என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    குழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்கள் அனைத்துக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை பெற்றோர் விதிக்கக்கூடாது. இப்படிப்பட்ட நிபந்தனைகளோடு குழந்தைகளை வளர்ப்பவர்கள் அடக்குமுறை எண்ணம் கொண்ட பெற்றோராவர்.
    1. அதிக கட்டுப்பாடு

    தினமும் துல்லியமாக குறிப்பிட்ட நேரத்தில் தூங்கவைப்பது- அன்றாடம் குறிப்பிட்ட நேரத்தில் விழித்தாகவேண்டும் என்பது- டி.வி. நிகழ்ச்சிகள் பார்க்க நேரம் ஒதுக்குவது- குறிப்பிட்ட நேரத்தில் படித்துதான் ஆகவேண்டும் என்பது, போன்று குழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்கள் அனைத்துக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை பெற்றோர் விதிக்கக்கூடாது. அதை குழந்தைகள் மீறும்போது தண்டனை வழங்கும் வழக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது. இப்படிப்பட்ட நிபந்தனைகளோடு குழந்தைகளை வளர்ப்பவர்கள் அடக்குமுறை எண்ணம் கொண்ட பெற்றோராவர்.

    இத்தகைய பெற்றோரிடம் அடக்குமுறை உணர்வுதான் மேலோங்கியிருக்கும். அன்பு இருக்காது. குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமல், அவர்களை பொம்மைபோன்று நினைத்துக்கொண்டு அவர்களை தங்கள் இஷ்டத்துக்கு வளைக்க முயற்சிப்பார்கள். தங்கள் விருப்பப்படியே குழந்தைகள் வளரவேண்டும் என்றும் இத்தகைய பெற்றோர்கள் எதிர்பார்ப்பார்கள்.

    எதிர்விளைவுகள்

    இப்படி அடக்குமுறைக்கு உள்ளாகி வளரும் குழந்தைகள் டீன்ஏஜ் பருவத்தில் பெற்றோரின் அடக்குமுறை சுபாவத்திற்கு பதிலடி கொடுக்கத்தொடங்கும். இது குடும்பத்திற்குள் கடுமையான பிரச்சினைகளை உருவாக்கும். அவர்களில் சிலர் மோசமான நண்பர்களால் ஈர்க்கப்பட்டு போதைப் பொருள் பழக்கத்திற்கும் உள்ளாகிவிடக்கூடும். அதுவரை கடுமையான கட்டுப்பாடுகளோடு வளர்ந்து வருகிறவர்களுக்கு டீன்ஏஜில் சுதந்திரம் கொடுக்கும்போது, அவர்கள் அளவற்ற சுதந்திரத்தை அனுபவிக்க முயற்சிப்பார்கள். எல்லையற்ற சுதந்திரத்தை திடீரென்று அனுபவிக்கும் இவர்களிடம் நள்ளிரவில் ஊர் சுற்றுதல், வன்முறை செயல்பாடுகளில் ஈடுபடுதல், அதிக வேகத்தில் கார் ஓட்டுதல் போன்ற முரண்பாடான பழக்கவழக்கங்கள் தோன்றக்கூடும். இது அவர்களது எதிர்காலத்தை பாதிக்கும் நிலை ஏற்படலாம்.

    2. கவனிப்பின்மை

    பெற்றோர் இருவரும் வேலைபார்ப்பவர்களாக இருக்கும்போது, அவர்கள் கவனம் பெரும்பாலும் வேலையை சுற்றியே இருக்கும். அதனால் குழந்தைகளை அடுத்தவர்கள் பொறுப்பில்விட்டுவிடுவார்கள். தாத்தா-பாட்டி, உறவினர் அல்லது வேலைக்காரர் பொறுப்பில் அந்த குழந்தைகள் வளர்வார்கள். அவ்வப்போது குழந்தைகளை வந்து பார்த்துவிட்டு பரிசு பொருட்கள், பணம் போன்றவற்றை கொடுத்துவிட்டு செல்வார்கள். இப்படிப்பட்ட சூழலில் வளரும் குழந்தைகளுக்கு பெற்றோர் தங்களை கவனிக்கவில்லை என்ற மனக்குறை இருந்துகொண்டிருக்கும். பெற்றோர் புறக்கணிப்பதாக கருதிவிடுவார்கள்.

    எதிர்விளைவுகள்

    பெற்றோரின் அன்பு கிடைக்காத இந்த குழந்தைகளிடம் கட்டுப்பாடான வாழ்க்கைமுறை இருக்காது. தாத்தா-பாட்டிகள், அவர்களால் வளர்க்கப்படும் குழந்தைகளின் விருப்பத்திற்கெல்லாம் வளைந்துகொடுப்பார்கள். அதனால் இத்தகைய குழந்தைகளிடம் அடம்பிடிக்கும் தன்மை அதிகமாக இருந்துகொண்டிருக்கும். தாங்கள் விரும்பியதை சாதிக்க ‘எமோஷனல் பிளாக்மெயில்’ செய்வார்கள். குழந்தைகள் பெற்றோரால் வளர்க்கப்படும்போது அவர்களிடமிருந்து பெரும்பாலான வாழ்க்கைப்பாடங்களை பார்த்து, தெரிந்து கற்றுக்கொள்வார்கள். அந்த வாழ்வியல் அறிவு குழந்தைகளுக்கு மிக அவசியம். வேலைக்காரர்களிடமோ, மற்றவர்களிடமோ வளரும் குழந்தைகளுக்கு அத்தகைய வாழ்க்கைப் பாடங்கள் அரைகுறையாகத்தான் கிடைக்கும்.

    பெற்றோரின் முழு கவனிப்பு கிடைக்காத குழந்தைகள், நண்பர்களால் அதிகம் ஈர்க்கப்படுவார்கள். நண்பர்களின் பழக்கவழக்கங்கள் அவர்களிடம் உருவாகும். நல்ல நண்பர்கள் கிடைத்தால் அது அதிர்ஷ்டம். தவறான நண்பர்கள் கிடைத்தால் முரண்பாடான பாதைக்கு அவர்களை இழுத்துச்சென்றுவிடுவார்கள்.

    3. பொறுப்பின்மை

    குழந்தைகளின் அனைத்து செயல்களுக்கும் விலை நிர்ணயிக்கக்கூடாது. அதாவது படிப்பதற்கு சாக்லேட் கொடுப்பது, பரீட்சை நன்றாக எழுதுவதற்கு புதிய ஷூ வாங்கிக்கொடுப்பது போன்ற பழக்கங்களை உருவாக்குவது பொறுப்பற்ற செயலாகும். இந்த நிலை நீடித்தால் குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு தக்கபடியான பொருட்களை கேட்கத்தொடங்கிவிடும். அது தவறான முன்னுதாரணமாகிவிடும்.

