என் மலர்
சினிமா செய்திகள்
பிரதீப் கிருஷ்ண மூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா நடிப்பில் உருவாகும் சஸ்பென்ஸ் திரில்லர் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரியேட்டிவ் என்டர்டெயின்மெண்ட் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் வழங்கும் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நாயகனாக நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லராக உருவாகும் படத்திற்கு இதுவரை பெயர் சூட்டப்படாமல் இருந்தது. தற்போது அப்படத்திற்கு 'கபடதாரி' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ‘கபடதாரி’ என்றால் பாசாங்குக்காரன்/வேஷக்காரன் என்று பொருள். சிபிராஜுடன் நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயபிரகாஷ், ஜே.சதிஷ் குமார், மயில்சாமி மற்றும் சில முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள்.
சிபிராஜ் இதுவரை நடித்த ஏற்று நடித்த பாத்திரங்களை விட இந்த படத்தில் முக்கியமான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரமாக இருக்கும் என்கிறார் இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் Dr. கோ.தனஞ்செயன். லலிதா தனஞ்செயன் படத்தைத் தயாரிக்க, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார்.

கதையை எம்.ஹேமந்த் ராவ் எழுத, திரைக்கதையையும் வசனங்களையும் இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனும், Dr.கோ.தனஞ்செயனும் ஏற்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 1-ஆம் தேதி துவங்குகிறது. சென்னை மற்றும் ஹைதராபாத் நகரத்தில் முக்கியமான இடங்களில் படப்பிடிப்பு நடத்தவுள்ளார்கள். ஒரே கட்டமாக முழுவீச்சில் நடைபெற்று மார்ச் 2020-ல் உலகளாவிய திரையரங்கில் வெளியிடப்படும்.
ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் இரண்டு கதாநாயகிகள் ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார்கள்.
மசாலா பிக்ஸ், எம்.கே.ஆர்.பி.புரடொக்ஷன்ஸ் இணைந்து வழங்கும் புதிய படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் சந்தானம் ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி நடிக்கிறார். சமீபத்தில் வெளியான A1 வெற்றிப்படத்தில் கதாநாயகியாக நடித்த இவர், மீண்டும் சந்தானத்துடன் இரண்டாம் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார். இன்னொரு நாயகியாக சுவாதி முப்பலா அறிமுகம் ஆகிறார். இவர் மிஸ் கர்நாடகா 2017 அழகி பட்டம் வென்றவர். இவர்களுடன் ஆனந்த்ராஜ், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், பரத் ரெட்டி, சிவசங்கர் மாஸ்டர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தை ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, இவன் தந்திரன் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கி வருகிறார். காதல், காமெடி, ஆக்ஷன், பேண்டஸி கலந்த ஜனரஞ்சகமான படமாக இப்படத்தினை உருவாக்கி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக 60 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. பிப்ரவரி மாதத்தில் படத்தினை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
பெண்களை மையப்படுத்தி உருவாகி வரும் படத்தில் நடிகை நந்திதா ஸ்வேதா ஆக்ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்திருக்கிறார்.
பெண்களை மையப்படுத்திய கதைகள் தமிழ் சினிமாவில் இப்போது அதிகமாக வர துவங்கியுள்ளது. சஸ்பென்ஸ் ஹாரர் என நிறைய படங்கள் பெண்களை மையப்பாத்திரங்களாக கொண்டு வெளியாகி வெற்றி பெற்றும் வருகின்றன. இது தமிழ் சினிமாவில் நல்ல தருணமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தத்தருணத்தில் நந்திதா ஸ்வேதா நடிப்பில் IPC 376 என்ற ஆக்ஷன் ஹாரர் கலந்த மாஸ் கமர்சியல் படம் உருவாகி வருகிறது. படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக உள்ளதாம். நான்கு சண்டைக்காட்சிகள் உள்ள இப்படத்தில் பெரும்பாலும் டூப் இல்லாமலே துணிச்சலாக நடித்துள்ளார் நந்திதா ஸ்வேதா.
சூப்பர் சூப்பராயன் அமைத்த சண்டைக்காட்சிகள் மிகச்சிறப்பாக வந்துள்ளதாக தகவல். சண்டைக்காட்சிகளில் நந்திதா ஸ்வேதாவுக்கு ரத்தக்காயம் ஏற்பட்ட போதும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சிரத்தை எடுத்து ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்.

