என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தெலுங்கு படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ராஷ்மிகா, சமீபத்தில் அளித்த பேட்டியில், அவர்களுக்கு ஜோடியானது என்னுடைய அதிர்ஷ்டம் என்று கூறியுள்ளார்.
    தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் ராஷ்மிகா. கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்துள்ளார். சூர்யாவுடன் ஜோடி சேர இருக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    “சினிமாவுக்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே பெரிய கதாநாயகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம். சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து இருக்க வேண்டுமானால் கடினமாக உழைக்க வேண்டும். நமது திறமையை பார்த்துத்தான் இயக்குனர்கள் வாய்ப்பு கொடுப்பார்கள். எனக்கு கோபம் அதிகம் வரும். அதை வெளிப்படுத்தமாட்டேன்.

    ராஷ்மிகா

    இவ்வளவு சிறிய வயதிலேயே பெரிய நட்சத்திர அந்தஸ்து கிடைத்து இருப்பதை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. நான் அதிக சம்பளம் கேட்பதாக சொல்கிறார்கள். நடிப்பும் ஒரு வேலைதான். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு தடவை சம்பளம் வாங்கினால் அடுத்து சம்பள உயர்வை எதிர்பார்ப்பார்கள்.

    அதே மாதிரிதான் நடிகர்-நடிகைகளும் மாதம் மாதம் சம்பளம் வாங்கும் வேலையை நாங்கள் செய்யவில்லை. படம் வெற்றி பெறுவதை வைத்துதான் எங்கள் எதிர்காலம் அமையும். வெற்றி பெற்றால்தான் என்னை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் முன்வருவார்கள். தகுதிக்கு ஏற்ற மாதிரி சம்பளம் கேட்பது பேராசை இல்லை. சினிமாவுக்கு ஏன் வந்தோம் என்று நினைத்தது இல்லை.”

    இவ்வாறு ராஷ்மிகா கூறினார்.
    அமலாபால் நடிப்பில் எழுத்தாளர் அபிலாஷ் பிள்ளை இயக்கத்தில் உருவாகி வரும் `கடாவர்' திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியான அமலா பால் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ராட்சசன், ஆடை படத்திற்கு பிறகு அவரது நடிப்பில் அதோ அந்த பறவை போல திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. 

    இப்படத்தை அடுத்து `கடாவர்' என்ற படத்தில் அமலாபால் நடித்து வருகிறார். இதில் அமலா பால், தடய நோயியல் நிபுணராக நடிக்கிறார். அதுல்யா, ஹரிஷ் உத்தமன், ரமேஷ் கண்ணா, வினோத் இன்பராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    அமலாபால்

    இயக்குனர் அனூப் பணிக்கர் மற்றும் எழுத்தாளர் அபிலாஷ் பிள்ளை திரைக்கதையில் குறிப்பிடத்தக்க வேலைகளை செய்துள்ளார்கள். அமலாபால் இப்படத்தை தயாரித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் முடிந்து தற்போது அடுத்த கட்டமாக டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான லாஸ்லியாவிற்கு ஒரே நேரத்தில் இரண்டு அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.
    பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா. இந்நிகழ்ச்சியில் அதிக ரசிகர் பட்டாளத்தை சேர்த்த லாஸ்லியாவுக்கும் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

    இந்த நிலையில் 2 படங்களில் கதாநாயகியாக நடிக்க லாஸ்லியாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஒரு படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்துக்கு பிரண்ட்ஷிப் என்று பெயர் வைத்துள்ளனர். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

    லாஸ்லியா - ஆரி - சிருஷ்டி டாங்கே

    இதுபோல் நெடுஞ்சாலை படத்தில் நடித்து பிரபலமான ஆரி கதாநாயகனாக நடிக்கும் படத்தில் நடிக்கவும் லாஸ்லியாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தில் சிருஷ்டி டாங்கேவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். படத்தின் தொடக்க விழா பூஜை சென்னையில் நடந்தது. மேலும் சில படங்களில் நடிக்கவும் கதை கேட்டு வருகிறார்.
    தமிழில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரகுமான், நாகூர் ஆண்டவர் தர்காவில் சிறப்பு தொழுகை நடத்தியுள்ளார்.
    நாகையை அடுத்த நாகூரில் உலக பிரசித்திபெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த தர்காவில் நாகூர் ஆண்டவர் என போற்றி அழைக்கப்படும் சாகுல்ஹமீது காதிர் நாயகம் மறைந்த நினைவு நாளையொட்டி கந்தூரி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

