என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிகில் இசை வெளியீட்டு விழாவில் இரும்புத்திரை பட பாடல் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் விவேக்குக்கு சிவாஜி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    பிகில் பட இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் விஜய் பேசிய அரசியல் கருத்துகளுக்கு அ.தி.மு.க.வினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், சிவாஜி கணேசனின் பாடலை கிண்டலடித்ததாக கூறி நடிகர் விவேக்குக்கு சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் சந்திர சேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- “பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விவேக் 1960-ம் ஆண்டு வெளிவந்த சிவாஜி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த இரும்புத்திரை திரைப்படத்தின் ‘நெஞ்சில் குடியிருக்கும்’ என்று தொடங்கும் அருமையான பாடலை கிண்டலடித் திருக்கிறார்.

    விவேக், விஜய்

    மேடை கிடைத்துவிட்டால், கூட்டத்தைப் பார்த்து விட்டால் சிலர் உளற ஆரம்பித்துவிடுவார்கள். அந்த வரிசையில் நடிகர் விவேக்கும் இணைந்துள்ளார். எந்த நடிகரை வேண்டுமானாலும் தூக்கி வைத்துக் கொண்டாடுங்கள், எந்த இசையமைப்பாளர் அல்லது பாடலை வேண்டுமானால் பாராட்டுங்கள் தவறு இல்லை. ஆனால் ஒரு நடிகரை காக்கா பிடிப்பதற்காக, ஏற்கெனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள ஒரு பாடலை கிண்டலடிப்பதை ஏற்று கொள்ள முடியாது.

    ஏதோ இப்போதுதான் அந்த பாடல் மக்களுக்கே தெரிய வருவது போல கூறும் விவேக், ‘நெஞ்சில் குடியிருக்கும்’ என்ற 1960-ம் ஆண்டு வெளிவந்த பாடல் மிகவும் வரவேற்பைப் பெறவில்லை என்றால், ஏன் அதே டியூனை மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்று கூறத்தயாரா? டியூனுக்கு ஏற்பட்ட பஞ்சம் காரணமாக பிரபலமான டியூன் என்பதாலேயே அதனைக் காப்பியடித்து பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற சாதாரண அறிவு கூட இல்லாமல் பேசியிருக்கிறார் விவேக். 

    சிவாஜி கணேசனின் புகழ்பெற்ற பராசக்தி திரைப்படத்தில் வரும் நீதிமன்ற வசனத்தை பேசி கிண்டலடித்திருந்தார் விவேக். இப்போது சிவாஜி கணேசனின் அருமையான திரைப்பட பாடலை பொதுமேடையில் கிண்டலடித்திருக்கிறார். இதுபோல தொடர்ந்து விவேக் செய்தால் அவருக்கு எதிராக ரசிகர்களை ஒன்று திரட்டி சிவாஜி சமூக நலப்பேரவை போராட்டம் நடத்தும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    விவேக்கின் டுவிட்டர் பதிவு

    இதுகுறித்து நடிகர் விவேக் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- 1960-ல் இரும்புத்திரை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி பாடிய பாடலின் முதல் வரி ‘‘நெஞ்சில் குடி இருக்கும் ’’ அப்போது அது காதல் உணர்வைக் குறித்தது. ஆனால் இப்போது விஜய் அதை சொல்லும் போது மந்திர சக்தி வார்த்தையாக இருக்கிறது. இதுவே நான் பேசியது. அன்பு உள்ளங்கள் புரிந்துகொள்க.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
    41 வருடங்களாக சினிமாவில் நடித்து வரும் நடிகை ராதிகா சரத்குமாருக்கு ’நடிகவேள் செல்வி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.
    டைரக்டர் சரண் இயக்கியிருக்கும் புதிய படம், “மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.“ இதில், பிக்பாஸ் புகழ் ஆரவ் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக காவ்யா தப்பார் நடித்திருக்கிறார். மேலும் சரத்குமார், ராதிகா சரத்குமார், நாசர், ரோகிணி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். மோகன் தயாரித்துள்ள இப்படத்துக்கு சைமன் கே.கிங் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது.

    இந்த விழாவில், ராதிகா சரத்குமாருக்கு ‘நடிகவேள் செல்வி’ என்ற பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. சரத்குமார், டைரக்டர் சரண், ஆர்.கே. செல்வமணி, நாசர், ரோகிணி, தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, ஏ.எல்.அழகப்பன், தனஞ்செயன் ஆகியோருடன் படக்குழுவினரும் மேடையேறி ராதிகா சரத்குமாருக்கு பட்டம் வழங்கி வாழ்த்தினார்கள்.

