பி சாப்பிடுவார்கள்.
    இந்த வார ரெசிபி ரொம்பவும் சுலபமானது. அதேசமயம் வண்ணமயமானது. வீட்டில் இருக்கும் பழங்கள்தான் இந்த ரெசிபியின் முக்கிய பொருட்கள். வீட்டு பிரிட்ஜில் இருக்கும் பழங்களை எல்லாம் எடுத்து கொள்ளுங்கள்.

    ஸ்ட்ராபெர்ரி, புளூ பெர்ரி, அன்னாசிப்பழம், வாழைப்பழம், ஆரஞ்சு, திராட்சை, கொய்யா, பப்பாளி, கிவி இதில் எதுவாக இருப்பினும் அதை சிறுசிறு துண்டுகளாக நறுக்கியும் அல்லது தேவைக்கு ஏற்க முழு பழங்களாக வைத்தும், இந்த ரெசிபியை தயாரிக்கலாம்.

    கபாப் குச்சியில் பழங்களை வரிசையாக அடுக்கி வைத்தால், ஃப்ரூட் கபாப் ரெடி.
    இந்த கொளுத்தும் வெயிலை சமாளிக்க மக்கள் தர்பூசணி, கிருணிப் பழ ஜூஸ் என்று படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். கோடையில் உடலுக்கு நலம் தரும் உணவுகள் பற்றி இங்கே காண்போம்.
    நாளுக்கு நாள் வெயிலின் உக்கிரம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஏ.சி இல்லாமல் இருக்க முடியவில்லை என்ற நிலை வந்துவிட்டது. குளிரில் இருந்து வெப்ப காலத்துக்கு நம்முடைய உடலும் மாறிவிட்டது. இந்த கொளுத்தும் வெயிலை சமாளிக்க மக்கள் தர்பூசணி, கிருணிப் பழ ஜூஸ் என்று படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். கோடையில் உடலுக்கு நலம் தரும் உணவுகள் பற்றி இங்கே காண்போம்.

    மோர்

    கோடைக் காலம் என்றாலே பலரும் தயிரை எடுத்துக்கொண்டால் குளிர்ச்சி தரும் என்பதுதான். தயிர் குளிர்ச்சியான உணவு இல்லை. உணவு செரிமானத்தில் மந்தத்தை ஏற்படுத்தி, உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்துவிடும். தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கும் மோர் உடலுக்கு குளிர்ச்சி. கோடையில் மோரை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். அதே நேரத்தில் தயிர் சாதமாக எடுத்துக்கொள்வதில் பிரச்னை ஒன்றும் இல்லை என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

    புதினா

    புதினா உடலுக்கு குளிர்ச்சி தரும். புதினா டீ, புதினா துவையல், சட்னி என ஏதாவது ஒரு வகையில் புதினாவை எடுத்துக்கொள்ளலாம். புதினா உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன், செரிமானத்துக்கு துணை புரிகிறது, ஆஸ்துமா அலர்ஜியைத் தடுக்கிறது, சில வகையான தலைவலியைப் போக்குகிறது, வாய், பற்களின் ஆரோக்கியத்தைக் காக்கிறது.

    வெள்ளரி

    நீர் நிறைந்த குளிர்ச்சியான காய்கறி வெள்ளரி. கோடைக் காலத்தில் உடலுக்கு நீர்ச்சத்தை வழங்கும் சிறந்த காய்கறி. குறைந்த கலோரி கொண்ட வெள்ளரியை கோடையில் எடுத்துக்கொள்வதன் மூலம் உடலின் தண்ணீர் சத்து பாதுகாக்கப்படும். உடல் எடையும் குறையும்.

    எலுமிச்சை ஜூஸ்

    கோடையில் பலரும் விரும்புவது சில் என்ற எலுமிச்சை ஜூஸ்தான். வெயிலில் கலைத்து வருபவர்களுக்கு எலுமிச்சை ஜூஸில் உள்ள சர்க்கரை சத்து உடனடி ஆற்றல் அளிக்கும். எலுமிச்சை புத்துணர்வு அளிக்கிறது. உடலை குளிர்விப்பதுடன், செரிமானத்தையும் மேம்படுத்துகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது எலுமிச்சை ஜூஸ். உச்சி வெயிலில் அலைந்துவிட்டு அதிக சில் என்று ஜூஸ் அருந்த வேண்டாம். அது வேறு விதமான பாதிப்பை ஏற்படுத்திவிடும். மிதமான குளிர்ச்சி கொண்ட ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம்.

