என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    வீட்டுப் பூஜையறையில் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும் படம் வைக்கக் கூடாது என்று சிலர் கூறுவார்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கி கையில் ஏந்தி புறப்படத் தயாராக நின்று கொண்டிருக்கும் படத்தை வைத்துக் கொள்ளலாம், படுத்த வாக்கில் பறந்து கொண்டிருக்கும் படத்தை வைக்கக்கூடாது என்று சொல்வோரும் உண்டு.

    இன்னும் சிலர் யுத்தத்தில் லட்சுமணன் மூர்ச்சை அடைந்ததால்தானே சஞ்சீவி மூலிகை தேவைப்பட்டது; இந்த படத்தை வைத்துக்கொண்டால் நம் வீட்டிலும் இதுபோன்ற விபரீதமான நிகழ்வுகள் நடக்கக்கூடும் என்று தேவையில்லாத பீதியைக் கிளப்பிவிடுவர். இவை அனைத்தும் முற்றிலும் தவறான கருத்துகள்.

    ஆஞ்சநேயர் இலங்கைக்குக் கொண்டு சென்ற அந்த அபூர்வ மூலிகைகள் நிறைந்த மலையினால்தான் இலங்கை செழிப்பான நாடாக விளங்குகிறது. புராண காலம் தொட்டு, சோழ, பாண்டியர்களின் வரலாற்று காலம், ஏன் தற்போதைய காலம் வரை சதா யுத்த பூமியாகவே இருந்து பேரழிவு களைச் சந்தித்து வந்த போதிலும் இயற்கை அழகு மாறாமல் பூத்துக் குலுங்குவதற்குக் காரணம் அந்த மலைதான் என்ற நம்பிக்கை இன்றும் உள்ளது.

    இயற்கையாக பூமிக்கு அடியில் கிடைக்கும் ரத்தினங்கள் நிறைந்த நாடாக இலங்கை விளங்குகிறது. இலங்கையின் பொருளாதார வளர்ச்சியே இந்த இயற்கை வளங்களை அடிப்படையாகக் கொண்டது தான். இதற்குக் காரணம் ஆஞ்சநேயர் அங்குகொண்டு சென்ற அந்த மலைதான் என்று உபன்யாசகர்கள் விளக்குவார்கள். அவ்வாறு இருக்க அந்தப் படத்தை வீட்டில் வைத்து பூஜிப்பதில் என்ன தவறு?

    இது எல்லாவற்றையும் விட இறை சக்திகளை அவரவருக்கு பிடித்த உருவத்தில் வணங்குகிறோம் என்பதே இங்கு நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று. ஒரு சிலருக்கு உக்கிரமான மகிஷாசுரமர்த்தினியைப் பிடிக்கும், இன்னும் சிலருக்கு சாந்த ஸ்வரூபிணியாக காட்சியளிக்கும் காமாக்ஷியைப் பிடிக்கும். அது அவரவர் மனதைப் பொறுத்தது. இறைசக்திகளின் எந்த உருவத்தையும் வைத்து பூஜை செய்யலாம், ஆனால், செய்கின்ற பூஜையில் மனம் ஒன்றி இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
    ஈரத்துணியுடன் இறைவனுக்கு பூஜை செய்யலாமா? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. அதற்கான விடையை இங்கே அறிந்து கொள்ளலாம்.
    இந்து ஆன்மிக வழிபாட்டில் சில விதிமுறைகள் உள்ளன. அவற்றை முறையாக கடைபிடித்தால் மட்டுமே நாம் செய்யும் வழிபாடுகளுக்கு பலன் கிடைக்கும். அந்த வகையில் ஈரத்துணியுடன் இறைவனுக்கு பூஜை செய்யலாமா? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. அதற்கான விடையை இங்கே அறிந்து கொள்ளலாம்.

    ஈரம் தோய்ந்த ஆடைகளுடன் வழிபாடு என்பது பெற்றோருக்குச் செய்யும் ஈமச்சடங்கிற்கு மட்டுமே உரித்தானது. இறை வழிபாட்டிற்கு உகந்தது அல்ல. மடி, ஆசாரம் பார்ப்பவர்கள் கூட ஈரத்துணிகளை நன்றாக பிழிந்து சற்று உலர்த்திய பின்னரே அணிந்துகொள்ள வேண்டும். உலர்வதற்கு தாமதம் ஆகும் பட்சத்தில் துணிகளை நன்றாக பிழிந்து ஏழு முறை நன்றாக உதறிய பின்னர் உடுத்திக் கொண்டு வழிபாடு செய்யலாம் என்கிறது தர்மசாஸ்திரம்.

