என் மலர்
சினிமா செய்திகள்
இந்தியாவிலேயே முதன் முறையாக 2000 முதலைகளை வைத்து 'ஆண்கள் ஜாக்கிரதை' என்ற தமிழ் படம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
ஜெமினி சினிமாஸ் மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனங்கள் இனணந்து தயாரித்துள்ள படம் 'ஆண்கள் ஜாக்கிரதை'. இந்த படத்தை முத்து மனோகரன் இயக்கியுள்ளார்.
இந்த படம் குறித்து இயக்குனர் கூறுகையில், 'இது ஒரு வித்தியாசமான திரில்லர் படம். அளவுக்கு அதிகமான சுதந்திரம் பெண்களையும் தவறு செய்ய தூண்டும். அதனால் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.

இந்தியாவிலேயே முதன் முறையாக 2000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் இது. ஒரு கோடிக்கு அதிகமாக செலவிட்டு 2000 முதலைகளை 15 நாட்களாக ஒரே இடத்தில் வைத்து அவைகளுக்கு உணவாக சிக்கன், மாட்டிறைச்சி போன்றவற்றை டன் கணக்கில் போட்டு அவைகளை தண்ணீருக்குள் இருந்து வெளியே வரவைத்து மிகவும் சிரமப்பட்டு எடுத்தோம்.

கிளைமாக்ஸ் காட்சியில் அனைத்து முதலைகளும் ஒன்றாக சேர்ந்து வருவது போல் ஒரு காட்சி இருக்கிறது அந்த காட்சியை திரையில் பார்க்க படு பயங்கரமாக இருக்கும் அதுதான் இந்த படத்தின் ஹைலைட் காட்சி என்றார் இயக்குனர்.
இந்த படத்தில் முருகானந்தம், ஜெமினி ராகவா, சங்கீதா, ஐஸ்வர்யா, மஹிரா,ரேஷ்மி, மூர்த்தி, இளங்கோ ஆகியோர் நடிக்கிறார்கள். படம் விரைவில் வெளியாக உள்ளது.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா, ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்திற்காக உடல் எடையை கூட்ட பல முயற்சிகள் எடுத்து வருகிறார்.
அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்த கதாபாத்திரத்துக்காக உடல் எடையை கூட்டினார். அனுஷ்காவுக்காகவே பாகுபலி 2-ம் பாகம் படத்தின் படப்பிடிப்பை தள்ளி வைத்து பின்னர் எடுத்தார் ராஜமவுலி. அப்போதும் உடல் எடை மெலியாததால் அனுஷ்கா நடித்த காட்சிகளை கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தில் மெல்லிய தோற்றமாக மாற்றி அமைத்தனர்.
அனுஷ்காவின் நிலைமை தற்போது கங்கனாவுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகும் ‘தலைவி’ படத்தில் நடிக்க கங்கனா ஒப்புக்கொண்டிருக்கிறார். இப்படத்தை விஜய் இயக்குகிறார்.

ஜெயலலிதாவின் 17 வயது இளமை பருவத்திலிருந்து இக்கதை தொடங்குகிறது. அரசியலுக்கு வந்த பின்னர் ஜெயலலிதா பருமனான தோற்றத்துக்கு மாறினார். அவரைப்போல் தனது உடல் எடையை கூட்டி நடிக்க முடிவு செய்திருக்கிறார் கங்கனா. உடல் பருமன் ஆவதற்காக அதிக உணவு எடுத்துக்கொள்வதுடன் பல முயற்சிகளையும் அவர் செய்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு பட உலகின் முன்னணி கதாநாயகியான அனுஷ்கா, அடுத்ததாக ஜான்சி ராணி வேடத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு பட உலகின் முன்னணி கதாநாயகியான அனுஷ்கா நடிப்பில் பாகுமதி படம் கடந்த வருடம் ஜனவரியில் திரைக்கு வந்தது. அதன்பிறகு படங்கள் குறைந்தன. ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் உடல் எடையை கூட்டிய அனுஷ்காவால் மீண்டும் அதை குறைக்க முடியவில்லை. இதனாலேயே அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை.
அதன்பிறகு வெளிநாடு சென்று ஒரு மாதம் சிகிச்சை எடுத்து பழைய தோற்றத்துக்கு மாறி திரும்பினார். தற்போது மாதவன் ஜோடியாக ‘சைலன்ட்’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் இது தயாராகிறது. அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா ஆகியோர் நடிக்கும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ சரித்திர படத்திலும் அனுஷ்கா கவரவ தோற்றத்தில் வருகிறார்.