    எதிர்விளைவுகள்

    குழந்தைகளிடம் ‘படிப்பதும், பரீட்சை எழுதுவதும் அவர்கள் எதிர்காலம் சிறந்து விளங்குவதற்காக செய்யப்படும் செயல்’ என்பதை உணர்த்தவேண்டும். அப்படியானால்தான் அவர்களிடம் பொறுப்பு உருவாகும். கிடைக்கும் சாக்லேட்டுக்காகவும், ஷூவுக்காகவும் குழந்தைகள் வேலைபார்க்கத் தொடங்கிவிட்டால், அது அவர்களது எதிர்கால வளர்ச்சியை பாதிக்கும். 
    அழகு நிறைந்திருக்கும் செம்பருத்தி பூவில், மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. அதன் இலை, மொட்டு, வேர் போன்ற அனைத்துமே மருந்தாகப் பயன்படுகிறது.
    தேவையான பொருட்கள்:

    செம்பருத்தி பூ - 10
    தண்ணீர் - 3 கப்
    எலுமிச்சம் பழம் - 1
    தேன் - தேவையான அளவு.

    செய்முறை:

    பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து செம்பருத்திப் பூக்களைப் போட்டு மூடி, அடுப்பை அணைத்து விடவும்.

    செம்பருத்தி கலந்த நீர் ஆறிய பின், வடிகட்டி எலுமிச்சம் பழ சாறு கலக்கவும். 

    வண்ணமயமான ஆரஞ்சு நிறத்தில் கலவை மாறும். தேவையான தேன் கலக்கவும். 

    சுவைமிக்க 'செம்பருத்தி பூ ஜூஸ் தயார்.

    குளிர்பதனப் பெட்டியில் வைத்தும் பரிமாறலாம்.
    பெண்களும், தாய்மை அடைந்த பெண்களும், இரும்பு சத்து கொண்ட உணவுகளை குறைவாக எடுத்துக் கொள்பவர்களும் இரும்பு சத்து குறைபாடு பிரச்சினைக்கு ஆளாகிறார்கள்.
    ஆண்களை விட பெண்களுக்கு இரும்பு சத்து இன்றியமையாதது. உடலுக்கு தேவையான ரத்தத்தை உற்பத்தி செய்வதில் இரும்பு சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ரத்தப்போக்கை ஈடு செய்வதற்கு இரும்பு சத்துதான் பக்கபலமாக இருக்கும். உடலில் இருக்கும் இரும்பு சத்தில் 70 சதவீதம் ஹீமோகுளோபின் எனப்படும் ரத்த சிவப்பணுக்களிலும், மியோகுளோபின் எனப்படும் தசை செல்களிலும் காணப்படுகிறது. ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனை நுரையீரலில் இருந்து மற்ற திசுக்களுக்கு எடுத்து செல்வதற்கு ஹீமோ குளோபின் அவசியம்.

    இரும்பு சத்து குறைபாடு ஏற்படும்போது ஹீமோ குளோபினின் செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகும். ரத்தசோகை பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும். உடல் சோர்வு, தலைச்சுற்றல், மூச்சு திணறல், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, தொடர்ந்து தலைவலி ஏற்படுவது, கூந்தல் வறட்சி, கால்களில் நடுக்கம், பதற்றம், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்றவை இரும்பு சத்து குறைபாட்டிற்கான பிற அறிகுறிகளாகும். முடி கொட்டுவது, திடீரென்று சருமம் வெளிர் நிறத்திற்கு மாறுவது போன்ற பிரச்சினைகளும் தோன்றும்.

    சரும ஆராய்ச்சி மருத்துவர் மோனிகா பம்ரோ கூறுகையில், “தாய்மை அடைந்த பெண்களும், இரும்பு சத்து கொண்ட உணவுகளை குறைவாக எடுத்துக் கொள்பவர்களும் இரும்பு சத்து குறைபாடு பிரச்சினைக்கு ஆளாகிறார்கள். ஹீமோகுளோபினை உற்பத்தி செய்வதற்கு போதுமான அளவு இரும்புச்சத்து இல்லாத போது ரத்த சோகை பிரச்சினை தலைதூக்குகிறது. அதன் தாக்கம் சருமத்தில் வெளிப்படும். சரும வறட்சி, அரிப்பு, வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாறுவது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். நகங்கள் உடைவது, வெடிப்பு ஏற்படுவது, உடல் வலுவிழந்து போவது போன்ற பிரச்சினைகளும் தோன்றும். முகத்திலும், உடல் முழுவதும் சோர்வு ஏற்படக்கூடும். கருவளையம் பிரச்சினையும் எட்டிப்பார்க்கும். சருமம், கூந்தல் மற்றும் நகங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு இரும்புச்சத்து கொண்ட உணவுகளை அவசியம் சாப்பிட வேண்டும்” என்கிறார்.

    நட்ஸ் வகைகள், பயறு வகைகள், பீன்ஸ், கீரை வகைகள், சிறு தானியங்களை அதிகம் உணவில் சேர்த்துகொள்ள வேண்டும்.
    தற்போதைய காலத்தில் சோப்பை பயன்படுத்தி கை கழுவுவது, முக கவசம் அணிவது போன்ற தற்காப்பு விஷயங்களை கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறோம்.
    நம் பாரத நாடு விடுதலை அடைந்த பின்பு நமது பண்பாடு, கலாசாரம், வாழ்வியல் நெறிமுறைகளை தொலைத்து விட்டு மேற்கத்திய நாகரிகத்தை அறியாமையால் பின்பற்றி வருவதால் நாம் சுயசார்பின்றி தவித்து வருகிறோம். இதற்கு உதாரணமாக எண்ணற்ற விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

    நம் நாட்டிற்கான உடை-- குறிப்பாக ஆண்களுக்கு உகந்தது, வேட்டி. உடல் மெலிந்தாலும், பெருத்தாலும் பயன்படுத்தலாம். தேவையான நேரங்களில் பிறஆடைகள் பயன்படுத்தலாம்.

    நம் வெப்ப மண்டல நாட்டிற்கு கைத்தறி ஆடையே ஏற்றது. அதையே பயன்படுத்தி இயற்கையோடு இணைந்து நம் முன்னோர்கள் வாழ்ந்தனர். தமிழ்நாட்டில் குடியானவர்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை தங்கள் வீட்டு முற்றங்களில் பசுஞ்சாணம் பயன்படுத்துவது கிருமிநாசினியாகவும் சகல ஐஸ்வர்யத்தையும் தரும் அன்றாட நிகழ்வாகவும் வழக்கில் இருந்து வருகிறது. தற்போது பஞ்சகவ்யம் பயன்படுத்துவது இயற்கை உரமாக வளம் உண்டாக பயன்படுகிறது.

    கூழானாலும் குளித்துக் குடி, கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்ற மூதுரை வாக்குப்படி தனி மனித சுகாதாரம் மேம்படுகிறது. வெளி இடங்களுக்கு சென்று வந்தால் கை, கால்கள் சுத்தம் செய்துவிட்டு வீடுகளுக்குள் பிரவேசிக்க அன்றே அறிவுறுத்தினர்.