    ஆனால், இதிலும் விதிவிலக்கு என்பது உண்டு. அங்கப்பிரதட்சிணம் செய்யும்போதும், அம்பாளுக்கு வேண்டிக்கொண்டு கரகம், பூச்சட்டி ஆகியவற்றை எடுக்கும்போதும் மேலே மஞ்சள்நீர் ஊற்றிக் கொண்டு ஈரம் சொட்ட சொட்ட வழிபாடு செய்வார்கள். மற்றபடி சாதாரண சமயங்களில் ஈரத்துணியுடன் வழிபாடு செய்வது என்பது உகந்ததல்ல.
    ருத்ராட்சம் அணிந்தால் மறுவிறவி இல்லை மஹா பேரானந்தமே. இறைவனுக்கு ஒருவர் மீது கருணை இருந்தால் மட்டுமே ருத்ராட்சம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும்.
    இன்று பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஆண் - பெண் இருபாலரும் கண்டிப்பாக ருத்ராட்சம் அணிய வேண்டும். ஏனெனில் நம்மைப் படைத்ததே பாவங்களைப் போக்கி சிவபெருமானின் திருவடியை அடைவதற்காகவே நம் வாழ்க்கையில் வரும் கஷ்டம், வேதனை, துன்பம், வலி இவைகளிலிருந்து விடுபடுவதற்காகவே ருத்ராட்சம் அணிய வேண்டும்.

    ருத்ராட்சம் அணிந்தால் மறுவிறவி இல்லை மஹா பேரானந்தமே. ருத்ராட்சம் அணிவதை சிலபேர் நீ அணியக்கூடாது சுத்தமானவர்கள் தான் அணிய வேண்டும் என்று சொல்வார்கள், அதைப் பொருட்படுத்தக் கூடாது. இறைவனுக்கு ஒருவர் மீது கருணை இருந்தால் மட்டுமே ருத்ராட்சம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும்.

    ருத்ராட்சம் முழுக்க முழுக்க சிவபெருமானுடையது. சிவபெருமான் கண்களை விழித்து 1000 வருடங்கள் கடும் தவம் இருந்து அவர் கண்களில் இருந்து தோன்றியதே ருத்ராட்சம். ருத்ராட்சத்தை அணிந்து கொண்டவர்கள் சிவ குடும்பத்தில் ஒருவராவார். சிவபெருமான் தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கஷ்டத்தையும், துன்பத்தையும் கொடுப்பாரா?. அதனால் யார் என்ன சொன்னாலும் கண்டிப்பாக ருத்ராட்சத்தை அணியவேண்டும்.

    ருத்ராட்சத்தை அணிந்த பின் எந்த சூழ்நிலையிலுமே கழற்றவே கூடாது. நீங்கள் இப்பொழுது எப்படி வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கின்றீர்களோ அதேபோல் வாழ்ந்தால் போதும் இதில் எவ்வித மாற்றத்தையும் செய்யத் தேவையில்லை. நெற்றியில் திருநீறு அணிந்து ஓம் நமசிவாய சொல்லி வந்தாலே போதுமானது.
    நாம் எந்த ஒரு செயலை செய்தாலும் அவை வெற்றிகரமாக முடிய வேண்டும் என்பதற்காக முதலில் வணங்கப்படும் முழுமுதற் கடவுள் விநாயகப்பெருமான். அவருக்கு உகந்த சிறப்பு வாய்ந்த கோவில்களை பற்றிய குறிப்பை இங்கே பார்க்கலாம்.
    முக்குறுணி விநாயகர் - மதுரை மீனாட்சி கோவில்

