என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா, முன்னணி நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் உருவாக இருக்கும் படத்தில் இருந்து விலகி இருக்கிறார்.
    தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தை தொடர்ந்து ஆச்சார்யா என்ற படத்தில் நடித்து வருகிறார். கொரட்டலா சிவா இயக்கி வரும் இந்தப் படம் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் 152-வது படமாகும்.

    இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருவதாக தகவல் வெளியானது. படக்குழுவினர் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தற்போது இந்த படத்திலிருந்து விலகி விட்டதாக திரிஷா தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    திரிஷா - சிரஞ்சீவி

    சில சமயங்களில் ஆரம்பத்தில் சொன்ன, கலந்துரையாடிய வி‌ஷயங்கள் நடக்கும்போது வித்தியாசமாக மாறும். சில கருத்து வேறுபாடுகள் காரணமாக சிரஞ்சீவியின் திரைப்படத்திலிருந்து நான் விலகிவிட்டேன். படக்குழுவுக்கு வாழ்த்துகள். என் அன்பார்ந்த தெலுங்கு ரசிகர்களே, மீண்டும் உங்களை ஒரு நல்ல படத்தின் மூலம் சந்திப்பேன் என நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    வினித் வரபிரசாத் இயக்கத்தில் கவின், அம்ரிதா ஐயர் நடிப்பில் உருவாகி வரும் ‘லிப்ட்’ படத்தின் முன்னோட்டம்.
    ஈகா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஹேப்ஸி தயாரிக்கும் படம் ‘லிப்ட்’. கவின் நாயகனாவும், அம்ரிதா ஐயர் நாயகியாகவும் நடிக்கும் இப்படத்தை வினித் வரபிரசாத் இயக்கியுள்ளார். இவர் விளம்பரப் படங்கள் மூலம் பெரிதும் கவனம் பெற்றவர்.

    யுவா கேமராமேனாக இணைந்துள்ளார். பாடல்களிலும் பின்னணி இசையிலும் மைக்கேல் பிரிட்டோ அசத்தி இருக்கிறார். ஸ்டன்னர் சாம் இப்படத்தின் சண்டைக்காட்சிகளை இயக்கியுள்ளார்.

    படத்தின் ஜானர் திரில்லர் வகையைச் சார்ந்தது. படத்தின் கதை மீதும் படத்தில் பங்காற்றியவர்கள் மீதும் பெரிய நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அந்த நம்பிக்கைக்கு நற்சான்றாக படம் உருவாகி இருப்பதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் சொல்லி இருக்கிறார்கள்.

    படப்பிடிப்பு முழுதும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.
    எம்.எஸ்.ஆனந்த் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘சக்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.
    ஆக்‌ஷன் படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் தற்போது ‘சக்ரா’ திரைப்படம் உருவாகி வருகிறது. எம்.எஸ்.ஆனந்த் இயக்கும் இதில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். மேலும் ரெஜினா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா ஆகியோரும் நடிக்கின்றனர். பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

    டப்பிங் பணிகள் தொடக்கம்

    ராணுவ அதிகாரியாக நடிக்கும் விஷாலே இப்படத்தை தயாரிக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது டப்பிங் பணிகளை தொடங்கி இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இப்படதை மே 1ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
    உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் படத்தின் அப்டேட்டுக்கு தடை போட்டிருக்கிறது.
    உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது தமிழ் சினிமாவையும் பாதித்து வருகிறது. ரஷியாவில் உருவாகி வரும் விக்ரமின் ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு பாதிப்பு ஏற்பட்டது. தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘சுல்தான்’ படத்திற்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    சுல்தான் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ‘கொரோனா அவுட் பிரேக் சுல்தான் படத்தின் அப்டேட் உட்பட எல்லாவற்றையும் பாதித்துள்ளது. அமைதியாக இருப்போம், பாதுகாப்பாக இருப்போம்’ என்று கூறியிருக்கிறார். ரசிகர்கள் பலரும் சுல்தான் படத்தின் அப்டேட் கேட்டு வருவதால் இவ்வாறு எஸ்.ஆர்.பிரபு கூறியிருக்கிறார்.

