என் மலர்
சினிமா செய்திகள்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, அவசர சிகிச்சை பிரிவில் இருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மூச்சுத்திணறல் காரணமாக மும்பை பிரீச் கேண்டி ஆஸ்பத்திரியில் கடந்த நவம்பர் 10-ந்தேதி அனுமதிக்கப்பட்டார்.
90 வயதான அவருக்கு நெஞ்சுப்பகுதியில் ஏற்பட்ட உணவுத்தொற்றின் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டது. நிமோனியா காய்ச்சல் பாதிப்பும் இருந்ததால் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது.
இதனால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலையில் இப்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

லதா குடும்பத்தினர் இது பற்றி கூறியிருப்பதாவது:-
“லதா மங்கேஷ்கரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து அவர் மீண்டு விட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுவிட்டார். வயது மூப்பின் காரணமாகவே அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளோம். மற்றபடி அவர் நலமுடன் உள்ளார்”.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளார்கள்.
தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டி.வி.நடிகர் ஈஸ்வர் மீது அவரது மனைவி ஜெயஸ்ரீ கமிஷனர் அலுவலகத்தில் புகார் கூறியுள்ளார்.
வம்சம் டி.வி. தொடரில் வில்லியாக நடித்து வருபவர் ஜெயஸ்ரீ. ஆபிஸ் என்ற தொடர் மூலம் பிரபலமானவர் ஈஸ்வர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருவான்மியூர் காமராஜர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.
இந்த நிலையில், நடிகை ஜெயஸ்ரீ அடையாறு மகளிர் காவல் நிலையத்தில், தனது கணவர் ஈஸ்வர் அவரது தாயாருடன் சேர்ந்து கொண்டு கொடுமைபடுத்துவதாகவும், தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் நடிகை ஒருவருடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக புகார் கொடுத்தார்.
தனது நகைகள், 30 லட்சம் ரூபாய் பணத்தையும் அபகரித்துக் கொண்டு ஏமாற்றி விட்டார். குழந்தையுடன் தவித்து வருகிறேன் என்றும் புகாரில் தெரிவித்திருந்தார். ஜெயஸ்ரீ புகார் மீது வழக்கு பதிவு செய்து ஈஸ்வரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் ஜெயஸ்ரீ இன்று சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து கணவர் ஈஸ்வர் மீது புதிய புகார் ஒன்றை அளித்தார். கணவர் கைது செய்யப்பட்ட பிறகு தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஈஸ்வர் எனது மகளுக்கு நீண்ட காலமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். அவருக்கு திருமணத்துக்கு பிறகு குடி பழக்கம் அதிகரித்தது. கஞ்சா பயன்படுத்தும் பழக்கமும் இருந்தது. சூதாட்டத்திலும் ஈடுபட்டு வந்தார். இதனால் கடன் தொல்லையும் ஏற்பட்டது. குடித்துவிட்டு வந்து என்னை தாக்குவதுடன் மகளிடமும் தவறாக நடந்துகொள்வார்.
டி.வி. நடிகை ஒருவருடன் சேர்ந்து இருக்கும்போது வீடியோ கால் செய்து பேசுவார். இதுபோன்ற செய்கைகளால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். என்னிடம் இருந்து ஈஸ்வர் அபகரித்த நகை, பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விஜய்யை வைத்து ‘தளபதி 64’ படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ், ரஜினியை வைத்து படம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மாநகரம் படம் மூலம் அறிமுகமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அந்த படத்திலேயே கவனம் பெற்றார். சமீபத்தில் இவர் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். இதில் நரேன், ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடித்திருந்தார்கள். எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த படத்தைப் பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜை போனில் அழைத்து ரஜினி பாராட்டினார். அப்போது, டெல்லியில் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பில் இருந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். தற்போது, டெல்லி படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய பின்னர் ரஜினியின் பாராட்டுக்கு நேரில் நன்றி தெரிவிக்க லோகேஷ் கனகராஜ் அவரது போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்றுள்ளார். இருவரும் நேற்று சந்தித்து பேசினார்கள்.

