என் மலர்
சினிமா செய்திகள்
- நடிகர் அஜித் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இந்த படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் நடிகை திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததையடுத்து சமீபத்தில் இப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு சில நாட்களில் வேறு இடத்திற்கு செல்ல உள்ளதாகவும் தயரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

இதைத்தொடர்ந்து அஜித் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்நிலையில், நடிகர் அஜித் தனது மகன் ஆத்விக்கின் நண்பர்கள் முன்பு கால்பந்து விளையாடி மகிழ்ந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’.
- இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். 'லால் சலாம்' திரைப்படம் வருகிற 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், "நான் இசை வெளியீட்டு விழாவில் என்ன பேசுவேன் என்பது அப்பவிற்கு தெரியாது. நான் பேசியது படத்தின் புரோமொஷனுக்காகவா என சிலர் அப்பாவிடம் விமான நிலையத்தில் வைத்து கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு சின்ன விளக்கமளிக்க விரும்புகிறேன். என் மூலமாகவோ, படத்தில் அரசியல் பேசியோ, அவர் நம்பாத ஒரு விஷயத்தை நடித்தோ சூப்பர் ஸ்டார் படம் ஓட வேண்டிய அவசியம் இல்லை.

எந்த மாதிரியான ஒரு அரசியலும் பேசாத படம் ஜெயிலர். அது வெற்றி படமாக அமைந்தது உங்கள் அனைவருக்கும் தெரியும். என்னையும் சரி, என் சகோதரியையும் சரி, எங்களின் சொந்த கருத்துரிமையை ஊக்குவிக்கும் ஒருவர். அவரிடம் அப்படியொரு கேள்வி எழுப்பியது கஷ்டமாக இருந்தது" என்று கூறினார்.
- கிராமி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்சில் நடந்தது.
- ஜெய் இசட்டுக்கு இம்பாக்ட் விருது வழங்கப்பட்டது.
இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் முக்கிய விருதுகளில் ஒன்று கிராமி விருது. அந்த வகையில் 66-வது ஆண்டு கிராமி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்சில் நேற்று நடந்தது. விழாவில் தமிழக பாடகர் சங்கர் மகாதேவன் குழுவினர் உள்பட பலருக்கு கிராமி விருது வழங்கப் பட்டது.

இதுபோன்று அமெரிக்கா ராப் இசைக் கலைஞரான ஜெய் இசட்டுக்கு இசைத் துறையில் தனிப்பட்ட மற்றும் தொழில் முறை சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இம்பாக்ட் விருது வழங்கப்பட்டது. விருதை மகள் புளு ஜவியை மேடையில் அழைத்து சென்று பெற்றுக் கொண்டார்.

விருதை பெற்ற மகிழ்ச்சியில் ஜெய் இசட் மேடையில் இருந்து கீழே வந்து தனது சக நண்பர்களுடன் விருதை கொண்டாடும் வகையில் தான் பெற்றுக் கொண்ட விருது கோப்பையில் மது ஊற்றி அருந்தினார். அவர் விருது கோப்பையில் மது அருந்தும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’.
- இந்த படத்தில் ரஜினி, கபில் தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய 'லால் சலாம்' படத்தில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். மேலும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன. இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், 'லால் சலாம்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- அனுராக் பதக் எழுதிய புத்தகத்தின் திரை வடிவம்தான், 12th ஃபெயில்
- பத்திரிகை துறையை அனுபமா அவமானப்படுத்தி விட்டார் என்றார் கங்கனா
கடந்த 2023 அக்டோபர் மாதம் வெளியான இந்தி திரைப்படம், "12th ஃபெயில்" (12th Fail).
2019ல் அனுராக் பதக் என்பவர், மனோஜ் குமார் ஷர்மா எனும் இந்திய காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையை புத்தகமாக வெளியிட்டார். அந்த புத்தகத்தின் திரை வடிவம்தான் 12th ஃபெயில்.
இத்திரைப்படத்தை பிரபல இந்தி திரைப்பட இயக்குனர் விது வினோத் சோப்ரா தயாரித்து இயக்கியிருந்தார்.

