என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் நடித்த நயன்தாரா, தற்போது புதிய படம் மூலம் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    விஜய் சேதுபதியும், நயன்தாராவும் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் ஜோடியாக நடித்து இருந்தனர். விக்னேஷ் சிவன் இயக்கினார். 2015-ல் வெளியான இந்த படம் நல்ல வசூல் பார்த்தது. நானும் ரவுடிதான் படப்பிடிப்பில்தான் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்து இப்போது வரை நீடித்து வருகிறது.

    அதன்பிறகு சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். அந்த படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்து புதிய படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகமானதால் அந்த படத்தை கைவிட்டுவிட்டனர். தற்போது புதிய கதையை தயார் செய்து விஜய் சேதுபதியிடம் கூறி இருக்கிறார்.

    விக்னேஷ் சிவன், நயன்தாரா

    அந்த கதை விஜய்சேதுபதிக்கு பிடித்து போய் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து படப்பிடிப்பை மே மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நானும் ரவுடிதான் கூட்டணி மீண்டும் இணைவதால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    விஜய் சேதுபதி தற்போது ‘லாபம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ஜனநாதன் இயக்கி உள்ளார். விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார்.
    சூர்யா அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படத்தில் நடிகர் பிரசன்னா வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    சூர்யா நடிப்பில் கடந்த வருடம் என்.ஜி.கே, காப்பான் படங்கள் வந்தன. தற்போது சுதா கொங்காரா இயக்கியுள்ள ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தமிழ் புத்தாண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இயக்குனர் ஹரி இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார்.

    சூர்யா, பிரசன்னா

    இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இதில் வில்லனாக நடிக்க நடிகர் பிரசன்னாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே அஞ்சாதே, துப்பறிவாளன், திருட்டு பயலே 2 போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நாடோடிகள் 2’ படத்தின் முன்னோட்டம்.
    சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடித்த `நாடோடிகள்' திரைப்படம் 2009-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதோடு, வசூலிலும் சாதனை படைத்தது. இந்த நிலையில், `நாடோடிகள்' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி இருக்கிறது. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ளா இந்த படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். 

    நாடோடிகள் 2 படக்குழு

    மேலும் பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமுத்திரகனி சிறப்பு தோற்றத்தில் வருகிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். 
    ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் சயின்ஸ் பிக்‌ஷன் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
    தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிகுமார் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அறிவியல் சார்ந்த படமாக உருவாகும் இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

    படக்குழுவினருடன் சிவகார்த்திகேயன்

    பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இப்படம், பைனான்ஸ் பிரச்சனை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தற்போது பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. அதனை படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இயக்குனர் ரவிகுமார், ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, சிவகார்த்திகேயன் ஆகியோர் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். இப்படத்தின் தலைப்பு சில தினங்களில் அறிவிக்கப்படும் என ஆர்.டி.ராஜா தெரிவித்துள்ளார்.
    அறிமுக இயக்குனர் கார்த்திக் பழனியப்பன் இயக்கும் புதிய படத்தில் நடிகர் மொட்டை ராஜேந்திரன் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
    பாலா இயக்கிய ‘நான் கடவுள்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மொட்டை ராஜேந்திரன். இப்படத்தில் கொடூர வில்லன் வேடத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார். இதையடுத்து சில படங்களில் வில்லனாக நடித்த அவர், பின்னர் காமெடி வேடங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார்.

    மொட்டை ராஜேந்திரன்

    இந்நிலையில், மொட்டை ராஜேந்திரன் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். அறிமுக இயக்குனர் கார்த்திக் பழனியப்பன் இயக்கும் ‘ராபின்ஹுட்’ என்ற படத்தில் மொட்டை ராஜேந்திரன் ஹீரோவாக நடிக்கிறார். அசுரன், ராட்சசன் படங்களில் நடித்த அம்மு அபிராமி இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தனது நண்பர்களுடன் சேர்ந்து பள்ளி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
    சென்னையைச் சேர்ந்த சமந்தா, 2010ல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும், அவரை தெலுங்கு திரையுலகம்தான் முன்னணியில் கொண்டு வந்தது. தொடர்ந்து அங்கு பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். 

