என் மலர்
சினிமா செய்திகள்
தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ராணா தனது காதல் மனைவி மிஹீகாவுடன் ஹனிமூன் சென்றுள்ளாராம்.
ராணா டகுபதி 2010-ல் லீடர் என்கிற தெலுங்குப் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். பாகுபலி படம் தான் இவரை புகழின் உச்சத்துக்குக் கொண்டு நிறுத்தியது. ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். ராணாவுக்கும் ஐதராபாத்தை சேர்ந்த மிஹீகா பஜாஜ் என்ற பெண் தொழில் அதிபருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ந் தேதி திருமணம் நடைபெற்றது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில் மிஹீகா தனது சமூக வலைதள பக்கத்தில் தங்களது தேன் நிலவு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் இருவரும் கடற்கரையில் ஹாயாக படுத்தபடி போஸ் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த புகைப்படம் எந்த இடத்தில் வைத்து எடுக்கப்பட்டது என்ற தகவலை அவர்கள் வெளியிடவில்லை.
சமீபத்தில் வெளியான ‘புத்தம் புதுக் காலை’ என்கிற ஆந்தாலஜி படத்தை கடுமையாக விமர்சித்து பிரபல ஒளிப்பதிவாளர் டுவிட் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களாக வலம் வரும் கவுதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் உடன் சுஹாசினி மணி ரத்னமும் இணைந்து ‘புத்தம் புது காலை’ என்ற ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கியுள்ளனர். இதில் ‘இளமை இதோ இதோ’ என்ற கதையை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம், ஊர்வசி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.
‘அவரும் நானும்/ அவளும் நானும்’ என்ற கதையை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இதில் ரீத்து வர்மா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் ‘மிராக்கிள்’ என்ற கதையை இயக்கியுள்ளார். இதில் பாபி சிம்ஹா, முத்துக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
ராஜீவ் மேனன் இயக்கியிருக்கும் ‘ரீயூனியன்’ கதையில் ஆன்ட்ரியா, லீலா சாம்சன், குருச்சரண் ஆகியோர் நடித்துள்ளனர். சுஹாசினி மணிரத்னம் இயக்கி நடித்திருக்கும் ‘காஃபி எனி ஒன்’ கதையில் அவருடன் இணைந்து ஸ்ருதிஹாசன், அனுஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர்.

கடந்த அக்டோபர் 16-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இத்திரைப்படம் குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நட்ராஜ், “புத்தம் புதுக் காலை. ஆகக் கொடுமை. வாழ்த்துக்கள். தாங்க முடியலடா சாமி” எனவும், மற்றொரு டுவிட்டில் “ஆக சிறந்தவர்கள் தோற்றால் வளர்பவர்களுக்கு இடம் கிடைக்காது” என்றும் பதிவிட்டுள்ளார். நட்டி நட்ராஜின் இந்த டுவிட் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் படத்துக்காக நடிகர் சூர்யா தனது தோற்றத்தை மாற்றியுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் வாடிவாசல். வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து தயாராகிறது. மெரினா போராட்டம் மூலம் உலக அளவில் பிரபலமான ஜல்லிக்கட்டு படத்தில் சூர்யா நடிப்பதால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில், வாடிவாசல் படத்திற்காக நடிகர் சூர்யா தனது தோற்றத்தை மாற்றியுள்ளார். நீண்ட முடி மற்றும் தாடியுடன் அவர் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் சூர்யா தந்தை, மகன் என இருவேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் ‘நவரசா’ என்ற வெப் தொடரில் இயக்குனர் கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம், அடுத்ததாக ‘நவரசா’ என்ற வெப் தொடரை தயாரித்து வருகிறார். 9 தொடர்கள் கொண்ட இந்த வெப் தொடரை கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், கே.வி. ஆனந்த், பிஜாய் நம்பியார், பொன்ராம், சித்தார்த், அரவிந்த்சாமி உள்பட 9 இயக்குனர்கள் இயக்குகின்றனர். இந்த வெப் தொடரின் மூலம் நடிகர்கள் சித்தார்த், அரவிந்த்சாமி ஆகியோர் இயக்குனர்களாக அறிமுகமாகிறார்கள்.

