என் மலர்
சினிமா செய்திகள்
காப்பான் படத்தை தொடர்ந்து மீண்டும் பிரபல இயக்குனரின் படத்தில் சூர்யாவும் ஆர்யாவும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா-கே.வி.ஆனந்த் கூட்டணியில் சமீபத்தில் வெளியான ’காப்பான்’ படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் மோகன்லால், ஆர்யா, சயீஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்நிலையில், சூர்யாவும் ஆர்யாவும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பாலா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. விக்ரமின் மகனான துருவை வைத்து இயக்குனர் பாலா இயக்கிய ’வர்மா’ படம் டிராப் ஆனது. இதையடுத்து பாலா அடுத்த படத்துக்கு தயாராகியுள்ளார்.

இந்த படத்தில் ஆர்யா மற்றும் அதர்வா ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க இருப்பதாகவும், இப்படத்தில் சூர்யாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பாலாவின் இயக்கத்தில் நான் கடவுள், அவன் இவன் போன்ற படத்தில் ஆர்யாவும், பிதாமகன், நந்தா ஆகிய படங்களில் சூர்யாவும் நடித்துள்ளனர். தற்போது இருவரும் இணைந்து பாலா இயக்கத்தில் நடிக்க உள்ளனர்.
ஐசரி கணேசன் தயாரிப்பில் நட்டு தேவ் இயக்கும் ‘பப்பி’ படம் மூலம் ஆர்.ஜே.பாலாஜி பாடகராக அறிமுகமாகி உள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தில் காமெடி வேடத்தில் நடித்தவர் ஆர்.ஜே.பாலாஜி. அந்த படத்தில் இவருடைய காமெடி மிகப்பெரிய அளவில் எடுபடவே, தொடர்ந்து மிகப்பெரிய படங்கள் அவரைத் தேடி வந்தவண்ணம் உள்ளன. சமீபத்தில் இவர் ஹீரோவாக நடித்த ‘எல்.கே.ஜி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் அடுத்ததாக கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2, பிரபுதேவாவின் யங் மங் சங், சிபிராஜின் வால்டர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் ‘பப்பி’ படம் மூலம் பாடகராக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தில் இடம்பெறும் ‘சோத்துமூட்டை’எனும் பாடலை இவர் பாடியுள்ளார்.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரித்துள்ள இப்படத்தை நட்டு தேவ் இயக்கியுள்ளார். வருண் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 11-ந் தேதி ரிலீசாக உள்ளது.
அறிமுக இயக்குனர் பாபு தமிழ் இயக்கத்தில் யோகேஷ், அனிகா விக்ரமன் நடிப்பில் உருவாகும் ‘க்’ படத்தின் முன்னோட்டம்.
தர்மராஜ் பிலிம்ஸ் நவீன் தயாரிப்பில், அறிமுக நாயகன் யோகேஷ், குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகும் படம் ‘க்’. அறிமுக இயக்குனர் பாபு தமிழ் இயக்கும் இப்படத்தில் அனிகா விக்ரமன் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் பாபு தமிழ், சமீபத்தில் வெளியாகி பாராட்டுகளையும், நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ள ‘ஜீவி’ திரைப்படத்திற்கு கதை-திரைகதை-வசனம் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உளவியல் ரீதியாக சிக்கி தவிக்கும் ஒரு கால்பந்து வீரரின் வாழ்க்கையை மிகவும் தத்ரூபமாகவும், உணர்வுபூர்வமாகவும் படமாக்க இருக்கிறார் இயக்குனர் பாபு தமிழ். தனது முதல் பெரிய போட்டியிலேயே பலமாக காயமடைந்து விடும் ஒரு கால்பந்து வீரரின் வாழ்வில், அதன்பின் நடக்கும் சம்பவங்கள், அதன் மூலம் கிடைக்கின்ற சில நுண்ணிய தகவல்கள், தனக்கு ஏன் இப்படி நடந்தது, எதனால் இந்த கதிக்கு ஆளானோம் என அவன் ஆராய முற்படுகிறான்.
