என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால், வைபவ் நடித்துள்ள ‘லைவ் டெலிகாஸ்ட்’ வெப் தொடரின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    முன்னணி நடிகர், நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்க தொடங்கி உள்ளனர். சூர்யாவும் வெப் தொடரில் நடிக்கிறார். தற்போது காஜல் அகர்வாலும் வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடரை வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். தொடருக்கு ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்று பெயர் வைத்துள்ளனர். பேய் கதையம்சம் உள்ள தொடராக தயாராகிறது. இதில் காஜல் அகர்வால் பேயாக வருகிறார். இதில் வைபவ், கயல் ஆனந்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடரின் போஸ்டர்

    இதுகுறித்து காஜல் அகர்வால் கூறும்போது, “சமீப காலமாக வெப் தொடர்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. நடிகர், நடிகைகள் பலரும் வெப் தொடர்களில் நடிக்க ஆரம்பித்துள்ளனர். நானும் வெப் தொடரில் நடிக்கிறேன். 10 தொடர்களாக இது வெளிவரும். தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்துவிட்டேன். சவாலான விஷயங்களில் ஈடுபட எப்போதுமே தயாராக இருக்கிறேன்'' என்றார். இந்த வெப் தொடரின் முதல் எபிசோட் அடுத்த மாதம் 12-ந் தேதி ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று அறிவித்து காஜல் அகர்வால் தோற்றத்தையும் வெளியிட்டு உள்ளனர்.
    ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பால் போனி கபூர் அதிருப்தி அடைந்துள்ளாராம்.
    பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தில், ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், அலியா பட் உள்பட பலர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5  மொழிகளில் உருவாகி வரும் இப்படம் வருகிற அக்டோபர் 13-ந் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழு சில தினங்களுக்கு முன் வெளியிட்டது.

    ராஜமவுலி, போனி கபூர்

    இந்நிலையில், பிரபல தயரிப்பாளர் போனி கபூர் ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு மீது அதிருப்தியில் உள்ளாராம். ஏனெனில் தான் தயாரித்துள்ள ‘மைதான்’ படம் வெளியாகும் அதே வாரத்தில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை வெளியிடுவது விரும்பத்தகாத ஒரு நிகழ்வு என அவர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். ‘மைதான்’ படம் வரும் அக்டோபர் 15-ந் தேதி வெளியாகும் என்று கடந்தாண்டே அறிவித்து விட்டனர். இந்த இரு படங்களிலும் அஜய் தேவ்கன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமான ரம்யா பாண்டியன், அடுத்ததாக சூர்யா படத்தில் நடிக்க உள்ளாராம்.
    தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரம்யா பாண்டியன், போட்டோஷூட் மூலம் மிகவும் பிரபலமானார். பின்னர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இறுதிப்போட்டி வரை முன்னேறினார். இந்நிகழ்ச்சி மூலம் அவரது ரசிகர் வட்டம் பெரிதானது. 

     ரம்யா பாண்டியன், சூர்யா

    இந்நிலையில், நடிகை ரம்யா பாண்டியன் அடுத்ததாக சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்க உள்ளார். இப்படத்தில் நடிக்கும் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறதாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘டான்’ என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது டாக்டர், அயலான் போன்ற படங்களில் நடித்து முடித்து நிலையில், அவர் அடுத்ததாக நடிக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அவர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘டான்’ என பெயரிடப்பட்டுள்ளது.

    டான் பட போஸ்டர்

    அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இப்படத்தை இயக்க உள்ளார். இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். டான் படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். 

    நடிகர் அஜித்தின் மகனான ஆத்விக்கின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். தமிழகத்தில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகர் அஜித் - ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். 

