என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ் திரையுலகில் காமெடியனாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக நடித்து வரும் சந்தானம், படங்கள் நடிப்பதில் விஜய்சேதுபதியை மிஞ்சியுள்ளார்.
தொலைக்காட்சியில் இருந்து மன்மதன் படம் மூலம் சினிமாவுக்கு வந்த சந்தானம் முன்னணி கதாநாயகர்களுடன் ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். காமெடி நடிகராக உச்சத்தில் இருந்தபோதே கதாநாயகனாகவும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் கதாநாயகனாக நடித்த முதல் படமே வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து கதாநாயகன் வாய்ப்புகள் குவிந்தன.
அனைத்து படங்களுமே வியாபார ரீதியாக நல்ல வசூல் பார்த்தன. ஒவ்வொரு வருடமும் அதிக படங்களில் நடிக்கும் கதாநாயகன் என்று விஜய்சேதுபதி பெயர் எடுத்து வருகிறார். அதை முறியடிக்கும் வகையில் சந்தானம் கதாநாயகனாக நடித்து இந்த வருடம் அதிக எண்ணிக்கையில் படங்கள் திரைக்கு வர உள்ளன. ஏற்கனவே இந்த வருடம் தொடக்கத்தில் டகால்டி படம் வந்தது.

தற்போது சர்வர் சுந்தரம், பிஸ்கோத், டிக்கிலோனா, ஓடி ஓடி உழைக்கணும், மன்னவன் வந்தானடி, தில்லுக்கு துட்டு-3 ஆகிய 6 படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படங்கள் அனைத்தும் இந்த வருடமே அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. மேலும் பல படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார்.
ஏ1 படத்தை எடுத்த ஜான்சன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். ராஜேஷ்.வி இயக்கும் படமொன்றிலும் நடிக்க உள்ளார். வஞ்சகர் உலகம் படத்தைத் தயாரித்த பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திலும் நடிக்க இருக்கிறார்.
கண்ணுக்குள் நிலவு, சமுத்திரம், காசி படங்களில் நடித்து பிரபலமான நடிகை காவேரி கல்யாணி, தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழில் கண்ணுக்குள் நிலவு படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் காவேரி கல்யாணி. இப்படத்தை தொடர்ந்து சமுத்திரம், காசி உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
தற்போது காவேரி கல்யாணி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். கே 2 கே புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில், உண்மை நிகழ்வுகளைக் அடிப்படையாகக் கொண்ட ஒரு தனித்துவமான காதல் கதையை, உளவியல் திரில்லர் திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார்.

இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார்.
லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் பூமி படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கோமாளி படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக நடிக்கும் படம் ‘பூமி’. ரோமியோ ஜூலியட், போகன் போன்ற படங்களை இயக்கிய லக்ஷ்மண் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இமான் இந்த படத்திற்கு இசையமத்துள்ளார்.
விவசாயத்தை மையமாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இது ஜெயம் ரவிக்கு 25-வது படமாகும். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ஏற்கனவே ரசிகர்களை கவர்ந்தது. தற்போது இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த டீசர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஜெயம் ரவியின் 25-வது படம் என்பதால் ‘பூமி’ படத்திற்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘மாஸ்டர்’ படக்குழுவினரின் அடுத்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ரம்யா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் குட்டி ஸ்டோரி என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 15ம் தேதி வெளியாக இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு அறிவித்தனர். தற்போது இப்படத்தின் இரண்டாவது பாடலான வாதி கம்மிங் என்ற பாடலை நாளை மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
வ.கீரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாந்தினி, நிதிஷ் வீரா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘எட்டுத்திக்கும் பற’ படத்தின் விமர்சனம்.
தன்னைவிட தாழ்ந்த சாதி பையனை காதலிக்கும் சாந்தினி அவருடன் சென்னைக்கு ஓடிவருகிறார். பிளாட்பார வாசியான நிதிஷ் வீராவுக்கும் அவரது காதலிக்கும் மறுநாள் திருமணம் நடக்க இருக்கும் சூழலில் வெளியில் சுற்றுகின்றனர். ஆதரவற்ற வயதானவர்கள் இருவர் தங்கள் வாழ்க்கையில் இணைய மறுநாளை தேர்ந்தெடுக்கிறார்கள்.
தனது மகன் உயிரை காப்பாற்ற 20 ஆயிரம் ரூபாய் தேவைப்படுவதால் அதற்காக முனீஸ்காந்த் அலைகிறார். போலீஸ் என்கவுண்டரில் இருந்து தனது இயக்க தோழர்களை காப்பாற்ற சமுத்திரக்கனி முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறார்.

