என் மலர்
சினிமா செய்திகள்
ஜீன்ஸ் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய், தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
செக்கச்சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கவுள்ள புதிய படம் பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. கல்கியின் வரலாற்று புனைவான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்க திட்டமிட்டுள்ளார்.
அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், பார்த்திபன், அனுஷ்கா ஷெட்டி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என பல நட்சத்திரங்களின் பெயர்கள் இந்த படத்தில் நடிக்க போவதாக செய்திகள் வந்தன.
ஐஸ்வர்யா ராய், விக்ரம் ஆகிய இருவர் மட்டுமே இதை உறுதிசெய்துள்ளனர். சமீபத்தில் நடிகர் பார்த்திபனும் டுவிட்டர் பக்கத்தில் அவர் நடிப்பதாக அறிவித்தார். அதன் பின்னர் ஜெயராம், அமலா பால் ஆகியோரும் படத்தில் நடிக்க இருப்பதை உறுதிப்படுத்தினர்.

இதில் ஐஸ்வர்யா ராய் நந்தினி கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் அவர் இரண்டு வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மற்றொரு கதாபாத்திரத்தின் பெயர் மந்தாகினி தேவி என்கிறார்கள்.
தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித், தனது வீட்டிலேயே டப்பிங் தியேட்டர் ஒன்றை கட்டி வருகிறார்.
அஜித் எங்கு சென்றாலும், அவருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது வழக்கம். இதனாலேயே, அவருடைய படங்களின் படப்பிடிப்பு முடிந்தவரை தமிழகத்தில் நடைபெறுவதில்லை. அதிகமான ரசிகர்கள் கூட்டம் கூடுவதுதான் காரணம்.
தற்போது அவர் நடிப்பில் உருவாகும் படங்கள் அனைத்துமே அரங்குகள் அமைத்து ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலும், வெளிப்புறப் படப்பிடிப்பு என்றால் ராஜமுந்திரியிலும் நடைபெற்று வருவது வழக்கம். சென்னையில் திரையுலகம் சார்ந்து, தன் படங்களின் டப்பிங் பணிகளுக்காக மட்டுமே அஜித் வெளியே வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அதுவும் இரவில் தான் அஜித் டப்பிங் பணிகளை மேற்கொண்டு வந்தார். அப்போது கூட ரசிகர்கள் கூட்டம் ஒன்றுகூடி புகைப்படங்கள் எடுத்து வந்தனர்.

தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அஜித், தன் வீட்டுக்குள்ளேயே சொந்தமாக டப்பிங் தியேட்டர் ஒன்றைக் கட்டி வருகிறார். இதன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இனிவரும் படங்களுக்கான டப்பிங் பணிகள் அனைத்தும் இங்கேயே நடக்கும் எனத் தெரிகிறது.
தாதா 87 படத்தில் திருநங்கையாக நடித்து பெயர் பெற்ற நடிகை ஸ்ரீபல்லவி, தற்போது புதிய படத்தில் கல்லூரி மாணவியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
தாதா 87 படத்தில் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரீபல்லவி. நடிகைகளில் முதல்முறையாக திருநங்கையாக நடித்து பாராட்டு பெற்றார். தற்போது ஸ்ரீபல்லவி புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். நெஞ்சம் நிமிர்த்து என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் புதுமுகம் மோகன் கதாநாயகனாகவும் வராகி வில்லனாகவும் நடிக்கிறார்கள். சாம் இம்மானுவேல் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறியதாவது:- 'தனி மனித சுதந்திரமும், உரிமையும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை சொல்லும் இந்த படத்தில், கல்லூரி மாணவியாக ஸ்ரீபல்லவி நடிக்கிறார்.

எங்கு அநீதி நடந்தாலும் தட்டி கேட்கும் நாயகனுக்கும் சமூகத்தில் பல அநீதிகளை செய்யும் வில்லனுக்கும் நடக்கும் போராட்டமே கதை. நாயகனுக்கு ஊக்கம் அளிக்கும் வேடத்தில் ஸ்ரீ பல்லவி நடிக்கிறார்’ என்றார்.
