என் மலர்
சினிமா செய்திகள்
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பதால் பிரபல பாடகர் தனது மனைவியை பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்திருக்கிறார்.
இந்தி திரையுலகில் முன்னணி பாடகராக இருப்பவர் குமார் சானு. இந்தியில் வெற்றி பெற்ற சாஜன் என்ற தமிழ் டப்பிங் படத்தில் தமிழிலும் பாடி இருக்கிறார். தெலுங்கு, மலையாளம், மராத்தி, போஜ்புரி உள்பட பல மொழி படங்களில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி புகழ்பெற்ற பாடகராக உள்ளார்.

2009-ல் மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இந்த நிலையில் குமார் சானுவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இவருக்கு வயது 62. குமார் சானுவின் முகநூல் பக்கத்தில், துரதிர்ஷ்டவசமாக குமார் சானுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர் குணமடையை பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

வருகிற 30-ந் தேதி தனது மனைவியின் பிறந்த நாளை அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடும்பத்தோடு கொண்டாட குமார் சானு திட்டமிட்டு இருந்தார். கொரோனா பாதிப்பினால் அந்த பயணத்தை ரத்து செய்துள்ளார்.
ரேணிகுண்டா படம் மூலம் பிரபலமான இளம் நடிகை மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக கூறி இருக்கிறார்.
தமிழில் அரண், காசி, பீமா போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த சனுஷா, ரேணிகுண்டா படத்தில் கதாநாயகியானார். தொடர்ந்து நாளை நமதே, எத்தன், நந்தி, அலெக்ஸ் பாண்டியன், கொடிவீரன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது:-

“கொரோனாவின் ஆரம்ப காலம் எனக்கு பெரிய அளவில் கஷ்டத்தை கொடுத்தது. சொந்த வாழ்க்கையிலும் தொழில் ரீதியாகவும் சங்கடங்கள் ஏற்பட்டன. எண்ணங்கள் என்னை பயமுறுத்தின. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டது. பிரச்சினைகளை யாருடன் பகிர்ந்து கொள்வது என்றும் தெரியவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தேன்.

அப்போது மிகவும் பாசம் வைத்துள்ள எனது தம்பியை பற்றி யோசித்தேன். நான் இறந்துபோனால் அவனால் தாங்கி கொள்ள முடியாது என்பதை உணர்ந்து தற்கொலை முயற்சியை கைவிட்டேன். பிறகு டாக்டரை சந்தித்து சிகிச்சை எடுத்தேன். அதன் பிறகு எனது மனதில் இருந்து சுமைகள் விலகி பழைய நிலைக்கு மாறினேன். என்னைப்போல் யாருக்கேனும் மன அழுத்தம் இருந்தால் அவர்கள் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதனை சொல்கிறேன்.”
இவ்வாறு சனுஷா கூறியுள்ளார்.
முன்னணி இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் பிசாசு 2 படத்தில் பிரபல இசையமைப்பாளர் இணைந்திருக்கிறார்.
மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் பிசாசு. தற்போது "பிசாசு 2" படத்தை இயக்கி வருகிறார் மிஷ்கின். இதில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

தற்போது இந்த படத்தில் இசையமைப்பாளராக கார்த்திக் ராஜா இணைந்திருப்பதாக மிஷ்கின் அறிவித்துள்ளார். இது குறித்து இயக்குநர் மிஷ்கின் கூறியதாவது...
பிசாசு படம் கொண்டாடப்பட முக்கிய காரணிகளில் ஒன்று, அதன் தவிர்க்கமுடியாத இசையும் ஆகும். பிசாசு 2 கதையை உருவாக்கியபோது உணர்ச்சி ததும்பும் கதையில் இசைக்கான முக்கியதுவம் விட்டுப்போய்விடக்கூடாது என நினைத்தேன். இசையும் உணர்வுகளும் இரண்டறக் கலந்து இக்கதையை கூற நினைத்தேன்.

