
கணவன் அலுவலகம் செல்லும்போது மதிய உணவுக்கான சமையல் காலையிலேயே முடிந்துவிடும் என்பதால் பெண்களுக்கு சிறிது நேரம் ஓய்வு கிடைக்கும் நிலை இருந்தது. இப்போது மதியம் சமைக்க வேண்டி இருப்பதோடு சாப்பிடுவதற்கு பரிமாறப்படும் பாத்திரங்களை கழுவுவதும் கூடுதல் வேலை பளுவை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இருப்பதால் அவர்களின் தேவைகளை கேட்டறிந்து செய்து கொடுப்பது, அடிக்கடி வீட்டை சுத்தம் செய்ய வேண்டியும் இருப்பது என பெண்களின் வேலை ஓய்வில்லாமல் தொடரும் நிலை நீடிக்கிறது.
பெரும்பாலான வீடுகளில் காய்கறிகள், மளிகை பொருட்களை பெண்கள்தான் கடைக்கு சென்று வாங்க வேண்டி இருக்கிறது என்பதும் சர்வேயில் தெரியவந்துள்ளது. டி.வி. பார்ப்பதிலும், செல்போனில் பொழுதை போக்குவதிலும்தான் நிறைய ஆண்கள் ஆர்வம் காட்டுவதாகவும், மனைவிக்கு உதவி செய்தாலும் கூட உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் பெண்களுக்குத்தான் அதிகமாக இருப்பதாக சர்வே குறிப்பிடுகிறது. இதுநாள் வரை வேலை ஆட்கள் துணையுடன் வேலை செய்துவந்த பெண்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வீட்டில் இருந்தே அலுவலக வேலைகளை கவனிக்கும் பெண் களுக்கு வேலைப்பளு இரு மடங்கு கூடி இருக்கிறது.
இதுகுறித்து மனநல மருத்துவர் ரச்சனா கூறுகையில் “பொதுவாகவே வேலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் வீட்டை நிர்வகிப்பதில் மனதளவில் மட்டுமல்ல உடல் அளவிலும் அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இந்த காலகட்டம் அவர்களுக்கு இன்னும் சிரமமானதுதான். பலர் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அவர்கள் முன்வைக்கும் முதல் குற்றச்சாட்டே ஓய்வில்லாமல் வேலைசெய்ய வேண்டி இருக்கிறது என்பதுதான். சமையல் மற்றும் வீட்டை சுத்தம் செய்வதிலேயே நேரம் கழிவதாக கூறுகிறார்கள். இதற்கு ஒரே தீர்வு வேலைகளை பகிர்ந்துகொள்வதுதான்.
ஆண்கள் செய்து கொடுக்கும் வேலைகள் அவர்களுக்கு நெருக் கடியை குறைப்பதாக இருக்க வேண்டும். எப்படியெல்லாம் வேலை சுமையை குறைக்கலாம் என்று தம்பதியர் இரு வரும் திட்டமிட வேண்டும். பெண்களும் குடும்பத்தினரிடம் நிலைமையை புரிய வைக்க வேண்டும். வீட்டு வேலைகளை செய்வதும் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதை குடும்பத்தினர் அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்” என்கிறார்.