என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் அனிருத்திற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ், முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
    தனுஷ் நடித்த ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதைத் தொடர்ந்து ‘வேலையில்லா பட்டதாரி’, ‘மாரி’, ‘தங்கமகன்’ ஆகிய தனுஷ் நடித்த படங்களுக்கும், ‘எதிர்நீச்சல்’, ‘நானும் ரவுடிதான்’ ஆகிய தனுஷ் தயாரித்த படங்களுக்கும் இவரே இசையமைப்பாளராக பணிபுரிந்தார். சூப்பர் ஹிட் கூட்டணியாக வலம்வந்த இவர்கள் இருவரும் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த 6 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றவில்லை. 

    இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனிருத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தனுஷ், முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதாவது, தனுஷின் 44-வது படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளது. குட்டி, உத்தம புத்திரன், யாரடி நீ மோகினி போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர், இப்படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    பழம்பெரும் பெண் ஆடை வடிவமைப்பாளர் பானு ஆதெய்யா நேற்று காலமானார். அவருக்கு வயது 91.
    மும்பையை சேர்ந்த பழம்பெரும் பெண் ஆடை வடிவமைப்பாளர் பானு ஆதெய்யா, பல ஆண்டுகளாக நோய் வாய்பட்டு இருந்த நிலையில் நேற்று காலை மும்பையில் உள்ள வீட்டில் உயிரிழந்தார். அவருக்கு வயது 91. 

    அவரது உடல் தென்மும்பையில் உள்ள சந்தன்வாடி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவர் 1956-ம் ஆண்டு வெளியான சி.ஐ.டி. திரைப்படத்தின் மூலம் ஆடை வடிவமைப்பாளராக அறிமுகம் ஆனார். அதன்பிறகு சுமார் 50 ஆண்டு திரையுலக பயணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி உள்ளார்.

    பானு ஆதெய்யா

    1990-ம் ஆண்டு வெளியான ‘லெக்கின்’, 2001-ம் ஆண்டு வந்த ‘லகான்’ ஆகிய படங்களுக்காக தேசிய விருதையும் பெற்று உள்ளார். இதேபோல அவர் 1983-ம் ஆண்டு ரிச்சர்ட் அட்டென்பரோ இயக்கிய ‘காந்தி‘ என்ற படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்காக ஆஸ்கார் விருதை பெற்று இருந்தார். ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    பிரபல இசையமைப்பாளர் அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படக்குழுவினர் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
    தமிழில் இளம் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவருடைய இசையில் தற்போது விஜய், விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாததால் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. தியேட்டர்கள் திறந்தவுடன் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அனிருத்

    இசையமைப்பாளர் அனிருத், தனது பிறந்தநாளை அக்டோபர் 16ம் தேதி (நாளை) கொண்டாட இருக்கிறார். இதற்காக மாஸ்டர் படக்குழுவினர் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது அனிருத் பிறந்தநாளான நாளை மாலை 6 மணிக்கு 'Quit Pannuda' என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
    முன்னணி நடிகையான தமன்னா, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீட்டுக்குச் சென்ற போது அவரது பெற்றோர்கள் கட்டியணைத்து வரவேற்றிருக்கிறார்கள்.
    தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. கடந்த ஆகஸ்ட் மாதம் தமன்னாவின் பெற்றோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தனக்கும் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்கும் பணியாளர்களுக்கும் தொற்று இல்லை" எனக்கூறியிருந்தார்.

    இதையடுத்து ஷூட்டிங்கிற்காக ஐதராபாத் சென்ற தமன்னாவிற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஐதராபாத்தில் சில நாட்கள் தங்கி இருந்தார். 

    தமன்னா

    இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட தமன்னா மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றிருக்கிறார். வீட்டிற்கு வரும் தமன்னாவை வாசலிலேயே வரவேற்று அவருடைய அப்பாவும், அம்மாவும் கட்டியணைத்து வரவேற்றார்கள். தான் மீண்டு வந்ததைப் பற்றியும் உருக்கமான வீடியோ ஒன்றை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா, விஜய் மற்றும் விஜய் சேதுபதியுடன் நடித்த படத்தை இணைத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் திரிஷா. இவர் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்புவுடன் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இக்குறும்படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக இருந்தது.

