என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    கொரோனா பெருந்தொற்று காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு 9-ந்தேதி வரை மலை ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
    மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் உள்ள சாப்டூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு 9-ந்தேதி வரை கொரோனா பெருந்தொற்று காரணமாக மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மலை ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், ஆடி அமாவாசை அன்று மதுரை, விருதுநகர், தேனி மாவட்ட பக்தர்கள் யாரும் சாமி கும்பிட மலைமீது செல்லாமல் இருக்க அரசுத்துறையினர் குழு அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பேரையூர் தாலுகாவில் உள்ள வாழைத்தோப்பு பகுதி, தாணிப்பாறை நுழைவுவாயில், மலைபாதையில் உள்ள சின்ன பசுக்கடை, சங்கிலிப்பாறை, மற்றும் மலைமீது உள்ள சுந்தரமகாலிங்கம் கோவில், சந்தன மகாலிங்கம் கோவில் ஆகிய பகுதிகளில் பேரையூர் உட்கோட்டத்தில் போலீசார், சாப்டூர் வனத்துறையினர் மற்றும் பேரையூர் தாலுகா வருவாய் துறையினர் ஆகியோர் கொண்ட குழுவினர் பக்தர்கள் யாரும் செல்லாதவாறு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே கொரோனா பரவலையொட்டி சதுரகிரி மலை பகுதிக்கு பக்தர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று மாவட்ட காவல்துறை கேட்டு கொண்டு உள்ளது.
    ஆடி மாதத்தில் வருகின்ற ஆடி தேய்பிறை பிரதோஷ தினத்தில் சிவபெருமானை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்
    பிறப்பு, இறப்பு வாழ்க்கை சுழற்சியை அறுத்து, வீடுபேறு அளிக்கும் தெய்வமாக சிவபெருமான் இருக்கிறார். அவரை வழிபடுவதற்குரிய ஒரு அற்புத தினம் தான் பிரதோஷம். ஆடி மாதத்தில் வருகின்ற ஆடி தேய்பிறை பிரதோஷ தினத்தில் சிவபெருமானை எவ்வாறு வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்

    ஆடி மாத தேய்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு சிவனை வணங்கி, உணவேதும் உண்ணாமல் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம். ஆடி தேய்பிறை பிரதோஷ தினமான இன்று பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து வணங்க வேண்டும்.

    பிறகு நந்தி தேவர் மற்றும் சிவப்பெருமானின் அபிஷேகத்திற்கு பால், பன்னீர், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை தானம் தருவது சிறந்தது. மேலும் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சாற்றி, வெல்லம் கலந்த அரிசியை நந்தி பகவானுக்கு நைவேத்தியமாக வைக்க வேண்டும். பிரதோஷ வேளையில் பூஜை செய்து நந்தி தேவர் மற்றும் சிவபெருமான், பார்வதி தேவியை வணங்க வேண்டும். எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து வெள்ளை நிற பசுவிடமிருந்து கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, மல்லிகை பூக்கள் சாற்றி வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும். .

    ஆடி தேய்பிறை பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், அனைத்து விதமான தோஷங்களும் நீங்குகிறது. சித்த பிரம்மை, மன நல குறைபாடுகள் போன்றவை குணமாகும். வேலை கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும். வீட்டில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும்.
    வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில் மாத பூச ஜோதி தரிசனத்தை வள்ளலார் தெய்வ நிலைய யூடியூப் சேனலில் நேரலையில் காணலாம் என கூறப்பட்டுள்ளது.
    வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை உள்ளது. இந்த சபையில் மாதந்தோறும் பூச நட்சத்திரத்தையொட்டி ஜோதி தரிசனம் நடைபெறும். அதன்படி ஆடி மாதத்திற்கான ஜோதி தரிசனம் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. ஆனால் இந்த ஜோதி தரிசனத்தை காண்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து வள்ளலார் தெய்வநிலைய செயல் அலுவலர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசாணை மற்றும் கடலூர் மாவட்ட கலெக்டர் அறிவுரையின்படியும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டும், பக்தர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி, 7-ந்தேதி(அதாவது நாளை) நடைபெறும், மாத பூச ஜோதி தரிசனத்தின்போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை, மாத பூச ஜோதி தரிசனத்தை இரவு 7.45 முதல் 8.45 மணிவரை வள்ளலார் தெய்வ நிலைய யூடியூப் சேனல் https://www.youtube.com/channel/UCEiJozGGHgOZFISkQAOB93A என்ற தளத்தில் நேரலையில் காணலாம் என கூறப்பட்டுள்ளது.
    இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் வருகிற 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா நோய்த்தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டும், தஞ்சை மாவட்டத்தில் கொரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பேரிடர் மேலாண்மைச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் வருகிற 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் வருகிற 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்கள் திதி கொடுத்து வழிபடும் பொருட்டு மாவட்டத்தின் ஆற்றுப்பகுதிகளில் பொதுமக்கள் அதிகமாக கூடுவதனை தவிர்க்கும் பொருட்டும், ஆற்றுப் படித்துறை உள்ளிட்ட ஆற்றினை ஒட்டியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் மற்றும் அனைத்து ஆலயங்களிலும் பொதுமக்கள் கூடுவது முற்றிலும் தடை செய்யப்படுகிறது.