    இதையடுத்து சமந்தாவுக்கு தமிழிலும் வாய்ப்புகள் குவியத் தொடங்கின. விஜய், சூர்யா போன்ற முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்த அவர், கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 

    சமந்தா

    நடிப்பை தாண்டி சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வரும் சமந்தா, சமீபத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றை ஆரம்பித்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள ஹூப்ளி ஹில்ஸ் பகுதியில் அந்த பள்ளி இயங்கி வருகிறது. சமந்தாவின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
    பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான் கான், தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பிரபல இந்தி நடிகர் சல்மான் கான், நேற்று கோவாவுக்கு விமானத்தில் சென்றார். விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியே வந்து கொண்டிருந்தபோது, ஒரு ரசிகர் நெருங்கி வந்து அவருடன் ‘செல்பி‘ எடுக்க முயன்றார். அதனால் கோபமடைந்த சல்மான் கான், அந்த ரசிகரின் செல்போனை பறித்தார். 

    சல்மான் கான்

    இந்த வீடியோ காட்சி, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அந்த நபர், ஒரு விமான நிறுவனத்தின் கடைநிலை ஊழியர் என்று தெரிய வந்தது. ஆனால், சம்பவம் குறித்து புகார் தரப்படவில்லை என்று விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகர் எகோஸ்கர் தெரிவித்தார். 
    மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் மாளவிகா மோகனன், அடுத்ததாக மாஸ் நடிகரின் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்த அவர், தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். பேட்ட படத்தில் சிறிய வேடத்தில் நடித்த மாளவிகா மோகனன், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

    சூர்யா, ஹரி

    இப்படத்தை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஹரி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    ரஜினிக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை வருமான வரித்துறை வாபஸ் பெற்றதால், சென்னை ஐகோர்ட்டு அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
    நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2002 முதல் 2005-ம் ஆண்டு வரை தாக்கல் செய்த வருமான வரிக்கணக்குகளில் குறைபாடு இருந்ததாக வருமானவரித்துறை கூறியது. இதற்காக 2002-03-ம் நிதியாண்டுக்கு 6 லட்சத்து 20 ஆயிரத்து 235 ரூபாயும், 2003-04-ம் ஆண்டுக்கு 5 லட்சத்து 56 ஆயிரத்து 326 ரூபாயும், 2004-05-ம் ஆண்டுக்கு 54 லட்சத்து 45 ஆயிரத்து 875 ரூபாயும் நடிகர் ரஜினிகாந்துக்கு அபராதம் விதித்து வருமான வரித்துறை உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த், வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடம் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ரஜினிகாந்த் கோரிக்கையை கடந்த 2013-ம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. அபராதம் விதித்த வருமான வரித்துறையின் உத்தரவை ரத்து செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், வருமான வரித்துறை மேல்முறையீடு செய்து வழக்கு தொடர்ந்தது. 

    சென்னை ஐகோர்ட்டு

    இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வக்கீல், இந்த மேல்முறையீட்டு வழக்கை திரும்ப பெறுவதாக கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்ப பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
    நீண்ட நாட்களாக நடிக்காமல் இருந்த நடிகர் சிம்பு, மீண்டும் படப்பிடிப்பிற்கு திரும்பியுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
    மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான செக்கசிவந்த வானம் படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு எந்த படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில், நடிகர் சிம்பு மஹா படத்திற்காக ஹன்சிகாவுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். படப்பிடிப்பில் சிம்பு ஹன்சிகாவுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் சிம்பு நீண்ட நாட்களுக்கு பிறகு படப்பிடிப்பிற்கு திரும்பியுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சிம்பு

    கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாகி வரும் மஹா படத்தில் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகும் இந்த படத்தை யு.ஆர்.ஜமீல் இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க உள்ளார்.
    பல வெற்றி படங்களை இயக்கிய பாரதிராஜா, சமீபத்தில் அளித்த பேட்டியில் நிஜ வாழ்க்கையில் அவருக்கு நடிக்க தெரியாது என்று கூறியிருக்கிறார்.
    பாரதிராஜா தயாரித்து நடித்து இயக்கி இருக்கும் படம், மீண்டும் ஒரு மரியாதை. இப்படம் பிப்ரவரி 21ந்தேதி படம் வெளியாக இருக்கிறது. இதையொட்டி பாரதிராஜா அளித்த சிறப்பு பேட்டி:

    மீண்டும் ஒரு மரியாதை என்ற தலைப்பு ஏன்?
    விவசாயியாக வாழும் எழுத்தாளர் ஒருவர் தனது வயோதிக காலத்தில் பிள்ளையுடன் இருக்க லண்டன் செல்கிறார். அங்கே வாழ்க்கையை வெறுத்து தற்கொலைக்கு முயலும் ஒரு இளம்பெண்ணை சந்திக்கிறார். இருவருக்கு இடையேயான பயணம் தான் கதை. 

    உங்கள் கதாநாயகிகள் எல்லாம் தனித்துவமாக தெரிவார்கள். இதில் புதுமுகத்துடன் நடிப்பது ஏன்?
    நான் அறிமுகப்படுத்திய நடிகைகளில் ரதியை தவிர வேறு யாரையாவது கதாநாயகி என்று சொல்வீர்களா? என் கதைக்கு யார் தேவைப்படுகிறார்களோ அவர்களை தான் நடிக்க வைப்பேன். என் கதாநாயகிகள் தேவதை போல இருக்க வேண்டியது இல்லை. குணாதிசயம் தான் ஒருவரை கதாநாயகன், கதாநாயகியாக மாற்றுகிறது. புற அழகு முக்கியம் அல்ல. 

    பாரதிராஜா - ரஜினி

    நடிப்பில் ஆர்வம் காட்டுவது ஏன்?
    மணிரத்னம் முதலில் அழைத்தபோது மறுத்தேன். அரசியலுக்கு வரும் திட்டம் இருக்கிறதா? என்று கேட்டார். நான் இல்லவே இல்லை என்றேன். அப்போது நீங்கள் தான் இதில் நடிக்க வேண்டும் என்று நடிக்க வைத்தார். நான் நடிப்பதற்காக சினிமாவுக்கு வந்தவன் தான். ஆனால் அந்த காலகட்டத்தில் அழகான நடிகர்கள் இருந்தார்கள். எனவே அச்சப்பட்டேன். யோகிபாபு போன்றோர்கள் அதை உடைத்துவிட்டார்கள் இப்போது நடிப்பதற்கு அழகு தேவையில்லை. 

    ரஜினி இன்னும் கதாநாயகனாக நடிப்பது பற்றி?
    ரஜினி உண்மையிலேயே அழகன். நான் பரட்டையாக காண்பித்தபோதே அவரது ஸ்டைல் பிரமாதமாக இருக்கும். சினிமாவை பொறுத்தவரை சிறந்த நடிகன். ஆனால் இன்றுவரை நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாமல், இமேஜ் இல்லாமல் வலம் வருகிறார். விக் கூட இல்லாமல் வெளியில் வருகிறார். அது பாராட்ட வேண்டியது. கொள்கை ரீதியாக நாங்கள் மாறுபட்டாலும் இந்த விஷயத்தில் அவரை நான் பாராட்டியே ஆகவேண்டும்.
    ’மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சிக்காக கர்நாடக வனப்பகுதிக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்துக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    டிஸ்கவரி தொலைக்காட்சியில் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி உலக புகழ் பெற்றதாகும். இந்த நிகழ்ச்சியின் நாயகன் பியர் கிரில்ஸ், அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கிருந்து எப்படி தப்பி வருவது என்பது குறித்து மக்களுக்கு கற்று தருகிறார்.

    இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டுள்ளார். கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்துவருகிறது. இந்நிலையில், இந்த படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்துக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    உடனே ரஜினிக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காயம் காரணமாக படப்பிடிப்பு பாதிக்கப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
    ×