    இந்நிலையில், அஜித்தின் மனைவி ஷாலினி தனது மகன் ஆத்விக்குடன் சமீபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    ஷாலினியுடன் ஆத்விக்

    ஆத்விக்கின் கியூட்டான புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்து வரும் அஜித் ரசிகர்கள், குட்டி தல என்ற ஹேஷ்டேக்கையும் டிரெண்டாக்கி வருகின்றனர். நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
    கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் ஏப்ரல் மாதம் ரிலீசாக இருந்த மாஸ்டர் படம் தள்ளிப்போனது. இதையடுத்து 8 மாதங்களுக்கு பின் கடந்த நவம்பர் மாதம் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அரசு அனுமதி அளித்தது. இருப்பினும் பெரிய படங்கள் எதுவும் ரிலீசாகாததால், திரையரங்குகள் களையிழந்து காணப்பட்டன.

    அதற்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் ரிலீசான படம் தான் மாஸ்டர். பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருவதோடு, வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

    விஜய்

    இந்நிலையில், மாஸ்டர் படத்தை வருகிற ஜனவரி 29-ந் தேதி ஓடிடி-யில் வெளியிட உள்ளனர். அன்றைய தினம், இந்தியா மற்றும் 240 நாடுகளில் மாஸ்டர் திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகும் என அமேசான் பிரைம் நிறுவனம் அறிவித்துள்ளது.
    சில்லுக்கருப்பட்டி படத்தின் இயக்குனர் ஹலீதா ஷமீம் அடுத்ததாக இயக்கி உள்ள ஏலே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    வா குவாட்டர் கட்டிங் மற்றும் விக்ரம் வேதா போன்ற படங்களை இயக்கிய புஷ்கர் காயத்ரியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர் ஹலீதா ஷமீம். இவர் ‘பூவரசம் பீபீ’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் இவர் இயக்கத்தில் வெளியான சில்லுக்கருப்பட்டி எனும் ஆந்தாலஜி படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    ஏலே பட போஸ்டர்

    இதையடுத்து அவர் இயக்கியுள்ள படம் தான் ‘ஏலே’. சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை எஸ்.சசிகாந்துடன் இணைந்து புஷ்கர் காயத்ரியும் தயாரித்துள்ளனர். அவர்கள் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். நேற்று வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இப்படம் வருகிற பிப்ரவரி 12-ந் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    நடிகர் விவேக், நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார்.
    தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விவேக். இவர் தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்ந்துள்ளார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகர் விவேக், நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்தார். முதல்வரிடம் கோரிக்க மனுவையும் அளித்தார்.

    முதல்வரை சந்தித்தது ஏன் என்பது குறித்து நடிகர் விவேக் கூறியுள்ளதாவது: “அரசியலுக்கோ அல்லது என் சொந்த காரணமாகவோ 
    முதல்வர் அவர்களை பார்க்கவில்லை. தமிழ்த் துறவி ‘அருட்பா’ தந்த வள்ளலார் (1823-1874) தன்வாழ்வில் 33 ஆண்டுகள் நடந்து வடிவுடையம்மனை வணங்கிய திருவொற்றியூர் பாதையை ‘வள்ளலார் நெடுஞ்சாலை’ என்று பெயர் சூட்ட மனு அளித்தேன். இன்முகத்துடன் ஏற்றார். நற்செய்தி வரலாம்” என தெரிவித்துள்ளார்.
    தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஸ்ரீ திவ்யா, தற்போது மலையாளத்தில் அறிமுகமாகி உள்ளார்.
    ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடித்தவர் ஸ்ரீதிவ்யா. இந்த படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டதுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும்  பெற்றது. இதையடுத்து காக்கிசட்டை, காஷ்மோரா, ஜீவா, ஈட்டி, மருது என அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வந்த அவர், கடைசியாக 2017ம் ஆண்டு வெளியான ‛சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற திரைப்படத்தில் நடித்தார். 