ஹாரர் சேஸிங், சஸ்பென்ஸ், ஆக்ஷன் என கதை திரைக்கதை எழுதி படத்தை இயக்கி வருகிறார் ராம்குமார் சுப்பாராமன். இப்படம் பெண்களைப் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பில் உள்ள IPC 376 என்பது பெண்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிரான சட்டத்தைக் குறிக்கிறது.
தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஏற்காடு ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது.
பிகில் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 64’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு 25ம் தேதி வெளியாக இருக்கிறது. மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே வேளையில் விஜய்யின் அடுத்த படமான தளபதி 64க்கான வேலைகள் தொடங்கிவிட்டது. முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். விஜய் சேதுபதி இந்த வருடத்தில் அதிகமான படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.

அதனால் விஜய் 64 படத்தை முதலில் கொடுக்க முடிவு செய்துள்ள படக்குழு அவருக்கான காட்சிகளை எடுக்கும் வேலைகளை ஆரம்பித்துள்ளார்களாம். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு டெல்லியில் தொடங்கி 20 நாட்கள் நடைபெற இருக்கிறது.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, அடுத்ததாக வில்லி வேடத்தில் களமிறங்கி நடித்து வருகிறார்.
'ஓ பேபி' படத்தை அடுத்து சமந்தா நடிப்பில் தற்போது '96' படத்தின் தெலுங்கு ரீமேக் உருவாகியுள்ளது. இதில் சர்வானந்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் வேலைகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இதை அடுத்து பல கதைகளை கேட்ட அவர், இன்னும் எந்த புதிய படத்திலும் கையெழுத்திடவில்லை. ஆனால், மனோஜ் பாஜ்பாய் நடித்த 'எ பேமிலி மேன்' என்ற இணைய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்த தொடரின் முதல் பாகம் சமீபத்தில் வெளியானது. இந்த தொடரில் இரண்டாவது சீசனில் சமந்தா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஆனால் அவர் வில்லி வேடத்தில் நடிப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை நயன்தாரா அவரது காதலன் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை நயன்தாரா மற்றும் அவரது காதலன் விக்னேஷ் சிவன் ஆகியோர் இன்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இருவருக்கும் ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்கள் வழங்கினர். கோவிலுக்கு வெளியே வந்த நயன்தாராவை பார்த்த பக்தர்கள் ஆரவாரம் செய்தனர். மேலும் சிலர் நயன்தாராவின் அருகில் சென்றனர்.

அவருடன் செல்பி எடுத்துக் கொள்ள முயற்சி செய்தனர். அவர்களை பாதுகாவலர்கள், நயன்தாரா அருகில் வரவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் பாதுகாவலர்கள், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை பாதுகாப்பாக அழைத்து சென்று காரில் ஏற்றி வழியனுப்பி வைத்தனர்.
பாடல்கள், ஹீரோயின் இல்லாத கதையில் நடித்தது ஏன் என்பது குறித்து நடிகர் கார்த்தி சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், தீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கைதி'. நாளை வெளியாக உள்ள இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். இந்த படத்தில் பாடல்கள், நாயகி என எதுவுமே இல்லை. மேலும் 10 வயது பெண் குழந்தைக்கு அப்பாவாக நடித்துள்ளார் கார்த்தி.
இந்த படத்தின் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து கார்த்தி அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: கைதி ஓர் இரவில் நடக்கும் கதை. அடுத்த என்ன நடக்கும் என்பதை யூகிக்கவே முடியாது. இப்படி நடந்தால் என்ன ஆகும் என்பது மாதிரியான படம். லோகேஷ் இதை எழுதியுள்ளது அவ்வளவு விறுவிறுப்பான முறையில் இருக்கிறது. நான் கல்லூரியில் படிக்கும்போது இது போன்ற படங்களைத்தான் விரும்பிப் பார்ப்பேன்.

