என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    டி.எம்.ஜெயமுருகன் இயக்கத்தில் கார்த்திக், அபிதா நடிப்பில் உருவாகி வரும் தீ இவன் படத்தின் முன்னோட்டம்.
    ரோஜா மலரே, அடடா என்ன அழகு ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், டி.எம்.ஜெயமுருகன். ‘சிந்துபாத்’ என்ற படத்தை தயாரித்தும் இருக்கிறார். அவர் ஒரு படத்துக்கு இசையமைத்திருப்பதுடன், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி டைரக்டும் செய்து இருக்கிறார். படத்துக்கு, ‘தீ இவன்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். 

    அண்ணன்-தங்கை பாசத்தின், உறவின் பின்னணியில் கொங்கு சீமை மக்களின் வாழ்வியலை சொல்கிற படமாக உருவாகியுள்ள இதில் அண்ணனாக-கதையின் நாயகனாக கார்த்திக் நடிக்கிறார். அண்ணன் மீது பாசம் கொண்ட தங்கையாக ‘சேது’ அபிதா நடிக்கிறார். என் தங்கை, பாசமலர், முள்ளும் மலரும், கிழக்கு சீமையிலே படங்களின் வரிசையில், இந்த படமும் இடம் பெறும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, பெரைரா, சரவண சக்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஒய்.என்.முரளி ஒளிப்பதிவு செய்ய, அலிமிர்சாக் பின்னணி இசையமைக்கிறார். 
    சின்மயி மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து டப்பிங் யூனியன் தேர்தலில் தலைவர் பதவிக்கு ராதாரவி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    டப்பிங் யூனியன் தேர்தல் வரும் 15ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நடிகர் ராதாரவி தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ராமராஜ்யம் அணியின் சார்பில் சின்மயி போட்டியிட்டார். இதையடுத்து கடந்த மாதம் 30ந்தேதி மனு தாக்கல் செய்வதற்காக சென்னை வடபழனியில் உள்ள டப்பிங் யூனியன் அலுவலகத்திற்கு சின்மயி வந்தார்.

    ’மீ டூ’ விவகாரத்தின் போது டப்பிங் யூனியனில் சந்தா தொகை செலுத்தாத காரணத்தால் சின்மயி நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.  எனவே டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்ட சின்மயி உள்ளே வரக்கூடாது என ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் தலையிட்டு சமாதானப்படுத்தி அவரை உள்ளே அனுப்பி வைத்தனர்.  இதனைத்தொடர்ந்து சின்மயி மனு தாக்கல் செய்தார்.

    ராதாரவி

    ஆனால், உறுப்பினராக இல்லாத பட்சத்தில் அவரது மனு ஏற்று கொள்ளப்படுமா? என்பதில் சிக்கல் ஏற்பட்டது.  இதுகுறித்து நிருபர்களிடம் கூறிய  சின்மயி, எந்த காரணமும் இல்லாமல் விளக்கமும் கொடுக்காமல் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கியது ஏன்? வாழ்நாள் உறுப்பினர் அட்டை வைத்திருப்பதால் தேர்தலில் போட்டியிட போவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

    இந்நிலையில், பாடகி சின்மயி வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் டப்பிங் யூனியன் தேர்தலில் தலைவர் பதவிக்கு ராதாரவி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
    ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் நடிகர் கமல்ஹாசன் புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்.
    நடிகர் கமல்ஹாசன் இணைய தொடர் தளத்துக்குள் அடியெடுத்து வைக்கிறார். இதை அவரே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 'ஹாஸ்டேஜஸ்’, 'ரோர் ஆப் தி லயன்’, 'நச் பலியே’ உள்ளிட்ட வெப் சீரிஸ் மற்றும் நிகழ்ச்சிகளைத் தயாரித்திருக்கும் நிறுவனம் பனிஜாய் ஏஷியா. 