    கடந்த 3 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த ஸ்ரீ திவ்யா தற்போது, மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். அடுத்ததாக விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக, மழை பிடிக்காத மனிதர் படத்தில் நடிக்கிறார். அதேபோல் பத்ரி வெங்கடேஷ் இயக்கும் புதிய படத்தில் கவுதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

    ஜன கண மண பட போஸ்டர், ஸ்ரீ திவ்யா

    இதுவரை தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஸ்ரீ திவ்யா, தற்போது மலையாளத்தில் அறிமுகமாகி உள்ளார். டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் பிரித்விராஜ் நாயகனாக நடித்துள்ள ‘ஜன கண மண’ படத்தில் நடிகை ஸ்ரீ திவ்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நேற்றி வெளியான இப்படத்தின் புரோமோ யூடியூபில் டிரெண்டாகி வருகிறது.
    "அரங்கேற்றம்'' படத்துக்குப்பிறகு பாலசந்தரின் மகத்தான படமாக அமைந்தது, "அவள் ஒரு தொடர்கதை.'' நல்ல படம் என்ற பெயர் எடுத்ததுடன், வசூலிலும் சாதனை புரிந்தது.
    "அரங்கேற்றம்'' படத்துக்குப்பிறகு பாலசந்தரின் மகத்தான படமாக அமைந்தது, "அவள் ஒரு தொடர்கதை.'' நல்ல படம் என்ற பெயர் எடுத்ததுடன், வசூலிலும் சாதனை புரிந்தது.

    "அரங்கேற்றம்'' படத்தைத் தொடர்ந்து, பாலசந்தர் திரைக்கதை, வசனம், டைரக்ஷன் பொறுப்புகளை ஏற்ற படம் "சொல்லத்தான் நினைக்கிறேன்.''

    இது, ஆனந்த விகடனில் "மணியன்'' எழுதிய கதை. இதை மணியனும், வித்வான் வே.லட்சுமணனும் சேர்ந்து படமாக எடுத்தனர்.

    இந்தப் படம் தயாரானது பற்றி மணியன் எழுதியிருப்பதாவது:-

    "ஆனந்த விகடனில் நான் "இலவுகாத்த கிளி'' என்ற குறுநாவலை எழுதியிருந்தேன். அப்புறம் நானே அதை நாடக வடிவில் தயாரித்தேன். சினிமாப்படங்கள் நூறாவது நாள் கொண்டாடுவது உண்டு. நூறாவது நாள் கொண்டாடிய நாடகம் "சொல்லத்தான் நினைக்கிறேன்.''

    அப்படிப்பட்ட ஒரு வெற்றி நாடகத்தை சினிமாவாக எடுக்க வேண்டும் என்று நானும், வித்வான் வே.லட்சுமணனும் ஆசைப்பட்டதில் ஆச்சரியமில்லை.

    நாங்கள் இருவருமாக பாலசந்தரிடம் போனோம். "நாங்கள் இதயம் புரொடக்ஷன்ஸ் சார்பில், `சொல்லத்தான் நினைக்கிறேன்' நாடகத்தைப் படமாகத் தயாரிக்க விரும்புகிறோம். நீங்கள்தான் டைரக்ட் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.

    சிறிது நேரம் யோசித்தார் அவர் பிறகு, "மிஸ்டர் மணியன்! நல்ல யோசனைதான். ஆனால் இதில் நான் சம்பந்தப்பட வேண்டுமா என்று யோசித்துப் பாருங்கள். இது ஒரு பாப்புலர் நாடகம். ஏற்கனவே நீங்கள் டைரக்ட் செய்து விட்டீர்கள். நீங்கள் இருவருமே எழுத்தாளர்கள். நானும் எழுத்தாளன். கருத்து வேறுபாடுகள் வருமே! என்ன செய்வீர்கள்?'' என்று கேட்டார்.

    நான் சிறிதும் தயங்கவில்லை. "இது உங்கள் குழந்தை. உங்கள் விருப்பப்படிதான் வளர்த்து உருவாக்கவேண்டும். நாங்கள் தலையிடமாட்டோம். கிரியேடிவ் ஆர்டிஸ்டுகளின் கருத்துக்களுக்கு மதிப்பு அளிப்பவர்கள் நாங்கள்'' என்று பதில் சொன்னேன்.

