என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய படத்தில் சூரி நகைச்சுவை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    ரஜினிகாந்த் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் போலீஸ் அதிகாரியாக வருகிறார். கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகிபாபு, தம்பி ராமையா ஆகியோரும் உள்ளனர். டப்பிங், ரீ ரிக்கார்டிங், இசை கோர்ப்பு பணிகள் நடக்கின்றன. படம் பொங்கல் பண்டிகை அன்று திரைக்கு வருகிறது.

    அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை சிவா இயக்குகிறார். இவர் கார்த்தியின் சிறுத்தை, அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை எடுத்து பிரபலமானவர். புதிய படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இது ரஜினிகாந்துக்கு 168-வது படம். கிராமத்து பின்னணியில் அதிரடி படமாக தயாராகிறது.

    ரஜினி, சூரி

    விவசாய பிரச்சினைகளை படத்தில் வைத்திருப்பதாகவும், இதில் ரஜினிகாந்த் வேட்டி கட்டி நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இதர நடிகர், நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. படத்தில் 2 கதாநாயகிகள் என்றும் இதற்காக ஜோதிகா, மஞ்சு வாரியர் ஆகியோரிடம் பேசி வருவதாகவும் தகவல் பரவி உள்ளது. 

    கீர்த்தி சுரேசும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. இந்த படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிக்க சூரியை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. இது உறுதியானால் சூரிக்கு ரஜினியுடன் நடிக்கும் முதல் படம் இதுவாக இருக்கும்.
    தோல்வி படத்துக்கு பின் தான் நடித்த படம் வெற்றியடைந்துள்ளதால், நடிகர் சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியடைந்துள்ளார்.
    சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘நம்ம வீட்டு பிள்ளை’ படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. இதில் பாரதிராஜா, சமுத்திரக்கனி, சூரி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் நடித்து இருந்தனர். பாண்டிராஜ் இயக்கினார். இதற்கு முன் வெளியான ‘மிஸ்டர் லோக்கல்’ படம் தோல்வி அடைந்த வருத்தத்தில் இருந்த சிவகார்த்திகேயனுக்கு இந்த வெற்றி மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக அவர் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். 

    நம்ம வீட்டு பிள்ளையை வெற்றிப் படமாக்கிய ரசிகர்கள், தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் படத்தின் இயக்குனர் பாண்டிராஜ், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அடுத்து விஷாலின் இரும்புத்திரை படத்தை எடுத்து பிரபலமான பி.எஸ்.மித்ரன் இயக்கும் ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். சூப்பர் ஹீரோ கதையம்சத்தில் உருவாகிறது. 

    சிவகார்த்திகேயன்

    இதன் படப்பிடிப்பு முடிந்து டப்பிங், ரீ ரிக்கார்டிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. இதில் நடிக்கும் சிவகார்த்திகேயன் தோற்றம் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். இது அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கும் ஆதித்ய வர்மா படத்தில் ஒரு பாடலையும் சிவகார்த்திகேயன் எழுதி உள்ளார்.
    தற்போது பல படங்களுக்கு இசையமைத்து வரும் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், காமெடி படம் என்றால் பயப்படுவேன் என்று கூறியிருக்கிறார்.
    இனம், அப்புச்சி கிராமம், குற்றம் 23, ஜில் ஜங் ஜக், ஜாக்பாட் உள்பட பல படங்களுக்கு இசை அமைத்தவர், விஷால் சந்திரசேகர். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: ‘எல்லா வகை படங்களுக்கும் இசை அமைத்துள்ள நான், காமெடி படம் என்றால் மட்டும் பயப்படுவேன். 

    காரணம், காமெடி படங்களுக்கு இசை அமைப்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. ஒவ்வொரு காமெடி நடிகருக்கும் தனி அடையாளம் தரக்கூடிய ஒலி உருவாக்க வேண்டும். முழு படத்தையும் ரசிகர்களுக்கு போரடிக்காமல் தரக்கூடிய மிகப் பெரிய பொறுப்பு, இயக்குனருக்கு அடுத்து இசை அமைப்பாளருக்கு இருக்கிறது. 

