என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பளு தூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் உருவாக உள்ளது.
    விளையாட்டு நட்சத்திரங்கள் வாழ்க்கை குறித்து சினிமா எடுப்பது வழக்கமாக உள்ளது. அதன்படி மில்கா சிங், மேரி கோம், தோனி குறித்து வெளியான படங்கள் வசூலில் சாதனை படைத்தன. சச்சின் படமும் வெளியானது. தற்போது கபில் தேவ் (கிரிக்கெட்), பேட்மிண்டன் வீராங்கனைகள் சாய்னா நேவல், பிவி சிந்து, கிரிக்கெட் வீராங்கனைகள் மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோரது படங்களும் தயாராகி வருகின்றன.

    கர்ணம் மல்லேஸ்வரி

    அந்த வரிசையில், ஆந்திராவை சேர்ந்த பிரபல பளு தூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கையும் படமாகிறது. இந்த படத்தை சஞ்சனா ரெட்டி இயக்குகிறார். இவர் ராஜ் தருண் நடித்த ராஜூ காடு என்ற தெலுங்கு படத்தை இயக்கி உள்ளார். மல்லேஸ்வரியாக நடிக்கும் நடிகை தேர்வு நடக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. கர்ணம் மல்லேஸ்வரி, ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்பது குறிப்பிடத்தக்கது. 
    அன்பு இயக்கத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
    சிபிராஜ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘வால்டர்’. அன்பு இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக ஷ்ரின் கான்ஞ்வாலா நடித்துள்ளார். சமுத்திரகனி, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  தர்மா பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ராசாமதி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். 

    வால்டர் பட போஸ்டர்

    வித்தியாசமான திரில்லர் கதையம்சம் கொண்ட இப்பத்தில் சிபிராஜ் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் மார்ச் 6-ந் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் ஒரு வாரம் தாமதமாக, அதாவது மார்ச் 13-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்து வரும் சிம்பு அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’,  ‘துப்பறிவாளன்’,  ‘சைக்கோ’ உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கிய மிஷ்கின் அடுத்ததாக துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார். லண்டனில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், விஷாலுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மிஷ்கின் படத்திலிருந்து விலகினார். மீதிப்படத்தை விஷால் இயக்க உள்ளார்.

    சிம்பு, மிஷ்கின்

    இந்நிலையில் மிஷ்கின் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மிஷ்கினின் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வரும் சிம்பு, இப்படத்தை நிறைவு செய்தபின் மிஷ்கின் இயக்கும் படத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மனோஜ் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வெல்வெட் நகரம்’ படத்தின் முன்னோட்டம்.
    'போடா போடி' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. இவரது நடிப்பில் தற்போது ‘வெல்வெட் நகரம்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. அறிமுக இயக்குனர் மனோஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகியை மையப்படுத்திய சைக்லாஜிக்கல் ஆக்‌ஷன் திரில்லர் படமாக இதை உருவாக்கி இருக்கிறார்கள். 

    சில வருடங்களுக்கு முன் கொடைக்கானலில் நடந்த ஒரு நிஜ சம்பத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வரலட்சுமி சரத்குமார் ஜெர்னலிஸ்டாக நடிக்கிறார். மேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

    பகத்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா எடிட்டிங் செய்க்கிறார். ‘கோலி சோடா 2’ புகழ் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். இப்படம் மார்ச் 6ம் தேதி வெளியாக இருக்கிறது.
    தமிழில் பல படங்களில் நடித்த கிருஷ்ணா, தற்போது பிரபல இயக்குனருடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார்.
    நடிகர் கிருஷ்ணா மற்றும் இயக்குனர் சத்யசிவா இணைந்து கழுகு, கழுகு 2 என தொடர்ந்து இரு வெற்றிபடங்களை தந்துள்ளனர். தற்போது மூன்றாம் முறையாக இக்கூட்டணி ஒரு புதிய படத்திற்காக இணைகிறது. இப்படத்திற்கு ‘பெல் பாட்டம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதே பெயரில் கன்னடத்தில் வெளியாகி 20 கோடி ரூபாயை வசூலித்து வெற்றிபெற்ற படத்தின் தமிழ்ப்பதிப்பாக இப்படம் உருவாகிறது. இதன் இந்தி பதிப்பில் அக்‌ஷய் குமார் நாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ‘பெல்பாட்டம்’ முந்தைய கால ரெட்ரோ பின்களத்தில் நடக்கும் நடப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. போலீசாக ஆசைப்பட்டு, சூழ்நிலைகளின் இடர்பாட்டால் முடியாமல்போய், தனியார் துப்பறிவாளனாக, குற்றங்களை கண்டுபிடிப்பவராக, திவாகர் எனும் பாத்திரத்தில் கிருஷ்ணா நடிக்கிறார்.