தற்போது இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவுடன் இப்படத்திற்காக இணைந்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது இசை பிரபலமான, பல படங்களுக்கு உயிர் தந்திருக்கிறது. அவருடன் இசையமைக்கும் பணியின் ஒவ்வொரு தருணமும் பெரும் சந்தோஷத்தை தருவதாக அமைந்திருகிறது. இன்னும் நெகிழ்வான, சிறப்பான தருணங்களை, இந்த இசைப்பயணம் இருவருக்கும் தருமென நம்புகிறேன் என்றார்.
கலைத்துறையில் அரசியல் தலையீடு மற்றும் எதிர்ப்புகள் முறையற்றது என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறி உள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி, நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் ‘800’ திரைப்படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
‘800’ திரைப்படத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
* காந்தி படத்தை விரும்பி ரசித்ததை போலத்தான் ஹிட்லர் படத்தையும் மக்கள் விரும்பி ரசித்தனர்.
* கலைத்துறையில் அரசியல் தலையீடு மற்றும் எதிர்ப்புகள் முறையற்றது.
* ஒரு இனத்தை இழிவுபடுத்தி காட்சிப்படுத்தக்கூடாதே தவிர சாதனையாளரின் சரித்திரத்தை அறிவதில் தவறில்லை.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் புதிய படத்தில் பிரபல இசையமைப்பாளர் இணைந்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
விஷால் நடிப்பில் தற்போது சக்ரா திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். எம்.எஸ்.ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முழுவதுமாக முடிந்தது. விரைவில் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக இருக்கிறது.
இப்படத்தை அடுத்து அரிமா நம்பி, இருமுகன், நோட்டா படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் நடிக்க இருக்கிறார். இதில் விஷாலுடன் ஆர்யா இணைந்து நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது.

இந்நிலையில், இப்படத்திற்கு தமன் இசையமைக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இசையமைப்பாளர் தமன், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை, தற்போது சமுத்திரகனியுடன் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க இருக்கிறார்.
காலா, விஸ்வாசம் படங்களில் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இப்படத்தை அடுத்து தற்போது சின்ட்ரெல்லா, டெடி, புரவி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றார்.

தற்போது சாக்ஷி அகர்வால் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரகனி நடிக்கும் இதில் அவருடன் இணைந்து ஆக்ஷன் காட்சிகளில் சாக்ஷி அகர்வால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த புதிய படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்க இருப்பதாவும் கூறப்படுகிறது.

விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படத்தை சாக்ஷி அகர்வால் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படத்தின் பாடல் ஒன்று வெளியாகி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் இளம் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவருடைய இசையில் தற்போது விஜய், விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாததால் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. தியேட்டர்கள் திறந்தவுடன் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இசையமைப்பாளர் அனிருத், இன்று பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதற்காக மாஸ்டர் படக்குழுவினர் 'Quit Pannuda' என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிட இருப்பதாக அறிவித்தார்கள். அதன்படி இன்று மாலை 6 மணிக்கு இந்த பாடல் வெளியானது.

வெளியான சில நிமிடங்களில் லட்சத்திற்குமேல் பார்வையாளர்களை கடந்தது. மேலும் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக நான் சொன்ன கேட்பியா என்ற வரி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்த பிரபலமாகி இருக்கும் நடிகர் அதர்வா காதல் திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த முரளியின் மூத்த மகன் அதர்வா. பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகமானவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இவரது தம்பியும் முரளியின் இளைய மகனுமான ஆகாஷுக்கும் விஜய்யின் உறவினரும், 'மாஸ்டர்' படத்தின் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவின் மகள் சிநேகாவுக்கும் சில வாரங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.