    தற்போது கொரோனா வைரஸ் மிகப்பெரிய சவாலாக விளங்குகிறது. இதே போன்று முற்காலங்களில் ‘ஊழிக்காற்று’ என்று பெயரிடப்பட்ட மிகக் கொடிய காலரா, அம்மை, பிளேக் போன்றவை நம் நாட்டில் ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்ட வரலாறு நாம் அறிந்ததே.

    அம்மை நோய் ஏற்பட்ட காலத்தில் பாதிக்கப்பட்டோர் வீடுகளில் அவர்களை குடும்பத்தாரோடு தனிமைப்படுத்துதல் (Quarantine) செய்துள்ளோம். வீடுகளில் வேப் பிலை கட்டி அடையாளப்படுத்துதல், வேப்பிலை, மஞ்சள் கலந்த நீரை வீட்டைச் சுற்றி தெளித்தல், வேப் பிலை மஞ்சள் கலவையை புறப்பூச்சாக அம்மை நோய்க்கு பயன்படுத்தினோம். அம்மை நோய் பாதித்தோர் வீட்டிலிருந்து உணவு மற்றும் பிற பொருட்கள் வாங்க முற்றிலும் தடை செய்து சமூக பரவலாக மாறாத வண்ணம் மிக கச்சிதமாக நிறைவேற்றினோம். குறிப்பாக அம்மைக் கொப்பளம் உதிரக் கூடிய காலத்தில் அவை எளிதில் பரவ வாய்ப்புகள் அதிகம். ஆகவே, அம்மை நோயால் பாதிக்கப்பட்டோருக்கு வேப்பிலை, மஞ்சள் கலந்த வெந்நீர் கொண்டு தலை முழுகினர். முற்றிலும் அம்மைக் கொப்பளம் உதிரும் வரை உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக, மருந்து கலந்த கஞ்சி உண்டனர். 10-16 நாட்கள் தனிமைப்படுத்தினர். நோய் சமூகத் தொற்றாக பரவாத வண்ணம் பாதுகாத்தனர்.

    இதே நெறிமுறைகளை, வழிமுறைகளை நாம் இப்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு பயன்படுத்தினாலே நல்ல முறையில் சமூகத் தொற்றாக மாறாமல் இருக்கச் செய்யலாம். பெருந்தொற்று காலங்களில் அம்மன் கோவிலில் கஞ்சி பிரசாதமாக தரப்படும். மிளகு, சீரகம், வெந்தயம், ஏலக்காய், பூண்டு மற்றும் மருந்து சரக்குகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச் சத்துக்கள் உடலுக்கு வலிமை தரும்.

    நமது பாரம்பரியத்தில் மஞ்சள் முக்கிய இடத்தை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. பூஜை அறைகளில் மஞ்சள் ஒரு மங்களகரமான பொருள் மட்டுமின்றி கிருமிநாசினி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது. சித்த மருத்துவ கோட்பாட்டின்படி வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று உயிர்தாதுக்களும் சமநிலையில் அமைந்தால் நோயற்ற நிலை ஏற்படும். இந்த மூன்றின் சமநிலை வேறுபட்டால் உடல் நலிவுற்று நோய்நிலை அடையும். இந்த மூன்று உயர்தாதுக்களின் வேறுபாட்டினை சரிசெய்யக்கூடிய ஆற்றல் உடையது, மஞ்சள்.

    தற்போதைய காலத்தில் சோப்பை பயன்படுத்தி கை கழுவுவது, முக கவசம் அணிவது போன்ற தற்காப்பு விஷயங்களை கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறோம். அதேநேரம் நாம் கோவில் திருவிழாக்களின் அழைப்பிதழில் கூட நான்கு மூலையிலும் மஞ்சள் தடவுவதால் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு தொற்று பரவாமல் பாதுகாக்கிறோம்.

    பெண்கள் முகத்தில் மஞ்சள் தேய்த்துக் குளித்து பருக்கள் ஏற்படாத வண்ணம் தடுத்துக்கொண்டனர். மஞ்சளை, உணவு சுவைக்காகவும் மணத்திற்காகவும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும் வண்ணமும் பயன்படுத்தி, ‘உணவே மருந்து மருந்தே உணவு’ என்ற கோட்பாட்டினை உருவாக்கினர். மஞ்சளை வாங்கி இடித்து பயன்படுத்துவதே சிறந்தது.

    மஞ்சளில் உள்ள குர்குமின் வேதிப்பொருள் புற்று நோயை எதிர்க்கும் தன்மையுடையது. இதனை நவீன மருத்துவத்திலும் இன்றளவும் பயன்படுத்தி வருகிறோம். இதனால் நஞ்சு விளைவுகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்கிறோம்.

    பெரும் துக்கநிகழ்வில் குடும்பத்தாரை தனிமைப்படுத்துதலும், அதன் பிறகு பிற உறவினரை அழைத்து காரியம் செய்வதும் ஒருவகை தனிமைப்படுத்துதலே ஆகும். விடுதிகளில், வீடுகளில் தனிமைப்படுத்துதல், மருத்துவமனையில் சிகிச்சை பெறுதல் என 14 நாட்கள் தனிமைப்படுத்துதலும், நம் முன்னோர்களின் செயல்பாடுகளே ஆகும்.

    சிறு தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளாமல் அதிக மாவுச் சத்து உணவுகள் சேர்ப்பதும், விரைவு உணவு அதிகம் சேர்ப்பதும் நம் உடற்கட்டை கெடுத்து தேக ஆரோக்கியத்தை நிலைகுலையச் செய்யும். இதனால் இளம் வயதிலேயே நீரிழிவு, ரத்தக் கொதிப்பு போன்ற நோய்கள் ஏற்பட்டு எதிர்கால இந்தியா வலுவிழந்து வருகிறது.

    நாம் பழங்கால வாழ்வியல், உணவு, பழக்கவழக்கங்களை கடைப்பிடித்து இன்றும்.. என்றும்.. ஆரோக்கியமாக வாழ முன் வர வேண்டும்.

    கட்டுரை : டாக்டர் கோ. சுபாஷ்சந்திரன்,

    அரசு சித்த மருத்துவக்கல்லூரி,

    பாளையங்கோட்டை.

    -----------------------
    காய்கறிகளை முறையாக பாதுகாப்பதுடன் தக்க சமயத்தில் பயன்படுத்தவும் வேண்டும். இல்லாவிட்டால் வாடி, வதங்கி வீணாகிப்போய்விடும். உணவு பொருட்களை சேமிக்கும் விதம் பற்றியும், வீணாகாமல் தவிர்ப்பது பற்றியும் பார்ப்போம்.
    ஊரடங்கு உத்தரவின் காரணமாக வழக்கமாக வாங்கும் காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் போன்றவற்றை சற்று கூடுதலாகவே நிறைய பேர் வாங்குகிறார்கள். அவற்றை முறையாக பாதுகாப்பதுடன் தக்க சமயத்தில் பயன்படுத்தவும் வேண்டும். இல்லாவிட்டால் வாடி, வதங்கி வீணாகிப்போய்விடும். உணவு பொருட்களை சேமிக்கும் விதம் பற்றியும், வீணாகாமல் தவிர்ப்பது பற்றியும் பார்ப்போம்.

    உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பூண்டு, வெங்காயம் போன்றவற்றை குளிர்ச்சியான இடத்திலோ, உலர்ந்த இடத்திலோ சேமித்துவைக்க வேண்டும். அவை நல்ல காற்றோட்டமான வசதியுடன் இருப்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும் அவற்றை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதை தவிர்க்க வேண்டும். உருளைக்கிழங்குகள், சர்க்கரைவள்ளிக்கிழங்குகள் அதிகமாக இருந்தால் சிப்ஸ்கள், பஜ்ஜிகள் தயாரிக்கலாம். உருளைக்கிழங்கில் கட்லெட்டுகள் தயார் செய்து சாப்பிடலாம். பூண்டு, வெங்காயம் அதிகமாக இருந்தால் அதனுடன் எலுமிச்சை அல்லது வினிகர் சேர்த்து ஊறுகாய் தயாரித்து சேமித்துவைக்கலாம்.

    இஞ்சி, வலுவான நோய் எதிர்ப்பு தன்மை கொண்டது. அதனை குளிர்சாதனப்பெட்டியில் காய்கறி சேமித்து வைக்கும் பெட்டி யில் சேமித்துவைக்கலாம். அது இரண்டு வாரம் ஆனால் கூட கெட்டுப்போகாமல் புதிதாக இருக்கும். இஞ்சி அதிகம் இருந்தால் வெயிலில் உலர்த்தி பொடித்து வைக்கலாம். மாலை வேளையில் இஞ்சி டீ தயாரித்து குடும்பத்தினருடன் அமர்ந்து பருகிவரலாம்.

    இஞ்சியை போல மஞ்சளையும் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து உபயோகிக்கலாம். அவற்றை நீண்ட காலம் பயன்படுத்த விரும்பினால் பிரீசரில் சேமித்து வைக்கலாம். மஞ்சள் அதிகமாக இருந்தால் வெயிலில் நன்றாக உலரவைத்து மஞ்சள் தூள் தயாரித்துக்கொள்ளலாம்.

    கொத்தமல்லி தழை, புதினா போன்றவற்றை தண்டுடன் தண்ணீரில் மூழ்கி வைத்தால் வாடிப்போகாமல் இருக்கும். தண்ணீரை அடிக்கடி மாற்றி பராமரித்துவந்தால் இரண்டு வாரங்கள் வரை பயன்படுத்தலாம். குளிர்சாதனப் பெட்டியிலும் சேமித்துவைக்கலாம். கொத்தமல்லி தழை, புதினா தேவைக்கு அதிகமாக இருந்தால் மூலிகை பானம், தேநீர், சாலட்டுகள், சூப்கள் போன்றவற்றை தயாரித்து பருகலாம்.

    ஆரஞ்சு, வாழைப்பழம், ஆப்பிள் போன்றவை அறையின் வெப்பநிலையிலேயே ஒருவாரம் வரை நன்றாக இருக்கும். வாழைப்பழம் காயாக இருந்தால் அறை வெப்பநிலையில் பழமாக மாறுவதற்கு ஒரு வாரம் வரை ஆகும். ஆரஞ்சு, ஆப்பிளை நீண்ட நாட்கள் பயன்படுத்த விரும்பினால் குளிர்சாதனப்பெட்டியில் சேமித்து வைக்கலாம்.

    வாழைப்பழம் அதிகமாக இருந்தால் சிறிய துண்டுகளாக நறுக்கி பாலித்தீன் பையில் இறுக்கமாக கட்டி பிரீசரில் சேமித்து வைக்கலாம். அவற்றை மில்க் ஷேக், கேக்குகள் தயாரிப்புக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

    பழுத்த மாம்பழங்களை குளிர்சாதன பெட்டியில் சேமித்துவைத்து சாப்பிடலாம். காயாக இருந்தால் பேப்பரில் சுருட்டி அறைவெப்பநிலையில் வைத்தால்போதும். நன்றாக பழுத்துவிடும்.

    எண்ணெய் வகைகளை அதிக வெளிச்சம் இல்லாத பகுதியில் சேமித்து வைக்க வேண்டும். கருமை நிற பாட்டிலில் சேமித்துவைப்பது நல்லது.

    நட்ஸ் வகைகளை காற்றுப்புகாத டப்பாக்களில் சேமித்து வைப்பதுதான் பாதுகாப்பானது. அவற்றை குளிர்ச்சியான இடத்திலோ அல்லது வெளிச்சம் இல்லாத இடத்திலோ வைத்திருக்கவேண்டும்.

    முட்டைகளை பிரிட்ஜில் சேமித்துவைக்கலாம். அவை புதியதா என்பதை கண்டறிவதற்கு, கண்ணாடி டம்ளரில் நீர் ஊற்றி முட்டையை மெதுவாக போட வேண்டும். முட்டை மூழ்க தொடங்கினால் புதியது என்று அர்த்தம். முட்டைகள் அதிகமாக இருந்தால் கேக்குகள், குக்கிஸ், பிஸ்கட்டுகள் தயாரித்து சாப்பிடலாம்.
    எல்லா பெண்களுமே நாற்பது வயதுகளில் நாயகிகள் போன்று வலம்வரத்தான் விரும்புகிறார்கள். விரும்பினால் மட்டும் போதாது. அதற்கு ஏற்ற வாழ்க்கை முறைகளை அவர்கள் கையாளவேண்டும். அந்த வாழ்க்கைமுறை உணவு, உடல், மனம் சார்ந்ததாகும்.
    ‘உங்களை பார்த்தால் நாற்பது வயது என்று சொல்லவே முடியாது. இருபத்தைந்து வயதே ஆகியிருப்பது போன்று உங்களிடம் இளமைத் துள்ளுகிறது’ என்று நீங்கள் சந்திக்கும் பெண்ணிடம் சொன்னால், அந்த பெண் தன்னை 40 வயது சினிமா கதாநாயகிபோல் நினைத்துக்கொண்டு அந்தரத்தில் சிறகடித்து பறப்பார். உங்கள் இருவருக்கும் இடையேயான சந்திப்பு மிக இனிமையானதாக அமைந்துவிடும். அதே பெண்ணிடம், ‘உங்களுக்கு நாற்பது வயதுதான் ஆகியிருக்கிறதா? பார்த்தால் ஐம்பது வயதுக்கு மேல் மதிக்கும்படி இருக்கிறீர்களே..’ என்று சொல்லிவிட்டால், அப்படியே தலைகவிழ்ந்தபடி சோர்ந்துபோய் உங்களை கடந்துசென்றுவிடுவார்.