'விஸ்வாசம்' படத்தின்போது ரஜினியின் பாராட்டுக்கு நன்றி தெரிவிக்க சந்தித்தார் இயக்குநர் சிவா. தற்போது சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதனால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் ரஜினி நடிக்க வாய்ப்பு உண்டு என்கிறார்கள். 'தளபதி 64' படத்தை முடித்துவிட்டு கமல்ஹாசன் நடிக்கவுள்ள படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பல வெற்றி படங்களை இயக்கிய பாரதிராஜா, பட விழாவில் பேசும்போது, விருப்பம் இல்லாமல் நடிக்க வந்தேன் என்று கூறியிருக்கிறார்.
விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. நடுத்தர மக்களின் வாழ்வியலோடு இணைந்த, வட சென்னை மக்களின் கால்பந்து விளையாட்டை மக்களின் வாழ்வியலை கலந்து சாம்பியன் படத்தை உருவாக்கியுள்ளார் சுசீந்திரன்.
விஷ்வா நாயகனாக அறிமுகமாகிறார். மிருணாளினி, சவுமிகா இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மனோஜ், நரேன், ஸ்டண்ட் சிவா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டில் பாரதிராஜா பேசும்போது, ‘சுசீந்தரன் எனக்கு பிடித்த கலைஞன். பாண்டிய நாடு படத்தில் முதலில் நான் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. இப்ப போய் ஏன் நடிச்சுகிட்டுனு நினைச்சேன். ஆனால் அது எனக்கு ஒரு கம்பேக்காக இருந்தது.

சுசீந்திரன் படம் எல்லாமே நல்லாத்தான் இருக்கும். சாம்பியன் திரைப்படம் அவனுக்கு இன்னொரு மகுடமாக இருக்கும்’ என்றார்.
சிம்பு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான தொட்டி ஜெயா படத்தின் இயக்குனருடன் மீண்டும் இணைய இருக்கிறார்.
சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்க இருட்டு என்ற பெயரில் ஹாரர் படம் தயாராகி உள்ளது. வி.இசட் துரை இயக்கி உள்ளார். படம் பற்றி வி.இசட் துரை கூறியதாவது:- இது வழக்கமான பேய் படம் அல்ல. ஜின் என்ற புது படைப்பை தென் இந்திய சினிமாவில் அறிமுகப்படுத்துகிறோம்.
இஸ்லாமிய நூல்களில் பேசப்பட்டுள்ள விஷயம் இது. ஜின் என்ற படைப்பு எந்த உருவத்திலும் வரலாம். மனிதனை விட சக்தி வாய்ந்தது. சாக்ஷி, தன்ஷிகா, விமலா ராமன், விடிவி.கணேஷ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். பயமுறுத்தும் காட்சிகள் அதிகமாக இருந்ததால் சென்சாரில் ஏ சான்றிதழ் தான் தருவோம் என்றார்கள்.

20 காட்சிகளை வெட்டி யூ/ஏ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். அடுத்து அமீர் நடிப்பில் நாற்காலி படத்தை இயக்கி வருகிறேன். அதற்கு அடுத்து சிம்புவுடன் இணைய இருக்கிறேன். அது தொட்டி ஜெயா 2 அல்ல. வேறு ஒரு கதை. தொட்டி ஜெயா 2 கண்டிப்பாக வரும்’ என்றார்.
குயின் எனும் வெப் சீரியலில் ஜெயலலிதா வேடத்தில் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணனுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்கும் முயற்சியில் ஒரே நேரத்தில் பல இயக்குனர்கள் ஈடுபட்டுள்ளனர். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பிரியதர்ஷினி இயக்கத்தில் தி அயர்ன் லேடி என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் படம் உருவாகிறது. இதில் ஜெயலலிதா கேரக்டரில் நித்யா மேனன் நடிக்கிறார்.
இதில் ஜெயலலிதா வேடத்தில் இருந்த நித்யா மேனன் தோற்றத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மதராசபட்டிணம், தெய்வத்திருமகள், தலைவா படங்களை இயக்கிய விஜய்யும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் படமாக்கி வருகிறார். இந்த படத்தில் இந்தி நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார்.
சமீபத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கணா ரனாவத் தோன்றும் காட்சிகள் வெளியாகின. ஜெயலலிதாவாக நடிக்க கங்கனா பொருத்தமற்றவர் என்று விமர்சனங்கள் எழுந்தன. இணையங்களில் கிண்டல்களும் பெருகின. அவரை தொடர்ந்து இயக்குனர் கவுதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கையை குயின் எனும் வெப் சீரியலாக உருவாக்கியுள்ளார். இதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கிறார்.

ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் காட்சிகளை எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்ய, கவுதம் மேனன் இயக்கி இருக்கிறார். சிறுவயது ஜெயலலிதா வேடத்தில் ‘விஸ்வாசம்‘ படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகா நடிக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ஜெயலலிதாவின் இளமைத் தோற்றத்தில் அஞ்சனா நடிக்கிறார்.
மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் எம்ஜிஆராக நடித்துள்ளார். எம்.எக்ஸ் பிளேயர் தயாரிக்கும் இந்த வெப் சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. 26 நொடிகள் கொண்ட அந்த டீசரில் ஜெயலலிதாவின் பள்ளி பருவம், திரை வாழ்க்கை, அரசியல் என அனைத்தும் இடம் பெற்றுள்ளது.
டிசம்பர் 5-ந் தேதி குயின் வெப்சீரிசின் டிரெய்லர் வெளியாகும் எனவும் டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமாக ஆறுமணி நேரம் ஓடக்கூடிய வெப் சீரிசாக படமாக்கி இருக்கிறார்கள். ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் தோற்றத்துக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.
சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ரெபா மோனிகா ஜான், டிகன்கனா சூர்யவன்ஷி நடிப்பில் உருவாகி இருக்கும் ’தனுசு ராசி நேயர்களே’ படத்தின் முன்னோட்டம்.
ஸ்ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் படம் தனுசு ராசி நேயர்களே. ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் விஜய்யிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஆவார். இதில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ரெபா மோனிகா ஜான், டிகன்கனா சூர்யவன்ஷி ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்த படம் ரொமாண்டிக் காமெடி கதையாக உருவாகிறது. ஒரு இளைஞனின் ஜோதிட நம்பிக்கைகள் பற்றி இந்த படம் பேசுகிறது. முக்கியமாக திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஒரு இளைஞனுக்கு இந்த நம்பிக்கைகள் என்னனென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதே படத்தின் கதையாக உருவாகிறது.

படம் பற்றி இயக்குனர் கூறும்போது, 'தனுசு ராசி நேயர்களே' என்று பெயரிட காரணம், அது மற்ற ராசிகளுடன் ஒப்பிடுகையில் அதிகமாக கவனத்தை ஈர்க்கிறது. கூடுதலாக, நாயகன் ஹரீஷ் கல்யாண் இந்த குறிப்பிட்ட ராசிக்காரர் தான். இந்த ராசிக்கான அடையாளம் ஒரு வில் அம்பு வைத்திருப்பவர். இது லட்சிய நோக்கத்ததை குறிக்கிறது. இதேபோல், இந்த படத்தில் உள்ள ஹீரோ குறிக்கோளுடன் இருப்பவர், அவருடைய வாழ்க்கையில் நடப்பவற்றை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறோம். என கூறினார்.
பிரசாத் ஸ்டூடியோ விவகாரம் குறித்து இளையராஜா தொடர்ந்த வழக்கை சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. இவர் 40 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் அமைந்திருக்கும் ஒரு கட்டடத்தை பயன்படுத்தி வந்தார். இந்த இடத்தில்தான் பாடல் பதிவு, இயக்குனர்கள் சந்திப்பு என அனைத்து பணிகளையும் இளையராஜா செய்து வந்தார்.
ஆனால், சில மாதங்களுக்கு முன்பு பிரசாத் ஸ்டூடியோவின் தற்போது இயக்குனராக இருக்கும் சாய் பிரசாத்துக்கும், இளையராஜாவிற்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்த கட்டடம் மூடப்பட்டது.. இதன் காரணமாக இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவிற்கு செல்லாமல் இருந்தார். இளையராஜாவின் பணிகளும் முடங்கின.

இதனிடையே கடந்த 28ஆம் தேதி இளையராஜாவுக்கு ஆதராவாக திரையுலகினர் முற்றுகை போராட்டம் நடத்தி நியாயம் கேட்டனர். இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து தன்னை காலி செய்ய தடை கோரி இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது, இந்த வழக்கை சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
படவிழாவில் பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில், இயக்குநர் பாக்யராஜுக்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
கருத்துக்களை பதிவு செய்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் பாக்யராஜ், செல்போன் வந்த பின்னர் தான் பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரித்தன. பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்களின் பலவீனத்தை சிலர் தவறாக பயன்படுத்திக் கொண்டனர். இந்த சம்பவத்திற்கு ஆண்கள் மட்டுமல்ல, அந்த பெண்களிடமும் தவறு இருக்கிறது. ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது என்பார்கள். ஆகவே, பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்’ என கூறினார்.
பாலியல் பலாத்காரத்தில் பெண்கள் மீது குற்றம் சுமத்தியும், ஆண்களின் செயலை நியாயப்படுத்தும் வகையில் பாக்யராஜின் பேச்சு அமைந்ததாக பெண்கள் அமைப்புகள் சார்பில் எதிர்ப்புகள் எழுந்தன. இந்த விவகாரம் குறித்து ஆந்திர மகளிர் ஆணையம் வழக்கு பதிவு செய்தது. தமிழக மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்தது. இவ்வாறு பாக்யராஜுக்கு அடுத்தடுத்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தற்போது அவருக்கு ஆதரவாக ஆண்கள் பாதுகாப்பு சங்கம் களமிறங்கியுள்ளது.

