என் மலர்
சினிமா செய்திகள்
தென்னவன், சசி, அனு கிருஷ்ணா, டிட்டோ ஷார்மின் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் இது விபத்து பகுதி படத்தின் விமர்சனம்.
மூன்று ஆண்கள், ஒரு பெண் ஆகிய நான்கு பேரும் ஒரு வீட்டில் இருந்து கொண்டு ஜாலியாக கதைகளை பேசுகிறார்கள். ஒவ்வொரு கதைகளிலும் ஒருவர் இறக்கிறார். கதைகளில் இறந்தவர்கள் யார்? எப்படி இறந்தார்கள்? இறந்தவர்களுக்கு கதை சொல்லும் நான்கு பேருக்கு என்ன தொடர்பு? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஆந்தாலஜி பாணியில் நான்கு கதைகளை உருவாக்கி இயக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய் திருமூலம். நான்கு கதைகள், நான்கு கதைகளில் சொல்ல வந்த விஷயத்தை சுருக்கமாக சொல்லி இருக்கலாம். பல காட்சிகள் வேண்டுமென்றே திணித்தது போல் இருந்தது. இவரே ஒளிப்பதிவையும் செய்து இருக்கிறார்.

கதாப்பாத்திரங்கள் இடையே இன்னும் அதிகமாக வேலை வாங்கியிருக்கலாம். விபத்து ஏற்படுவதும், அதற்கான காட்சியமைப்பையும் விறுவிறுப்பாக இல்லை.
தென்னவன், சசி, அனு கிருஷ்ணா, டிட்டோ ஷார்மின் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். ஆதிஷ் உத்ரியன், சாய்தர்ஷன் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
மொத்தத்தில் 'இது விபத்து பகுதி' தடுமாற்றம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்சேதுபதி தெலுங்கிலும் மாஸ் காட்ட ஆரம்பித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது தெலுங்கில் உப்பெனா என்னும் வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் கடந்த வாரம் வெளியானது.

புஜ்ஜி பாபுவின் இயக்கத்தில் வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி நடித்திருந்த இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இப்படத்திற்கு பத்திரிகையாளர்கள் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படம் வெளியான மூன்று நாட்களிலேயே சுமார் 45 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

விஜய்சேதுபதியின் நடிப்பு வியக்க வைத்திருப்பதாக தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழை போலவே தெலுங்கிலும் மாஸ் காட்ட தொடங்கி விட்டார் விஜய் சேதுபதி.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரை பாராட்டி இருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. இந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகளையும், 2-வது இன்னிங்ஸில் சதம் அடித்து 106 ரன்களில் ஆட்டமிழந்த அஸ்வின் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் சமூக வலைதளத்தில் அஸ்வினை வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில்,

"ப்ரோ, நீங்க ஒரு ஹீரோ. இந்த களத்தில் சதம் என்பது பார்க்க அற்புதமாக இருந்தது. இப்படியே தொடருங்கள். உத்வேகம் தரக்கூடிய இன்னும் பல தருணங்களை உங்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று பதிவு செய்துள்ளார்.
இளையராஜா புதியதாக திறந்திருக்கும் ஸ்டுடியோவை பார்த்து வியந்த ரஜினி, கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு என்று பாராட்டி இருக்கிறார்.
சென்னை தி நகரில் இளையராஜா சொந்தமாக "இளையராஜா ஸ்டுடியோ" என்ற பெயரில் ஸ்டுடியோ கட்டி இசைப்பணிகள் மேற்கொண்டு வருகிறார். திரைப்படங்களின் பாடல் மற்றும் பின்னணி இசை பதிவு பணிகள் அங்கே நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று இளையராஜாவின் தி நகர் வீட்டுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த், அவருடன் பல விஷயங்கள் பேசியிருக்கிறார். பின்னர் இளையராஜா சொந்த ஸ்டுடியோ கட்டியிருப்பதை கேள்விப்பட்டு அந்த ஸ்டுடியோவுக்கு இளையராஜாவுடன் சென்று இருக்கிறார் ரஜினிகாந்த். ஸ்டுடியோவை சுற்றி பார்த்து, வியந்து, கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது என பாராட்டி இருக்கிறார். பின்னர் இசைஞானியுடன் நீண்ட நேரம் பல விஷயங்கள் பேசியிருக்கிறார்.

