என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான பிரியா பவானி சங்கர், தன்னை பற்றிய காதல் வதந்தி குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே சூர்யாவும், நடிகை பிரியா பவானி சங்கரும் மான்ஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தனர். தற்போது பொம்மை படத்திலும் இணைந்து நடித்து வருகிறார்கள். இவர்கள் இருவரையும் இணைத்து ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. படப்பிடிப்பில் எஸ்.ஜே.சூர்யா தனது காதலை தெரிவித்ததாகவும், அதை ஏற்க பிரியா மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியானது. 

    இந்த காதல் கிசுகிசுவை எஸ்.ஜே.சூர்யா மறுத்தார். பிரியா பவானி சங்கர் நல்ல தோழி என்று கூறினார். எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைத்து வெளியான தகவலுக்கு இதுவரை பதில் அளிக்காமல் இருந்த பிரியா பவானி சங்கர் தற்போது முதன் முதலாக விளக்கம் அளித்துள்ளார். 

    எஸ்.ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர்

    அவர் கூறியதாவது:- “எஸ்.ஜே சூர்யாவையும், என்னையும் பற்றி வெளியான வதந்திக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால் எஸ்.ஜே சூர்யாதான் பதற்றமாகி பதில் சொல்லி விட்டார். அதனாலேயே இந்த விஷயத்தை பெரிதாக பேசினர். நிஜத்தில் எங்களுக்குள் அப்படி எதுவும் கிடையாது.

    கிசுகிசுக்களை பார்த்து எனது நண்பர்கள் கேலி செய்வார்கள். அவர்களை எப்படி எதிர்கொள்வது என்ற கவலை மட்டுமே எனக்குள் இருந்தது”. இவ்வாறு பிரியா பவானி சங்கர் கூறினார்.
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளியவரோடு கரம் கோர்க்கவில்லை என நாசரின் மனைவி கமீலா நாசர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் இரண்டிலும் நடிகர் விஷால் முக்கிய பொறுப்பில் இருந்தார். தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் பதவி வகித்தார். ஆனால், இரண்டுமே தற்போது தனி அதிகாரி மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இரண்டு சங்கங்களுக்கும் முறைப்படி தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    நடிகர் சங்கத்தில் மீண்டும் நாசர் தலைமையிலான அணி போட்டியிடுமா, தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் போட்டியிடுவாரா என்ற கேள்விகள் எழுந்தன. தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் அணி சார்பாக, நாசரின் மனைவி கமீலா நாசர் போட்டியிடுவார் என்று தகவல் பரவியது. ஆனால், அவருடைய டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

    ’இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதை நன்கு அறிவேன். அதற்காக கவலையும் அக்கறையும் கொள்கிறேன். இந்நிலைக்கு தள்ளியவரோடு கரம் கோர்க்கவில்லை. எந்த அணியோடும் இப்போது வரை இல்லை. சங்கத்தின் மேன்மைக்காக உழைப்பவரோடு மட்டுமே என் கை இணையும் என்று பதிவிட்டுள்ளார்.

    கமீலா நாசரின் டுவிட்டர் பதிவு

    அவருடைய பதிவின் மூலம் விஷாலின் செயல்பாடு அவருக்குப் பிடிக்கவில்லை. எனவே விஷாலுக்கும், நாசருக்கும் இடையே பிளவு வந்துள்ளதாக திரையுலக வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.

    இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் 2 அணிகள் மோதுவது உறுதியாகி இருக்கிறது. ஜே.சதீஷ் குமார், சத்யஜோதி தியாகராஜன், அம்மா கிரியே‌ஷன்ஸ் சிவா, கே.ராஜன், ஞானவேல்ராஜா, பி.எல்.தேனப்பன், சிங்காரவேலன் உள்ளிட்டோர் தனி அணியாகவும் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஒரு அணியாகவும் மோத இருக்கிறார்கள். இந்த போட்டியை தவிர்த்துவிட்டு தேர்தல் இல்லாமலேயே புதிய நிர்வாக குழு தேர்ந்தெடுக்கப்பட பேச்சு வார்த்தையும் நடக்கிறது.
    அறிமுக இயக்குனர் சுனிஷ் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’ எனும் திரில்லர் படத்தில் பரத் நடித்துள்ளார்.
    பரத் நடிப்பில் கடந்தாண்டு வெளியான காளிதாஸ் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’ எனும் திரில்லர் படத்தில் பரத் நடித்துள்ளார். லேஷி கேட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அனூப் காலித் தயாரித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் சுனிஷ் குமார் இயக்கி உள்ளார். இவர் ராஜீவ் மேனனிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர். 

    பரத்துடன் விவியா சன்த், அடில் இப்ராஹிம், அனுமோகன், பிரமிள் சித்தார்த் ஆகியோர் நடித்துள்ளார்கள். மேலும் தயாரிப்பாளர் அனூப் காலித் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கைலாஷ் மேனன் இசையமைக்கும் இப்படத்திற்கு சினு சித்தார்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு சுரேஷ் கதை எழுதி உள்ளார்.

    பரத், அனூப் காலித்

    வெவ்வேறு துறையில் சிறந்து விளங்கும் நான்கு பேர் பெரிய திருட்டு செய்து வாழ்க்கையில் செட்டிலாக நினைக்கிறார்கள். அதன்படி நான்கு பேரும் 6 மணி நேரத்தில் ஒரு திருட்டை முடிக்க திட்டமிடுகிறார்கள். ஆனால், அங்கு எதிர்பாராத சம்பவங்கள் நடக்கிறது. அந்த சம்பவம் என்ன? திருட சென்றவர்களின் நிலைமை என்ன ஆனது? என்பதை பல திருப்பங்களுடன் உருவாக்கி இருக்கிறார்கள். 

    இப்படம் பரத்துக்கு பெயர் சொல்லும் படமாக அமையும் என்றும், தமிழைப் போல் மலையாளத்திலும் நடிப்பால் தடம் பதிப்பார் எனவும் இயக்குனர் சுனிஷ் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா, துபாய் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவிக்க இருக்கிறார்கள்.
    மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி விஜய் அண்ணா என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கவுரி கி‌ஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்தது. 

    லோகேஷ் கனகராஜின் டுவிட்டர் பதிவு

    இதுகுறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “தொடர்ந்து 129 நாட்கள் இடைவெளியின்றி நடைபெற்று வந்த மாஸ்டர் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த பயணம் என் மனதுக்கு நெருக்கமானது. என் மீதும், எனது குழுவினர் மீதும் நம்பிக்கை வைத்த விஜய் அண்ணாவிற்கு நன்றி. என்னுடைய இயக்குனர்கள் குழு இன்றி இத்தகைய கடினமான பணியை செய்திருக்க முடியாது. அவர்களை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
    இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பான விசாரணைக்கு நடிகர் கமல்ஹாசன் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.
    \ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன்-2. இந்த படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை அருகே அமைந்துள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. கடந்த பிப்ரவரி 19-ந்தேதி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது கிரேன் விழுந்து உதவி இயக்குநர் ஸ்ரீகிருஷ்ணா உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் ராஜன், லைகா நிறுவனம், கிரேன் உரிமையாளர், தயாரிப்பு மேலாளர் உள்ளிட்ட 4 பேரின் மீது உயிரிழப்பு ஏற்படுத்துதல், கவனக் குறைவாக இருந்தது உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விபத்து நிகழ்ந்த பகுதி

    பின்னர் இந்த வழக்கு விசாரணை சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் இயங்கி வரும் மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டது. இயக்குநர் ‌ஷங்கருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். கடந்த பிப்.27-ந்தேதி இயக்குநர் ‌ஷங்கர் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் விபத்து குறித்து 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