    மேலும், ஆடி அமாவாசையை முன்னிட்டு மல்லிப்பட்டினம் ராமர் கோவில், திருவையாறு, ஐயாறப்பர் கோவில் மற்றும் காவிரி படித்துறை மற்றும் கும்பகோணம், காவிரி ஆறு, பகவதி படித்துறை ஆகிய இடங்களில் பொதுமக்கள் கூடுவதனை முற்றிலும் தவிர்த்து மாவட்ட நிர்வாகத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேலும், தடைகளை மீறும் நபர்கள் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அனைத்து தரப்பினரும் உரிய கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி, கொரோனா பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ஆலய திருவிழாவையொட்டி, பக்தர்கள் அதிகளவில் வரக்கூடும் என்பதால், பேராலயத்துக்கு பக்தர்கள் வருவதை தடுக்கும் வகையில், அனைத்து சாலைகளிலும் போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற தூய பனிமய மாதா பேராலய 439-வது பெருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா ஊரடங்கு காரணமாக, தொடர்ந்து 2-வது ஆண்டாகவும் பக்தர்கள் பங்கேற்பின்றி விழா எளிமையாக நடைபெற்றது.

    விழாவின் சிகர நாளான நேற்று பனிமயமாதா அன்னையின் பெருவிழா கொண்டாடப்பட்டது. விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் யூ-டியுப் இணையதளத்திலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அவற்றை பக்தர்கள் தங்களது வீடுகளில் இருந்தே கண்டு வழிபட்டனர்.

    வழக்கமாக 10-ம் திருவிழா இரவு 9 மணிக்கு பேராலய வளாகத்திலும், 11-ம் திருவிழா அன்று இரவு 7 மணிக்கு நகர வீதிகளிலும் அன்னையின் திருவுருவ சப்பர பவனி நடைபெறும். ஆனால், 2-வது ஆண்டாக, இந்த ஆண்டும் கொரோனா ஊரடங்கு காரணமாக சப்பர பவனி ரத்து செய்யப்பட்டது. அன்னையின் சப்பரம் அலங்கரிக்கப்பட்டு பேராலயத்தின் உள்ளேயே வைக்கப்பட்டு இருந்தது.

    ஆலய திருவிழாவையொட்டி, பக்தர்கள் அதிகளவில் வரக்கூடும் என்பதால், பேராலயத்துக்கு பக்தர்கள் வருவதை தடுக்கும் வகையில், அனைத்து சாலைகளிலும் போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் தலைமையில், சுமார் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நேற்று தொடங்கியது. கொடியேற்றத்தை காண முடியாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை பெருவிழா, ஆடி முளைக்கொட்டு விழா, ஆவணி மூலத்திருவிழா, ஐப்பசி நவராத்திரி விழா போன்றவை சிறப்பு வாய்ந்தவை. அதிலும், சித்திரை திருவிழாவில் மீனாட்சிக்கும், ஆவணி மூல திருவிழாவில் சுவாமிக்கும் பட்டாபிஷேகம் நடைபெறும். மேலும், ஆவணி திருவிழாவில் சிவபெருமான் நிகழ்த்திய 10 திருவிளையாடல் லீலைகள் நடைபெறும். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆவணிமூலத்திருவிழா நேற்று காலை 10.55 மணிக்கு மேல் மேள-தாளங்கள் முழங்க, சுவாமி சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையொட்டி மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் மற்றும் பிரியாவிடை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

    இந்த நிகழ்ச்சியில் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் கலந்து கொண்டனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் இன்றி கொடியேற்றம் நடந்தது. இதனால் ஏராளமானோர் ஏமாற்றம் அடைந்தனர். வருகிற 11-ந் தேதி கருங்குருவிக்கு உபதேசம், 12-ந் தேதி நாரைக்கு முக்தி கொடுத்தல், 13-ந் தேதி மாணிக்கம் விற்ற லீலை, 14-ந் தேதி தருமிக்கு பொற்கிழி அளித்தல், 15-ந் தேதி உலவவாக்கோட்டை அருளியது, 16-ந் தேதி பாணனுக்கு அங்கம் வெட்டுதல், இரவு திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தாபித வரலாறு லீலை உள்ளிட்டவை நடைபெறுகின்றன.