விது வினோத் சோப்ராவின் மனைவி அனுபமா ஒரு முன்னணி திரைப்பட விமர்சகர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனிமல், சலார், டங்கி உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களுடன் போட்டி போட்ட 12th ஃபெயில் திரைப்படம், ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.
இந்த வெற்றி குறித்து விது வினோத் சோப்ரா தெரிவித்ததாவது:
இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட முயன்ற போது, ஓடிடி-யில் (OTT) மட்டுமே வெளியிடுமாறு அனைவரும் என்னை எச்சரித்தனர்.
என் மனைவி என்னை அச்சுறுத்தினார். இப்படத்தை யார் பார்ப்பார்கள் என என் மனைவியே கூறினார்.
ஆனாலும் எனக்கு நம்பிக்கை இருந்ததால் எங்கள் சொந்த பணத்திலேயே விளம்பரங்கள் செய்தேன். தொடக்கத்தில் இப்படத்திற்கு சிறிய வரவேற்புதான் கிடைத்தது. ஆனால், தற்போது எந்த நிலையில் இருக்கிறோம் பாருங்கள்.
இவ்வாறு இயக்குனர் கூறினார்.
அனுபமா குறித்து சோப்ரா வெளியிட்ட கருத்திற்கு பிரபல இந்தி திரைப்பட நடிகை கங்கனா ரனாவத் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

நடிகை கங்கனா கூறியிருப்பதாவது:
திரைப்பட பத்திரிக்கையாளர் துறையையே அனுபமா அவமானப்படுத்துபவராக உள்ளார்.
புத்திசாலியான பெண்கள் மற்றும் இளவயது பெண்களை கண்டால் பொறாமைப்படுபவராகவும் உள்ளார்.
தனது கணவரை கண்டே அவர் பொறாமைப்படுகிறார். கணவரின் வளமையையும் புகழையும் கொண்டுதான் அனுபமா தற்போது அனுபவிக்கும் அனைத்தையும் அடைந்துள்ளார்.
பாலிவுட் இயக்குனரின் மனைவி எனும் அடையாளத்தை திரைப்பட துறையில் பிரபலமானவர்களின் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பயன்படுத்துகிறார்.
உண்மையான திறமைசாலிகளையும், சிறந்த திரைப்படங்களையும் வெறுத்து ஒதுக்கும் வதந்தி கும்பலுடன் இணைந்து செயல்படுகிறார்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
- நடிகர் விஜய் ’தமிழக வெற்றி கழகம்’ கட்சியை தொடங்கியுள்ளார்.
- இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு என்று குறிப்பிட்டிருந்தார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து, திரைத்துறை நண்பர்கள், பாசத்திற்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் அனைவரும் நன்றி எனவும், எனது நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி எனவும் அறிக்கை வெளியிட்டு நன்றி தெரிவித்திருந்தார். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'தி கோட்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், 'தமிழக வெற்றி கழகம்' என்ற அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
- 4 கோடி இருந்தால் சினிமாவுக்கு வராதீர்கள் என்று விஷால் சொன்னார்.
- எனக்கு அட்வான்ஸ் தந்த தயாரிப்பாளர்கள்ஆபிஸை மூடிவிட்டுப் போய்விட்டார்கள்.
தமிழ் திரைக்கூடம் தயாரிப்பில், பிரபல பாடலாசிரியர் பிரியன் எழுதி இயக்கி நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் "அரணம்". இப்படத்தில் கதாநாயகியாக வர்ஷா நடித்துள்ளார். லகுபரன் , கீர்த்தனா உட்பட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நித்தின் கே ராஜ், நவுசத் ஒளிப்பதிவு செய்துள்ளனர். பிகே படத்தொகுப்பு செய்துள்ளார். சாஜன் மாதவ் இசை அமைத்துள்ளார். "அரணம்" படம் 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது.

