என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நொச்சிப்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் திருமூர்த்தியை இசையமைப்பாளர் டி.இமான் பாடகராக அறிமுகம் செய்துள்ளார்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிப்பட்டியை சேர்ந்த திருமூர்த்தி, அண்மையில் விஸ்வாசம் திரைப்பட பாடலை பாடிய காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இந்த வீடியோவை பார்த்த இசையமைப்பாளர் டி.இமான், அந்த இளைஞரை நேரில் அழைத்து பாராட்டியதோடு, அவருக்கு வாய்ப்பளிப்பதாகவும் உறுதி அளித்திருந்தார். கொடுத்த வாக்கை காப்பாற்றும் வகையில், கண் பார்வை தெரியாத மாற்றுத்திறனாளி இளைஞரான திருமூர்த்தியை பின்னணி பாடகராக இமான் அறிமுகம் செய்துள்ளார். 

    டி.இமானின் டுவிட்டர் பதிவு

    இது தொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ’நொச்சிப்பட்டி திருமூர்த்தியை பின்னணி பாடகராக அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் தயாரிப்பில் ரத்னசிவா இயக்கத்தில் ஜீவா நடிக்கும் சீறு படத்திற்காக திருமூர்த்தி பாடியுள்ள ஆத்மார்த்தமான பாடல் விரைவில் வெளியாகும்’ என குறிப்பிட்டுள்ளார். திருமூர்த்தியை சீறு படத்தின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகப்படுத்திய இமானுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. 
    சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ஹீரோ படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
    சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படம் 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கும் ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், இவானா நாயகிகளாக நடிக்க, அர்ஜூன், ரோபோ சங்கர், பிரேம் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    இப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் அக்டோபர் 24-ந் தேதி காலை 11.03 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ஹீரோ பட போஸ்டர்

    சூப்பர்ஹீரோ கதையம்சத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார். 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா, கே.ஜி.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் இணைந்த இந்த படத்தை தயாரிக்கின்றனர். 
    ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இளம் நடிகை உயிரிழந்தார்.
    மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் பூஜா சுன்ஜார். திரைப்பட நடிகையான இவர் சில மராட்டிய படங்களில் நடித்துள்ளார். கர்ப்பமாக இருந்த காரணத்தால் கடந்த சில மாதங்களாக திரைப்படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்த பூஜா, தனது சொந்த ஊரான ஹிங்கோலியில் ஓய்வெடுத்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரது உறவினர்கள் கோரேகானில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு பிறந்த குழந்தை, ஒருசில நிமிடங்களில் உயிரிழந்தது.

    பூஜா சுன்ஜார்

    இதையடுத்து பூஜாவின் உடல் நிலையும் மோசமடைந்ததை உணர்ந்த மருத்துவர்கள், அவரை உடனடியாக ஹிங்கோலியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஹிங்கோலிக்கு செல்ல, அவரது உறவினர்கள் ஆம்புலன்சை தேடி அலைந்துள்ளனர். சுமார் ஒரு மணி நேரமாகக் காத்திருந்த பின் ஆம்புலன்ஸ் கிடைத்துள்ளது. இதனையடுத்து ஆம்புலன்சின் மூலம் பூஜாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே பூஜா உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    பிரபல இயக்குநர் மீது நடிகை மஞ்சு வாரியர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
    மலையாள சினிமாவில் புகழ் பெற்ற நடிகை மஞ்சு வாரியர். இவர் நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி ஆவார். தனுஷ் நடித்துள்ள அசுரன் படித்தில் நடித்து உள்ளார். மஞ்சுவாரியர் மலையாள சினிமா தயாரிப்பாளரும், இயக்குநருமான ஸ்ரீகுமார் மேனன் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். மஞ்சுவாரியரின் தொழில் பங்குதாரராகவும் ஸ்ரீகுமார் மேனன் இருந்து உள்ளார்.

    மஞ்சுவாரியர் புகாரில், தனது உயிருக்கு ஆபத்து மற்றும் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் நிதி பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்புவதாக கூறி உள்ளார். திரைப்படத்தின் தயாரிப்பு மற்றும் வெளியீட்டின் பல்வேறு கட்டங்களில் இயக்குனர் தன்னை வாய்மொழியாக துஷ்பிரயோகம் செய்ததாக நடிகை குற்றம் சாட்டியுள்ளார். ஸ்ரீகுமார் மேனனின் நடத்தை தீவிர மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.