    அவரது வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார் அடுத்து நடிகர் கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பினர். இதை ஏற்று இன்று காலை கமி‌ஷனர் அலுவலகத்தில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் கமல்ஹாசன் விசாரணைக்காக அஜரானார். கமல்ஹாசனிடம் தீவிர விசாரணை நடைபெற்றது. படப்பிடிப்பில் நடந்த விபத்து தொடர்பாக கமல்ஹாசனிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. கமல்ஹாசன் அளித்த பதில்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது.
    கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், தான்யா ஹோப் நடிப்பில் உருவாகி இருக்கும் தாராள பிரபு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.
    8 வருடங்களுக்கு முன் இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற படம், விக்கி டோனர். செயற்கை கருத்தரிப்புக்கு விந்து தானம் செய்ததில் ஏற்பட்ட குளறுபடிகளை காமெடியாக சொல்லியிருந்த இப்படம், தாராள பிரபு என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. இப்படத்தில் ஹரீஷ் கல்யாண் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக தான்யா ஹோப்பும் நடித்துள்ளார். 

    இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் உதவியாளர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு அனிருத், விவேக்-மெர்வின், ஷான் ரோல்டன் உள்பட 8 இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற மார்ச் 13-ந் தேதி ரிலீசாக உள்ளது.  
    தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள இலியானா, தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.
    நடிகை இலியானா தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். ஒல்லியான இடுப்புக்கு புகழ்பெற்ற இலியானா திடீர் என்று உடல் எடை அதிகமானார்.

    இலியானா


    இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகின்றார், அதுவும் தென்னிந்திய பக்கம் வரலாம் என்றும் முடிவு செய்துள்ளார். இந்நிலையில் இலியானா நீச்சலுடையில் போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
    மலையாள நடிகர் பகத் பாசிலின் மனைவி நஸ்ரியா, திருமணத்துக்கு பின் நடிக்காதது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    மலையாளத்தில் வெளியாகியுள்ள படம் 'டிரான்ஸ்'. பகத் பாசில், நஸ்ரியா, கவுதம் மேனன், விநாயகன், செம்பியன் வினோத் ஜோஸ், திலீஸ் போத்தன், ஜுன் ஜோசப் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். 'பெங்களூர் டேஸ்' படத்துக்குப் பிறகு இந்தப் படத்தில் தன் கணவர் பகத் பாசிலுடன் இணைந்து நடித்துள்ளார் நஸ்ரியா. படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில் திருமணத்துக்கு பின் ஏன் திரையுலகில் பெரிய இடைவெளி விடுகிறேன் என்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.  

    பகத் பாசில், நஸ்ரியா

    நஸ்ரியா கூறியிருப்பதாவது: நான் கொஞ்சம் சோம்பேறி ஆகிவிட்டேன் அவ்வளவுதான். இரண்டு வருட இடைவெளியை நான் தீர்மானிக்கவில்லை. ஒரு கதை என்னை ஆர்வப்படுத்தினால், நேரத்தில் பொருந்தினால், இதை நடிக்க வேண்டும் என்று யோசிக்க வைத்தால் நடிப்பேன்.  நான் ஒரு கதை கேட்கும்போது ஆழமாக யோசிக்க மாட்டேன். இது எனக்கு ஆர்வம் தருமா, தராதா என்றே யோசிப்பேன். அளவுக்கதிகமாக யோசிப்பதில்லை’. இவ்வாறு அவர் கூறினார்.
    சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் ஒருவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    அஜித்தை வைத்து வரிசையாக படம் இயக்கி வந்த சிறுத்தை சிவா ரஜினியின் 168ஆவது படத்தை இயக்கி வருகிறார். படத்திற்கு அண்ணாத்த என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியிலும், சுற்றுப்புறப் பகுதிகளிலும் நடைபெற்றது. அடுத்தக்கட்டமாக கொல்கத்தா செல்ல உள்ளனர். 