    விஷால் சந்திரசேகர்

    எனக்கு சினிமாவில் நடிக்க அழைப்பு வருகிறது. முழுநேர நடிகராக மாறும் எண்ணம் தற்போது இல்லை. பரத் நடிக்கும் காளிதாஸ், அஞ்சலியுடன் யோகி பாபு நடிக்கும் படம், வைபவ் நடிக்கும் டாணா உள்பட பல படங்களுக்கு இசை அமைக்கிறேன். என் மனைவி சிந்தூரி ஒரு பாடகி. ஆர்குட் மூலமாக நட்பானோம். சந்தித்த மூன்றாவது நாளே கதலை சொல்லி சம்மதம் வாங்கிவிட்டேன். 2013 இல் திருமணமானது. இசையமைப்பதற்காக வெளிநாடுகள் செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. வீட்டில் தான் எனக்கு இசையமைக்க பிடிக்கும்’. இவ்வாறு அவர் கூறினார்.  
    ராய் லட்சுமி, சாக்‌ஷி அகர்வால் நடிப்பில் வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் முன்னோட்டம்.
    உலகெங்கும் தேவதைக் கதைகளில் உலாவரும் மிகவும் புகழ்பெற்ற பெயர் 'சிண்ட்ரெல்லா'. இந்தப் பெயரில் தமிழில் ஒரு திகில் ஹாரர் பேய்ப் படம் உருவாகி இருக்கிறது.

    இதில் ராய்லட்சுமி, சாக்‌ஷி அகர்வால், ரோபோ சங்கர், 'கல்லூரி' வினோத், பாடகி உஜ்ஜயினி, கஜராஜ், மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பிரதான வேடம் ஏற்றிருக்கும் இப்படத்தை வினோ வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இவர் சில ஆண்டுகள் எஸ்.ஜே.சூர்யாவிடம் பணிபுரிந்து சினிமா கற்றவர்.

    'காஞ்சனா 2' படத்திற்கு இசை அமைத்த அஸ்வமித்ரா இசையமைத்திருக்கிறார். தெலுங்கில் 'லட்சுமி என்டிஆர்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ராமி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. விரைவில் இப்படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    அல்டி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் சேதுபதி, அவர் ஒரு சீன்ல வந்தாலும் தனி முத்திரை பதிப்பார் என்று கூறியிருக்கிறார்.
    பிரபல நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமியின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘அல்டி’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பாக்யராஜ், ராதாரவி, ஜாக்குவார் தங்கம், விஜய் சேதுபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் மற்றும் படக்குழுவினரும் கலந்துக் கொண்டனர்.

    விஜய் சேதுபதி - மயில்சாமி

    இதில் விஜய்சேதுபதி பேசும்போது, ‘மயில்சாமி அவர்களின் மகன் அன்பு மயில்சாமிக்கு இன்று பிறந்தநாள். இந்நாளில் இசை வெளியிடுவது மகிழ்ச்சியளிக்கிறது. படம் பெயர் அல்டி என்றார்கள். அப்படி என்றால் என்ன என்று கேட்டேன். அல்டிமேட்டுக்கு சார்ட்பார்ம் என்று சொன்னார்கள். நன்றாக இருக்கிறது.

