என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    நண்பர்கள், உறவினர்களோடு சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடுவதை விடவும், நமது பகைவர்களை மன்னித்து, ஏழைகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்து அவர்களோடு சிறப்பித்தால் இவ்விழா அர்த்தமுள்ளதாக அமையும்.
    கடவுள் வடிவில் விளங்கிய இறைமகன் இயேசு, மனிதர்களின் மீட்புக்காகத் தம்மையே வெறுமையாக்கி, கன்னி மரியாவின் வயிற்றில் மனித உடலேற்றார். இறைமகன் மனிதரான இந்த கிறிஸ்துமஸ் விழாவில், கடவுள் வெளிப்படுத்திய அன்பையும் தாழ்ச்சியையும் கற்றுக் கொள்ள அழைக்கப்படுகிறோம். மாட்சிமிகு கடவுள் தமது அன்பின் வெளிப்பாடாக தமது ஒரே மகனை இந்த உலகிற்கு பரிசாக அளித்தார் என்பது நம் மகிழ்ச்சியை அதிகரிக்கிறது.

    தொடக்கத்தில் கடவுளோடு கடவுளாக இருந்த கடவுளின் வாக்கே மனித வடிவில் இயேசுவாகத் தோன்றினார். கடவுளின் வாக்கை மீறி கீழ்ப்படியாமையால் மனிதர் செய்த பாவம், மனித வடிவில் தோன்றிய கடவுளின் வாக்கான இயேசுவில் நம்பிக்கை கொண்டு அவருக்கு கீழ்ப்படிவதன் வழியாக நீக்கப்படுகிறது. இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டால் விண்ணக வாழ்வைப் பெறுவதற்கான மீட்பு நமக்கு கிடைக்கும் என்பது உறுதி.

    கடவுள் தமது ஒரே மகனை, கன்னி மரியாளின் மகனாக சாதாரண பெண்ணிடம் பிறந்தவராக அனுப்பினார். இறைமகன் இயேசு மனிதராகப் பிறந்ததால் நமது மீட்பு உறுதியானது. இயேசுவின் பிறப்பு முதலில் இடையர்களுக்கு அறிவிக்கப்பட்டது என்று பைபிள் கூறுகிறது. யூத சமூகத்தில் இடையர்கள் ஏழைகளாக இருந்ததுடன் பாவிகள் என்று ஒதுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்தார்கள். இத்தகைய மக்களுக்கு புதுவாழ்வு அளிப்பதே இயேசுவின் திருப்பணியாக அமைந்தது.

    இயேசுவின் பிறப்பை விண்மீன் அடையாளத்தால் அறிந்த கீழ்த்திசை ஞானிகள், தங்களைத் தாழ்த்திக் கொண்டு இறைமகனை வணங்கச் சென்றார்கள். பொன், சாம்பிராணி, வெள்ளைப்போளம் என்று அவர்கள் இயேசுவுக்கு அளித்த காணிக்கைகள், அவரது மூன்று இயல்புகளைக் காட்டுகின்றன.

    அரசர் என்பதைப் பொன்னும், கடவுள் என்பதை சாம்பிராணியும், மனிதர் என்பதை வெள்ளைப்போளமும் காட்டுகின்றன. இயற்கை அனைத்தின் அரசரான கடவுள் நம்மிடையே வந்து குடிகொள்ள மனிதராகப் பிறந்தார் என்ற செய்தியை ஞானிகள் உணர்த்துகின்றனர். இவ்வாறு இயேசுவின் அன்பையும், தாழ்ச்சியையும் வெளிப்படுத்தும் விழாவாக கிறிஸ்துமஸ் அமைந்துள்ளது. கடவுள் தமது ஒரே மகனை நமக்கு பரிசாக அளித்தப் பகிர்வின் மகிழ்ச்சியை அனைவருக்கும் வழங்குவதே கிறிஸ்துமஸ் விழாவின் நற்செய்தியாக இருக்கிறது.

    நண்பர்கள், உறவினர்களோடு சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடுவதை விடவும், நமது பகைவர்களை மன்னித்து, ஏழைகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்து அவர்களோடு சிறப்பித்தால் இவ்விழா அர்த்தமுள்ளதாக அமையும். இறைமகன் இயேசுவில் வெளிப்பட்ட தாழ்ச்சியையும், அன்பையும் பிறருக்கு பகிர்வதன் வழியாக, நாம் சமத்துவ, சகோதரத்துவ சமூகத்தை உலகெங்கும் கட்டியெழுப்ப முடியும்.