இதையடுத்து படக்குழுவினர் இவ்வெற்றியை கோலாகலமாக கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் பாடலாசியர் பிரியன் பேசியதாவது, "அரணம்" இசை வெளியீட்டு மேடையில் சொன்னது போல் அரணம் வென்றுள்ளது. 2024-ஆம் ஆண்டின் முதல் 25 நாள் கொண்டாட்ட படம் "அரணம்". இதை எவராலும் மாற்ற முடியாது. பொங்கலுக்கு வந்த பெரிய படங்கள் அடுத்த வாரம் கொண்டாடும் போது இது காணாமல் போய் விடக்கூடாது. இந்தப்படம் ஒரு சின்னப்படத்தை தயாரிக்கும் தைரியத்தைத் தரும். இந்தப்படத்தின் வெற்றி பலருக்கு நம்பிக்கை தரும்.

இந்த 25 நாளில் நிறைய கற்றுக்கொண்டேன், ஒரு படத்தை எடுத்துவிட்டு சும்மா நின்றிருந்தால் அவ்வளவு தான் நீங்கள் காலி, நான் தெருத்தெருவாக சென்றேன். ஒவ்வொரு நகரத்துக்கும் சென்றேன் ஒவ்வொரு திரையரங்காகச் சென்றேன் அப்போது தான் நமக்கானது நடக்கும். என் சொந்த நகரத்தில் காலை காட்சி 96 டிக்கெட் விற்றது இது வெற்றி இல்லை என்றால் என்ன?, ஆனால் அடுத்த வாரம் உங்கள் படத்தை எடுத்து விடுவோம் என்றார்கள் ஏனென்று கேட்டால் புதுப்படம் வந்து விடும் என்கிறார்கள். நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் படத்தை எடுத்துவிட்டு டிக்கெட் புக்காகாத படத்தை கொண்டு வந்தால் எப்படி சினிமா அழியாமல் இருக்கும். சினிமாவை அழிப்பது சினிமாக்கரான் தான்.

4 கோடி இருந்தால் சினிமாவுக்கு வராதீர்கள் என்று விஷால் சொன்னார். எனக்கு அட்வான்ஸ் தந்த தயாரிப்பாளர்கள் 2 பேர் ஆபிஸை மூடிவிட்டுப் போய்விட்டார்கள். என்ன பைத்தியக்காரத்தனம் இது. சின்னப்படம் எப்படி ஜெயித்துக்கொண்டு இருக்கிறது, "அரணம்" படமே அதற்கு சாட்சி. எப்படி இப்படி முட்டாள்தனமாக விஷால் பேசலாம். அவர் பேச்சைக் கேட்டு பலர் ஒதுங்கி விட்டார்கள். அதில் எத்தனை நல்ல படங்கள் இருக்கும். சின்னப் படங்களை ஜெயிக்கவிடாமல் செய்வது சினிமாக்கார்கள் தான். உங்களால் கடைசி வரை தெம்பாக ரோட்டில் இறங்கி நிற்க முடியுமென்றால், சினிமாவுக்கு வாருங்கள், சின்ன பட்ஜெட் படம் எடுத்து ஜெயிக்க முடியும். இதோ "அரணம்" படத்தை ஜெயிக்க வைத்துவிட்டு உங்கள் முன்னால் நிற்கிறோம். விஷால் சொன்னதைக் குப்பையில் தூக்கிப்போட்டுவிட்டு சினிமாவுக்கு வாருங்கள். இந்த நேரத்தில் என்னுடன் நின்ற தமிழ் திரைக்கூடம் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. "அரணம்" படத்தின் வெற்றிக்காக உங்கள் அனைவருக்கும் நன்றி" என்று பேசினார்.
- நடிகர் விஜயகாந்த் அண்மையில் காலமானார்.
- இவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கான இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் அரசியல் மற்றும் சினிமாவில் இருந்து விலகினார். இவர் கடந்த டிசம்பர் 28-ந் தேதி உடல் நலக்குறைவினால் காலமானார்.

இவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் டிசம்பர் 29-ந் தேதி 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்று முதல் பல பிரபலங்கள், தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலர் தினந்தோறும் அங்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை ரம்பா மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இல்லத்தில் அவரது உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
- இயக்குனர் அட்லீ புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்.
- இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.
இயக்குனர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் 'விடி18' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்தி திரைப்படத்தில் பாலிவுட் நட்சத்திர நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். ஆக்ஷன் எண்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் முராத் கெடானி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் பிரியா அட்லீ ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பேபி ஜான் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'விடி 18' படத்திற்கு 'பேபி ஜான்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. இது தொடர்பான போஸ்டரை தயாரிப்பாளர் அட்லீ தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டரை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
Unveiling the Biggest Action Entertainer of the year 2024 ? #BabyJohn starring #VarunDhawan, #KeerthySuresh & #WamiqaGabbi releasing on 31st May in cinemas!
— atlee (@Atlee_dir) February 5, 2024
Click here to watch the video: https://t.co/yVHj1afaYK@MuradKhetani @priyaatlee #JyotiDeshpande @Atlee_dir @Varun_dvn… pic.twitter.com/AJeImLuIF8
- ஒரு இயக்குனராக என்னையும், அவரையும் உற்சாகப்படுத்தும் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்.
- சிவராஜ் குமார் நடிக்கும் ஒரு படத்தின் மூலம் நான் திரையுலகில் நுழைய வேண்டும் என்று விரும்பினேன்.
'சப்த சாகரதாச்சே எல்லோ சைட் ஏ' மற்றும் 'சைட் பி' படங்களின் வெற்றி இயக்குனர் ஹேமந்த் எம் ராவ், நடிகர் சிவராஜ் குமார் உடன் இணைந்து அடுத்த படத்தை துவங்குகிறார். இப்படத்தினை வி.ஜே.எப் - வைஷாக் ஜே பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில், டாக்டர் வைஷாக் ஜே கவுடா தயாரிக்கிறார்.
இயக்குனர் ஹேமந்த் எம் ராவ் கூறியதாவது:-
ஒரு நடிகராக சிவராஜ் குமார் சாரின் அனுபவம் மிகப்பெரியது, அவர் தனது முழு வாழ்க்கையிலும் மாறுபட்ட பல பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். ஒரு இயக்குனராக என்னையும், அவரையும் உற்சாகப்படுத்தும் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். அவருடன் பணியாற்றுவது எனக்கு கிடைத்திருக்கும் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு.

மேலும் இயக்குனர் தனது சமூக வலைதளப்பக்கத்தில், 'எனது 5-வது படத்தில் லெஜண்ட் சிவராஜ்குமாருடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் பெருமையாக உள்ளது. நான் எப்போதுமே ஒவ்வொரு படத்தையும் என்னுடைய முதல் மற்றும் கடைசிப் படம் போல நினைத்தே பணியாற்றிவருகிறேன். வைஷாக் ஜே கவுடாவுடன் இந்த பயணத்தை மேற்கொள்வதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
அறிமுக தயாரிப்பாளரான வைஷாக் ஜே கவுடா கூறியதாவது:-
'சிறுவயதில் இருந்தே நான் சிவண்ணாவின் தீவிர ரசிகன். அவர் நடிக்கும் ஒரு படத்தின் மூலம் நான் திரையுலகில் நுழைய வேண்டும் என்று விரும்பினேன். எங்கள் முதல் திரைப்படத்திற்காக ஹேமந்த் எம் ராவ் மற்றும் சிவண்ணாவுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எல்லோருக்கும் பெருமை சேர்க்கும் ஒரு படத்தை வழங்க வேண்டிய பொறுப்பு, இப்போது எங்களுக்கு பத்து மடங்காக அதிகரித்துள்ளது.
படத்தின் ஜானர் மற்றும் நடிகர்கள் என படத்தின் தகவல்கள் குறித்து எந்த விஷயத்தையும் படக்குழுவினர் பகிரவில்லை. கூடிய விரைவில் ஒவ்வொன்றாக படம் குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என இயக்குனர் ஹேமந்த் எம் ராவ் தெரிவித்துள்ளார்.
- நீங்கள் சொல்லுற விஷயத்தில் ஏதாவது மாற்றம் வரப்போகிறதா?
- உங்களுக்கு நல்ல நோக்கம் இருக்கலாம்.
நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ளது குறித்து நடிகர் அரவிந்த்சாமி கருத்து தெரிவித்து உள்ளார். அப்போது அவர் கூறியதாவது:
நான் ரஜினி, கமல் சாரின் பெரிய ரசிகன், விஜயை ரொம்ப பிடிக்கும் என்பதற்காக ஓட்டு போடக்கூடாது. நான் ஓட்டு போடமாட்டேன்.
மற்றவர்கள் எப்படி பண்றாங்க என்று நான் சொல்லவில்லை. நீங்கள் சொல்லுற விஷயத்தில் ஏதாவது மாற்றம் வரப்போகிறதா?.
உங்களால் அது முடியுமா? உங்களின் நல்ல எண்ணங்கள், நோக்கம் அது எனக்கு முதலில் ரீச்-ஆக வேண்டும். நீங்கள் ஒரு பெரிய ஆக்டர். நீங்கள் நல்ல கவர்ன்மென்ட் பாலிசியை எல்லாம் சொல்ல என்ன தகுதி இருக்கிறது என்று நான் எப்படி நம்புவது. உங்களுக்கு நல்ல நோக்கம் இருக்கலாம். நல்ல எண்ணங்கள் இருக்கலாம்.