சாஹோ படத்தை தொடர்ந்து நடிகர் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் இருந்து கதாநாயகி பூஜா ஹெக்டே திடீர் விலகி இருக்கிறார்.
பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், ஜாக்கி ஷெராப், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சாஹோ'. பெரும் பொருட்செலவில் உருவான இந்த படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்றது. படத்துக்காக வந்த விமர்சனங்கள் அனைத்தையும் பிரபாஸ் பார்வைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
வெவ்வேறு முக பாவனைகள், காமெடி இல்லாதது என பல்வேறு குறைகளை இந்த படம் தொடர்பாக விமர்சகர்கள் கூறி இருந்தனர். இதனை கருத்தில் கொண்டு அடுத்து நடிக்கும் 'ஜான்' படத்துக்கு சில மாற்றங்களை செய்யச் சொல்லியுள்ளார் பிரபாஸ்.

'ஜான்' படம் முழுக்க முழுக்க காதலை மையப்படுத்திய படமாகும். இந்த படத்தின் தெலுங்கு பதிப்புக்கு மட்டும் காமெடி காட்சிகளை சேர்க்க சொல்லியுள்ளார். இந்த மாற்றத்தால் 'ஜான்' படப்பிடிப்பு தாமதமாகியுள்ளது. இதனால் இதில் நாயகியாக நடித்து வந்த பூஜா ஹெக்டே அதில் இருந்து விலகி புதிய படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நாகார்ஜுனின் மகன் அகில் நடிக்கும் இந்தப் படத்தை பாஸ்கர் இயக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில், நடிகர் கவின் வீட்டை விட்டு வெளியேற இருக்கிறார்.
தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நடந்து வருகிறது. 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி தற்போது 90 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது.
16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது கவின், சாண்டி, தர்ஷன், முகேன், ஷெரின், லாஸ்லியா ஆகிய 6 போட்டியாளர்கள் உள்ளனர். முகேன் நேரடியாக இறுதியாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ள நிலையில், மற்ற 5 பேர்களுக்கிடையே கடுமையான போட்டி நடந்து வருகிறது.

இந்நிலையில், இறுதி போட்டியில் வென்றால் ரூ.50 லட்சம் பெறலாம். ஆனால், தற்போது ரூ. 5 லட்சம் எடுத்துக் கொண்டே தற்போதே வீட்டை விட்டு வெளியேறலாம் என்று பிக்பாஸ் கூறுகிறார். இதைக் கேட்ட கவின் பணத்தை எடுத்துக் கொண்டு செல்ல எழுந்து நிற்கும் புரமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அனேகமாக கவின் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே குடும்ப பிரச்சனையில் இருக்கும் கவின், தனக்கு தேவையான பணம் கிடைத்து விட்டால் வீட்டை விட்டு சென்று விடுவேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விக்ரம் அடுத்ததாக கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ‘கடாரம் கொண்டான்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து அஜய் ஞானமுத்து இயக்கும் பெயரிடப்படாத படத்திலும், மணிரத்தினம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில், கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜய் ஞானமுத்து மற்றும் மணிரத்னம் ஆகியோரது படங்களுக்கு முன்னர் பிரதீப் ரங்கநாதனின் படத்தில் விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தையும் ஐசரி கணேசன் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கோமாளி படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதால் அப்படக்குழு சார்பில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுக்கு அண்மையில் புதிய கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கல்லீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நகைச்சுவை நடிகர் வேணு மாதவ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிரபல நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது 39. கடந்த 1996-ம் ஆண்டு 'சம்பிரதாயம்' என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் வேணு மாதவ். இவர் இதுவரை 170 க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் 'என்னவளே', 'காதல் சுகமானது' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு வெளியான 'டாக்டர் பரமானந்தய்யா ஸ்டூடண்ட்ஸ் கேங் என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மூன்று வருடங்களாக கல்லீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர் வேணு மாதவின் மறைவுக்கு தெலுங்கு ரசிகர்களும், திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அஜித்துடன் பில்லா 2 படத்தில் நடித்த புரூனா அப்துல்லா, தண்ணீருக்குள் குழந்தை பெற்ற அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இந்தியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், படங்களிலும் நடித்தவர் புரூனா அப்துல்லா. தமிழில் அஜித் நடித்த ‘பில்லா 2’ படம் மூலம் அறிமுகமானார். பிரேசில் நாட்டை சேர்ந்தவரான புரூனா இந்தியாவுக்கு சுற்றுலா பயணியாக வந்து நடிகையானவர். ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்தவரான ஆலன் ப்ரேஸ் என்பவருடன் புரூனா அப்துல்லாவுக்கு காதல் மலர்ந்தது. கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் புரூனாவுக்கு கடந்த 31-ந்தேதி இரவு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு இசபெல்லா என்று பெயரிட்டுள்ளனர். தண்ணீரில் பிரசவமாகும் முறை மூலமாக குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதன் அனுபவங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் கர்ப்பமாவதற்கு முன்பே நீரில் தான் பிரசவம் நடக்கப்போகிறது என எனக்கு தெரியும். எந்த மருந்தும் இல்லாமல், எவ்வளவு மென்மையாக இருக்க முடியுமோ அவ்வளவு மென்மையாக என் குழந்தை பிறக்க வேண்டும் என்று நினைத்தேன். மருத்துவமனையில் கொடுக்கப்போகும் மருந்துகளினால் ஏற்படும் பின் விளைவுகளை எதிர்கொள்வது எனக்கு பிடிக்கவில்லை.

அந்த தருணத்தில் நான் ஆர்வத்துடன் இருக்க, நன்றாக உணர எனக்கு உதவியவர்கள் மட்டும் சூழ, என் குழந்தை வருவதற்காக நான் காத்திருக்கும் அமைதியான மென்மையான ஒரு சூழலை கற்பனை செய்து வைத்திருந்தேன். இது எல்லாம் எனக்குக் கிடைத்தது என் அதிர்ஷ்டமே. வெதுவெதுப்பான தண்ணீர் நிறைந்த தொட்டியில் என் குழந்தையை நான் பெற்றெடுத்தேன்.
என் கணவர், என் அம்மா, என் மருத்துவர், என் உதவியாளர் ஆகியோர் என்னுடன் இருந்தனர். அந்த நாளுக்காக என்னை நான் தயார் செய்துகொண்டேன். தினமும் உடற்பயிற்சி செய்தேன். சரியான உணவை உண்டேன். தியானம் செய்தேன். ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் என் மனக்கண்ணில் ஓட்டிப் பார்த்தேன்.
ஒரு சனிக்கிழமை அன்று என் குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். 4 மணி நேரங்களுக்கு மேல் குழந்தை பேறுக்கான காலம் நீளக்கூடாது என்று நினைத்தேன். நீர் தொட்டியில் குழந்தையை பிரசவிக்க வேண்டும் என்று நினைத்தேன். மருந்துகள் இல்லாமல் நடக்க வேண்டும் என்று நினைத்தேன். நினைத்தது எல்லாம் கிடைத்தது. வலி இல்லாமலும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் உண்மையில் அது நடக்கவில்லை.
இதை சொன்னாலும், நான் ஒரு சூப்பர் ஹீரோ போல உணர்கிறேன். வெல்ல முடியாதது போல. என்னால் எதுவும் செய்ய முடியும் என்று உணர்கிறேன். என் குழந்தை பிறக்கும் போது, என் முழு சுயகட்டுப்பாட்டில், விழிப்புடன் நான் இருக்க வேண்டும் என்பது எனக்கு முக்கியமாக இருந்தது. இயற்கை அதன் வேலையை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். மாயம் போல உள்ளது. நான் வலிமையாக இருப்பதாக நினைத்து கொண்டேன்.