    -ஆக்னல் ஜோஸ், பணகுடி.
    இன்று இரவு 11.30 மணி முதல் அதிகாலை வரை கிறிஸ்துமஸ் வழிபாடுகள் ஆலயங்களில் நடக்கின்றன. கத்தோலிக்க திருச்சபைகளில் நள்ளிரவில் தொடங்கும் வழிபாடு அதிகாலை 2 மணி வரை நடைபெறும்.
    சென்னை

    ஏசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25-ந் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

    கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு நிகழ்ச்சிகள் மிக எளிமையாக கொண்டாடப்பட்டன. இந்த வருடம் தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதால் வழிபாடு நடத்துவதற்கு தளர்வுகள் வழங்கப்பட்டு இருப்பதாலும் விமரிசையாக கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது.

    டிசம்பர் மாதம் தொடக்கத்திலேயே வீடுகளில் நட்சத்திரங்களை தொங்கவிட்டும், குடில்கள் மற்றும் கிறிஸ்துமஸ் மரங்கள் அமைத்தும் பண்டிகை கொண்டாட ஆயத்தமானார்கள்.

    நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தை ஒட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன. அனைத்து ஆலயங்களும் அலங்கார மின் விளக்குகளால் நேற்று இரவு முதலே அலங்கரிக்கப்பட்டன.

    இன்று இரவு 11.30 மணி முதல் அதிகாலை வரை கிறிஸ்துமஸ் வழிபாடுகள் ஆலயங்களில் நடக்கின்றன. கத்தோலிக்க திருச்சபைகளில் நள்ளிரவில் தொடங்கும் வழிபாடு அதிகாலை 2 மணி வரை நடைபெறும்.

    தென் இந்திய திருச்சபை ஆலயங்கள், மெத்தடிஸ்ட், ஆர்க்காடு லூத்ரன், பெந்தேகோஸ்து, இ.சி.ஐ. உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ திருச்சபைகளில் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு வழிபாடு தொடங்கி, காலை 6, 7 மணி வரை நடைபெறும்.

    சென்னையில் சாந்தோம் தேவாலயம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.ஆலயத்தின் வெளிபுறமும், உள்புறமும் விதவிதமான அலங்காரங்கள் செய்யப் பட்டு இருந்தன.

    சென்னை- மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி கிறிஸ்துமஸ் சிறப்பு நற்செய்தி வழங்குகிறார்.

    இதேபோல பெசன்ட் நகர் அன்னை வேளாங்கன்னி ஆலயம், பாரிமுனை அந்தோணியார் ஆலயம், பரங்கிமலை மாதா ஆலயம், பெரம்பூர் லூர்துமாதா ஆலயம், எழும்பூர் திரு இருதய ஆலயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கத்தோலிக்க திருச்சபை ஆலயங்களில் இன்று இரவு சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.

    இதேபோல சி.எஸ்.ஐ. கதிட்ரல் பேராலயம், சூளை தூய பவுல் ஆலயம், சிந்தாதரிப்பேட்டை சியோன் ஆலயம், ராயப்பேட்டை வெஸ்லி, டவுட்டன் ஹார்வுட்ரா, தூய ஆன்ட்ரூஸ், தக்கர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் அதிகாலை நடக்கிறது.

    கதிட்ரல் பேராலயத்தில் சி.எஸ்.ஐ. சென்னை பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் கிறிஸ்துமஸ் நற்செய்தி வழங்குகிறார். கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி கொட்டும் பனி மற்றும் குளிரிலும் ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது. இதில் பல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் உற்சாகமாக பங்கேற்கிறார்கள்.

    கிறிஸ்துமஸ் வழிபாடு முடிந்ததும், ஒருவருக்கொருவர் சமாதானத்தை தெரிவிக்கும் வகையில் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள்.

    தற்போது ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவி வருவதால், ஆலயங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. அனைவரும் முகக்கவசம் அணிந்துவர அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து ஆலயங்களும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.

    வழிபாட்டுக்கு வரும் பொதுமக்கள் பயன்படுத்தவும் கிருமிநாசினி நுழைவாயிலில் வைக்கப்படுகின்றன.

    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இன்று இரவு முதல் முக்கிய ஆலயங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    ராமன்புதூர் கார்மல் நகர் திருக்குடும்ப ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 2-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில், ராமன்புதூர் கார்மல் நகரில் திருக்குடும்ப ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 2-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இன்று காலை திருப்பலியும், மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலையும் நடைபெறும்.