    மஞ்சுவாரியரது குற்றச்சாட்டுகளின் கடுமையான தன்மையைக் கருத்தில் கொண்டு போலீஸ் டிஜிபி லோக்நாத் பெஹெரா, உயர் அதிகாரி ஒருவரிடம்  விசாரணை ஒப்படைக்கக்கூடும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மொபைல்போன் உரையாடலின் ஒரு ஆடியோ கிளிப்பிங்கையும் ஆதாரமாக மஞ்சுவாரியர் சமர்ப்பித்து உள்ளார்.

    ஸ்ரீகுமார் மேனன், மஞ்சு வாரியர்

    தொழில்துறையில் பணியமர்த்தல் மற்றும் ஊதிய பாகுபாடு மற்றும் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட தொழில்துறையில் கூறப்படும் பாலின துன்புறுத்தல்களை எதிர்த்துப் போராட  2017 ஆம் ஆண்டில் மலையாள சினிமா பெண்கள் அமைப்பு ஒன்றை மஞ்சுவாரியர் ஏற்படுத்தினார். குற்றச்சாட்டுக்கு உள்ளான ஸ்ரீகுமார் மேனன் சமீபத்தில் மோகன்லால்- மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான ஓடியன் படத்தை இயக்கி உள்ளார்.

    இதற்கிடையில், ஸ்ரீகுமார் மேனன் தனது பேஸ்புக் பக்கத்தின் மூலம், மஞ்சு வாரியர் புகாருக்கு பதில் அளித்து உள்ளார். அவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாவது, "நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாள சினிமாவுக்கு திரும்பியபோது மஞ்சு வாரியர் கிடைத்த எல்லா உதவிகளையும் மறந்து விட்டார். "நீங்கள் உங்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது உங்கள் வங்கி கணக்கில் ரூ.1,500 மட்டுமே இருப்பதாக நீங்கள் என்னிடம் கூறியிருந்தீர்கள். 

    எங்கள் முதல் விளம்பரத்தின் முன் பணமாக நான் உங்களுக்கு ரூ.25 லட்சம் காசோலையை வழங்கியபோது, கடவுள் உங்களுக்கு அனுப்பிய தூதர் நான் என்று நீங்கள் அழுதீர்கள். உங்களால் பல முக்கிய நபர்கள் என் எதிரிகளாக மாறினர். நான் ஊடக அறிக்கைகள் மூலமாக மட்டுமே போலீஸில் அளித்த புகார் குறித்து அறிந்து கொண்டேன். விசாரணைக்கு நான் முழுமையாக ஒத்துழைப்பேன்" என கூறி உள்ளார்.
    தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் நடிகர் சார்லிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் டாக்டர் பட்டம் வழங்கினார்.
    தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக 12-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு மொரிசீயஸ் நாட்டு முன்னாள் அமைச்சரும், உலக திருக்குறள் மைய நிறுவனருமான ஆறுமுகம் பரசுராமன், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியன், எழுத்தாளர் கல்யாணசுந்தரம் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கினார்.

    மேலும் திரைப்பட நடிகர் சார்லி உள்பட 150 பேருக்கு டாக்டர் பட்டங்களை கவர்னர் வழங்கினார். விழாவில் முனைவர் பட்ட மாணவர்கள், ஆய்வியல் நிறைஞர் மாணவர்கள், கல்வியியல் நிறைஞர் மாணவர்கள், முதுநிலை பட்ட மாணவர்கள், இளங்கலை கல்வியியல் மாணவர்கள் மற்றும் தொலைநிலைக்கல்வி மாணவர்கள் என மொத்தம் 10 ஆயிரத்து 346 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
    பிகில் திரைப்படம் வெளியாவதையொட்டி பேனருக்கு பதிலாக அரசு பள்ளியில் சிசிடிவி கேமராக்களை விஜய் ரசிகர்கள் பொருத்தி இருக்கிறார்கள்.
    சமீபத்தில் பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ என்ற பெண் கீழே விழுந்து பின்னால் வந்த லாரி ஏறி உடல் நசுங்கி பலியானார். இந்த சம்பவத்தால் பேனர் வைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு சினிமா பிரபலங்கள் அறிவுறுத்தினர்.

    காப்பான் படம் வெளியாகும் போது சூர்யாவின் ரசிகர்கள் இலவசமாக தலைக்கவசத்தை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினர். அசுரன் திரைப்படம் வெளியாகும் போதும் தனுஷ் ரசிகர்கள் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினர்.