    குடவரைப் பிள்ளையார் - திருப்பரங்குன்றம் கோவில்

    கரும்பாயிரம் பிள்ளையார் - கும்பகோணம்

    அழகிய விநாயகர் - திருவாவடுதுறை

    ஆண்ட பிள்ளையார் - திருநறையூர் சித்தீச்சுரம்

    ஆதி விநாயகன் - திருவையாறு

    ஆழத்துப்பிள்ளையார் - திருமுதுகுன்றம்

    உச்சிப் பிள்ளையார் - திருச்சிராப்பள்ளி

    ஓலமிட்ட விநாயகர் - திருவையாறு

    கங்கைக் கணபதி - குடந்தை கீழ்க்கோட்டம்

    கடுக்காய்ப் பிள்ளையார் - திருக்காறாயில்

    கருக்கடி விநாயகர் - திருக்கச்சூர்

    கள்ள வாரணப் பிள்ளையார் - திருக்கடவூர்

    கற்பக விநாயகர் - பிள்ளையார்பட்டி

    கூப்பிடு பிள்ளையார் - திருமுருகன் பூண்டி

    சிந்தாமணி கணபதி - திருமறைக்காடு

    சுந்தர கணபதி - கீழ்வேளூர், திருமழபாடி

    சூதவனப் பிள்ளையார் - திருவுச்சாத்தனம்

    செவிசாய்த்த விநாயகர் - அன்பிலாந்துறை

    சொர்ண விநாயகர் - திருநள்ளாறு

    நாகாபரண விநாயகர் - நாகைக் காரோணம்

    நீர்த்தன விநாயகர் - இன்னம்பர்

    படிக்காசு விநாயகர் - திருவீழிமிழலை

    மணக்குள விநாயகர் - புதுச்சேரி

    மாணிக்க விநாயகர் - திருச்சி

    படித்துறை விநாயகர் - திருவிடை மருதூர்

    பிரளயங்காத்த பிள்ளையார் - திருப்புறம்பியம்

    பொய்யா விநாயகர் - திருமாகறல்

    பொல்லாப் பிள்ளையார் - திருநாரையூர்

    மாற்றுரைத்த பிள்ளையார் - திருவாரூர்

    வரசித்தி விநாயகர் - திருவல்லம்

    வலம்புரி விநாயகர் - திருக்களர்
    மண்ணுலகையும், தேவலோகத்தையும் ஆட்கொண்ட சூரர்களை அழித்து, தேவர்களை காக்கும் பொருட்டு சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து 6 தீப்பிழம்பாய் மாறி குழந்தைகளாக பிறந்தார் முருகன்.
    மண்ணுலகையும், தேவலோகத்தையும் ஆட்கொண்ட சூரர்களை அழித்து, தேவர்களை காக்கும் பொருட்டு சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து 6 தீப்பிழம்பாய் மாறி குழந்தைகளாக பிறந்தார் முருகன். பின்னர் அந்த ஆறு குழந்தைகளையும் சரவண பொய்கையில் கார்த்திகை பெண்கள் வளர்த்து வந்தனர். ஒருமுறை சரவணப்பபொய்கையில் வளரும் குழந்தையை கொண்டு வருமாறு சிவன் வேண்டினார். அதையடுத்து ஆறு குழந்தைகளும் கொண்டு வரப்பட்டது. ஆறு குழந்தைகளையும் பார்வதிதேவியார் இரண்டு கைகளால் தழுவி எடுத்தார். ஆறு குழந்தைகள் இணைந்து ஒரு குழந்தை ஆயிற்று. அதனால் கந்தன் என்ற பெயர் அக்குழந்தைக்கு உண்டாயிற்று. பின்னர் பார்வதி தேவியார் முருகனுக்கு பாலூட்டினார். பின்னர் திருமால், தேவர்கள், கார்த்திகை பெண்கள் என அனைவரும் சிவன், முருகப்பெருமானை வணங்கினர்.

    பராசரர் என்ற முனிவரின் சாபத்துக்கு அவரின் குழந்தைகள் ஆளாயினர். அதனால் அவர்கள் அனைவரும் மீன்களாய் மாறி சரவணப்பொய்கையில் வாழ்ந்தனர். பார்வதி தேவியார் முருகனுக்கு ஊட்டிய பால் சரவணப்பொய்கையில் கலந்ததால், மீன் உருவில் இருந்த பராசரரின் குழந்தைகள் சாபம் நீங்கி பழைய உருவம் பெற்றனர். பின்னர் அவர்கள் சிவபெருமானையும், முருகனையும் வணங்கினர். அதன் பின்னர் ஆறுமுக குழந்தை திருவிளையாடல் செய்ய தொடங்கியது.

    அவரது திருவடி தண்டை, சிலம்பு, கழல், சதங்கைகளை தாங்கின. அரையிலே கிண்கிணி, காதுகளில் குண்டலங்கள், திருமார்பில் மதாணி, நெற்றியில் வீரபட்டிகை, ஆகிய அணிகல கோலத்துடன் முருகன் உலாவினார். உலாவரும் முருகப்பெருமான் குழந்தையாய் இருப்பார். ஆனால் அந்தணராய், முனிவராய், வீரராய் திரிவார்.

