என் மலர்
சினிமா செய்திகள்
தன்னுடைய படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு சிறப்பாக நடனம் ஆடிய ரசிகரின் திறமையை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியிருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசனின் மாபெரும் வெற்றிப் படங்களுள் ஒன்று அபூர்வ சகோதரர்கள். இதில் கமல்ஹாசன் மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். இப்படத்தில் அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ என்கிற பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது.
இந்த நிலையில், அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ பாடலுக்கு நடிகர் அஸ்வின் குமார் டிரெட் மில்லில் நடனமாடி அந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். சுமார் ஒரு வாரத்திற்கு பின்னர், இந்த வீடியோ கமல்ஹாசனின் கண்களில் பட, அந்த வீடியோவை பார்த்து ரசித்த கமல்ஹாசன், அதை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு தனது அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அந்த வீடியோவில் ஆடிய அஸ்வின் குமாரை பாராட்டிய கமல் கூறியிருப்பதாவது, நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை! இவ்வாறு கூறியிருக்கிறார்.
நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை! https://t.co/xDfE7PW7Z0
— Kamal Haasan (@ikamalhaasan) June 19, 2020
அஸ்வின் குமார் தமிழில் துருவங்கள் பதினாறு, எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும் சில மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கமல் போட்ட வாழ்த்துக்கு, அஸ்வின் குமார் இது போதும் எனக்கு என்று கூறி மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.
கும்கி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அஸ்வின், காதலித்த பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறார்.
‘கும்கி’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர், அஸ்வின். இவர், ‘லட்சுமி மூவி மேக்கர்ஸ்’ பட அதிபர்களில் ஒருவரான சுவாமிநாதனின் மகன் ஆவார். ‘பாஸ் என்ற பாஸ்கரன்,’ ‘ஈட்டி,’ ‘ஜாக்பாட்,’ ‘கணிதன்’ உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து இருக்கிறார்.

இவருக்கும், சென்னை கே.கே.நகரை சேர்ந்த ராஜசேகரின் மகள் வித்யாஸ்ரீக்கும் காதல் மலர்ந்தது. வித்யாஸ்ரீ, அமெரிக்காவில் படித்து, ‘எம்.எஸ்.’ பட்டம் பெற்றவர்.

இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தார்கள். அதைத்தொடர்ந்து ‘கும்கி’ அஸ்வின்-வித்யாஸ்ரீ இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி, இவர்கள் திருமணம் வருகிற 24-ந் தேதி சென்னை சூளைமேட்டில் உள்ள அஸ்வின் வீட்டில் நடக்கிறது.
நடிகையும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவரான யாஷிகா ஆனந்த் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலமாக பிரபல மானவர் யாஷிகா ஆனந்த். மேலும் பிக்பாஸ் இரண்டாவது சீசனிலும் போட்டியாளராக அவர் கலந்து கொண்டு தமிழர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். தமிழ் பேச தெரியவில்லை என்றாலும் அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் ஆதரவு கொடுத்தனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழை கொண்டு அவருக்கு அதிகளவில் சினிமா வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே கமிட்டானார்.
இந்நிலையில் தற்போது யாஷிகா ஆனந்த் பிரபல தொலைக்காட்சியில்ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் ஒரு முக்கிய ரோலில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட்டை திரும்ப வாங்க என்று பிரபல நடிகை கண்கலங்கி வீடியோ வெளியிட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் திடீரென மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அவருடைய தற்கொலைக்கு ஒரு பக்கம் பாலிவுட் திரையுலகமே கண்ணீர் வடித்தாலும், இன்னொரு பக்கம் அவருடைய தற்கொலைக்கு பாலிவுட் முன்னணி பிரமுகர்கள் தான் காரணம் என்று குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ் திரையுலக நடிகர் நடிகைகள் பலரும் சுஷாந்த் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வந்தனர். அந்த வகையில் அஜித் நடித்த ’வில்லன்’ விக்ரம் நடித்த ’ஜெமினி’ உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை கிரண், சுஷாந்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் ஒரு பக்கம் சுஷாந்த் சிரித்தபடி இருக்கும் பழைய வீடியோ பிளே ஆகிக் கொண்டிருக்கும் போது, இன்னொரு பக்கம் கிரண், கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. இந்த வீடியோவில் அவர் ’சுஷாந்த் ப்ளீஸ் திரும்ப வாருங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.
முன்னணி இயக்குனராக வலம் வரும் கௌதம் மேனன் வெப்சீரிஸ்காக பிரபல ஒளிப்பதிவாளருடன் இணைய இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் கௌதம் மேனன். கமல், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களை வைத்து இவர் இயக்கியுள்ளார். இதுமட்டுமின்றி இவர் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் குயின் வெப் தொடரை இயக்கினார். அண்மையில் இவர் இயக்கி யூ டியூபில் வெளியிட்ட , 'கார்த்திக் டயல் செய்த எண், ஒரு சான்ஸ் கொடு பாடல் உள்ளிட்டவை சூப்பர் ஹிட் அடித்தது.