    விஜய் ரசிகர்கள்

    தற்போது விஜய்யின் பிகில் திரைப்படம் ரிலீசாக இருப்பதால், நெல்லை மாவட்ட விஜய் ரசிகர்கள், கட்அவுட், பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு பதிலாக நெல்லை மீனாட்சிபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட நான்கு இடங்களில் மொத்தம் 12 சிசிடிவி மற்றும் மானிட்டர்களை காவல்துறை அதிகாரியின் ஆலோசனையின் பேரில் அமைத்து கொடுத்துள்ளனர்.
    தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவை, பிரபல பாலிவுட் நடிகை கேத்ரீனா கைப் பாராட்டி கூறியுள்ளார்.
    பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகவும் பிரபலமாக இருப்பவர் கேத்ரீனா கைப். தற்போது தனது பிராண்ட் மேக்கப் உபகரணங்களை அறிமுகம் செய்வதற்காக வீடியோ சூட் நடத்தி அதற்கு கே பியூட்டி என்று பெயர் சூட்டியுள்ளார்.

    கே பியூட்டி விளம்பரத்தில் நடிகை கேத்ரீனா கைப்புடன் பல்வேறு முன்னணி நடிகைகளும் இணைந்து நடித்துள்ளனர். அவர்களில் நயன்தாராவும் இடம்பெற்றுள்ளார்.

    கேத்ரீனா கைப் - நயன்தாரா

    இந்நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில், “தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு நன்றி. இடைவிடாத பணிகளுக்கு மத்தியிலும் கே பியூட்டி வெளியீட்டுக்காக மும்பைக்கு பறந்து வந்ததற்கு நன்றி. நீங்கள் மிகவும் தாராள மனதுடையவர். என்றென்றும் நான் உங்களுக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
    ’அவள் பெயர் தமிழரசி’, ’நீர்ப்பறவை’, ’வீரம்’ ஆகிய படங்களில் நடித்த மனோசித்ரா நடிப்பில் உருவாகி வரும் ‘ரூம்’ படத்தின் முன்னோட்டம்.
    சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரடொக்சன்ஸ் மற்றும் அஸ்வின் கே.வின் மார்ச் 30 நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ரூம்’. பார்த்திபன் நடித்த 'அம்முவாகிய நான்' மற்றும் 'நேற்று இன்று' ஆகிய படங்களை இயக்கிய பத்மாமகன் ‘ரூம்’   படத்தை இயக்குகிறார். தமிழ் தெலுங்கு கன்னடம் என மூன்று மொழிகளில் ‘ரூம்’ தயாராகிறது.

    தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த அபிஷேக் வர்மா படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக மனோசித்ரா நடிக்கிறார். இவர் ’அவள் பெயர் தமிழரசி’, ’நீர்ப்பறவை’, ’வீரம்’ ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் ஹைலைட்டான அம்சமே பெரும்பகுதி காட்சிகள் ஒரு பாத்ரூமுக்குள் நிகழ்வதாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பதுதான்.. அந்தவகையில் படத்தின் டைட்டிலுக்கு ஏற்றபடி வித்தியாசமான, தமிழ் சினிமாவில் இதுவரை மேற்கொள்ளப்படாத ஒரு முயற்சியாக திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு ஆச்சர்யமான அனுபவமாக இருக்கும்.

    ரூம்

    பிரபல ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு படத்தின் ஒளிப்பதிவை கவனிக்க, இசையமைக்கிறார் வினோத் யஜமான்யா. இவர் தெலுங்கில் கிட்டத்தட்ட 300 படங்களுக்கு பின்னணி இசை அமைத்துள்ளார். 

    ’குற்றம் கடிதல்’, ’ஹவுஸ் ஓனர்’ என இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட  முக்கியமான படங்களுக்கு படத்தொகுப்பு செய்த சி.எஸ்.பிரேம் ‘ரூம்’   படத்தை எடிட் செய்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
    கார்த்தியின் கைதி திரைப்படத்தை சட்டவிரோத இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் ஒரு இரவில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இத்திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு வரும் 25-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

    இந்நிலையில் இந்தப் படத்தை தயாரித்துள்ள ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

    கைதி படத்தில் கார்த்தி

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 1,620 சட்டவிரோத இணையதளங்களில் கைதி திரைப்படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
    துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஆதித்ய வர்மா’ படத்தில் விக்ரம் கேட்டதற்காக சிவகார்த்திகேயன் ஒரு பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.
    விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிகராக அறிமுகமாகும் படம் 'ஆதித்ய வர்மா'. தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது. கிரிசய்யாவின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.  