    எல்லா பெண்களுமே நாற்பது வயதுகளில் நாயகிகள் போன்று வலம்வரத்தான் விரும்புகிறார்கள். விரும்பினால் மட்டும் போதாது. அதற்கு ஏற்ற வாழ்க்கை முறைகளை அவர்கள் கையாளவேண்டும். அந்த வாழ்க்கைமுறை உணவு, உடல், மனம் சார்ந்ததாகும்.

    பெண்கள் பெரும்பாலும் தங்கள் புற அழகைப்பற்றித் தான் கவலைப்படுகிறார்கள். நாற்பது வயதில் புறஅழகை மட்டும் மேம்படுத்திவிட்டால் நாயகிகள் போல் கட்டுக்கோப்பான உடலுடன் வலம் வர முடியாது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுதான் மிக முக்கியம். நாற்பது வயதை கடக்கும்போது உடலில் சக்தி குறைந்து, தசைகள் தளரத் தொடங்கிவிடும் என்பதை முப்பது வயதை கடக்கும்போதே பெண்கள் மனதில்கொள்ளவேண்டும். அப்போதே உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தினால், நாற்பது வயதில் உடல்நல பிரச்சினை எதுவும் தோன்றாது.

    இது பற்றி ஊட்டச்சத்து நிபுணர் கூறுவதை கேளுங்கள்..

    “நாற்பது வயது பருவம் என்பது பெண்களை பொறுத்தவரையில் மிக முக்கியமானது. அப்போது அவர்கள் பெரும்பாலும் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியிருப்பார்கள். அதனால் உடல்வலு குறைந்திருக்கும். குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் அந்த காலகட்டத்தில் கால்சியம் மற்றும் புரதசத்து குறைபாடுகள் தோன்றும் என்பதால், அதை ஈடுகட்டும் விதத்திலான உணவுகளை உண்ணவேண்டும். நாற்பது வயதுகளில் பெரும்பாலான பெண்களுக்கு உடல்பருமன் பிரச்சினை ஏற்படுகிறது. அது ஏற்படாமல் இருக்க வறுத்த, பொரித்த உணவுகள் உண்பதை வெகுவாக குறைத்திடுவது நல்லது. அதாவது 30 வயதை கடக்கும்போதே வீட்டில் சமையல் எண்ணெய்யின் தேவையை பாதியாக குறைத்திடவேண்டும். அசைவ விரும்பிகள் வாரத்தில் ஒருநாள் அசைவம், ஆறு நாள் சைவம் என்ற உணவுமுறையை கடைப்பிடிப்பது நல்லது.

    மதிய உணவில் சாதத்தின் அளவை குறைத்து, காய்கறிகளை அதிகம் சேர்க்கவேண்டும். புடலை, பூசணி, அவரை, முட்டைகோஸ், பீன்ஸ் போன்றவைகளை சேர்த்துக்கொள்ளலாம். உடலுக்கு ஆன்டி ஆக்சிடென்ட் நிறைய தேவைப்படும். அதனால் அந்தந்த சீசனில் கிடைக்கும் இரண்டு வகை பழங்களையாவது அன்றாடம் உட்கொள்வது அவசியம். தினம் ஒரு வகை கீரையை உணவில் சேர்க்கும் பழக்கத்தையும் உருவாக்கிக்கொள்ளவேண்டும்” என்றார்.

    நாற்பது வயதில் நாயகிகளாக வலம்வர கட்டுடலும் மிக அவசியம். அதற்கு முறையான உடற்பயிற்சி தேவை. அது பற்றி உடற்பயிற்சி நிபுணர் சொல்கிறார்!

    “உடல் எடையை கட்டுக்குள்வைத்தபடி எப்போதும் புத்துணர்ச்சியோடு வலம்வர வேண்டும் என்றால், உடற்பயிற்சி அவசியம். ஆனால் இதில் இருக்கும் சில உண்மைகளை பெண்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். உடற்பயிற்சியை தாங்களாகவே வீடுகளில் தொடங்குகிறவர்கள் புத்தகத்தை படித்தோ, டி.வி.யை பார்த்தோ பயிற்சியை ஆரம்பித்துவிடக்கூடாது. ஏன்என்றால் அனைவருக்கும் அனைத்துவிதமான பயிற்சிகளும் பொருந்தாது.

    ஒவ்வொரு பெண்ணின் உடல்வாகு மற்றும் உடல்நிலைக்கு தகுந்தபடி அவர்களுக்கான உடற்பயிற்சியையும் அமைத்துக்கொள்ள வேண்டும். அவரவர் உடல் நிலைக்கு ஏற்ற பயிற்சி எது என்பதை கண்டறிய, உடற்பயிற்சி நிபுணரின் ஆலோசனையை பெறவேண்டும். அத்தகைய ஆலோசனையை பெற வாய்ப்பில்லாதவர்கள் தினமும் அரை மணி நேரம் முதல் முக்கால் மணி நேரம் வரை நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். பெண்கள் குறிப்பிட்ட சில பயிற்சிகள் மூலம் கை, வயிற்றுப் பகுதி, தோள்பட்டை, புஜம், இடுப்பு, தொடை போன்ற பகுதிகளில் உள்ள தசைகளை கட்டுப்படுத்தலாம்” என்கிறார்.

    நாற்பது வயதில் நாயகிகளாக வலம் வர மனதும் உற்சாக மாக இயங்கவேண்டும். “மனதே சரியில்லை என்ற வார்த்தையை நாற்பது வயதுகளில் இருக்கும் பெண்கள் உச்சரிக்கும் நிலை ஏற்பட்டால் அதற்கு என்ன காரணம் என்பதை கண்டறிந்து, அதில் இருந்து விடுபட்டு, தன்னை உற்சாகமான மனநிலைக்கு மாற்றிக்கொள்ளவேண்டும். பெண்கள் என்றாலே எப்போதும் ஏதாவது பிரச்சினைகள் இருந்துகொண்டுதான் இருக்கும். அதையே நினைத்து வருந்தக்கூடாது. பொருளாதார நெருக்கடி, குடும்ப நெருக்கடி போன்றவைகள் இருந்தாலும் அதை நினைத்து மனதை நெருக்கடிக்கு உள்ளாக்கிக்கொள்ளக்கூடாது. மற்றவர்களை குறை சொல்வதை தவிர்ப்பதும், எதிர்காலத்தை நினைத்து கவலைகொள்ளாமல் இருப்பதும் மனதை உற்சாகமாக வைத்துக்கொள்வதற்கான வழிமுறையாகும்” என்று மனநல நிபுணர்கள் சொல்கிறார்கள்.
    குங்குமப்பூவை தினமும் பயன்படுத்தினால் முகத்திற்கு பிரகாசத்தை அளிக்கும். முகப்பரு, வடுக்கள், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம்.
    குங்குமப்பூ சரும ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக கருதப்படுகிறது. தினமும் பயன்படுத்தினால் முகத்திற்கு பிரகாசத்தை அளிக்கும். குங்குமப்பூ நீரை பருகுவதன் மூலம் சருமத்தின் கட்டமைப்பை மேம்படுத்தலாம். இயற்கையாகவே சருமத்தை ஜொலிக்கவைக்கலாம். முகப்பரு, வடுக்கள், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம்.

