என் மலர்
சினிமா செய்திகள்
அவதூறுகளை பொருட்படுத்தாமல் சுஷாந்த் சிங்கின் ரசிகர்களுக்கு ஆதரவாக இருங்கள் என நடிகர் சல்மான் கான் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வாரிசு நடிகர்கள் கொடுத்த மன அழுத்தத்தினால் நடந்துள்ளது என்று சர்ச்சைகள் எழுந்துள்ளன. சுஷாந்த் சிங் தற்கொலைக்கு சல்மான்கான், இயக்குனர் கரண் ஜோகர் ஆகியோர் காரணம் என்று வழக்கும் தொடர்ந்துள்ளனர். சல்மான்கான், கரண் ஜோகர், சோனம் கபூர், அலியாபட், சோனாக்சி சின்ஹா ஆகியோரை சமூக வலைத்தளத்தில் பின் தொடரும் ரசிகர்களும் குறைந்துள்ளனர்.
இந்தி பட உலகில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம் உள்ளது என்று சாடிய கங்கனா ரணாவத்துக்கு இன்ஸ்டாகிராமில் கூடுதலாக 20 லட்சம் ரசிகர்கள் சேர்ந்துள்ளனர். சல்மான்கானை வலைத்தளத்தில் பின் தொடர்ந்த 10 லட்சம் ரசிகர்கள் வெளியேறி விட்டனர். சோனம் கபூர் 2 லட்சத்து 50 ஆயிரம் பேரையும் அலியாபட்டை 5 லட்சம் பேரையும் இழந்துள்ளனர். சல்மான்கானை வலைத்தளத்தில் பலரும் வசைபாடுகின்றனர்.

இதையடுத்து சல்மான்கான் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “சுஷாந்த் சிங் ரசிகர்களுக்கு உறுதுணையாக இருக்கும்படி எனது அனைத்து ரசிகர்களையும் வேண்டிக்கொள்கிறேன். அவர்களின் அவதூறு வார்த்தைகளை பொருட்படுத்தாமல் அதற்கு பின்னால் இருக்கும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நாம் விரும்பும் ஒருவரின் இழப்பு வலி மிகுந்தது. எனவே அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆதரவாக இருங்கள்” என்று கூறியுள்ளார்.
கமலை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பாடலுக்கு டான்ஸ் ஆடி அசத்தி இருக்கிறார் நடிகர் அஸ்வின்.
எனை நோக்கி பாயும் தோட்டா, துருவங்கள் பதினாறு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகர் அஸ்வின் குமார் உடற்பயிற்சி செய்யும் ட்ரெட்மில்லில் நடனமாடி அசத்தி வருகிறார்.

இவர் சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்ற அண்ணாத்த ஆடுறார் பாடலுக்கு நடனமாடி அதை சமூகவலைதளத்தில் வீடியோவாக வெளியிட்டார். இதைப்பார்த்த கமல் அவரை பாராட்டி டுவிட் செய்தார்.

இந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி அதை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவும் ரசிகர்களின் லைக்ஸ்களைக் குவித்து வருகிறது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் போல் நானும் பாதிக்கப் பட்டேன் என்று நடிகை வித்யா பிரதீப் வேதனையுடன் கூறியிருக்கிறார்.
தமிழில் அவள் பெயர் தமிழரசி என்ற படத்தின் மூலம் நடிகையானவர் வித்யா பிரதீப். அதன் பின் விஜய் இயக்கிய சைவம், பாண்டிராஜின் பசங்க 2, அச்சமின்றி, இரவுக்கு ஆயிரம் கண்கள், மாரி 2, தடம் உட்பட சில படங்களில் நடித்துள்ள இவர், இப்போது ஒத்தைக்கு ஒத்த, அசுரகுலம், தலைவி ஆகிய படங்களில் நடித்துள்ளார். டிவி.சிரியல்களிலும் நடித்து வருகிறார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்குப் பிறகு நடிகர், நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த மன அழுத்தம் பற்றி வெளிப்படையாக பேசத் தொடங்கி இருக்கிறார்கள். சில நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த மன அழுத்தம் பற்றி கூறியிருந்தனர். இந்நிலையில் வித்யா பிரதீப்பும் தமிழ் சினிமாவில் தனக்கு நேர்ந்த அதிர்ச்சி அனுபவம் பற்றி சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அதில் கூறியிருப்பதாவது: 'தடம்' படத்தில் நடிப்பதற்கு முன் 6 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தேன். இதனால் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால், திடீரென அந்த படங்களில் இருந்து என்னை நீக்கிவிட்டார்கள். தொழிலுக்கு சம்பந்தமில்லாத காரணங்களுக்காக நான் நீக்கப்பட்டேன். இதனால் நான் படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினேன் என்று கூறியுள்ளார்.
நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணம் விஜய் தான் என்று பிரபல நடிகர் ட்விட் செய்து வாழ்த்துக் கூறி இருக்கிறார்.
விஜய்யின் பிறந்த நாளான இன்று ஜூன் 22ஆம் தேதியில் அதிகாலை 12 மணிமுதல் வெகு சிறப்பாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