அதன் முடிவில் அவன் தனது வாழ்வை சீரமைத்துக் கொண்டானா இல்லையா என்பதை இத்திரைப்படம் முற்றிலும் புதிய கோணத்தில், ஜனரஞ்சகமாக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் தமிழ் திரையுலகிற்கு கொண்டு வரவிருக்கிறது. ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, ராகுல் படத்தொகுப்பை கவனிக்கிறார். அவினாஷ் கவாஸ்கர் இசை அமைக்க, சண்டை பயிற்சி ஃபயர் கார்த்திக் வசமும், கலை கல்லை தேவா வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தர்மராஜ் பிலிம்ஸ் சார்பில் நவீன் தயாரிக்க, அறிமுக இயக்குனர் பாபு தமிழ் இயக்கத்தில், உருவாகும் ‘க்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்க இருக்கிறது. பெரும்பாலான காட்சிகளை சென்னையிலும், சில குறிப்பிட்ட சிறப்பு காட்சிகளை வெளிநாட்டிலும் படமாக்கப்படவுள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் ‘வெயில்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ், ‘டார்லிங்’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார். அதை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்த ஜி.வி.பிரகாஷ் தற்போது ஹாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறார். பாலிவுட் இயக்குநர் ரிக்கி ப்ரூச்சல் இயக்கவிருக்கும் இப்படத்தை கைபா எனும் ஹாலிவுட் பட நிறுவனம் சார்பாக டெல் கணேசன் தயாரிக்கிறார்.
இவர் ஏற்கனவே ஹாலிவுட்டில் நடிகர் நெப்போலியன் நடித்த ‘டெவில்ஸ் நைட்’, ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார். டிராப் சிட்டி என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் பிராண்டன் டி.ஜாக்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படம் குறித்த கூடுதல் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘100 % காதல்’, ‘அடங்காதே’, ‘ஜெயில்’ உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. பேச்சிலர், ஆயிரம் ஜென்மங்கள், காதலிக்க யாருமில்லை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதே போல் இசையமைப்பாளராக தனுஷ் -வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘அசுரன்’, சூர்யா - சுதா கொங்காரா கூட்டணியில் உருவாகும் ‘சூரரை போற்று’ ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
திரிஷாவின் பரமபதம் விளையாட்டு படத்தில் சர்ச்சை காட்சிகள் இருப்பதை சுட்டிக்காட்டி 'யூ' சான்றிதழ் அளிக்க தணிக்கை குழு மறுத்துள்ளது.
திரிஷா 2002-ல் கதாநாயகியாக அறிமுகமாகி 36 வயது நிரம்பிய நிலையிலும் இன்னும் கதாநாயகியாகவே நீடிக்கிறார். கடந்த வருடம் திரைக்கு வந்த ‘96’ படத்தின் வெற்றி அவரை மேலும் உச்சத்துக்கு கொண்டு போனது. இந்த படத்தை தெலுங்கு, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்கின்றனர்.
ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற அவரது நீண்ட நாள் கனவும் இந்த வருடம் திரைக்கு வந்த ‘பேட்ட’ படத்தில் நிறைவேறியது. இப்போது அவர் கைவசம் 7 படங்கள் உள்ளன. கர்ஜனை, சதுரங்க வேட்டை-2 ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படங்கள் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. பரமபதம் விளையாட்டு என்ற இன்னொரு படமும் முடிந்துள்ளது. இதில் திரிஷாவுக்கு முக்கிய வேடம். கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் கதையம்சம் உள்ள படமாக தயாராகி உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து தணிக்கைக்கு அனுப்பினர். குடும்ப பாங்கான படம் என்று யூ சான்றிதழை எதிர்பார்த்தனர்.