அந்த சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”பெண்களைப் பற்றி பேசினாலே ஏதாவது வடிவில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என பலரும் ஓடி ஒதுங்கிக் கொள்ளும் இந்தச் சூழலில் தங்களின் துணிச்சலான சமுதாய நலன் சார்ந்த கருத்துகள் பாராட்டுக்குரியது" என்று சொல்லப்பட்டுள்ளது.
தளபதி 64 படத்திற்கு சம்பவம் என்று தலைப்பு வைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அந்த தலைப்பு எங்களுக்கு சொந்தமானது என இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம் தெரிவித்துள்ளார்.
மைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ், ஜான் மேக்ஸ் புதிய படத்தை தயாரித்து வருகிறார். ரஞ்சித் பாரிஜாதம் இயக்கும் இத்திரைப்படத்திற்கு “சம்பவம்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் நடன இயக்குனர் தினேஷ் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். நாயகிகளாக பூர்ணா மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர்.
மேலும் இவர்களுடன், பக்ரீத் படத்தில் நடித்த பேபி ஸ்ருதிகா, கிஷோர், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படத்திற்கு சம்பவம் என்று தலைப்பு வைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு ரஞ்சித் பாரிஜாதம் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம் கூறும்போது, நான் சம்பவம் என்ற படத்தை இயக்கி வருகிறேன். ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷ், பூர்ணா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

சம்பவம் என்ற தலைப்பை முறையாக பதிவு செய்து இப்படத்தின் படப்பிடிப்புகளை நடத்தி வருகிறோம். ஆனால் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு சம்பவம் என்று பெயர் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது எங்கள் படக்குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் என்ற தலைப்பு எங்களுக்கு சொந்தமானது. அதனால் விஜய் படம் பற்றி வரும் வதந்திகளை நம்பாதீர்கள்' என்றார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த், நேற்று தனது வீட்டில் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும், சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 6 மொழிகளில் நடித்துள்ள ரஜினி, இதுவரை 167 படங்களில் நடித்துள்ளார். இவரது 167-வது படமான தர்பார் வருகிற பொங்கல் விடுமுறையையொட்டி ரிலீசாக உள்ளது. இதை தொடர்ந்து ரஜினியின் 168-வது படத்தை சிறுத்தை சிவா இயக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

ரஜினி தனது 69-வது பிறந்தநாளை வருகிற டிசம்பர் 12-ந் தேதி கொண்டாட இருக்கிறார். அதை பிரம்மாண்டமாக கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்த் தனது நட்சத்திர பிறந்தநாளை நேற்று தனது வீட்டில் கொண்டாடியுள்ளார். நேற்று தன்னுடைய பிறந்த நட்சத்திரமான திருவோணம் நாள் என்பதால், இதற்காக வீட்டில் சிறப்பு ஹோமம் நடத்தியுள்ளார்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் புதிய படத்தில் சர்ச்சை நடிகர் ஒருவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஷக், கும்பளங்கி நைட்ஸ் உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர் இளம் கதாநாயகன் ஷேன் நிகம். இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட்டானதால், அடுத்ததாக நடிக்க இருந்த வெயில், குர்பானி படங்களுக்கு அதிக சம்பளம் கேட்டுள்ளார். அதற்கு தயாரிப்பாளர் மறுப்பு தெரிவித்ததால், அப்படத்திற்காக நீண்ட வளர்த்த தனது தலைமுடியை வெட்டி அதிர்ச்சி அளித்தார். இதனால் அவர் நடித்துவரும் வெயில், குர்பானி படங்கள் கைவிடப்பட்டன. இந்த விவகாரம் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படத்தில் ஷேன் நிகம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் நடிக்க உள்ள காட்சிகள் ரஷ்யாவில் படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார்.

ஆக்ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக இருக்கிறது. 2020-ம் ஆண்டு ஏப்ரல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு அமர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.