    ஏ.ஆர்.ரகுமான்

    இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 463-வது கந்தூரி மகோற்சவ விழாவையொட்டி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சிறப்புத் தொழுகை நடத்தியுள்ளார். இவருடன் இவரது மகனும் விழாவில் கலந்துக் கொண்டார். இவர்கள் கலந்துக் கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
    என்னுடன் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு, தர்ஷன் திருமணம் செய்ய மறுப்பதாக கூறிய சனம் ஷெட்டி மீண்டும் அவர் மீது புகார் கூறியுள்ளார்.
    நடிகர் தர்ஷனுடன் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்தது என்றும், இப்போது என்னை அவர் திருமணம் செய்ய மறுக்கிறார் என்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை சனம் ஷெட்டி புகார் அளித்தார். இதற்கு பதில் அளித்த தர்ஷன் முன்னாள் காதலருடன் சனம் ஷெட்டி இருந்ததை பார்த்த பிறகு அவர் வேண்டாம் என்று விலகி விட்டேன் என்றார்.

    இதற்கு பதில் அளித்த சனம் ஷெட்டி கூறியிருப்பதாவது:-

    “தர்ஷனும் நானும் இரண்டரை வருடம் கணவன் மனைவி போலவே வாழ்ந்தோம். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் மாறிவிட்டார். என்னை சந்திப்பதையும் தவிர்த்தார். முன்னாள் காதலருடன் நான் இருந்ததாக கூறி உள்ளார். அதில் உண்மை இல்லை. எனது நடத்தையை மோசமாக சித்தரிக்கிறார். என்னைப்போல் இன்னொரு பெண் பாதிக்க கூடாது என்பதற்காகவே புகார் அளித்தேன். இதனால் எனது சினிமா வாழ்க்கை போனாலும் பரவாயில்லை. 8 மாதமாக வாய் மூடி கெஞ்சினேன். தர்ஷனுக்காக ரூ.15 லட்சம் வரை செலவு செய்து இருக்கிறேன்.

    சனம் ஷெட்டி - தர்ஷன்

    நிச்சயதார்த்தத்துக்கு ரூ.5 லட்சம் செலவானது. ஐபோன் கேட்டார். வாங்கி கொடுத்தேன். அவரை வைத்து படம் எடுக்கக்கூடாது என்று யாரையும் நான் தடுக்கவில்லை. நீ வழக்கு போடு எனக்கு பின்னால் இருப்பவர்கள் யார் என்று காட்டுகிறேன் என்றார். எனக்கு துரோகம் செய்ததால் கோர்ட்டுக்கு சென்று இருக்கிறேன். எனக்கு நீதி வேண்டும். எனது எதிர்காலத்தை அழித்து குடும்பத்தின் நிம்மதியை கெடுத்த அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. எனக்கு நீதி வேண்டும்.

    இவ்வாறு சனம் ஷெட்டி கூறினார்.
    பல படங்களில் காமெடி வேடத்தில் பிசியாக நடித்து வரும் யோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    பிரபல காமெடி நடிகர் யோகிபாபு மீது, இந்து மக்கள் முன்னணி என்ற அமைப்பு சார்பில் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    தமிழ் சினிமாத்துறையில் சமீபகாலமாக இந்து கடவுள்களையும், இந்து மத உணர்வுகளையும் கொச்சைப்படுத்தும் விதமாக காட்சிகள் உள்ளன.

    யோகிபாபு

    காமெடி நடிகர் யோகிபாபு நடித்துள்ள ஒரு படத்தில், அவர் முருகன் வேடத்தில் இருப்பது போன்ற காட்சி போஸ்டராக வெளியாகி உள்ளது. அதில் முருகனின் வாகனமான மயிலுக்குப்பதில், கிளியை போட்டு கிண்டல் செய்துள்ளனர். இது முருக பக்தர்களின் மனதை புண்பட வைத்துள்ளது. இதற்கு காரணமான நடிகர் யோகிபாபு மீதும், அந்த படத்தின் இயக்குனர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகிபாபு, மஞ்சு பார்கவி என்ற பெண்ணை இன்று திருமணம் செய்துள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வருகிறார் யோகிபாபு. இவருக்கு எப்போது திருமணம் என்று பலரும் கேட்டு வந்தார்கள். இவர் திருமணம் பற்றிய செய்திகள் அடிக்கடி வெளியானது. ஆனால், அதை அனைத்தையும் யோகிபாபு மறுத்தார். மேலும் திருமணத் தகவலை நானே அறிவிப்பேன் என்று கூறினார்.

    மஞ்சு பார்கவி - யோகி பாபு

    இந்நிலையில் நடிகர் யோகி பாபு, மஞ்சு பார்கவி என்ற பெண்ணை இன்று திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமணம் யோகி பாபுவின் குலதெய்வ கோவிலில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. வரும் மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    தமிழ் படங்களில் பிசியாக நடித்து வரும் தனுஷ், அடுத்ததாக இந்தி உருவாகும் அத்ரங்கி ரே என்ற படத்துக்கு தயாராகி வருகிறார்.
    தனுஷ் ஏற்கனவே இந்தியில் ராஞ்சனா, அமிதாப்பச்சனுடன் ஷமிதாப் படங்களில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் புதிய இந்தி படமொன்றில் நடிக்கிறார். இந்த படத்தை ஆனந்த் எல்.ராய் டைரக்டு செய்கிறார். தனுஷ் ஜோடியாக பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான் மகள் சாரா அலிகான் நடிக்கிறார்.