விஜய்யின் பிறந்தநாளை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் திரையுலகின் அனைத்து பிரபலங்களும் தங்களுடைய சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருவார்கள். அந்த வகையில் நடிகரும், தயாரிப்பாளரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் ’நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவரே விஜய்தான்’ என்று டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் தனது டுவீட்டில் மேலும் கூறியிருப்பதாவது: நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர். திரையில் வெகுஜன நாயகர், நேரில் நல்ல நண்பர்... என்று இயல்பான, அழகான நட்பு. அளவான பேச்சும், நிறையப் பாராட்டுமாக எளிமையாகப் பழகும் அண்ணன் தளபதி விஜய் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.
நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறி அசத்தி இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் இன்று தனது 46-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவருக்கு திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், விஜய்க்காக குட்டி ஸ்டோரி பாடலை வயலின் வாசித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விஜய்யும் கீர்த்தி சுரேஷும் இணைந்து பைரவா மற்றும் சர்கார் படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.
நடிகர் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடிய வரும் நிலையில் சமூக வலைத்தளத்தில் அஜித் டிரெண்டாக்கி வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் இன்று தனது 46-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவருக்கு திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு முதலே #HappyBirthdayThalapathyVijay என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் அதிகம் பேரால் ட்வீட் செய்யப்பட்டு ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்திருந்தது.

இதைப்பார்த்த அஜித் ரசிகர்களும் களத்தில் இறங்கினர். #NonpareilThalaAJITH என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கிய அவர்கள் 1 மில்லியனுக்கும் அதிகமான ட்வீட் செய்து முதலிடத்துக்கு கொண்டு வந்திருக்கின்றனர்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற உச்ச நடிகர்களுடன் நடித்து பிரபலமான நடிகை உஷா ராணி உடல்நலக்குறைவால் காலமானார்.
உஷா ராணி, குழந்தை நட்சத்திரமாக 12 வயதிலேயே நடிக்க தொடங்கினார். எம்.ஜி.ஆருடன் பட்டிகாட்டு பொன்னையா, சிவாஜியின் என்னைப்போல் ஒருவன், கமல்ஹாசன் ஜோடியாக குமாஸ்தாவின் மகள் மற்றும் ஜக்கம்மா உள்பட தமிழில் 50 படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் பிரேம் நசீர், மது, சுகுமார் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளார். மலையாளத்தில் மட்டும் 200 படங்களில் நடித்து இருக்கிறார், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
சென்னை அயப்பாக்கத்தில் வசித்த இவருக்கு சில தினங்களுக்கு முன்பு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 62.

மறைந்த உஷா ராணியின் கணவர் என். சங்கரன் நாயர் பிரபல மலையாள இயக்குனர் ஆவார். மலையாளத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த விஷணு விஜயம், பிரமிளா நடித்த தம்புராட்டி, பிரேம் நசீரின் ஒரு ஜென்மம் கூடி உள்பட 40 படங்களை இயக்கி உள்ளார். அவரை உஷா ராணி காதலித்து திருமணம் செய்து கொண்டார். சங்கரன் நாயர் 2005-ல் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இவர்களுக்கு விஷ்ணு என்ற மகன் உள்ளார். உஷா ராணி மறைவுக்கு நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சிம்புதேவன் இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர், ரெஜினா, சாந்தனு நடிப்பில் உருவாகி இருக்கும் கசட தபற படத்தின் முன்னோட்டம்.
பிளாக்டிக்கெட் கம்பெனி சார்பில் இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து தயாரித்துள்ள படம் `கசட தபற'. சிம்புதேவன் இயக்கியிருக்கும் இந்த படம் 6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர், ரெஜினா, சாந்தனு, பிரேம்ஜி, விஜயலட்சுமி, வெங்கட் பிரபு உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