இந்நிலையில் இன்றும் 2வது முறையாக இளையராஜா ஸ்டுடியோவுக்கு மீண்டும் வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் ரஜினிகாந்த். சமீபகாலமாக பொது நிகழ்ச்சி, விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்த்து வரும் ரஜினியின் இந்த வருகை பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு மைதானத்தில் நடனமாடியிருக்கிறார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்று அபாரமாக வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் 2-வது இன்னிங்சில் அபாரமாக சதம் அடித்ததோடு முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திய தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் இருந்த போது மைதானத்தில் இருந்த அஸ்வின், விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு விஜய் போலவே நடனம் ஆடி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மிகப்பிரமாண்டமாக உருவாகும் “பிரம்மாஸ்த்ரா” திரைப்படத்தில் தனது பகுதிகளுக்கான படப்பிடிப்பை நடித்து முடித்திருக்கிறார் நாகார்ஜுனா.
நடிகர் நாகார்ஜுனா, இந்தியாவில் இது வரை இல்லாத வகையில் மிகப்பிரமாண்டமாக உருவாகும் “பிரம்மாஸ்த்ரா” திரைப்படத்தில் தனது பகுதிகளுக்கான படப்பிடிப்பை நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் வெகு விரைவில் முடிவடையவுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் நடிகர் நாகார்ஜுனா, ரன்பீர் கபூர், ஆலியா பட், இயக்குநர் அயன் முகர்ஜி ஆகியோருடன், எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரமாண்டமான “பிரம்மாஸ்த்ரா” படத்தின் படப்பிடிப்பு, பொது முடக்க காலத்திற்கு பிறகு கடந்த வருட இறுதியில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. அனைத்து வகையான முன்னெச்செரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், மிக தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. படப்பிடிப்பு மிக விரைவில் முடிவடையவுள்ள நிலையில் இப்படம் தமிழ், இந்தி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. படத்தின் உலகளாவிய வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறார்கள்.

அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகார்ஜுனா, மற்றும் மௌனி ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, மாநாடு, பத்து தல படத்தை தொடர்ந்து பிரபல இயக்குனருடன் இணைய இருக்கிறார்.
சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த மாதம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் மாநாடு படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து அடுத்ததாக பத்து தல படத்திலும், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்திலும் நடிக்க சிம்பு ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது அதனை தொடர்ந்து நடிகர் சிம்பு இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மதன் இயக்கத்தில் மூடர்கூடம் ராஜாஜி, சுஷ்மா ராஜ், பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகி உள்ள ‘டிக்டாக்’ படத்தின் முன்னோட்டம்.
ஃபேன் மேட் பிக்சர்ஸ் சார்பில் காமெடி கலந்த ஹாரர் த்ரில்லராக தயாராகி வரும் படம் 'டிக்டாக்'. இந்தப்படத்தை தயாரிப்பதுடன் படத்தை இயக்கியும் உள்ளார் மதன். 'எங்கிட்ட மோதாதே' படத்தை இயக்கிய ராமு செல்லப்பா இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.
மூடர்கூடம் ராஜாஜி, கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக சுஷ்மா ராஜ் நடித்துள்ளார். இவர் இந்தியா பாகிஸ்தான் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தவர். மேலும், சிவகார்த்திகேயன் ஜோடியாக டாக்டர் மற்றும் டான் படத்தில் நடித்துள்ள பிரியங்கா மோகன் இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் சாம்ஸ், முருகானந்தம், வினோதினி, நமோ நாராயணன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

