என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வீட்டில் அலங்காரம் செய்யும் பணிகளை செய்து வந்த மலையாள நடிகர் நிவின் பாலியின் உதவியாளர் ஷபு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
    நடிகர் நிவின் பாலி உள்ளிட்ட பல மலையாளத் திரைப்பட நடிகர்களுக்கு ஒப்பனைக் கலைஞராகப் பணியாற்றியவர் ஷபு. குறிப்பாக நடிகர் நிவின் பாலிக்கு கடந்த 2012-ம் ஆண்டிலிருந்தே ஆஸ்தான ஒப்பனை கலைஞர் இவர்தானாம். அவரின் உதவியாளராகவும் இருந்து வந்துள்ளார்.

    கடந்த ஞாயிறன்று தனது இல்லத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அலங்காரம் செய்யும் பணிகளை ஷபு செய்து வந்துள்ளார். அப்போது கிறிஸ்துமஸ் மரத்தின் உச்சியில் நட்சத்திரம் கட்ட உயரத்தில் ஏறியபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். 

    ஷபு, நிவின் பாலி

    விழுந்ததும் நினைவிழந்த ஷபுவைக் குடும்பத்தினர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. உயிரிழந்த ஷபுவுக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஷபுவுக்கு மலையாள திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
    ரஜினிகாந்த் தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ச்சியாக 14 மணி நேரம் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறாராம்.
    நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் தனி கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட இருப்பதால், அதற்கு முன்பாக தனது காட்சிகளை படமாக்கி முடித்து விடும்படி ‘அண்ணாத்த’ படக்குழுவினரை அறிவுறுத்தினார். இதையடுத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு 9 மாதங்களுக்கு பிறகு ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது.  

    ரஜினிகாந்த் தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ச்சியாக 14 மணி நேரம் படப்பிடிப்பில் பங்கேற்று வருவதாகவும், இதனால் ஏற்கனவே திட்டமிட்டதை விட காட்சிகள் வேகமாக படமாக்கப்படுவதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர். இதற்கிடையே வருகிற 30-ந் தேதி சென்னை திரும்பும் அவர் 31-ந் தேதி தனிகட்சி தொடங்கும் தேதியை அறிவிப்பார் எனத் தெரிகிறது.  

    ரஜினி

    அதன்பிறகு மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்கிறார். பொங்கலுக்குள் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளையும் படமாக்கி முடித்து விட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். அதன்பிறகு முழுநேர அரசியலில் ரஜினிகாந்த் ஈடுபட இருக்கிறார்.
    தனுஷ் நடிக்க இருந்த ‘தி கிரே மேன்’ எனும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    நடிகர் தனுஷ் ஏற்கனவே ‘எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பகீர்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். தற்போது ‘தி கிரே மேன்’ என்ற பெயரில் தயாராகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடிக்கின்றனர். 

    அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய அந்தோனி, ஜோ ரூஸோ ஆகியோர் இப்படத்தை இயக்குகிறார்கள். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்காக தனுஷ் டுவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்து இருந்தார். 

    தி கிரே மேன் பட போஸ்டர்

    அவருக்கு நடிகர்கள் மற்றும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர். ‘தி கிரே மேன்’  படத்தின் படப்பிடிப்பை அமெரிக்காவில் அடுத்த மாதம் தொடங்குவதாக இருந்தனர். ஆனால் கலிபோர்னியா மாகாணத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதால் படப்பிடிப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், சாந்தனுவை போனில் அழைத்து நெகிழ வைத்து இருக்கிறார்.
    கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி பாவக்கதைகள் என்ற ஆந்தாலஜி திரைப்படம் வெளியானது. அதில் இடம்பெற்ற நான்கு குறும்படங்களும் ஆணவக்கொலைகளை மையமாக வைத்து உருவாகின. அதில் சுதா கொங்கரா இயக்கத்தில் சாந்தனு, காளிதாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்த திரைப்படம் தங்கம்.

    இந்த படம் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த படத்தை பார்த்த நடிகர் விஜய், சாந்தனுவை போனில் அழைத்து இவ்வளவு நாள் இந்த நடிப்பு எங்க இருந்தது தங்கம், என்று பாராட்டி இருக்கிறார். இதை சாந்தனு நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

    சாந்தனு - விஜய்

    பாவக்கதைகள் படத்தை, சுதா கொங்காரா, கவுதம் மேனன், வெற்றிமாறன், விக்னேஷ் சிவன் ஆகியோர் இயக்கி இருக்கிறார்கள். 
    நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன், தன்னுடைய அப்பா பாடலுக்கு நடனமாடி வெளியிட்ட வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
    நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் 2013 ஆம் ஆண்டு ‘பட்டத்து யானை’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்த கதாபாத்திரம் பாராட்டுக்களை பெற்றது. 