    * காலை வேளையில் வெறும் வயிற்றில் குங்குமப்பூ நீரை பருகுவது நல்லது. இது காபிக்கு மாற்றான ஆரோக்கிய பானமாகவும் கருதப்படுகிறது. ஒரு டம்ளர் குங்குமப்பூ நீர் பருகினால் அந்த நாளை உற்சாகத்துடன் தொடங்கலாம். பார்க்கும் வேலையில் கூடுதல் கவனம் செலுத்த வைக்கும் தன்மை கொண்டது. அது உடல்நிலையிலும், மன நிலையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

    * குங்குமப்பூவில் இருக்கும் சில ஆன்டி ஆக்சிடன்டுகள் முடி உதிர்வதை தடுக்க உதவும். கூந்தலை வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க துணைபுரியும். முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.

    * உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க விரும்புபவர்கள் குங்குமப்பூ நீர் பருகிவரலாம். பசியை போக்கி உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு துணைபுரியும்.

    * மாதவிடாய் காலத்தில் அதிக பாதிப்புகளை எதிர்கொள்பவர்களுக்கு குங்குமப்பூ நீர் பலன் தரும். வலியைக் குறைத்து, உடல் இயக்கம் சீராக நடைபெறுவதை உறுதிசெய்யும்.

    * ஐந்து, ஆறு குங்குமப்பூ இழைகளை ஒரு டம்ளர் சுடுநீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து பருகலாம். டாக்டரிடம் ஆலோசனை பெற்று பருகுவது நல்லது.
    வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது.
    தேவையான பொருள்கள் :

    வெங்காயத்தாள் - ஒரு கட்டு
    தயிர் - 1 கப்
    இஞ்சி - சிறிது
    செலரி - 1 கொத்து
    தக்காளி சாஸ் - அரை கப்
    பச்சை மிளகாய் - 3
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயத்தாள், செலரி, பச்சை மிளகாயை நன்றாக கழுவி நீரை துடைத்துக் விட்டு பொடியாக நறுக்கவும்.

    இஞ்சியை தோல் சீவி தட்டி வைத்துக்கொள்ளவும்.

    தயிரை கடைந்து உப்பு சேர்த்து, தக்காளி சாஸ், கீரைகள், பச்சை மிளகாய் மற்றும் தட்டி வைத்த இஞ்சியை போட்டு நன்கு கலக்கவும்.

    சுவையான வெங்காயத்தாள் செலரி தயிர் பச்சடி தயார்.

    சப்பாத்திக்கு இது மிகவும் சுவையாக இருக்கும்.

    தாய்ப்பால், புட்டி பால் குடிக்கும் குழந்தைகளின் நாக்கில் வெள்ளையாக மாவுப் போல படியும். நாக்கை சுத்தம் செய்யாவிட்டால் கிருமிகளின் பாதிப்பு இருக்கும்.
    குழந்தையின் ஒவ்வொரு உறுப்பையும் சுத்தம் செய்வது அவசியம். ஆனால், அனைத்து உறுப்புகளையும் சாதாரணமான முறையில் சுத்தம் செய்ய முடியாது. சில கவன முறைகள் அவசியமாகிறது. சில உறுப்புகளை மிதமான, கவனமான முறையில் கையாள்வதே நல்லது. அந்த வகையில் நாக்கு மற்றும் காதுகளை எவ்வாறு சுத்தம் செய்வது என இப்பதிவில் பார்க்கலாம்.

    பொதுவாகப் பற்கள், ஈறுகளை சுத்தம் செய்ய கவனம் செலுத்துவோமே தவிர நாக்கை விட்டு விடுவோம். தாய்ப்பால், புட்டி பால் குடிக்கும் குழந்தைகளின் நாக்கில் வெள்ளையாக மாவுப் போல படியும். குழந்தை சிரிக்கும்போது நாக்கை சுத்தம் செய்ய முயற்சித்தால், குழந்தை முகத்தைத் திருப்பிக்கொள்ளும். தாங்களாக வலுகட்டாயமாக நாக்கை சுத்தம் செய்ய முயற்சித்தாலும் குழந்தை காண்பிக்காது.ஆனால், நாக்கை சுத்தம் செய்யாவிட்டால் கிருமிகளின் பாதிப்பு இருக்கும்.

    நாக்கை சுத்தம் செய்ய டிப்ஸ்

    சுத்தமான, சாஃப்டான துண்டை எடுத்துக்கொள்ளுங்கள். இளஞ்சூடான தண்ணீரில் துண்டை நனைத்துக் கொள்ளுங்கள். நனைத்த துண்டை, உங்கள் விரலில் சுற்றி குழந்தையின் நாக்கை சுத்தப்படுத்துங்கள். தண்ணீர் மிகவும் சூடாக இருக்க கூடாது. எப்போதும் குழந்தையின் நாக்கை சுத்தம் செய்ய எளிமையான வழி, குழந்தையின் கீழ் உதடை கீழ் நோக்கி ஹோல்ட் செய்த பின் நாக்கை சுத்தப்படுத்துங்கள்.

    சில குழந்தைகளுக்கு நாக்கில் மாவு போல மிக அழுத்தமாக ஒட்டி இருக்கும். அதை எடுக்க, இளஞ்சூடான நீரில் சிறிதளவு கல்லுப்பு போட்டு கரைத்துக் கொள்ளுங்கள். இந்தத் தண்ணீரில் துண்டை நனைத்து குழந்தையின் நாக்கை சுத்தம் செய்யலாம். அழுத்தமான மாவு போல ஒட்டியிருப்பதும் நீங்கும். கவனம். குழந்தையின் நாக்கு மிகவும் மென்மையானது என்பதால் மிதமான அழுத்தம் கொடுத்து சுத்தம் செய்யுங்கள். பால், உணவு சாப்பிட்ட பிறகு குழந்தையின் கன்னம், வாய், பற்கள், ஈறுகள், நாக்கு ஆகியவை சுத்தம் செய்யலாம்.