    தொடர்ந்து 6.30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. ஆலஞ்சி பங்குதந்தை மரிய சூசை வின்சென்ட் கொடியை அர்ச்சித்து ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து நடைபெறும் திருப்பலியில் அருட்பணியாளர் பேட்ரிக் சேவியர் தலைமை தாங்குகிறார். தேவசகாயம் மவுண்ட், மறைவட்ட முதல்வர் அருட்பணியாளர் பிரான்சிஸ் சேவியர் மறையுரையாற்றுகிறார்.

    இரவு 11 மணிக்கு கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருப்பலி நடைபெறும்.

    25-ந் தேதி காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.30 மணிக்கு திருவிழா திருப்பலி, மறையுரை போன்றவை நடக்கிறது.

    26-ந் தேதி காலை 6.30 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். அன்று காலை முதல் மாலை வரை நற்கருணை ஆராதனை நடக்கிறது. மாலையில் 6 மணிக்கு ஜெபமாலையும், 6.30 மணிக்கு திருப்பலியும் நடைபெறும்.

    27-ந் தேதி காலை 6.30 மணி மற்றும் மாலை 6.30 மணிக்கு திருப்பலி நடக்கிறது. 28-ந் தேதி காலை 6.30 மணிக்கு திருப்பலி, மதியம் 12 மணிக்கு சமபந்தி விருந்து, மாலை 6.30 மணிக்கு திருப்பலி, மறையுரை ஆகியவை நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் காலையில் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, மறையுரை போன்றவையும் நடக்கிறது.

    வருகிற 31-ந் தேதி இரவு 10.30 மணிக்கு சிறப்பு நன்றி வழிபாடும், 11.30 மணிக்கு புத்தாண்டு திருப்பலியும் நடைபெறும். ஜனவரி 1-ந் தேதி காலை மற்றும் மாலையில் திருப்பலியும், இரவு 9 மணிக்கு தேர்பவனியும் நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான 2-ந் தேதி காலை 6.30 மணிக்கு திருக்குடும்ப ஆலய திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது. அருட்பணியாளர் ஜான் பெனிட்டோ தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் சகாய ஆனந்த் மறையுரையாற்றுகிறார். பிற்பகல் 2 மணிக்கு தேர்ப்பவனியும், மாலை 6 மணிக்கு திருப்பலி, கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை சகாய பிரபு, கார்மல் நகர் பங்கு தலைவர் ஜோசப் ஆன்றனி, செயலாளர் டூரிங் ஆன்றனி தனிஷ், பொருளாளர் லியோன் ஜேசுரெத்னம் ஆகியோரின் வழிகாட்டுதலில் பங்கு செயற்குழு உறுப்பினர்கள், பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
    இரவிபுத்தன்துறை புனித கேதரின் ஆலயத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட துணை ஆயர் கிறிஸ்துதாஸ் தலைமையில் திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.
    நித்திரவிளை அருகே உள்ள இரவிபுத்தன்துறை மீனவ கிராமத்தில் புனித‌ கேதரின் ஆலயம் புதிதாக புனரமைக்கப்பட்டு அதற்கான அர்ச்சிப்பு விழா நேற்று நடந்தது.

    இந்த விழாவில் திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேராயர் சூசை பாக்கியம், கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ், மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்துகொள்ள வந்த ஆயர்களை இரவிபுத்தன்துறை பங்கு மக்கள் மேளதாளங்களுடன் வரவேற்று ஆலயத்திற்கு அழைத்து சென்றார்.

    பின்னர், புதிதாக கட்டப்பட்டுள்ள ஆலயத்தை திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேராயர் சூசைபாக்கியம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து ஆலயத்தின் அர்ச்சிப்பு விழா நடந்தது. அதன்படி புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    தொடர்ந்து பேராயர் சூசைபாக்கியம் தலைமையில் முதல் திருப்பலி நடந்தது. கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் மறையுரையாற்றினார். ஆலயத்துக்குள் வைக்கப்பட்டுள்ள பீடம் மற்றும் சொரூபங்கள் அர்ச்சிக்கப்பட்டன. மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் வாழ்த்துரை வழங்கினார்.