    அக்‌ஷய்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். படத்துக்கு ‘அத்ரங்கி ரே’ என்று பெயரிட்டுள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். தமிழிலும் இந்த படத்தை வெளியிடுகிறார்கள். படம் குறித்து அக்‌ஷய்குமார் கூறும்போது, “கதையை கேட்ட 10-வது நிமிடத்திலேயே நடிக்க ஒப்புதல் சொல்லி விட்டேன். எனக்கு சவாலான கதாபாத்திரம். வாழ்க்கை முழுவதும் இந்த கதாபாத்திரத்தை நினைவில் வைத்திருப்பேன்” என்றார்.

    தனுஷ்

    படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் நடிக்க தனுஷ் தயாராகி வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் முடிந்துள்ளது. பரியேறும் பெருமாள் படத்தை எடுத்து பிரபலமான மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்திலும் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி பகுதியில் நடந்து வருகிறது. மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பற்றிய கதையாக தயாராகிறது. கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படத்துக்கும் ஒப்பந்தமாகி உள்ளார்.
    5ம் மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு, கல்வி அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார் நடிகர் சூர்யா.
    தமிழகத்தில் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பொதுத்தேர்வு நடத்தப்பட்டால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்று குற்றம் சாட்டினார்கள். இந்த நிலையில் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.



    இதற்கு நடிகர் சூர்யா, ‘படிக்கும் வயதில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் கல்வியோட்டத்தில் இணைப்பது எத்தனை கடினமானது என்று அகரம் தன் களப்பணிகளில் உணர்ந்திருக்கிறது. மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்கு பொதுத்தேர்வு என்றும் தீர்வாகாது. 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கல்வி அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றிகள்’ என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
    வட இந்தியாவில் தமிழர்களை நன்றாக மதிக்கிறார்கள் என்று நடிகர் ஜீவா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
    ஜீவா நடிப்பில் சீறு படம் வரும் வாரம் வெளியாக இருக்கிறது. ரத்ன சிவா இயக்கியுள்ள இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இது தவிர ஜீவா நடிப்பில் களத்தில் சந்திப்போம், ஜிப்சி, 83 ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. ஜீவா அளித்த பேட்டி:

    சீறு படம் பற்றி?
    இது முழுக்க முழுக்க ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் தரும் படம். படத்தில் 6 சண்டைக்காட்சிகள் இருக்கின்றன. மயிலாடுதுறையில் கொக்கரக்கோ டிவி என்னும் கேபிள் சேனல் நடத்தும் இளைஞனாக வருகிறேன். அதில் உள்ளூரில் இருக்கும் மக்கள் பிரச்சினைகள் பற்றியும் பேசுவேன். அதனால் உள்ளூர் அரசியல்வாதிகளுடன் மோதல் ஏற்படுகிறது. அதன் பின் இன்னொரு பிரச்சினைக்காக நகரத்துக்கும் செல்கிறேன். அண்ணன் தங்கை, நட்பு என்று செண்டிமெண்ட் கலந்த மசாலா படம் தான். இரண்டாம் பாதியில் பெண் கல்வி பற்றி ஒரு முக்கியமான பிரச்சினையை தொட்டுள்ளோம். 

    ஜீவா

    15 ஆண்டுகளாகியும் அதே இளமையுடன் இருப்பது எப்படி?
    இளமைக்கும் உடல் கட்டுக்கோப்பாக இருப்பதற்கும் என் குடும்ப வழிமுறை காரணமாக இருக்கலாம். கடவுள் தான் காரணம். தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்கிறேன். 

    83 பட நிகழ்ச்சியில் கலகலப்பாக ஆடிய அனுபவம்?
    எல்லாம் ரண்வீர் சிங்கையே சேரும். சினிமா என்பதே பொழுதுபோக்கு தான் என்னும்போது சினிமா நிகழ்ச்சியும் பொழுதுபோக்காக இருக்கட்டுமே என்று கலக்கிவிட்டார். 83 படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். வட இந்தியாவில் தமிழர்களை நன்றாக மதிக்கிறார்கள். சினிமாவுக்கு இருந்த மொழி எல்லைகள் நீங்கிவிட்டது. நம்முடைய நட்சத்திரங்களை வடக்கில் கொண்டாடுகிறார்கள். 