    ஊரடங்கால் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பாதிப்புக்குள்ளாகி இருப்பது சர்வே ஒன்றில் தெரியவந்துள்ளது. நிறைய பெண்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
    வெளி உலக தொடர்பில் இருந்தே பழக்கப்பட்ட ஆண்கள் ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பதால் பொழுதை போக்குவதற்கு மிகுந்த சிரமப்படுகிறார்கள். பெரும்பாலும் பெண்களுக்கு வீடுதான் உலகமாக இருப்பதால் அவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்பது ஆண்களின் எண்ண ஓட்டமாக இருக்கிறது. ஆனால் ஊரடங்கால் ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் பாதிப்புக்குள்ளாகி இருப்பது சர்வே ஒன்றில் தெரியவந்துள்ளது. நிறைய பெண்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. வீட்டு வேலைகளை ஆண்கள் ஓரளவு பகிர்ந்து கொள்ள தொடங்கி இருக் கிறார்கள் என்ற கருத்து நிலவினாலும் பெண்களுக்குத்தான் அதிக சுமை ஏற்பட்டிருக்கிறது. வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு மூன்று வேளையும் சமைப்பது, பாத்திரம் கழுவுவது, வீட்டை சுத்தம் செய்வது, துணி துவைப்பது போன்ற வேலைகள் பெண்களுக்கு அதிகரித்து இருப்பதாக அந்த சர்வே சுட்டிக்காட்டியுள்ளது.

    கணவன் அலுவலகம் செல்லும்போது மதிய உணவுக்கான சமையல் காலையிலேயே முடிந்துவிடும் என்பதால் பெண்களுக்கு சிறிது நேரம் ஓய்வு கிடைக்கும் நிலை இருந்தது. இப்போது மதியம் சமைக்க வேண்டி இருப்பதோடு சாப்பிடுவதற்கு பரிமாறப்படும் பாத்திரங்களை கழுவுவதும் கூடுதல் வேலை பளுவை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இருப்பதால் அவர்களின் தேவைகளை கேட்டறிந்து செய்து கொடுப்பது, அடிக்கடி வீட்டை சுத்தம் செய்ய வேண்டியும் இருப்பது என பெண்களின் வேலை ஓய்வில்லாமல் தொடரும் நிலை நீடிக்கிறது.

    பெரும்பாலான வீடுகளில் காய்கறிகள், மளிகை பொருட்களை பெண்கள்தான் கடைக்கு சென்று வாங்க வேண்டி இருக்கிறது என்பதும் சர்வேயில் தெரியவந்துள்ளது. டி.வி. பார்ப்பதிலும், செல்போனில் பொழுதை போக்குவதிலும்தான் நிறைய ஆண்கள் ஆர்வம் காட்டுவதாகவும், மனைவிக்கு உதவி செய்தாலும் கூட உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் பெண்களுக்குத்தான் அதிகமாக இருப்பதாக சர்வே குறிப்பிடுகிறது. இதுநாள் வரை வேலை ஆட்கள் துணையுடன் வேலை செய்துவந்த பெண்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வீட்டில் இருந்தே அலுவலக வேலைகளை கவனிக்கும் பெண் களுக்கு வேலைப்பளு இரு மடங்கு கூடி இருக்கிறது.

    இதுகுறித்து மனநல மருத்துவர் ரச்சனா கூறுகையில் “பொதுவாகவே வேலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் வீட்டை நிர்வகிப்பதில் மனதளவில் மட்டுமல்ல உடல் அளவிலும் அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இந்த காலகட்டம் அவர்களுக்கு இன்னும் சிரமமானதுதான். பலர் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அவர்கள் முன்வைக்கும் முதல் குற்றச்சாட்டே ஓய்வில்லாமல் வேலைசெய்ய வேண்டி இருக்கிறது என்பதுதான். சமையல் மற்றும் வீட்டை சுத்தம் செய்வதிலேயே நேரம் கழிவதாக கூறுகிறார்கள். இதற்கு ஒரே தீர்வு வேலைகளை பகிர்ந்துகொள்வதுதான்.

    ஆண்கள் செய்து கொடுக்கும் வேலைகள் அவர்களுக்கு நெருக் கடியை குறைப்பதாக இருக்க வேண்டும். எப்படியெல்லாம் வேலை சுமையை குறைக்கலாம் என்று தம்பதியர் இரு வரும் திட்டமிட வேண்டும். பெண்களும் குடும்பத்தினரிடம் நிலைமையை புரிய வைக்க வேண்டும். வீட்டு வேலைகளை செய்வதும் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதை குடும்பத்தினர் அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்” என்கிறார்.
    குடும்ப நலன் மீதும், குடும்பத்தினர் மீதும் அக்கறை கொள்ளும் குடும்பத்தலைவிகள் தங்கள் உடல் நலன் மீது போதுமான கவனம் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு காலங்காலமாக பின்தொடர்ந்து கொண்டிருக்கிறது.
    குடும்ப நலன் மீதும், குடும்பத்தினர் மீதும் அக்கறை கொள்ளும் குடும்பத்தலைவிகள் தங்கள் உடல் நலன் மீது போதுமான கவனம் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு காலங்காலமாக பின்தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலை நீடித்தால் முதுமை பருவத்தை எட்டுவதற்குள்ளாகவே ஏராளமான நோய் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். சில நோய்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கும்வரை வெளிப்படையான அறிகுறிகளை கொண்டிருக்காது.

    ஆரம்பக்கட்டத்திலேயே பரிசோதனைகள் மூலம் கண்டறிந்துவிட்டால் கடுமையான பக்கவிளைவுகளில் இருந்து தப்பிவிடலாம். வயது, பாலினத்தை பொறுத்து ஒருசில பரிசோதனைகளை குறிப்பிட்ட காலகட்டத்தில் தவறாமல் மேற்கொள்ள வேண்டியது அவசியம். உடல் நலன் குறித்த தனிப்பட்ட மருத்துவ அறிக்கைகளை பராமரித்து வருவதும் முக்கியம். பெண்கள் தவறாமல் செய்ய வேண்டிய சிலவழக்கமான பரிசோதனைகள் இருக்கின்றன. அவை குறித்து பார்ப்போம்.

    ஒவ்வொரு ஆண்டும் மார்பக பரிசோதனை மேற்கொள்வது அவசியம். மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருந்தால் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட முடியும்.

    ‘பேப் ஸ்மியர்’ எனப்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனையை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது தவறாமல் மேற்கொள்வதும் அவசியமானது.

    பல் பராமரிப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறையாவது பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அது பற்களின் சுகாதாஇரத்தை மேம்படுத்த உதவும்.

    இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது இரத்த அழுத்தத்தை சரிபார்ப்பது அவசியமானது. உயரம் மற்றும் உடல் எடை இரண்டும் பி.எம்.ஐ. கணக்கீடு அடிப்படையில் சீராக இருப்பதையும் உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

    தைராய்டு, நிண நீர், கருப்பை, சருமம் போன்றவற்றை பரிசோதனை செய்யும் வழக்கத்தை இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது மேற்கொள்ள வேண்டும். இத்தகைய பரிசோதனை புற்றுநோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.

    உடலில் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு எவ்வளவு விகிதத்தில் இருக்கிறது என்பதை கண்டறிய ‘லிப்பிட் புரோபைல்’ பரிசோதனை உதவும். இதனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ள வேண்டும்.