    இந்நிறுவனம், டர்மரிக் மீடியா என்ற நிறுவனத்துடன் இணைந்து மாநில மொழிகளில் இணையதளங்களுக்கான நிகழ்ச்சிகளை உருவாக்க உள்ளது. இவர்களுடன்தான் நடிகர் கமல்ஹாசன் இணைந்துள்ளார். விரைவில் இந்தக் குழுவுடன் அவர் தயாரிக்க உள்ள வெப் சீரிஸ் பற்றிய அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கமல்ஹாசன்

    மேலும் டுவிட்டரில் இது பற்றிப் பகிர்ந்துள்ள கமல்ஹாசன், "எடுத்து வரும் முதல் முயற்சிகளில் ஒன்றாக, பனிஜாய் ஏஷியா மற்றும் டர்மரிக் மீடியாவுடன் இணைந்து, நிகழ்ச்சி உருவாக்கும் அற்புதமான உலகத்துக்குள் நுழைவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. கதை சொல்வதில் என்றும் நம்பிக்கையுடையவன் நான். மிகப்பெரிய ரசிகர் கூட்டத்துக்கு மிகச்சிறந்த கதைகளை எடுத்துச் செல்வதில் இது அடுத்த அடி" என்று குறிப்பிட்டுள்ளார்.
    சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் நடிகை காஜல் அகர்வாலின் மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது.
    சிங்கப்பூரில் அமைந்துள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் உலக அரசியல் தலைவர்கள், ஹாலிவுட் முதல் பாலிவுட் வரையில் பல முன்னணி நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்களின் மெழுகுச்சிலைகள் அமைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளனர். பாலிவுட் நடிகைகளில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி, ஐஸ்வரயா ராய், அனுஷ்கா சர்மா, பிரியங்கா சோப்ரா, முன்னனி நடிகர்களான ஷாருக்கான், நடிகர் மகேஷ் பாபு ஆகியோரின் சிலைகளும் அங்கு வைக்கப்பட்டுள்ளன.

    மெழுகு சிலையுடன் காஜல் அகர்வால்

    இந்நிலையில், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வாலின் மெழுகு சிலை மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வடிவமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது. நடிகை காஜல் அகர்வாலே, அவரது மெழுகு சிலையை திறந்து வைத்தார். காஜல் அகர்வாலின் மெழுகு சிலை புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்த படம் சுமார் ரூ. 350 கோடியில் உருவாகி வருகிறது. 

    மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

    ஆர்ஆர்ஆர் பட போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் 2021-ம் ஆண்டு ஜனவரி 8-ந் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    சென்னையில் உள்ள நடிகர் விஜய்யின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் பிகில். விஜய்-அட்லி 3-வது முறையாக கூட்டணி சேர்ந்த இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூலை வாரிக்குவித்ததாக திரையுலக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தரப்பில் வசூல் குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. 

    இந்நிலையில், இன்று ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் இந்நிறுவனத்துக்கு கடன் வழங்கிய பைனான்சியர் அன்புச்செழியனின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது. 

    விஜய்

    பிகில் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் விஜய் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் இன்று நடைபெற்று வந்தது. அப்போது படப்பிடிப்பு தளத்துக்கு திடீரென வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், 'பிகில்' பட சம்பள விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய்யிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மேற்கொண்டு விசாரணைக்காக விஜய்யை அங்கிருந்து அழைத்து சென்றனர். இதனால் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. 

    இந்நிலையில், சென்னை சாலிகிராமம் மற்றும் நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் கைதி பட ரீமேக்கில் சல்மான் கான் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகின்றன.
    டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்க, கார்த்தி நடித்த கைதி படம், கடந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு ரிலீசானது. ஆக்‌ஷன், அப்பா - மகள் சென்டிமென்ட் கதையுடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது. இதேபோல் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியான இப்படம் அங்கும் நல்ல வசூல் பார்த்தது.  

    கார்த்தி

    இந்நிலையில், டிரீம் வாரியர் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, இந்தியில் கைதி படத்தை தயாரிக்கிறது. இதில், சல்மான்கான் நடிக்க இருப்பதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இது குறித்து எஸ்.ஆர்.பிரபு கூறுகையில், ''இந்தி பதிப்பிலும், பெரிய ஹீரோ நடிப்பார் என்பது உண்மையே. ஆனால், எவரையும் இறுதி செய்யவில்லை,'' என்றார். 
    மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போது வருமான வரித்துறை அதிகாரிகள் நடிகர் விஜய்யிடம் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். விஜய்க்கும் விஜய் சேதுபதிக்கு இடையேயான சண்டைக்காட்சிகள் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. சுரங்கப்பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது.