     ராதிகா சரத்குமாருக்கு வழங்கப்பட்ட பட்டம்

    அதற்கு நன்றி தெரிவித்து ராதிகா சரத்குமார் பேசியதாவது:- “என் அப்பாவின் நினைவு போற்றப்படுவதில் மகிழ்ச்சி. நான் முதன் முதலில் பாரதிராஜா படத்தில் நடித்தபோது என் தந்தை ஆச்சரியப்பட்டார். நான், சினிமாவில் ஆர்வம் இல்லாமல் இருந்தவள். முதன்முதலாக நடிக்கும்போது, மேக்கப்பை தொட்டு “என் தொழில் உன்னிடம் இருக்கட்டும்” என என்னை ஆசீர்வதித்தார். அவரது ஆசீர்வாதம்தான் என்னை இந்த இடத்தில் சேர்த்திருக்கிறது.

    இந்த படத்தில் என் ‘கேரக்டர்’ என் அப்பாவின் சாயல் கொண்டது. அதுதான் இந்த பட்டம் கொடுக்க வேண்டும் என்று சரணுக்கு ஞாபகப்படுத்தியிருக்கும் என நினைக்கிறேன். எதுவானலும், எனக்கு இந்த பட்டம் வழங்கியதற்கு நன்றி.” இவ்வாறு ராதிகா சரத்குமார் பேசினார்.

    சரத்குமார் பேசியதாவது:- “ராதிகாவை கவுரவப்படுத்தியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ராதிகா 41 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். அவர் இன்னும் பல உயரங்களுக்கு செல்ல வேண்டியவர். என்னை விட, அவர் நடிப்பில் மூத்தவர், பிரபல நட்சத்திரம். என்னைப் பொறுத்தவரை அவர்தான் ‘லேடி சூப்பர் ஸ்டார்.” அவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது கிடைத்திருக்க வேண்டும். ‘பத்மஸ்ரீ’க்கு தகுதியானவர் அவர்.” மேற்கண்டவாறு சரத்குமார் கூறினார்.
    ஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கனும் என் 7-ம் அறிவை என பார்த்திபன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    பார்த்திபன் இயக்கத்தில் உருவான ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் அவர் மட்டுமே நடித்துள்ளார். வித்தியாசமான கோணத்தில் இப்படத்தை அவர் இயக்கியுள்ளார். எனவே, இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.  

    புதுப்படங்கள் தியேட்டர்களில் வெளியான சில மணி நேரங்களில் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகி விடுகின்றன. இதனை தடுக்க அரசு தரப்பிலும், திரைத்துறை தரப்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும், இது குறைந்தபாடில்லை. அந்தவகையில் பார்த்திபன் நடிப்பில் வெளியான ஒத்த செருப்பு சைஸ் 7 படமும் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகியது. 

    பார்த்திபனின் டுவிட்டர் பதிவு

    இது தொடர்பாக பார்த்திபன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ”இப்படிப் பட்ட படத்தையும் ஈவு இரக்கம் இல்லாமல் கழிவிரக்கம் செய்து போடுவதும், பார்ப்பதும் அருவருப்பான செயல்! ஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கனும் என் 7-ம் அறிவை! இப்படி ஒரு படத்தை இனி எடுப்பியான்னு! தியேட்டரில் கிடைக்கும் வரவேற்புக்கு இன்னும் பல செய்ய தூண்டுகிறது”. என பதிவிட்டுள்ளார்.
    சமீபத்தில் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விகளுக்கு பதில் அளித்த காஜல் அகர்வால், தனக்கு மாப்பிள்ளையாவது எளிதல்ல என கூறினார்.
    காஜல் அகர்வால் 34 வயதிலும் இன்னும் கதாநாயகியாகவே முன்னணி ஹீரோக் களுக்கு ஜோடிபோட்டு வருகிறார். அதற்கேற்ப தனது உடற்கட்டை ஸ்லிம் தோற்றத்தில் பராமரிக்கிறார். காஜல் அகர்வாலின் தங்கைக்கு திருமணமாகி குழந்தையும் இருக்கிறது. எனவே காஜலிடம் அடிக்கடி 'உங்க கல்யாணம் எப்போது?' என்ற கேள்வியும் சேர்ந்தே கேட்கப்படுகிறது. 