    `சொல்லத்தான் நினைக்கிறேன்' படம் உருவாகத் தொடங்கியது. படத்தில் வரும் காட்சிகள் மறக்க முடியாதவை. படத்தைப் பார்த்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களிலும் அவை அழியாமல் பதிந்து போயிருப்பது எனக்குத் தெரியும்.''

    இவ்வாறு மணியன் குறிப்பிட்டுள்ளார்.

    "சொல்லத்தான் நினைக்கிறேன்'' 1973 டிசம்பர் 7-ந்தேதி வெளிவந்த படமாகும். இந்தப் படத்தில் சிவகுமார் கதாநாயகன். கமலஹாசன் வில்லன். மற்றும் லட்சுமி, ஜெயசித்ரா, ஜெயசுதா ஆகியோர் நடித்தனர்.

    பின்னர் ஜெமினிகணேசன் சொந்தமாகத் தயாரித்த "நான் அவனில்லை'' என்ற படத்தை பாலசந்தர் இயக்கினார்.

    இதில் ஜெமினிகணேசன், ஒவ்வொரு ஊருக்கு செல்லும்போதும் ஒவ்வொரு பெயர் வைத்துக்கொண்டு, பல பெண்களைத் திருமணம் செய்து கொள்வார். மாறுபட்ட மேக்கப்களில் அற்புதமாக நடித்தார். ஜெமினிகணேசனின் நடிப்புத் திறமையை முழுமையாக வெளிப்படுத்திய படம் இது.

    இதன்பின் அரங்கண்ணல் தயாரிக்க பாலசந்தர் இயக்கிய படம் "அவள் ஒரு தொடர்கதை.''

    வானொலியில் பணியாற்றியவரும், எழுத்தாளர் "சுகி'' சுப்பிரமணியத்தின் மகனுமான எம்.எஸ்.பெருமாள் "வாழ்க்கை அழைக்கிறது'' என்ற பெயரில் எழுதிய குறுநாவல்தான் "அவள் ஒரு தொடர்கதை'' என்ற பெயரில் படமாகியது. திரைக்கதை, வசனம் எழுதினார், பாலசந்தர்.

    வேலைக்குச் செல்லும் பெண்களின் பிரச்சினையை மையமாகக் கொண்ட கதை. தன் குடும்பத்துக்காக, திருமணம் செய்து கொள்ளாமல் வேலைக்குச் செல்லும் பெண்ணாக சுஜாதா பிரமாதமாக நடித்தார். மற்றும் விஜயகுமார், ஜெய்கணேஷ், கமலஹாசன், ஜெய்சித்ரா, `படாபட்' ஜெயலட்சுமி ஆகியோர் நடித்தனர்.

    இளம் வயது கமலஹாசன், உள்ளத்தைத் தொடும் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். "கடவுள் அமைத்து வைத்த மேடை...'' என்ற பாடல் காட்சியை பிரமாதமாக படமாக்கியிருந்தார், பாலசந்தர்.

    13-11-1974-ல் வெளிவந்த "அவள் ஒரு தொடர்கதை'' மகத்தான வெற்றிப்படமாக அமைந்தது. அது மட்டுமல்ல, "மக்கள் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் படம் அமையவேண்டும்'' என்ற லட்சியத்தில், பாலசந்தர் முழு வெற்றி பெற்றார்.

    "அரங்கேற்றம்'' தமிழ்ப்பட உலகில் எப்படி ஒரு மைல்கல்லோ, அது போல மற்றொரு மைல்கல் "அவள் ஒரு தொடர்கதை.''

    இது இந்தி, தெலுங்கு உள்பட ஐந்து மொழிகளில் படமாகியது.

    இந்தக் காலக்கட்டத்தில் பாலசந்தர் ரொம்பவும் "பிசி''யாக இருந்தார். இரவு -பகல் என்று பாராமல் படப்பிடிப்பில் ஈடுபட்டார்.

    இரவில் எவ்வளவு தாமதமாக படுக்கச் சென்றாலும், காலை 6 மணிக்கு படுக்கையில் இருந்து எழுந்து விடுவார். சிற்றுண்டிக்குப்பின் காலை 9 மணிக்கு படப்பிடிப்புக்கு கிளம்பி விடுவார்.

