என் மலர்
சினிமா செய்திகள்
2-வது சீசனில் கலந்து கொண்டு தற்போது படங்களில் பிசியாக நடித்து வரும் இருவர் விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பல பிரபலங்கள் இன்று முன்னணி நடிகர், நடிகைகளாக வலம் வருகின்றனர். தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சி நடந்து வருகிறது. 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி தற்போது 90 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது.
16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 6 போட்டியாளர்கள் உள்ளனர். இதில் முகின் கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் வென்று இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார். மற்ற 5 போட்டியாளர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், பிக்பாஸ் 2-வது சீசனில் கலந்து கொண்டு தற்போது படங்களில் பிசியாக நடித்து வரும் மகத் மற்றும் யாஷிகா ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். விருந்தினராக சென்றுள்ள அவர்கள் ஒருவாரம் பிக்பாஸ் வீட்டில் தங்க உள்ளதாக கூறப்படுகிறது.
மகத் மற்றும் யாஷிகா தற்போது ‘இவன் தான் உத்தமன்’ என்கிற படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். ஹாரர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் ராமதாஸ், மா.கா.பா. ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமிழ், கன்னடம் ஆகிய இரண்டு மொழிகளில் இந்தப் படம் தயாராகி வருகிறது.
சுமார் 600 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகும் ராமாயணம் படத்தில் பிரபாஸ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ராமாயண கதையை ஏற்கனவே சிலர் படமாக எடுத்துள்ளனர். தமிழ், தெலுங்கில் ஸ்ரீராமராஜ்ஜியம் என்ற பெயரில் வந்தது. இதில் பாலகிருஷ்ணா ராமராகவும், நயன்தாரா சீதையாகவும் நடித்து இருந்தனர். மலையாளத்திலும் ராமாயணத்தை படமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன.
பிரபல தெலுங்கு பட அதிபர் அல்லு அரவிந்த், மது மஞ்சனா, நமித் மல்கோத்ரா ஆகியோர் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ராமாயணம் மீண்டும் படமாகிறது. பாகுபலியை மிஞ்சும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் அதிக பொருட் செலவில் இந்த படத்தை எடுக்கின்றனர். சுமார் 600 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் மூன்று பாகங்களாக தயாராகிறது.