    எஸ்.ஆர்.பிரபு ட்விட்

    ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரஷ்மிகா நடிக்கிறார். பாக்கியராஜ் கண்ணன் இயக்கிவருகிறார். 
    உங்க ரெண்டு பேரை நம்பிதான் என் படமே இருக்கு... என்று கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் கூறியிருக்கிறார்.
    நயன்தாரா நடிப்பில் வெளியான படம் ‘கோலமாவு கோகிலா’. இப்படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சிவகார்த்திகேயன் எழுதிய ‘கல்யாண வயசு...’ என்ற பாடல் மிகவும் பிரபலமானது.

    இயக்குனர் நெல்சன் ‘டாக்டர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், பிரபல நாளிதழ் ஒன்று Most Desirable Man பட்டியலில் நம்பர் ஒன் சிவகார்த்திகேயன், இரண்டாவது அனிருத் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

    நெல்சன் - சிவகார்த்திகேயன் - அனிருத்

    இதற்கு இயக்குனர் நெல்சன் வாழ்த்து சொல்லி, ‘உங்க ரெண்டு பேரை நம்பிதான் என் படமே இருக்கு.... கொஞ்சம் பார்த்து பண்ணுங்க... என்று கூறியிருக்கிறார்.
    தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, படம் தோற்றால் நடிகையை விமர்சிப்பதா என்று கூறி வருத்தம் தெரிவித்துள்ளார்.
    தமிழில் பாணா காத்தாடி படத்தில் அறிமுகமாகி விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்த சமந்தா, தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் விஜய் சேதுபதி, திரிஷா ஜோடியாக நடித்து திரைக்கு வந்து வசூல் குவித்த 96 படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தனர். அந்த படத்தில் திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா நடித்தார்.

    படத்துக்கு ஜானு என்று தலைப்பு வைத்தனர். ஆனால் படம் எதிர்பார்த்த வரவேற்பு இல்லாமல் தோல்வி அடைந்ததாக கூறப்பட்டது. தெலுங்கு இணையதளங்கள் சமந்தாவை தோல்வி பட நடிகை என்று விமர்சித்தன.

    சமந்தா

    தன்னை விமர்சித்தவர்களுக்கு சமந்தா தற்போது பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “ஒரு கதாநாயகன் தொடர்ந்து 3 தோல்வி படங்கள் கொடுத்தாலும், அவரது படங்கள் வரும்போது ரசிகர்கள் தியேட்டர்களில் சென்று பார்க்கிறார்கள். ஆனால் கதாநாயகியை குறை சொல்கிறார்கள். கதாநாயகனுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு சம்பளமும் கொடுப்பது இல்லை. நடிகைகளும் நடிகர்களைப்போல் கடுமையாக உழைக்கத்தான் செய்கிறார்கள்” என்றார். தற்போது சமந்தா விக்னேஷ் சிவன், அஸ்வின் சரவணன் இயக்கும் படங்களில் நடிக்கிறார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்த கவின் நடிக்கும் புதிய படத்தில் பிகில் பட நடிகை ஜோடியாக நடித்துள்ளார்.
    பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் கவின், தற்போது ‘லிப்ட்’ புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். ஈகா என்டர்டெயின்மெண்ட் சார்பில் ஹேப்ஸி இப்படத்தை தயாரிக்கிறார். விளம்பரப் படங்கள் மூலம் பெரிதும் கவனம் பெற்ற வினித் வரபிரசாத் இப்படத்தை இயக்குகிறார்.

    இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை அம்ரிதா ஐயர் நடிக்கிறார். இவர் விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர். இவர்கள் இணையும் இப்படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாக இருக்கிறது.