    இதையடுத்து ஆலயத்தின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த பங்கு பணியாளர் இல்லம் மற்றும் ஆராதனை ஆலயம் ஆகியவை அர்ச்சிக்கப்பட்டன. தொடர்ந்து அன்பு விருந்து, ஒலி-ஒளி நிகழ்ச்சிகள் நடந்தது.

    இதையடுத்து திருவிழா இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட துணை ஆயர் கிறிஸ்துதாஸ் தலைமையில் திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. விழாவானது இன்று தொடர்ந்து 31-ந்தேதி வரை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தையர்கள், பங்கு பேரவை, ஆலய கட்டுமான குழு மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
    இயேசு கிறிஸ்துவின் பிறப்பு நிகழ்வை சித்தரிக்கும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கிறிஸ்தவ தேவாலயங்களிலும் குடில்கள் கட்டும் பணி நடந்து வருகிறது.
    உலகம் முழுவதும் வருகிற 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பண்டிகையை முன்னிட்டு ஈரோட்டில் டிசம்பர் மாத தொடக்கம் முதலே கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளின் முன்பு வண்ண நட்சத்திரங்கள் தொங்க விட்டு வருகிறார்கள். கிறிஸ்துமஸ் மரங்கள் வைத்து வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்து வருகிறார்கள்.

    இயேசு கிறிஸ்துவின் பிறப்பு நிகழ்வை சித்தரிக்கும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. வீடுகளில் பல்வேறு விதங்களில் குடில்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கிறிஸ்தவ தேவாலயங்களிலும் குடில்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் கொல்லம்பாளையம் பகுதியில் உள்ள கார்மல் பள்ளிக்கூடத்தில் பிரமாண்ட குடில் கட்டப்பட்டு உள்ளது. மாட்டுக்கொட்டிலில் இயேசு பிறந்த நிகழ்வை நினைவூட்டும் குடிலும், அதை சுற்றி ஆட்டு இடையர்கள், ஆடு, மாடுகள் படுத்து இருக்கும் காட்சியும் தத்ரூபமாக அமைக்கப்பட்டு உள்ளன.

    மேலும், இயேசுவை சந்திக்க வரும் 3 ராஜாக்கள் பாலை நிலத்தில் வரும் காட்சியும் சிறிய சிலைகள் வடிவில் அமைக்கப்பட்டு உள்ளன. கிறிஸ்து பிறப்பு தொடர்பான நிகழ்வுகளை சித்தரிக்கும் காட்சிகளும் வைக்கப்பட்டு உள்ளன. வண்ண விளக்குகள் அலங்காரத்தில் குடில் பார்ப்பவர்களை கவரும் வகையில் உள்ளது.

    இதுபோல் பல்வேறு பகுதிகளிலும் குடில்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
    கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை மறுநாள் (சனிக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, கிறிஸ்துமஸ் மரம், குடில், ஸ்டார் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.
    சென்னை :

    இயேசு கிறிஸ்து பிறந்த தினமான ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா நோய்த் தொற்று காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகம் இழந்து காணப்பட்ட நிலையில், இந்த ஆண்டு நோய்ப் பாதிப்பு சற்று குறைந்துள்ளதால் பல இடங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களை கட்ட தொடங்கிவிட்டது. கீத பவனி, கிறிஸ்துமஸ் மரவிழா என தேவாலயங்களில் நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

    கிறிஸ்துமஸ் என்றாலே அனைவருடைய நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் மரம், இயேசு பிறப்பு குறித்த குடில், ஸ்டார் மற்றும் ஒளிரும் விளக்குகள்தான். அதன்படி, கிறிஸ்தவர்கள் வீட்டில் ஸ்டார் மற்றும் ஒளிரும் விளக்குகளை தொங்கவிட்டு, குடில் மற்றும் கிறிஸ்துமஸ் மரம் அமைத்து வருகின்றனர்.

    இதற்காக தேவையான பொருட்களை வாங்குவதற்காக அலங்கார பொருட்கள் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து இருப்பதை பார்க்க முடிகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை விற்பனை சற்று அதிகரித்து இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இதுதவிர புத்தாடைகள் வாங்குவதற்காக ஜவுளி கடைகளிலும் மக்கள் கூட்டம் இருந்தது.

    நாளை மறுநாள் (சனிக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் இருந்தே தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை நடைபெறும். பெரும்பாலான தேவாலயங்களில் நாளை மறுதினம் அதிகாலையில் ஆராதனை இருக்கும்.