    இந்நிலையில் ஐஸ்வர்யா அர்ஜுன் தனது தந்தை நடிப்பில் வெளியான ரிதம் படத்திலிருந்து தனக்கு பிடித்த பாடலான ”காற்றே என் வாசல் வந்து..” என்ற பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவு செய்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    ஐஸ்வர்யா அர்ஜுன்

    இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அதிக லைக்குக்களையும் குவித்து வருகிறது.
    தியேட்டர்களுக்கு மூன்று மாத மின்கட்டணம் ரத்து செய்யப்படும் என்று ஆந்திர முதல்வர் அறிவித்துள்ளார்.
    ஆந்திராவில் உள்ள அனைத்து தியேட்டர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாத மின் கட்டணம் முழுமையாக ரத்து ரத்து செய்யப்படுவதாக ஆந்திர முதல்வர் அறிவித்துள்ளார்.

    ஜெகன் மோகன் ரெட்டி

    தற்போதைய மின் கட்டணத்தை தவணை முறையில் கட்டவும் அனுமதி அளித்துள்ளார். மேலும் நகரங்கள், புறநகர்களில் உள்ள தியேட்டர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள தியேட்டர்களுக்கு ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இந்த கடனுக்கு வட்டி இல்லை என்றும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்புவின் வேகத்தை மழை தடுத்து நிறுத்தியதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.
    ஈஸ்வரன் படத்தை தொடர்ந்து சிலம்பரசன் நடித்து வரும் படம் மாநாடு. சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப்படத்தில் அப்துல் காலிக் என்கிற இஸ்லாமிய இளைஞன் கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, இந்தப்படத்தில் வித்தியாச தோற்றங்களில் சிலம்பரசனின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் வியப்பை ஏற்படுத்தின.

    கடந்த சில நாட்களாக பாண்டிச்சேரியில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அங்கே திட்டமிட்டபடி வெளிப்புற காட்சிகளை படமாக்கும்போது புயல் மற்றும் மழை காரணமாக படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. அதேசமயம் அந்த சமயத்திலும் கூட, சிலம்பரசனின் ஒத்துழைப்பால் ஒருநாளை கூட வீணாக்காமல், உள்ளரங்கு காட்சிகள் அனைத்தையும் திட்டமிட்டதற்கு முன்னதாகவே படமாக்கியுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.

    சிம்பு

    அதன்பின்னும் மழை விடாமல் தொடர்ந்தததால் தான், மாநாடு படக்குழுவினர் வேறு வழியின்றி சென்னை திரும்பவேண்டிய சூழல் ஏற்பட்டது. விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக மீண்டும் பாண்டிச்சேரி மற்றும் ஏற்காடு கிளம்புகிறது மாநாடு படக்குழு.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், குறும்படத்தை பாராட்டி வெளியிட்டு இருக்கிறார்.
    டீடோட்டேலர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இணையதளத்தில் வெளியான குறும்படம் "பெண் உறுப்பு". அருண் மிஜோ எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் பூஜா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கே.ஆர்.வினோத் நடித்திருந்தார்.

    பெண்களுக்கான சமூக கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த குறும் படத்தை நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்து வரும் நிலையில் இந்த படம் ஒரு விழிப்புணர்வாக கருதப்படுகிறது.

    பூஜா

    தற்போது இந்த குறும்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் பார்வையை அறம் பட இயக்குனர் கோபி நாயனார் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படக்குழுவினர் ஆண்ட்ரியா பிறந்தநாளுக்கு புகைப்படம் வெளியிட்டு வாழ்த்துக் கூறி இருக்கிறார்கள்.
    விஜய் நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் டீசர் தீபாவளியன்று வெளியானது. யூடியூப் தளத்தில் 'மாஸ்டர்' டீசர் வெளியானது முதல் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. சமீபத்தில் மாஸ்டர் தெலுங்கு டீசர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது.

