என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    யாமிருக்க பயமேன் பட இயக்குனர் டிகே இயக்கும் பேய் படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் கவுதம் கிச்சலு என்கிற தொழிலதிபருடன் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 

    இவர் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா, தமிழில் கமலின் இந்தியன் 2 மற்றும் கல்யாண் இயக்கும் கோஸ்ட்டி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர யாமிருக்க பயமேன் பட இயக்குனர் டிகே இயக்கும் பேய் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

    பிரபு தேவா

    இந்நிலையில், அந்த படத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் அவர் முதன்முறையாக காஜல் அகர்வாலுடன் ஜோடி சேர உள்ளார். இதுதவிர மேலும் இரண்டு ஹீரோயின்களும் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    2020-ம் ஆண்டு தனக்கு சிறபான ஆண்டாக அமைந்ததாக ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்த நவாசுதீன் சித்திக் தெரிவித்துள்ளார்.
    ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்தவர் நவாசுதீன் சித்திக். இந்தி திரை உலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து இந்தியாவின் புகழ் பெற்ற நடிகராக இருக்கிறார். மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே வாழ்க்கை கதை படத்தில் அவரது வேடத்தில் நடித்தும் பிரபலமானார். தேசிய விருதுகளும் பெற்றுள்ளார்.

    இந்நிலையில், இந்த ஆண்டு தனக்கு சிறப்பாக அமைந்ததாக அவர் சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார். மேலும் அவர் கூறியதாவது: “ஒரு சாதாரண மனிதனாக இந்த ஆண்டு மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்கும் அப்படியே சென்றது. ஆனால் ஒரு நடிகனாக பார்த்தால், இந்தாண்டு எனக்குச் சிறப்பாக அமைந்தது. 

    நவாசுதீன் சித்திக்

    நான் நடித்த ‘ராத் அகேலி ஹை’ மற்றும் ‘சீரியஸ் மென்’ ஆகிய படங்கள் இந்த ஆண்டு வெளியாகின. இப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், இந்த ஆண்டு எனக்கு சிறப்பாக அமைந்தது” என நவாசுதீன் சித்திக் கூறியுள்ளார்.
    மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான படத்தின் ரீமேக்கில் ராணாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. சாஷி இயக்கிய இந்தப் படத்தில் அய்யப்பனாக பிஜூமேனனும், கோஷியாக பிருத்விராஜும் நடித்திருந்தனர். இரண்டு அதிகாரிகளின் இடையில் ஏற்படும் ஈகோ மோதலை யதார்த்தமாக எடுத்துக் காட்டியது இந்தத் திரைப்படம். இதனால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இந்தப் படத்திற்கு கிடைத்தது. படம் மிகப்பெரிய வெற்றியையும் அடைந்தது. 

    இந்தப் படத்தை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்ய முயற்சி செய்யப்பட்டு வருகிறது. தமிழில் இந்தப் படத்தை ரீமேக் செய்ய, தயாரிப்பாளர் ஆடுகளம் கதிரேசன் உரிமையை வாங்கி வைத்திருக்கிறார். அதே போல் தெலுங்கு ரீமேக்கிற்கான உரிமையை, தயாரிப்பாளர் சூர்யதேவர நாகவம்சி வாங்கியுள்ளார். 

    பவன் கல்யாண், சாய் பல்லவி

    இந்த படத்தில் பிஜூமேனன் நடித்த அய்யப்பன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்க உள்ளார். பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் ராணா நடிக்கிறார். இதன்பின் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் என்றால் அது அய்யப்பன் மற்றும் கோஷியின் மனைவிகள் கதாபாத்திரம் தான். அதன்படி பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவியிடமும், ராணாவுக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
    பிறந்தநாள் கொண்டாடும் பிரபல நடிகைக்கு இயக்குனர் மிஷ்கின் நள்ளிரவில் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
    மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், ‘பிசாசு.’ அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது. முருகானந்தம் தயாரிக்கும் இந்த படத்தையும் மிஷ்கினே இயக்குகிறார். முதன்மை கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    மிஷ்கினின் டுவிட்டர் பதிவு

    இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் இப்படத்தின் நாயகி ஆண்ட்ரியாவுக்கு இயக்குனர் மிஷ்கின் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். பிசாசு 2 படத்தில் இடம்பெறும் ஆண்ட்ரியாவின் தோற்றத்தை நள்ளிரவு வெளியிட்ட மிஷ்கின், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் ஆண்ட்ரியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான், விக்ரம் ஆகியோரின் மகன்களான அர்ஜித், அமீன், துருவ் ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன், தந்தையைப் போன்றே இசையில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். ஓ காதல் கண்மணி, 2.0 உள்ளிட்ட படங்கள் மற்றும் சுயாதீன ஆல்பங்களில் தனது தந்தையின் இசையில் பாடியுள்ளார். சமூகவலைதளத்திலும் ஆக்டிவ்வாக இருக்கும் அமீனுக்கு இன்ஸ்டாகிராமில் 1 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்கள் இருக்கிறார்கள்.

    இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஏ.ஆர்.அமீன் பதிவிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் நடிகர் விக்ரமின் மகன் துருவ், இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித், ஆகியோருடன் அமீன் அமர்ந்துள்ளார். இந்தப் புகைப்படத்திற்கு லைக்ஸ் குவித்து வருகிறது.

    இயக்குநர் ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான், விக்ரம் ஆகியோர் ‘ஐ’ படத்தில் ஒன்றாக பணியாற்றி இருந்தனர். திரைத்துறையில் வெற்றிக்கூட்டணியாக இருக்கும் இவர்களின், அடுத்த தலைமுறையும் நட்பாக பயணிப்பதை உணர்த்துவதாக இந்தப் புகைப்படம் அமைந்திருக்கிறது.  
    பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், சஞ்சய் தத் நடிப்பில் உருவாகி வரும் கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
    2018-ஆம் ஆண்டு வெளியான படம் கேஜிஎப். இதில் நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படம் இந்தியளவில் பெரிய ஹிட் அடித்து, நடிகர் யாஷுக்கு பரவலான ரசிகர்களை உருவாக்கித் தந்தது. இப்படத்தை இயக்கியவர் பிரசாந்த் நீல். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார் பிரசாந்த் நீல்.

    இப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார். இதன் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் முடிவடைந்தது. அப்போது படம் குறித்த முக்கிய அறிவிப்பு டிசம்பர் 21-ந் தேதியான இன்று வெளியிடப்படும் என இயக்குனர் பிரசாந்த் நீல் தெரிவித்திருந்தார்.

    கே.ஜி.எப் 2 படக்குழு வெளியிட்ட போஸ்டர்

    அதன்படி, கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. வருகிற ஜனவரி 8-ந் தேதி காலை 10.18 மணிக்கு கே.ஜி.எப் 2 பட டீசர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. படக்குழுவின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
    விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்ததால் தனக்கு பாலியல் மிரட்டல்கள் வருவதாக நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
    தமிழில் தாம்தூம் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், தற்போது ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்தில் நடித்து முடித்துள்ளார். அடிக்கடி சர்ச்சைக் கருத்துக்களையும் வெளியிட்டு வருகிறார். இந்தி நடிகர்களுக்கு போதைப் பொருள் பழக்கம் இருப்பதாக குற்றம் சாட்டினார். மராட்டிய அரசையும் கடுமையாக சாடினார். இதனால் மும்பையில் அமைந்துள்ள அவரது அலுவலகம் இடிக்கப்பட்டது.

    இந்நிலையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தையும் தற்போது விமர்சித்துள்ளார். இதனால் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. “சமூக வலைத்தளத்தில் எனக்கு கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல்கள் வருகிறது” என்று கங்கனா ரணாவத் குற்றம் சாட்டி உள்ளார். 