    தர்பூசணி

    ஆண்டு முழுவதும் தற்போது இறக்குமதி செய்யப்பட்ட தர்பூசணி கிடைக்கிறது என்றாலும் கோடையில் கிடைக்கும் சுவையான நம் ஊர் தர்பூசணிக்காக பலரும் காத்திருப்பது வழக்கம். தர்பூசணி, முலாம்பழம், கிர்ணி பழம் என்று கோடையில் கிடைக்கும் பழங்கள் நம்முடைய உடலுக்கு நீர்ச்சத்தையும் ஊட்டச்சத்தையும் வழங்குகின்றன. உடலை, வயிற்றை குளிர்ச்சியடைய செய்து, செரிமானத்தை மேம்படுத்த இவை உதவுகின்றன.
    ஸ்மார்ட் போன் பழக்கத்தால் குழந்தைக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் எவை என்பதை அறிவது முக்கியமாகும். குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போனை கொடுத்தால் பலவிதமான பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
    குழந்தையின் பேச்சு ஆற்றல் விருத்தியடையும் காலத்தில் அவர்கள் விளையாடுவதற்கு ஸ்மார்ட் போனை கொடுத்தால் அவர்களின் பேச்சு ஆற்றல் விருத்தியடைவது தாமதம் அடையும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சொல்லாற்றல் குறைவதுடன் அவர்கள் மற்றவர்களுடன் கலந்துரையாடுவது குறைந்துவிடும்

    அதே போல அவர்களது எழுத்து ஆற்றலும் பாதிக்கப்படும். விரல் நுனிகளால் போனைத் தட்டிக் கொண்டிருக்கும் அவர்கள் தங்களது விரல்களை வளைத்து எழுத்துக்களை உறுப்பாக எழுதுவதில் ஆர்வம் விட்டுப் போய் எழுதும் ஆற்றல் பாதிக்கப்படும்.

    குழந்தைகளுக்கு தூக்கம் பெரியவர்களைவிட அதிக நேரம் தேவை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் ஸ்மார்ட் போனில் ஆர்வம் கொண்டு அதில் நேரத்தை செலவழிக்கும் குழந்தைகள் தூங்கும் நேரம் குறைந்துவிடுகிறதாம். அண்மைய ஆய்வு முடிவுகளின்படி குழந்தை ஒரு மணிநேரம் ஸ்மார்ட் போனில் செலவிட்டால் 15 நிமிடங்கள் தூக்கம் குறைகிறதாம்.

    இவற்றை விட, ஸ்மார்ட் போனில் பார்க்கும் விடயங்களால் உடலியல் மற்றும் உளவியில் தாக்கங்களும் குழந்தைக்கு ஏற்படுகிறது.

    ஸ்மார்ட் போனில் இருந்து நீலக் கதிர் வீச்சு ஏற்படுகிறது. நீலக் கதிர்களால் உடற் கடிகார இயங்கங்களில் மாற்றங்கள் ஏற்படலாம். அதாவது தூங்கும் நேரம் விழித்தெழும் நேரம் போன்ற எமது நாளாந்த செயற்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். அத்துடன் அந்தக் கதிர்கள் கண்களினுள் ஆழப் புகுந்து நுண்பார்வைக்கு முக்கியமான மக்கியூலா பகுதியை பாதிக்கும். இது குணப்படுத்த முடியாத பாதிப்பு ஆகும்.

    கிருமித் தொற்று நோய்கள் குழந்தைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றன. ஏனெனில் 90 சதவிகிதத்திற்கு மேலான போன்களில் கிருமி பரவியிருப்பதாக ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

    குழந்தையை ஸ்மார்ட் போனிலிருந்து விடுவிப்பதற்கு நீங்கள் முக்கியமாகச் செய்ய வேண்டியது என்னவெனில் நீங்கள் முன்மாதிரியாக இருப்பதுதான். நீங்கள் ஸ்மார்ட் போன் பாவனையை கட்டுப்படுத்துவது அவசியம்.

    முக்கியமாக குழந்தையின் கண்பார்வை படும் இடத்திலிருந்து பாவிக்க வேண்டாம். அதில் அழைப்பு வந்தால் அதற்கு மறுமொழி கொடுத்துவிட்டு உடனடியாகவே அதை குழந்தையின் கைபடாத இடத்தில் வைத்து விடுங்கள்.