    கிரிக்கெட் விளையாடிய அனுபவம்?
    நான் பெரிய கிரிக்கெட் பிளேயர் இல்லை. ஆனால் சிசிஎல், தெருவில் ஆடிய அனுபவம் தான். ஸ்ரீகாந்த் வேடத்துக்காக அணுகினார்கள். சம்மதித்த பிறகு வொர்க் அவுட்டில் என் எடையை சுமார் 15 கிலோ குறைத்தார்கள். அப்படியே உடல் பிட்டாகிவிட்டது. எனக்கு இந்தி தெரியாததால் பயந்தேன். லைவ் டப்பிங் வேறு. இந்தி அதிகம் தெரியாத ஸ்ரீகாந்த் வேடம் என்பதால் இயல்பாக அமைந்துவிட்டது. 
    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால், அடுத்ததாக பாலிவுட்டில் வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அமலா பால். மைனா படத்தின் மூலம் பிரபலமான இவர், தற்போது அதோ அந்த பறவை போல படத்தில் நடித்துள்ளார். கே.ஆர்.வினோத் இயக்கி இருக்கும் இப்படத்தின் பணிகள் முடிந்து பிப்ரவரி 14ம் தேதி வெளியாக இருக்கிறது.

    அமலாபால்

    இந்நிலையில் அமலாபால் அடுத்ததாக பாலிவுட் வெப் தொடர் ஒன்றில் நடிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். பாலிவுட்டின் மூத்த இயக்குனர் மகேஷ் பட் இத்தொடரை இயக்கவுள்ளார். அமலா பாலுடன் இணைத்து தாஹிர் ராஜ் பசின், அம்ரிதா பூரி ஆகியோர் நடிக்கின்றனர். 70-களில் பாலிவுட்டில் நடக்கும் காதல் கதையை மையமாக வைத்து இத்தொடர் உருவாகவுள்ளது.
    தமிழில் இசையமைப்பாளர், நடிகர், பாடகர் என்று வலம் வந்துக் கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ், தற்போது ஹாலிவுட்டில் களமிறங்கி இருக்கிறார்.
    தமிழ் திரையுலகில் கிழக்குச் சீமையிலே, சீவலப்பேரி பாண்டி போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து தனக்கென்று ஓர் இடத்தை பிடித்து வைத்திருக்கும் நடிகர் நெப்போலியன் முதல்முறையாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் சிறந்த இசையமைப்பாளருமான ஜிவி.பிரகாஷுடன் இணைந்து ஹாலிவுட்டில் ஒரு ஆங்கில படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்துக்கு ட்ராப் சிட்டி (Trap City) என பெயர் சூட்டி உள்ளார்கள். சர்வதேச தரத்தில் இருக்கும் இப்படத்தை கைபா பிலிம்ஸ் (Kyyba Films), நாசிக் ராவ் மீடியா (Nasik Rav Media) மற்றும் கிங்டம் ஓவர் ஏவரிதிங் (Kingdom Over Everything - KOE) என மூன்று சிறந்த நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    இப்படத்தில், ஜிவி பிரகாஷ் மற்றும் நெப்போலியன் உடன் சேர்ந்து டிராபிக் தண்டர் (Tropic Thunder), பர்சி ஜாக்சன் (Percy Jackson) மற்றும் பிக் மாமா ஹவுஸ் (Big Momma House) போன்ற பிரபலமான ஆங்கில படங்களில் நடித்துள்ள பிராண்டன் டி ஜாக்சனும் (Brandon T Jackson) நடித்துள்ளார்கள். ரிக்கி பற்செல் (Ricky Burchell) இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். 

    படக்குழுவினருடன் ஜி.வி.பிரகாஷ்

    ஏழ்மையில் வாடும் ஒரு ராப் (Rap) பாடகனின் கதைதான் ட்ராப் சிட்டி. இந்த பாடகன், வறுமையின் காரணமாக ஒரு போதைப்பொருள் கும்பலின் தலைவனிடம் வேலைக்கு சேர்கிறான். வேலைக்கு சேர்ந்தபின், அவன் எழுதிய ஒரு பாடல் உலகெங்கும் பிரபலமாகிறது. ஆனால், துரதிஸ்டவசமாக, அவன் பாடல் பிரபலமாகும் போது அவன் கைது செய்யப்படுகிறான். அவன் குற்றத்தின் நிமித்தம் அவன் புகழும் பரவுகிறது. இப்படி இருக்க, அவனை கொல்ல ஒரு முயற்சி நடக்கிறது. அதன்பின் அந்த பாடகன் என்ன செய்கிறான் என்பதுதான் கதை.

    இந்த சுவாரசியமான கதை அமெரிக்காவில் உள்ள நேஷவில் (Nashville) என்னுமிடத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருப்பதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளார்கள். ட்ராப் சிட்டி இந்த ஆண்டு கோடை விடுமுறை காலத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×