இந்த ஐந்து கதையையும் ஒன்றாக இணைக்கிறது சூழ்நிலைகள். இவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்ததா? இல்லையா? என்பதே படத்தின் கதை.
5 வெவ்வேறு கதைகள், அவற்றை இணைக்கும் ஒரு மையப்புள்ளி என ஆந்தாலஜி வகையில் கதையை சொல்ல கீரா முயற்சித்துள்ளார். அவரது முயற்சி சுவாரசியமாக இருக்கிறது.

வக்கீல் அம்பேத்கராக வரும் சமுத்திரக்கனி கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். சமூக அவலங்களுக்கு எதிராக போராடும் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார். சாந்தினியின் கண்களில் தெரியும் மிரட்சியே அவரது நடிப்புக்கு சாட்சி. நிதிஷ் வீரா பிளாட் பாரவாசிகளின் பரிதாப நிலையை கண்முன் கொண்டு வருகிறார். முனீஸ்காந்தின் குணச்சித்திர நடிப்பும் அசத்தல். முத்துராமன் சமகால அரசியல்வாதியை பிரதிபலிக்கிறார்.
ஆணவக்கொலை என்பதை மையமாக எடுத்துக்கொண்ட கீரா அதை விறுவிறுப்பான திரில்லராக சொல்ல முயற்சித்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார். திரைக்கதையில் இன்னும் சிறிது கவனம் செலுத்தி இருந்தால் முக்கிய படங்கள் வரிசையில் சேர்ந்து இருக்கும்.

எம்.எஸ்.ஸ்ரீகாந்த் இசையும் சிபின் சிவன் ஒளிப்பதிவும் படத்துக்கு திகிலை கூட்டுகின்றன.
மொத்தத்தில் ‘எட்டுத்திக்கும் பற’ இன்னும் பறந்திருக்கலாம்.
சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்பது எனது கனவு என்று நடிகை சமந்தா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
சமந்தா நடித்துள்ள ஜானு தெலுங்கு படம் வசூலை குவிக்கவில்லை என்றாலும் பாராட்டை பெற்று கொடுத்துள்ளது. அடுத்து அவர் தமிழ், தெலுங்கில் தயாராகும் புதிய படத்தில் நடிக்கிறார். அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ’நான் நடிகையாகாமல் இருந்திருந்தால் கண்ணாடி அணிந்து கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டு இருப்பேன்.
கண்டிப்பாக பணம் சம்பாதிக்கும் முயற்சியில்தான் இருப்பேன். ஏனென்றால் சிறுவயதில் இருந்தே சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்பது எனது கனவு. வைர நகைகள் மிகவும் பிடிக்கும். அதை அணியும்போது அழகாக இருக்கிறேன் என்று பாராட்டுகிறார்கள்.

எனக்கு பிடித்த சுற்றுலா தளம் புளோரிடாவில் இருக்கும் மியாமி. அமெரிக்க வெப் தொடர்கள் அதிகம் பார்ப்பேன். நகைச்சுவை உணர்வு உள்ள ஆண்களை பிடிக்கும். நகைச்சுவை இருந்தால்தான் சிரித்து சந்தோஷமாக இருக்க முடியும்’. இவ்வாறு அவர் கூறினார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, தமிழ் திரையுலக நடிகர் தனுஷை ட்விட்டரில் முந்தியிருக்கிறார்.
தமிழ்த் திரையுலகில் சமூக வலைதளங்களில் அதிகம் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை கொண்ட நடிகர் என்ற பெருமை தனுஷுக்கு உண்டு. அவரை ட்விட்டர் தளத்தில் 8.9 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். அவர்தான் தென்னிந்திய நடிகர்களில் அதிகம் பின்தொடர்பவர்களைக் கொண்டவர் என்ற சாதனையை வைத்திருந்தார்.