    முருகப்பெருமானின் திருவிளையாடல்கள் அளவற்றன. மலைகளை சேர்த்தார். அவற்றை நிலை தடுமாற நிலத்தி்ல் வைத்தார். கடல்களை ஒன்றாக்கினார். மேருவை பாதாளத்தில் கொண்டு போய் சேர்த்தார். கங்கையை அடைத்தார். சூரியனை சந்திர மண்டலத்துக்கும், சந்திரனை சூரிய மண்டலத்துக்கும் எறிந்தார். இவ்வாறு எண்ணற்ற திருவிளையாடல்களை ஆறுமுகன் அருளினார். இவற்றை எல்லாம் அசுரர்கள் கண்டனர். ஆனால் முருகனின் திருவுருவை காணவில்லை. தாம் அழிய போவது உறுதி என்ற எண்ணம் அசுரர்களுக்கு வந்துவிட்டது. பின்னாளில் அசுரர்களை அழித்து தேவர்களை காத்து மயிலில் வலம் வந்தார். இவரின் வாகனமான மயில் அகம் என்ற வாகனத்தை இறை சிந்தனைக்காக பயன்படுத்தினால் முக்தி கிட்டும் என்பது ஆன்மிக பெரியோர்களின் நம்பிக்கை.
    பசுவை நாம் ‘கோமாதா’ என்று அழைக்கின்றோம். விரதம் இருந்து கோமாதா வழிபாட்டை மேற்கொண்டால் கோடி புண்ணியம் கிடைக்கும்.
    கோவில்கள் தோறும் காலையில் ‘கோ பூஜை’ செய்வது வழக்கம். பசுவை நாம் ‘கோமாதா’ என்று அழைக்கின்றோம். அதுமட்டுமல்ல அதுதரக்கூடிய மூன்றுவிதப் பொருட்களான பால், சாணம், கோமியம் ஆகியவை நமக்கு ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய பொருளாக அமைகின்றன என்று மருத்துவம் கூறுகிறது. எனவே, வீடுகளில் முடிந்தவரை பசு வளர்ப்பது நல்லது.

    பால், நெய், தயிர், கோமியம், சாணம் ஆகிய ஐந்தில் இருந்தும் தயாரிக்கப்படும் ‘பஞ்சகவ்யம்’ சாப்பிட்டால், தொடக்கூடாத பொருட்களை தொட்டதால் விளைந்த பாவங்கள் விலகுகின்றன.

    எனவே, பசுவிற்கு சேவை செய்தால் பலவிதமான நன்மைகளைப் பெறலாம். பசுவின் உடலில் பலவிதமான தெய்வங்கள் வசிப்பதாக ஐதீகம். காமதேனு வழிபாடு, பொங்கலின் மறுநாள் மாட்டுப் பொங்கல் வைத்து காளைக்கு நன்றி செலுத்துதல் போன்றவை எல்லாம் தமிழர்களின் தலைசிறந்த பண்பாடுகளாக இருக்கிறது. எனவே, விரதம் இருந்து கோமாதா வழிபாட்டை மேற்கொண்டால் கோடி புண்ணியம் கிடைக்கும்.
    தமிழ்க் கடவுள் முருகன் என்று அனைவராலும் போற்றப்படுபவர், முருகப்பெருமான். அவர் ‘குறிஞ்சி நிலக் கடவுள்’ என்றும், செந்நிற மேனியன், சேவற்கொடியோன், சூரியனுக்கு ஒப்பானவன் என்றும் பேசப்படுகின்றார்.
    *செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன், ‘ஸ்ரீஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம்’ ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.

    * முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வஜ்ஜிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறுகரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.

    * தீப்பொறியாக உருவான முருகப்பெருமான், முதலில் கங்கையால் தாங்கப்பட்டார். இதனால் ‘காங்கேயன்’ என்று பெயர் வந்தது. சரவணப் பொய்கையில் உருப்பெற்றார். எனவே ‘சரவண பவன்’ ஆனார். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் ‘கார்த்திகேயன்’ என்றும், பார்வதிதேவியால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால் ‘கந்தன்’ என்றும் பெயர் கொண்டார்.

