என் மலர்
சினிமா செய்திகள்
சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யா, பரணி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘நாடோடிகள் 2’ படத்தின் விமர்சனம்.
சமூக அக்கறையுடன் இருக்கும் சசிகுமார், மக்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களுக்கு குரல் கொடுக்கிறார். குறிப்பாக சாதியை கடுமையாக எதிர்கிறார். அஞ்சலி, பரணி மற்றும் பெரியவர் ஒருவர் சசிகுமாருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். சாதியற்ற இளம் தலைமுறையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சசிகுமாருக்கு தான் சார்ந்த சாதியிலிருந்து கடும் எதிர்ப்பு வருகிறது. இதனால் சொந்த தாய்மாமா உள்பட யாரும் பெண் கொடுக்க மறுக்கிறார்கள்.

இவ்வாறு இருக்கையில், தன்னை தேடி வந்து யாராவது பெண் கொடுத்தாலே போதும் என்ற மனநிலையில் இருக்கிறார் சசிகுமார். இந்த சூழலில், சசிகுமார் சாதியைச் சேர்ந்த பெண்ணான அதுல்யா ரவியை அவருக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணத்தன்று இரவு சசிகுமாருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த அதிர்ச்சி என்ன? சாதியற்ற இளம் தலைமுறை என்ற சசிகுமாரின் ஆசை நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் சசிகுமார், நாடோடிகள் முதல் பாகத்தை போன்று அதே துறுதுறு நடிப்புடன் வருகிறார். சமுத்திரகனியின் கருத்துகளை பேச இவரைவிட யாரும் செட் ஆக மாட்டார்கள் என தோன்றும் அளவிற்கு சிறப்பாக நடித்துள்ளார். சசிகுமார்-அஞ்சலி இடையேயான காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

செங்கொடி எனும் கதாபாத்திரத்தில் வரும் நாயகி அஞ்சலி, போராட்டத்தில் இறங்கி குரல் கொடுக்கும் தைரியமான பெண்ணாகவும், சசிகுமாருக்கு பக்கபலமாகவும் இருக்கிறார். சசிகுமாருக்கும் இவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருப்பது படத்திற்கு பிளஸ்.
இதேபோல், பரணியின் கதாபாத்திரத்தை எதார்த்தமாக வடிவமைத்துள்ள விதம் சிறப்பு. காதலர்களாக வரும் அதுல்யா ரவி, இசக்கி மற்றும் போலீசாக வரும் திருநங்கை நமீதா ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.

சாதி ஒழிப்பு என்பதை மையமாக வைத்து திரைக்கதையை அமைத்துள்ள சமுத்திரகனி, ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, அதைப் பற்றி விரிவாகப் பேசாமல், நாட்டில் நடக்கும் எல்லாப் பிரச்சினைகளையும் படத்தில் புகுத்தி இருப்பது பின்னடைவாக அமைகிறது.
ஜஸ்டின் பிரபாகரின் இசையில் பாடல்கள் மனதில் பதியவில்லை. இருப்பினும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கின்றது. ஏகாம்பரத்தின் நேர்த்தியான ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சிடுகின்றன.
மொத்தத்தில் ‘நாடோடிகள் 2’ சாதிக்கு எதிரான சாட்டையடி.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா, சம்பாதிக்க ஆசைப்பட்டு நஷ்டமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் அனுஷ்கா. இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வருகிறார். இடையில் அவர் உடல்எடை கூடிவிட, அதைக் குறைக்கும் முயற்சியில் இருந்தார். இதற்காக அவர் அமெரிக்கா சென்று வந்ததாகவும் கூறப்பட்டது. இந்தநிலையில் அவர் குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தன. இதனால் அவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகச் செய்திகள் வந்தன.
நடிகர் பிரபாசை அவர் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அதை இருவருமே மறுத்தனர். அவர் என் நண்பர் என்று அனுஷ்காவும், என் தோழி என்று பிரபாசும் தெரிவித்தனர். ஐதராபாத்தில் 4 படுக்கை அறை கொண்ட பிளாட் ஒன்றை நடிகை அனுஷ்கா வைத்திருந்தார். பிரமாண்டமான இந்த வீட்டை வாங்கிய கொஞ்ச காலத்திலேயே தெலுங்கானா பிரச்சினை தலை தூக்கியது.

