என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கொடியேற்றத்தையொட்டி சுந்தரேசுவரர் -பிரியாவிடை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கண்கொள்ளா காட்சி.
    X
    கொடியேற்றத்தையொட்டி சுந்தரேசுவரர் -பிரியாவிடை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கண்கொள்ளா காட்சி.

    மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்தை காண முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நேற்று தொடங்கியது. கொடியேற்றத்தை காண முடியாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை பெருவிழா, ஆடி முளைக்கொட்டு விழா, ஆவணி மூலத்திருவிழா, ஐப்பசி நவராத்திரி விழா போன்றவை சிறப்பு வாய்ந்தவை. அதிலும், சித்திரை திருவிழாவில் மீனாட்சிக்கும், ஆவணி மூல திருவிழாவில் சுவாமிக்கும் பட்டாபிஷேகம் நடைபெறும். மேலும், ஆவணி திருவிழாவில் சிவபெருமான் நிகழ்த்திய 10 திருவிளையாடல் லீலைகள் நடைபெறும். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆவணிமூலத்திருவிழா நேற்று காலை 10.55 மணிக்கு மேல் மேள-தாளங்கள் முழங்க, சுவாமி சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையொட்டி மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் மற்றும் பிரியாவிடை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

    இந்த நிகழ்ச்சியில் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் கலந்து கொண்டனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் இன்றி கொடியேற்றம் நடந்தது. இதனால் ஏராளமானோர் ஏமாற்றம் அடைந்தனர். வருகிற 11-ந் தேதி கருங்குருவிக்கு உபதேசம், 12-ந் தேதி நாரைக்கு முக்தி கொடுத்தல், 13-ந் தேதி மாணிக்கம் விற்ற லீலை, 14-ந் தேதி தருமிக்கு பொற்கிழி அளித்தல், 15-ந் தேதி உலவவாக்கோட்டை அருளியது, 16-ந் தேதி பாணனுக்கு அங்கம் வெட்டுதல், இரவு திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தாபித வரலாறு லீலை உள்ளிட்டவை நடைபெறுகின்றன.

    இதுபோல், 17-ந் தேதி காலை வளையல் விற்ற லீலையும், இரவு 7.35 மணிக்கு மேல் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சியும் நடக்கிறது. 18-ந் தேதி நரியை பரியாக்கிய லீலையும், 19-ந் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை, 20-ந் தேதி விறகு விற்ற லீலை அலங்காரம் நடக்க உள்ளன. திருவிழாக்கள் மற்றும் திருவிளையாடல் லீலைகள் அனைத்தும் ஆடி வீதியில் நடைபெறும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
    Next Story
    ×