    திரிஷா நடிப்பில் பரமபதம் விளையாட்டு, கர்ஜனை, ராங்கி உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார். 



    இந்நிலையில் திரிஷா, விஜய்யுடன் நடித்த ‘கில்லி’, விஜய் சேதுபதியுடன் நடித்த ‘96’, ஆகிய படங்களின் காட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு அதற்கு ‘டூ இன் ஒன்’ என்று தலைப்பிட்டிருக்கிறார்.

    இந்த வீடியோ தற்போது ரசிகர்களை அதிகம் கவர்ந்து, லைக்குகளை குவித்து வருகிறது. 
    போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராகினி கொடுத்த தகவலின் பேரில் அஜித் பட நடிகர் வீட்டில் விசாரணை நடைபெற்றுள்ளது.
    நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பின்னர் போதைப் பொருள் குறித்த விவாதங்கள் பாலிவுட் விவாதங்கள் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. ஆனால் கர்நாடக திரை நட்சத்திரங்கள் மத்தியில் போதைப் பொருள் புழங்குவதாக பல மாதங்களுக்கு முன்பே விசாரணை தொடங்கப்பட்டு விட்டது. 

    இந்த விசாரணை மத்தியக் குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் போதைப் பொருள் பயன்படுத்தியது மற்றும் அந்தக் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக நடிகை ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி மற்றும் அவர்களது நண்பர்கள் என 14 பேர் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    விவேக் ஓபராய்

    இந்நிலையில் பெங்களூரு சிறையில் இருக்கும் நடிகை ராகினி திவேதி அளித்த தகவலின்பேரில் மும்பையில் உள்ள நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
    தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் ரம்யா பாண்டியன் சின்னத்திரை நடிகருக்கு ஜோடியாக ஒரு வெப் தொடரில் நடித்து இருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா பாண்டியன். இவர் நடிப்பில் ஜோக்கர், ஆண் தேவதை ஆகிய படங்கள் வெளியாகியிருக்கிறது. தற்போது பிக்பாஸ் போட்டியாளராக இருக்கிறார்.

    இவர் நடிப்பில் தற்போது முகிலன் என்ற வெப் சீரிஸ் ஒன்று உருவாகி உள்ளது. இதில் இவருக்கு ஜோடியாக சின்னத்திரை புகழ் கார்த்திக் ராஜ் நடித்திருக்கிறார். உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ‘முகிலன்’ வெப் சீரிஸ் கேங்க்ஸ்டர் கதையம்சத்தை கொண்டது. 

    கார்த்திக்ராஜ் ரம்யா பாண்டியன்

    இதில் ராபர்ட் மாஸ்டர், ஆடுகளம் நரேன், ஜூனியர் பாலையா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஸ்ரீ ராம் இந்த வெப் சீரிசை இயக்கி இருக்கிறார். விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார்.

    அக்டோபர் 30 ஆம் தேதி ஜி5ல் இந்த வெப் தொடர் வெளியாக இருக்கிறது.
    வி.கே.பிரகாஷ் இயக்கத்தில் சம்யுக்தா மேனன், நாசர், கிஷோர் நடிப்பில் உருவாகி வரும் எறிடா படத்தின் முன்னோட்டம்.
    மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெற்றி படங்களை இயக்கிய வி.கே.பிரகாஷ், 'எறிடா' படத்தின் மூலம் தமிழில் வெற்றி இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். அரோமா சினிமாஸ், குட் கம்பெனி மற்றும் ட்ரெண்ட்ஸ் ஆட்பிலிம் மேக்கர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து 'எறிடா' படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்கள். சம்யுக்தா மேனன், நாசர், கிஷோர், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். 