இந்நிலையில் கௌதம் மேனனின் அடுத்ததாக, அமேசான் நிறுவனத்திற்காக வெப் சீரிஸ் ஒன்றை இயக்கவுள்ளார். இத்தொடரில் கௌதம் மேனன், இந்தியாவின் தலைச்சிறந்த ஒளிப்பதிவாளரான பி.சி.ஶ்ரீராமுடன் இணையவுள்ளார். கொரோனா வைரஸ் லாக்டவுன் முடிந்த பிறகு, இந்த வெப் தொடருக்கான வேலைகள் ஆரம்பமாக இருக்கிறது.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்ற படத்தில் நடித்த நடிகைக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது.
ஒக்க மனசு என்கிற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிலும், விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானவர் நிஹாரிகா. இவர் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி குடும்பத்துப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது.

ஆந்திர மாநில குண்டூர் ஐஜி பிரபாகர் ராவ் என்பவரின் மகனும் ஐடி துறையில் பணிபுரிந்து வருபவருமான வெங்கட சைதன்ய ஜோனாலகாடு (Venkata Chaitanya Jonnalagadda) என்பவரை நிஹாரிகா திருமணம் செய்ய இருக்கிறார்.

இவர்களது திருமணத்தை குடும்பத்தினரே நிச்சயித்துள்ளனர். இவர்களுக்கு வருகிற ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு திருமணம் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது.
பழம்பெரும் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர் ஏ.எல்.ராகவன். 1950-களில் இருந்து 1970 வரை தமிழ் திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார். இவரது மனைவி பிரபல நடிகை எம்.என்.ராஜம் ஆவார்.
ஏ.எல்.ராகவனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
இவர் பாடிய காலத்தால் அழியாத சில சிறந்த பாடல்களாவன, எங்கிருந்தாலும் வாழ்க, சீட்டுக்கட்டு ராஜா, என்ன வேகம் நில்லு பாமா, அங்கமுத்து தங்கமுத்து, பொம்பளை ஒருத்தி இருந்தாளாம் உள்ளிட்ட பல பாடல்களால் நன்கு அறியப்பட்டவர். இவர் கடைசியாக ஆடாம ஜெயிச்சோமடா என்கிற படத்தில் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார்.
ஏ.எல்.ராகவனின் மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் சேரன், சென்னையில் கொரோனா பரவலை தடுக்க அரசுக்கு ஐடியா கொடுத்துள்ளார்.
முதல்-அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து டைரக்டர் சேரன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “15 நாட்களில் முடிந்து விடும் என நினைத்து சொந்த ஊருக்கு போகாமல் தயங்கியவர் நிறைய. இப்போது போக நினைக்கிறார்கள். சுகாதாரமாக இருக்கும் அவர்கள் ஏதோ ஒரு காரணங்களுக்காக வெளியில் இருந்து வரும் நபர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டி உள்ளது.
அவர்களுக்கும் அதன் மூலம் பரவும் அபாயம் இருக்கிறது. எனவே சென்னையில் கொரோனாவை நீங்கள் கட்டுப்படுத்த சிறந்த வழி சென்னையில் வாழும் நோய் தொற்று இல்லாதவர்களை அவரவர் ஊருக்கு பத்திரமாக சோதனை செய்து அனுப்பி வைப்பதே ஆகும். அப்போது சென்னையில் நோய் உள்ளவர்களை கண்டறியவும் விரைவில் சரி செய்யவும் ஏதுவாக இருக்கும். இது என் தாழ்மையான கருத்து.