    நீங்கள் ஸ்மார்ட் போனில் நோண்டிக் கொண்டிருப்பது குழுந்தையின் கவனத்தை ஈர்த்து, அதன் ஆவலைத் தூண்டி குழந்தையையும் அதில் கைபோட வைக்கும். இந்த விடயத்தில் பெற்றோர் முன்மாதிரியாக இருப்பது அவசியம். அத்துடன் பெற்றோர் ஸ்மார்ட் போனில் நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருப்பதானது குழந்தை தான் அலட்சியப்படுத்தப் படுவதான உணர்வைக் கொடுத்து அதை ஏக்கமடையச் செய்யும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    குழந்தையுடன் பேசுவது, அதற்கு விருப்பமான கதைகளைக் கூறுவது, அதனுடன் சேர்ந்து விளையாடுவது, அதன் வயதிற்கும் ஆர்வத்துக்கும் ஏற்ற விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுப்பது ஆகியவற்றைச் செய்யுங்கள்.

    குழந்தையை வெளியே அழைத்துச் செல்வதும், அதன் வயதுள்ள குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது போன்றவையும் உங்கள் குழந்தையின் கவனத்தை ஸ்மார்ட் போனிலிருந்து விடுவிப்பதற்கு உதவும்.

    பொதுவாக இரண்டு வயதுவரை குழந்தைகள் தன்னைச் சுற்றியுள்ள உலகைப் பழகிப் புரிந்து கொள்ள வேண்டிய காலம். பெற்றோருடனும் மற்றவர்களுடனும் ஊடாட வேண்டிய காலம். ஸ்மார்ட் போன் ஆகவே ஆகாது. மூன்று வயதில் அவர்கள் ஸ்மார்ட் போன் ஊடாக சிலவற்றைக் கற்கக் கூடிய காலம். கண்காணப்போடு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் ஸ்மார்ட் போனைக் கொடுக்கலாம்.
    பொதுவாகவே பெண் என்பவள் மற்றவர்களை கவனித்துக்கொண்டு தன் உடல் நலத்தையும் ஆரோக்கியத்தையும் எப்பொழுதுமே கண்டுகொள்வதில்லை.
    நீரின்றி அமையாது உலகு என்பது போல பெண்ணின்றி அமையாது குடும்பம்.ஒரு குடும்பம் சிறந்து விளங்க வேண்டுமென்றால் அந்த குடும்பத்தின் பெண் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். பொதுவாகவே பெண் என்பவள் மற்றவர்களை கவனித்துக்கொண்டு தன் உடல் நலத்தையும் ஆரோக்கியத்தையும் எப்பொழுதுமே கண்டுகொள்வதில்லை. அதிலும் முக்கியமாக இந்த 5 பழக்கங்களை அவர்கள் கண்டுகொள்வதே இல்லை. அதைப்பற்றி என்ன என்பதனை பார்ப்போம்.

    1.வேலைச்சுமையால் எப்பொழுதும் வேலையையே நினைத்துக்கொண்டு இருப்பதாலும் அவர்கள் நீர் அருந்துவதை மறந்து விடுகின்றனர்.ஆண்களைக் காட்டிலும் பெண்கள் மிகக் குறைவான நீரை அருந்துகின்றனர் என்று ஒரு ஆய்வு கூறுகின்றது. தாகத்தின் போது நம் உடலுக்கு ஏற்ப போதுமான நீரை அவ்வப்போது குடித்து விடவேண்டும்.

    2. வேலைக்கு செல்லும் பெண்கள் ஆகட்டும் வீட்டில் இருக்கும் பெண்கள் ஆகட்டும் காலை உணவு என்பதனை நேரத்திற்கு பெண்கள் அதிகம் எடுத்துக்கொள்வது இல்லை.இதனால் அவர்கள் பலவிதமான உடல் சார்ந்த பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.முடிந்த அளவு காலை உணவை நேரத்திற்கு எடுத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

    3. நேரமின்மையால் உடலுக்குத் தேவையான உடற்பயிற்சி பெண்கள் செய்வது இல்லை. வீட்டு வேலை செய்வதே உடற்பயிற்சி தானே என்றும் கேட்கும் பெண்களுக்கு, அது உடற்பயிற்சி அல்ல. வீட்டு வேலையினால் உங்க கலோரிகள் எரிக்கப்படுவது இல்லை. எனவே பெண்கள் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சியை மேற்கொள்வது மிக மிக அவசியமாகிறது.இது உங்களின் ஆரோக்கியத்திற்கு அவசியம் ஆகிறது.