இப்போது அதனை தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு முறியடித்துள்ளார். தற்போது அவரது ட்விட்டர் தளத்தைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 9 மில்லியனைத் தாண்டியுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 9 மில்லியனைத் தொட்டதற்கு, தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
100 படத்தின் வெற்றியை தொடர்ந்து அதர்வா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் தெலுங்கு நடிகை ஒருவர் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
அதர்வா நடிப்பில் கடந்த வருடம் ‘100’ திரைப்படம் வெளியானது. இப்படத்தை அடுத்து, குருதி ஆட்டம், தள்ளி போகாதே ஆகிய படங்களில் நடித்து வருகிறது. தற்போது மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் அதர்வா நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
இந்த புதிய படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக லாவண்யா திரிபாதி நடிக்கிறார். இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் பிரம்மன், மாயவன் படத்தில் நடித்துள்ளார். புதுமுக இயக்குனர் ரவீந்திர மாதவா இப்படத்தை இயக்குகிறார். இவர் பூபதி பாண்டியன், சுசீந்திரன், கொரட்டால சிவா ஆகியோரிடம் பணியாற்றியவர்.

இப்படத்தில் வில்லனாக நடிக்க, நடிகர் தேர்வு நடைபெற்று வருகிறது. சக்தி சரவணன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகர் ஹரீஷ் கல்யாண், அவர்தான் எனக்கு நடிப்பு குரு என்று பட விழாவில் கூறியிருக்கிறார்.
கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண் நடித்துள்ள தாராள பிரபு படம் வரும் மார்ச் 13ந்தேதி வெளியாகிறது. இந்தியில் வெளியான விக்கி டோனர் படத்தின் ரீமேக்கான இதில் விவேக், தான்யா ஹோப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விக்கி டோனர் படத்தின் கதையை தமிழுக்கு ஏற்றார்போல சிறப்பாக எழுதியதால் தான் இந்த படத்தில் நடிக்க ஒப்பு கொண்டதாக இசை வெளியீட்டு விழாவின் போது ஹரீஸ் கல்யாண் தெரிவித்துள்ளார்.
மேலும் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து மேல் முழு நம்பிக்கை வைத்துள்ளதாக கூறினார். மேலும் அவர் கூறியதாவது ‘விந்து தானம் பற்றிய படம் என்பதனால் தவறான காட்சிகள் அதிகம் இருக்கும் என்று யாரும் பயந்து விட வேண்டாம். இது முழுக்க முழுக்க ஒரு குடும்ப படம். படப்பிடிப்பின் போது பல காட்சிகளில் எப்படி நடிக்க வேண்டும் என்பதனை விவேக் சார் கற்று தந்தார்.