    விஜய்

    இந்நிலையில், மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் வருமானவரித்துறை அதிகாரிகள் விஜய்யை அழைத்து சென்றதால் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தில் ஐடி ரெய்டு நடந்துவரும் நிலையில், விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


    சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
    தமிழ் திரைப்படங்களுக்கு சினிமா பைனான்சியராக இருந்து வருபவர் அன்புச்செழியன். மதுரையை பூர்வீகமாக கொண்ட இவருக்கு சென்னையிலும் வீடு உள்ளது. இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டிற்கு வருமான வரித்துறையினர் இன்று திடீரென சென்று சோதனை நடத்தி வருகின்றனர். 

    அன்புச்செழியன்

    அவர் கோபுரம் பிலிம்ஸ் சார்பில் தங்கமகன், ஆண்டவன் கட்டளை, மருது மற்றும் வெள்ளைக்கார துரை உள்ளிட்ட சில படங்களை தயாரித்து உள்ளார்.  சில தமிழ் திரைப்படங்களை தயாரிக்க உதவியாக பைனான்சியராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் மீது வரி ஏய்ப்பு புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து வருமான வரித்துறையினர் அவரது வீட்டிற்கு சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.
    நாடோடிகள் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள நடிகர் கோபாலகிருஷ்ணன் இன்று காலமானார்.
    சமுத்திரகனி இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான நாடோடிகள் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் கோபாலகிருஷ்ணன். இப்படத்திற்கு பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்பட ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.

    இந்நிலையில், ஈரோடு அருகே குப்பகவுண்டம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று ஓய்வெடுத்து கொண்டிருந்த அவர், திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 54 ஆகும். அவர் கடைசியாக நடித்த நாடோடிகள் 2 திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.
    தெலுங்கு படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ராஷ்மிகா, சமீபத்தில் அளித்த பேட்டியில், அவர்களுக்கு ஜோடியானது என்னுடைய அதிர்ஷ்டம் என்று கூறியுள்ளார்.
    தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் ராஷ்மிகா. கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்துள்ளார். சூர்யாவுடன் ஜோடி சேர இருக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    “சினிமாவுக்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே பெரிய கதாநாயகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம். சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து இருக்க வேண்டுமானால் கடினமாக உழைக்க வேண்டும். நமது திறமையை பார்த்துத்தான் இயக்குனர்கள் வாய்ப்பு கொடுப்பார்கள். எனக்கு கோபம் அதிகம் வரும். அதை வெளிப்படுத்தமாட்டேன்.

    ராஷ்மிகா

    இவ்வளவு சிறிய வயதிலேயே பெரிய நட்சத்திர அந்தஸ்து கிடைத்து இருப்பதை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. நான் அதிக சம்பளம் கேட்பதாக சொல்கிறார்கள். நடிப்பும் ஒரு வேலைதான். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு தடவை சம்பளம் வாங்கினால் அடுத்து சம்பள உயர்வை எதிர்பார்ப்பார்கள்.

    அதே மாதிரிதான் நடிகர்-நடிகைகளும் மாதம் மாதம் சம்பளம் வாங்கும் வேலையை நாங்கள் செய்யவில்லை. படம் வெற்றி பெறுவதை வைத்துதான் எங்கள் எதிர்காலம் அமையும். வெற்றி பெற்றால்தான் என்னை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் முன்வருவார்கள். தகுதிக்கு ஏற்ற மாதிரி சம்பளம் கேட்பது பேராசை இல்லை. சினிமாவுக்கு ஏன் வந்தோம் என்று நினைத்தது இல்லை.”

    இவ்வாறு ராஷ்மிகா கூறினார்.
    அமலாபால் நடிப்பில் எழுத்தாளர் அபிலாஷ் பிள்ளை இயக்கத்தில் உருவாகி வரும் `கடாவர்' திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியான அமலா பால் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ராட்சசன், ஆடை படத்திற்கு பிறகு அவரது நடிப்பில் அதோ அந்த பறவை போல திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. 

    இப்படத்தை அடுத்து `கடாவர்' என்ற படத்தில் அமலாபால் நடித்து வருகிறார். இதில் அமலா பால், தடய நோயியல் நிபுணராக நடிக்கிறார். அதுல்யா, ஹரிஷ் உத்தமன், ரமேஷ் கண்ணா, வினோத் இன்பராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    அமலாபால்

    இயக்குனர் அனூப் பணிக்கர் மற்றும் எழுத்தாளர் அபிலாஷ் பிள்ளை திரைக்கதையில் குறிப்பிடத்தக்க வேலைகளை செய்துள்ளார்கள். அமலாபால் இப்படத்தை தயாரித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் முடிந்து தற்போது அடுத்த கட்டமாக டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ×