என் மலர்
சினிமா செய்திகள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன் நடிப்பில் வெளியாகி இருக்கும் கைதி படத்தின் விமர்சனம்.
போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீஸ் அதிகாரியாக இருக்கும் நரேன், அவரது குழுவினரின் உதவியுடன் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்கிறார். இதன் பின்னணியில் மிகப்பெரிய கும்பல் இருக்கும் என்பதை உணர்ந்த நரேன். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களை ஒரு இடத்தில் பதுக்கி வைக்கிறார். இதில் தொடர்புடைய கும்பலை பிடிக்க திட்டமிடுகிறார். இதை அறிந்த ஐ.ஜி., போதை பொருட்களை மீட்க அந்த கும்பல் எதையும் செய்ய தயங்காது, எச்சரிக்கையுடன் இருக்குமாறு நரேன் குழுவினருக்கு அறிவுரை கூறுகிறார்.

நரேன் குழுவினர் தான் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர் என்பதை அறிந்த வில்லன்கள், அதனை மீட்டுவர அடியாட்களை அனுப்புகிறது. அந்த சமயத்தில் ஜெயிலில் இருந்த கார்த்தி ஆயுள் தண்டனை முடிந்து தன்னுடைய மகளை பார்க்க வேண்டும் என வெளியில் வருகிறார். ஆனால் அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து ஜீப்பில் வைத்திருக்கிறது போலீஸ்.
இந்த சூழலில், ஓய்வு பெற உள்ள ஐ.ஜி. போலீஸ் உயர் அதிகாரிகள் அனைவருக்கும் பார்ட்டி கொடுக்கிறார். இதில் நரேன் டீமும் கலந்து கொள்கிறது. அப்போது போதை மருந்து கலந்த மதுவை அருந்தியதால் நரேன் உள்ளிட்ட அனைத்து உயர் அதிகாரிகளும் பிரச்சனையில் சிக்குகிறார்கள். இதிலிருந்து மீள அவர்களுக்கு கார்த்தியின் உதவி தேவைப்படுகிறது. தங்களுக்கு உதவி செய்தால் தான், குழந்தையை பார்க்க அனுமதிப்போம் என கார்த்தியை மிரட்டுகிறார் நரேன். இதையடுத்து நரேனுக்கு கார்த்தி உதவினாரா? போதைப்பொருள் கடத்தல் கும்பலை நரேன் பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

படம் முழுவதையும் தனி ஆளாக தாங்கி நிற்பது கார்த்தி தான். ஆயுள் தண்டனையை முடித்துக்கொண்டு தனது மகளை பார்க்க வேண்டும் என்ற ஏக்கத்தில் இருக்கும் தந்தையாக நடிப்பில் மிளிர்கிறார் கார்த்தி. நரேன் போலீஸ் அதிகாரி வேடத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கார்த்தியின் மகளாக நடித்துள்ள பேபி மோனிகா கியூட்டான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அப்பா-மகள் சென்டிமென்ட் அருமையாக ஒர்க்அவுட் ஆகியுள்ளது.
படத்தின் இரண்டாவது ஹீரோ லோகேஷ் கனகராஜ் தான். பாடல்கள், ஹீரோயின் இல்லாவிட்டாலும் ரசிகர்களின் ஆவலை தூண்டிவிடும் வகையில் திரைக்கதை அமைத்து சீட்டின் நுனியில் அமர வைக்கிறார். கமர்ஷியல் அம்சங்கள் எதுவும் இல்லாத போதும் போரடிக்காத வகையில் படத்தை எடுத்துள்ளார்.

பாடல்கள் எதுவும் இல்லாத போதும் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். படம் முழுக்க முழுக்க இரவில் நடப்பது போல இருக்கிறது. அனைத்து சீன்களையும் சண்டை காட்சிகளையும் மிக நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன்.
மொத்தத்தில் ‘கைதி’ தீபாவளி சரவெடி.
2 கதாநாயகிகள் படங்களில் நடிப்பது ஏன் என்பது குறித்து நடிகை ராசி கன்னா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இமைக்கா நொடிகள் படம் மூலம் அறிமுகமான ராசி கன்னா அடுத்து விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் படத்தில் நடித்து வருகிறார். இதில் நிவேதா பெத்துராஜும் நடிக்கிறார். தொடர்ந்து 2 கதாநாயகிகள் படங்களில் நடிப்பது குறித்தும் விஜய் படத்தில் நடிக்க இருப்பதாக வரும் தகவல்கள் பற்றியும் ராசி கன்னா கூறியிருப்பதாவது:- ’தெலுங்கில் மல்டி ஸ்டார் படங்களில் நடித்து இருக்கிறேன். தமிழில் என் முதல் படமான ‘இமைக்கா நொடிகள்’கூட அப்படிப்பட்ட படம்தான்.

ஒரு கதையில் எனக்கு என்ன முக்கியத்துவம் இருக்குன்னு மட்டும்தான் பார்ப்பேனே தவிர, எத்தனை பேர் நடிக்கிறாங்கன்னு யோசிக்க மாட்டேன். ‘சங்கத்தமிழன்’ படத்தில் கமாலினி என்ற கேரக்டரில் நடிச்சிருக்கேன். விஜய் படத்துல நடிக்கணும்ங்கிறது என் கனவு. கண்டிப்பா அது நடக்கும்னு நம்புறேன். அதுக்காகக் காத்துக்கிட்டிருக்கேன்.”இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பிகில் திரைப்பட சிறப்பு காட்சியை திரையிட வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் ரகளையில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ படம் தீபாவளியையொட்டி இன்று ரிலீசானாது. இதற்காக தமிழக முழுவதும் சிறப்பு காட்சி வெளியிட முதலில் தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்லை. பின்னர் நேற்று இரவு 10 மணியளவில் பிகில் படத்திற்கான சிறப்பு காட்சி வெளியிட தமிழக அரசு அனுமதி வழங்கியது. கிருஷ்ணகிரியில் உள்ள தியேட்டர்களில் பிகில் படத்திற்கான சிறப்பு காட்சி வெளியிட அறிவிப்பு வெளியானது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் நள்ளிரவு கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகே உள்ள தியேட்டர்கள் முன்பு குவிந்தனர். அவர்கள் அங்கு மேளதாளங்கள் முழங்க கொண்டாடத்துடன் நடனமாடினர். அதிகாலை 3 மணியளவில் பிகில் படத்திற்கான சிறப்பு காட்சி வெளியிட தாமதமானது. இதனால் ஆத்திரம் அடைந்த விஜய் ரசிகர்கள் 5 ரோடு ரவுண்டானா பகுதியில் கண்காணிப்பு மேடை, ஒலிப்பெருக்கிகள், சிக்னல்கள் மற்றும் சி.சி.டி.வி. கேமராக்கள் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர். மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த பேரிகார்டர்களையும் விஜய் ரசிகர்கள் அடித்து நொறுக்கினர்.
இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் டேங்கு குடிநீர் தொட்டியை பெயர்ந்து எடுத்து வந்து நடுரோட்டில் வைத்தனர். மேலும், அதிகாலை சாலையோர வியாபாரிகள் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த பழம், பூ, பானை போன்ற பொருட்களை விஜய் ரசிகர் ரோட்டில் தூக்கியெறிந்து தீவைத்து எரித்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் கலவர பூமியாக காட்சி அளித்தது.

விஜய் ரசிகர்கள் அதிகளவில் குவிந்திருந்ததாலும், குறைவான அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாலும் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இதைத்தொடர்ந்து உடனடியாக அதிவிரைவு போலீஸ் படையினர் அங்கு விரைந்து வந்து விஜய் ரசிகர்கள் மீது தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர்.
விஜய் ரசிகர்கள் நடத்திய இந்த கலவரத்தால் கிருஷ்ணகிரியில் உள்ள சாந்தி தியேட்டர் மற்றும் ராஜா தியேட்டர்கள் பகுதிகள் கலவர பகுதியாக காட்சியளித்தன. மேலும் வேறு ஏதாவது அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த கலவரத்திற்கு காரணமானவர்கள் யார்?யார்? என்று அந்த பகுதியில் உள்ள கடைகளில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை விஜய் ரசிகர்கள் 30 பேரை கைது செய்துள்ளனர்.
கடந்த 1997-ம் ஆண்டு வெளியான அஜித் படத்தின் ரீமேக்கில் நடிகர் விக்ரம் பிரபு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் பட உலகின் வளரும் இளம் நடிகரான விக்ரம் பிரபு வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். அவரது நடிப்பில் கடந்த வருடம் பக்கா, 60 வயது மாநிறம், துப்பாக்கி முனை ஆகிய படங்கள் வந்தன. தற்போது அசுர குரு, வானம் கொட்டட்டும் ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறார்.
அசுர குரு படத்தில் மகிமா நம்பியாரும், வானம் கொட்டட்டும் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டின் ஆகியோரும் ஜோடிகளாக நடிக்கிறார்கள். இந்த படங்களுக்கு பிறகு ஜே.டி. ஜெர்ரி இயக்கும் படத்தில் விக்ரம் பிரபு நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் அதிரடி திகில் படமாக இது தயாராகிறது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் பிரபல மலையாள நடிகரும் மம்முட்டியின் மகனுமான துல்கர் சல்மானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இருவரும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம், அஜித் குமார் இணைந்து நடித்து 1997-ல் திரைக்கு வந்து வரவேற்பை பெற்ற உல்லாசம் படத்தின் ரீமேக்காக இந்த படம் தயாராகிறது என்றும் கூறப்படுகிறது.
இதில் விக்ரம் வேடத்தில் விக்ரம் பிரபுவும், அஜித்குமார் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மானும் நடிப்பதாக பேசப்படுகிறது. ஆனாலும் உல்லாசம் ரீமேக்கா அல்லது வேறு புதிய கதையா? என்பதை படக் குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.
இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் மீதான மஞ்சுவாரியரின் புகார் தொடர்பாக திருச்சூர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மலையாள நடிகை மஞ்சு வாரியர், நடிகர் திலீப்பை விவாகரத்து செய்த பிறகு மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். அசுரன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து தமிழ் பட உலகிலும் அறிமுகமாகி உள்ளார். மலையாள இயக்குனர் ஸ்ரீகுமார் மேனனுக்கும் மஞ்சு வாரியருக்கும் திடீர் மோதல் ஏற்பட்டு உள்ளது. ஸ்ரீ குமார் மீது கேரள டி.ஜி.பி.யிடம் மஞ்சு வாரியர் புகார் அளித்தார். அதில், “இயக்குனர் ஸ்ரீகுமார் சமூக வலைத்தளத்தில் என்மீது அவதூறு பரப்பி வருகிறார்.
அவரால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுகிறேன் என்று கூறியிருந்தார். இது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டை மறுத்த ஸ்ரீகுமார் மேனன் கூறும்போது, “காரியம் முடிந்ததும் கைகழுவுபவர்தான் மஞ்சுவாரியர். அவரை நம்ப வேண்டாம். திலீப்பை பிரிந்து வீட்டை விட்டு வெளியேறியபோது கையில் வெறும் ஆயிரத்து ஐநூறு ரூபாய் மட்டுமே உள்ளது என்று அவர் சொன்னதை நான் மறக்கவில்லை.
அப்போது ரூ.25 லட்சம் கொடுத்து விளம்பர படத்துக்கும் சினிமாவுக்கும் அவரை ஒப்பந்தம் செய்தேன். மஞ்சுவாரியருக்கு என்ன துரோகம் செய்தேன் என்று தெரியவில்லை. என்மீதான புகாரை சட்டப்படி சந்திப்பேன்’‘ என்றார். இந்த நிலையில் மஞ்சுவாரியர் புகார் தொடர்பாக திருச்சூர் கிழக்கு போலீசார் இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருக்கும் பிகில் படத்தின் விமர்சனம்.
சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள கல்லூரியை இடித்துவிட்டு, அரக்கோணம் அருகில் புதிதாக கல்லூரி கட்டி தருவதாக அமைச்சர் கூறுகிறார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்கள், போராட்டத்தில் குதிக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை, அமைச்சர் தனது அடியாட்களை ஏவிவிட்டு அடித்து துரத்துகிறார். இதையடுத்து விஜய்(மைக்கேல்) வசிக்கும் பகுதியில் மாணவர்கள் தஞ்சமடைகின்றனர். மாணவர்களை தேடி அப்பகுதிக்கு வரும் அடியாட்களை அடித்து துவம்சம் செய்கிறார் விஜய்.
விஜய்யின் இந்த நடவடிக்கையால் கல்லூரியை இடிக்கும் முயற்சியில் இருந்து பின்வாங்குகிறார் அமைச்சர். இது ஒருபுறம் இருக்க, நயன்தாரவுக்கு அவரது தந்தை ஞானசம்பந்தன் கல்யாண ஏற்பாடுகளை செய்கிறார். ஆனால் தான் விஜய்யை தான் திருமணம் செய்து கொள்வேன் எனக்கூறி கல்யாணத்தை நிறுத்தி விடுகிறார் நயன்தாரா.