இந்நிலையில் அதர்வா கோவாவை சேர்ந்த ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. குடும்பத்தினர் சம்மதத்துக்காக காத்திருந்த அதர்வா அது கிடைத்துவிட்டதால் திருமணத்துக்கு தயாராகி விட்டார் என்கிறார்கள்.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் 800 படத்திற்கு எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படம் உருவாகவுள்ளது. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்திற்கான எதிர்ப்பும் அதிகரித்தது.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் திடீர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இது நாள் வரை என் வாழ்க்கையில் பல சர்ச்சைகளை கடந்தே வந்துள்ளேன் அது விளையாட்டானாலும் சரி தனிப்பட்ட வாழ்க்கையானாலும் சரி, தற்போது எனது வாழ்க்கை வரலாற்று படமான திரைப்படத்தை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கான சில விளக்கங்களை கூற விரும்புகிறேன். என்னை பற்றிய திரைப்படம் எடுக்க நினைப்பதாக கூறி தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகியபோது முதலில் தயங்கினேன். பிறகு முத்தையா முரளிதரனாக நான் படைத்த சாதனைகள் என்னுடைய தனிப்பட்ட சாதனைகள் மட்டும் இல்லையென்பதாலும் இதற்கு பின்னால் எனது பெற்றோர்கள் என்னை வழிநடத்திய ஆசிரியர், எனது பயிற்சியாளர்கள் சக வீரர்கள் என பலராலும் உருவாக்கப்பட்டவன் என்பதாலும் அதற்கு காரணமானவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என நினைத்துதான் இந்த திரைப்படத்தை உருவாக்க சம்மதித்தேன்.
இலங்கையில் தேயிலைத் தோட்ட கூலியாளர்களாக எங்கள் குடும்பம் தங்களது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தது. முப்பது வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற போரில் முதலாவதாக பாதிக்கப்பட்டது இந்திய வம்சாவழியான மலையக தமிழர்கள் தான். இலங்கை மண்ணில் எழுபதுகள் முதல் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கலவரங்கள் முதற்கொண்டு , ஜே வி பி போராட்டத்தில் நடந்த வன்முறை , பின்னர் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் என எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலே தொடர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம்.
என் ஏழு வயதில் எனது தந்தை வெட்டப்பட்டார், என் சொந்தங்களில் பலர் பலியாகினர், வாழ்வாதாரத்தை இழந்து பல முறை நடுத்தெருவில் நின்றிருக்கிறோம். ஆதலால் போர் நிகழும் இழப்பு அதனால் ஏற்படும் வலி என்ன என்பது எனக்கும் தெரியும். முப்பது வருடங்களுக்கு மேல் போர் சூழ்நிலையில் இருந்த நாடு இலங்கை. அதன் மத்தியிலேயேதான் எங்கள் வாழ்க்கை பயணம் நடைபெற்றது. இந்த சூழ்நிலையில் இருந்து எப்படி நான் கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சாதித்தேன் என்பது பற்றியான படம் தான் 800.
இது இப்போது பல்வேறு காரணங்களுக்குக்காக அரசியலாக்கி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் நான் பேசிய சில கருத்துகள் தவறாக திரித்து சொல்லப்பட்டதால் வந்த விளைவு தான். உதாரணமாக நான் 2009 ஆம் ஆண்டு தான் என் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான நாள் என்று 2019-ல் கூறியதை தமிழர்களை கொன்று குவித்த நாள்தான் முத்தையா முரளிதரன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என திரித்து எழுதுகிறார்கள்.