    அல்டி இசை வெளியீட்டு விழா

    எனக்கு மயில்சாமி அண்ணன் மீது மிகப்பெரிய அன்பும், மரியாதையும் உண்டு. அவருடைய பேச்சும், நடிப்பும் ரொம்ப பிடிக்கும். மயில்சாமி ஒரு சீன்ல வந்தாலும் சரி, 4 சீன்ல வந்தாலும் சரி, அவருக்கென்று தனி முத்திரை உண்டு. அதுபோல் அரசியல் பேசும்போதும் அதில் ஒரு தெளிவு இருக்கும். நான் சிறு வயதில் இருந்தே பார்த்து வருகிறேன். அவர் கிட்ட கற்றுக் கொள்ள நிறைய இருக்கு. இது மயில்சாமியின் மகன் அன்புக்கு அட்வைஸ் இல்ல. ஆலோசனை’ என்றார்.
    சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஹீரோ’ படத்தின் டீசரை பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் வெளியிட இருக்கிறார்.
    ’நம்ம வீட்டு பிள்ளை’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது ‘ஹீரோ’ திரைப்படம் உருவாகியுள்லது. பி.எஸ்.மித்ரன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், இவானா நாயகிகளாக நடிக்க, அர்ஜூன், ரோபோ சங்கர், பிரேம் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    இப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டீசரை அக்டோபர் 24-ந் தேதி காலை 11.03 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த டீசரை பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். 

    சல்மான்கான் - சிவகார்த்திகேயன்

    சூப்பர் ஹீரோ கதையம்சத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
    விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படத்திற்கு கிடைத்த அதே பெருமை, தற்போது உருவாகி இருக்கும் ‘பிகில்’ படத்திற்கும் கிடைத்துள்ளது.
    விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பிகில்’. அட்லீ இயக்கியுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 25ம் தேதி வெளியாக இருக்கிறது.

    படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், விஜய்யின் மெர்சல் படத்திற்கு பிறகு பிகில் படத்திற்கு டுவிட்டர் எமோஜி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இம்முறை ‘Bigil, Poduravediya, வெறித்தனம், தளபதி 63, Bigil Diwali’ உள்ளிட்ட ஹேஷ் டேக்குகளுக்கு எமோஜி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எமோஜிகளுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

    பிகில் எமோஜி

    பிகில் படத்தில் விஜய்யுடன், நயன்தாரா, ஜாக்கிஷெராப், கதிர், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
    நடிகர் விஜயின் பிகில் பட சிறப்புக் காட்சிக்கு அனுமதி தரக் கோரி தமிழக அரசுக்கு தயாரிப்பு நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.
    ‘தெறி’, ‘மெர்சல்’ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் விஜய், இயக்குனர் அட்லீ வெற்றிக் கூட்டணியில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படமாக ‘பிகில்’ உருவாகியுள்ளது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25-ந் தேதி ரிலீசாக உள்ளது.

    இதனிடையே உதவி இயக்குனர் கே.பி.செல்வா என்பவர், தன்னுடைய கதையை திருடி பிகில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், படத்திற்கு தடை கோரியும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கே.பி.செல்வா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து, வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார்.

    இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. பிகில் கதைக்கு உரிமை கோரிய செல்வாவின் மனுவை கீழமை நீதிமன்றம் நிராகரித்தது செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து, அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், பிகில் உட்பட எந்த படத்திற்கும் சிறப்புக் காட்சி  திரையிட அனுமதி தரப்படவில்லை என கூறியிருந்தார். மேலும், கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்க மாட்டோம் என உறுதி அளித்தால் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் சார்பில், நடிகர் விஜயின் பிகில் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி தரவேண்டும் எனக்கோரி தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. 
    பாகுபலி, பாகுபலி 2 படங்களில் நடித்த அனுஷ்கா, தற்போது மீண்டும் ராஜமவுலி இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ராஜமவுலி இயக்கிய பாகுபலி, பாகுபலி 2 படங்களில் நடித்தவர் அனுஷ்கா. இரண்டு படங்களிலுமே முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்து பேசப்பட்டார். பின்னர் பாகமதி, சைரா நரசிம்மா ரெட்டி போன்ற வரலாற்று படங்களில் நடித்த அனுஷ்கா, அந்த படத்தை தவிர வேறு எந்தப் படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்தார். தற்போது மாதவனுடன் இணைந்து சைலன்ஸ் படத்தில் நடித்து வருகிறார் அனுஷ்கா. தெலுங்கில் இந்தப் படம் நிசப்தம் என்ற பெயரில் தயாராகிறது. 