    * தமிழகத்தில் முருகப்பெருமானுக்கு, குடவரைக் கோவில்கள் உள்ள இடங்கள் சில இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானது கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம் ஆகியவை.

    * தமிழ்க் கடவுள் முருகன் என்று அனைவராலும் போற்றப்படுபவர், முருகப்பெருமான். அவர் ‘குறிஞ்சி நிலக் கடவுள்’ என்றும், செந்நிற மேனியன், சேவற்கொடியோன், சூரியனுக்கு ஒப்பானவன் என்றும் பேசப்படுகின்றார்.

    * முருகனுக்கு உருவமில்லாத கோவில், விருத்தாசலத்தில் உள்ளது. இத்தல முருகனின் பெயர் ‘கொளஞ்சியப்பர்.’ அருவுருவ நிலை பிரார்த்தனை தலம் என்று இதனைக் கூறுவார்கள்.

    * முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப் பதிலாக படைப்புத் தொழிலையும் செய்திருக்கிறார். இதனை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலை கொண்ட முருகப்பெருமான் கோவில் இருக்கிறது.

    * முருகனுக்கு ‘விசாகன்’ என்றும் ஒரு பெயர் உண்டு. ‘விசாகன்’ என்றால் ‘மயிலில் சஞ்சரிப்பவன்’ என்பது பொருளாகும். விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால், இப்பெயர் வந்ததாகவும் சொல்வார்கள்.
    ஆலயங்களில் இறைவனை வணங்கிய பிறகு திருநீற்று பிரசாதத்தைப் பெற்று மூன்று விரல்களால் பட்டையாக பூசிக்கொள்வதை அனைவரும் பார்த்திருப்போம். இப்படி மூன்று பட்டைகளை இட்டுக் கொள்வதற்கு ஒரு காரணம் உள்ளதாக சொல்கிறார்கள்.
    ஆலயங்களுக்குச் சென்று வழிபடும் பக்தர்கள் சிலர், இறைவனை வணங்கிய பிறகு திருநீற்று பிரசாதத்தைப் பெற்று மூன்று விரல்களால் பட்டையாக பூசிக்கொள்வதை அனைவரும் பார்த்திருப்போம். அல்லது நாமே கூட அதைச் செய்திருப்போம். இப்படி மூன்று பட்டைகளை இட்டுக் கொள்வதற்கு ஒரு காரணம் உள்ளதாக சொல்கிறார்கள்.

    மூன்று பட்டையாக திருநீற்றை பூசுவதற்கு பயன்படுத்தும் மூன்று விரல்களும் ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தின் வடிவமாக சொல்லப்படுகிறது. இதில் ஆட்காட்டி விரலால் இடப்படும் கோடு ‘ரிக் வேதம்’, நடுவிரலால் இடப்படும் கோடு ‘யஜூர் வேதம்’, மோதிர விரலால் இடப்படும் கோடு ‘சாமவேதம்’ ஆகிய மூன்று வேதங்களைக் குறிக்கிறது.

    இந்த மூன்று பட்டைகளும் வேதங்களை மட்டுமின்றி இன்னும் சிலவற்றை குறிப்பதாகவும் சொல்கிறார்கள். அவற்றுள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

    * பிரம்மா, விஷ்ணு, சிவன்,

    * சிவன், சக்தி, ஸ்கந்தர்

    * அறம், பொருள், இன்பம்

    * குரு, லிங்கம், சங்கமம்

    * படைத்தல், காத்தல், அழித்தல்.
    பிளாஞ்சேரி தலத்தில் ஸ்ரீசரப சூலினிக்குக் காவலாக எட்டு பைரவர்கள் தனித் தனிச் சன்னதிகளில் காட்சி தருகிறார்கள். இவர்களை வழிபட்டால், எட்டுவிதமான பேறுகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
    சிவபெருமானின் திருவடிவங்களில் ஒன்று ஸ்ரீசரபமூர்த்தி வடிவம். இரண்யகசிபுவை வதைத்த நரசிம்ம மூர்த்தியின் ஆக்ரோஷத்தைத் தணிக்க, சிவபெருமான் எடுத்த திருவடிவே ஸ்ரீசரபமூர்த்தி வடிவம். இந்த மூர்த்தியின் வலப்புற இறக்கையில் இருந்து தோன்றியவளே ஸ்ரீசரப சூலினி.