ஒரு சராசரி குடிமகனாக சிந்தித்துப் பாருங்கள் போர் சூழ்நிலையிலேயே இருந்த ஒரு நாட்டில் எங்கு எது நடக்கும் என்பது தெரியாது, என் பள்ளிகாலத்தில் என்னுடன் பள்ளியில் ஒன்றாக விளையாடிய மாணவன் மறு நாள் உயிருடன் இருக்க மாட்டார், வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் வீடு திரும்பினால்தான் நிஜம். இப்படி பட்ட சூழ்நிலையில் போர் முடிவுற்றது ஒரு சராசரி மனிதனாக பாதுகாப்பாக உணர்வது மட்டுமல்லாமல் போர் நிறைவடைந்ததால் கடந்த பத்து வருடங்களாக இரண்டு பக்கமும் உயிரிழப்புகள் ஏதும் இல்லாமல் இருப்பதை மனதில் வைத்தே 2009 ஆம் ஆண்டு எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என்கிற கருத்தினைத் தெரிவித்தேன். ஒரு போதும் நான் அப்பாவி மக்களின் படுகொலைகளை ஆதரிக்கவும் இல்லை ஆதரிக்கவும் மாட்டேன்.
என்னை பொறுத்தவரையில் சிங்களர்கள் இருந்தாலும் மலையக தமிழர்கள் இருந்தாலும் ஈழத்தமிழர்கள் இருந்தாலும் அனைவரையும் ஒன்றாகவே பார்க்கிறேன். ஒரு மலையக தமிழன் நான் என் மலையக மக்களுக்கு செய்த உதவிகளை காட்டிலும் ஈழமக்களுக்கு செய்த உதவிகளே அதிகம். நான் இலங்கை அணியில் இடம்பெற்று சாதனை படைத்த காரணத்தினாலேயே என் மீது ஒரு தவறான பார்வை இருந்து வருகிறது. நான் இந்தியாவில் பிறந்து இருந்தால் நான் இந்திய அணியில் இடம்பெற முயற்சித்திருப்பேன். இலங்கை தமிழனாக பிறந்தது எனது தவறா?
இவை அனைத்தும் விடுத்து சிலர் அறியாமையாலும் சிலர் அரசியல் காரணத்திற்காகவும் என்னை தமிழ் இனத்திற்கு எதிரானவர் என்பது போல் சித்தரிப்பது வேதனையளிக்கிறது.
எவ்வளவு விளக்கமளித்தாலும் எதிர்ப்பாளர்கள் யாரையும் சமாதானப்படுத்த முடியாது என்றாலும் என்னைப் பற்றி ஒரு பக்கம் தவறான செய்திகள் மட்டுமே பகிரப்பட்டு வரும் நிலையில் நடுநிலையாளர்களுக்கும் பொது மக்களுக்கும் இவ்விளக்கத்தை அளிக்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முரளிதரன் பயோபிக் குறித்து முக்கிய அறிவிப்பை நடிகர் விஜய் சேதுபதி ஓரிரு நாளில் அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படம் உருவாகவுள்ளது. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்திற்கான எதிர்ப்பும் அதிகரித்தது.
படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகள் இல்லை என 800 படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே உறுதி அளித்தது. இருப்பினும் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கு முத்தையா முரளிதரன் ஆதரவளித்தவர் என்பதால் படத்தில் நடிக்கும் முடிவை விஜய் சேதுபதி கைவிட வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா, சேரன் பாடலாசிரியர் வைரமுத்து, தாமரை உள்ளிட்டோர் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில், 800 திரைப்படத்தில் முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்க எதிர்ப்பு எழுந்துள்ளதால் நடிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து விஜய்சேதுபதி ஆலோசிக்க உள்ளதாகவும், ஒரிரு நாளில் இதுகுறித்து தனது முடிவை அவர் அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
5 வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கியுள்ள ‘புத்தம் புது காலை’ எனப்படும் ஆந்தாலஜி படத்தின் விமர்சனம்.
திரையுலகில் தற்போது ஆந்தாலஜி என்று அழைக்கப்படும் ஒரு சில குறும்படங்களின் குவியல் பிரபலமாகி வருகிறது. அந்தவகையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக வலம் வரும் கவுதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் உடன் சுஹாசினி மணிரத்னமும் இணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி திரைப்படம் ‘புத்தம் புது காலை’. கொரோனா ஊரடங்கின் போது நடைபெறும் உணர்ச்சி கதைகளாக இந்த குறும்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இளமை இதோ இதோ
முதுமையும் இளமையும் கலந்த காதல் கதை. சுதா கொங்கரா இயக்கி உள்ளார். மனைவியை இழந்த ஒரு ஆணுக்கும், கணவனை இழந்த பெண்ணுக்கும் இடையிலான காதலே இந்தப் படத்தின் கதை. ஜெயராம், ஊர்வசி இருவரும் அனுபவ நடிப்பும், காளிதாஸ் ஜெயராம், கல்யாணி பிரியதர்ஷன் இருவரும் துள்ளலான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். காளிதாஸ் ஜெயராமின் நடனமும், கல்யாணியின் கியுட் எக்ஸ் பிரசனும் ரசிக்க வைக்கிறது. காதலை மிகைப்படுத்தாமல் அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுதா கொங்கரா.

அவரும் நானும்/ அவளும் நானும்
தனது தாயை 30 வருடமாக சந்திக்காமல் இருக்கும் தாத்தா வீட்டிற்கு விருப்பம் இல்லாமல் செல்லும் பேத்தியின் கதை. கவுதம் மேனன் இயக்கத்தில் எம்.எஸ்.பாஸ்கர், ரீது வர்மா நடிப்பில் உருவாகி இருக்கிறது. தனக்கே உரிய பாணியில் படத்தை உருவாகி இருக்கிறார் கவுதம் மேனன். ஹீரோக்களை இங்கிலீஷ் பேச வைக்கும் கவுதம் இந்த படத்தில் தாத்தாவை இங்கிலீஷ் பேச வைத்திருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர் பேசும் ஸ்டைலும் அருமை. தாத்தா பேத்தி மற்றும் இல்லாமல் தந்தை மகள் பாசத்தையும் சொல்லியிருக்கிறார். ஆனால் கொஞ்சம் சுவாரஸ்யமாக தந்திருக்கலாம். எம்.எஸ்.பாஸ்கர், ரீ து வர்மா இருவரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். இறுதியாக வரும் பாடல் அருமை.