     ராஜமவுலி, அனுஷ்கா

    இந்த நிலையில், தற்போது ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அலியாபட்டை வைத்து ராஜமவுலி இயக்கி வரும் 'ஆர்ஆர்ஆர்' படத்திலும் அனுஷ்கா சிறப்பு வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கான படப்பிடிப்பில் அனுஷ்கா விரைவில் கலந்து கெள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
    பார்த்திபன் இயக்கி நடித்துள்ள 'ஒத்த செருப்பு' படம் கோல்டன் குளோப் விருதுக்கு அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை எடுப்பதில் முதன்மையானவர் பார்த்திபன். அவர் நடித்து இயக்கி பெரிய வெற்றி பெற்ற புதிய பாதை படமும் புதுமையான கதையசம்சத்திலேயே வந்தது. பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே, ஹவுஸ்புல், வெற்றிக்கொடி கட்டு, இவன், அழகி, கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்று பார்த்திபனின் அனைத்து படங்களுக்கும் வரவேற்பு கிடைத்தன.

    பார்த்திபன்

    தற்போது புதிய முயற்சியாக பார்த்திபன் மட்டுமே நடித்துள்ள 'ஒத்த செருப்பு' படம் வெளிவந்துள்ளது. இதில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்கள் குரல்கள் மட்டுமே திரையில் கேட்கும். பார்த்திபன் மட்டுமே எல்லோரிடமும் கலந்துரையாடுவார். இந்த படத்தை திரையுலகினர் பலரும் பாராட்டினர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. 

    ஒத்த செருப்பு படம் ஆஸ்கார் விருது போட்டிக்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்கவில்லை. இந்த நிலையில் ஆஸ்கார் விருதுக்கு அடுத்த பெரிய விருதாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுக்கு அனுப்பும் முயற்சியில் பார்த்திபன் ஈடுபட்டு உள்ளார். இதற்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளார்.
    நொச்சிப்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் திருமூர்த்தியை இசையமைப்பாளர் டி.இமான் பாடகராக அறிமுகம் செய்துள்ளார்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிப்பட்டியை சேர்ந்த திருமூர்த்தி, அண்மையில் விஸ்வாசம் திரைப்பட பாடலை பாடிய காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இந்த வீடியோவை பார்த்த இசையமைப்பாளர் டி.இமான், அந்த இளைஞரை நேரில் அழைத்து பாராட்டியதோடு, அவருக்கு வாய்ப்பளிப்பதாகவும் உறுதி அளித்திருந்தார். கொடுத்த வாக்கை காப்பாற்றும் வகையில், கண் பார்வை தெரியாத மாற்றுத்திறனாளி இளைஞரான திருமூர்த்தியை பின்னணி பாடகராக இமான் அறிமுகம் செய்துள்ளார். 

    டி.இமானின் டுவிட்டர் பதிவு

    இது தொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ’நொச்சிப்பட்டி திருமூர்த்தியை பின்னணி பாடகராக அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் தயாரிப்பில் ரத்னசிவா இயக்கத்தில் ஜீவா நடிக்கும் சீறு படத்திற்காக திருமூர்த்தி பாடியுள்ள ஆத்மார்த்தமான பாடல் விரைவில் வெளியாகும்’ என குறிப்பிட்டுள்ளார். திருமூர்த்தியை சீறு படத்தின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகப்படுத்திய இமானுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. 
    சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ஹீரோ படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
    சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படம் 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கும் ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், இவானா நாயகிகளாக நடிக்க, அர்ஜூன், ரோபோ சங்கர், பிரேம் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    இப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் அக்டோபர் 24-ந் தேதி காலை 11.03 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ஹீரோ பட போஸ்டர்

    சூப்பர்ஹீரோ கதையம்சத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார். 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா, கே.ஜி.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் இணைந்த இந்த படத்தை தயாரிக்கின்றனர். 
    ×