ஆனால் சர்ச்சை காட்சிகள் இருப்பதை சுட்டிக்காட்டி 'யூ' சான்றிதழ் அளிக்க தணிக்கை குழு மறுத்து ‘யூஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. இது படக்குழுவினருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த படத்தை அடுத்த மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
பரமபதம் விளையாட்டு திகில் படமாக தயாராகி உள்ளது. இதில் திரிஷா ஒரு குழந்தைக்கு தாயாக நடித்துள்ளார். வில்லன்களை குரூரமாக பழிவாங்கும் காட்சிகளிலும் நடித்துள்ளார். அதிரடி சண்டைகளும் செய்துள்ளார். இதனால் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தை திருஞானம் இயக்கி உள்ளார்.
கவர்ச்சியாக நடிக்க வேண்டி இருப்பதால் பாலிவுட் வாய்ப்புகளை ஏற்க மறுத்ததாக நடிகை பிரியாமணி தெரிவித்துள்ளார்.
தமிழில் ‘கண்களால் கைது செய்’ படத்தில் அறிமுகமான பிரியாமணிக்கு பருத்தி வீரன் திருப்பு முனையை ஏற்படுத்தியது. சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், ராவணன், சாருலதா உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வந்தார்.
பிரகாஷ்ராஜ் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான மனவூரி ராமாயணம் படத்தில் விலைமாதுவாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 2017-ல் முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு பட வாய்ப்புகள் குவிந்தன. இப்போது இணையதள தொடர்களில் நடிக்க தொடங்கி உள்ளார். இந்தியில் நடிக்க வரும் வாய்ப்புகளை மறுத்து வருகிறார்.

இதுகுறித்து பிரியாமணி கூறியதாவது:- “எனக்கு இந்தி படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் அவற்றில் கவர்ச்சியாக நடிக்க வேண்டி இருப்பதால் ஏற்கவில்லை. நிறைய இந்தி கதாநாயகிகள் நீச்சல் உடையில் நடிக்கின்றனர். என்னால் அப்படி நடிக்க முடியாது. நான் சினிமாவுக்கு வந்த புதிதில் ஒரு படத்தில் நீச்சல் உடையில் நடித்தேன்.
அதற்கு விமர்சனங்கள் கிளம்பின. தென்னிந்திய ரசிகர்கள் பாரம்பரிய உடைகளில் நடிகைகள் நடிக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள். இந்தியில் அப்படி இல்லை. அங்கு கவர்ச்சியாக நடிக்கின்றனர். எனக்கு அப்படி கவர்ச்சியாக நடிப்பதில் உடன்பாடு இல்லை.” இவ்வாறு அவர் கூறினார்.
விஜய் தேவரகொண்டாவுடன் காதல் தொடர்பான கிசுகிசுக்கு ராஷ்மிகா மந்தனா சமூக வலைத்தளத்தில் காட்டமாக பதில் அளித்துள்ளார்.
ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய 2 படங்களிலும் இணைந்து நடித்ததை பார்த்தவர்கள் ஜோடி பொருத்தம் சிறப்பாக இருப்பதாக பாராட்டியதுடன் அவர்களுக்குள் காதல் இருப்பதாகவும் கிசுகிசு பரப்பி வருகிறார்கள். இதை நம்பி அவர்களிடம் திருமணம் எப்போது? என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. காதல் இல்லை என்று இருவரும் ஏற்கனவே மறுத்த பிறகும் இந்த வதந்தி தொடர்ந்து பரவுகிறது.

இதற்கு ராஷ்மிகா மந்தனா சமூக வலைத்தளத்தில் தற்போது காட்டமாக பதில் அளித்துள்ளார். “நாங்கள் இருவரும் செய்கிற தொழிலில் முழுமையாக ஒன்றி போகிறோம். 2 படங்களில் சேர்ந்து நடித்தோம். எங்களுக்குள் காதல் இல்லை. இன்னும் 2 ஆண்டுகள் நாங்கள் இருவரும் எந்த படத்திலும் சேர்ந்து நடிக்க மாட்டோம். இதற்கு மேலாவது இந்த காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
'காவிரி கூக்குரல்’ இயக்கத்துக்கு ‘டைட்டானிக்’ பட ஹீரோ லியானர்டோ டி காப்ரியோ ஆதரவு தெரிவித்துள்ளார்.