    பிளாஞ்சேரி தலத்தில் ஸ்ரீசரப சூலினிக்குக் காவலாக எட்டு பைரவர்கள் தனித் தனிச் சன்னதிகளில் காட்சி தருகிறார்கள். ``சரபசூலினிக்கு மட்டுமல்ல, இங்கு வந்து வழிபட்டுச் செல்லும் பக்தர்களுக்கும் காவலாக இருந்து அருள்பாலிக்கிறார்கள் இந்த அஷ்ட பைரவர்கள்’’ என்று சிலிர்ப்போடு பகிர்ந்துகொள்கிறார்கள் பக்தர்கள். இவர்கள் எண்மரையும் வழிபட்டால், எட்டுவிதமான பேறுகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    அசிதாங்க பைரவர்: அன்ன வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் இவர், நான்கு திருக்கரங்களோடு அருள்கிறார். ஜாதகத்தில் சந்திர திசை, சந்திர புக்தி நடைபெறும் அன்பர்களும் ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரக்காரர்களும் வழிபடவேண்டிய பைரவர் இவர். இவரை வழிபட்டால் கல்வி, கலை, செல்வம், பேச்சாற்றல் ஆகியவற்றில் சிறந்து விளங்கலாம். கலைத் துறையினர் இவரை வழிபட்டால் மகத்தான வெற்றிகளைப் பெறலாம்.

    குரு பைரவர்: ரிஷப வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். சூரிய திசை, சூரிய புக்தி நடைபெறும் ஜாதகர்களும் கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபடவேண்டிய பைரவர் இவர். பித்ரு தோஷங்கள் நீங்கவும், திருமணத் தடைகள் விலகவும், கணவன்- மனைவி இடையே பிரச்சினைகள் நீங்கிக் குடும்ப ஒற்றுமை ஏற்படவும் இவரை வழிபட வேண்டும்.

    சண்ட பைரவர்: மயில் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். செவ்வாய் திசை, செவ்வாய் புத்தி நடைபெறும் ஜாதகர்களும் அவிட்டம், மிருகசீரிடம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபடவேண்டிய பைரவர். காரியத் தடைகள் அகலவும், துன்பங்கள் நீங்கவும், ரத்தம் சம்பந்தமான வியாதிகளில் இருந்து விடுபடவும் இவரை வழிபடுவது, விசேஷம்.

    குரோதன பைரவர்: கருட வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். புதன் திசை, புதன் புக்தி நடைபெறும் ஜாதகர்களும் ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய பைரவர். கடன்தொல்லை தீரவும், செல்வம் பெருகவும், தோல் வியாதிகள் விலகவும் இவரை வழிபடவேண்டும்.

    உன்மத்த பைரவர்: குதிரை வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். கேது திசை, கேது புக்தி நடைபெறும் ஜாதகர்களும் அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய பைரவர். சகலவிதமான திருஷ்டி தோஷங்கள் நீங்கவும், ஏவல், பில்லி-சூன்யம் போன்ற தீவினைகள் விலகவும், நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறவும் இவரை வழிபடவேண்டும்.

    கபால பைரவர்: யானை வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். நான்கு திருக்கரங்களுடன் திகழ்பவர். சுக்கிர திசை, சுக்கிர புக்தி நடைபெறும் ஜாதகர்களும் பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய மூர்த்தி இவர். இவரை வழிபட்டால் ஜனவசியம், ஆட்சி-அதிகாரம், அரசியலில் உயர் பதவிகள் ஆகியவை வாய்க்கும்.

    பீஷண பைரவர்: சிம்ம வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். நான்கு திருக்கரங்களோடு அருள்கிறார். குரு திசை, குரு புக்தி நடைபெறும் ஜாதகர்களும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய பைரவர். குழந்தை பாக்கியம் கிடைக்கவும், இதயம் தொடர்பான பிணிகள், பக்கவாதம் ஆகியவை விலகவும் இவரை வழிபடவேண்டும்.

