என் மலர்
சினிமா செய்திகள்
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மாஸ்டர் படக்குழு மாஸான போஸ்டரை வெளியிட்டு உள்ளது.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஜய்க்கு, ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். டுவிட்டரிலும் #HappyBirthdayThalapathyVijay என்கிற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகி உள்ளது. விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் டிரெய்லர் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில், விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி மாஸ்டர் படக்குழு மாஸ் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. விஜய் பிறந்தநாளுக்கு மாஸ்டர் படத்தின் போஸ்டர் இல்லைன்னா எப்படி என்று கூறி அதை வெளியிட்டுள்ளனர். மேலும் போஸ்டரில் கொளுத்துங்கடா என்கிற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி இருக்கும் பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் முன்னோட்டம்.
பாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் குமார் மற்றும் எல்.சிந்தன் இருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ள படம் 'பிளான் பண்ணி பண்ணனும்'. இப்படத்தை பானா காத்தாடி புகழ் பத்ரி வெங்கடேஷ் இயக்கி உள்ளார். இப்படத்தில் ரியோ நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.
படத்தை பற்றி இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் கூறியதாவது: “இது, ஒரு நகைச்சுவை பொழுதுபோக்கு படம். கதாநாயகன் செம்பியன் கரிகாலன், சென்னை ராயபுரத்தை சேர்ந்தவன். பாசமுள்ள அம்மா-அப்பா, உயிர் நண்பன் என அவனுக்கு சந்தோச மான வாழ்க்கை. வட சென்னை என்றாலே ரவுடிகள், கூலிப்படை, போதை மருந்து கடத்தல் என்பதில் இருந்து விலகி, ‘ஐ.டி.’ துறையில் வேலை செய்கிறான்.

கதாநாயகி அமெரிக்கா சென்று வேலை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் வடசென்னையில் தங்கியிருந்து படித்து வருகிறாள். அவளுடைய லட்சியம் நிறைவேறியதா? என்பதே கதை. படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, கேரள மாநிலம் வாகமன், சிக்கிம் ஆகிய இடங்களில் நடந்ததாக அவர் கூறினார்.
விஜய் சேதுபதி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ஒருவர், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்‘ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நிஹாரிகா. தற்போது அசோக் செலவன் ஜோடியாக புதிய படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் ஒக்க மனசு, ஹேப்பி வெட்டிங், சூர்ய காந்த, சைரா நரசிம்ம ரெட்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். வெப் தொடர்கள் தயாரித்தும் வருகிறார்.
இவர் முன்னணி தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகள் ஆவார். நிஹாரிகாவும் தெலுங்கு நடிகர் பிரபாசும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர் என்றும் ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இதனை இருவரும் மறுத்தனர். நிஹாரிகாவுக்கு மாப்பிள்ளை பார்த்து வருவதாக நாகபாபு கூறியிருந்தார்.

இந்த நிலையில் நிஹாரிகா திருமணம் முடிவாகி உள்ளது. சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் நடக்க போகும் தகவலை மறைமுகமாக தெரிவித்து இருந்தார். மாப்பிள்ளை முகம் தெரியாத வகையில் கட்டிப்பிடித்தபடி புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
தற்போது மணமகன் முகம் தெரியும் இன்னொரு படத்தை வெளியிட்டு, அதில் என்னுடையவர் என குறிப்பிட்டு திருமணத்தை உறுதி செய்துள்ளார். மணமகன் பெயர் வெங்கட சைதன்ய ஜோனாலகாடு. குண்டூரை சேர்ந்தவர். ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். நிஹாரிகாவுக்கு நடிகர் நடிகைகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், அதன் உண்மை நிலை குறித்து பார்ப்போம்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. தமிழகத்தில் அதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நோய் பரவல் அதிகமாக உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்ளிட்டோருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகவும், இதனால் அவர்கள் தனிமையில் இருப்பதாகவும் செய்திகள் பரவின.

