என் மலர்
சினிமா செய்திகள்
முடிந்த பிரச்சினையை கிளப்பாதீர்கள் என்று முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி பேட்டியளித்துள்ளார்.
தனியார் நிறுவனம் தொடங்கிய சர்வீஸ் சென்டர் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய்சேதுபதி, மாஸ்டர் படம் மூலம் மீண்டும் திரையரங்குக்கு மக்கள் வந்திருக்கிறார்கள். விஜய், லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித்குமார், மக்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. இரண்டாவதாக '800' படத்தைப் பற்றிய கேள்வியை செய்தியாளர்கள் முன்வைக்க, ''800' பட பிரச்னை முடிந்துவிட்டது. அதை மீண்டும் கிளப்பாதீர்கள்.' என்றார்.

மாஸ்டர் என்றாலே விஜய்சேதுபதி படம் என்று ஒரு சிலர் கூறுகிறார்களே என்ற கேள்விக்கு, 'இந்தக் கேள்வியே அவசியமில்லாதது. விஜய்யால் மட்டும் தான் அந்தப் படம் இவ்வளவு சிறப்பாக வந்திருக்கிறது.' என்றார்.
தடம், தாராளபிரபு போன்ற படங்களின் நாயகியாக தான்யா ஹோப் தற்போது பிரபல நடிகருடன் இணைந்து இருக்கிறார்.
பல வெற்றிப்படங்களைக் கொடுத்த நடிகர் விமல் மற்றும் குட்டிப்புலி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான குட்டிப்புலி சரவண சக்தி இணையும் புதிய படம் இன்று சென்னையில் பூஜையுடன் துவங்கியது.

எம்.ஐ.கே. புரொடக்ஷன் நிறுவனம் சார்பாக இளையராஜா தயாரிக்கும் இந்தப்புதிய படத்தை எழுதி இயக்குகிறார் குட்டிப்புலி சரவண சக்தி. இவர் ஏற்கெனவே ஜே.கே ரித்திஷ் நடித்த நாயகன், ஆர்.கே சுரேஷ் நடித்த பில்லாபாண்டி ஆகிய படங்களை இயக்கியவர். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இப்படத்தில் நாயகியாக தடம், தாராளபிரபு படங்களின் நாயகி தான்யா ஹோப் நடிக்கிறார். மற்ற நடிகர்களின் விபரம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இன்று பூஜையோடு துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மதுரை ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. விரைவில் இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
சிவா - ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. கடந்த மார்ச் மாதம் வரை இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருந்தது. இதையடுத்து கொரோனா லாக்டவுன் போடப்பட்டதால் கடந்த 9 மாதங்களாக படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருந்தது. இதனிடையே கடந்த டிசம்பர் 14-ம் தேதி அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் தொடங்கியது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்பட்டு படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் சில பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பை தற்காலிகமாக ரத்து செய்தனர். ரஜினி உள்பட படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பினர்.

வருகிற பிப்ரவரி மாதம் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில், அண்ணாத்த படத்தை நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இது ரஜினி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் சீசன்-3 போட்டியில் கலந்து கொண்டவரும் நடிகையுமான ஜெயஸ்ரீ மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கன்னட சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வந்தவர் ஜெயஶ்ரீ ராமைய்யா. இவர் கன்னட பிக்பாஸ் சீசன்-3 போட்டியிலும் கலந்து கொண்டார். மேலும் கன்னட திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று இவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். மிக நீண்ட காலமாகவே இவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதன் விளைவாகவே அவர் தற்கொலை செய்து கொண்டார் எனவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதமே, இவர் தனது பேஸ்புக் பக்கத்தில், ''I quit. Goodbye to this world and depression'' என பதிவிட்டிருந்தார். இதை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியாக, அவர் அந்த பதிவை நீக்கம் செய்தார்.

மேலும் பப்ளிசிட்டிக்காக இப்படி பதிவிடவில்லை என்றும், உண்மையிலேயே தான் மன அழுத்தத்தில் சிக்கி தவிப்பதாகவும் அவர் பேஸ்புக் நேரலையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று அவர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளது திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காமெடி நடிகராக இருக்கும் சதீஷ் பெருமைக்காக டுவிட் போட்டு சிவகார்த்திகேயனிடம் மொக்கை வாங்கியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருப்பவர் சதீஷ். சினிமாக்களில் ஹீரோக்களை வம்பிழுத்து காமெடி செய்வது மட்டுமல்லாமல் ட்விட்டரிலும் அவ்வபோது நடிகர்களிடம் தானாக சென்று வம்பிழுப்பது நகைச்சுவை ட்வீட்கள் போடுவது இவருக்கு பொழுதுபோக்கு.

அப்படித்தான் சமீபத்தில் அவர் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் தமிழகத்தில் அழகான ஆண்கள் அதிகம் உள்ள மாவட்டம் குறித்து லயோலா காலேஜ் நடத்திய ஆய்வில் அழகான ஆண்கள் அதிகம் உள்ளதாக தனது சொந்த ஊரான சேலம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக பார்வேர்டு மெஸேஜை பதிவிட்டிருந்தார்.