    சமீபத்தில் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு காஜல் பதில் அளித்தார். திருமணத்தின் மீது நம்பிக்கை இருக்கிறதா என்று காஜலிடம் ஒருவர் கேட்டபோது,' திருமண உறவின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நானும் திருமணம் செய்ய தயாராகவே இருக்கிறேன். நேரம் வரும்போது அதுபற்றி அறிவிப்பேன். 

    காஜல் அகர்வால்

    அவரது இந்த பதில் சீக்கிரமே காஜலுக்கு திருமணம் நடக்குமோ, அப்படியென்றால் மாப்பிள்ளை யாராக இருப்பார் என்ற கிசுகிசுக்களை எழுப்பி இருக்கிறது. குறும்புக்கார ரசிகர் ஒருவர் என்னை நீங்கள் திருமணம் செய்துகொள்வீர்களா என்றார். அதைக் கேட்டு டென்ஷன் ஆகாமல் காஜல் பதில் அளித்தார். கொஞ்சம் முயற்சி செய்துதான் பாருங்களேன், ஆனால் அது அவ்வளவு எளிது இல்லை என்று ரகளையாக பதில் அளித்தார்.
    மகிழ் திருமேணி இயக்கும் அடுத்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக பேட்ட பட நடிகை நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    மேகா ஆகாஷ், கவுதம் மேனனின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் மூலம் அறிமுகமாக வேண்டியவர். அந்த படத்தின் தாமதத்தால் இந்த ஆண்டு பொங்கலுக்கு வந்த ரஜினியின் ‘பேட்ட’ படமே இவருக்கு தமிழில் அறிமுக படமானது. அதன் பின்னர், சிம்புவின் ‘வந்தா ராஜா வாதான் வருவேன்’ படத்தில் நடித்தார். 

    தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் மேகா ஆகாஷ்,  ‘சாட்டிலைட் சங்கர்’ படத்தின் மூலம் இந்தியிலும் தடம் பதிக்கவுள்ளார். தமிழில் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். உதயநிதி ஸ்டாலின் முதன் முறையாக மகிழ் திருமேணி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். தடம் படத்தின் ரிலீசுக்கு முன்பே உதயநிதியிடம் இந்த படத்திற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். 

     மேகா ஆகாஷ்

    மகிழ்திருமேனியின் வழக்கமான திரில்லர் படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தின் முதற்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்க மேகா ஆகாஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. படத்தின் படப்பிடிப்பு தேதி முடிவானதும், மேகா ஆகாஷ் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என கூறப்படுகிறது.
    இந்திய சினிமா துறையின் மிகப்பெரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அமிதாப் பச்சனுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர் சாகேப் பால்கே. ஆகையால் தாதா சாகேப் பால்கே இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். 

    இந்திய சினிமா துறை வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்காற்றியதால் அவரது பெயரிலேயே ‘தாதா சாகேப் பால்கே’ என்ற விருது வழங்குகிறது. இந்த விருதுதான் இந்திய சினிமா துறைக்கு வழங்கப்படும் உயரிய விருதாக கருதப்படுகிறது.

    இதற்கிடையில், ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு அமிதாப் பச்சன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் இன்று அறிவித்துள்ளார்.

    1969-ம் ஆண்டு முதல் சினிமா துறையில் அறிமுகமாகி 190-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள அமிதாப் பச்சன் சிறந்த நடிகருக்கான தேசிய விருது உள்பட பல விருதுகளை வென்றுள்ளார்.

    அமிதாப் பச்சன்   

    இந்நிலையில், ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அமிதாப் பச்சனுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரஜினிகாந்த் வெளியிட்ட செய்தியில் பெரும் மதிப்புக்குரிய ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு அமிதாப் பச்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த விருதுக்கு அவர் மிகவும் தகுதியானவர் என தெரிவித்துள்ளார்.
    கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    கமல் இரண்டு ஆண்டு களுக்கு முன்பு ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தை அறிவித்திருந்தார். தற்போது அந்த படத்தை மீண்டும் தொடங்க இருக்கிறார். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் மற்றும் இந்தியில் உருவாகும் இந்த படத்தில் இந்தி நடிகர் சயீப் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அமீர் கானுடன் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. பின்னர் இதில் கமல் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்ற தகவல் வந்தது. 