இந்நிலையில், இந்த செய்திகள் உண்மையில்லை என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தாங்கள் இருவரும் நலமாக இருப்பதாக கூறியுள்ள அவர், தான் படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு உள்ளதாகவும், நயன்தாரா, உடற்பயிற்சி உள்ளிட்ட அன்றாட பணிகளை செய்து வருவதாகவும் கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் கவுதம் மேனன், அடுத்ததாக வெப் தொடர் ஒன்றில் நடிக்க உள்ளாராம்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கவுதம் மேனன். இவர் இயக்குவதைப்போல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் இவர் சமீபத்தில் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், டிரான்ஸ் போன்ற படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதனிடையே ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்குனர் கவுதம் மேனனுடன் இணைந்து வெப் தொடர் ஒன்றில் பணியாற்ற உள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அந்த வெப் தொடர் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்த வெப் தொடரை கிடாரி படத்தை இயக்கிய பிரசாத் முருகேசன் இயக்க உள்ளாராம். இவர் ஏற்கனவே கவுதம் மேனனுடன் இணைந்து குயின் வெப் தொடரை இயக்கி இருந்தார். மேலும் இந்த வெப் தொடருக்கு மதக்கம் என பெயரிட்டுள்ளனர். இது திருடன் - போலீஸ் கதை போல இருக்குமாம். இந்த வெப் தொடரில் கவுதம் மேனன் தான் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.
தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் என்றழைக்கப்படும் ஷங்கர், இளம் இயக்குனரின் படத்தை காண ஆவலோடு இருப்பதாக கூறியுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பிடித்துள்ளது. இதனால், இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் ஷங்கர். இவர் அடுத்ததாக இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் தனக்கு பிடித்த இயக்குனர்கள் பற்றி கூறியுள்ளார். அதன்படி, வெற்றிமாறன், அருவி பட இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன், லோகேஷ் கனகராஜ், ஹெச்.வினோத் ஆகியோரது படங்கள் தன்னை வெகுவாக கவர்ந்ததாக கூறிய ஷங்கர், சில்லுக்கருப்பட்டி படத்தின் இயக்குனர் ஹலிதா ஷமீமையும் வெகுவாக பாராட்டி உள்ளார். மேலும் அவர் தற்போது இயக்கி வரும் மின்மினி படத்தை பார்க்க ஆவலோடு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஏனெனில் மின்மினி படத்தில் குழந்தை பருவ காட்சிகளில் நடித்திருந்தவர்களே, பதின்ம வயது காட்சிகளிலும் நடிக்க வேண்டும் என்பதால், அவர்கள் வளர்வதற்காக 5 ஆண்டுகள் காத்திருந்து எஞ்சியுள்ள காட்சிகளை அவர் படமாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி நான் சீனா தயாரிப்புகளை உபயோகிப்பதில்லை என்று நடிகை சாக்ஷி அகர்வால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்திய சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள். இதனால் இந்தியர்கள் பலரும் சீன தயாரிப்புகளை புறக்கணித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகை சாக்ஷி அகர்வால் இன்று தனது டிக்டாக் கணக்கிலிருந்து தன்னை விலக்கி கொண்டுள்ளார். டிக்டாக்கில் அவரை 2.18 லட்சம் பேர் பின்பற்றியிருந்தனர்.

இது குறித்து அவர் கூறும்போது, “பொறுமைக்கும் அமைதிக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது நம் நாடு. ஆனால் சீனா அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி நம் நிலத்தை அபகரிக்க பார்க்கிறது. எனவே நான் இனிமேல் சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்த போவதில்லை என்றும், சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிப்பது இல்லை என்றும் முடிவு செய்துள்ளேன்.
இதன் தொடக்கமாக, நான் எனது டிக்டாக் கணக்கை அகற்றியுள்ளேன். என்னைப் பொறுத்தவரை எனது நாடு தான் எனக்கு எதிலும் முதன்மையாக தோன்றும், என் நாட்டின் கண்ணியத்தைத் காக்க ஒரு குடிமகளாக செய்ய வேண்டியதைச் செய்ய நான் ஒருபோதும் தயங்கமாட்டேன். ”என்று கூறினார்.
மறைந்த இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் வாழ்க்கை, தற்கொலையா கொலையா என்ற பெயரில் திரைப்படமாக இருக்கிறது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த்தின் தற்கொலை திரையுலகில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டில் சில முன்னணி நடிகர்களின் ஆதிக்கத்தால் தொடர்ந்து பட வாய்ப்புகளை இழந்ததால் சுஷாந்த் மன அழுத்தத்தில் தற்கொலை முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் சுஷாந்த் தற்கொலை செய்து கொள்ளவில்லை, அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் ஒரு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சுஷாந்த் சிங் மரணமும் திரைப்படமாக இருக்கிறது. தற்கொலையா? கொலையா? : ஒரு நடிகன் மறைந்து விட்டான் என அப்படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஷாமிக் மௌலிக் என்பவர் இயக்குகிறார்.