மக்களின் பொருளாதார நிலை வெற்றிடமாக மாறிய நிலையில் இங்கு யாரிடமும் கேட்க முடியாத நிலையில் அவர்கள் உயிரோடு வைத்துக்கொள்ள தங்களின் சொந்த ஊருக்கு செல்ல நினைக்கிறார்கள். அது நியாயமும் கூட. அதற்காக முறையே யோசித்து செயலாற்ற வேண்டியது தங்களின் கடமையாகும் என நினைவூட்டுகிறேன்.” இவ்வாறு சேரன் கூறியுள்ளார்.
சமூக வலைதளத்தில் ஆபாசமாக சித்தரித்து கருத்து பதிவிட்ட நெட்டிசனை, நடிகை அபர்ணா நாயர் போலீஸ் மூலம் தேடிப்பிடித்து நூதன தண்டனை கொடுத்துள்ளார்.
தமிழில் ‘எதுவும் நடக்கும்‘ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் அபர்ணா நாயர். மலையாளத்தில், ரன் பேபி ரன், கல்கி, மல்லுசிங், ஹோட்டல் கலிபோர்னியா உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் ரசிகர் ஒருவர் அபர்ணா நாயரை ஆபாசமாகவும் மோசமாகவும் சித்தரித்து வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டார். தன்னை கொச்சைப்படுத்தியவர் பெயரையும் அவரது முகநூல் பக்கத்தையும் வலைத்தளத்தில் குறிப்பிட்டு அபர்ணா நாயர் கண்டித்தார்.
இது உன்னை போன்றவர்களின் பாலியல் ஆசைகளை தீர்த்துக்கொள்ளும் தளம் அல்ல. உனது வக்கிரமான ஆசைகளை நான் தீர்த்து வைப்பேன் என்று எதிர்பார்க்க வேண்டாம். உனக்கு ஒரு மகள் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை நினைத்து பார். உனக்கு 30 வினாடி சந்தோஷத்தை கொடுப்பதற்காக நான் இங்கு இல்லை.” என்றெல்லாம் சாடினார். அவர் மீது சைபர் கிரைம் போலீசிலும் புகார் செய்தார். போலீசார் அந்த நபரை பிடித்து வைத்து அபர்ணா நாயருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று ஏன் இப்படி வக்கிரமாக பேசினாய் என்று அந்த நபரை எச்சரித்ததாக அபர்ணா வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த நபரிடம் இனிமேல் எந்த பெண்ணுக்கும் அப்படி செய்ய மாட்டேன் என்று எழுதி வாங்கியதாகவும் அவரது குடும்ப சூழலை கருத்தில் கொண்டு புகாரை வாபஸ் பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் நடிகை பூனம் கவுர் இயக்குனர் மீது பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
தமிழில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய நெஞ்சிருக்கும்வரை படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பூனம் கவுர். தொடர்ந்து பயணம், விஷாலின் வெடி, என் வழி தனி வழி, அச்சாரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். ஐதராபாத்தில் வசிக்கும் பூனம் கவர் பிரபல தெலுங்கு இயக்குனர் மீது பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
இயக்குனர் பெயரை குறிப்பிடாமல் டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: “ஒரு பிரச்சினை குறித்து பேச இயக்குனரை சந்தித்தேன். அவரிடம் எனது கஷ்டத்தை சொல்லி சரிபடுத்த முடியுமா என்று கேட்டேன். தற்கொலை செய்து கொள்ள தோன்றுகிறது என்றும் கூறினேன். உடனே அந்த இயக்குனர் நீ செத்தால் அது ஒரு நாள் செய்தி என்றார். அந்த பதில் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சினிமா மாபியா அவரது கட்டுப்பாட்டில் உள்ளது. அவரால் மன அழுத்தம் ஏற்பட்டது.