    பாலசந்தர், ஆரம்ப காலத்தில் அக்கவுன்டென்ட் ஜெனரல் ஆபீசில் வேலை பார்த்துக்கொண்டே, லீவு போட்டுவிட்டு சினிமா படங்களில் பணியாற்றி வந்தார். ஒரு கட்டத்தில், "சினிமாவா? வேலையா?'' என்று முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்தது.

    பட அதிபர் ஏவி.மெய்யப்ப செட்டியாரை சந்தித்து இதுபற்றி ஆலோசனை கேட்டார். "வேலையை விட்டு விட்டு, சினிமாவுக்கு வந்துவிடலாமா? அதில் நான் வெற்றி பெறமுடியுமா? உங்கள் கருத்து என்ன?'' என்று கேட்டார்.

    அப்போது ஏவி.எம்., "உங்கள் திறமையில் உங்களுக்கே நம்பிக்கை இல்லையா? உங்கள் திறமையில் உங்களுக்கு சந்தேகம் இருக்குமானால், நான் இப்பொழுதே வருடத்திற்கு 3 படங்கள் நீங்கள் தயாரிப்பதற்கு 3 வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன்'' என்று கூறினார்.

    இதனால் பாலசந்தருக்கு நம்பிக்கை ஏற்பட்டது. வேலையை ராஜினாமா செய்துவிட்டு படத்தொழிலில் தீவிரமாக இறங்கினார்.
    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற சூரரைப் போற்று திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் களமிறங்கியுள்ளது.
    சூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிய இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. 

    கடந்த ஆண்டு ஓ.டி.டி தளத்தில் வெளியான படங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம் என்ற சாதனையை சூரரைப் போற்று படைத்தது. 

    இந்நிலையில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் களமிறங்கியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த முறை ஆஸ்கர் போட்டியில் சில மாற்றங்களைச் செய்துள்ளனர். அதன்படி ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் கூட ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கலாம்.

    சூர்யா

    அந்த வகையில் பொதுப்பிரிவில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்  சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் போட்டியிடுகிறது. இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
    எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாக்சி அகர்வால், இனியா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நான் கடவுள் இல்லை’ படத்தின் முன்னோட்டம்.
    நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் ஆகிய புரட்சிகரமான கருத்துகள் அடங்கிய படங்களை இயக்கிய எஸ்.ஏ.சந்திரசேகரன் மீண்டும் அதேபோன்ற புரட்சிகரமான கருத்துகளை கொண்ட ஒரு புதிய படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். இந்த படத்துக்கு அவர், ‘நான் கடவுள் இல்லை’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.

    இதில் சமுத்திரக்கனி சி.பி.சி.ஐ.டி. அதிகாரியாக நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக, ‘வாகை சூடவா’ ‘மவுனகுரு’ ஆகிய படங்களில் நடித்த இனியா நடித்துள்ளார். இவர்களுடன் துணிச்சல் மிகுந்த போலீஸ் அதிகாரியாக சாக்சி அகர்வால் நடிக்க, மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில், ‘பருத்தி வீரன்’ புகழ் சரவணன் நடித்துள்ளார்.

    எஸ்.ஏ.சந்திரசேகரன், சமுத்திரக்கனி

    ஓய்வுபெற்ற வழக்கறிஞராக எஸ்.ஏ.சந்திரசேகரன், அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தில் ரோகிணி, நகைச்சுவை வேடத்தில் இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்துள்ளனர். மகேஷ் கே.தேவ் ஒளிப்பதிவு செய்ய, சித்தார்த் விபின் இசையமைத்து இருக்கிறார். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. 

    படத்தில் நடித்து முடித்துள்ள சமுத்திரக்கனி கூறும்போது, ‘‘எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் வெளிவந்த ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தை 64 முறை பார்த்து ரசித்தவன், நான். அவருடைய இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். அது நிறைவேறியதில் மகிழ்ச்சி’’ என்றார்.
    ×