படத்தின் இசையமைப்பாளர் ஏ.கே.ரிஷால் சாய். ராட்சசன் படத்திற்கு படத்தொகுப்பு செய்த ஷான் லோகேஷ் இந்தப்படத்திலும் தனது கைவண்ணத்தை காட்டியுள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கோவையிலேயே நடைபெற்றுள்ளது. மேலும் பிரமாண்டமான பேய் வீடு செட் ஒன்றையும் அமைத்து அதில் பல நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். விரைவில் இந்தப்படத்தின் இசைவெளியீடு நடக்கவுள்ளது. படத்தை மார்ச் மாதம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் அஜித், அடுத்ததாக பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளாராம்.
‘சதுரங்க வேட்டை’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஹெச்.வினோத். சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படம், மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் இயக்கிய ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அடுத்தடுத்து ஹிட் கொடுத்த ஹெச்.வினோத்திற்கு அடுத்ததாக அஜித் பட வாய்ப்பு தேடி வந்தது.
அதன்படி அஜித்தை வைத்து இவர் இயக்கிய ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் தனது அடுத்தபடத்தையும் இயக்கும் வாய்ப்பை அஜித் கொடுத்தார். இயக்குனர் ஹெச்.வினோத் தற்போது அஜித்தின் ‘வலிமை’ படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், வலிமை படத்துக்கு பின் அஜித் நடிக்க உள்ள புதிய படத்தையும் ஹெச்.வினோத் தான் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தையும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தயாரித்த போனி கபூர் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளதாகவும், ‘வலிமை’ படத்தின் ரிலீசுக்குப் பின் இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான்று அயலான் படத்தின் ‘வேற லெவல் சகோ’ என்கிற பாடலை படக்குழு வெளியிட உள்ளனர்.
இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அயலான். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்க, கருணாகரன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அறிவியல் சார்ந்த படமாக உருவாகி வரும் இதற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான்று இப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், அப்பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ள ‘வேற லெவல் சகோ’ என்கிற பாடலைத்தான் வெளியிட உள்ளார்களாம். இப்பாடல் நாளை காலை 11.03 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
‘பேச்சிலர்’ அடல்ட் காமெடி படமா என்பது குறித்து அப்படத்தின் இயக்குனர் சதீஷ் செல்வகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பேச்சிலர்’. இப்படத்தை இயக்குனர் சசியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சதீஷ் செல்வகுமார் இயக்கி உள்ளார். இதில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப்படம் குறித்து இயக்குனர் சதீஷ் செல்வகுமார் கூறியதாவது: பேச்சிலர் படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்த்துவிட்டு இது அடல்ட் காமெடி படமா என்று கேட்கிறார்கள். கண்டிப்பாக இது அப்படிப்பட்ட படம் இல்லை. பேச்சுலர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யங்களைத் தான் படமாக எடுத்திருக்கிறோம்.

எந்த இடத்திலும் எல்லை மீறாமல் படமாக்கி இருக்கிறோம். பேச்சிலர் என்கிற நிலையில் இருந்து ஒரு முழுமையான மனிதன் என்கிற நிலைக்கு ஒருவன் மாறும்போது ஏற்படுகிற மனமாற்றத்தை பதிவு செய்திருக்கிறது இப்படம்.
இது குடும்பத்தினருடன் வந்து பார்க்கும்படியான படமாக இருக்கும். படத்தில் எந்த விதமான சர்ச்சைக்குரிய விஷயங்களும் இல்லை. அனைவருக்கும் பிடிக்கும்படியான படமாக இது இருக்கும்” என்றார்.
அமீர் கானின் ‘லால் சிங் சட்டா’ படத்தில் நடிக்காததற்கான உண்மை காரணத்தை நடிகர் விஜய் சேதுபதி சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
ஹாலிவுட்டில் பிரபலமான திரைப்படம் ‘பாரஸ்ட் கம்ப்’. இந்த படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ‘லால் சிங் சட்டா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அமீர் கான் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார். மேலும் இதில் அமீர் கானின் நண்பராக நடிக்க ஒப்பந்தமான விஜய் சேதுபதி, சமீபத்தில் அப்படத்தில் இருந்து விலகினார்.
அப்படத்திற்காக உடல் எடையை குறைக்க முடியாத காரணத்தால் தான் விஜய் சேதுபதி அப்படத்தில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. இந்நிலையில், அதனை திட்டவட்டமாக மறுத்துள்ள விஜய் சேதுபதி, அதற்கான காரணத்தையும் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது: “கொரோனா லாக்டவுன் காரணமாக அப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. லாக்டவுனுக்கு பின் ஐந்து தெலுங்கு படங்களில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால், அமீர் கான் படத்திற்கான தேதிகள் ஒதுக்க முடியாமல் போனது. இருப்பினும் விரைவில் அவருடன் பணியாற்றுவேன் என்ற நம்பிக்கை உள்ளது” என கூறியுள்ளார்.