    4. பெண்கள் நொறுக்கு தீனி அதிகமாக சாப்பிடுவது வழக்கமாக இருக்கும். அதிலும் குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் நொறுக்கு தீனியை வாயில் போட்டு மென்று கொண்டே இருப்பர். இதனால் உடலில் கொழுப்பு அதிகரிப்பது போன்ற பல உடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    5. பெண்களைப் பொறுத்தமட்டில் ஒரே மாதிரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்வர். நியூட்ரிஷன் சார்ந்த பழவகைகளை அவர்கள் பெரும்பாலும் எடுத்துக்கொள்வது இல்லை. ஆனால் பெண்கள் ஆண்களைக் காட்டிலும் பழங்களை அதிகம் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் மாதவிடாயின் போது உதிரப்போக்கு ஏற்பட்டு மிகவும் வலிமை இழந்து போகாமல் இருக்க நீங்கள் உண்ணும் பழ வகைகள் உங்களை பேணிக்காக்கும்.

    பெண்களே நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் உங்கள் குடும்பம் ஆரோக்கியமாக இருக்கும். எனவே உங்கள் வாழ்வில் இந்த அறிந்து பழக்கங்களை கட்டாயமாக்க முயற்சி செய்யுங்கள்.
    நெஞ்சு சளியை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் அதனை எளிதில் சரி செய்து விடலாம். நாள்பட்ட நெஞ்சு சளியை, நுரையீரல் ஊடு சோதிப்பு முறையில் சரி செய்து விட முடியும்.
    கொரோனா காலகட்டத்தில் சளியின் பாதிப்பை உணராதவர்கள் இருக்க முடியாது. சாதாரணமாக சளி பிடித்தால் அது ஓரிரு நாட்களில் தானாகவே சரியாகி விடும். ஆனால் இருமலுடன் சேர்ந்து வெளியேறும் சளியின் நிறம் அடர்ந்த மஞ்சள் அல்லது வெளிர் பச்சையாக வரும்போது நெஞ்சு சளி அதிகம் இருப்பதை நாம் உணரலாம்.

    நெஞ்சு சளியை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் அதனை எளிதில் சரி செய்து விடலாம். நாள்பட்ட நெஞ்சு சளியை, நுரையீரல் ஊடு சோதிப்பு முறையில் சரி செய்து விட முடியும். இதற்கு நாம் உரிய நுரையீரல் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

    சுவாசிப்பதில் பிரச்சினை இருந்தால் சுவாசப் பாதையின் உட்பகுதி பிரான்கோஸ்கோபி மூலம் பரிசோதிக்கப்பட்டு காரணம் கண்டறியப்படும். சாதாரண திசுவை போன்று உறைந்த சளியை இந்த சிகிச்சையின் மூலம் அகற்றி விட முடியும். அவ்வாறு அகற்றப்படும் சளியை ஸ்கோப் வழியாக சேகரித்து நுண்ணிய பரிசோதனைக்கு அனுப்பி நோய்த்தொற்றை உறுதி செய்த பின்னர் உரிய சிகிச்சை மேற்கொள்ளும் போது சளி மேலும் உற்பத்தியாகாமல் முற்றிலுமாக தடுக்க முடியும்.

    சிகிச்சை முடிவின் அடிப்படையில் நுரையீரல் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள் மூலம் பாதிப்பை முற்றிலுமாக சரி செய்யலாம். எனவே சாதாரண சளியாக இருக்கும் பட்சத்தில் ஓரிரு நாட்களில் தானாகவே சரியாகிவிடும். அது தொடரும் பட்சத்தில் அதை நெஞ்சு சளியாக மாறி விடாமல் ஆரம்ப கட்டத்திலேயே சரி செய்து விடுவது பல்வேறு நுரையீரல் பாதிப்புகளை தவிர்க்கும்.

    டாக்டர் நர்த்தனன், முதன்மை நுரையீரல் மருத்துவர்.

    கூந்தலுக்கு வண்ணம் பூசுதல், ரசாயன சிகிச்சை போன்றவையும் கூந்தலை வறண்டு போகச் செய்வதுடன் பலவீனமாகவும் ஆக்குகின்றன. இதை சரி செய்ய சில வழிகள் இதோ...
    சிலருக்கு அடிக்கடி தலைக்கு குளிப்பதாலும், வெளிப்புறத்தில் உள்ள மாசுக்களின் பாதிப்பாலும், கூந்தல் வறண்டு காணப்படும். மேலும் கூந்தலுக்கு வண்ணம் பூசுதல், ரசாயன சிகிச்சை போன்றவையும் கூந்தலை வறண்டு போகச் செய்வதுடன் பலவீனமாகவும் ஆக்குகின்றன. இதை சரி செய்ய சில வழிகள் இதோ...