இந்த சூழலில் விஜய்யின் நண்பரும், தமிழ்நாடு பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளருமான கதிரை, விஜய்யின் எதிரியான டேனியல் பாலாஜி கத்தியால் கழுத்தில் குத்தி விடுகிறார். உயிருக்கு ஆபத்தான நிலையில், கதிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். பயிற்சியாளர் இல்லாததால் இந்துஜா, ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா அடங்கிய பெண்கள் அணியினர் முக்கியமான போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகிறது.
ஆனால் அவர்களை எப்படியாவது போட்டியில் பங்கேற்க வைக்க வேண்டும் என முடிவெடுக்கும் கதிர், விஜய்யை பயிற்சியாளராக செல்லுமாறு அறிவுறுத்துகிறார். ரவுடியை எப்படி பயிற்சியாளராக ஆக்க முடியும் என அணியின் மேலாளர் கதிரிடம் கேட்க, அப்போது தான் பிகிலின் பிளாஷ்பேக்கை சொல்கிறார் கதிர்.

ராயபுரத்தையே தன் கண்ட்ரோலில் வைத்திருக்கும் ராயப்பனின் (தந்தை விஜய்) மகன் தான் பிகில் (மகன்). அப்பகுதி மக்களுக்கு இடையூறாக பல்வேறு வேலைகளை செய்யும் டேனியல் பாலாஜியின் தந்தையை ராயப்பன் தட்டிக்கேட்கிறார். இதனால் இருவருக்கும் பகை உண்டாகிறது. ராயப்பனை கொல்ல சதித்திட்டம் தீட்டி வருகிறார் டேனியல் பாலாஜியின் தந்தை. தன்னைபோல் தனது மகனும் ரவுடி ஆகிவிடக்கூடாது என என்னும் ராயப்பன், பிகிலை கால்பந்தாட்ட வீரனாக மாற்ற வேண்டும் என தீர்க்கமாக உள்ளார்.
இந்த விளையாட்டால தான் நம் அடையாளங்கள் மாறும் என மகனுக்கு அட்வைஸ் கொடுக்கிறார். கால்பந்தாட்டத்தில் கவனம் செலுத்தி படிப்படியாக முன்னேறும் பிகிலுக்கு இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. இதற்காக அவர் டெல்லி புறப்படும் வேளையில், ராயப்பனை டேனியல் பாலாஜியின் தந்தை கொன்றுவிடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த பிகில், டேனியல் பாலாஜியின் தந்தையை கொன்றுவிடுகிறார். தந்தை இறந்ததால், ராயபுரம் மக்களை பாதுகாக்க வேண்டும் என பிகில் முடிவெடுக்கிறார். இதனால் பிகில் கால்பந்து விளையாட முடியாமல் போகிறது. பின்னர் மைக்கேலாக வாழ்ந்து வருகிறார்.

