என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஆதித்ய வர்மா திரைப்படத்தின் இசை விழாவில் பேசிய துருவ் விக்ரம், அவர் இல்லைனா நான் ஒன்னுமே இல்லை என்று கூறியிருக்கிறார்.
    தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆதித்ய வர்மா என்ற பெயரில் உருவாகியுள்ளது. விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தை கிரிசாயா இயக்கி இருக்கிறார். பனிதா சந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

    இதில் துருவ் விக்ரம் பேசும்போது, ‘நான் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று பேசியிருக்கிறேன். ஆனால் இந்த விழா சற்று கூடுதல் சிறப்பு, காரணம் என் குடும்பம் இங்குள்ளது. எனது குடும்பத்தினால்தான் நான் இன்று இங்கே இருக்கிறேன். அவர்களின் ஆதரவு இல்லாவிட்டால் நிச்சயம் இங்கு இருந்திருக்க மாட்டேன்.

    விக்ரம் - துருவ் விக்ரம்

    இந்த படத்தில் இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாகவும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றி வந்த குழுவிற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தனக்கு ஆதரவளித்த தனது தயாரிப்பாளர் முகேஷ் மேத்தாவுக்கும் அவரது இசையமைப்பாளர் ரதனுக்கும் ஒர் பாடல் பாடியதற்காக நன்றி.

    அப்பா விக்ரம் பற்றி பேச என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்த படத்திற்கான அவரது அர்ப்பணிப்பு 100 சதவீதம். என் அப்பா ஒரு நல்ல நடிகர் என்பதை விட அக்கறையும் அன்பும் அதிகம் உள்ள தந்தை என்பது எனக்குத் தெரியும். அவர் இல்லைனா நான் ஒன்னுமே இல்லை’ என்றார்.
    டெர்மினேட்டர் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய ஆர்யா, அவரோட ஆக்‌ஷன் ரொம்ப அழகா இருக்கும் என்று கூறினார்.
    டெர்மினேட்டர் படத்தொடருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆக்‌ஷன் படங்களின் வரலாற்றை மாற்றிய டெர்மினேட்டர் படம் மூலம் தான் ஹாலிவுட்டில் பிரபலமானார் அர்னால்ட். இப்படத்தின் முதல் இரண்டு பாகங்களை ஜேம்ஸ் கேமரான் இயக்கியிருந்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் கதையில் பங்காற்றி தயாரித்திருக்கும் இப்படத்தில் டெர்மினேட்டராக அர்னால்ட் மீண்டும் நடித்துள்ளார். இந்தியாவில் இப்படத்தினை பாக்ஸ் ஸ்டூடியோஸ் வெளியிடுகிறது.

    இப்படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் ஆர்யா கலந்து கொண்டு டிரெய்லரை வெளியிட்டு பேசினார்.

    ஆர்யா பேசும்போது, ‘டெர்மினேட்டர் உலகம் முழுக்க பேமஸ். அவரோட டிரெயலரை நான் வெளியிடுவது எனக்கு ரொம்ப சந்தோஷம். அவரோட பயங்கர பேன். அவரோட எல்லா படமும் எனக்குப் பிடிக்கும்.

    ஆர்யா

    ஜிம் போற எல்லாருக்கும் அவர தெரியும். ஸ்டார இருக்கறதால மட்டும் அவர் பேமஸ் கிடையாது இப்ப வரைக்கும் அவரோட பேமஸுக்கு அவரோட பாடி பிஸிக் தான் காரணம். அப்பவே அவர் 7 முறை உலக அழகன் பட்டம் வாங்கிட்டார். இன்னும் 100 வருஷம் அவரோட புகழ் இருக்கும். ஆக்‌ஷன் பண்ணும்போது அவ்வளவு அழகா இருக்கும். உலகம் முழுக்க இருக்க இளைஞர்களுக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேஷன்.