அதனால் எல்லோருக்கும் இந்தப் படம் பிடிக்கும். நான்கு மணிநேரத்தில் நடக்கும் கதை. ’ஸ்பீட்’, ’டை ஹார்ட்’ போன்ற படங்களைப் பார்க்கும்போது அதில் பாடல்களுக்கு எங்கு நேரம் இருக்கும்?. 2-3 வருடங்கள் நடக்கும் கதை என்றால் அதில் பாடல் இருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.
’தீரன் அதிகாரம் ஒன்று’ தீவிரமான படம். அதை சரிக்கட்டக் காதல் காட்சிகள் தேவைப்பட்டன. அது இல்லையென்றால் ’தீரன் அதிகாரம் ஒன்று’ பயங்கரமான படமாகத் தெரிந்திருக்கும். ஆனால் ’கைதி’யில் அது தேவைப்படவில்லை. படத்தில் பரபரப்பு இருந்தாலும் மக்கள் ரசிக்கும் வகையில் லேசான தருணங்களும் இருக்கும்''.
இவ்வாறு கார்த்தி கூறினார்.
பிகில் படத்திற்கு தடை கோரிய வழக்கை ஐகோர்ட்டு ஒத்திவைத்ததால், படம் நாளை திட்டமிட்டபடி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய், நயன்தாரா உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் “பிகில்”. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் கதை தன்னுடையது என்று சென்னை ஐகோர்ட்டில் அம்ஜத் மீரான் என்ற இயக்குனர் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு மனுவில், பிரேசில் என்ற தலைப்பில் கால்பந்து விளையாட்டு தொடர்பான கதை ஒன்றை எழுதினேன். இந்த கதையை பயன்படுத்தி திரைப்படமும் எடுத்தேன். இந்த நிலையில் என் கதையை பயன்படுத்தி இயக்குனர் அட்லி “பிகில்” படத்தை எடுத்துள்ளார். கதையை ஆராய வக்கீல்கள் குழுவை அமைக்கவேண்டும்.

என் கதையை பயன்படுத்திய அட்லி மற்றும் தயாரிப்பு நிறுவனம் ரூ.10 லட்சம் எனக்கு தர உத்தரவிட வேண்டும். இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவில் பேனாவினால் திருத்தம் செய்யப்பட்டிருந்தது. இதை சுட்டிக்காட்டிய நீதிபதி, மனுவை டைப் செய்து தாக்கல் செய்ய வேண்டும்.
பேனாவினால் எழுதப்பட்ட, திருத்தப்பட்ட மனுவை ஏற்க முடியாது. எனவே புது மனுவை தாக்கல் செய்ய மனுதாரர் வக்கீலுக்கு உத்தரவிட்டார். அதற்கு மனுதாரர் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதால், விசாரணையை வருகிற நவம்பர் 5-ந்தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். அதனால் நாளை வெளியாக உள்ள இந்த “பிகில்” படத்துக்கு சிக்கல் எதுவும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
சிறுநீரகங்கள் செயலிழந்ததால் பரவை முனியம்மாவின் உடல் நிலை மோசமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள பரவை பகுதியைச் சேர்ந்தவர் பரவை முனியம்மா (வயது 85). நாட்டுப்புற பாடகியான இவர், கடந்த 2003-ம் ஆண்டு வெளியான ‘தூள்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் அவர் பாடிய “சிங்கம் போல” என்ற பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பரவை முனியம்மா பிரபலமானார்.
இதைத்தொடர்ந்து சினிமாவில் பிஸியான பரவை முனியம்மா 80-க்கும் மேற்பட்ட படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்தார். இறுதியாக 2014-ம் ஆண்டு சிவகார்த்திகேயனின் மான் கராத்தே படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் படவாய்ப்புகள் குறைந்தன.
இதையடுத்து பரவை முனியம்மா தனது சொந்த ஊரிலேயே வசித்து வருகிறார். இவரது கணவர் சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இவருக்கு 3 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். மாற்றுத்திறனாளி மகன் செந்தில்குமாரை தவிர அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. உடல் நலக்குறைவால் பரவை முனியம்மா அவதிப்பட்டு வருவதை அறிந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரூ.6 லட்சம் வைப்பு நிதி வழங்கினார்.