இந்தப் பிரச்சினை காரணமாக சொத்துக்கள் விலை இறங்கிவிடும் என்று யாரோ கிளப்பிவிட, அதை ரூ.5 கோடிக்கு விற்று விட்டார் அனுஷ்கா. அதன் அப்போதைய மதிப்பு ரூ.10 கோடிக்கு மேல் என்கிறார்கள். இதே போல ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்த அனுஷ்கா, விசாகப்பட்டினத்தில் ஏராளமான நிலங்களை வாங்கியிருந்தார். 2014-ம் ஆண்டு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, அமராவதியை தலை நகராக்கும் முயற்சியில் இருந்தார்.
இதனால் விசாகப்பட்டினத்தில் நிலங்களின் விலை ஏறாது என்று முடிவு செய்த அனுஷ்கா, வெறுத்துப்போனார். இதையடுத்து விசாகப்பட்டினத்தில் வாங்கிய நிலங்களில் சுமார் 80 சதவிகிதத்தை குறைந்த விலைக்கு விற்றுவிட்டார். ஆனால், இப்போது விசாகப்பட்டினத்தில் நிலங்களின் விலை கன்னா பின்னா வென்று ஏறியிருக்கிறது. இதை நினைத்து இப்போது அவர் வருத்தப்படுவதாக கூறுகிறார்கள்.
பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா, ஐதராபாத் என்கவுன்ட்டர் சம்பவத்தை திஷா என்ற பெயரில் திரைப்படமாக எடுக்க உள்ளார்.
ஐதராபாத்தில் நள்ளிரவில் தனிமையில் இருந்த கால்நடை மருத்துவர் ஒருவரை நான்கு பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்தது நாடு முழுவதும் பரபரப்பை உண்டாக்கியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீதான குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டது. அவர்களை ஐதராபாத் போலீசார் என்கவுன்ட்டர் செய்து சுட்டுக் கொன்றனர்.
இந்த உடனடி தண்டனை பொது மக்களின் கூட்டு மனப்பாண்மையை திருப்திபடுத்துவதற்காக செய்யப்பட்டது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த சம்பவத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா, திஷா என்ற பெயரில் திரைப்படமாக எடுக்க இருக்கிறார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- என்னுடைய திஷா திரைப்படம் நிர்பயா கொலை போன்ற பாலியல் பலாத்கார கொலைகளுக்குப் பின் இருக்கும் உண்மையை பேசும். நிர்பயா வழக்கில் நீதிமன்றத்தில் புட்பால் விளையாடும் வழக்கறிஞர் ஏ.பி.சிங்குக்கும் உடனடி தண்டனையை கொண்டாடும் மக்கள் குறித்தும் விளக்கமாகப் பேசும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் புதிய படத்தில், பிரபல இயக்குனர் ஒருவர் வில்லன் வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். ‘காலா’ திரைப்படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் பாலிவுட் திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியானது.
ஆனால் தற்போது இந்தப் படத்துக்கு முன்பாக தமிழில் புதிய படம் ஒன்றை இயக்க பா.ரஞ்சித் திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில், ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்துக்கு, ‘சல்பேட்டா’ என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாக பேசப்படுகிறது. குத்துச்சண்டை வீரர்களை பற்றிய படம். படத்தில் விறுவிறுப்பான குத்துச்சண்டை காட்சிகள் உள்ளன.

ஆர்யா கதாநாயகனாக இதுவரை நடித்திராத ஒரு வேடத்தில் நடிக்கிறார். வில்லனாக டைரக்டர் மகிழ்திருமேனி நடிக்கிறார். கதாநாயகன் ஆர்யா கதாபாத்திரத்துக்கு இணையாக மகிழ்திருமேனியின் வில்லன் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இவர் டெடி படத்திலும் ஆர்யாவுடன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, மாஸ்டர் படத்தில் வில்லன் வேடத்தில் நடிப்பது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘மாஸ்டர்’. விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கிறார். ‘மாஸ்டர்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது. படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. படம், தமிழ் புத்தாண்டு அன்று வெளிவர இருக்கிறது. இம்மாதம் இறுதிக்குள் படப்பிடிப்பு முழுவதையும் முடித்துவிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

அதன்பிறகு படத்தொகுப்பு, குரல் சேர்ப்பு, பின்னணி இசை சேர்ப்பு ஆகிய வேலைகள் நடைபெற இருக்கிறது. இந்த படத்தில், விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். ‘‘கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும்போதே வில்லனாகவும் நடிக்கிறீர்களே...?’’ என்று விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ‘‘இமேஜ் பற்றி நான் கவலைப்படவில்லை. எனக்கு இந்த வில்லன் வேடம் பிடித்து இருக்கிறது. அதனால் நடிக்கிறேன்’’ என்று பதில் அளித்தார்.
கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் தமன்னா, தனது பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்டுள்ளார்.
சினிமா நடிகைகளுக்கு உடல்கட்டு ரொம்ப முக்கியம். எனவேதான் நடிகைகள் நாள் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னாவும் அப்படித்தான். அதிகாலையே படப்பிடிப்பு என்றால் படப்பிடிப்பு முடிந்து வந்ததும் உடற்பயிற்சி செய்வாராம்.