    கவின் - அம்ரிதா ஐயர்

    எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு மைக்கேல் பிரிட்டோ இசையமைத்திருக்கிறார். படப்பிடிப்பு முழுதும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.
    துப்பறிவாளன் 2 பட பிரச்சனையில் விஷாலுக்கு நான் செய்த பெரிய துரோகம் அதுதான் என்று இயக்குனர் மிஷ்கின் கூறியுள்ளார்.
    மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான படம் துப்பறிவாளன். இதன் தொடர்ச்சியாக  'துப்பறிவாளன் 2' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் முடிந்தது. அதற்கு பிறகு விஷால் - மிஷ்கின் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால், மிஷ்கின் இயக்குநர் பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டார். தற்போது இந்தப் படத்தின் இயக்குநர் பொறுப்பை விஷாலே ஏற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில் பூர்ணா நடிப்பில் உருவாகியுள்ள 'கண்ணாமூச்சி' வெப்சீரிஸ் அறிமுக விழாவில் கலந்துக்கொண்ட இயக்குநர் மிஷ்கின் துப்பறிவாளன் 2 சர்ச்சை குறித்து விஷாலை கடுமையாக தாக்கி பேசினார். அவர் பேசியதாவது:

    ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் விஷாலை மோசமாக பேசும் போதும், பார்க்கும் போதும் அவரை என் தோளில் போட்டு சகோதரனாக பாவித்தேன். என் நிஜ சகோதரனிடம் கூட அவ்வளவு அன்பு செலுத்தவில்லை. அவருக்காக 2-ம் பாகம் எழுதினேன். அதற்கு முந்தைய 3 படங்கள் விஷாலுக்கு தோல்வி. ’துப்பறிவாளன்’ வெற்றி பெற்றது. அந்த படத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 3 கோடி ரூபாய். ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு கதை எழுதச் சொன்னார், எழுதினேன். நிறைய கடன் இருக்கு, தமிழ் மட்டும் வேண்டாம், இந்திய அளவிலான மொழிகளில் எழுதலாம் என்று சொல்லி கோகினூர் வைரத்தை வைத்து கதை எழுதுகிறேன் என எழுதினேன். அந்தக் கதையை கேட்டு விஷாலுக்கு பிடித்து போய் என்னை கட்டிப்பிடித்து அழுதார். இந்த கதை எனக்கு போதும் என்றார். இதை வைத்து என் அனைத்து கடனையும் அடைத்துவிடுவேன் என்றார். வேறு தயாரிப்பாளர் வேண்டாம், நானே தயாரிக்கிறேன் என்றார். அப்போது ஆரம்பித்தது என் தலைவலி.

    19 கோடி முதல் 20 கோடி ரூபாய் வரை செலவாகும். ஆகையால் இந்தப் படத்தை தொடாதே என்றும் தெரிவித்தேன். இல்லை சார், இந்தப் படம் நான் பண்ணுவேன். எனக்கு உதவியாக இருக்கும் என்று சொன்னார். இந்தக் கதையை எழுதுவதற்காக நான் கேட்ட பணம் 7.5 லட்ச ரூபாய் மட்டுமே. அதில் நான் செலவு செய்தது 7 லட்ச ரூபாய் மட்டும் தான். ஆனால், திரைக்கதை எழுத மட்டும் 35 லட்ச ரூபாய் செலவு செய்ததாக தெரிவித்துள்ளார் விஷால். 35 லட்ச ரூபாய் செலவு பண்ணினேன் என்பதை ஆதாரத்துடன் நிரூபக்க வேண்டும். அதற்கு பிறகு 13 கோடி ரூபாய் இதுவரைக்கும் செலவு செய்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். 32 நாட்கள் படப்பிடிப்பு செய்துள்ளேன். ஒரு நாளைக்கு 15 லட்சம் செலவு செய்தேன் என்று தெரிவித்துள்ளார். அதன்படி, 32 நாட்களுக்கு 4 கோடியே 50 லட்ச ரூபாய் தான். அதற்கு மேல் 2 கோடி, 3 கோடி என சேர்த்தால் கூட 10 கோடி ரூபாய் வரை தான் வந்துள்ளது. அந்த 13 கோடி ரூபாய் செலவையும் விஷால் நிரூபிக்க வேண்டும்.