    படத்தின் கதாநாயகன், வில்லன் என 2 வேடங்களுமே கமல்ஹாசன் தான். அமைதிப்படை பாணியில் இந்த வேடங்கள் இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் தலைவன் இருக்கின்றான் படம் ஒரு சீரியசான அரசியல் கதை என்றும் சொல்கிறார்கள். கமலின் அரசியலுக்கு இந்த படத்தின் கதை பெரிதும் உதவும் என்பதால் தான் இந்த படத்தை தூசி தட்டி எடுத்துள்ளார். 

    கமல்ஹாசன், வடிவேலு

    தற்போது இதில் நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வருகிறது. தேவர் மகன் படத்தின் 2ஆம் பாகமாக தலைவன் இருக்கின்றான் படம் உருவாவதாகவும் முதல் பாகத்தில் வடிவேலுவின் இசக்கி கதாபாத்திரம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றதால் கமல் அவர் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று சேர்த்து இருப்பதாகவும் செய்தி வந்துள்ளது. 
    விஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள பிகில் படத்தில் வில்லனாக நடித்த பிரபல நடிகர் தற்போது இணைய தொடரில் அறிமுகமாக உள்ளார்.
    பல படங்களில் வில்லனாக மிரட்டியவர் டேனியல் பாலாஜி. குறிப்பாக வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், அச்சம் என்பது மடமையடா, பைரவா, வடசென்னை ஆகிய படங்களில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது இவர் விஜய்யின் பிகில் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். 

    டேனியல் பாலாஜி

    இதுவரை படங்களில் நடித்து வந்தவர், தற்போது இணைய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ’காட் மேன்’ எனும் இணைய தொடரில் ஆன்மீக குருவாக நடிக்க உள்ளார். இந்த தொடரை ஜெயம் ரவி நடித்த தாஸ் படத்தை இயக்கிய பாபு யோகேஷ்வரன் இயக்க உள்ளார். விஜய் ஆண்டனியை வைத்து இவர் இயக்கியுள்ள தமிழரசன் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
    சம்பள விஷயத்தில் கறார் காட்டுவதாக செய்திகள் பரவி வந்த நிலையில் அது குறித்து நடிகை ரகுல் பிரீத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் இந்தி படங்களிலும் நடிக்கிறார். தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன்-2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். ரகுல் பிரீத் சிங் அளித்த பேட்டி வருமாறு:- “இதுதான் எனது எல்லை. இவ்வளவுதான் என்னால் செய்ய முடியும் என்று முடிவுக்கு வருவது எனக்கு பிடிக்காது. தினமும் புதிய முயற்சி செய்ய வேண்டும். 

    நேற்று மாதிரியே இன்றும் நடந்தால் அதில் என்ன விசேஷம் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிதாக ஏதாவது செய்வேன். அதுதான் சினிமாவில் இத்தனை நாட்களாக என்னை வைத்து இருக்கிறது. ஆரோக்கியத்துக்கும், உடற்பயிற்சிக்கும் முன்னுரிமை கொடுப்பேன். நான் சாப்பாட்டு பிரியை. எவ்வளவு சாப்பிடுகிறேனோ அதற்கேற்ப உடற்பயிற்சி செய்வேன். 

    ரகுல் பிரீத் சிங்

    சம்பள விஷயத்தில் நான் கறார் என்று பலரும் பேசுகிறார்கள். எனக்கு கொடுத்த கதாபாத்திரத்துக்கு எவ்வளவு உழைக்க வேண்டுமோ அவ்வளவு உழைக்க தயாராக இருக்கிறேன். எவ்வளவு சம்பளம் தர முடியும் முடியாது என்பதை முதலிலேயே சொல்லி விட வேண்டும். 

    பேசியபடி சம்பளத்தை தர மறுத்தால் ஏற்க மாட்டேன். அது எனக்கு பிடிக்காத விஷயம். அவர்கள் சொன்னதை நான் செய்த பிறகு பேசிய சம்பளத்தை தர வேண்டும். இதை வைத்து சம்பள விஷயத்தில் கெடுபிடியாக இருக்கிறேன் என்று விமர்சித்தால் கவலைப்பட மாட்டேன்.”

    இவ்வாறு ரகுல் பிரீத் சிங் கூறினார்.
    அறிமுக இயக்குனர் பி.என்.சி. கிருஷ்ணா இயக்கத்தில், புதுமுகங்கள் கிஷோர், சஸ்வதா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குஸ்கா’ படத்தின் முன்னோட்டம்.
    எஃப் எம் கலைக்கூடம் சார்பாக எஸ் நாராயணன் மற்றும் எஸ் சரவணகுமார் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில், நாயகனாக கிஷோர் அறிமுகமாக, இணையாக சஸ்வதா நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர்-நடிகர் பாக்கியராஜ், ரேகா, அப்புக்குட்டி, டி பி கஜேந்திரன், அனுமோகன், மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அறிமுக இயக்குனர் பி.என்.சி. கிருஷ்ணா இயக்கியிருக்கிறார்.