சூர்யா, விஜய் சேதுபது, பார்வதி, சினேகா, ஜெய் ஆகியோர் இந்த வெப் தொடரில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்நிலையில், இந்த வெப் தொடரில் இயக்குனர் கவுதம் மேனனும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கவுதம் மேனன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான விஜய் யேசுதாஸ், இனி அந்த மொழி படங்களில் பாட மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
கே.ஜே.யேசுதாசின் மகனும் பிரபல பின்னணி பாடகருமான விஜய் யேசுதாஸ் இனிமேல் மலையாள படங்களில் பாட மாட்டேன் என்று கூறியுள்ளார். மலையாள திரையுலகில் தமக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றும், அங்கு பலமுறை அவமானங்களை சந்தித்ததாகவும் விஜய் யேசுதாஸ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி உள்ளார். இவரது இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள படங்களில் பாடி தமது திரைப்பயணத்தை தொடங்கிய விஜய் யேசுதாஸ், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவற்றுள் பெரும்பாலான பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகின. இவர் மூன்று முறை கேரள அரசின் விருதையும், ஐந்து முறை பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார். இவர் படைவீரன், மாரி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிப்பில் தனக்கென்று தனி முத்திரை பதித்த வரலட்சுமி சரத்குமார், "கண்ணாமூச்சி" படம் மூலம் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் விஜய் நடித்து மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்த படம் " மெர்சல்". இது இந்த நிறுவனம் தயாரித்த 100வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் அடுத்ததாக "கண்ணாமூச்சி" என்ற படத்தை தயாரிக்கிறது.

பல சவாலான வேடங்களை ஏற்று தனக்கென்று நடிப்பில் தனி முத்திரை பதித்த வரலட்சுமி சரத்குமார், இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த நிறுவனம் அறிமுகம் செய்யும் முதல் பெண் இயக்குனரும் இவர் தான். " கண்ணாமூச்சி" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அரசியல் மற்றும் திரையுலகை சார்ந்த 50 பெண் பிரபலங்கள் ஒரே சமயத்தில் வெளியிட்டுள்ளனர்.
மத ஒற்றுமையை சீர்குலைப்பதாக நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சந்தல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாகவும், மும்பை போலீசாரை மாபியாக்களுடன் ஒப்பிட்டும் கருத்து தெரிவித்து பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சையை கிளப்பினார்.
அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்த மகாராஷ்டிர அரசு சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த கங்கணாவின் மும்பை அலுவலகத்தின் ஒரு பகுதியை இடித்தது. மேலும், கங்கனா மகாராஷ்டிர மாநிலம் வரவும் கடும் கண்டனங்கள் எழுந்தது. ஆனால், கங்கனாவுக்கு இமாச்சலபிரதேச அரசு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கியது.
இதையடுத்து, ’ஒய் பிளஸ்’ பாதுகாப்புடன் இமாச்சலபிரதேசத்தில் இருந்து கங்கனா மீண்டும் மகாராஷ்டிரா வந்தார். அவர் தற்போது தனது சொந்த மாநிலமான இமாச்சலபிரதேசம் வசித்து வருகிறார்.
அவர் கடந்த சில நாட்களாக தனது சமூகவலைதள பக்கமான டுவிட்டரில் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். பாலிவுட்டில் போதைப்பொருள் பழக்கம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்து வருகிறார்.
இதற்கிடையில், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள பள்ளிக்கூடத்தில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சாமுவேல் பெடி (47) நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டியதற்காக 18 வயது இளைஞனால் நேற்று தலைதுண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூரமான கொலைதொடர்பாக நேற்று முதல் தனது டுவிட்டர் பக்கத்தில் கங்கனா அடுக்கடுக்கான கருத்துக்களை பதிவு செய்து வந்துள்ளார். கங்கனாவுடன் இணைந்து அவரது சகோதரி ரங்கோலி சந்தலும் சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்டு வந்துள்ளார்.