இந்த படத்தில் அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது படமாக்கி முடிக்கப்பட்டு உள்ளன. இதில் அனுஷ்கா ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட ஜான்சிராணி சம்பந்தமான சில காட்சிகள் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் இடம்பெறுகிறது என்றும், அந்த காட்சிகளில் அனுஷ்கா ஜான்சி ராணியாக வருகிறார் என்றும் படக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.
நயன்தாராவை வைத்து வெற்றி படத்தை கொடுத்த பிரபல இயக்குனர் அடுத்ததாக சமந்தாவை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடித்திருந்த படம் அறம். விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றதுடன் வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றது. கவுன்சிலர் தோண்டிய ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்க போராடும் துணிச்சலான கலெக்டராக இந்த படத்தில் நயன்தாரா நடித்து இருந்தார்.
கவுன்சிலரை கைது செய்து சிறையில் தள்ளியதால் அரசியல்வாதிகள் கோபத்துக்கு ஆளாவதும் இதனால் பதவியை துறந்து மக்களுக்கு சேவை செய்ய அரசியலில் ஈடுபட தயாராவது போன்றும் படத்தை எடுத்து இருந்தனர். இந்த படத்துக்காக நயன்தாராவுக்கு விருதுகளும் கிடைத்தன.

இதையடுத்து கோபி நயினார் அறம் படத்தின் 2-ம் பாகம் இயக்க உள்ளதாக செய்திகள் பரவி வந்த நிலையில், அவர் சமந்தாவை வைத்து புதிய படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கௌதம் ராஜ் இயக்கத்தில் ஜோதிகா, ஹரிஷ் பெராடி, பூர்ணிமா பாக்யராஜ், சத்யன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ராட்சசி’ படத்தின் விமர்சனம்.
கிராமத்து அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்கிறார் ஜோதிகா. அந்த பள்ளிக்கூடத்தில் எதுவும் சரியில்லை. மிகவும் சீர் கெட்டு இருக்கிறது. இதை பார்க்கும் ஜோதிகா, தரமான கல்வியை தந்து உயர்த்த வேண்டும் என்று முடிவு செய்கிறார்.
முதல் முயற்சியாக பள்ளியை சுகாதார சீர்கேட்டில் இருந்து மீட்டெடுக்கிறார். பின்னர் மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோரை ஒழுங்கு படுத்துகிறார். இதையும் தாண்டி தனியார் பள்ளி உரிமையாளர் ஹரிஷ் பெராடி ஜோதிகாவிற்கு தொல்லை கொடுக்கிறார்.
இவைகளை சமாளித்து அந்த பள்ளிக் கூடத்தை ஜோதிகா எப்படி மேம்படுத்தினார் என்பதே படத்தின் மீதிக்கதை.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜோதிகா, தற்போது சமூக அக்கறை கொண்ட படத்தின் கதையை தேர்வு செய்து நடித்திருக்கிறார். தலைமை ஆசிரியராக அரசு பள்ளியில் நடக்க கூடிய அவலங்களை மிகச்சிறப்பாக சுட்டிக் காட்டி அதற்கான தீர்வுகளையும் சொல்லியிருக்கிறார். தலைமை ஆசிரியர் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்று தன்னுடைய கதாபாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
தனியார் பள்ளி உரிமையாளராக வரும் ஹரிஷ் பெராடி, தனது பள்ளி எப்போதும் முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் செய்யும் வேலைகளில் நேர்மை இருப்பது சிறப்பு. ஜோதிகாவுடன் நெருக்கமாக பழகும் சிறுவனின் நடிப்பு அபாரம். சில காட்சிகளில் மட்டுமே வரும் பூர்ணிமா பாக்யராஜ்ஜின் நடிப்பு நிறைவு.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் சத்யன், பி.டி.மாஸ்டராக நகைச்சுவையில் கைக்கொடுத்திருக்கிறார். உதவி தலைமை ஆசிரியராக கவிதா பாரதியின் நடிப்பு ரசிக்க வைக்கிறது.

கல்வி, பள்ளிக்கூடம் என முதல் படத்திலேயே சமூக அக்கறையுடன் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கௌதம் ராஜ். அரசு பள்ளிகளில் நடக்கும் தவறுகளையும், ஒழுங்குபடுத்தும் முறைகளையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
குறிப்பாக பத்தாம் வகுப்பில் பள்ளி 100 சதவிகிதம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக 9ம் வகுப்பில் மாணவர்களை தேர்ச்சி பெறாமல் செய்வது, அந்த மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்பதை ஆசிரியர்கள் சிந்திக்க வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெறாத மாணவர்களை மீண்டும் 10ம் வகுப்பில் சேர்த்து தேர்ச்சி பெற வைத்து அதில் வெற்றி காண்பது, இயக்குனருக்கு கிடைத்த வெற்றி என்றே கூறலாம். பள்ளி கூடத்தை மட்டுமே மையமாக வைத்து உருவாக்கி இருக்கிறார். எல்லோருக்கும் தெரிந்த கதைதான். ஆனால், இந்த படத்தில் சுவாரஸ்யம் கூடுதலாக இருந்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்.
சான் ரோல்டன் இசையில் பாடல்கள் அதிகமாக ஈர்க்க வில்லை. பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க வைத்திருக்கிறார். கோகுல் பெனாயின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘ராட்சசி’ வீரமானவள்.
ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்துள்ள 'ஆடை' படத்தின் டிரைலரை பிரபல பாலிவுட் இயக்குனர் வெளியிட உள்ளார்.
‘மேயாத மான்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ரத்னகுமார் அடுத்ததாக அமலா பாலை வைத்து 'ஆடை' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல் சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்துள்ளார். ஆதலால் இப்படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படத்தின் டிரைலரை பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப் நாளை வெளியிட உள்ளார்.
இவர் நயன்தாரா நடிப்பில் வெளியான 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
ஜெகன், மனிஷாஜித், சாம்ஸ் நடிப்பில் முருகலிங்கம் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே’ படத்தின் விமர்சனம்.
நாயகன் ஜெகன் தனது மாமா மகளான நாயகி மனிஷாஜித்தை காதலித்து வருகிறார். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்கின்றனர். ஆனால் இவர்களின் திருமணத்திற்கு மனிஷாவின் அண்ணன் சாம்ஸ் முட்டுக்கட்டை போடுகிறார்.
தனது தங்கையை போலீஸ் துறையில் சாதித்தவனுக்கு தான் திருமணம் செய்து கொடுப்பேன் என திட்டவட்டமாக கூறிவிடுகிறார் சாம்ஸ். போலீசை பார்த்தாலே பயந்து ஓடும் ஜெகன் காதலிக்காக, போலீஸ் ஆகலாம் என முடிவெடுக்கிறார். இந்த சூழலில் ஹெட் கான்ஸ்டேபிலாக இருக்கும் நண்பனின் உதவி மூலம் ஜெகன் போலீசாகிவிடுகிறார்.

இந்நிலையில், அதே ஊரில் கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார் பிறைசூடன். அவரின் மகளான டிசோசா, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நிருபர் விவேக்ராஜை காதலிக்கிறார். இது பிறைசூடனுக்கு தெரியவர, மகள் டிசோசாவை கண்டிக்கிறார். ஆனால் டிசோசா, காதலன் விவேக்ராஜை தான் கரம்பிடிப்பேன் என தந்தை பிறைசூடனிடம் துணிச்சலாக சொல்லி விடுகிறார்.
டிசோசா தனது காதலனுடன் ஜெகன் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று எங்களுக்கு திருமணம் செய்து வைக்க கோரி கேட்கிறார். இதையேற்று ஜெகன் திருமணம் செய்து வைக்கிறார். இந்த விஷயம் பிறைசூடனுக்கு தெரியவர, ஜெகனுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பிக்கிறார். இந்த தொல்லையில் இருந்து மீண்டு போலீஸ் துறையில் சாதித்தாரா? காதலி மனிஷாவை ஜெகன் கரம்பிடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

காமெடியனாக இருந்த ஜெகன் இந்த படம் மூலம் கதாநாயகனாக மாறி இருக்கிறார். தனக்கு பொருத்தமான கதையை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். ஆக்ஷன், எமோஷனல் இல்லாமல் காமெடி நாயகனாக வருகிறார். சீரியசான கதாநாயகனாக விவேக் ராஜ். நடிப்பில் குறை வைக்கவில்லை. மனிஷா ஜித், டிசோசா இருவரும் கவர்ச்சி, காதல் காட்சிகளில் விருந்து படைக்கிறார்கள். வில்லனாக பிறைசூடன் கச்சிதமான நடிப்பு. சாம்ஸ், அம்பானி சங்கர், ரவிகுமார், நிகிதா ஆகியோரும் சரியான தேர்வுகள்.
எளிமையான கதையை அதில் காதலையும் நகைச்சுவையும் சேர்த்து திரைக்கதையாக்கி இருக்கிறார் காரைக்குடி நாராயணன். முருகலிங்கம் இயக்கத்தில் இளமை துள்ளுகிறது. சிவராஜின் ஒளிப்பதிவும் கவின் சிவாவின் இசையும் படத்துக்கு தேவையான பங்களிப்பு வழங்கியுள்ளன.
மொத்தத்தில் ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே’ காமெடி கல்யாணம்.
வெற்றிமாறன் இயக்கும் அசுரன் படத்தில் நடித்து வரும் தனுஷ், அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை லண்டனில் இருந்து தொடங்குகிறார்.
நடிகர் தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கும் அசுரன் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து துறை செந்தில்குமார் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதம் லண்டனில் தொடங்க இருப்பதாகவும், 60 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

3 ஆண்டுகளுக்கு முன்னர் தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் ஒருசில காரணங்களால் அது தடை பட்டது. இந்த இடைவேளையில் ரஜினி நடித்த 'பேட்ட' படைத்த இயக்கி வெற்றி கண்டார் கார்த்திக் சுப்புராஜ்.
தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளராக வலம் வரும் அனிருத், தற்போது சிக்ஸர் படத்திற்காக ஜிப்ரான் இசையில் ஒரு பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர் இசை அமைப்பது மட்டுமல்லாது பாடல் பாடுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் ஜிப்ரான் இசையமைத்து வரும் 'சிக்ஸர்' படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார்.
இதுகுறித்து ஜிப்ரான் தனது சமூக வலைத்தளத்தில், 'எனது இசையில் அனிருத் முதன்முறையாக பாடியுள்ளார். "பாபா பிளாக் ஷிப்" என தொடங்கும் பாடலை பாடியுள்ளார்'. என பதிவிட்டுள்ளார்.
It’s a #sixer shot by our @anirudhofficial . Collaborating for the first time & enjoyed every bit. Thanks for lending your voice brother . A rappish quirky EDM song 🎧#BabaBlacksheep 🐏 from @actor_vaibhav starring #Sixer coming soon 🤞🏼 pic.twitter.com/TFCWx5XFTi
— Ghibran (@GhibranOfficial) July 5, 2019
வைபவ் நடித்துள்ள 'சிக்ஸர்' படத்தை அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கியுள்ளார். இந்த படத்தில் வைபவ் ஜோடியாக பல்லக் லால்வானி நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
‘தடம்’ படத்தை தொடர்ந்து அருண் விஜய் நடித்து வரும் ‘பாக்ஸர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் லீக் ஆனதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
'தடம்’ படத்தை தொடர்ந்து அருண் விஜய் ‘பாக்ஸர்’ என்கிற படத்தில் நடித்து வருகின்றார். விவேக் இயக்கம் இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்திற்காக சூர்யாவின் ‘ஏழாம் அறிவு’ படத்தில் வில்லனாக நடித்த ஜானியிடம் அருண் விஜய் பாக்சிங் பயிற்சி எடுத்து நடித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை திடீரென பாக்ஸர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் லீக் ஆனது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த படக்குழு பின்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

இது குறித்து அருண்விஜய் கூறுகையில், " மாஃபியா படத்தின் பர்ஸ்ட் லுக் சில தினங்களுக்கு முன்னர் தான் வெளியிட்டோம். அதனால் பாக்ஸர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சில மாதங்கள் கழித்து வெளியிட திட்டமிட்டிருந்தோம். திடீரென லீக் ஆனது வருத்தம் அளிக்கிறது. இருப்பினும் மக்கள் அதற்கு தரும் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படத்திற்காக 9 மாதம் கடினமாக உழைத்துள்ளேன்" என கூறினார்.
களவாணி 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஓவியா, எனக்கு ஆண் துணை தேவையே இல்லை என்று கூறியிருக்கிறார்.
களவாணி படம் மூலம் அறிமுகமானவர் ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தற்போது களவாணி படத்தின் அடுத்த பாகமான களவாணி 2விலும் நாயகியாக நடித்துள்ளார்.
சற்குணம் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விமல், விக்னேஷ்காந்த், ரோபோ சங்கர் நடித்துள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஓவியாவிடம் அவரது திருமணம் பற்றியும் அரசியலுக்கு வருவீர்களா? என்றும் கேள்விகள் கேட்கப்பட்டது. அவற்றுக்கு ஓவியா அளித்த பதிலில் கூறியதாவது:-