    இதுபோல், 17-ந் தேதி காலை வளையல் விற்ற லீலையும், இரவு 7.35 மணிக்கு மேல் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சியும் நடக்கிறது. 18-ந் தேதி நரியை பரியாக்கிய லீலையும், 19-ந் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை, 20-ந் தேதி விறகு விற்ற லீலை அலங்காரம் நடக்க உள்ளன. திருவிழாக்கள் மற்றும் திருவிளையாடல் லீலைகள் அனைத்தும் ஆடி வீதியில் நடைபெறும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
    ஈரோடு மாவட்டத்தில், ஆடி அமாவாசை அன்று 23 கோவில்களில் சாமி தரிசனம் செய்யவும், அணைக்கட்டு மற்றும் ஆறுகளில் நீராடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
    ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஆடி அமாவாசையான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், அணைக்கட்டுகள் மற்றும் ஆறுகளில் நீராடுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.

    அதன்படி பண்ணாரி அம்மன் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், சென்னிமலை சுப்ரமணிய சாமி கோவில், பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில், தலையநல்லூர் பொன்காளியம்மன் கோவில், சூரம்பட்டி வலசு மாரியம்மன் கோவில், கோபி பச்சைமலை சுப்ரமணிய சாமி கோவில், பவளமலை முத்துக்குமாரசாமி கோவில், நஞ்சை காளமங்கலம் மத்யபுரீஸ்வரர் கல்யாண வரதராஜ பெருமாள் கோவில், நாகேஸ்வரர் குலவிளக்கம்மன் கோவில், வைராபாளையம் காவிரிக்கரை சோழீஸ்வரர் கோவில், காஞ்சிக்கோவில் சீதேவியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுகிறது.

    மேலும் நசியனூர் மதுரகாளியம்மன் கோவில், திருவாச்சி கரியபெருமாள் கோவில், திண்டல் வேலாயுதசாமி கோவில், பெருந்துறை செல்லாண்டியம்மன் கோவில், அம்மாபேட்டை சொக்கநாத சாமி கோவில், காங்கேயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவில், பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், கருங்கல்பாளையம் சோழீஸ்வரர் கோவில், ஈரோடு பெரியமாரியம்மன் கோவில் ஆகிய 23 கோவில்களிலும் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் சித்தோடு காலிங்கராயன் அணைக்கட்டு, மலையம்பாளையம் காரணம்பாளையம் அணைக்கட்டு, கடத்தூர் கொடிவேரி அணைக்கட்டு, பவானிசாகர் அணை ஆகிய பகுதிகளில் புனித நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
    இத்துதியை பூர நட்சத்திர தினங்களில் பாராயணம் செய்து வந்தால் ஆண்டாளுக்கு ரங்கநாதர் மணமகனாகக் கிடைத்தது போல் கன்னியர் மனம் விரும்பும் மணாளனைக் கைபிடிப்பர். செல்வச் செழிப்பும் ஏற்படும்.
    ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தன கல்பவல்லீம்
    ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தன யோக த்ருச்யாம்
    ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவான்யாம்
    கோதாம் அனஸ்ய சரண:சரணம் ப்ரபத்யே

    -ஸ்ரீகோதாஸ்துதி

    பொதுப் பொருள்: கற்பகவிருட்சத்தில் பூக்கும் மலர் போல விஷ்ணு சித்தரின் குலத்தில் அவதரித்த ஆண்டாளே நமஸ்காரம். ஹரிசந்தன மரத்தின் கீழ் வாசம் செய்யும் ரங்கராஜனாகிய திருமாலின் மனம் கவர்ந்தவளே நமஸ்காரம். பூமிதேவியின் அம்சத்தைக் கொண்ட தாயே, உன் மனம் போல் மாங்கல்யம் அமைந்தாற்போன்று எனக்கும் அருள் செய்வாயாக. மகாலட்சுமியின் அம்சத்தைக் கொண்ட அன்னையே! என் வாழ்க்கையில் மங்களமும், வளமும் பெருக வரமருள்வாய் அம்மா.