‘டைட்டானிக்’, ‘தி ஏவியேட்டர்’, ‘தி ரெவனன்ட்’, ‘ஷட்டர் ஐலேண்ட்’, ‘ஐஸ் ஆன் பயர்’ உள்ளிட்ட ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்தவர், லியானர்டோ டி காப்ரியோ. இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில், சென்னையில் நிலவும் குடிநீர் பஞ்சம் தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டு, ‘மழையால் மட்டுமே சென்னையைக் காப்பாற்ற முடியும் என கவலையுடன் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் காவிரி நதியை காப்பாற்றி புத்துயிர் அளிக்கும் வகையில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தொடங்கி இருக்கும் ‘காவிரி கூக்குரல்’ இயக்கத்துக்கு நடிகர் லியானர்டோ டி காப்ரியோ ஆதரவு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- ”இந்திய நதிகள் கடுமையாக அருகி வரும் வேளையில் அதன் பல சிறு நதிகள் மறைந்து போயிருக்கிறது. இந்த நேரத்தில் காவிரி நதிக்கு புத்துயிர் அளிக்க ’காவிரி கூக்குரல்’ இயக்கம் தொடங்கி இருக்கும் ஜக்கி வாசுதேவுடன் நாம் இணைவோம்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வரும் சூரி, ஹீரோ ஆனது ஏன் என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வரும் சூரி அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகன் ஆகிறார். விரைவில் 100வது படத்தை தொட இருக்கும் அவர் நடிப்பில் நம்ம வீட்டு பிள்ளை, சங்கத்தமிழன் என 2 படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ளன. அவர் அளித்த சிறப்பு பேட்டி:- கவுண்டமணி - செந்தில், வடிவேலு, சந்தானம் போல எனது படங்களில் டிராக் காமெடி இல்லாதது எனக்கு பெரிய வருத்தம். அவர்களுக்கு கிடைத்த பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை.
டிராக் காமெடி தான் நம்மை நன்றாக அடையாளப்படுத்தும். படத்தின் வெற்றி தோல்வி காமெடியனை பாதிக்காது. படங்களையே கூட பல சமயம் காமெடி டிராக் காப்பாற்றும். இப்போது ஹீரோவுடனேயே பயணிக்கும் கேரக்டர் என்பதால் கதையை சார்ந்து தான் காமெடி கொடுக்க முடிகிறது. தேதிகளும் அதிகம் கொடுக்க வேண்டியுள்ளது.

இது குதிரைக்கு கடிவாளம் போட்டது போல. ஒரு காமெடி வெற்றி அடைய முக்கிய காரணமே இயக்குனர் தான். ஆனால் இயக்குனர் சொன்னதை மட்டுமே அப்படியே பேசிவிட்டு செல்ல முடியாது. அதை டெவலப் செய்தால் தான் நன்றாக இருக்கும். எனவே மெருகேற்றுவது எனது வேலை. இயக்குனரை மீறி நாம் காட்சியை உருவாக்க முடியாது. ஆனால் கொடுக்கப்பட்ட காட்சிக்குள் என்னால் முடிந்ததை செய்கிறேன்.
4, 5 ஆண்டுகளாகவே ஹீரோ வாய்ப்புகள் வந்தன. எல்லாவற்றையும் மறுத்து வந்தேன். வெற்றி அண்ணன் அழைத்த உடன் முதலில் நம்பவில்லை. அழைத்து ஒருவரி கதை சொன்ன உடன் ஒப்புக்கொண்டேன். இந்த படத்தில் அவர்தான் ஹீரோ. சிவகார்த்திகேயனிடம் சொன்னேன். உற்சாகமும் ஊக்கமும் கொடுத்தார். ஜனவரியில் படப்பிடிப்பு செல்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாம்பே டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில் ஆசாத், ருகி சிங், அனுஷ்கா நடிப்பில் உருவாகும் ’ராஜ்யவீரன்’ படத்தின் முன்னோட்டம்.