    சம்ஹார பைரவர்: நாய் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். பத்து திருக்கரங்களைக் கொண்டவர். சனி திசை-சனி புக்தி மற்றும் ராகு திசை-ராகு புத்தி நடைபெறும் ஜாதகர்களும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரக்காரர்களும் வழிபட வேண்டிய பைரவர் இவர். சத்ரு உபாதைகள் நீங்கவும், கண்டங்களிலிருந்து தப்பிக்கவும், விபத்துகளில் சிக்காதிருக்கவும், வாக்குப் பலிதம் வாய்க்கவும் இவரை வழிபட்டு பலன் பெறலாம்.
    சிவன் கோவில்களில் கடைப்பிடிக்கப்படும் ஆகம விதிப்படி, கர்ப்பக்கிரகத்தினுள் இருக்கும் மூலவருக்கும், எதிரில் இருக்கும் நந்திக்கும் இடையில் நின்று வழிபடக் கூடாது.
    சிவன் கோவில்களில் கடைப்பிடிக்கப்படும் ஆகம விதிப்படி, கர்ப்பக்கிரகத்தினுள் இருக்கும் மூலவருக்கும், எதிரில் இருக்கும் நந்திக்கும் இடையில் நின்று வழிபடக் கூடாது.

    சாஸ்திரப்படி மூலவருக்கு முன்னால் உள்ள நந்தியின் மூக்கில் இருந்து வெளியேறும் மூச்சுக் காற்றினால்தான், கர்ப்பக்கிரகத்தில் உள்ள மூலவருக்கு உயர்நிலை காற்று கிடைப்பதாக நம்பிக்கை. மூலவரின் வயிற்றுப்பகுதியில் உள்ள தொப்புள் பாகத்தை உயர்நிலையாகக் கொண்டு, அந்த இட மட்டத்தின் நேராக நந்தியின் மூக்கு அமையுமாறு கோவில்களில் நந்தி அமைக்கப்படுகிறது.

    இம்மூச்சுக்காற்று தடைபடாமல் செல்வதற்காகவே குறுக்கே போவது கூடாது என்கின்றனர். சன்னிதியைவிட்டு அகன்று நின்று வழிபட வேண்டும் என்று சொல்வதும் இதன் விளைவாக வந்தது தான்.
    செவ்வாய்க்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் அம்மனை வழிபடுவதும் துர்கையை வழிபடுவதும் மனதில் நம்பிக்கையை விதைக்கும். எதிர்மறை எண்ணங்களை விரட்டியடிக்கும்.
    செவ்வாய்க்கிழமை மாலை 3 முதல் 4.30 மணி வரை ராகுகாலம். அதேபோல், வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணி வரை ராகுகாலம். ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 முதல் 6 மணி வரை ராகுகாலம். இந்த நாட்களில்... இந்த நேரத்தில் துர்கைக்கு விளக்கேற்றி வழிபடுவது வளம் சேர்க்கும்.

    வீட்டில் ராகுகால வேளையில் விளக்கேற்றுங்கள்.

    ஓம் காத்யாயனய வித்மஹே
    கன்யாகுமாரி தீமஹி
    தந்நோ துர்கி ப்ரசோதயாத்

    எனும் துர்காதேவியின் காயத்ரி மந்திரத்தை 11 முறை ஜபித்து துர்காதேவிக்கு விளக்கேற்றி வழிபடுங்கள். துர்கா காயத்ரியை, 11 முறை 24 முறை அல்லது 54 முறை அல்லது 108 முறை ஜபிக்கலாம். துர்கைக்கு செந்நிற மலர்கள் சூட்டி வழிபடுங்கள். இதுவரை இருந்த எதிர்ப்புகளையெல்லாம் தீர்த்து வைப்பாள் துர்காதேவி.

    துர்கை என்றாலே துக்கத்தைப் போக்குபவள் என்று அர்த்தம். நம் துக்கங்களையெல்லாம் போக்கி அருளும் துர்காதேவியை சரணடைவோம்.
    இறைவனிடம் நாம் வேண்டுவதை அவரின் உதவியாளரான சண்டிகேஸ்வரர் தியானத்திலேயே கேட்டு உணர்ந்து, அவைகளை அவரவர் பாவ- புண்ணியங்களுக்கு ஏற்ப கணக்கெழுதி, இறைவனிடம் சமர்பிப்பதாக ஐதீகம்.
    சோழவள நாட்டில் வசித்து வந்த எச்சதத்தன்- பவித்திரை தம்பதியரின் மகனாகப் பிறந்தவர், விசாரசருமன். இவர் சிறுவயது முதலே சிவ பக்தியில் சிறந்து விளங்கினார். இவர் பிற்காலத்தில் பசுக்களை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று வரும் பணியைச் செய்து வந்தார். மாடுகள் அனைத்தும் மேய்ச்சலில் இருக்கும்போது, மணலில் சிவலிங்கம் செய்வார், விசாரசருமன். அதோடு அந்த லிங்கத்திற்கு, பசுக்களில் இருந்து பாலை கரந்து அபிஷேகமும் செய்வார். அவ்வாறு சிவலிங்க பூஜைக்கு பால் கரக்கும் பசுக்கள், வீட்டிற்கு வந்தும் தங்களது பாலை அதே அளவில் கொடுத்து வந்தன.