நடிகைகள் தேர்வு பட்டியலில் இருந்து என்னை நீக்கினார். எனது பட வாய்ப்பை தடுத்தார். அவருக்கு பிடித்தவர்களை மட்டும் நடிக்க வைத்தார். நான் நடிக்க தடை விதிக்க பார்த்தார். அவரது நண்பர் ஒருவரை மனைவியுடன் சேர விடாமல் தடுத்தார். சுஷாந்த் சிங்குக்கு நடந்தது போலவே எனக்கும் நடந்துள்ளது. சிகிச்சை பெறுகிறேன்.”
இவ்வாறு பூனம் கவுர் கூறினார்.
அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பெண்குயின் படத்தின் விமர்சனம்.
நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணான ரிதம் (கீர்த்தி சுரேஷ்), கணவன் கவுதமுடன் (மாதம்பட்டி ரங்கராஜ்) வாழ்ந்து வருகிறார். ஆனால் அவளுக்கு ஏற்கனவே திருமணமாகி அஜய் (அத்வைத்) என்றொரு குழந்தை உண்டு. அந்தக் குழந்தை சிறுவயதில் காணாமல் போனதால், முந்தைய கணவனுடன் (லிங்கா) விவாகரத்து செய்துவிட்டு, கவுதமை திருமணம் செய்துகொண்டிருக்கிறாள் ரிதம்.
இந்த நிலையில், பல வருடங்களுக்குப் பிறகு, காணாமல் போன குழந்தை அஜய் கிடைத்துவிடுகிறேன். ஆனால், அவன் எதையும் பேச முடியாத நிலையில் இருக்கிறான். அஜய்யை கடத்தியவன் முகமூடி அணிந்தவாறு வந்து மீண்டும், மீண்டும் மிரட்டுகிறான். அந்தக் கடத்தல்காரன் யார், அவன் எதற்காக குழந்தையைக் கடத்துகிறான் என்பதை ரிதம் கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

ரிதம் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ். காணாமல் போன தனது குழந்தை மீண்டு வருவான் என்ற நம்பிக்கையில் தவிப்பதாகட்டும், தனது குழந்தையை எப்படியேனும் மீட்க துணிவதாகட்டும், ஒட்டுமொத்த படத்தையும் தனது அபார நடிப்பால் தோளில் சுமந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். கர்ப்பிணி பெண்ணுக்கான உடல்மொழி உள்ளிட்டவற்றை நேர்த்தியாக செய்துள்ளார்.
மற்ற கதாபாத்திரங்களான மாதம்பட்டி ரங்கராஜ், லிங்கா, குழந்தை அத்வைத் உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கின்றனர். குறிப்பாக டாக்டராக வரும் மதியின் நடிப்பு அட்டகாசம்.

படம் ஆரம்பத்தில் மெல்ல நகர்ந்தாலும் போகப்போக வேகமெடுக்கிறது. ஆங்காங்கே வரும் டுவிஸ்ட்டுகள் படத்தை மேலும் சுவாரஸ்யமாக்குகின்றன. பெண்களின் வலிமை அசாத்தியமானது, தாய் பாசத்திற்கு நிகர் எதுவும் இல்லை என்பதை கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் மூலம் அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறார் இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக். வலுவான திரைக்கதை படத்திற்கு பலம்.

இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தான் படத்தின் ஹீரோ என்றே சொல்லலாம். பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். இசையின் மூலம் திரில்லர் காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி, மலைபிரதேசத்தை அழகாகவும், படத்துக்கு தேவையான மர்மமான தன்மையுடனும் திறம்பட காட்சிப்படுத்தியிருக்கிறார்.
மொத்தத்தில் 'பெண்குயின்' திரில்லர்.
அய்யப்பனும் கோஷியும் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் கே.ஆர்.சச்சிதானந்தம் என்ற சச்சி காலமானார்.
கதாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர் கே.ஆர்.சச்சிதானந்தம் என்ற சச்சி. இவர் சமீபத்தில் அய்யப்பனும் கோஷியும் என்ற படத்தை இயக்கினார். பிருத்விராஜ், பிஜூ மேனன் நடித்திருந்த இத்திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.


48 வயதாகும் இயக்குநர் கே.ஆர்.சச்சிதானந்தம் சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு திடீரென இதயத்துடிப்பில் பிரச்னை ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்திருக்கிறார். இவர் இறப்புக்கு சினிமா பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.