பாரிஸ் ஆசிரியர் சாமுவேல் பெடி கொடூரக்கொலை தொடர்பாக கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சமூகவலைதளத்தில் பதிவு செய்த கருத்துக்கள் அனைத்தும் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக மும்பையில் உள்ள பாந்திரா மாஜிஸ்திரேட் மெட்ரோபொலிட்டன் நீதிமன்றத்தில் ஷகில் அஷ்ரப் அலி சயத் என்பர் புகார் மனு அளித்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்ய காவல்த்துறைக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, மத ஒற்றுமையை சீர்குலைத்தல் நடவடிக்கையில் ஈடுபடுவதாக இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124 ஏ, 153 ஏ, 295 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சந்தல் ஆகிய 2 பேர் மீதும் பாந்திரா போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாஸ்க் அணியாமல் சுற்றுலா சென்ற பிரபல நடிகையிடம், சுகாதாரத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது, அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. தற்போது தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு சுற்றுலா தலங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
வார விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முகக்கவசம் இல்லாமல் வருபவர்களிடம் சுகாதாரத்துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அப்போது அங்கு முகக்கவசம் இன்றி வந்த நடிகை அதிதி பாலனிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் ரூ.200 அபராதம் விதித்தனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
பின்னர் அதிதி பாலன் 200 ரூபாயை அபராதம் கட்டி சென்றதாக கூறப்படுகிறது. அதிகாரிகளிடம் நடிகை அதிதி வாக்குவாதத்தில் ஈடுபட்டது சில மணி நேரம் அங்கு பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
ரவி சீனிவாசன் இயக்கத்தில் முருகானந்தம், மேக்னா ஹெலன், பாக்யராஜ், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் கபாலி டாக்கீஸ் படத்தின் முன்னோட்டம்.
இயக்குனர் பாலாவின் தம்பி சந்திரமௌலி தனது மெளலி பிக்சர்ஸ் சார்பில் உருவாக்கி உள்ள படம் கபாலி டாக்கீஸ். இதில் கதையின் நாயகனாக முருகானந்தம் நடித்துள்ளார். இவர், கதாநாயகன் படத்தின் இயக்குனராவார். ஏற்கனவே இவர் "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" "மரகத நாணயம்" படங்களில் காமெடியில் நடித்து கலக்கியவர்.
மேலும் இதில் கதாநாயகியாக மேக்னா ஹெலன் மற்றும் கே.பாக்யராஜ், ஜி.எம்.குமார், இமான் அண்ணாச்சி, சார்லி, மதன் பாப், டான்சர் டியாங்கனா, பி.எல்.தேனப்பன். வேலு பிரபாகரன், வர்ஷன், நவீன், ராஜ்குமார், சக்ரி, ஷீலா, சாய்பிரியா இன்னும் பலர் நடித்துள்ளனர்.
ஜெயசீலன் - முனிகிருஷ்ணன் இருவரும் கலையையும், ராதிகா - சங்கர் இருவரும் நடன பயிற்சியையும், தவசி ராஜ் சண்டை பயிற்சியையும், சினேகன், மதுரகவி, தமிழ் இயலன், விஜயசாகர் நால்வரும் பாடல்களையும் எழுத, ராஜேஷ் கண்ணா படத்தொகுப்பையும் சபேஷ் - முரளி இரட்டையர் இசையையும் கவனிக்க, ஆர்.சுரேஷ்குமார் இணை தயாரிப்பில் மெளலி பிக்சர்ஸ் சார்பில் பி.சந்திரமெளலி தயாரித்துள்ளார். கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து ரவிசீனிவாசன் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரபல நடிகை ஒருவர் வாழ்த்து கூறி மிஸ் யூ என்று பதிவு செய்திருக்கிறார்.
கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகராக அறியப்பட்டவர் சிரஞ்சீவி சார்ஜா. இவரது மனைவி மேக்னா ராஜ். இவர்கள் 2 பேரும் 10 ஆண்டுகள் காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மேக்னா ராஜ் கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் சிரஞ்சீவி சர்ஜா திடீரென மரணம் அடைந்தார். அவரது மரணம் மேக்னா ராஜை நிலைகுலைய வைத்தது.
சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள வீட்டில் வைத்து நடிகை மேக்னாராஜிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் சிரஞ்சீவி சர்ஜா, மேக்னா ராஜின் குடும்பத்தினர், உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் பேனர், மேக்னா ராஜ் அமர்ந்திருந்த நாற்காலி அருகே வைக்கப்பட்டு இருந்தது.

இன்று மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் பிறந்தநாள். இவர் நடிகர் அர்ஜுனின் உறவினர் ஆவார். சிரஞ்சீவி சார்ஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு அர்ஜுனின் மகள், ஐஸ்வர்யா அர்ஜுன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் குழந்தை பருவ புகைப்படத்தை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துகள். மிஸ் யூ என்று பதிவு செய்திருக்கிறார்.
சென்னை கோடம்பாக்கத்தில் மது போதையில் அதிவேகமாக கார் ஓட்டிய கன்னட நடிகைக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
சென்னை கோடம்பாக்கத்தில் நேற்று முன் தினம் இரவு அதிவேகமாக சென்ற காரை சில வாகன ஓட்டிகள் ஆற்காடு சாலையில் மடக்கிப் பிடித்தனர். ஓட்டுனர் இருக்கையில் இருந்த பெண் குடிபோதையில் காரை ஓட்டி வந்தது தெரியவந்தது. அவர் கர்நாடகவை சேர்ந்த நடிகை வம்ஷிகா என்பதும் தெரியவந்தது. பின்னர் பொது மக்களுடன் அந்த நடிகை வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நடிகை வம்ஷிகா குடிபோதையில் இருப்பதை உறுதி செய்ததையடுத்து பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நேற்று மாலை விசாரணைக்காக பாண்டி பஜார் காவல்நிலையம் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, காரின் பதிவு எண் கர்நாடக பகுதியை சேர்ந்தது என்பதால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தான் மது அருந்திருந்ததாகவும் ஆனால் சுய நினைவோடுதான் இருந்ததாக தெரிவித்தார்.

மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டுவது தவறுதான், ஆனால் உலகில் யாரும் செய்யாத தவறை தான் செய்யவில்லை என விளக்கமளித்தார். மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக காவல்துறையினர் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்திருப்பதாக நடிகை வம்ஷிகா தெரிவித்தார்.
பாகுபலி படம் மூலம் உலக ரசிகர்களை கவர்ந்த நடிகர் பிரபாஸின் பிறந்த நாளுக்கு ராதே ஷ்யாம் படக்குழுவினர் சிறப்பு அறிவிப்பை வெளியிட இருக்கிறார்கள்.
பாகுபலி படம் மூலம் உலக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பிரபாஸ். இவர் வரும் அக்டோபர் 23 அன்று தனது பிறந்தநாளை கொண்டாட தயாராகிறார். அந்த தருணத்தில், 'ராதே ஷ்யாம்’ தயாரிப்பாளர்கள் அக்டோபர் 23 அன்று #BeatsOfRadheShyam என்ற ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஸ்பெஷல் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது.
'ராதே ஷ்யாம்’ திரைப்படம் ஐரோப்பாவில் நடக்கும் ஒரு காதல் காவியம். இப்படத்தில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பூஜா ஹெஜ்டேவின் பிறந்தநாளன்று அவரது பர்ஸ்ட் லுக்கை தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர். இப்படத்தில் சச்சின் கடேகர், பாக்யஸ்ரீ, பிரியதர்ஷினி, முரளி ஷர்மா, சாஷா சேட்ரி மற்றும் குணால் ராய் கபூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

கொரோனா அச்சுறுத்தால் நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. பன்மொழி திரைப்படமான ‘ராதே ஷ்யாம்’ திரைப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்க, யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வம்சி மற்றும் ப்ரமோத் இப்படத்தை தயாரிக்கின்றனர்.