    கிரேக்க மொழியில் உள்ள வார்த்தை தான் 'எறிடா'. இதற்கு "காதலில் விழுந்த ஒரு பெண் கடவுளைப் பற்றிய கதை" என்று அர்த்தம். அடுத்த காட்சி என்ன என்பதை யூகிக்க முடியாத வகையில் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லராக இந்தப் படம் உருவாகிறது. இதன் மூலம் பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான த்ரில்லர் கதை தயாராகி வருகிறது என உறுதியாக நம்பலாம். 2021-ம் ஆண்டு வெளியீட்டுக்காக இந்தப் படம் தயாராகி வருகிறது.

    நாசர்

    ஒய்.வி.ராஜேஷ் இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.  எஸ்.லோகநாதன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அபிஜித் ஸைலநாத் இசையமைத்துள்ளார். எடிட்டராக சுரேஷ் அர்ஸ், கலை இயக்குநராக அஜய் மன்காட், ஆடை வடிவமைப்பாளராக லிஜி ப்ரேமன் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
    முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் ‘800’ படத்தை தவிர்க்குமாறு விஜய் சேதுபதிக்கு சேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படம் உருவாகவுள்ளது. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்திற்கான எதிர்ப்பும் அதிகரித்தது. விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலக வேண்டும் என திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

    சேரன்

    அந்த வகையில், இயக்குனர் சேரன் இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:  “உலகம் முழுவதுமிருந்து  தமிழர்களின் வேண்டுகோள் 800 வேண்டாம் என.. உங்களை வாழவைத்த மக்களைவிட, உணர்வை விட, தமிழ் ஈழ மக்களின் உயிர்போன கொடும் நிகழ்வை விட இந்தப்படம் பெரிதல்ல சகோதரா.. விட்டுவிடுங்கள். உங்களின் நடிப்புத்தீனிக்கு ஆயிரம் கதாபாத்திரங்கள் காத்திருக்கிறது”. என பதிவிட்டுள்ளார்.
    தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான ராஷி கண்ணா, காதல் திருமணம் தான் செய்வேன் என தெரிவித்துள்ளார்.
    தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராஷி கண்ணா. தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, அடுத்ததாக அரண்மனை 3, மேதாவி, சைத்தான் கா பட்சா போன்ற படங்களில் நடிக்க உள்ளார். இதேபோல் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். 

    அவர் அளித்த பேட்டி வருமாறு: “எனக்கு பயமே கிடையாது. எதுவாக இருந்தாலும் எதிர்த்து போராடுவேன். நான் எல்லோருடனும் சகஜமாக பழகுவேன். நெருக்கமான நண்பர்கள் என்று சினிமா துறையில் யாரும் எனக்கு இல்லை. சிறுவயது தோழிகளுடன் மட்டும் பழகி வருகிறேன்.

    ராஷி கண்ணா 

    திருமணம் எப்போது என்று என்னிடம் கேட்கிறார்கள். நேரம் வரும்போது மனதுக்கு பிடித்தவரை சந்தித்தால் வீட்டில் சொல்லி குடும்பத்தினர் ஒப்புதலோடு காதல் திருமணம் செய்து கொள்வேன். அதாவது காதலித்து பெற்றோர் சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்வேன்.” இவ்வாறு ராஷி கண்ணா கூறினார்.
    நாஞ்சில் விஜயன் தன்னை உருட்டுக்கட்டையால் தாக்கியதாக சூர்யா தேவி போலீசில் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
    சிரிச்சா போச்சு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். பெண் வேடமிட்டு காமெடி செய்வதில் பிரபலம். இவர் சமீபத்தில் நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டு வந்தார். இவருடன் சேர்ந்து சூர்யா தேவி என்ற பெண்ணும் வனிதாவை அவதூறாக பேசி, பின்னர் வனிதாவின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசாரால் சூர்யா தேவி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அந்த சர்ச்சைகள் ஓய்ந்த நிலையில் புது பிரச்சினை உருவாகியுள்ளது.