தசை சுருக்கங்கள் எல்லாவற்றையும் அதிதீவிரமாக உணர்ந்தேன். எல்லாம் முடிந்த பின், அன்பும், தூய்மையான சந்தோஷத்தையும் மட்டுமே என்னால் உணர முடிந்தது. வலி பறந்து போனது. நிமிடங்களில் நான் மீண்டு விட்டேன். முதல் நிமிடத்தில் இருந்தே என் குழந்தையின் வருகையை என்னால் கொண்டாட முடிந்தது. அவள் விழித்துக்கொண்டும், விழிப்போடும் இருந்தாள். அமைதியாக, அழகாக. அவள் தான் எனக்கு எல்லாம். ஒருவருக்குக் கிடைக்கக்கூடிய மிகச்சிறந்த அன்பளிப்பை எனக்கு அளித்ததற்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மதுமிதா இயக்கத்தில் மு.ராமசாமி, நாக் விஷால்(அறிமுகம்), யோக் ஜபி நடிப்பில் உருவாகியுள்ள ‘கே.டி’ (எ) கருப்பு துரை படத்தின் முன்னோட்டம்.
யூட்லீ பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மதுமிதா இயக்கத்தில், மு.ராமசாமி, நாக் விஷால்(அறிமுகம்), யோக் ஜபி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கே.டி’ என்கிற ‘கருப்பு துரை’. ‘கே டி’. இப்படம் சர்வதேச அளவில் ஒரு தமிழ் படத்தை நோக்கி உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
சமுதாயத்தில் இன்றளவும் நடைமுறையில் இருந்துவரும் ‘தலைக்கூத்தல்’ எனும் ஒரு பழமையான சடங்கு, ஒருவரின் வாழ்வில் ஏற்படுத்தும் தீவிரமான தாக்கத்தை, யதார்த்தம் குறையாமல், புதுமையான முறையில் மிகவும் உணர்வுபூர்வமாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.
வாழ்வின் இறுதி நிலையில் இருக்கும் ஒரு 80 வயது ஆதரவற்ற முதியவரும், வாழ்வின் முதல் படியில் இருக்கும் ஒரு அநாதை 8 வயது சிறுவனும், வயது வித்தியாசம் மறந்து, நண்பர்களாய் தங்களுக்குள் நட்பு பாராட்டுவதை, இதுவரை சொல்லாத கோணத்தில், முற்றிலும் புதுமையான பரிமாணத்தில், தங்களது நிறைவேறாத ஆசைகளை வாழ்ந்து களிக்கும் விதத்தை, ஆழமாக உணர்ந்து, ரசிக்கத்தக்க சுவராஸ்யத்துடன், ஜனரஞ்சகமாகப் படைத்திருக்கிறார் இயக்குனர் மதுமிதா.

மெய்யேந்திரன் கெம்புராஜ் ஒளிப்பதிவு செய்ய, சபரிவாசன் சண்முகம் திரைகதை-வசனம் எழுதியுள்ளார். கார்த்திகேயமூர்த்தி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு விஜய் வெங்கடராமன் படத்தொகுப்பு பொறுப்புகளை கவனிக்கிறார். இப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துக் கொண்டு, விருதுகளை வென்று வருவது குறிப்படத்தக்கது.
15 வயதில் தன் தாயால் விபசாரத்தில் தள்ளப்பட்டதாக ஹாலிவுட் நடிகை டெமி மூர் தனது சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஹாலிவுட் சினிமாவில் கடந்த 1970 மற்றும் 80 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் டெமி மூர். இவர் தன்னுடைய வாழ்க்கையில் தான் சந்தித்த மிகவும் கொடுமையான அனுபவங்களை தன் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். 56 வயதாகும் நடிகை டெமி மூர் இன்சைட் அவுட் எனும் சுயசரிதை புத்தகத்தை தற்போது வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தின் மூலம் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை முறை பற்றியும் விவரித்துள்ளார்.