    இவ்விழாவில் பேசிய நடிகர் விக்ரம், 'ஆதித்ய வர்மா' திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், இணை இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார். ஒவ்வொருவர் குறித்தும் தனித்தனியே பேசி நன்றி தெரிவித்த விக்ரம், தொடர்ந்து படம் உருவாக உதவி புரிந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். 

    விக்ரம்

    அந்த வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து, "நான் ஒரு போன்தான் பண்ணேன். 'சிவா... எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும் சிவா, இந்தப் படத்துக்கு ஒரு சாங் எழுதணும்'னு கேட்டேன். அவர் உடனே எழுதித்தந்தார். மற்ற எல்லா பாடல்களிலும் ஓரிரு வரிகளை நாங்க மாற்றினோம். ஆனால், சிவா எழுதிய பாட்டுல மட்டும் எதுவுமே மாற்றவில்லை’ என்றார்.
    நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
    விக்ரம் வேதா, இவன் தந்திரன், நேர்கொண்ட பார்வை படங்களில் நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். தற்போது விஷாலுக்கு நாயகியாக புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் உடல் பருமனாக இருந்த புகைப்படம் ஒன்றையும், தற்போதுள்ள புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

    மேலும் இந்த புகைப்படத்துடன் எப்படி இவ்வாறு மாறினேன் என்பதையும் கூறியுள்ளார். அந்த பதிவில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கூறியிருப்பதாவது: அது என் முதல் சர்வதேச விடுமுறை சுற்றுலா. என் சட்டத்துறையில் பணிபுரிய ஆரம்பித்து 1 வருடம் ஆகியிருந்தது. பலரும் கனவு காணும் ஒரு வேலையில் இருந்தேன். அந்த வேலையில் நல்ல சம்பளம், ஜாலியான வாழ்க்கை முறை, அதுவரை நான் செலவிடாத விஷயங்களில் எல்லாம் செலவிட ஆரம்பித்திருந்தேன்.

    ஷ்ரத்தா ஸ்ரீநாத்

    உணவு, உடை, வெளியே செல்வது, திரைப்படங்கள் பார்ப்பது, நீங்கள் என்னவெல்லாம் சொல்வீர்களோ அதில் எல்லாம். உடல் பருமனில் உச்சத்தில் இருந்தேன். மாதத்திற்கு ஒரு முறை உடற்பயிற்சி செய்யும் அளவு உற்சாகமே இருந்தது. 

    இந்த புகைப்படம் எடுத்து சில காலம் பிறகு இந்த வயதிலேயே இப்படி இருக்கக்கூடாது என்று புரிந்தது. எனவே எனது அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் ஜிம்முக்கு சென்றேன். கடுமையாக பயிற்சி செய்தேன். உணவுகட்டுப்பாட்டில் இருந்தேன். உடல் எடையை குறைத்தேன்’. இவ்வாறு தன் இன்ஸ்டாகிராம் பதிவில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
    ஆதித்ய வர்மா திரைப்படத்தின் இசை விழாவில் பேசிய துருவ் விக்ரம், அவர் இல்லைனா நான் ஒன்னுமே இல்லை என்று கூறியிருக்கிறார்.
    தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆதித்ய வர்மா என்ற பெயரில் உருவாகியுள்ளது. விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தை கிரிசாயா இயக்கி இருக்கிறார். பனிதா சந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

    இதில் துருவ் விக்ரம் பேசும்போது, ‘நான் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று பேசியிருக்கிறேன். ஆனால் இந்த விழா சற்று கூடுதல் சிறப்பு, காரணம் என் குடும்பம் இங்குள்ளது. எனது குடும்பத்தினால்தான் நான் இன்று இங்கே இருக்கிறேன். அவர்களின் ஆதரவு இல்லாவிட்டால் நிச்சயம் இங்கு இருந்திருக்க மாட்டேன்.

    விக்ரம் - துருவ் விக்ரம்

    இந்த படத்தில் இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாகவும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றி வந்த குழுவிற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தனக்கு ஆதரவளித்த தனது தயாரிப்பாளர் முகேஷ் மேத்தாவுக்கும் அவரது இசையமைப்பாளர் ரதனுக்கும் ஒர் பாடல் பாடியதற்காக நன்றி.

    அப்பா விக்ரம் பற்றி பேச என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்த படத்திற்கான அவரது அர்ப்பணிப்பு 100 சதவீதம். என் அப்பா ஒரு நல்ல நடிகர் என்பதை விட அக்கறையும் அன்பும் அதிகம் உள்ள தந்தை என்பது எனக்குத் தெரியும். அவர் இல்லைனா நான் ஒன்னுமே இல்லை’ என்றார்.
    ×