காஃபி எனி ஒன்
கோமாவில் இருக்கும் தாயை சந்திக்க வரும் மகள்கள், 75 வது பிறந்தநாளை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை கதையாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சுஹாசினி மணிரத்னம். மனைவியை ஐசியு-வில் வைத்து பார்க்க முடியாது. கடைசி காலத்தில் நான் பார்த்துக் கொள்வேன் என்று சொல்லும் கணவனின் அரவணைப்பு ரசிக்க வைக்கிறது. சிறிய நேரத்தில் கணவன் மனைவி பாசம், தாய் மகள் பாசத்தை கச்சிதமாக சொல்லி இருக்கிறார்கள். சுஹாசினி, அனுஹாசன், ஸ்ருதி ஹாசன் ஆகியோரின் நடிப்பு யதார்த்தம்.

ரீயூனியன்
பாரில் வேலை செய்யும் போதை பொருளுக்கு அடிமையான பெண், லாக்டவுனில் மருத்துவ நண்பர் வீட்டில் தங்கும் கதை. மாடர்ன் பெண் தோற்றத்திற்கு ஆண்ட்ரியா சிறப்பான தேர்வு. லீலா சாம்சன், குருச்சரண் ஆகியோர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கிறார் ராஜீவ் மேனன். படம் ரசிக்கும் படி இருந்தாலும் காட்சிகள் யதார்த்த மீறல் போல் உள்ளது.

மிராக்கிள்
லாக்டவுன்ல் திருடி பிழைப்பு நடத்த நினைக்கும் இரண்டு திருடர்கள் கதை. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பாபி சிம்ஹா நடிப்பில் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. சிறப்பான கூட்டணியாக இருந்தாலும் இவர்கள் வைத்திருக்கும் டுவிஸ்ட் யூகிக்கும் படி அமைந்துள்ளது. சூது கவ்வும் பகலவனை பார்த்த அனுபவத்தை கொடுத்து இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். பாபிசிம்ஹாவின் உடல்மொழி ரசிக்கும்படி உள்ளது. இறுதியில் வரும் திருப்பம் சுவாரசியத்தை கொடுக்கிறது.

ஒளிப்பதிவும், பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு படத்திற்கும் வெவ்வேறு ஒளிப்பதிவாளர்கள் எனினும் அனைவருமே அழகாக படமாக்கியிருக்கிறார்கள்.
மொத்தத்தில் ‘புத்தம் புது காலை’ புத்துணர்ச்சி.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் திரிஷாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் திரிஷாவுக்கு தற்போது 37 வயது ஆகிறது. சக நடிகைகள் திருமணம் செய்து குடும்பத்தோடு ஐக்கியமான பிறகும் திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருக்கிறார். அவருக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி முறிந்துவிட்டது.
பின்னர் தெலுங்கு நடிகர் ராணாவும், திரிஷாவும் பட விழாக்களில் ஜோடியாக பங்கேற்றதை வைத்து இருவரையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் ராணாவும் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் திரிஷாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் அவர் திருமணம் செய்து கொள்வார் என்றும் மாப்பிள்ளை யார் என்பதை ரகசியமாக வைத்துள்ளனர் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகின்றன. சிம்புவை திரிஷா மணக்கப் போகிறார் என்றும் புதிய தகவல் பரவி உள்ளது.
ஆனால் திரிஷா, சிம்பு ஆகியோர் தரப்பில் இதனை உறுதிப்படுத்தவில்லை. சிம்புவின் தந்தை டி.ராஜேந்தரிடம் இந்த கேள்வியை எழுப்பியபோதும் அவர் பதில் சொல்லவில்லை. இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஜோடியாக நடித்து இருந்தனர். அந்த படம் பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.