சினிமா பின்புலமே இல்லாத குடும்பங்களில் இருந்து வரும் நடிகர்களை திரையுலகம் எப்படி நடத்துகிறது, அவர்கள் தங்கள் இடத்தை தக்க வைத்துக் கொள்ள எப்படியெல்லாம் போராட வேண்டியிருக்கிறது என்பது தான் இந்த படத்தின் கதைக்களம்.
ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவனின் குடும்பத்திற்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் நிவாரண உதவி செய்துள்ளனர்.
ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ரஜினியின் வீட்டை சோதனை செய்தபோது வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதால் இது வதந்தி என்பது உறுதியானது.

இதனையடுத்து காவல்துறையினர் விசாரணையில் கடலூரைச் சேர்ந்த 15 வயது 8ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் தன்னுடைய தந்தையின் மொபைல் போனை எடுத்து ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த சிறுவனை காவல்துறையினர் விசாரணை செய்தனர். அப்போது அந்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. மேலும் அந்த சிறுவனை எச்சரித்துவிட்டு அவருடைய பெற்றோரிடம் எழுதி வாங்கிவிட்டு சிறுவனை விடுவித்தனர்.

இந்த நிலையில் கடலூர் ரஜினி மக்கள் மன்றத்தினர், அந்த சிறுவனின் வீட்டிற்கு சென்று நிவாரண உதவி செய்ததோடு சிறுவனின் தாய்க்கு ஆறுதல் கூறினார்கள்.
ஜூன் 27ஆம் தேதி திருமணம் செய்ய காரணம் என்ன என்பது குறித்து நடிகை வனிதா விளக்கம் அளித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் விஜய்யுடன் சந்திரலேகா என்ற படத்தில் நடித்துள்ளார். இவருக்கும், பீட்டர் பால் என்பவருக்கும் ஜூன் 27ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. தனது 3-வது திருமணம் குறித்து நடிகை வனிதா விஜயகுமார் தனது யூடியூப் சேனலில் விளக்கியுள்ளார்.

அந்த வீடியோவில் வனிதா விஜயகுமார் பேசியிருப்பதாவது, “எனக்கு 27-ம் தேதி திருமணம். ஏன் கொரோனா லாக்டவுனில் இந்த திருமணம் என்ற கேள்வி நிறைய பேருக்கு இருக்கலாம். டிசம்பரில் அவரை இயக்குநராக சந்தித்தேன். ஹாலிவுட், பாலிவுட் எனது நிறைய தமிழ் படங்களில் அவர் பணியாற்றியிருக்கிறார். ஐந்தாவது லாக்டவுன் அறிவிப்பதற்கு முன்னால் என்னிடம் காதலை தெரிவித்தார். என் மகள் அதை ஏற்றுக் கொள்ளும்படி என்னிடம் கூறினார்.