    குஸ்கா, சாலை விபத்தில் சிக்கிக் கொள்கின்ற ஒரு பெண்ணுடைய வாழ்வை பற்றிய உணர்வுபூர்வமான கதை. மிகவும் சிக்கலான ஒரு விஷயத்தை, இயக்குனர் மிகவும் நளினமாக காட்சிப்படுத்தி இருக்கிறார். இத்திரைப்படம் சாலை விபத்தின் தாக்கத்தை, இது வரை சொல்லப்படாத முற்றிலும் புதிய கோணத்தில் அணுகி இருக்கிறது. எம் எஸ் ராஜா ஒளிப்பதிவு செய்ய, ஆர் ஜி ஆனந்த் படத்தொகுப்பை கவனிக்க, கலை இயக்குனராக கே கலை நடராஜ் பங்காற்றி இருக்கிறார்.
    ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்லி பாய் என்கிற இந்தி படம் விருதை வெல்லும் என அலியாபட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    இந்தியா சார்பில் சிறந்த வெளிநாட்டு படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘கல்லிபாய்’ என்கிற இந்தி படம் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இதில் ரன்வீர் சிங் நாயகனாகவும், அலியா பட் நாயகியாகவும் நடித்துள்ளனர். சாயா அக்தர் இயக்கி உள்ளார். தந்தை மற்றும் சித்தியால் உதாசினபடுத்தப்பட்டு பாசத்துக்காக ஏங்குவதுபோல் ரன்வீர் சிங்கின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு உள்ளது. அவரது தோழியாக அலியா பட் வருகிறார். 

    வீதிகளில் பாடல்களை பாடி திரியும் இளைஞன் எப்படி பெயரும் புகழும் அடைகிறான் என்பது கதை. இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி இதுவரை ரூ.238 கோடி வசூல் ஈட்டி உள்ளது. கல்லிபாய் ஆஸ்கர் விருது போட்டிக்கு செல்வதற்கு அலியா பட் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். 

    கல்லி பாய் பட போஸ்டர்

    இதுகுறித்து அவர் கூறியதாவது:- “கல்லிபாய் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஆச்சரியமாக உள்ளது. ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்படும் எனது முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அளவற்ற மகிழ்ச்சியில் இருக்கிறேன். எனது உணர்வுகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை.

    கல்லி பாய் படக்குழுவினருக்கு இது பெருமையான விஷயம். ஆஸ்கர் விருதுக்கான இறுதி பரிந்துரையில் 5 படங்கள் இடம்பெறும் அதில் ஒரு படமாக கல்லிபாய் இருக்கும். ஆஸ்கர் விருதை கல்லிபாய் வெல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது.”

    இவ்வாறு அலியாபட் கூறினார்.
    'பிகில்' படத்தின் போஸ்டரில், இறைச்சி வியாபாரிகள் இழிவுபடுத்தப்பட்டுள்ளதாக கூறி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
    விஜய்-நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள படம் பிகில். அட்லீ இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தீபாவளியை முன்னிட்டு வருகிற அக்டோபர் 25-ந் தேதி பிகில் படம் திரைக்கு வருகிறது.
     
    இந்நிலையில், கோவை உக்கடம் புதிய மீன்மார்க்கெட் பகுதியை சேர்ந்த இறைச்சி வியாபாரி கோபால் என்பவர் கையில் நடிகர் விஜய்யின் பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவர் திடீரென்று நடிகர் விஜய் பட போஸ்டரை ஆக்ரோஷமாக கிழித்து எறிந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரை தடுத்தனர்.

    பிகில் பட போஸ்டர்

    இதையடுத்து அவர் கலெக்டரிடம் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:- நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில், மீன், கறிக்கோழி, ஆட்டு இறைச்சியை வெட்டும் கட்டை மற்றும் கத்தி மீது நடிகர் விஜய் செருப்பு அணிந்த கால் வைத்திருப்பது போன்று உள்ளது. இது இறைச்சி வியாபாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இறைச்சி வியாபாரிகளை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது. எனவே சர்ச்சைக்குரிய அந்த காட்சியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
    ×