    வாரம் ஒருமுறை கூந்தலில் ஆலிவ் எண்ணெய் தடவி நன்றாக ஊறவைத்து தலைக்கு குளிக்கலாம். இது கூந்தலை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்கும். தலைமுடி உலர்ந்த பின் 3 சொட்டுகள் ஆலிவ் எண்ணெய் பூசினால் கூந்தல் பட்டுப்போல் மென்மையாகும்.

    2 தேக்கரண்டி கற்றாழை ஜெல், 3 சொட்டு தேங்காய் எண்ணெய், 1 கப் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை ஸ்பிரே போன்று பயன்படுத்தலாம். கற்றாழையில் உள்ள வைட்டமின் சி, அமினோ அமிலம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை வறண்ட கூந்தலை மென்மையாக்கும். தேங்காய் எண்ணெய் வறண்ட மற்றும் சேதமடைந்த முடியை சரி செய்து ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது.

    இரவில் ஊறவைத்த ஒரு கப் வெந்தயத்தை மைபோல் அரைத்து 2 தேக்கரண்டி கடுகு எண்ணெய் மற்றும் ஒரு கப் தயிருடன் சேர்த்து கலக்க வேண்டும். இந்த கலவையை கூந்தலின் வேர் முதல் நுனி வரை தடவ வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்கவும். கடுகு எண்ணெய் கூந்தலை மிருதுவாகவும், பொலிவானதாகவும் மாற்றும். தயிர் கூந்தலுக்கு நல்ல கண்டிஷனராக செயல்படும். வெந்தயம் கூந்தலுக்கு ஈரப்பதத்தை கொடுக்கும்.

    ஒரு வாழைப்பழத்தை நன்றாக மசித்து அத்துடன் கால் கப் கொழுப்பு நீக்கப்பட்ட தயிர் மற்றும் 2 தேக்கரண்டி கடுகு எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். தலைமுடியின் வேர்ப்பகுதியில்படும்படி அக்கலவையை தடவி 30 நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசவும். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின்கள் கூந்தலின் ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்ள உதவுகிறது.

    எலுமிச்சை பழச்சாறு கரிசலாங்கண்ணி சாறு அரை லிட்டர் பால் ஆகியவற்றை ஒன்றரை லிட்டர் நல்லெண்ணெய்யில் சேர்த்து கலக்க வேண்டும். அந்த கலவையை காய்ச்சி வடிகட்டி தலை முடியில் தடவினால் வறண்ட முடி மென்மையாகும். இளநரை வராது. முடி நீண்டு, அடர்த்தியாக வளரும்.

    முட்டையின் வெள்ளைக்கருவை  சிறிதளவு, ஆலிவ் எண்ணெயில் கலந்து கூந்தலின் வேர்ப்பகுதி முதல் நுனி வரை தடவவும். பிறகு குளிர்ந்த தண்ணீரில் தலைக்கு குளிக்கவும். இதனால் கூந்தல் மிருதுவாகவும் ஆரோக்கியமாகவும் வளரும்.
    வாழைக்காயில் கூட்டு, பொரியல், வறுவல் என்று செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வாழைக்காயில் சூப்பரான சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வாழைக்காய் – 2
    தேங்காய் துருவல் – கால் கப்
    வரமிளகாய் – 5
    சாம்பார் வெங்காயம் – 10
    பூண்டு – 4 பல்
    சீரகம் – 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை – சிறிதளவு
    உப்பு – தேவைக்கேற்ப
    புளி – தேவைக்கேற்ப
    எண்ணெய் – ½ டீஸ்பூன்

    வாழைக்காய் சட்னி

    செய்முறை

    வாழைக்காயை தோல் நீக்கி நன்றாக வேக வைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வரமிளகாய் , பூண்டு, சாம்பார் வெங்காயம், புளி, தேங்காய் துருவல் போட்டு தனித்தனியே வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள

    மிக்சியில் வறுத்த பொருட்களை போட்டு அதனுடன் சீரகம், கறிவேப்பிலை போட்டு நன்றாக அரைக்கவும்.

    கடைசியாக உப்பு, வேக வைத்த வாழைக்காய் சேர்த்து அரைத்து எடுக்கவும்.

    இப்பொழுது வாய்க்கு சுவைமிக்க வாழைக்காய் சட்னி ரெடி…

    இதை… இட்லி, தோசையுடன் பரிமாறலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×