மு.காசி விஸ்வநாதன், ராஜா முகமது, ஆண்டனி, பிரவீன்.கே.எல்., ரூபன், விவேக் ஹர்ஷன் உள்ளிட்ட 6 பேர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கின்றனர். மேலும் ஜிப்ரான், சாம் சி.எஸ்., சந்தோஷ் நாராயணன், பிரேம்ஜி, யுவன் சங்கர் ராஜா, ஷான் ரோல்டன் ஆகியோர் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளனர்.
மாஸ்டர் படப்பிடிப்பின் போது விஜய்யுடன் செலவிட்ட ஒவ்வொரு தருணமும் மறக்க முடியாதது என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய்க்கு இன்று பிறந்தநாள். அவருக்கு பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். அந்தவகையில், விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: "கண்டிப்பாக மாஸ்டர் ஒரு மறக்க முடியாத நினைவுதான். அதில் ஒரு நாளை மட்டும் என்னால் தேர்ந்தெடுக்க முடியாது. ஏனெனில் உங்களுடன் செலவிட்ட ஒவ்வொரு தருணமும் மறக்க முடியாதது, அதை நினைத்து சந்தோஷப்படுவேன் அண்ணா. இதைச் சாத்தியமாக்கியதற்கு நன்றி. பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா. லவ் யூ" என குறிப்பிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படம் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாவதாக இருந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. இப்படத்தில் மாளவிகா மோகனன் ஹீரோயினாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ளார். மேலும் அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, கவுரி கிஷன், விஜே ரம்யா, ஸ்ரீமன், சாந்தனு, மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் தணிந்து இயல்புநிலை திரும்பிய பின் மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நயன்தாராவுடன் உற்சாகமாக நடனமாடும் வீடியோவை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் கொரோனா இருப்பதாகவும், இதனால் அவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளதாகவும் செய்திகள் பரவின. இந்த செய்தி உண்மையில்லை எனக்கூறி இயக்குனர் விக்னேஷ் சிவன் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் கொரோனா காதல் என குறிப்பிட்டு வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் ஆப் மூலம் தங்களை குழந்தைகள் போல் சித்தரித்துள்ள அந்த வீடியோவில், இருவரும் ரைம்ஸ் பாடலுக்கு ஏற்ப கியூட்டாக நடனமாடி உள்ளனர்.

மேலும் அந்த பதிவில், எங்களைப் பற்றிய செய்திகளை நாங்கள் இப்படித் தான் பார்க்கின்றோம். கொரோனா மற்றும் நாங்கள் இறந்தது போல் புகைப்படங்களை எடிட் செய்தவர்களையும் அப்படித் தான் பார்க்கிறோம். நாங்கள் உயிரோடு தான் இருக்கின்றோம். சந்தோஷமாகவும், ஆரோக்கியத்துடனும் இருக்கிறோம். உங்களைப் போன்ற ஜோக்கர்களின் கற்பனை மற்றும் மட்டமான ஜோக்குகளையும் பார்க்க இறைவன் எங்களுக்கு போதுமான வலிமை மற்றும் சந்தோஷத்தை கொடுத்திருக்கிறார்” என விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார்.
‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ போன்ற படங்களை இயக்கிய அட்லீ, டுவிட்டரில் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ எனும் தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர், அட்லீ. இந்த படம் ரூ.50 கோடி வசூல் குவித்தது. அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் அங்கம் வகிக்கிறார். விரைவில் பாலிவுட்டில் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜய்க்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள அட்லீ, “என்னோட அண்ணா, என்னோட தளபதி. என்னைவிட உங்களை தான் நான் அதிகமாக நேசிக்கிறேன். உங்களை மதிக்கிறேன். உங்களுக்கு நிறைய கடமைபட்டிருக்கிறேன். நீங்க இல்லாம நான் இல்லை. லவ் யூ அண்ணா. பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா". என குறிப்பிட்டுள்ளார். அதோடு பிகில் படப்பிடிப்பின் போது விஜய்யுடன் எடுத்த புகைப்படம் ஒன்றையும் அட்லீ பகிர்ந்துள்ளார்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மாஸ்டர் படக்குழு மாஸான போஸ்டரை வெளியிட்டு உள்ளது.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஜய்க்கு, ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். டுவிட்டரிலும் #HappyBirthdayThalapathyVijay என்கிற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகி உள்ளது. விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் டிரெய்லர் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில், விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி மாஸ்டர் படக்குழு மாஸ் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. விஜய் பிறந்தநாளுக்கு மாஸ்டர் படத்தின் போஸ்டர் இல்லைன்னா எப்படி என்று கூறி அதை வெளியிட்டுள்ளனர். மேலும் போஸ்டரில் கொளுத்துங்கடா என்கிற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.