    கிருஷ்ணா - சத்யசிவா - மகிமா

    கைவிடப்பட்ட குற்ற வழக்கு ஒன்றை விசாரிக்க அந்த வழக்கு பல எதிர்ப்பாராத சிக்கல்களையும், திருப்பங்களையும் கொண்டு வருகிறது. இவை அத்தனையையும் மீறி அந்த வழக்கின் மர்மத்தை ஆராய்ந்து கண்டுபிடிப்பது தான் இப்படத்தின் கதை. 

    இப்படத்தில் கிருஷ்ணாவிற்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்கிறார். காமெடி நடிகர் சரவணன் உட்பட தமிழ் சினிமாவின் திறமை மிகு நடிகர்கள் பலரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

    சாம் சிஎஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். என்.எச். ஹரி சில்வர் ஸ்கிரின்ஸ் நிறுவனம் சார்பில் எச்.சார்லஸ் இம்மானுவேல் இப்படத்தை தயாரிக்கிறார். 

    ஆபாச படங்களில் நடிப்பதாக அறிவித்த ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் மகள் மைக்கேலா திடீரென்று கைது செய்யப்பட்டுள்ளார்.
    உலகப் புகழ்பெற்ற சினிமா இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க். இவர், ஜூராசிக் பார்க், ஹுக், கேட்ச் மீ இப் யூ கேன், வார் ஆப் த வேர்ல்ட்ஸ், அட்வெஞ்சர்ஸ் ஆப் டின் டின் உட்பட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

    ஆஸ்கர் விருது பெற்றுள்ள ஸ்பீல்பெர்க், ஆறு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இதில் ஒருவர் 23 வயது மைக்கேலா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன், ஆபாச படங்களில் நடித்து, அதை தயாரிக்கப் போவதாக தெரிவித்து இருந்தார். இது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    ஸ்பீல்பெர்க் மகள் மைக்கேலா

    ‘தினமும் வேலை செய்து சோர்வடைந்ததுதான் மிச்சம். திருப்தி கிடைக்கவில்லை. எனவே இதுபோன்ற வீடியோ தயாரிக்க விரும்புகிறேன். இதன் மூலம் மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்திருந்தார். இதுவே தனக்கு விருப்பமான துறை என்றும், இதற்கு தனது தந்தை ஒப்புக்கொண்டதாகவும் கூறியிருந்தார். சுகர் ஸ்டார் என்று தனக்கு திரை பெயர் வைத்திருக்கும் இவரது அதிர்ச்சி முடிவு பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே மைக்கேலா, குடும்ப வன்முறை காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். மைக்கேலா தனது வருங்கால கணவர் ஜக் பன்கோவ் (47) உடன் வசித்து வருகிறார். இருவரும் சேர்ந்து இருப்பது போல அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவார். மைக்கேலா கைது செய்யப்பட்டது பற்றி ஜக் பன்கோவ் கூறும்போது, அது உண்மைதான். ஆனால், தவறான புரிதலால் இந்த கைது சம்பவம் நடந்துவிட்டது. யாருக்கும் பாதிப்பில்லை என்று கூறியுள்ளார். அதோடு உண்மையில் என்ன நடந்தது என்பதை தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.
    காமெடி நடிகர் லோகேஷ் பாப், கை, கால் செயலிழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தியின் உண்மை நிலையை பார்ப்போம்.
    சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் லோகேஷ் பாப். தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிய இவர், காமெடி ஷோக்களிலும் பங்கேற்று வந்தார். 

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தில் நடித்திருந்தார். அவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு சில படங்களில் நடித்து வரும் லோகேஷுக்கு தற்போது பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    லோகேஷ் பாப்

    மேலும் லோகேஷின் இடது கை மற்றும் இடது கால் செயலிழந்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தற்போது மருத்துவமனையில் இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பண உதவி தேவை என்றும் கூறப்பட்டது.

    இதுகுறித்து விசாரித்த போது, லோகேஷுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது உண்மைதான். ஆனால், இடது கை மற்றும் இடது கால் செயலிழந்ததாக வந்த செய்தியில் உண்மை இல்லை. தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் அவரது நண்பர் தெரிவித்துள்ளார். மேலும் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவர் கூறினார்.
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் இம்முறை 3 அணிகள் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. முந்தைய 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் விஷால் தலைவரானார். அதிருப்தி கோஷ்டியினர் சங்க அலுவலகத்தை பூட்டி போராட்டம் நடத்தியதால் அரசு தனி அதிகாரியையும், பாரதிராஜா தலைமையில் 8 பேர் கொண்ட ஆலோசனை குழுவையும் நியமித்தது.

    வருகிற ஜூன் 30-ந் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தலை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் வருகிற 7-ந் தேதி பொறுப்பு ஏற்கிறார். மே மாதம் இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது.