    நவம்பர் 1ம் தேதி படம் வருது. இங்க அவருக்கு பெரிய ரெஸ்பான்ஸ் இருக்கு. எல்லோரும் பாருங்க எஞ்சாய் பண்ணுங்க’ என்றார்.
    பிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர செல்வா என்பவருக்கு சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது
    ‘தெறி’, ‘மெர்சல்’ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் விஜய், இயக்குனர் அட்லீ வெற்றிக் கூட்டணியில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படமாக ‘பிகில்’ உருவாகியுள்ளது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற அக்டோபர் 25-ந் தேதி ரிலீசாக உள்ளது.

    இதனிடையே உதவி இயக்குனர் கே.பி.செல்வா என்பவர், தன்னுடைய கதையை திருடி பிகில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், படத்திற்கு தடை கோரியும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கே.பி.செல்வா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து, வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார்.

    ஐகோர்ட்டு

    இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. பிகில் கதைக்கு உரிமை கோரிய செல்வாவின் மனுவை கீழமை நீதிமன்றம் நிராகரித்தது செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர செல்வா என்பவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் பிகில் படத்தின் வெளியீடு தொடர்பாக உயர்நீதிமன்றம் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இதனால் பிகில் படத்திற்கு தடை எதுவுமில்லை என அட்லீ தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
    தீபாவளியையொட்டி வெளியாகும் திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சி திரையிட இதுவரை அனுமதி தரப்படவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
    விஜய்-நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள படம் பிகில். அட்லீ இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு வருகிற அக்டோபர் 25-ந் தேதி பிகில் படம் திரைக்கு வருகிறது. இதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள கைதி படமும் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. 

    தீபாவளிக்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில், பெரும்பாலான திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கப்படாமல் இருந்தது. குறிப்பாக தீபாவளி சிறப்பு காட்சி திரையிடப்படுமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வந்தது. 

    கடம்பூர் ராஜூ

    இந்நிலையில், தீபாவளியையொட்டி வெளியாகும் பிகில் உள்ளிட்ட எந்த திரைப்படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு இதுவரை அனுமதி தரப்படவில்லை என  அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதனை மீறி சிறப்பு காட்சி திரையிட்டால் சம்பந்தப்பட்ட தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    நடிகை மனிஷா கொய்ராலா தனது வாழ்க்கையை மோசமாக்கிய பழக்கம் குறித்து அவர் எழுதிய புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
    தமிழில் பம்பாய், முதல்வன், இந்தியன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான மனிஷா கொய்ராலா இந்தி பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். சாம்ராட் டாகல் என்பவரை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்தார். மனிஷா கொய்ராலாவுக்கு 2012-ல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று மீண்டார். தற்போது புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். 

    நைனிடாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் மனிஷா கொய்ராலா கலந்து கொண்டு பேசியதாவது:- எனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மக்களுக்கு தெரியப்படுத்த புத்தகம் எழுதினேன். என்னை பார்த்து யாரேனும் புற்றுநோயில் சிக்கி குணமடைந்தவர் என்று சொன்னால் அதற்காக வருத்தப்பட மாட்டேன். புற்றுநோய் பாதிப்பில் நான் சிக்கியதை மறந்து எனது நடிப்பு மற்றும் திறமை பற்றி மக்கள் ஒரு நாள் பேசுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

    மனிஷா கொய்ராலா

    புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டபோது நான் சாவை எதிர்கொண்டேன். ஒரு ரோஜா தனது நிறத்தை இழக்கப்போகிறது என்று உணர்ந்தேன். ஆரம்பத்தில் மது பழக்கம் இருந்தது. இதனால்தான் எனது வாழ்க்கை மோசமாக மாறியது. அதை புத்தகத்திலேயே கூறி இருக்கிறேன். வாழ்க்கை மீது வெறுப்பு ஏற்பட்டது. இப்போது புதிதாக பிறந்த உணர்வு ஏற்படுகிறது. இவ்வாறு மனிஷா கொய்ராலா கூறினார்.
    சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள ‘தலைவர் 168’ படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இசையமைக்க உள்ளார்.
    ரஜினி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தர்பார்’. இதன் படப்பிடிப்பு முடிந்த நிலையில், டப்பிங் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதையடுத்து ரஜினியின் 168-வது படத்தை சிவா இயக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது. இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    டி.இமான்

    இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க உள்ளார். ‘விஸ்வாசம்’ படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் இசையமைப்பையும் டி.இமானிடம் கொடுக்க சிவா முடிவு செய்திருக்கிறார். இதற்கு ரஜினி தரப்பும் சம்மதம் கூறியுள்ளது. இதன்மூலம், ரஜினி படத்துக்கு முதல்முறையாக டி.இமான் இசையமைக்க உள்ளார். 
    பிகில் படம் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், அவதூறு பேசியதாக விஜய் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    விஜய்-நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள படம் பிகில். அட்லீ இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தீபாவளியை முன்னிட்டு வருகிற அக்டோபர் 25-ந் தேதி பிகில் படம் திரைக்கு வருகிறது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. 

    இது ஒருபுறம் இருக்க பிகில் படத்திற்கு எதிர்ப்புகளும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. கடந்த மாதம் பிகில் பட போஸ்டர் இறைச்சி வியாபாரிகளை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாக கூறி, கறிக்கடை உரிமையாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து அவர்களுக்கு இறைச்சி வெட்டும் கட்டை, கத்தி உள்ளிட்ட பொருட்களை வழங்கி விஜய் ரசிகர்கள் சமாதானம் செய்தனர்.

    பூ வியாபாரிகள்

    இந்நிலையில், பூ வியாபாரிகள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் விஜய்க்கு பூ வியாபாரிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், பூக்கடைக்காரர்களை பட்டாசு கடையில் வேலைக்கு வைத்தால், பட்டாசு மேல் தண்ணீர் தெளித்து விடுவார்கள் என்று பேசினார். இந்த பேச்சு தங்களது மனதை புண்படுத்திவிட்டதாக கூறிய திருச்சி ஸ்ரீரங்கம் சாத்தார வீதி பூச்சந்தை, அண்ணா புஷ்ப தொழிலாளர்கள் சங்கத்தினர், விஜய் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் பிகில் படத்தை புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். 
    மீண்டும் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாகவும், அதற்கு அவர் தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
    சூர்யா-இயக்குனர் ஹரி கூட்டணியில் வந்த ஆறு, வேல் ஆகிய படங்கள் வெற்றி பெற்றுள்ளன. 2010-ல் மீண்டும் இவர்கள் கூட்டணியில் சிங்கம் படம் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படத்தில் சூர்யாவின் துரை சிங்கம் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.

    அதன்பிறகு சிங்கம் படத்தின் 2-ம் பாகம் 2013-ல் வெளியாகி அதுவும் வெற்றி பெற்றது. தொடர்ந்து சிங்கம் 3-ம் பாகம் எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்தனர். இதனால் சிங்கம் 3-ம் பாகம் எஸ்.3 என்ற பெயரில் தயாரானது. இந்த படத்துக்கும் வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து சிங்கம் 4-ம் பாகம் தயாராகுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

    சூர்யா, ஹரி

    இந்த நிலையில் ஹரி இயக்கத்தில் சூர்யா மீண்டும் நடிப்பதை நடிகர் கார்த்தி உறுதிப்படுத்தி உள்ளார். ஐதராபாத்தில் நடந்த கைதி படம் நிகழ்ச்சியில் கார்த்தி கலந்து கொண்டு பேசும்போது, “அடுத்து ஹரி இயக்கும் படத்தில் நடிக்க சூர்யா தயாராகி வருகிறார்” என்றார். இந்த படம் சிங்கம் 4-ம் பாகமாக இருக்குமோ? என்ற யூகங்கள் கிளம்பி உள்ளன.

    சிங்கம் 4-ம் பாகமா? அல்லது வேறு கதையா? என்பதை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. தற்போது சுதா கொங்கரா இயக்கும் சூரரை போற்று படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார்.
    திருமணத்தின் போது தனது பாட்டியின் கிழிந்த புடவையை அணிந்து கொண்டதாக நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
    தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். ஹாலிவுட் பட வாய்ப்புகளும் வருகின்றன. அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:- வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன். இந்தியில் எனக்கு தனி இடம் இருக்கிறது. தமிழ், தெலுங்கு ரசிகர்களும் ஆதரவு கொடுத்தனர். லண்டனை சேர்ந்த பெனடிக் டைலரை 2012-ல் பதிவு திருமணம் செய்து கொண்டேன். 