இவ்வளவு நாள் நல்ல ஹீரோவாக இருந்திருக்கிறேன். சினிமாவில் எல்லோரையும் காப்பாற்றி இருக்கிறேன் என்ற நம்பிக்கையில் திரும்பவும் மக்களை காப்பாற்ற போகிறேன் என்று ஒரு 'ஸ்டாருக்கு' வருகிற 'மைண்ட் செட்' உங்களுக்கு இருக்கலாம்.
ஆனால் நீங்கள் ஒரு மாநிலத்தை ஆள்வதற்கு, ஒரு பாலிசியை உருவாக்குவதற்கு என்ன படிச்சு இருக்கீங்க. நீங்க பண்ண முடியாது என்று நான் சொல்லவில்லை. ஆனால் பண்ண முடியும். மக்களுக்கு நல்லது செய்ய, புதிய திட்டங்கள் உருவாக்க ஒரு தலைமைத்துவ பண்பு எங்கே இருக்கிறது.
இவ்வாறு அரவிந்த் சாமி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
- நடிகர் பாலா பல சேவைகளை செய்து வருகிறார்.
- மருத்துவத்திற்காக இலவச ஆட்டோ வழங்கினார்.
சின்னத்திரையில் தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பாலா. 'கலக்கப்போவது யாரு' எனும் நிகழ்ச்சி மூலம் திரையுலகிற்கு அறிமுகமான பாலா 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றார். தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல குழந்தைகளின் படிப்பிற்கு உதவி வருகிறார். மேலும், சமூக சேவையும் செய்து வருகிறார். மருத்துவ வசதி இல்லாமல் இருக்கும் கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் மருத்துவத்திற்காக இலவச ஆட்டோ சேவையும் வழங்கி வருகிறார்.
இந்நிலையில் நடிகர் பாலாவிடம் விஜய் கட்சி தொடங்கியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "விஜய் சார் பீக்கில் இருப்பவர், நான் வீட்டில் இருப்பவன். விஜய் சார் பற்றி பேசுவதற்கு எனக்கு தகுதி இல்லை. அரசியலில் சேரும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை. எனக்கு பதவி ஆசை இல்லை. அந்த அளவிற்கு மூளையும் இல்லை.

எனக்கு சேவை மட்டும் போதும். அரசியலில் தாக்கு பிடிக்கும் அளவிற்கு எனக்கு அறிவு இல்லை. நான் பத்து ஆம்புலன்ஸ் தருவதாக கூறினேன், அதில் ஐந்து முடித்துவிட்டேன் மீதியையும் கொடுத்துவிடுவேன். இது முடித்துவிட்டு இன்னொரு இலக்கு இருக்கிறது அதை நோக்கி பயணிப்பேன். இதில் எந்த விதமான அரசியல் நோக்கம் இல்லை, அன்பின் ஏக்கம் மட்டுமே இருக்கிறது" என்று கூறினார்.