நான் திருமணமே செய்துகொள்ளப்போவது இல்லை. எனக்கு ஆண் துணை தேவையே இல்லை. தனியாக இருக்கும்போதே மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனவே திருமணம் வேண்டாம்.
எதிர்காலத்தில் என் மனது மாறினால் பார்ப்போம். எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் எதுவும் இல்லை. சினிமாவில் நடிக்க வேண்டும். நான் நடிக்கும் படங்கள் லாபம் பார்க்கவேண்டும். அது போதும்’. இவ்வாறு அவர் கூறினார்.
ஜான் வாட்ஸ் இயக்கத்தில் டாம் ஹோலாண்டு நடிப்பில் வெளியாகி இருக்கும் ”ஸ்பைடர் மேன் பார் பிரெம் ஹோம்” படத்தின் விமர்சனம்
பீட்டர் பார்க்கர் (ஸ்பைடர் மேன்) நியூ யார்க்கில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர் உடன் படிக்கும் மரியா ஹில்லை காதலித்து வருகிறார். இந்த வேளையில் அவர் படிக்கும் கல்லூரியிலிருந்து, மாணவர்களை ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் அழைத்துச் செல்கிறார்கள்.
அங்கு பஞ்சபூத அரக்கர்கள் நீர் மூலம் ஐரோப்பாவின் வெனிஸ் நகரை தாக்குகின்றனர். அவர்களின் இந்த தாக்குதலை ஸ்பைடர் மேனால் தடுக்க முடியவில்லை, இருப்பினும் குவின்டின் பெக் பஞ்சபூத அரக்கர்களின் சதியை முறியடிக்கிறார்.

பஞ்ச பூத அரக்கர்களை எதிர்த்து குவின்டின் பெக் செய்யும் சண்டைகள் ஸ்பைடர் மேனை ஈர்க்கிறது. கடந்த முறை சதி முறியடிக்கப்பட்டதால், நெருப்பு மூலம் பஞ்சபூத அரக்கர்கள் மீண்டும் தாக்குதல் நடத்துகின்றனர். இதனை ஸ்பைடர் மேன் முறியடிக்க முயலும் வேளையில், குவின்டின் பெக் சாதுரியமாக செயல்பட்டு பஞ்ச பூத அரக்கர்களின் சதியை முறியடிக்கிறார்.
அந்தத் தருணத்தில் அயர்ன் மேனின் சக்தி வாய்ந்த கண்ணாடி ஸ்பைடர் மேனுக்குக் கிடைக்கிறது. ஆனால் ஸ்பைடர் மேன் அந்த சக்தி வாய்ந்த கண்ணாடியை குவின்டினுக்கு தந்துவிடுகிறான்.
ஆனால், உண்மையில் குவின்டின் பெக், நல்லவன் இல்லை என்பதும், பஞ்சபூத அரக்கர்கள் தாக்குவதுபோல, பொய் காட்சிகளை உருவாக்கி பயமுறுத்தியதும் பிறகுதான் ஸ்பைடர் மேனுக்குத் தெரிகிறது.

அதற்குள், அயர்ன் மேனின் சக்தி வாய்ந்த கண்ணாடியை வைத்து செயற்கைக்கோள்களில் உள்ள ஆயுதங்களையும் டுரோன்களையும் கட்டுப்படுத்தி, தாக்குதல் நடத்த ஆரம்பிக்கிறான் குவின்டின்.
இந்தத் தாக்குதல்களிலிருந்து ஐரோப்பாவை ஸ்பைடர் மேன் காப்பாற்றினாரா? காதலியை கரம்பிடித்தாரா? என்பது மீதிக் கதை.

படம் முழுவதும் 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் காதல் காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளன. துறுதுறு இளைஞராக ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தில் டாம் ஹோலண்டு நடித்து அசத்தியுள்ளார். குவின்டின் பெக் ஸ்மார்டான வில்லனாக வந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஹீரோயினும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ஐரோப்பாவின் ஒவ்வொரு நகரமாக ஸ்பைடர் மேனும் குவின்டின் பெக்கும் சாகசம் நிகழ்த்துவது ரசிகர்களை ஈர்த்துள்ளது.
ஸ்பைடர் - மேன் பட வரிசைகளில் படத்தின் துவக்கத்திலிருந்தே சிறுசிறு சாகசங்களின் மூலம் தொய்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்வார்கள். இந்தப் படத்தில் முதலில் வரும் சாகசத்திற்குப் பிறகு, படத்தின் பிற்பாதி வரை, சற்று மெதுவாகவே நகர்கிறது. இருந்தபோதும், மார்வெல் பாணி சூப்பர் ஹீரோ பட ரசிகர்கள் இந்தப் படத்தை நிச்சயம் ரசிப்பார்கள்.
மொத்தத்தில் ”ஸ்பைடர் மேன் பார் பிரெம் ஹோம்” மார்வெல் ரசிகர்களுக்கு மட்டும்.