அதன் மூலம் மாதந்தோறும் ரூ6 ஆயிரம் கிடைத்து வருகிறது. எனினும் அந்த தொகை மருத்துவ செலவுக்கு போதுமானதாக இல்லை. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பரவை முனியம்மாவின் உடல் நிலை மோசமடைந்தது. மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இதயம், நுரையீரலிலும் நீர்கட்டி இருப்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெறுமாறு டாக்டர்கள் கூறினர். ஆனால் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாததால் பரவை முனியம்மாவை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டதாக மகள்கள் தெரிவித்தனர். தற்போது நோயால் படுத்த படுக்கையாக கிடக்கும் பரவை முனியம்மா காது கேட்காமலும், வாய் பேச முடியாமலும் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு அரசும், சினிமா துறையைச் சேர்ந்தவர்களும் உதவ வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோ படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படம் 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கும் ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், இவானா நாயகிகளாக நடிக்க, அர்ஜூன், ரோபோ சங்கர், பிரேம் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது. பாலிவுட் நடிகர் சல்மான் கான் இப்படத்தின் டீசரை வெளியிட்டார். இதில் இடம்பெற்றுள்ள ‘நம்ம கல்வி முறைல எல்லாரும் படிக்க முடியும், ஆனா எல்லாராலையும் சாதிக்க முடியாது’ போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சூப்பர்ஹீரோ கதையம்சத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார். 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா, கே.ஜி.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.
தரமணி பட புகழ் வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் இயக்குனர் பாரதிராஜா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இயக்குனர் பாரதிராஜா தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். பாண்டியநாடு, குரங்கு பொம்மை, நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களில் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. தற்போது ‘ராக்கி’ படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதில் கதாநாயகனாக வசந்த் ரவி வருகிறார். இவர் ஏற்கனவே தரமணி படத்தில் நடித்துள்ளார்.
ராக்கி படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் பாரதிராஜா குரூரமான தாதாவாக வருகிறார். படம் குறித்து வசந்த் ரவி கூறியதாவது:- “ராக்கி படத்தில் வில்லன் வேடத்துக்கு பாரதிராஜா பொருத்தமாக இருப்பார் என்று அவரை அணுகினோம். முதலில் மறுத்தவர் கதையை கேட்டதும் சம்மதித்தார். நடித்து முடித்துவிட்டு படத்தை பார்த்து சிறப்பாக வந்து இருப்பதாக பாராட்டினார். இனிமேல் வில்லன் வேடங்களில் நடிக்க மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

பாரதிராஜா கதாபாத்திரம் படத்துக்கு பெரிய பலமாக இருக்கும். நான் எம்.பி.பி.எஸ் முடித்து லண்டனில் மருத்துவ நிர்வாக மேற்படிப்பு படித்து விட்டு சினிமா ஆசையால் நடிக்க வந்துள்ளேன். தரமணி படத்தில் நடித்த பிறகு 40 கதைகள் கேட்டு ராக்கி கதையை தேர்வு செய்து நடித்துள்ளேன். இது தாதாக்களுக்குள் நடக்கும் பழிவாங்கும் கதை. நான் ரவுடியாக வருகிறேன். அடுத்து கமர்ஷியல் படங்களில் நடிக்க ஆசை உள்ளது.” இவ்வாறு வசந்த் ரவி கூறினார்.
இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கமல்ஹாசன் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சித்தார்த், விவேக், பாபிசிம்ஹா, ரகுல்பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் ஆகியோரும் உள்ளனர். வித்யூத் ஜமால் வில்லனாக வருகிறார். முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் நடந்தது.
அதன்பிறகு தியாகராய நகரில் உள்ள சிறிய ஓட்டலில் படப்பிடிப்பை நடத்தினர். தொடர்ந்து ஐதராபாத்திலும் ராஜமுந்திரி சிறையிலும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. பின்னர் படக்குழுவினர் போபால் சென்றனர். அங்கு 2 ஆயிரம் துணை நடிகர்களுடன் பிரமாண்ட சண்டை காட்சியை இயக்குனர் ஷங்கர் படமாக்கினார்.
இந்நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. இந்தியன் தாத்தா கெட்டப்பில் இருக்கும் கமல்ஹாசன் குதிரையில் செல்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியன் படத்தில் கமல்ஹாசனின் சேனாதிபதி கதாபாத்திரம் 60 வயது முதியவராக இருந்தது. இந்தியன்-2 படத்தில் 90-வயது முதியவராக வருகிறார். இதற்காக வெளிநாட்டு மேக்கப் கலைஞர்களை வைத்து வயதான தோற்றத்தை உருவாக்கி உள்ளனர். மேக்கப் போட பல மணிநேரம் ஆவதாக கூறப்படுகிறது.
90 வயது கிழவர் வேடத்தில் வரும் கமல்ஹாசனின் வர்ம கலை அதிரடி சண்டை காட்சிகள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் உருவாகி உள்ளது” என்று படக்குழுவினர் தெரிவித்தனர். அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் தைவான் செல்ல திட்டமிட்டுள்ளனர்.