    முரளி

    டைரக்டர் பாரதிராஜாவை தலைவர் பதவிக்கு நிறுத்த முயற்சி நடக்கிறது எனவும் அவர் மறுத்தால் டி.ஜி.தியாகராஜன் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது. விஷால் அணி மீண்டும் களம் இறங்குகிறது. 3-வது அணி சார்பில் ராம நாராயணன் மகன் முரளி என்கிற ராமசாமி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

    செயலாளர் பதவிக்கு போட்டியிட டி.சிவா, ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், கதிரேசன், ஞானவேல் ராஜா, தேனப்பன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன. தலைவரை போட்டியின்றி தேர்வு செய்யவும் முயற்சிகள் நடக்கிறது.

    பாகுபலி படம் மூலம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த நடிகர் பிரபாஸ், அவர் இயக்கத்தில் நடிப்பது சந்தோஷம் என்று கூறியிருக்கிறார்.
    'பாகுபலி' திரைப்படங்கள் மூலம் தேசிய அளவு கவனம் பெற்றவர் பிரபாஸ். இப்படத்தை தொடர்ந்து 'சாஹோ'வில் நடித்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான 'சாஹோ' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. 

    தற்போது பிரபாஸ், 'சாஹோ' படத்தை தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இதன் இயக்குநர் கே கே ராதா கிருஷ்ணா. இந்தப் படம் இப்போதைக்கு 'பிரபாஸ் 20' என்று அழைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    பிரபாஸ்

    வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் புதிய படம் உருவாக உள்ளது. இயக்குனர் நாக் அஷ்வின் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'மகாநடி' என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இயக்கத்தில் நடிக்க விரும்பினேன். அது நடந்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது என்று நடிகர் பிரபாஸ் கூறியிருக்கிறார்.
    தமிழ், இந்தி மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமான ராதிகா ஆப்தே, எதிர்பார்த்தது எதுவுமே நடக்கல என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
    தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றி செல்வன் ஆகிய படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே, கபாலி படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்தார். ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். திருமணமான பிறகும் துணிச்சலாக கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். 

    ராதிகா ஆப்தே

    பரபரப்பாக கிளம்பிய 'மீ டூ' பாலியல் புகார்கள் ஒன்றுமே இல்லாமல் போனதில் ராதிகா ஆப்தே விரக்தி அடைந்துள்ளார். சமீபத்தில் மும்பையில் நடந்த விழா ஒன்றில், ''மீ டூ இயக்கம் கிளம்பியதும், சந்தோஷப்பட்டேன். நிறைய பேர்களோட முகமூடி கிழியும். பலருக்கும் தண்டனை கிடைக்கும்னு எல்லாம் எதிர்பார்த்தேன். ஆனா, அப்படி எதுவுமே நடக்கல. பாலிவுட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. 'மீ டூ' இப்படி நீர்த்துப் போனது ஏமாற்றமளிக்குது’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ கதை முதலில் வேற நடிகருக்கு எழுதிய கதை என்று தகவல் வெளியாகியுள்ளது.
    அஜித்தை வைத்து வரிசையாக படம் இயக்கி வந்த சிறுத்தை சிவா ரஜினியின் 168ஆவது படத்தை இயக்கி வருகிறார். படத்திற்கு அண்ணாத்த என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியிலும், சுற்றுப்புறப் பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. 

    அங்கு படப்பிடிப்பு முடிந்த உடன், அடுத்தக்கட்டமாக கொல்கத்தா செல்ல உள்ளனர். மார்ச் மாதம் கொல்கத்தா, புனேவில் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் 'அண்ணாத்த' படம் குறித்து இணையத்தில் புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. 

    அஜித் - ரஜினி

    ‘விவேகம்’ படத்துக்குப் பிறகு 'அண்ணாத்த' படத்தின் கதையும், 'விஸ்வாசம்' படத்தின் கதையும் முதலில் அஜித்துக்குச் சொல்லப்பட்டது. ஆனால், அஜித் ‘விஸ்வாசம்’ படத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டார் என்று அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். 
    நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய தயாராக இருப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் இஸ்லாமிய மதகுருமார்கள் நடிகர் ரஜினிகாந்தை இன்று சந்தித்துப் பேசினார்கள்.  

    இந்நிலையில் நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய தயாராக இருப்பதாக ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    ரஜினிகாந்த் டிவிட்

    இதுகுறித்து தனது டுவிட்டரில் மேலும் கருத்து தெரிவித்த ரஜினி, “இன்று தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை நிர்வாகிகளை சந்தித்து, அவர்கள் தரப்பு ஆலோசனைகளைச் கேட்டறிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எப்போதும் அன்பும், ஒற்றுமையும் அமைதியுமே ஒரு நாட்டின் பிரதான நோக்காமாக இருக்க வேண்டும் என்ற அவர்களது கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
    ×