சமீபத்தில் ஒரு விழாவிற்காக மும்பையில் இருந்து ஐதராபாத்திற்கு வந்த தமன்னா, அந்த விழா முடிந்த கையோடு அங்குள்ள ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்திருக்கிறார். இப்படி உடற்கட்டை இவர் பராமரிக்க முக்கிய காரணமும் உள்ளதாம். அதாவது, நடனத்தை மையப்படுத்தும் கதையில் நடிக்க வேண்டும் என்பது அவரது நீண்டநாள் ஆசை. இதற்காகவே தனது உடற்கட்டை அதிகரிக்காத படி உடற்பயிற்சி மூலம் பராமரித்து வருகிறாராம்.
நடிகரும், பிக்பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவருமான மகத், அவரது காதலி பிராச்சி மிஸ்ராவை திருமணம் செய்துக் கொண்டார்.
மங்காத்தா, ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மகத். இவரும் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவும் காதலித்து வந்தனர். பின்னர் நடிகர் மகத் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நடிகை யாஷிகா மீது காதல் வயப்பட்டார்.
இதனால், மகத்துக்கும், பிராச்சிக்கும் இடையே காதல் முறிவு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மகத், பிராச்சியை சந்தித்து மீண்டும் காதலை வளர்த்துக் கொண்டார்.

படங்களில் பிசியாக நடித்து வரும் மகத், தன்னுடைய காதலியான பிராச்சியை கடந்த ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டார். தற்போது இவர்கள் திருமணம் இன்று காலை மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் திருமண விழாவில் கலந்துக் கொண்டார்கள்.
நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் திருமணத்திற்கு நேரில் சென்று மகத் மற்றும் பிராச்சி மிஸ்ராவை வாழ்த்தினார்கள்.
வள்ளியம்மாள் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் ஜிம்னாஸ்டிக் வீரர் கமல் கோவின்ராஜ் தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள புறநகர் படத்தின் முன்னோட்டம்.
வள்ளியம்மாள் புரொடக்ஷன் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் ஜிம்னாஸ்டிக் வீரர் கமல் கோவின்ராஜ் தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள படம் புறநகர்.
இதில் கதாநாயகியாக சுகன்யா, அஸ்வினி சந்திரசேகர் இருவரும் நடித்துள்ளனர். மற்றும் தேனி முருகன், கதிரவகண்ணன், செல்வம், தயாளன், ரகு, கணேஷ், தாம்பரம் சிங்கம் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் அனல் அண்ணாமலை வில்லனாக அறிமுகமாகிறார்.
கதை, திரைக்கதை, சண்டை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் மின்னல் முருகன். இவர் இலங்கை தமிழர்களின் துயரத்தை சொல்லும் எல்லாளன் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் பற்றி இயக்குனர் மின்னல் முருகன் கூறியதாவது, ‘சாதிக் கொடுமை தான் தேசத்தின் வியாதி ‘‘ஜாதிப் பிரச்சனையால் சமுதாயத்தில் வாழமுடியாத நாயகன் புறநகரில் தஞ்சமடைகிறார். அந்த இடத்திலும் சமூகம் அவரை வாழவிடமால் செய்கிறது. தன்னைப் பாதுகாத்துக் கொள்ள நாயகன் எத்தகைய முயற்சிகளை எடுக்கிறார் என்பதை கமர்ஷியலாக சொல்லும் படம்தான் ‘புறநகர்’ என்றார்.
விஜய் திருமூலம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு இந்திரஜித் இசையமைத்துள்ளார்.
பட்டாஸ் படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் தனுஷ், அஜித் பிறந்தநாளில் விருந்து கொடுக்க இருக்கிறார்.
தனுஷ் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் பட்டாஸ் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘டி 40’ என்று அழைத்து வருகிறார்கள்.
இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்பதை பிப்ரவரி 9ம் தேதி அறிவிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இப்படத்தை அஜித் பிறந்த நாளான மே 1ம் தேதி வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் தனுஷுடன் சஞ்சனா நட்ராஜன், ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
பாலிவுட்டில் முன்னணி நடிகைகளாக இருக்கும் தீபிகா படுகோனே மற்றும் கங்கனா ரணாவத் இருவரும் தன்னுடைய ரசிகர்களை ஏமாற்றி இருக்கிறார்கள்.
இந்தி திரையுலகின் பிரபலமான நாயகிகள் தீபிகா படுகோனே, கங்கனா ரணாவத். இருவரும் தனி கதாநாயகிகளாக நடித்த ‘சப்பக்‘ மற்றும் ‘பங்கா’ ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளிவந்தன.
ஆனால், இரண்டு படங்களுமே எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெற முடியாமல் தோல்வியைத் தழுவியது பாலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு படங்களின் பட்ஜெட்டும் ஏறக்குறைய ஒன்றுதான்.