    சூர்யா தேவி தான் வசித்து வரும் வீட்டிற்கு ரவுடிகளை அனுப்பி தாக்கியதாக நாஞ்சில் விஜயன் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரவுடிகள் தாக்கிய புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து சூர்யா தேவி மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். 

    இந்நிலையில் இந்த விவகாரத்தில் அதிரடி திருப்பமாக நாஞ்சில் விஜயன் மீது சூர்யா தேவி புகார் அளித்துள்ளார். நேற்று மாலை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்திற்கு தலையில் காயங்களுடன்  சூர்யாதேவி வந்தார். அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது: நானும் நாஞ்சில் விஜயனும் ஏறத்தாழ 6 வருடங்களாக நண்பர்களாக பழகி வந்தோம். 

    நாஞ்சில் விஜயன்

    நடிகை வனிதாவிற்கு எதிராக யூ டியூப்பில் கருத்து பதிவிட்டபோது தொடர்ந்து  எனக்கு ஆதரவாக இருந்து வந்த நாஞ்சில் விஜயன் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்பு  வனிதாவுடன் சமரசம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த நான் இதுபற்றி கேட்பதற்காக கடந்த 11-ந் தேதி இரவு நாஞ்சில் விஜயன் வீட்டிற்கு சென்றேன். அப்போது என்னை தகாத வார்த்தைகளால் பேசிய நாஞ்சில் விஜயன் உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் எனது மண்டை உடைந்தது.

    இதை தடுத்த எனது நண்பர் அப்புவையும் கத்தியால்  வெட்டினார். இதில் படுகாயமடைந்த இருவரும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினோம். இந்த நிலையில் நான் 3 பேருடன் வந்து நாஞ்சில் விஜயன் மற்றும் துணை நடிகை ஷீபாவை தாக்கிவிட்டு தப்பி சென்றதாக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு சென்று நாஞ்சில் விஜயன் நாடகம் நடத்தியுள்ளார். 

    ஆகவே என்னையும் எனது நண்பர் அப்புவையும் தாக்கிய நாஞ்சில் விஜயன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். நாஞ்சில் விஜயன் இதுவரை  போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவரது செல்போன் “சுவிட்ச் ஆப்” செய்யப்பட்டு உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
    முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையில் நடிப்பதை தவிர்க்குமாறு விஜய் சேதுபதிக்கு இயக்குனர் பாரதிராஜா கடிதம் எழுதியுள்ளார்.
    இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் ‘800’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் இதுகுறித்து இயக்குனர் பாரதிராஜா விஜய் சேதுபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தாங்கள் செய்யவிருக்கும் 800 என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பற்றிய பயோபிக் படமாக அது உருவாகப் போவதாக அறிந்தேன்.

    நம் ஈழத் தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்த போது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா, சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர் . விளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன். 

    விஜய் சேதுபதி, பாரதிராஜா

    எத்தனையோ துரோகங்களை எம்மினம் கடந்து வந்துள்ளது. எங்களைப் பொருத்தவரை முத்தையா முரளிதரன் ஒரு நம்பிக்கைத் துரோகிதான். அடிபட்ட வலியை நினைவுகூறும் மக்கள் என்னிடம், ஏன் நம்ம விஜய் சேதுபதி அதில் நடிக்கிறார்? மறுத்திருக்கலாமே... என கேட்கின்றனர்.

    அவர்களின் வேதனையும் வலியும் புரியும் அதேசமயம் அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பையும் என்னால் காண முடிந்தது. உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் சார்பாக நான் கோரிக்கை வைக்கிறேன். இனத் துரோகம் செய்த ஒருவரின் முகம் காலகாலமாக உங்கள் முகம் வெறுப்போடே எம் மக்கள் பார்க்க வேண்டுமா. 

    எந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள். தவிர்த்தால் எப்போதும் எம் ஈழ மக்களின் மனதிலும், என் மனதிலும் நன்றியோடு நினைவு கொள்ளப்படுவீர்கள்” என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
    ×