இந்த படத்தை தங்கல் படம் மூலம் பிரபலமான நிதிஷ் திவாரி, மாம் படத்தை இயக்கிய ரவி உடையார் ஆகிய இருவரும் இணைந்து டைரக்டு செய்ய உள்ளனர். படப்பிடிப்புக்கு முந்தைய வேலைகள் நடக்கின்றன. இந்த படத்தில் ராமன் கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிக்கிறார். சீதையாக நடிக்க தீபிகா படுகோனேவிடம் பேசி வந்தனர்.
தற்போது அவருக்கு பதில் ஸ்ரத்தா கபூர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபாசிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ராவணன் வேடத்துக்கு பிரபாசின் தோற்றம் பொருத்தமாக இருக்கும் என்கின்றனர். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க அவர் சம்மதிப்பாரா என்று தெரியவில்லை. படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
சிரஞ்சீவி, விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்துள்ள ‘சைரா நரசிம்ம ரெட்டி’ என்கிற வரலாற்று படத்துக்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு ‘சைரா நரசிம்ம ரெட்டி’ என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் படமாகி உள்ளது. இதில் சிரஞ்சீவி-நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளனர். மேலும் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, அனுஷ்கா, தமன்னா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.
இப்படத்தை ரூ.300 கோடி செலவில் சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜா தயாரித்துள்ளார். இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. தெலுங்கில் தியேட்டர் உரிமை ரூ.140 கோடிக்கு விற்பனையானதாக கூறப்பட்டது. அனைத்து மொழி சாட்டிலைட் உரிமையும் ரூ.125 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன்மூலம் படத்துக்கு செலவு செய்த தொகை அனைத்தும் ராம்சரணுக்கு கிடைத்து விட்டது என்கின்றனர். அடுத்த மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர். இந்த நிலையில் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் குடும்பத்தினர் படத்துக்கு திடீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறும்போது, “நரசிம்ம ரெட்டி வாழ்க்கையை படமாக்குவதற்காக அவரது குடும்பத்தினரான எங்களுக்கு ரூ.50 கோடி தருவதாக ராம்சரண் வாக்குறுதி அளித்து இருந்தார். ஆனால் சொன்னபடி பணம் தரவில்லை” என்றனர். படத்துக்கு எதிராக வழக்கு தொடரவும் தயாராகி வருகிறார்கள். பிரச்சினையை சுமுகமாக தீர்த்து திட்டமிட்ட தேதியில் படத்தை திரைக்கு கொண்டு வர பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.
பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் அண்ணாவைப் பற்றி நான் பேசியதை கட் பண்ணிட்டாங்க என்று டேனியல் பாலாஜி கூறியிருக்கிறார்.
அட்லீ - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துக் கொண்டு பேசினார்கள். இந்நிகழ்ச்சி நேற்று தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பியது.
இந்நிலையில் படத்தில் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் டேனியல் பாலாஜி, விஜய் குறித்து தான் இசைவெளியீட்டு விழாவில் பேசியதில் ஒரு பகுதியை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் வெட்டி விட்டதாக ஆதங்கமாக தெரிவித்துள்ளார்.
#bigil@archanakalpathi@Ags_production@rangarajan_ags@Atlee_dir@actorvijay@arrahman. ஒரு ரசிகராக, அரசியல் இல்லாமல் pic.twitter.com/CoUrckkXDQ
— Daniel Balaji (@DanielBalaje) September 23, 2019
இதைப்பார்த்த ரசிகர்கள் நீங்கள் என்ன பேசினீர்கள். அதை பதிவிடுங்கள் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு, டேனியல் பாலாஜி, ‘என் உரையில் நான் சொன்னது, விஜய் அண்ணா சக நடிகருக்கு ஒரு பாதுகாவல, எனக்கு ஒரு நல்ல நண்பர், பெற்றோருக்கு ஒரு நல்ல மகன், அதேபோல், அவரது இதயத்தில் வாழும் ரசிகர்களுக்கு அவர் ஒரு நல்ல தலைவர், விரைவில் வருவார்’ இவ்வாறு பேசியதாக பதிவிட்டிருக்கிறார்.
வெயில் படம் மூலம் மிகவும் புகழ் பெற்ற பிரியங்கா, தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
’உருகுதே... மருகுதே...’ பாடல் புகழ் ’வெயில்’ பிரியங்கா, நீண்ட இடைவெளிக்கு பிறகு ஓ. ராஜா கஜினி இயக்கத்தில், ‘உற்றான்” படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார்.
இதில் ’கமலி’ என்ற கல்லூரி பேராசிரியையாக மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். “கமலி” கதாபாத்திரம் பற்றி பிரியங்காவுடன் டைரக்டர் விவரித்தபோது, அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்ட பிரியங்கா, ‘‘இந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்திற்காகத்தான் இவ்வளவு காலம் காத்திருந்தேன். தமிழில் மறுபிரவேசமாக எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்து விட்டது’’ என மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்.
ஓ.ராஜா கஜினி இதுபற்றி கூறும்போது, ``கமலி” கதாபாத்திரம் “உற்றான்” படத்தின் முதுகெலும்பாக அமையும், கதாநாயகன் நிர்வாணமாக நடித்த காட்சி ஒன்றில், அவருக்கு உள்ளாடை மாட்டிவிட்டு, துணிச்சலாக நடித்திருப்பதோடு, போலீஸ் நிலைய காட்சி ஒன்றில் இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் நடிக்காத அளவுக்கு அரை நிர்வாணமாக மிக துணிச்சலாக நடித்துள்ளார். கமலி கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் மிக நீண்ட காலத்திற்கு பேசப்படும்’’ என்றார்.

படத்தில் ரோஷன் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஹிரோஷினி கோமலி அறிமுகமாகிறார். வெயில் பிரியங்காவுக்கு ஜோடியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பத்திரிகையாளரும் வசனகர்த்தாவுமான ரவிஷங்கர் நடித்துள்ளார்.
சொந்த வாழ்க்கையை இணைத்து ஒத்த செருப்பு கதையுடன் விமர்சித்ததால் வேதனையுடன் பட விழாவில் பார்த்திபன் பேசியிருக்கிறார்.
பார்த்திபன் இயக்கத்தில் உருவான ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் குறித்து வந்த ஒரு சில விமர்சனங்கள் பார்த்திபனுக்கு வேதனை அளித்துள்ளது.
இதுகுறித்து சமீபத்தில் நடந்த விழாவில் அவர் பேசும்போது, ‘கடந்த வாரம் எனது நடிப்பு, இயக்கம், தயாரிப்பில் வெளியான ‘ஒத்த செருப்பு’ படத்தை வெளியிட ரொம்பவே கஷ்டப்பட்டேன். ஆனால் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
விமர்சனங்கள் எல்லாமே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒரு சிலர் மட்டும் கதையாக இது எனது சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்டதாக பதிவு பண்ணியிருந்தார்கள். அது ரொம்பவே வருத்தமான ஒரு விஷயம்.