    இத்துதியை பூர நட்சத்திர தினங்களில் பாராயணம் செய்து வந்தால் ஆண்டாளுக்கு ரங்கநாதர் மணமகனாகக் கிடைத்தது போல் கன்னியர் மனம் விரும்பும் மணாளனைக் கைபிடிப்பர். செல்வச் செழிப்பும் ஏற்படும்.
    மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும், ஆடிப்பூரம் திருவிழாவின் 3-ம் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் அருள்பாலித்தார். ஆண்டாள் புறப்பாடு பக்தர்கள் இன்றி நடைபெற்றது.
    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அதே போல் மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் மூடப்பட்டு திருவிழாக்கள் உள்விழாவாக நடைபெற்று வருகிறது. இதில் பக்தர்கள் யாரும் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை.
     
    மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும், ஆடிப்பூரம் திருவிழாவின் 3-ம் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் அருள்பாலித்தார். ஆண்டாள் புறப்பாடு பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

    இதில் அர்ச்சகர்கள், கோவில் நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.
    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவில் ஆடிப்பூர தெப்ப திருவிழாவின் 3-ம் நாளான நேற்று உற்சவர் அகிலாண்டேஸ்வரி காமதேனு வாகனத்தில் கோவில் வளாகத்தில் உள்ள கொலு மண்டபத்தில் எழுந்தருளினார்.
    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அதே போல் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவில் மூடப்பட்டு திருவிழாக்கள் உள்விழாவாக நடைபெற்று வருகிறது.இதில் பக்தர்கள் யாரும் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை.
     
    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆடிப்பூர தெப்ப திருவிழா 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த திருவிழாவின் 3-ம் நாளான நேற்று உற்சவர் அகிலாண்டேஸ்வரி காமதேனு வாகனத்தில் கோவில் வளாகத்தில் உள்ள கொலு மண்டபத்தில் எழுந்தருளினார்.

    இதில் அர்ச்சகர்கள், கோவில் நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    இத்துதியை வெள்ளிக்கிழமைகளிலும் அஷ்டமி தினத்தன்றும் குறிப்பாக பாராயணம் செய்தால் தேவியின் திருவருளால் தடைகள் நீங்கி, திருமணம் மகிழ்ச்சி பொங்க நடைபெறும்.
    ஓம் ஹ்ரீம் யோகினி யோகினி யோகீஸ்வரி யோக பயங்கரி
    ஸகல ஸ்தாவர ஜங்கமஸ்ய முக ஹ்ருதயம் மம வஸமா-கர்ஷய ஆகர்ஷய ஸ்வாஹா

    - ஸ்வயம்வரா பார்வதி மூல மந்திரம்

    பொதுப் பொருள்: ஹ்ரீம் எனும் பீஜத்தில் உறைபவளே, யோகினியே, யோகேஸ்வரியே, சகல ஜீவன்களும் எனக்கு வசமாக அருள்புரிவாய் அம்மா. (இத்துதி, தேவி வழிபாட்டில் ஸ்வயம்வர கல்யாணி என்று போற்றப்படுகிறது. ருக்மிணி கிருஷ்ணனை இத்துதியை ஜபித்தே மணந்தாள். பார்வதியாக அவதரித்த போது உமாதேவி இத்துதியை பராசக்தியைக் குறித்து துதித்தே ஈசனை மணந்தாள். இத்துதியை வெள்ளிக்கிழமைகளிலும் அஷ்டமி தினத்தன்றும் குறிப்பாக பாராயணம் செய்தால் தேவியின் திருவருளால் தடைகள் நீங்கி, திருமணம் மகிழ்ச்சி பொங்க நடைபெறும்.)
    கஞ்சமலை சித்தேசுவரர் சாமி கோவிலில் கொரோனா தொற்று பரவலை தடுக்க ஆடி அமாவாசை நாளான வருகிற 8-ந் தேதி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
    பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி அமாவாசை விழா பிரசித்தி பெற்றதாகும். கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு கோவிலில் வருகிற 8-ந் தேதி நடைபெறும் ஆடி அமாவாசை விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்யப்படுகிறது. எனவே, மேற்கண்ட தினங்களில் பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் வருவதை தவிர்க்க வேண்டும்.

    இதேபோல கஞ்சமலை சித்தேசுவரர் சாமி கோவிலில் கொரோனா தொற்று பரவலை தடுக்க ஆடி அமாவாசை நாளான வருகிற 8-ந் தேதி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலம் ஜாகீர்அம்மாபாளையம் வெண்ணங்கொடி முனியப்பசாமி கோவிலிலும் 8-ந் தேதி பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் பக்தர்கள் அன்றைய தினங்களில் ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தவும் அனுமதி இல்லை.

    இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் கார்மேகம் பிறப்பித்துள்ளதாக பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ராதிகா, கஞ்சமலை சித்தேசுவரர் சாமி கோவில் செயல் அலுவலர் பரமேஸ்வரன், வெண்ணங்கொடி முனியப்பசாமி கோவில் செயல் அலுவலர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
    ×