ஜூன் 27-ம் தேதியை திருமண தேதியை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்றால். நான் எது செய்வதாக இருந்தாலும் என்னுடைய அம்மாவிடம் கேட்பேன். என் அம்மாவிடம் ஏதாவது சொல்லுங்கள் என்று நினைத்தபடி இருந்தேன். 5 நிமிட இடைவெளிக்கு பின்னர் என்னுடைய மொபைலை எடுத்து பார்த்த போது ஜூன் 27 என்ற தேதி மட்டும் கண்ணில் பட்டது. அப்போது நான் அழுதுவிட்டேன். அவரும் என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். என்ன ஆனது என்று விசாரித்தார். 27-ம் தேதி திருமணம் செய்து கொள்ளலாம் என்று அவரிடம் சட்டென கூறினேன். மகிழ்ச்சியடைந்த அவர் அதற்கு ஏன் அழுகிறாய் என்றார். நான் என் அம்மாவிடம் சம்மதம் கேட்டு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது தான் எனக்கு ஜூன் 27-ம் தேதி என் போனில் தெரிந்தது.
அந்த தேதி தான் என்னுடைய அம்மா - அப்பாவுடைய கல்யாண நாள். அம்மாவுக்கு அது ரொம்பவும் ஸ்பெஷலான நாள். அந்த நாளில் திருமணம் செய்து கொள்வதால் என் பெற்றோரின் ஆசிர்வாதம் கிடைக்கும் என நினைக்கிறேன்” இவ்வாறு வனிதா அந்த வீடியோவில் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
கவர்ச்சி உடை அணிந்து புகைப்படம் வெளியிட்டால் விமர்சிக்கிறார்கள் என்று நடிகை ரியாசென் கோபமாக கூறியிருக்கிறார்.
பாரதிராஜா இயக்கத்தில் அவரது மகன் மனோஜ் கதாநாயகனாக நடித்த தாஜ்மகால் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரியா சென். தொடர்ந்து குட்லக், அரசாட்சி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் பிரபல இந்தி நடிகை மூன் மூன் சென்னின் மகள் ஆவார்.

ரியாசென் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி அரைகுறை உடையில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். திரைப்படங்களில் எல்லை மீறி கவர்ச்சி காட்டுவதாகவும் முத்தகாட்சிகளில் நடிப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கு பதில் அளித்து ரியா சென் கூறியதாவது:-

“நான் குட்டை பாவாடை அணிவதை சர்ச்சையாக்குகின்றனர். முத்தகாட்சியிலும் கவர்ச்சியாகவும் நடித்தால் துணிச்சலாக செய்துள்ளார் என்கின்றனர். முன்னணி நடிகைகள் இதுபோல் உடை அணிந்தாலோ முத்த காட்சிகளில் நடித்தாலோ யாரும் கண்டு கொள்வது இல்லை. என்னை மட்டும் குறிவைத்து தாக்குகின்றனர். சினிமாவில் எனக்கு நண்பர்களாக இருக்கும் நடிகர் நடிகைகள் உன்னை மட்டும் ஏன் தொடர்ந்து அசிங்கப்படுத்துகிறார்கள் என்று கேட்கின்றனர்.எனது படங்கள் திரைக்கு வரும்போதெல்லாம் இந்த தாக்குதல் நடக்கிறது.“ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தன்னுடைய படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு சிறப்பாக நடனம் ஆடிய ரசிகரின் திறமையை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியிருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசனின் மாபெரும் வெற்றிப் படங்களுள் ஒன்று அபூர்வ சகோதரர்கள். இதில் கமல்ஹாசன் மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். இப்படத்தில் அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ என்கிற பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது.
இந்த நிலையில், அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ பாடலுக்கு நடிகர் அஸ்வின் குமார் டிரெட் மில்லில் நடனமாடி அந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். சுமார் ஒரு வாரத்திற்கு பின்னர், இந்த வீடியோ கமல்ஹாசனின் கண்களில் பட, அந்த வீடியோவை பார்த்து ரசித்த கமல்ஹாசன், அதை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு தனது அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அந்த வீடியோவில் ஆடிய அஸ்வின் குமாரை பாராட்டிய கமல் கூறியிருப்பதாவது, நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை! இவ்வாறு கூறியிருக்கிறார்.
நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை! https://t.co/xDfE7PW7Z0
— Kamal Haasan (@ikamalhaasan) June 19, 2020
அஸ்வின் குமார் தமிழில் துருவங்கள் பதினாறு, எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும் சில மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கமல் போட்ட வாழ்த்துக்கு, அஸ்வின் குமார் இது போதும் எனக்கு என்று கூறி மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.