அவரது ட்வீட்டுக்கு அவரை கலாய்க்கும் விதமாக பதிலளித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் இந்த கருத்துகணிப்பு நீங்கள் சென்னையில் செட்டில் ஆனதும் நடத்தப்பட்டது என்றும், அப்புறம் அதனாலதான் சென்னை முதலிடம் பெறவில்லை என்பதையும் நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
எஸ்.கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும் ‘ருத்ரன்’ படத்தின் முன்னோட்டம்.
ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் ருத்ரன் படத்தை தயாரிப்பாளர் எஸ்.கதிரேசன் இயக்குகிறார். இவர் தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் மற்றும் ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். ருத்ரன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்கிறார்.

இப்படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார். மேலும் இதில் நாசர், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ருத்ரன் திகில் கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி உள்ளது.
‘தாண்டவ்’ குழுவினரின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று ஒரு அமைப்பு அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியில் பிரபல நடிகராக இருந்து வருபவர் சயீப் அலிகான். இவர், தாண்டவ் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப் தொடரை அலி அப்பாஸ் ஜாபர் இயக்கியுள்ளார். பர்கான் அக்தர் தயாரித்துள்ளார். தாண்டவ் வெப் தொடரில் இந்து மத கடவுளை அவமதித்து இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக நாட்டில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் நடிகர் சயீப் அலி கான், இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘தாண்டவ்’ வெப் தொடர் குழுவினரின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று கர்னி சேனா என்ற அமைப்பு பகிரங்கமாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.
மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி வருகிற அக்டோபர் மாதம் 13-ந் தேதி தசரா பண்டிகையையொட்டி இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பாகுபலி நடிகர் பிரபாஸ் அடுத்ததாக நடிக்கும் பிரம்மாண்ட படத்தில், அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக பிரபாஸை வைத்து சலார் என்ற படத்தை இயக்க உள்ளார். தெலுங்கில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது.

இந்நிலையில், சலார் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் சுருதிஹாசன் புகழ் பெற்ற நடிகையாக இருப்பதால் அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இந்தக் கூட்டணி உறுதியானால் பிரபாஸுடன் சுருதிஹாசன் நடிக்கும் முதல் படம் இதுவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக தனுஷ் பட வில்லனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.
நடிகை மேனகா, தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோரின் மகளான கீர்த்தி சுரேஷ், 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பின்னர் தெலுங்கில் ‘மகாநடி’ படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றார்.
தற்போது ரஜினியுடன் அண்ணாத்த, மகேஷ் பாபுவுடன் ‘சர்காரு வாரி பாட்ட சுரு’, மோகன் லாலுடன் மரைக்காயர் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக தனது தந்தை தயாரிக்கும் மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

‘வாஷி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை விஷ்ணு ஜி ராகவ் இயக்குகிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக டோவினோ தாமஸ் நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் தனுஷின் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அரவிந்த் சாமி தனது டுவிட்டர் பக்கத்தில், தனது மனைவியுடன் சைக்கிளில் உற்சாகமாக பயணித்தபோது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் அரவிந்த்சாமி. இதையடுத்து பம்பாய், மின்சார கனவு போன்ற படங்களில் நடித்த பிரபலமான இவர், சில வருடங்கள் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். பின்னர் மணிரத்தினத்தின் கடல் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த அரவிந்த் சாமி, தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து கவனம் பெற்றார்.
அரவிந்த் சாமி நடிப்பில் ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’, கள்ளபார்ட் ஆகிய படங்கள் உருவாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை தழுவி உருவாகும் ‘தலைவி’ படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் அரவிந்த் சாமி தனது டுவிட்டர் பக்கத்தில், தனது மனைவியுடன் சைக்கிளில் உற்சாகமாக பயணித்தபோது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த புகைப்படத்திற்கு லைக்சும் குவிந்து வருகிறது.
ட்ரிப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய கானா பாலா, அடுத்தடுத்து பாட வாய்ப்பு கிடைக்கவில்லை என வருத்தத்துடன் தெரிவித்தார்.
யோகி பாபு, கருணாகரன், பிரவீன், சுனைனா நடிப்பில் உருவாகி இருக்கும் சயின்ஸ்பிக்ஷன் டார்க் காமெடி படம் ட்ரிப். சாம் ஆண்டனியிடம் உதவியாளராக இருந்த இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இப்படத்தை இயக்கி உள்ளார். சிவப்பு மஞ்சள் பச்சை படம் மூலம் புகழ் பெற்ற இசையமைப்பாளர் சித்து குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கானா பாலா, “நிறைய படங்களில் பாடியிருந்தாலும், அடுத்தடுத்து வாய்ப்பு கிடைக்கவில்லை என வருத்தம் தெரிவித்தார். மேலும் ட்ரிப் படத்தின் மூலம் மீண்டும் பாட வந்துள்ளதாகவும், அதற்கு வாய்ப்பளித்த படக்குழுவினருக்கு நன்றி எனவும் அவர் கூறினார். அதோடு தற்போது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் நடைபெற்று வரும் நிலையில், அதுகுறித்த விழிப்புணர்வு பாடலை பாடி உள்ளதாகவும், அடுத்த வாரம் சென்னை மாநகர காவல் ஆணையர் அதை வெளியிடுவார் என்றும் அவர் தெரிவித்தார்.