விஜய்யின் பின்னணியை கதிர் கூற, அவரது விருப்பப்படி விஜய் பயிற்சியாளராக நியமிக்கப்படுகிறார். அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது கால்பந்து வீராங்கனைகளுக்கு பிடிக்கவில்லை. ரவுடி எப்படி பயிற்சியாளர் ஆக முடியும் எனக்கூறி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இந்திய கால்பந்து அசோசியேசன் தலைவராக இருக்கும் ஜாக்கி ஷெராப், விஜய் பயிற்சி அளிக்கும் தமிழ்நாட்டு பெண்கள் அணியினருக்கும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துகிறார். இதனை மீறி பெண்கள் அணி வென்றதா? கால்பந்தாட்டத்தில் சாதிக்க வேண்டும் என்ற தனது தந்தையின் ஆசையை விஜய் நிறைவேற்றினாரா? என்பதே மீதிக்கதை
விஜய், ராயப்பன் மற்றும் மைக்கேல் என இரு கதாபாத்திரங்களுக்கு ஏற்றாற்போல் உடல் மொழி, நடை என வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் மாஸ் காட்டியிருக்கும் விஜய், செண்டிமென்ட் காட்சிகளில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி தடம் பதிக்கிறார். குறிப்பாக இடைவேளைக்கு முன்னர் ரெயில்வே ஸ்டேஷனில் நடக்கும் சண்டை காட்சி வேற லெவல்.

பெண்கள் அணியின் பிசியோதெரபிஸ்டாக வரும் நயன்தாரா, கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். மேலும் டேனியல் பாலாஜியும், ஜாக்கி ஷெராப்பும் கொடூரமான வில்லன்களாக வந்து மிரட்டுகிறார்கள். கால்பந்தாட்ட வீராங்கனைகளாக வரும் இந்துஜா, ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா என ஒவ்வொருவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். யோகிபாபு, விவேக், கதிர், ஆனந்தராஜ், சவுந்தரராஜா என அனைவரும் தங்களுக்கான கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.
நடிகர் விஜய்யை போல், கால்பந்து பெண்களுக்கும் இந்த படத்தில் இயக்குனர் அட்லீ முக்கியத்துவம் கொடுத்துள்ள விதம் சிறப்பு. செண்டிமென்ட், ஆக்ஷன், ரொமான்ஸ் போன்ற கமர்ஷியல் அம்சங்களுக்கு படத்தில் பஞ்சமில்லை. விஜய்யின் கதாபாத்திரத்தை செதுக்கி இருக்கிறார் அட்லீ. தந்தை ராயப்பன் கதாபாத்திரம் 4 சீன் வந்தாலும் நச்சுனு இருக்கு. லாஜிக் மீறல்களை சற்று குறைத்திருக்களாம். குறிப்பாக கதிரின் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட சில மணிநேரங்களில் அவர் பேசுவது போன்ற இடங்களை கவனித்திருக்கலாம்.
படத்திற்கு மிகப்பெரிய பலம் ஏ.ஆர். ரகுமான். அவரது பாடல்கள் ஏற்கெனவே ஹிட்டான நிலையில், பின்னணி இசை மூலம் மிரட்டி இருக்கிறார். குறிப்பாக விஜய் வரும் காட்சிகளில் சும்மா தியேட்டரை அதிர வைத்துள்ளார். ஜி.கே.விஷ்ணுவின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘பிகில்’ விசில் போட வைக்கும்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பிகில்’ படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பிகில்’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் காலை 5 மணி காட்சிக்கு கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதால் சிறப்புக் காட்சிக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்க மாட்டோம் என படக்குழுவினர் உறுதி அளித்ததால் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.

சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி தந்திருப்பதால் பிகில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான், விஜய் நடிப்பில் வெளியான அந்த இரண்டு படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்.
சல்மான் கான் நடிப்பில் தற்போது தபாங் 3 திரைப்படம் உருவாகியுள்ளது. பிரபுதேவா இயக்கி இருக்கும் இப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில், சல்மான் கானிடம் விஜய்யின் போக்கிரி ரீமேக் படத்தில் நீங்கள் நடித்தீர்கள். தற்போது விஜய்யின் எந்த படத்தை ரீமேக் செய்தால் அதில் நடிப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு சல்மான் கான், விஜய்யின் ‘திருப்பாச்சி’ மற்றும் ‘தெறி’ படம் பார்த்தேன் எனக்கு பிடித்திருக்கிறது’ என்றார்.
அனேகமாக இந்த இரண்டு படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டால் சல்மான் கான் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கலாம்.
கார்த்தியை வைத்து கைதி படத்தை உருவாக்கி இருக்கும் லோகேஷ் கனகராஜ், அவரால்தான் கைதி படமே உருவானது என்று கூறியிருக்கிறார்.
மாநகரம் என்கிற ஒரே படம் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இயக்குநராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். கார்த்தி நடிப்பில் இவர் இயக்கிய ‘கைதி’ தீபாவளிக்கு ரிலீஸாகிறது. தற்போது தமிழகமே எதிர்பார்க்கும் விஜய் 64 படத்தை இயக்கி வருகிறார்.
பட வெளியீட்டை முன்னிட்டு சமீபத்தில் அளித்த பேட்டியில்...
இந்தப்படத்தில் ஏன் கதாநாயகி இல்லை?
இந்தப் படம் ஆரம்பிக்கும்போதே கதாநாயகி தேவைப்படவில்லை. அதற்கான இடம் படத்தில் இல்லை. படம் பார்த்தால் உங்களுக்கும் அது தோணும்.
உங்களின் இரு படங்களும் இரவில் நடக்கிறதே.. இரவின் மீது அப்படி என்ன காதல்?
இரவுகளிலேயே படம் எடுப்பது திட்டமிட்டு எல்லாம் அப்படி செய்யவில்லை. மாநகரம் எடுத்தபின் வேறொரு படம் செய்வதாக இருந்தேன். அதை செய்திருந்தால் இந்தக் கேள்வி வந்திருக்காது. மற்றபடி அடுத்த படம் இந்தக்கேள்வியை மாற்றும் என நம்புகிறேன்.
கார்த்தி இதில் என்ன மாதிரி வருகிறார்?
படத்தில் கார்த்தியை மையப்படுத்தி தான் கதை. அவரைச் சுற்றி தான் எல்லாமும் நடக்கும். இந்தப்படத்துக்கான லுக் ரெடியாகும்போதே அவரது லுக் பருத்தி வீரன் போல இருப்பதாக சொன்னார்கள். ஆனால் அது எங்கேயும் படத்தில் வந்துவிடக்கூடாது என உழைத்திருக்கிறோம். அவர் ஒத்துக்கொண்டதால் தான் இந்தப்படமே உருவானது.

இந்தப்படத்தின் பாதிப்பு எங்கிருந்து உருவானது?
இந்தப்படம் ஹாலிவுட்டில் வந்த டை ஹார்ட் படத்தின் இன்ஸ்பிரேஷன் எனச் சொல்லலாம்.
இரவில் ஷீட் செய்தது எப்படி இருந்தது?
இரவில் எடுப்பது சவாலாகத்தான் இருந்தது. இரவு 8 மணிக்குத்தான் முதல் ஷாட்டே வைப்போம். இரவு முழுக்க ஷூட்டிங் என்பதே கஷ்டம் தான். நல்ல டீம் அமைந்தது.
விஜய் 64 என்ன மாதிரி படம்?
அடுத்த படம் பற்றி மற்றொரு தருணத்தில் பேசுகிறேன். அது இப்போது தான் ஆரம்ப கட்ட பணிகளில் இருக்கிறது. அதைப்பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது.
விஜய் கைதி பார்த்து விட்டாரா?
படம் இன்னும் விஜய் சார் பார்க்கவில்லை. இப்பொழுது தான் வேலைகளே முடிந்தது. என் தயாரிப்பாளரே இன்னும் பார்க்கவில்லை. இனிமேல் தான் எல்லோருக்கும் பார்ப்பார்கள்.
தீபாவளிக்கு பிகில் வருகிறதே எது ஜெயிக்க விருப்பம்?
தீபாவளிக்கு இரண்டு படங்கள் வருகிறது. இரண்டுமே ஜெயிக்க வேண்டும் தான். “பிகில்”, “கைதி” இரண்டும் பாருங்கள். நன்றி.
பிரதீப் கிருஷ்ண மூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா நடிப்பில் உருவாகும் சஸ்பென்ஸ் திரில்லர் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரியேட்டிவ் என்டர்டெயின்மெண்ட் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் வழங்கும் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நாயகனாக நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லராக உருவாகும் படத்திற்கு இதுவரை பெயர் சூட்டப்படாமல் இருந்தது. தற்போது அப்படத்திற்கு 'கபடதாரி' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ‘கபடதாரி’ என்றால் பாசாங்குக்காரன்/வேஷக்காரன் என்று பொருள். சிபிராஜுடன் நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயபிரகாஷ், ஜே.சதிஷ் குமார், மயில்சாமி மற்றும் சில முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள்.
சிபிராஜ் இதுவரை நடித்த ஏற்று நடித்த பாத்திரங்களை விட இந்த படத்தில் முக்கியமான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரமாக இருக்கும் என்கிறார் இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் Dr. கோ.தனஞ்செயன். லலிதா தனஞ்செயன் படத்தைத் தயாரிக்க, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார்.