இந்தியாவின் முதல் சமஸ்கிருத படமான அஹம் பிரம்மாஸ்மிமை இயக்கியவர் பிரபல இந்தி இயக்குனர் ஆசாத். பாம்பே டாக்கீஸ் நிறுவனம், அடுத்து ஆசாத்துடன் இணைந்து தமிழில் தயாரிக்கும் படம் ராஜ்யவீரன்.
இந்த படத்தில் ஆசாத், ருகி சிங், அனுஷ்கா, ஜேமி லீவர், ஆர்யன் வைத்திய, அச்சிந்த் கொர், ராகேஷ் பேடி, மாஸ்டர் அக்சய் பட்சு, மோசின் கான், அதுல் ஸ்ரீவாஸ்தவ, விவேக் வாசுவாணி, நசிர் ஜானி, வாக்கர் கான், டீப் ராஜ் ரான, அபை பார்கவ், ராசா முரத், மனிஷ் சவுத்தரி மற்றும் ஜாகிர் ஹுசைன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்திய தேசியவாத கொள்கையை ஆயுதமாக பயன்படுத்தி எதிரிகளை கையாளும் இந்த படம், அடிமைத்தனத்துக்கு எதிராகவும் குரல் கொடுக்கும். தேசப்பற்றை போற்றும் வகையில் இப்படம் உருவாகிறது. இசை: பப்பி லஹரி மற்றும் ஆசாத்; ஒளிப்பதிவாளர்: சேதுராமன், ராஜன் லியால்பூரி மற்றும் ஆகாஷ்தீப் பாண்டே; சண்டைக் காட்சிகள்: கௌஷல் மோசஸ் மற்றும் ஹனீப் கான்.
நடிகர் அஜித் புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அஜித்தின் அடுத்த படத்தையும் எச்.வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். இது ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் பூஜையுடன் தொடங்குகிறது.
படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அஜித் பைக் ரேஸராக நடிக்கிறார்.

இந்நிலையில், நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் சென்னையில் உள்ள உணவகம் ஒன்றிலிருந்து வெளியில் வரும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவில் அஜித் "டை" அடித்து புதிய கெட்டப்பில் இருப்பதால், புதிய படத்தில் இதே போன்ற தோற்றத்தில் தான் அஜித் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபாச படம் எடுத்து மிரட்டுவதாக நடிகர் மீது நடிகை ஒருவர் வடபழனி போலீசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
வடபழனி ஆற்காடு சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர். சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடரில் துணை நடிகையாக உள்ளார். இவர் வடபழனி போலீசில் நேற்று இரவு புகார் மனு ஒன்றை அளித்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு துணை நடிகரான பக்ருதீன் என்பவர் அறிமுகமானார். மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த பக்ருதீன் கடந்த வருடம் என்னை காதலிப்பதாக கூறினார்.
இதைத் தொடர்ந்து அவருடன் நெருங்கி பழகி வந்தேன். நான் அவருடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை ஆபாசமாக வீடியோ படம் எடுத்து வைத்து கொண்டு மிரட்டி வருகிறார். ஏற்கனவே பக்ருதீன் மீது திருவல்லிக்கேணி, புழல் போலீசில் புகார் செய்து இருந்தேன். அப்போது அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி இருந்தனர்.
தற்போது மீண்டும் பக்ருதீன் பழைய வீடியோ காட்சிகளை காட்டி பணம் கேட்டு மிரட்டுகிறார். நேற்று என் வீட்டிற்கு வந்த பக்ருதீன் எனது தாயை கொலை செய்து விடுவதாக கூறிவிட்டு சென்றார். பக்ருதீன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார். இதையடுத்து பக்ருதீன் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