அந்த புத்தகத்தில் பல அதிர்ச்சி தரக்கூடிய தகவல் வருமாறு:- எனக்கு 15 வயது இருக்கும். வெளியே சென்று விட்டு வீடு திரும்பும் போது என் வீட்டின் வாசலில் வயதான ஒருவர் கையில் வீட்டினுடைய சாவியை வைத்துக்கொண்டு எனக்காக காத்து கொண்டு இருந்தார். அந்த வயதானவரை பார்த்த நான், யார் நீங்கள்? எதற்காக என் வீட்டு வாசலில் அமர்ந்து இருக்கிறீர்கள்? என்று கேட்டேன்.
அதற்கு அந்த பெரியவர் உன்னை உனது தாயார் என்னிடம் 500 டாலருக்கு விற்பனை செய்திருக்கிறார் என்று கூறினார். இதனை கேட்ட 15 வயது சிறுமியான நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அதற்குபின் அந்த நபரால் பலாத்காரம் செய்யப்பட்டேன். அந்த சம்பவத்தை அடுத்து உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பெரும் அழுத்தத்துக்கு உள்ளானேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டெமி மூர் முதலில் பிரடி மூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இரண்டாவதாக பிரபல நடிகரான புரூஸ் வில்லியம்சை திருமணம் செய்து கொண்டார். இவருடனும் வாழ்க்கை பயணம் சரியாக அமையாத காரணத்தால் இருவரும் பிரிந்துவிட்டனர்.
இதனையடுத்து தன்னை விட 15 வயது குறைவாக இருந்த நடிகர் ஆஸ்டன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப்பின் கர்ப்பமானார். 6 மாத கர்ப்பிணியாக இருந்தபோது கருச்சிதைவு ஏற்பட்டது. இந்த கருச்சிதைவு ஏற்படுவதற்கு பின்பு இவரது வாழ்க்கை முற்றிலும் வேறுபட்டது.
காரணம் இந்த குழந்தையின் பிரிவை தாங்க முடியாமல் தினந்தோறும் தூக்க மாத்திரைகளையும் மதுவுக்கு அடிமையாகவும் வாழ்ந்து வந்துள்ளார். மூன்றாவது கணவருடனும் மனக்கசப்பு ஏற்பட்டு கடந்த 2013-ம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து பெற்று விட்டார். தற்போது அவர் தன் மகள் ஒருவருடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். தற்போது எழுதியிருக்கும் இன்சைட் அவுட் புத்தகத்தை தன்னுடைய மூன்று மகள்களுக்கும் தன்னுடைய அம்மாக்காகவும் சமர்ப்பிப்பதாக கூறியுள்ளார்.
சினிமாவில் நடிக்க நிறம் முக்கியம் இல்லை, திறமை இருந்தால் போதும் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ் பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ், இந்தி படமொன்றிலும் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. சினிமா வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:- “நான் நடிகையாக ஆசைப்பட்டு வாய்ப்பு தேட ஆரம்பித்ததும் வெள்ளையாக இருப்பவர்களுக்கே இங்கு வாய்ப்பு இல்லை. நீ இருக்கிற கருப்பு நிறத்துக்கு நடிகையாக விரும்பலாமா? என்று பலரும் கேலி பேசினர். இது மனதை காயப்படுத்தியது.
ஆனாலும் தன்னம்பிக்கை இழக்காமல் நான் யார் என்பதை நிரூபித்து காட்ட வேண்டும் என்ற வெறியை வளர்த்துக்கொண்டு வேலை செய்தேன். விடாப்பிடியாக முயற்சிகள் செய்ய இரண்டாவது நாயகி, கதாநாயகிக்கு தோழி என்றெல்லாம் கதாபாத்திரங்கள் வந்தன. ஐந்து ஆண்டுகள் இதே நிலைமைதான். 2015-ல் நடித்த காக்கா முட்டை பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் 2 குழந்தைகளுக்கு தாயாக நடித்தேன்.