    விஷால் - மிஷ்கின்

    ஒவ்வொரு இடத்திலும் அவமானப்படுத்தப்பட்டுள்ளேன். என் தாயை அசிங்கமாக திட்டினார். விஷாலுக்கு என்ன துரோகம் செய்தேன். நான் செய்த ஒரே துரோகம், அவனிடம் அறத்தோடு இருந்தது தான். அவன் தப்பு பண்ணும் போதெல்லாம், தப்பு பண்ணாதடா என்று சொன்னது தான். அவனுக்காக நல்ல கதை எழுதிக் கொடுத்தது என் தவறு. எந்த தயாரிப்பாளரும் எனக்கு படம் கொடுக்கக் கூடாது என்று சொல்கிறான். என்னால் எங்கேயும் வேலை செய்ய முடியும். நான் யாரிடமும் சென்று பிச்சை எடுக்க மாட்டேன். என் படங்கள் சொல்லும் நான் யார் என்று? நான் தயாரிப்பாளர் சங்கத்துக்கோ, இயக்குநர் சங்கத்துக்கோ போயிருந்தால் இன்று போஸ்டர் ஒட்டியிருக்க முடியுமா?.

    ரமணாவும், நந்தாவும் உன்னை நடுத்தெருவில் நிற்க வைப்பார்கள் என்று சொன்னேன். அது தான் நடந்தது. இன்று படம் நின்று போனதற்கு அவர்கள் தான் காரணம். என் தாயைத் திட்டியதற்குப் பிறகு எப்படி படத்திலிருந்து வெளியே போகாமல் இருக்க முடியும். என் தம்பியை அடித்தார்கள். இனி விடமாட்டேன். தமிழகத்தில் நான் மட்டும் தான் அவரை பத்திரமாக பார்த்துக் கொண்டேன். இனி தமிழ்நாட்டை அவரிடமிருந்து நான் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். உன் தரப்பில் நியாயம் இருந்தால் வா குருஷேத்ரப் போருக்கு. வா போரிடலாம்”. இவ்வாறு மிஷ்கின் விஷாலுக்கு சவால் விடும் வகையில் பேசினார்.
    ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தில் தந்தை பாக்யராஜுடன் நடிகர் சாந்தனு இணைந்து நடிக்க இருக்கிறார்.
    லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், பர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிரமணியன், சரவண பிரியன் தயாரிப்பில், இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் புதிய படம் உருவாக இருக்கிறது. இதில் கே.பாக்யராஜ், சாந்தனு, அதுல்யா, மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ரேஷ்மா, மதுமிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

    ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்படம், புதுமணத் தம்பதிகளின் முதல் இரவில் நடைபெறும் முக்கிய பாரம்பரிய நிகழ்வுகளையும், சாங்கித்யங்களையும் நகைச்சுவை மாறாமல், சற்றும் விரசம் இல்லாமல் சுவராஸ்யமாக காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.

    படக்குழுவினர்

    இப்படத்தின் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர். ரமேஷ் சக்கரவர்த்தி ஒளிப்பதிவில், தரண் இசையமைப்பில் இப்படம் உருவாக இருக்கிறது.
    பிரஷாந்த் நீல் - யஷ் கூட்டணியில் உருவாகி வரும் கேஜிஎப் 2ம் பாகத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    2018-ம் ஆண்டு வெளியான படம் கே.ஜி.எப். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியானது. ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்த இப்படத்தில் யஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார்.

    இப்படம் மாபெரும் வெற்றிபெற்றதோடு ஜப்பான், கொரியா முதலிய அயல் நாடுகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

    கேஜிஎப் ரிலீஸ் தேதி

    இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கே.ஜி.எப் 2ம் பாகம் மிக பெரிய பொருட்செலவில் உருவாகி வருகிறது. இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    தற்போது இப்படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் 23ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
    கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், தன்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் தாராள பிரபு படத்தின் விமர்சனம்.
    பாட்டி அம்மாவுடன் வாழ்ந்து வரும் ஹரீஷ் கல்யாண் விளையாட்டு வீரராக இருக்கிறார். ஸ்போர்ட் கோட்டாவில் வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். நாயகி தன்யாவை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார். காதலை சொல்லி இருவரும் காதலித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே, டாக்டராக இருக்கும் விவேக், குழந்தை வேண்டும் என்று வரும் தம்பதியருக்கு குழந்தையை கொடுக்க ஆரோக்கியமான விந்தணு உள்ள டோனரை தேடி அலைகிறார். அப்போது ஹரீஷ் கல்யாணை சந்திக்கும் விவேக், அவரிடம் சம்மதிக்க வைத்து டோனராக்குகிறார்.