    கங்கனா ரணாவத்

    அவர் மேலும் கூறும்போது, “சினிமா துறையில் நான் நேர்மையாக இருந்து இருக்கிறேன். அந்த துறையில் உள்ள பலருக்கு என்னை பிடிக்கவில்லை. மணிகர்ணிகா படம் வெளியானபோது கர்னி சேனாவுடன் மோதியதால் அந்த அமைப்புக்கும் என்னை பிடிக்கவில்லை. நான் ஓட்டுகளை சிதறடிப்பதால் எந்த அரசியல் கட்சியும் என்னை விரும்பவில்லை என்கின்றனர். என் மனசாட்சிப்படி வாழ்கிறேன்” என்றார்.
    பரியேறும் பெருமாள் படத்தில் ஜோடியாக நடித்த கதிர் - ஆனந்தி, விரைவில் புதிய படத்தில் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளார்களாம்.
    அட்டக்கத்தி, மெட்ராஸ், காலா, கபாலி என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் பா.இரஞ்சித். இவர் தயாரிப்பாளராக அறிமுகமான படம் ‘பரியேறும் பெருமாள்’. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. பல்வேறு விருதுகளையும் வென்றது.

    இதில் கதிர் நாயகனாகவும், ஆனந்தி நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இப்படத்தில் இவர்களின் நடிப்பு பெரிதும் பாரட்டப்பட்டது. இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருந்தது படத்திற்கு பலமாக அமைந்தது.

    ஆனந்தி, கதிர்

    இந்நிலையில், அவர்கள் இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளார்களாம். இப்படத்தை இளம் இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    சூரரைப் போற்று, அசுரன் ஆகிய படங்கள் 78-வது கோல்டன் குளோப் விருது விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது.
    ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக உலக அளவில் உயரிய விருதாக கருதப்படுவது கோல்டன் குளோப் விருதுகள். ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் விருது வெல்லும் படங்கள் மற்றும் நடிகர்களுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    78-வது கோல்டன் குளோப் விருது விழா அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஓ.டி.டி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களும் போட்டியில் பங்கேற்க தகுதி உள்ளவை என்று அறிவிக்கப்பட்டு இருந்தன. 

    சூரரைப் போற்று, அசுரன் பட போஸ்டர்கள்

    இந்தப் போட்டிக்கு வெளிநாட்டு படங்கள் பிரிவில் திரையிட உலக அளவில் பல்வேறு மொழிகளில் இருந்து 127 படங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில் 50 படங்கள் திரையிட தேர்வாகி இருக்கின்றன. இந்த பட்டியலில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று, வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் மற்றும் மலையாள படமான ஜல்லிக்கட்டு ஆகிய படங்கள் இடம்பெற்று உள்ளன. 

    இது படக்குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சூரரைப் போற்று படம் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. அசுரன் படம் கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ஏற்கனவே தேர்வாகி இருக்கிறது. ஜல்லிக்கட்டு ஆஸ்கார் விருதுக்காக இந்தியா சார்பில் போட்டியிட அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
    விஜயகுமார் திரை உலகில் நுழைவதற்கு முன்பே திருமணமாகி விட்டது. மனைவி பெயர் முத்துக்கண்ணு. இந்த தம்பதிகளுக்கு கவிதா, அனிதா என்ற 2 மகள்கள். அருண் விஜய் என்று ஒரே மகன்.
    விஜயகுமார் திரை உலகில் நுழைவதற்கு முன்பே திருமணமாகி விட்டது. மனைவி பெயர் முத்துக்கண்ணு. இந்த தம்பதிகளுக்கு கவிதா, அனிதா என்ற 2 மகள்கள். அருண் விஜய் என்று ஒரே மகன்.

    விஜயகுமார் நடிகராகப் புகழ் பெற்ற பிறகு, அவர் காதலித்து மணந்தவர் நடிகை மஞ்சுளா.

    விஜயகுமார் -மஞ்சுளா தம்பதிகளுக்கு வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி என்று 3 மகள்கள்.

    ஸ்ரீதேவி தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். மற்ற 5 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

    தனது குடும்பம் பற்றி விஜயகுமார் கூறியதாவது:-

    "அப்பா வெள்ளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். `கள்ளர் மறவர் கனத்ததோர் அகம்படியர் மெள்ள மெள்ள வந்து வெள்ளாளரானார்' என்றொரு பாடல் உண்டு. இந்த வழியில் வந்த சமூகம் எங்களுடையது. பட்டுக்கோட்டையை சுற்றிலும் உள்ள 32 கிராமங்களில் எங்கள் சமூகத்தவர்தான் இருக்கிறார்கள். இந்த தொகுதியில் போட்டியிடும் எம்.எல்.ஏ.யின் வெற்றி இந்த 32 கிராமங்களில் உள்ளவர்களை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.

    இந்த சமுதாயத்தை சேர்ந்த குடும்பத்தில் இருந்தே திருமணம் நடந்தது. மனைவி முத்துக்கண்ணு நான் நடிக்க வரும் முன்னரே எனக்கு மனைவி ஆனவர். என் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருந்தவர்.

    கலையுலகுக்கு வந்த பிறகு எனக்கு மனைவியான மஞ்சுளா, பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். மனைவியர் இருவருமே சொந்த சகோதரிகள் போல் அன்பு செலுத்துகிறார்கள்.

    மஞ்சுளா பற்றி சொல்ல வேண்டும். திரையுலகில் எம்.ஜி.ஆர் -சிவாஜி என முன்னணி கலைஞர்களுக்கு ஜோடியாக நடித்தவர். ஆந்திராவில் என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ் போன்ற சூப்பர் ஸ்டார்களுடனும் கதாநாயகியாக நடித்தவர். இவர் கலை மூலம் வெளிப்பட்டாலும் இவரது பூர்வீகம் மற்ற துறைகளில் பிரபலமானவர்களைக் கொண்டிருக்கிறது.

    மஞ்சுளாவின் கொள்ளுத்தாத்தா சர் டி.பி.முத்துசாமி அய்யர் சென்னை ஐகோர்ட்டின் முதல் நீதிபதியாக பணியாற்றியவர். அதை நினைவுபடுத்தும் வகையில் சென்னை ஐகோர்ட்டில் அவருக்கு மார்பளவு சிலை வைத்து மரியாதை செய்திருக்கிறார்கள்.

    மஞ்சுளாவின் தாத்தா சர்.டி.ஏகாம்பரம் அய்யர், தமிழ்நாட்டின் முதல் வருமான வரி ஆணையராக இருந்தவர். அப்பா பானிராவ் ரெயில்வேயில் ஐ.ஜி.யாக இருந்தவர். இவர் ஆற்றிய பணி குறித்து இப்போதும் தென்னக ரெயில்வேயில் பெருமையாக பேசிக்கொள்கிறார்கள்.

    மூத்த மகள் கவிதா திருமணமாகி கணவர் ரவிசங்கருடன் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் இருக்கிறாள்.

    அடுத்த மகள் டாக்டர் அனிதாவின் கணவர் கோகுலகிருஷ்ணா. இவர்கள் துபாயில் இருக்கிறார்கள்.

    அடுத்தடுத்த மகள்கள் வனிதாவும், பிரீதாவும் கலைத்துறையைச் சேர்ந்தவர்களை மணந்து கொண்டிருக்கிறார்கள்.

    வனிதா மணந்து கொண்ட ஆகாஷ், நடிகர். பிரீதாவின் கணவர் ஹரி, சினிமா டைரக்டர்.

    மகன் அருண் விஜய்க்கு கடந்த ஆண்டு திருமணமானது. மனைவி பெயர் ஆர்த்தி.