    ஆண்ட்ரியா - விஜய்

    இந்நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகை ஆண்ட்ரியாவிற்காக மாஸ்டர் படக்குழுவினர் விஜய் உடன் ஆண்ட்ரியா இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி இருக்கிறார்கள். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டிற்கு ஊர் மக்கள் கோவில் கட்டி வழிபாடு செய்து இருக்கிறார்கள்.
    கொரோனா வைரஸ் தாக்கத்தால் நேர்ந்த ஊரடங்கில் நடுத்தர குடும்பத்தினர் பலர் ஒரு வேலை உணவிற்கே திண்டாடி வந்தனர். இவர்களுக்கு தன்னார்வலர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களால் முடிஞ்ச உதவியை மக்களுக்கு செய்து வந்தனர். 

    அந்த வகையில் பாலிவுட் நடிகர் சோனு சூட் 28 மாநிலங்களுக்கு உதவி செய்துள்ளார். அவர் உதவி செய்வதற்காக தனது 10 கோடி மதிப்பிலான சொத்தினை அடமானம் வைத்தார் என்ற செய்தி வெளியானது. இந்நிலையில் கொரோனா காலத்தில் உதவிய அவரின் மனிதநேயத்தை பாராட்டி தெலங்கானா மாநிலத்தில் இருக்கும் சித்திப்பெட் மாவட்டத்தில் துப்ப தண்டா என்ற கிராமத்தில் மாவட்ட அதிகாரிகளின் உதவியுடன் சோனு சூட்டிற்கு கோயில் கட்டி இருக்கிறார்கள்.

    இந்த கோயில் இன்று திறக்கப்பட்ட நிலையில் அந்த கிராமத்து பெண்கள் சோனு சூட்டின் சிலை முன்பு நடனமாடி, ஆரத்தி எடுத்து தங்கள் அன்பினை வெளிப்படுத்தினார்கள்.

    சோனு சூட்

    பிறமாநிலங்களில் போக்குவரத்து வசதியின்றி மாட்டிக்கொண்டிருந்த புலம் பெயர் தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊருக்கு செல்ல சோனு சூட் உதவியுள்ளார். அது மட்டுமில்லாமல் வேலைவாய்ப்புத் தளத்தையும் அமைத்துக்கொடுத்து அந்த கிராம மக்களின் நீங்க இடம் பிடித்துள்ளார். அவரின் மனித நேயத்துக்கு கிடைத்த பரிசு தான் இந்த கோயில் என கிராமத்தினர் கூறியுள்ளனர்.
    கொரோனா ஊரடங்கு இருந்ததால் அவருக்கு அஞ்சலி கூட்டம் நடத்த முடியவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.
    ஆதிக்க வர்க்கம் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை வடபழனியில் உள்ள தனியார் திரையரங்கில் நடைபெற்றது. இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சி முடிந்த பின் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, 'தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை வைத்தால் தியேட்டரில் 100 சதவீத சீட் நிரப்ப பரிசீலனை செய்யப்படும். தமிழக அரசால் அங்கீகாரம் பெற்றது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். அவர்களுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்தும். 

    எஸ் பி பாலசுப்ரமணியம்

    பாடகர் எஸ்பிபி மறைந்த போது கொரோனா ஊரடங்கு இருந்ததால் அவருக்கு அஞ்சலி கூட்டம் நடத்த முடியவில்லை. விரைவில் அரசு சார்பில் அஞ்சலி கூட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். 
    கட்சி மேலிடம் கட்டளையிட்டால் நான் தேர்தலில் போட்டியிடுவேன் என்று நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் கூறியிருக்கிறார்.
    மறைந்த டான்ஸ் மாஸ்டர் ரகுராமின் மகள், காயத்ரி ரகுராம். இவரும் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிப் படங்களுக்கு நடனம் அமைத்திருக்கிறார்.

    சார்லி சாப்ளின் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, பரசுராம், விசில், வை ராஜா வை, யாதுமாகி நின்றாய் உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். இப்போது அவர் நடித்துக்கொண்டே, டான்ஸ் மாஸ்டராகவும் பணிபுரிந்து வருகிறார்.

    காயத்ரி ரகுராம் பா.ஜனதா கட்சியில் உறுப்பினராக இருந்து வருகிறார். வருகிற சட்டசபை தேர்தலில், பா.ஜனதாவுக்காக பிரசாரம் செய்ய முடிவு செய்து இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

    “வருகிற தேர்தலில் பா.ஜனதா கட்சியின் வெற்றிக்காக தமிழ்நாடு முழுவதும் நான் பிரசாரம் செய்வேன். இந்தத் தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெறும்.

    கட்சி மேலிடம் கட்டளையிட்டால் நான் தேர்தலில் போட்டியிடுவேன். வெற்றியும் பெறுவேன். சினிமாவில் பணிபுரிந்து கொண்டே அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன்”

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×