கதையை எம்.ஹேமந்த் ராவ் எழுத, திரைக்கதையையும் வசனங்களையும் இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனும், Dr.கோ.தனஞ்செயனும் ஏற்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 1-ஆம் தேதி துவங்குகிறது. சென்னை மற்றும் ஹைதராபாத் நகரத்தில் முக்கியமான இடங்களில் படப்பிடிப்பு நடத்தவுள்ளார்கள். ஒரே கட்டமாக முழுவீச்சில் நடைபெற்று மார்ச் 2020-ல் உலகளாவிய திரையரங்கில் வெளியிடப்படும்.
ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் இரண்டு கதாநாயகிகள் ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார்கள்.
மசாலா பிக்ஸ், எம்.கே.ஆர்.பி.புரடொக்ஷன்ஸ் இணைந்து வழங்கும் புதிய படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் சந்தானம் ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி நடிக்கிறார். சமீபத்தில் வெளியான A1 வெற்றிப்படத்தில் கதாநாயகியாக நடித்த இவர், மீண்டும் சந்தானத்துடன் இரண்டாம் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார். இன்னொரு நாயகியாக சுவாதி முப்பலா அறிமுகம் ஆகிறார். இவர் மிஸ் கர்நாடகா 2017 அழகி பட்டம் வென்றவர். இவர்களுடன் ஆனந்த்ராஜ், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், பரத் ரெட்டி, சிவசங்கர் மாஸ்டர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தை ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, இவன் தந்திரன் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கி வருகிறார். காதல், காமெடி, ஆக்ஷன், பேண்டஸி கலந்த ஜனரஞ்சகமான படமாக இப்படத்தினை உருவாக்கி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக 60 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. பிப்ரவரி மாதத்தில் படத்தினை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
பெண்களை மையப்படுத்தி உருவாகி வரும் படத்தில் நடிகை நந்திதா ஸ்வேதா ஆக்ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்திருக்கிறார்.
பெண்களை மையப்படுத்திய கதைகள் தமிழ் சினிமாவில் இப்போது அதிகமாக வர துவங்கியுள்ளது. சஸ்பென்ஸ் ஹாரர் என நிறைய படங்கள் பெண்களை மையப்பாத்திரங்களாக கொண்டு வெளியாகி வெற்றி பெற்றும் வருகின்றன. இது தமிழ் சினிமாவில் நல்ல தருணமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தத்தருணத்தில் நந்திதா ஸ்வேதா நடிப்பில் IPC 376 என்ற ஆக்ஷன் ஹாரர் கலந்த மாஸ் கமர்சியல் படம் உருவாகி வருகிறது. படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக உள்ளதாம். நான்கு சண்டைக்காட்சிகள் உள்ள இப்படத்தில் பெரும்பாலும் டூப் இல்லாமலே துணிச்சலாக நடித்துள்ளார் நந்திதா ஸ்வேதா.
சூப்பர் சூப்பராயன் அமைத்த சண்டைக்காட்சிகள் மிகச்சிறப்பாக வந்துள்ளதாக தகவல். சண்டைக்காட்சிகளில் நந்திதா ஸ்வேதாவுக்கு ரத்தக்காயம் ஏற்பட்ட போதும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சிரத்தை எடுத்து ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்.

ஹாரர் சேஸிங், சஸ்பென்ஸ், ஆக்ஷன் என கதை திரைக்கதை எழுதி படத்தை இயக்கி வருகிறார் ராம்குமார் சுப்பாராமன். இப்படம் பெண்களைப் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பில் உள்ள IPC 376 என்பது பெண்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிரான சட்டத்தைக் குறிக்கிறது.
தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஏற்காடு ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது.