விஜய்சேதுபதிதான் யோசிக்காமல் நடியுங்கள். அவர் பெரிய இயக்குனர் என்று ஊக்கப்படுத்தினார். நடிப்பு துறையில் நிறம் முக்கியம் இல்லை என்பதை அந்த படம் நிரூபித்தது. கனா படமும் பெயர் வாங்கி கொடுத்தது. அதன்பிறகு மணிரத்னம், கவுதம் மேனன், இந்தி பட இயக்குனர் அர்ஜுன் ராம்பால் என்று முன்னணி இயக்குனர்களிடம் இருந்து வாய்ப்புகள் தேடி வந்தன. சினிமா துறையில் ஒவ்வொரு படியாக ஏறி முன்னுக்கு வந்து விட்டேன்.” இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.
பிகில் இசை வெளியீட்டு விழாவில் இரும்புத்திரை பட பாடல் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் விவேக்குக்கு சிவாஜி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிகில் பட இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் விஜய் பேசிய அரசியல் கருத்துகளுக்கு அ.தி.மு.க.வினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், சிவாஜி கணேசனின் பாடலை கிண்டலடித்ததாக கூறி நடிகர் விவேக்குக்கு சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் சந்திர சேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- “பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விவேக் 1960-ம் ஆண்டு வெளிவந்த சிவாஜி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த இரும்புத்திரை திரைப்படத்தின் ‘நெஞ்சில் குடியிருக்கும்’ என்று தொடங்கும் அருமையான பாடலை கிண்டலடித் திருக்கிறார்.

மேடை கிடைத்துவிட்டால், கூட்டத்தைப் பார்த்து விட்டால் சிலர் உளற ஆரம்பித்துவிடுவார்கள். அந்த வரிசையில் நடிகர் விவேக்கும் இணைந்துள்ளார். எந்த நடிகரை வேண்டுமானாலும் தூக்கி வைத்துக் கொண்டாடுங்கள், எந்த இசையமைப்பாளர் அல்லது பாடலை வேண்டுமானால் பாராட்டுங்கள் தவறு இல்லை. ஆனால் ஒரு நடிகரை காக்கா பிடிப்பதற்காக, ஏற்கெனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள ஒரு பாடலை கிண்டலடிப்பதை ஏற்று கொள்ள முடியாது.
ஏதோ இப்போதுதான் அந்த பாடல் மக்களுக்கே தெரிய வருவது போல கூறும் விவேக், ‘நெஞ்சில் குடியிருக்கும்’ என்ற 1960-ம் ஆண்டு வெளிவந்த பாடல் மிகவும் வரவேற்பைப் பெறவில்லை என்றால், ஏன் அதே டியூனை மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்று கூறத்தயாரா? டியூனுக்கு ஏற்பட்ட பஞ்சம் காரணமாக பிரபலமான டியூன் என்பதாலேயே அதனைக் காப்பியடித்து பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற சாதாரண அறிவு கூட இல்லாமல் பேசியிருக்கிறார் விவேக்.
சிவாஜி கணேசனின் புகழ்பெற்ற பராசக்தி திரைப்படத்தில் வரும் நீதிமன்ற வசனத்தை பேசி கிண்டலடித்திருந்தார் விவேக். இப்போது சிவாஜி கணேசனின் அருமையான திரைப்பட பாடலை பொதுமேடையில் கிண்டலடித்திருக்கிறார். இதுபோல தொடர்ந்து விவேக் செய்தால் அவருக்கு எதிராக ரசிகர்களை ஒன்று திரட்டி சிவாஜி சமூக நலப்பேரவை போராட்டம் நடத்தும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து நடிகர் விவேக் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- 1960-ல் இரும்புத்திரை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி பாடிய பாடலின் முதல் வரி ‘‘நெஞ்சில் குடி இருக்கும் ’’ அப்போது அது காதல் உணர்வைக் குறித்தது. ஆனால் இப்போது விஜய் அதை சொல்லும் போது மந்திர சக்தி வார்த்தையாக இருக்கிறது. இதுவே நான் பேசியது. அன்பு உள்ளங்கள் புரிந்துகொள்க.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.