    40 முதல் 65 வயதுக்கு உட்பட்ட பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் மார்பகம், சருமம், தைராய்டு, கருப்பை, மலக்குடல் உள்ளிட்ட முக்கிய உடல் உறுப்புகளின் ஆரோக்கியம் குறித்து அறிந்து கொள்வதற்கு உடல் பரிசோதனை மேற்கொள்வது நல்லது. 50 வயதை கடந்த பெண்கள் மார்பகத்தை பரிசோதிக்கும் மெமோகிராம் பரிசோதனையை மேற்கொள்வதும் அவசியமானது.

    40 முதல் 65 வயதுக்கு உட்பட்ட பெண்கள் இரத்த பரிசோதனை மற்றும் கண் பார்வை திறனை கண்டறியும் பரிசோதனையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது மேற்கொள்வதும் நல்லது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இரத்தத்தில் சர்க்கரை அளவை பரிசோதிப்பதும் நல்லது.

    50 வயதை கடந்த பெண்கள் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பெருங்குடல் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்வதும் நல்லது.

    65 வயதை கடந்த பெண்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் பரிசோதனை செய்து கொள்வதும் சிறப்பானது. அதுபோல் ஒவ்வொரு ஆண்டும் உடல் எடை, மார்பகம், இரத்த அழுத்தம், தைராய்டு, கருப்பை, நிணநீர், மலக்குடல் போன்ற உறுப்புகள் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகாமல் இருப்பதற்கு பரிசோதனை மேற்கொள்வதும் அவசியமானது.

    மேலும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை காது, பார்வைத்திறன் பரிசோதனை, இரத்தத்தில் உள்ள வெள்ளை, சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை பற்றிய பரிசோதனை, இரத்தத்தில் சர்க்கரை அளவு பற்றிய பரிசோதனைகளை மேற்கொள்வதும் நல்லது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை மேற்கொள்வதும் ஆரோக்கியத்தை மேம்படுத்த துணைபுரியும்.
    அவசரத்தால் நிறைய பெண்கள் இப்போது பல்வேறுவிதமான சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் பெண்கள் எதிலும் தேவையற்ற அவசரம் காட்டக்கூடாது. நிதானமாக நடந்துகொள்ளவேண்டும்.
    ‘பெண்களிடம் நிதானம் குறைந்து, அவசரம் அதிகரித்து வருவதாக’ புதிய ஆய்வுகள் சொல்கின்றன. இன்று சமூகத்தில் நிலவும் பல்வேறு புதுவிதமான சூழ்நிலைகளால் எதையும் நிதானித்து முடிவு செய்யும் நிலையில் பெரும்பாலான பெண்கள் இல்லை. பல செயல்களை அவர்கள் ஒரே நேரத்தில் செய்யவேண்டியதிருப்பதால், அவசரம் அவர்களை ஆட்கொண்டு விடுகிறது. வேலைகளை சீக்கிரம் முடிக்கவேண்டும் என்ற எண்ணம், அவசரத்தை உருவாக்கிவிடுகிறது. அவசரம், அந்த வேலையில் தெளிவற்ற நிலையை தோற்றுவிக்கிறது.

    யாராக இருந்தாலும் அவசர அவசரமாக சிந்திக்கும்போது முடிவெடுக்கும் திறன் குறையும். முடிவெடுத்த பின்பும் தான் செய்தது சரிதானா? என்ற குழப்பம் மனதில் நீடித்துக்கொண்டே இருக்கும். அதனால் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கும் நிலை தோன்றும். பாதி செயல்கள் நடந்த பின்பு பின்வாங்கினால் அது பலவிதங்களில் நஷ்டத்தை உருவாக்கும். அவசரத்தில் பல விஷயங்களை கவனிக்க மறந்துவிடுவோம். அது இயல்பு. அவசரம் எதையும் ஆழ்ந்து கவனிக்கவோ, கிரகிக்கவோவிடாது.

    அவசரக்காரர்களுக்கு, மற்றவர்கள் சொல்லும் நல்ல விஷயங்களை காதுகொடுத்து கேட்ககூட நேரம் இருக்காது. தேவையற்ற ஒரு காரியத்தில் இறங்கிவிட்ட பின்பு, ‘அடடே கொஞ்சம் யோசித்திருக்கலாமே! மற்றவர்கள் சொன்னதை பரிசீலித்திருக்கலாமே!’ என்று நினைக்கத் தோன்றும். காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது.

    தீர்மானிக்கும் திறன் இன்றைய வாழ்க்கைக்கு மிக அவசியம். இந்த திறன் எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் தீர்மானம் என்பது அமைதியான மனநிலையில் எடுப்பது. அமைதியான மனநிலையில் மனம் நல்லவை கெட்டவைகளை சரியாக எடுத்துச் சொல்லும். லாபநஷ்டங் களைப் பற்றி சிந்திக்கும். சரி, தவறு எல்லாமே அமைதியாக சிந்திக்கும் போது மட்டுமே புலப்படும். அப்படி எடுக்கும் தீர்மானத்தில் தெளிவு இருக்கும். அவசரம், பதற்றத்தை உருவாக்கி தீர்மானிக்கும் திறனை குறைத்துவிடும்.

    நெருக்கடியான நேரத்தில் அவசரப்பட்டுவிட்டால், அந்த நெருக்கடியை சமாளிக்கும் திறன் இருக்காது. ஒருவித தடுமாற்றம் தொற்றிக்கொள்ளும். எந்த காரியத்தையும் பரபரப்போடு செய்தால் தவறுகள் ஏற்பட்டுவிடும். கவனச்சிதறல் தோன்றும். பரபரப்போடு ஒரு செயலை செய்தால் அதற்கு அதிக நேரம் தேவைப்படும். பரபரப்பு மனதை ஒருநிலைப்படுத்தும் சக்தியை குறைக்கும்.

    பரபரப்பை குறைக்கவேண்டும் என்றால், திட்டமிட்டு செயல்படவேண்டும். திட்டமிட்டு செயல்படவேண்டும் என்றால், அதற்கு போதுமான நேரத்தை ஒதுக்கவேண்டும். நேரத்தை ஒதுக்கி, திட்டமிட்டு செய்யப்படும் வேலைகள் எளிதாக வெற்றியை நோக்கி நகரும்.

    நிறைய பெண்கள் இப்போது பல்வேறுவிதமான சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். உறவுகளில், வேலையில், நட்பில் எப்படி வேண்டுமானாலும் அந்த சிக்கல் இருக்கலாம். அவர்களிடம் ‘உங்கள் சிக்கலுக்கு என்ன காரணம்?’ என்று கேட்டால், ஒரே வரியில் ‘நான் அவசரப்பட்டுவிட்டேன். அதனால்தான் இந்த நெருக்கடியில் சிக்கிக்கொண்டேன்’ என்பார்கள். அதனால் பெண்கள் எதிலும் தேவையற்ற அவசரம் காட்டக்கூடாது. நிதானமாக நடந்துகொள்ளவேண்டும்.

    ஒரு சிலரது அவசரம் அவர்களை ஜெயில்வரை கூட கொண்டு சென்றிருப்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
    ×