    ரஜினி

    மார்ச் மாதம் கொல்கத்தா, புனேவில் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காலா, பேட்ட, 2.0, தர்பார் ஆகிய படங்களில் நானா படேகர், நவாசுதீன் சித்திக், அக்‌ஷய் குமார், சுனில் ஷெட்டி ஆகியோர் வில்லன்களாக நடித்தது போல், அண்ணாத்த படத்திலும் பாலிவுட் நடிகர் ஒருவர் தான் வில்லனாக நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. 
    சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
    சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘பொன்மகள் வந்தாள்’. ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி இருக்கும் இப்படத்தில் ஜோதிகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இயக்குநர் பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப் போத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

    இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொன்மகள் வந்தாள் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜோதிகா இப்படத்தில் வக்கீலாக நடித்துள்ளார். இப்படம் வருகிற மார்ச் 27-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். 
    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா, விவாகரத்தான இயக்குனரை திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
    ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள அனுஷ்காவுக்கு இப்போது 38 வயது. இவருக்கும், தெலுங்கு நடிகர் பிரபாசுக்கும் காதல் என்று கிசுகிசுக்கள் வந்தன. அதை இருவரும் மறுத்தார்கள். பின்னர் தொழில் அதிபரை அனுஷ்கா மணக்க இருப்பதாக தகவல் வெளியானது. அப்படி எதுவும் நடக்கவில்லை.

    இதையடுத்து கிரிக்கெட் வீரரை அனுஷ்கா காதலிப்பதாகவும், அவருடன் டேட்டிங் சென்றதாகவும் செய்திகள் பரவின. இதற்கு மறுப்பு தெரிவித்த அனுஷ்கா, தனது திருமண முடிவை பெற்றோரிடம் விட்டுவிட்டதாக கூறினார். 

    அனுஷ்கா, பிரகாஷ் கோவலமுடி

    இந்நிலையில், தெலுங்கு இயக்குனர் பிரகாஷ் கோவலமுடிக்கும், அனுஷ்காவுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தற்போது புதிய தகவல் பரவி வருகிறது. அனுஷ்கா நடித்து தெலுங்கில் சைஸ் ஜீரோ, தமிழில் இஞ்சி இடுப்பழகி பெயர்களில் வந்த படத்தை பிரகாஷ் கோவலமுடி இயக்கி இருந்தார். 

    இஞ்சி இடுப்பழகி படத்துக்காக அனுஷ்கா உடல் எடையை கூட்டி நடித்தது குறிப்பிடத்தக்கது. பிரபல இயக்குனர் ராகவேந்திரராவின் மகனான பிரகாஷ் கோவலமுடிக்கு 44 வயது ஆகிறது. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியை பிரிந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பளு தூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் உருவாக உள்ளது.
    விளையாட்டு நட்சத்திரங்கள் வாழ்க்கை குறித்து சினிமா எடுப்பது வழக்கமாக உள்ளது. அதன்படி மில்கா சிங், மேரி கோம், தோனி குறித்து வெளியான படங்கள் வசூலில் சாதனை படைத்தன. சச்சின் படமும் வெளியானது. தற்போது கபில் தேவ் (கிரிக்கெட்), பேட்மிண்டன் வீராங்கனைகள் சாய்னா நேவல், பிவி சிந்து, கிரிக்கெட் வீராங்கனைகள் மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோரது படங்களும் தயாராகி வருகின்றன.

    கர்ணம் மல்லேஸ்வரி

    அந்த வரிசையில், ஆந்திராவை சேர்ந்த பிரபல பளு தூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கையும் படமாகிறது. இந்த படத்தை சஞ்சனா ரெட்டி இயக்குகிறார். இவர் ராஜ் தருண் நடித்த ராஜூ காடு என்ற தெலுங்கு படத்தை இயக்கி உள்ளார். மல்லேஸ்வரியாக நடிக்கும் நடிகை தேர்வு நடக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. கர்ணம் மல்லேஸ்வரி, ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×