    திருமணத்தின் போது எனது பாட்டியின் கிழிந்த புடவையைத்தான் கட்டிக்கொண்டேன். அதே மாதிரி திருமண வரவேற்புக்கு மட்டும் ஒரு டிரெஸ் எடுத்தேன். அதன் விலை வெறும் ரூ.10 ஆயிரம்தான். இப்போதெல்லாம் திருமண உடைகளுக்காகவே டிசைனர் வைத்துக்கொண்டு லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் செலவு செய்கிறார்கள். 

    ராதிகா ஆப்தே

    உடைகளுக்காக அதிகமாக செலவு செய்ய எனக்கு விருப்பம் கிடையாது. நமது நாட்டில் அளவுக்கு மீறி மிகவும் ஆடம்பரமாக பலரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். கடன் வாங்கியும் திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணத்தை ஒரு விழா மாதிரி எடுக்கிறார்கள். அதற்கு பெரிய அளவில் செலவு செய்கிறார்கள். அதைப் பார்த்து நடுத்தர வர்க்கத்தினர் திருமணம் என்றாலே பயப்படுகிறார்கள்.

    இந்த மாதிரி ஆடம்பரமாக திருமணங்களை நடத்த கூடாது. நான் பதிவு திருமணம் செய்து கொண்டாலும் அதிலும் இனிமையான அனுபவம் இருக்கிறது.” இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.
    அஜித்-வினோத் கூட்டணியில் உருவாகும் அடுத்த படத்தில் நஸ்ரியா நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
    நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பிறகு அஜித்குமார், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் மீண்டும் புதிய படம் தயாராகிறது. இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். சமீபத்தில் சென்னையில் உள்ள போனிகபூர் அலுவலகத்தில் ‘வலிமை’ பட பூஜை எளிமையாக நடந்தது.

    இந்த படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடக்கிறது. அதிரடி சண்டை படமாக தயாராகும் இதில், அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் கார்பந்தய காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன.

    நஸ்ரியாவின் டுவிட்டர் பதிவு

    வில்லனாக நடிக்க அருண் விஜய்யை பரிசீலிக்கின்றனர். படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் ‘வலிமை’ படத்தில் நஸ்ரியா நடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் நேரம், ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்கா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

    மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை. தற்போது தலைமுடியை குட்டையாக வெட்டி புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு அதில் வலிமை என்று ஹேஷ்டேக் போட்டுள்ளார். இதன் மூலம் அஜித் படத்தில் அவர் நடிக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி உள்ளது.
    சினிமா விழாவில் கலந்துக் கொண்ட இயக்குனர் சிவா, நடிகர் விஜய் கூட சீக்கிரமே படம் பண்ணுவேன் என்று கூறியிருக்கிறார்.
    சிறுத்தை படம் மூலம் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் சிவா. இவர் அஜித்தை வைத்து, ‘வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம்’ ஆகிய படங்களை இயக்கினார். இப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. தொடர்ந்து அஜித்தை வைத்து படம் இயக்கிய சிவா, அடுத்ததாக ரஜினியை வைத்து படம் இயக்க இருக்கிறார்.

    தலைவர் 168 என்று அழைக்கப்படும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

    சிவா - விஜய்

    இந்நிலையில், விழா ஒன்றில் கலந்துக் கொண்ட இயக்குனர் சிவா, விஜய் கூட கூடிய சீக்கிரமே படம் பண்ணுவேன் என்று கூறியிருக்கிறார்.