இரண்டு படங்களையும் பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தான் தயாரித்தது. இரண்டு படங்களும் தலா 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ’சப்பக்‘ படம் மூலம் ரூ.5 கோடி நஷ்டமும், ‘பங்கா’ படம் மூலம் ரூ.10 கோடி நஷ்டமும் வரும் என்கிறார்கள்.
இரண்டு படங்களின் தியேட்டர் வசூலை விட சாட்டிலைட் உரிமை மற்றும் டிஜிட்டல் உரிமை மூலம் தான் நஷ்டத்தை சரிக்கட்ட முடியுமாம். இரண்டு படங்களின் கதையும் வாழ்க்கையில் போராடி சாதித்த பெண்களின் கதை தான். ஆனால், இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் ஆதரவு இல்லாமல் போனது.
வில் ஸ்மித், மார்டின் லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் பேட் பாய்ஸ் ஃபார் லைஃப் படத்தின் விமர்சனம்.
வில் ஸ்மித்தும் மார்டினும் சேர்ந்து கடந்த பாகங்களில் போதைப் பொருட்கள் கடத்தல் கும்பல் மற்றும் அதில் ஈடுபட்ட நபர்களை கண்காணித்து கைது செய்து வந்தார்கள். தற்போது இவர்கள் ஓய்வு எடுக்கலாம் என்று முடிவு செய்து இருக்கும் நிலையில், முன் விரோதம் காரணமாக அர்மாண்டோ ஆர்ம்ஸ் வில் ஸ்மித்தை கொல்ல முயற்சிக்கிறான்.
இதில் வில் ஸ்மித் படுகாயம் அடைகிறார். சிகிச்சை முடிந்து வரும் வில் ஸ்மித், நண்பர் மார்டினுடன் இணைந்து தன்னை கொல்ல வந்ததன் பின்னணியையும் அவர்களை பிடிக்கவும் அழைக்கிறார். ஆனால், மார்டினோ வர மறுக்கிறார்.

இறுதியில் வில் ஸ்மித், மார்டினுடன் இணைந்து எதிரிகளை கண்டுபிடித்தாரா? அவர்களின் பின்னணி என்ன? என்பது படத்தின் மீதிக்கதை.
ஏற்கனவே வெளியான முந்தைய பாகங்களை விட இப்படத்தில் ஆக்ஷன், காமெடி என அனைத்திலும் கவனம் செலுத்தி ரசிக்கும் படி இப்படத்தை கொடுத்திருக்கிறார்கள். வில் ஸ்மித், மார்டின் இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இம்முறை ஆக்ஷனை விட காமெடியில் அசத்தி இருக்கிறார்கள்.