என் குடும்பத்தில் எவ்வித பிரச்சினையும் இன்றி ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறோம் என்பதை இங்கு பதிவு செய்கிறேன். என் இரண்டு பெண்களின் திருமணமும் அனைத்து குடும்பமும் இருந்து தான் நடந்தது. இப்போது போய் ஒரு படம் எடுத்து, யாரையோ சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் எனக்கு கிடையாது. ஒரு படம், அதன் கதை அதை என்னவாக பண்ணலாம் என்பது மட்டுமே எண்ணினேன்.
அப்படி விமர்சனத்தில் குறிப்பிட்ட நண்பர்களுக்கு ஒரே ஒரு விஷயம், அப்படியொரு விஷயமே இல்லை. தேவையில்லாமல் ஒரு குழப்பத்தைச் சொல்லிக் கஷ்டப்படுத்த வேண்டாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பிகில்’ படத்திற்கு கறிக்கடை உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பிகில்’. அட்லீ இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் தீபாவளி விடுமுறையில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இரு தினங்களுக்கும் முன்பு பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கறிக்கடை உரிமையாளர்கள் ஒன்றிணைந்து ‘பிகில்' படத்தில் தங்கள் தொழிலை அவமானப்படுத்தியதாகக் கூறி பிகில் பட போஸ்டரை கிழித்தெறிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார்கள்.

‘பிகில்' பட முதல் லுக்கில் விஜய் கறிக்கடையில் கறி வெட்டும் மரக்கட்டை மீது கால் வைத்து அமர்ந்திருப்பதைப் போல் இருப்பதால் அது தங்கள் தொழிலை அவமதிப்பதாக இருப்பதாகக் கூறி அவர்கள் போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள்.
கயல் படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்தை அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார் கயன் சந்திரமௌலி.
கயல் படம் மூலம் அறிமுகமாகமானவர் சந்திரமௌலி. இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’. அறிமுக இயக்குனர் சுதர் இயக்கத்தில் 2 மூவு ஃபப்ஸ் நிறுவனம் சார்பில் ரகுநாதன் பி.எஸ் தயாரிப்பில் இப்படம் உருவாகியிருக்கிறது.
இப்படத்தில், கயல் சந்திரமௌலியுடன் சாட்னா டைட்டஸ், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், சாம்ஸ், டேனியல் ஆணி போப், அர்ஜெய் ஆகியோர் நடித்துள்ளனர். எஸ்டிசி பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் இப்படத்தை வெளியிடுகிறது.
இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கயல் சந்திரமெளலி பேசும்போது, ‘கயல் படத்திற்கு பிறகு நான் அதிகமாக எதிர்பார்க்கும் படம் எதுவென்று கேட்டால் அது ‘ திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ தான். அது எனக்கு எப்படி ஒரு அறிமுக படமாக கிடைத்ததோ, அதேபோல் என் அண்ணனுக்கு தயாரிப்பில் இது முதல் படம்.

பல இன்னல்களை தாண்டி, பல தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை ரிலீஸ் செய்து வருகின்றனர். திட்டம் போட்டு ஒரு கும்பல் உலக கோப்பையை திருட நினைக்கிறது. அந்த திட்டம் நிறைவேறியதா இல்லையா என்பதே படத்தின் கதை. சினிமா ரசிகர்கள் மீது மட்டுமே முழு நம்பிக்கை வைத்து இப்படத்தை வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி வெளியிடுகிறோம்’ என்றார்.
மார்டின் ஜோ ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அஷ்வத் இசையமைத்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த நடித்த நடிகை மீனா, எவர்க்ரீன் ஸ்டார் பட்டம் பெற்றிருக்கிறார்.
பொதுவாக பெரிய நடிகர்கள் தான் தங்கள் பெயருக்கு முன்னால் அடைமொழி போட்டுக்கொள்வார்கள். நடிகைகளில் இந்த வழக்கம் கிடையாது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் மீனாவுக்கு இப்போது எவர்கிரீன் ஸ்டார் என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
மீனா `என் ராசாவின் மனசிலே' படத்தில் ஹீரோயினாக அறிமுகமானது முதல் ரஜினி, கமல், விஜய், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, விஜய், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவிட்டாலும் டைட்டில் கார்டில் எந்தப் பட்டமும் இதுவரை போட்டுக்கொள்ளவில்லை.
சினிமா பயணத்தை முடித்துவிட்டு, சில சீரியல்களில் நடித்தவர், இப்போது வெப் சீரிஸ் பக்கமும் வந்து இருக்கிறார். `கரோலின் காமாட்சி' என்ற அந்த தொடரின் போஸ்டரில் `எவர்க்ரீன் ஸ்டார்' என்று மீனாவை குறிப்பிட்டுள்ளனர். பட்டத்தை மீனாவுக்கு வழங்கிய இயக்குநர் வெர்னிக் கூறியிருப்பதாவது:- ’அவங்களோட அனுபவத்துக்கு இந்த பட்டம் எல்லாம் சாதாரணம்னுதான் நினைக்கிறேன்.