    பிகில் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். இப்படம் முடிந்த பிறகு விஜய் - சிவா கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    தமிழ் சினிமாவில் தமிழ் பெண்களின் நிலைமை மோசமாக இருக்கிறது என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
    நடிகைகளில் தமிழ் பேச தெரிந்தவர்கள் மட்டும் அல்ல தெளிவாக பேச தெரிந்தவர்களும் மிக குறைவே... தற்கால நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த குறையை போக்குகிறார். சினிமாவில் பெண்கள் பாதுகாப்பு பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘மத்த மொழி ஹீரோயின்கள்தாம் தமிழ்ல நடிச்சிக்கிட்டு இருக்காங்க. முதல்ல தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகள் எத்தனை பேர் இருக்காங்க. நாம ஓர் அமைப்பு ஆரம்பிச்சு அதுக்கு உறுப்பினரா அவங்களைச் சேரச் சொன்னா அவங்க வருவாங்களா?. இந்தியில இந்திப் பொண்ணுங்க நடிக்கிறாங்க, மலையாளத்துல கேரளப் பொண்ணுங்க நடிக்கிறாங்க, ஆனா, தமிழ்ல மட்டும்தான் தமிழ்ப் பொண்ணுங்க நடிக்கிறதே இல்லை. ரெஜினா, சமந்தா ரெண்டு பேரும் நல்லா தமிழ் பேசுவாங்க. ஆனா, ஆரம்பத்துல அவங்களுக்குத் தமிழ்ல வாய்ப்புகள் கிடைக்கலை. 

    தெலுங்குல மாஸ் ஹீரோயினா ஆனதுக்குப் பிறகுதான் தமிழ் சினிமா சிவப்புக் கம்பளம் விரிச்சு அவங்களை வரவேற்றது. தன்ஷிகா நல்லா தமிழ் பேசுற ஹீரோயின். ஆனா, அவங்களுக்குப் படங்கள் இல்லை. ஜனனி ஐயர், வரலட்சுமி சரத்குமார் இவங்க எல்லாரும் தமிழ் பேசுறவங்களா இருந்தும் பெரிய படங்கள்ல நடிக்கலை. 

    பெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டியில பட்டம் வென்ற அனுக்ரீத்தி வாஸ் திருச்சிப் பொண்ணு. மிஸ் இந்தியா பட்டம் வாங்குனதுக்கு அப்புறம்தான் அனு க்ரீத்தி யார்னு நமக்குத் தெரிய வந்துச்சு. இந்த மாதிரி அனு க்ரீத்திகள் நிறைய பேர் இங்க இருக்காங்க. நாமதான் அவங்களை அடையாளம் கண்டுக்காம இருக்கோம். இது எல்லாத்தையும் மீறி, நம்ம பொண்ணுங்க நடிக்க வந்தா அவங்களை மதிக்க மாட்டாங்க. ஒழுங்கா சாப்பாடு போட மாட்டாங்க. பாம்பே பொண்ணுங்களுக்குக் கிடைக்குற மரியாதையைவிட நமக்கு ஒருபடி குறைவாத்தான் கிடைக்கும். 

    ஐஸ்வர்யா ராஜேஷ்

    வடநாட்டுப் பொண்ணுங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர்ற சினிமா துறையினருக்கு, ஏன் நம்ம ஊர் பொண்ணுங்களை சரியாப் பார்த்துக்கத் தெரியலைங்கிற வருத்தம் எனக்குள்ள நிறையவே இருக்கு. நான் எனக்கு நேர்ந்ததை மட்டும் மனசுல வச்சுக்கிட்டுப் பேசலை. தமிழ் நடிகைகள் எல்லாருக்குமே இதே நிலைமைதான். 

    கதை சார்ந்த படங்களுக்கு நாம யதார்த்தமா இருந்தா போதும். அழகு முக்கியமில்லை. அதுவே கமர்ஷியல் படங்களுக்கு நாம அழகா இருக்கணும். இல்லைனா நம்ம ஊர் மக்கள் மீம்ஸ் போட்டு நம்மளை கலாய்ச்சுத் தள்ளிருவாங்க. அதனால, நம்ம ஊரு பொண்ணுங்க அதிகம் நடிக்க வந்ததுக்குப் பிறகு, ஓர் அமைப்பு ஆரம்பிச்சு பெண்களுக்கான பிரச்னைகளைத் தீர்த்து வச்சா எனக்கு சந்தோஷம்தான். நான் அதுக்கான எல்லாவிதமான உதவிகளையும் பண்ணுறதுக்கு ரெடி’ என்றார்.
    ×