தற்போது பிரபலமான வசனங்களை சேர்த்து தமிழில் டப்பிங் கொடுத்திருப்பது கூடுதல் சிறப்பு. ஆரம்பம் முதல் இறுதி வரை படத்தை போரடிக்காமல் கொண்டு சென்றிருக்கிறார்கள் இயக்குனர்கள் அடில் எல் அர்பி மற்றும் பிலால் பலாஹ். ரோப்ரெச் ஹேவர்ட் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. லார்ன் பால்ஃப் பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
மொத்தத்தில் ‘பேட் பாய்ஸ் ஃபார் லைஃப்’ ஆக்ஷன் அதிரடி.
நடிகை சனம் ஷெட்டி கொடுத்த புகாருக்கு பதிலாக பிக்பாஸ் தர்ஷன் பத்திரிகையாளர்களை சந்தித்து இன்று விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் சனம் ஷெட்டி. மாடலிங்கும் செய்து வருகிறார். ‘கதம் கதம்‘, ‘சதுரம் 2’ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர் அடுத்து எதிர்வினையாற்று படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
சனம் ஷெட்டியுடன் மாடலிங் படப்பிடிப்புகளின் போது நடித்தவர் தர்ஷன். ‘பிக்பாஸ்’ சீசன் 3ல் பங்கேற்றதால் பிரபலம் ஆனார். இருவரும் திருமணம் செய்வது பிக்பாஸ் நிகழ்ச்சியால் தள்ளி வைக்கப் பட்டதாகவும் நிகழ்ச்சி முடிந்து பல மாதங்கள் ஆகியும் தர்ஷன் திருமணத்துக்கு மறுப்பதாக தெரிவித்து சனம் ஷெட்டி காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார்.
இந்த விவகாரம் குறித்து இன்று தர்ஷன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
நானும் சனம் ஷெட்டியும் காதலித்தது எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது உண்மைதான். முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல முயற்சி செய்தது அவர்தான். கடந்த சீசனின் போது கலந்து கொள்ள முயற்சி செய்தார். ஆனால் சில நிபந்தனை இருந்ததால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.
நான் முயற்சி செய்யவே இல்லை. ஒரு விளம்பரத்தை பார்த்து விஜய் டிவியில் என்னை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள். அவர்கள் அழைத்த அன்று தான் எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. என் வீட்டுக்கு தெரியாமல் தான் நிச்சய தார்த்தம் நடந்தது. படவாய்ப்புகள் பாதிக்கப்படும் என்று இந்த விஷயத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

நான் பிக்பாஸ் செல்லும் போது எனது சமூக வலைதள கணக்குகளை நிர்வகித்துக் கொள்கிறேன் என்று கேட்டார். நான் வேண்டாம் என்று சொன்னேன். நான் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற பின் என் தங்கையிடம் பேசி என் சமூகவலைத்தள கணக்கு பாஸ்வேர்டுகளை வாங்கிக் கொண்டார். அதில் அவரிட்ட சில பதிவுகளில் எனக்கு உடன்பாடு இல்லை. அந்த பதிவுகள் மூலமாகத்தான் எங்கள் காதல் வெளியில் தெரிய வந்தது.
பிக்பாஸ் முடித்து வந்தபின் அவருக்கு என் மீது பொஸசிவ் அதிகமானது. பிற பெண்களுடன் பேசக்கூடாது என்று பிரச்சினை செய்தார். முக்கியமாக பிக்பாஸ் வீட்டுக்குள் என்னுடன் போட்டியாளர்களாக இருந்த பெண்களுடன் நான் பேசக்கூடாது என்று சந்தேகப்பட்டார்.
அவர் சிங்கப்பூரில் வந்து தங்கியது சேர்ந்து பார்ட்டிக்கு சென்றது எல்லாவற்றுக்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது. ஒரு கட்டத்தில் அவருடன் வாழமுடியாது என்று தெரிந்ததால் பிரிந்து விடலாம் என்று சொன்னேன். அதற்கு அவர் மீடியா முன்பு அறிவிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.
ஆனால் நான் அவர் வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் பேசுவதாக சொன்னேன். அவர் இதற்காக இலங்கை வந்து என்னை சந்தித்தார். அப்போது என் அம்மா, என் தங்கை திருமணம் முடிந்ததும் திருமணம் செய்து வைப்பதாக கூட கூறினார்.
ஆனால் ஒரு கட்டத்தில் சனம் ஷெட்டி தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டத் தொடங்கினார். அதன்பிறகு தான் எங்களுக்குள் சண்டை பெரிதானது. என்னை வைத்து படமெடுக்க திட்டமிட்ட தயாரிப்பாளர்களிடம் சென்று எனக்கு வந்த வாய்ப்புகளை தடுக்க முயற்சித்தார். அவர் ரூ. 15 லட்சம் எனக்கு கொடுத்ததாக கூறியுள்ளார். அது அப்பட்டமான பொய். அவர் எனக்கு மூன்றரை லட்சம் பணம் கடனாக கொடுத்தார். பிக்பாஸ் வீட்டில் இருந்து திரும்பிய பின் அதையும் திருப்பிக் கொடுத்துவிட்டேன்.
நான் அவர் மீது எந்த வழக்கும் போட மாட்டேன். ஆனால் என் மீது தவறு இல்லை என்பதை ஆதாரங்களுடன் நிரூபிப்பேன். அவரை எனக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். எனவே அவரை அசிங்கபடுத்த விரும்பவில்லை. எனக்கும் ஒரு தங்கை இருக்கிறாள். ஒரு பெண்ணை எந்த சூழ்நிலையிலும் அசிங்கபடுத்த மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