அதனாலதான் வெப் சீரிஸ் என்ட்ரியில அவங்களை கவுரவப்படுத்தற மாதிரி ஒரு பட்டம் கொடுக்கணும்னு ஆசைப்பட்டோம். பல பட்டங்களை சூட்டி பார்த்து கடைசியில `எவர்க்ரீன் ஸ்டார்' பட்டத்தை தேர்வு செய்தோம். ஆனா, இந்த பட்டத்துக்கு அவங்ககிட்ட சம்மதம் வாங்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு.
முதல் தடவையா பட்டம் குறித்து அவங்ககிட்ட சொன்னதும் சத்தமாக சிரிச்சிட்டாங்க. ’இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லையா? சினிமாவுல கடைசிவரை இருக்கிறவங்கதான் இப்படியெல்லாம் போட்டுக்கணும்... ரஜினி, கமல் சார் காதுலெல்லாம் இந்தப் பட்டம் விழுந்தா அவங்க ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு எங்களையே கேட்டுச் சிரிக்கிறாங்க. ஆனாலும் நாங்க தொடர்ந்து வற்புறுத்தியதால கடைசியில சம்மதம் கொடுத்தார்’ என்றார்.
தமிழில் ஐ, 2.0 படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை எமி ஜாக்சனுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.
மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்தார். லண்டனை சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை. ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக அறிவித்தார். பின்னர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக கடந்த மார்ச் மாதம் எமி கூறினார்.
அதனை தொடர்ந்து கர்ப்பிணியான எமிக்கும், அவரது காதலருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. குழந்தை பிறந்த பின்னர் அவர்களது திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு ஆன்ட்ரியேஸ் என்று பெயர் வைத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.
எமி ஜாக்சன் ஏற்கனவே தனக்கு ஆண் குழந்தைதான் பிறக்க போகிறது என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங், பாலிவுட் நடிகைகள் பிரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி ஆகியோர் வரிசையில் இடம் பிடித்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங் சமீபகாலமாக தனது பார்வையை இந்தி பக்கமும் திருப்பி இருக்கிறார். ஒரு பக்கம் சினிமாவில் நடித்து சம்பாதிக்கும் ரகுல் அடுத்து பிசினசிலும் கணிசமாக வருமானம் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே விசாகப்பட்டினம் உள்ளிட்ட இரண்டு இடங்களில் உடற்பயிற்சிகூடம் நடத்தி வருகிறார். இந்நிலையில் ஐதராபாத்தை மையமாக கொண்டு செயல்படும் உடற்பயிற்சி கூடத்தின் பங்குகளை அதிக அளவில் வாங்கியிருக்கிறார்.

உடற்பயிற்சி கூட முதலீடையடுத்து தற்போது டென்னிஸ் கிளப் அணியை வாங்கியிருக்கிறார். ஐபிஎல் கிரிக்கெட் அணிகளை வாங்கியிருக்கும் நடிகைகள் பிரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி போல் ரகுலும் விளையாட்டு துறையில் முதலீடு செய்திருக்கும் நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.
பிகில் படத்தை தொடர்ந்து அட்லீ அடுத்ததாக இயக்கும் படத்தில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ எனும் தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர், அட்லீ. இந்த படம் ரூ.50 கோடி வசூல் குவித்தது. அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’ என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் அங்கம் வகித்தார், அட்லீ. தற்போது விஜய்யை வைத்து பிகில் படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் வருகிற தீபாவளி தினத்தன்று ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், அட்லீ அடுத்ததாக ஜூனியர் என்.டி.ஆர்-ஐ வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ஜூனியர் என்.டி.ஆர்-ஐ சந்தித்து அட்லீ கதை கூறியதாகவும், அது அவருக்கு பிடித்ததாகவும் கூறப்படுகிறது. இப்படம் தமிழ், தெலுங்கில் உருவாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூனியர் என்.டி.ஆர் தற்போது ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ எனும் வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.