    கடந்த ஆண்டு நோய்ப்பாதிப்பு இருந்ததால், கடும் கட்டுப்பாடுகளுடன் தேவாலயங்களில் ஆராதனை நடந்தது. இந்த ஆண்டும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆராதனை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
    நித்திரவிளை அருகே இரவிபுத்தன்துறை மீனவ கிராமத்தில் உள்ள புனித கேதரின் ஆலய அர்ச்சிப்பு விழா இன்று(புதன்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது.
    நித்திரவிளை அருகே உள்ள இரவிபுத்தன்துறை மீனவ கிராமத்தில் புனித கேதரின் ஆலயம் உள்ளது. இந்த ஆலய அர்ச்சிப்பு விழா இன்று(புதன்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது. விழாவில் திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேராயர் சூசை பாக்கியம், மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ், கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் ஆகியோர் தலைமை தாங்கி ஆலயத்தை அர்ச்சித்து வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார்கள். பின்னர் அன்பு விருந்து நடக்கிறது.

    தொடர்ந்து 23-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை புனித கேதரின் ஆலய திருவிழா நடக்கிறது.

    23-ந் தேதி மாலை 6 மணிக்கு திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட துணை ஆயர் கிறிஸ்துதாஸ் திருவிழா கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். 24-ந் தேதி காலை 10 மணிக்கு அருட்பணியாளர் ஜெரோம் அமிர்தைய்யன், ஜோஸ் வர்க்கீஸ் ஆகியோர் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. இரவு 11.30 மணிக்கு கிறிஸ்து பிறப்பு திருப்பலி நடைபெறும்.

    25-ந் தேதி காலை 7 மணிக்கு திருப்பலியும், தொடர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும் நடக்கிறது. 26-ந் தேதி மாலை 6 மணிக்கு ஜெபமாலை, ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது.

    27-ந் தேதி மாலை 6 மணிக்கு முன்னாள் பங்கு தந்தையர்கள் தலைமையில் ஆடம்பர கூட்டுதிருப்பலியும், 28-ந் தேதி காலை 7 மணிக்கு இறந்தவர்களுக்கான நினைவு திருப்பலியும், மாலை 5 மணிக்கு திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட விகார் ஜெனரல் ஜோசப் தலைமையில் ஜெபமாலை, திருப்புகழ் மாலையும் நடக்கிறது. தொடர்ந்து தேர்ப்பவனி நடக்கிறது.

    29 மற்றும் 30-ந் தேதிகளில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் மற்றும் திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட துணை ஆயர் கிறிஸ்துதாஸ் ஆகியோர் தலைமையில் கூட்டுதிருப்பலி, உறுதி பூசுதல் திருப்பலி போன்றவை நடக்கிறது. 31-ந் தேதி இரவு 11 மணிக்கு புத்தாண்டு நற்கருணை ஆராதனையும், தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு திருப்பலியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தையர்கள், பங்கு பேரவை, ஆலய கட்டுமான குழு மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.
    கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியில் தேவாலயங்கள் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கின்றன.
    புதுச்சேரியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை கொண்டாட அரசு முழு தளர்வு அறிவித்துள்ளது. இதையொட்டி புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இதனால் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டத்தொடங்கி உள்ளது.

    கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது தேவாலயங்கள், வீடுகள் தோறும் அழகிய கிறிஸ்துமஸ் குடில் அமைத்துள்ளனர். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் கடை வீதிகளில் புத்தாடைகள், கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள், கிறிஸ்துமஸ் நட்சத்திரங்கள், பனிபடர்ந்த சூழலில் அழகிய வெண்பனி பூச்சுடன் உயர்ந்த கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் குடில்களை கிறிஸ்தவர்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

    புதுச்சேரியில் தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா தேவாலயம், மிஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி தேவாலயம் (சம்பா கோவில்), துய்மா வீதியில் உள்ள புனித மேரி தேவாலயம் (கப்ஸ் கோவில்), அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம், வில்லியனூர் லூர்து அன்னை ஆலயங்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.

    இதையொட்டி தேவாலயங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது. புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த தேவாலயங்கள் முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
    விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பாரில் பழமையான புனித தோமையார் ஆலய தேர் திருவிழாவின் 10-ம் நாளான நேற்று தேர் பவனி நடந்தது.
    விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பாரில் பழமையான புனித தோமையார் ஆலய தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது. திருவிழாவின் 10-ம் நாளான நேற்று தேர் பவனி நடந்தது.

    அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித தோமையார் பவனி நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக வந்த தேர்பவனியில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் ஆலயத்தில் பக்தர்கள் உப்பு, மிளகு, மெழுகுவர்த்தி போன்றவற்றை காணிக்கையாக செலுத்தினர்.
    நாகர்கோவில் ராமன்புதூர் கார்மல்நகரில் உள்ள திருக்குடும்ப ஆலயம் புதுப்பிக்கப்பட்டு மறு அர்ச்சிப்பு விழா நாளை (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது.
    நாகர்கோவில் ராமன்புதூர் கார்மல்நகரில் திருக்குடும்ப ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு மறு அர்ச்சிப்பு விழா நாளை (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை ஆலயத்தை அர்ச்சித்து வைக்கிறார். தொடர்ந்து நடைபெறும் திருப்பலியில் ஆயர் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார்.

    விழா ஏற்பாடுகளை கார்மல் நகர் பங்குதந்தை சகாய பிரபு, கார்மல் நகர் தலைவர் ஜோசப் ஆன்டனி, செயலாளர் டூறிங் ஆன்டனி தனிஸ், பொருளாளர் லியோன் ஜேசு ரெத்தினம் தலைமையில் செயற்குழு உறுப்பினர்கள், பங்கு இறை மக்கள் செய்து வருகிறார்கள்.
    வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெறும். இதில் பல்வேறு ஊர்களில் இருந்து திரளானோர் கலந்து கொள்வார்கள்.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலயம் மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த பேராலயத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இந்த பேராலயத்தில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெறும். இதில் பல்வேறு ஊர்களில் இருந்து திரளானோர் கலந்து கொள்வார்கள். இதை முன்னிட்டு வேளாங்கண்ணி விண்மீன் ஆலயத்தில் ஏசு பிறப்பை குறிக்கும் விதமாக குடில் அமைக்கப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு வருகிற 25-ந்தேதி (சனிக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வேளாங்கண்ணி பேராலயம் அருகே உள்ள விண்மீன் ஆலயத்தில் குடில் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் இன்று (திங்கட்கிழமை) கிழக்கு மண்டலம், நாளை (செவ்வாய்க்கிழமை) குதிரைப்பந்திவிளை மண்டலம், 22-ந் தேதி பண்டாரக்காடு மண்டலம் சார்பில் தேர்ப்பவனி நடைபெறும்.
    வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் பஜனை பட்டாபிஷேக தேர் திருவிழா தொடங்கியது. முதல் நாளில் மாலையில் ஜெபமாலை, திருப்பலி போன்றவை நடந்தது. திருப்பலியை தொடர்ந்து புதிதாக தயாரிக்கப்பட்ட தேர் ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் தேர் அர்ச்சிப்பும், மேள வாத்தியமும், வானவேடிக்கையும் நடந்தது. தொடர்ந்து தேர்ப்பவனி தொடங்கியது.

    தேரினை ஆலய பங்குத்தந்தை ஜெயக்குமார் அர்ச்சித்து தொடங்கி வைத்தார். இணைப்பங்குத்தந்தை அஜின் ஜோஸ் முன்னிலை வகித்தார். புனித செபஸ்தியாரின் திருவுருவம் தாங்கிய தேர் தென்மேற்கு மண்டலம் முழுவதும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அதிகாலை 4 மணிக்கு ஆலயத்தில் இருப்பு இருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதுபோல் நேற்று வடக்கு மண்டலம் சார்பில் தேர்ப்பவனி நடந்தது.

    இன்று (திங்கட்கிழமை) கிழக்கு மண்டலம், நாளை (செவ்வாய்க்கிழமை) குதிரைப்பந்திவிளை மண்டலம், 22-ந் தேதி பண்டாரக்காடு மண்டலம் சார்பில் தேர்ப்பவனி நடைபெறும். 23-ந் தேதி பொது பஜனை பட்டாபிஷேகமாக கொண்டாடப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை ஜெயக்குமார், இணைப்பங்குத்தந்தை அஜின் ஜோஸ், அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள், ஊர் துணைத்தலைவர் சகாய பால் ததேயுஸ், செயலாளர் புஷ்பாஸ், துணைச் செயலாளர் ஆக்னல் வினு, பொருளாளர் பபியோன் ராஜ் ஆகியோர் செய்துள்ளனர்.
    ×