
பராசரர் என்ற முனிவரின் சாபத்துக்கு அவரின் குழந்தைகள் ஆளாயினர். அதனால் அவர்கள் அனைவரும் மீன்களாய் மாறி சரவணப்பொய்கையில் வாழ்ந்தனர். பார்வதி தேவியார் முருகனுக்கு ஊட்டிய பால் சரவணப்பொய்கையில் கலந்ததால், மீன் உருவில் இருந்த பராசரரின் குழந்தைகள் சாபம் நீங்கி பழைய உருவம் பெற்றனர். பின்னர் அவர்கள் சிவபெருமானையும், முருகனையும் வணங்கினர். அதன் பின்னர் ஆறுமுக குழந்தை திருவிளையாடல் செய்ய தொடங்கியது.
அவரது திருவடி தண்டை, சிலம்பு, கழல், சதங்கைகளை தாங்கின. அரையிலே கிண்கிணி, காதுகளில் குண்டலங்கள், திருமார்பில் மதாணி, நெற்றியில் வீரபட்டிகை, ஆகிய அணிகல கோலத்துடன் முருகன் உலாவினார். உலாவரும் முருகப்பெருமான் குழந்தையாய் இருப்பார். ஆனால் அந்தணராய், முனிவராய், வீரராய் திரிவார்.
முருகப்பெருமானின் திருவிளையாடல்கள் அளவற்றன. மலைகளை சேர்த்தார். அவற்றை நிலை தடுமாற நிலத்தி்ல் வைத்தார். கடல்களை ஒன்றாக்கினார். மேருவை பாதாளத்தில் கொண்டு போய் சேர்த்தார். கங்கையை அடைத்தார். சூரியனை சந்திர மண்டலத்துக்கும், சந்திரனை சூரிய மண்டலத்துக்கும் எறிந்தார். இவ்வாறு எண்ணற்ற திருவிளையாடல்களை ஆறுமுகன் அருளினார். இவற்றை எல்லாம் அசுரர்கள் கண்டனர். ஆனால் முருகனின் திருவுருவை காணவில்லை. தாம் அழிய போவது உறுதி என்ற எண்ணம் அசுரர்களுக்கு வந்துவிட்டது. பின்னாளில் அசுரர்களை அழித்து தேவர்களை காத்து மயிலில் வலம் வந்தார். இவரின் வாகனமான மயில் அகம் என்ற வாகனத்தை இறை சிந்தனைக்காக பயன்படுத்தினால் முக்தி கிட்டும் என்பது ஆன்மிக பெரியோர்களின் நம்பிக்கை.