அவரிடம் பல நேரங்களில் ரஜினி ஸ்டைலை பார்த்தேன். அவர் ரஜினி போல பல இடங்களில் நடிப்பார். இந்த படத்தில் முதல்முறையாக 8 இசையமைப்பாளர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். இது இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்துவின் முயற்சி. இந்த படமே ஒரு இசை தேவை உள்ள படம் என்பதால் இப்படி ஒரு முயற்சியை தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்பட்டது’. இவ்வாறு அவர் கூறினார்.
கிருஷ்ணா வம்சி இயக்கத்தில் சந்தீப் கிசன், ரெஜினா கசான்ட்ரா, ஸ்ரேயா நடித்துள்ள அசுரவம்சம் படத்தின் முன்னோட்டம்.
லட்சுமி வாசந்தி புரொடக்ஷன் சார்பாக ஏ.வெங்கட்ராவ் மற்றும் எஸ் பிலிம்ஸ் கார்ப்பரேஷன் சார்பாக சேலம் பி.சேகர் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் "அசுரவம்சம்". 2018-ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற "நட்சத்திரம்" படத்தின் தமிழாக்கமே இந்த "அசுரவம்சம்". இந்த படத்தில் சந்தீப் கிசன் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக ரெஜினா கசான்ட்ராவும் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா, சாய் தருண் தேஜ், பிரக்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கான்ஸ்டபிள் மகனாக இருக்கும் சந்தீப் கிசனுக்கு போலீஸ் ஆக வேண்டும் என்பது லட்சியம். அந்த லட்சியத்தை கமிஷ்னரின் மகன் ஒரு பிரச்சனையில் சிதறடித்து விடுகிறான். கனவு கலைந்தாலும் நிலைகுலையாத சந்தீப் கிசன் காவல் அதிகாரியின் கெட்டப்போடு சமூகப் பிரச்சனைகளை மாஸாக கையாள்கிறான். ஒரு கட்டத்தில் சமூகத்தில் நடக்கும் மிக முக்கியமானப் பிரச்சனைக்கு ஹெட் ஆக கமிஷனர் மகனே இருப்பதைக் கண்டு வெகுண்டெழும் ஹீரோ, கமிஷனர் மகனை எப்படி டீல் செய்கிறான் என்பதும், அடுத்தடுத்து நடக்கும் எதிர்பாராத சம்பவங்களை ஹீரோ எப்படி எதிர்கொள்கிறான் என்பதையும் பரபரப்பான திரைக்கதையுடன் உருவாக்கியுள்ளார் இயக்குனர் கிருஷ்ணா வம்சி.
அன்பு இயக்கத்தில் உருவாகி உள்ள வால்டர் படத்தின் நாயகனான சிபிராஜ், அவருடன் நடிக்க பயந்ததாக கூறியுள்ளார்.
சிபிராஜ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘வால்டர்’. அறிமுக இயக்குனர் அன்பு இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக ஷ்ரின் கான்ஞ்வாலா நடித்துள்ளார். சமுத்திரகனி, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் நடிகர் சிபிராஜ் பேசியதாவது: “சினிமாவில் ஒரு நல்ல படம் அதற்கு தேவையானதை அதுவே தேடிக்கொள்ளும் என்பார்கள் அது எப்படி என்று யோசிப்பேன். ஆனால் இந்தப்படத்தில் அது நடந்தது. ஐந்து வருடமாக உழைத்து, இந்தப்படத்தை பல தயாரிப்பாளர்களிடம் கொண்டு சென்று, பெரும் கஷ்டங்களுக்கு பிறகு இப்போது இயக்கியுள்ளார் அன்பு.

இறுதியில் இப்படம் ஒரு நல்ல பொறுப்பான தயாரிப்பாளரிடம் வந்து சேர்ந்துள்ளது. இப்படத்தில் நட்டி நடிக்கிறார் எனும்போதே எனக்கு பயமாக இருந்தது. அவர் மீது எனக்கு பெரும் மரியாதை இருக்கிறது. அப்பாவுடனும் வடிவேல் சாருடனும் நடிக்கும் போது பயமாக இருக்கும். எப்படி இவர்கள் முன் நடிப்பது என்று.
அதே மாதிரி தான் நட்டி சார் முன் நடிக்க பயமாக இருந்தது. ஆனால் அவர் மிக ஆதரவாக இருந்தார். இந்தப்படம் ஒவ்வொரு கட்டமாக வளர்ந்து இப்போது ஒரு நல்ல நிலையை வந்தடைந்துள்ளது. வெளியீட்டிற்கு முன்னதாகவே படத்தின் சாட்டிலைட் விற்றுவிட்டது. படத்தின் மீதும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்”. இவ்வாறு அவர் பேசினார்.
கத்துக்குட்டி இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் நடித்து முடித்துள்ள சசிகுமார், அவருக்கு தங்க செயின் பரிசாக அளித்துள்ளார்.
‘கத்துக்குட்டி’ படத்தை இயக்கிய இரா.சரவணன் அடுத்ததாக சசிகுமார் நடிக்கும் படத்தை இயக்கி வந்தார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சமுத்திரகனி, சூரி, கலையரசன் ஆகியோருடன் ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிராமியப் பின்னணியில் உறவுகளின் வலிமையைச் உரக்கச்சொல்லும் விதமாக உருவாகி வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

திட்டமிட்டதற்கு முன்னதாகவே படப்பிடிப்பை நிறைவு செய்த இயக்குனர் இரா.சரவணனுக்கு நடிகர் சசிகுமார் தங்க செயின் பரிசாக அளித்தார். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் சசிகுமார் நடித்துள்ள கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம் போன்ற படங்களும் விரைவில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.