    தாராள பிரபு விமர்சனம்

    இந்நிலையில், தன்யாவிற்கும் ஹரீஷ் கல்யாணுக்கும் திருமணம் நடக்கிறது. தன்யாவிற்கு குழந்தை பெற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதற்காக ஒரு குழந்தையை தத்தெடுக்கிறார்கள். அதன்பின் இவர்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்பட்டு பிரிகிறார்கள். 

    இறுதியில் பிரச்சனை முடிந்து இருவரும் ஒன்றுசேர்ந்தார்களா? அது என்ன பிரச்சனை? என்பதே படத்தின் மீதிக்கதை.

    தாராள பிரபு விமர்சனம்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஹரீஷ் கல்யாண், தனக்கே உரிய பாணியில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகி தன்யா, ஆர்ப்பாட்டம் இல்லாமல் அளவாக நடித்து கவனிக்க வைத்திருக்கிறார். வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று ரசிக்கவும், சிந்திக்கவும் வைத்திருக்கிறார் நடிகர் விவேக். இவரின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். பல காட்சிகளை மிகவும் எளிதாக நடித்துவிட்டு சென்றிருக்கிறார். காமெடியும் நன்றாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. மற்ற கதாபாத்திரங்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.

    தாராள பிரபு விமர்சனம்

    விந்தணு முக்கியத்துவத்தையும், தாம்பத்திய வாழ்க்கையின் ஆரோக்கியத்தையும் சொல்லும் விதமாக படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து. ரீமேக் படம் என்றாலும் அதை சிறப்பாக எடுக்க திறமை வேண்டும். அதை அனைவரும் பாராட்டும் வகையில் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். ஆபாசம் இல்லாமல் திரைக்கதை உருவாக்கி இருக்கிறார்.

    இப்படத்திற்கு அனிருத், பரத் சங்கர், இன்னோ கெங்கா, கபீர் வாசுகி, மேட்லி புளூஸ், ஓர்கா, சான் ரோல்டன், விவேக் மெர்வின் என பலர் இசையமைத்திருக்கிறார்கள். இவர்கள் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். செல்வகுமாரின் ஒளிப்பதிவு அருமை.

    மொத்தத்தில் ‘தாராள பிரபு’ ரொம்ப தாராளம்.
    தமிழ், தெலுங்கில் மிகவும் பிரபலமான ஸ்ருதிஹாசன், தற்போது தெலுங்கில் பிரபல நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
    'பிங்க்' தெலுங்கு ரீமேக்கின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு திரும்பியுள்ளார் பவன் கல்யாண். ஸ்ரீராம் வேணு இயக்கி வரும் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பவன் கல்யாண். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. 

    இறுதிக்கட்டப் படப்பிடிப்புக்காகத் தயாராகி வருகிறது படக்குழு. இதில் நிவேதா தாமஸ், அஞ்சலி உள்ளிட்டோர் பவன் கல்யாணுடன் நடித்துள்ளனர். 'வக்கீல் சாப்' என்று பெயரிடப்பட்டுள்ள தெலுங்கு ரீமேக்கின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் பெரும் வைரலானது. 

    பவன் கல்யாண் - ஸ்ருதிஹாசன்

    தற்போது இந்தப் படத்தில் பவன் கல்யாணுக்கு மனைவியாக சின்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஸ்ருதி ஹாசன். தமிழில் வெளியான 'பிங்க்' ரீமேக்கான 'நேர்கொண்ட பார்வை' படத்தில் இந்தக் கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடித்திருந்தார்.
    ×