    பிள்ளைகள் திருமண விஷயத்தில் நான் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்'' என்ற கண்ணோட்டத்தில் நடந்து கொண்டேன். ஜாதி மத பேதமின்றி ஒரு இந்தியனாக இருந்து காட்டவேண்டும் என்பது என் முடிவான எண்ணம். கலைத்துறைக்குள் வந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பன்மொழிகளிலும் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது, `என்னை ரசிக்கிற நேசிக்கிற இத்தனை மக்களும் என்னை சொந்தம் கொண்டாடியபோதே, `ஒன்றே குலம் ஒருவனே தேவன்' சிந்தனைக்குள் வந்துவிட்டேன்.

    கோடிக்கணக்கில் நான் சம்பாதிக்காவிட்டாலும், கோடிக்கணக்கான ரசிகர் இதயங்களில் இருக்கிறேன். ஒரு கலைஞனான எனக்கு இதைவிட வேறென்ன சந்தோஷம் வேண்டும்? இந்த வகையில் என்னை கலை மூலம் அடையாளம் காட்டிய கலைத்தாய்க்கும் என் நன்றி.

    என்னை இந்த பூமிக்குத் தந்த என் பெற்றோரையும் நான் கொண்டாடி மகிழ்கிறேன். அப்பா எம்.என்.ரெங்கசாமி என் தன்னம்பிக்கைக்கு ஆணிவேராக இருந்தார். அவர் மட்டும் எனது சினிமா கனவுக்கு உயிர் கொடுக்காதிருந்தால், `நிச்சயம் நீ ஜெயிப்பாய்' என்று வாழ்த்தி சென்னைக்கு அனுப்பாதிருந்தால், பஞ்சாட்சரம் என்ற பெயருடன் கிராமத்தில் சாதாரண பிரஜையாகத்தானே இருந்திருப்பேன்.

    இந்த வகையில் கலை மூலம் என்னை உலகறியச் செய்த அப்பாவுக்கு எங்கள் ஊரில் 1995-ம் ஆண்டு ஒரு சிலை எழுப்பியிருக்கிறேன். அப்பா ரைஸ் மில் நடத்திய இடத்தில் தம்பி சக்திவேல் `எம்.என்.ஆர்' என்ற பெயரில் ஒரு திருமண மண்டபம் கட்டியிருக்கிறார். ரைஸ் மில் இருந்த இடத்தில் என் பங்குக்கான பகுதியில் அப்பாவுக்கு சிலை வைத்திருக்கிறேன்.

    என் தாயாருக்கும் சிலை வைக்கும் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறேன். அப்பா  95 வயதிலும், அம்மா 90 வயதிலும் இறைவனடி சேர்ந்தார்கள். அது உலகப்பிரகாரம். என் இதயப் பிரகாரம் எப்போதும் என்னுடன் சிலையாக மட்டுமின்றி நிலையாகவும் இருந்து கொண்டிருப்பார்கள்.''

    இவ்வாறு நடிகர் விஜயகுமார் கூறினார்.

    விஜயகுமார் இப்போது நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பொறுப்பிலும் இருந்து வருகிறார்.
    சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், கெளதம் மேனன், வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள ‘பாவக் கதைகள்’ எனும் ஆந்தாலஜி படத்தின் விமர்சனம்.
    திரையுலகில் தற்போது ஆந்தாலஜி என்று அழைக்கப்படும் ஒரு சில குறும்படங்களின் குவியல் பிரபலமாகி வருகிறது. அந்தவகையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக வலம் வரும் சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், கெளதம் மேனன், வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் ‘பாவக் கதைகள்’. ஆணவக்கொலையை கதைக்கருவாக வைத்து இந்த நான்கு குறும்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளது.

    தங்கம்

    நாயகன் சாந்தனு இந்து மதத்தை சார்ந்தவர். இவரை முஸ்லிம் மதத்தை சார்ந்த திருநங்கையாக இருக்கும் காளிதாஸ் திருமணம் செய்ய நினைக்கிறார். ஆனால் சாந்தனு காளிதாசனை நண்பராக நினைத்து வருகிறார். மேலும் காளிதாசன் சகோதரி பவானி ஶ்ரீயை சாந்தனு காதலிக்கிறார். சாந்தனு - பவானி ஶ்ரீ இருவரின் காதலுக்கு காளிதாஸ் உதவ மறுக்கிறார். இறுதியில் சாந்தனுவின் காதல் என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.