    ஒரு முறை ஊரில் உள்ள ஒருவர், விசாரசருமன் பசுக்களின் பாலைக் கரந்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதைப் பார்த்து விட்டு, எச்சதத்தனிடம் கூறினார். இதையடுத்து உண்மையை அறியும் நோக்கில், மறுநாள் மாடுகள் மேய்ச்சலுக்கு நிற்கும் இடத்திற்கு வந்தார், எச்சதத்தன். ஊர்க்காரர் சொன்னது போலவே, மணலில் சிவலிங்கம் அமைத்த விசாரசருமன், அதற்கு பசுக்களின் பாலைக் கரந்து அபிஷேகம் செய்தார். இதைக்கண்டு கோபம் அடைந்த எச்சதத்தன், தன்னுடைய மகனை ஒரு குச்சியால் அடித்து உதைத்தார். மேலும் ஆத்திரம் தீராதவராய், மணல் லிங்கத்தை காலால் மிதித்து உடைத்தார்.

    இதனால் கோபம் அடைந்த அவரது மகன் விசாரசருமன், தந்தையின் கையில் இருந்த குச்சியை பறித்து, அவரது கால்களை நோக்கி வீசினார். அது கோடரியாக மாறி, எச்சதத்தனின் காலை காயப்படுத்தியது. ஈசனின் மீது கொண்ட அதீத பக்தி காரணமாக தந்தையையே தாக்கத் துணிந்த அந்த பக்தனின் முன்பாக, பார்வதி சமேதராக பரமசிவன் தோன்றினார். எச்சதத்தனின் காயத்தை மறையும்படி செய்த இறைவன், விசாரசருமனுக்கு சிவ கணங்களை நிர்வாகம் செய்ய சண்டிகேச பதவியை வழங்கினார். அதோடு, தனக்கு சூட்டப்படும் மாலை, நைவேத்தியம் போன்றவை, சண்டிகேஸ்வரருக்கு கிடைக்கும் என்றும் அருள்பாலித்தார். சிவ பக்தியால் செய்வதற்கரிய செயல்களைச் செய்த நாயனார்கள் பட்டியலிலும் இவர் இடம்பிடித்தார்.

    சிவன் கோவிலுக்கு வருபவர்கள் சண்டிகேஸ்வரை வணங்காமல் சென்றால் அவர்கள் ஆலயத்துக்கு வந்த பலன் கிடைக்காது என்பது நம்பிக்கை. சண்டிகேஸ்வரர் சிவ தியான நிலையில் இருப்பவர். இவர் முன் பலர் கை தட்டி வணங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் அவ்வாறு செய்யக்கூடாது. அவருடைய தியானத்திற்கு இடையூறு இல்லாத வகையில் அமைதியாக வழிபாடு செய்ய வேண்டும்.

    இறைவனிடம் நாம் வேண்டுவதை அவரின் உதவியாளரான சண்டிகேஸ்வரர் தியானத்திலேயே கேட்டு உணர்ந்து, அவைகளை அவரவர் பாவ- புண்ணியங்களுக்கு ஏற்ப கணக்கெழுதி, இறைவனிடம் சமர்பிப்பதாக ஐதீகம். ஆகவே தான் சிவன் கோவில் சென்றால் இவரைப் பார்க்காமல் செல்லக்கூடாது என்று கூறுகிறார்கள்.

    யோக நிலையில் உள்ள இவரை வணங்கினால் நல்ல பேச்சுத் திறனுடன், நினைவாற்றலும் பெருகி அறிவு வளரும். இவரை நம்பிக்கையுடன் வணங்கினால் தொலைந்து போன பொருட்களும் நமக்குக் கிடைக்கும். இவருக்கு உரிய திதிகள் பிரதமை மற்றும் நவமி ஆகும். புதன்கிழமை இவரை வணங்கிட ஏற்ற நாள். சிவபெருமானின் பிரதிநிதியான இவருக்கு வில்வ இலை கொண்டு மாலைகள் சூட்டி வழிபட்டால் வாழ்வில் அனைத்து வளங்களும் பெறலாம்.
    ×