    பாவக் கதைகள்

    காளிதாஸ் நடிப்பு இப்படத்திற்கு பெரிய பலம். திருநங்கை கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். தமிழ் சினிமாவிற்கு கிடைத்த சிறந்த நடிகர் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு சிறப்பாக நடித்துள்ளார் காளிதாஸ். சாந்தனு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பவானி ஸ்ரீ குறைவான காட்சிகளே வந்தாலும் திறம்பட நடித்திருக்கிறார். 

    சிறிய காதல் கதையை திருநங்கை மூலமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுதா கொங்கரா. சமூகத்தில் திருநங்கைகள் படும் அவலத்தை ஒளிவுமறைவின்றி காட்டியிருக்கிறார். நான் யாரையாச்சு இப்படி தொட்டா ஒண்ணு தப்பா நினைப்பாங்க... இல்லைன்னா தள்ளிப்போவாங்க... யாரும் என்னை இப்படி அன்பா கட்டிப்பிடிச்சது இல்ல தங்கம்" என்று காளிதாஸ் சொல்லும் காட்சி கண் கலங்க வைக்கிறது. 

    இந்தக்கதை 1980களில் நடப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜோமன் டி ஜானின் ஒளிப்பதிவு நம்மை அந்த காலகட்டத்திற்கே கொண்டு செல்கிறது. ஜஸ்டின் பிரபாகரின் பின்னணி இசை அற்புதம். தங்கமே தங்கம் பாடல் மனதை வருடிச் செல்கிறது

    லவ் பண்ண விட்டுடணும்

    கலப்புத் திருமணம் செய்துவைத்து அவர்களை ஆணவக்கொலை செய்து வருகிறார் பதம் குமார். ஜாதி வெறி பிடித்த இவருக்கு இரண்டு மகள்கள். இவர்கள் 2 பேரும் வெவ்வேறு ஜாதி உள்ளவர்களை காதலிக்கிறார்கள். ஆணவக்கொலை செய்து வரும் பதம் குமார் தன் மகளின் காதலை ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? என்பதே படத்தின் கதை.

    படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் அஞ்சலி. சந்தோஷம், மகிழ்ச்சி, கவர்ச்சி என நடிப்பில் கவர்ந்து இருக்கிறார் அஞ்சலி. தந்தையாக வரும் பதம் குமார், முதன்முதலில் நடித்தாலும் அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இவருக்கு அடியாளாக வரும் ஜாபர் சாதிக் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி கவனிக்க வைத்திருக்கிறார். கல்கி கோச்சலின் அட்டகாசமான நடிப்பு ரசிக்கும்படி உள்ளது.

    பாவக் கதைகள்

    விக்னேஷ் சிவன் இந்த கதையை இயக்கி இருக்கிறார். மகளையே கொல்லத் துணியும் தந்தை இறுதியில் அமைதியாக இருப்பது ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. கதாபாத்திரங்களை சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.

    தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைகிறது. அனிருத்தின் பின்னணி இசையும், இறுதியில் மகளுக்காக தந்தை எழுதும் மன்னிப்பு கடிதத்தை பாட்டாக பாடியுள்ள விதமும் சிறப்பு.

    வான் மகள்

    மனைவி சிம்ரன், ஒரு மகன், இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார் கௌதம் மேனன். வயதுக்கு வராத இவரது இரண்டாவது மகளை சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குகின்றனர். போலீசிடம் சென்றால் குடும்ப மானம் போய்விடும் எனத் தவிக்கும் அந்தக்குடும்பம், மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியது யார் என்பதை எப்படி கண்டுபிடித்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

    தந்தையான கெளதம் மேனன் மதுரையிலும், ஒரு சென்னைக்காரராகவே வாழ்ந்திருக்கிறார். எந்தப் பதற்றமும் இல்லாத நடிப்பு. சிம்ரனின் கதாபாத்திரம் படத்திற்கு பெரிய பலம். அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 

    பாவக் கதைகள்

    மகனாக வரும் ஆதித்யா பாஸ்கர் துணிச்சலாக நடித்துள்ளார், மகள்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். கௌதம் மேனன் இயக்கியிருக்கும் இப்படம், தன்னுடைய பாணியில் இருந்து முற்றிலும் வேறுவிதமாக இயக்கி இருக்கிறார்.

    கணேஷ் ராஜவேலுவின் நேர்த்தியான ஒளிப்பதிவு காட்சிக்கும் பலம் சேர்த்திருக்கிறது. கார்த்திக்கின் பின்னணி இசை திரைக்கதையோடு ஒன்றி பயணிக்க வைக்கிறது.

    ஓர் இரவு

    வேற்று ஜாதி இளைஞரை காதலித்து திருமணம் செய்துகொள்ளும் சாய்பல்லவி கணவருடன் பெங்களூருவுக்கு சென்றுவிடுகிறார். மகளின் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரகாஷ் ராஜ், மகள் கர்ப்பமாக இருப்பதை அறிந்ததும் மனம்மாறி பெங்களூருக்கு பார்க்க செல்கிறார். 

    மகளுக்கு வளைகாப்பு நடத்தப்போவதாக கூறி சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார். குடும்பத்தினரை நீண்ட நாட்களுக்கு பின் பார்த்ததும் பாச மழை பொழிகிறார் சாய் பல்லவி. இவ்வாறு மகிழ்ச்சியாக செல்லும் கதையில் சாதி வெறி பிடித்த பிரகாஷ் ராஜ் ஒரு அதிர்ச்சி கொடுக்கிறார். அது என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.

    பாவக் கதைகள்

    வெற்றிமாறன் இயக்கி இருக்கும் இப்படத்தில் ஆணவக்கொலையை வெளிப்படையாக காண்பித்திருக்கிறார்கள். காணும்போது பதற்றத்தை ஏற்படுத்துகிறது. தந்தையாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ், சாய் பல்லவியின் தந்தை - மகள் பாசம் பார்ப்போரை நெகிழ வைக்கின்றது. இறுதியில் பிரகாஷ் ராஜ் செய்யும் வேலைகளை பார்க்க மனதில் தைரியம் வேண்டும். கர்ப்பிணிப் பெண்ணாக வரும் சாய் பல்லவியின் நடிப்பு வேற லெவல். 

    சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவும், சிவாத்மிகாவின் பின்னணி இசையும்  படத்துக்கு பலம் சேர்த்துள்ளது. 

    ஆணவக் கொலைகளை மையமாக வைத்து 4 இயக்குனர்களும் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஆணவக்கொலையின் பயங்கரத்தை சொன்ன இயக்குனர்கள் அதற்கான தீர்வை சொல்லாதது வருத்தம்.

    மொத்தத்தில் ‘பாவக் கதைகள்’ பயங்கரம்.
    தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, பிரபல பாலிவுட் நடிகரின் வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    விஜய் சேதுபதி இமேஜ் பார்க்காமல் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன. சீதக்காதியில் வயதானவராக வந்தார். விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் வில்லன் வேடம் ஏற்றார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது.

    இதனிடையே அமீர்கானின் ‘லால் சிங் சட்டா’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக இருந்த விஜய் சேதுபதி, சில காரணங்களால் சமீபத்தில் அப்படத்தில் இருந்து விலகினார்.

    ஷாஹித் கபூர், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன்

    இந்நிலையில், அவருக்கு மீண்டும் ஒரு பாலிவுட் வாய்ப்பு தேடி வந்துள்ளது. பிரபல இந்தி நடிகர் ஷாஹித் கபூர் ஹீரோவாக நடிக்கும் வெப் தொடரில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  மேலும் இந்த வெப் தொடரில் ஷாஹித் கபூருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளாராம்.
    ×