என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகர் சாந்தனுவின் தந்தை கே.பாக்யராஜ் மற்றும் தாயார் பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    கொரோனா தொற்றின் 2-வது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் சிலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    இந்நிலையில், தற்போது பிரபல இயக்குனர் கே.பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோருக்கு  கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை அவர்களது மகனும், நடிகருமான சாந்தனு தனது டுவிட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.

    சாந்தனுவின் டுவிட்டர் பதிவு

    இது தொடர்பாக நடிகர் சாந்தனு டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “எனது பெற்றோர் கே.பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து எங்கள் வீட்டில் உள்ள பணியாளர்கள் உட்பட அனைவரும் மருத்துவரின் அறிவுரையின் பேரில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறோம். 

    கடந்த 10 நாட்களில் எங்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனது பெற்றோர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்." இவ்வாறு சாந்தனு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
    பஞ்சவர்ணம் மரணமடைந்த செய்தி அறிந்த நடிகர் கார்த்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார்.
    அமீர் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான படம் பருத்திவீரன். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன. மேலும் நடிகர் கார்த்தி இப்படத்தின் மூலம் தான் நடிகராக அறிமுகமானார். 

    இப்படத்தில் நடிகர் கார்த்தியின் அப்பத்தாவாக நடித்திருந்தவர் பஞ்சவர்ணம். அவரின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பஞ்சவர்ணம், நேற்று காலமானார். அவரது மறைவுக்கு நடிகர் கார்த்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    கார்த்தியின் டுவிட்டர் பதிவு

    இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “பருத்திவீரனில் எனது அப்பத்தாவாக வாழ்ந்த பஞ்சவர்ணம் பாட்டி இறந்த செய்தி அறிந்தேன். அவரின் பாசமான குரலும், வெள்ளந்தி சிரிப்பும் இன்றும் என் கண் முன்னே நிற்கிறது. அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
    நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வரும் நிலையில், அவர் நடிக்க உள்ள அடுத்த 3 படங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
    நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு அஜித் மீண்டும் வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. வெளிநாட்டில் படமாக்க வேண்டிய சில காட்சிகள் மட்டுமே பாக்கி உள்ளது. கொரோனா 2-வது அலை பரவலால் அந்த காட்சிகளை படமாக்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. 

    இதனிடையே, அஜித் நடிக்கும் 61-வது படத்தையும் வினோத் இயக்குவதாகவும் போனிகபூர் தயாரிப்பதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. 61-வது படத்துக்கான திரைக்கதையை வினோத் தயார் செய்து அஜித்திடம் சொன்னதாகவும் அவருக்கு கதை பிடித்துவிட்டதால் நடிக்க சம்மதம் சொல்லி விட்டதாகவும் கூறப்படுகிறது.

    அஜித்

    இந்த நிலையில் அஜித் நடிக்க உள்ள மேலும் 2 படங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் ஒரு படத்தை சூர்யாவின் சூரரை போற்று படம் மூலம் பிரபலமான சுதா கொங்கரா இயக்குவதாகவும் இன்னொரு படத்தை சிவா இயக்குவதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது.

    ஆனாலும் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. சிவா ஏற்கனவே அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள அமைச்சரவையில் அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் அமைச்சர்கள் அனைவரும் பதவி ஏற்றனர்.
    சென்னை:

    சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து, ஆட்சியமைக்கும் பணிகளை திமுக தொடங்கியது. சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார்.

    தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியலையும் அப்போது கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் அளித்தார். அத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதைத்தொடர்ந்து முதலமைச்சராக மு.க.ஸ்டாலினை பதவி ஏற்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார்.

    இதைத்தொடர்ந்து இன்று சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள அமைச்சரவையில் அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் அமைச்சர்கள் அனைவரும் பதவி ஏற்றனர்.

    தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் பதவியேற்றார்

    இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

    ‘முடித்தே தீர வேண்டிய’ பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ‘மக்களின் முதல்வராக’ பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

    சுவாசிப்பதற்கு ‘உயிர் காற்று’கூட கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகிற இந்த பேரிடர் காலத்தில், நீங்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. தங்கள் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சியடையும் என்று நம்புகிறோம்.

    தங்களுக்கும், ஆற்றலும் அனுபவமும் நிறைந்த தமிழக அமைச்சர் பெருமக்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகள்.

    தமிழகத்தில் உரிமையை மீட்க தமிழர்களின் ஒருமித்த குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    டைரக்டர் பாலசந்தர் டைரக்ஷனில் குஷ்பு நடித்த ஒரே படம் "ஜாதிமல்லி.'' குஷ்பு புகழின் சிகரத்தில் இருந்த நேரத்தில், தங்கள் படத்தில் அவரை நடிக்கச் செய்யவேண்டும் என்று பட அதிபர்களும், டைரக்டர்களும் விரும்பினர்.
    டைரக்டர் பாலசந்தர் டைரக்ஷனில் குஷ்பு நடித்த ஒரே படம் "ஜாதிமல்லி.'' குஷ்பு புகழின் சிகரத்தில் இருந்த நேரத்தில், தங்கள் படத்தில் அவரை நடிக்கச் செய்யவேண்டும் என்று பட அதிபர்களும், டைரக்டர்களும் விரும்பினர்.

    பாலசந்தரும் குஷ்புவை வைத்து "ஜாதிமல்லி'' என்ற படத்தை உருவாக்கினார். சரிதாவின் கணவரான மலையாள நடிகர் முகேஷ், இதில் கதாநாயகனாக நடித்தார். புகழ் பெற்ற பாடகியாக இப்படத்தில் குஷ்பு நடித்தார். படம் நன்றாகவே இருந்தது. ஆனால் ஓட்டம் சுமார்தான்.

    இதே காலக்கட்டத்தில் பாலசந்தர் இயக்கிய "வானமே எல்லை'' சிறந்த படமாக அமைந்தது. ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலையை இப்படம் அலசியது. ரம்யாகிருஷ்ணன், மதுபாலா சிறப்பாக நடித்தனர்.

    இந்தப் படத்தில் ஒரு விசேஷம்: ஊனமுற்றவர்கள் மனம் தளரக்கூடாது, உழைத்து முன்னேறலாம் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசு அதிகாரியாக இருந்த எச்.ராமகிருஷ்ணன், கால் ஊனமுற்றவராக இருந்தும், படித்து முன்னேறி அரிய சாதனைகளை நிகழ்த்திய காட்சி, படத்தில் இடம் பெற்றது.

    இதன் பிறகு பாலசந்தர் இயக்கிய படம் "டூயட்'' (1994) இந்தப் படத்தின் மூலம்தான் பிரகாஷ்ராஜ் தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகமானார். அவருடன் பிரபு இணைந்து நடித்தார்.

    தன்னை அறிமுகப்படுத்திய பாலசந்தர் மீது மிகவும் அன்பும், மரியாதையும் வைத்திருப்பவர் பிரகாஷ்ராஜ். தன் படக்கம்பெனிக்கு, தான் நடித்த முதல் படத்தின் பெயரையே ("டூயட்'' மூவிஸ்) சூட்டியுள்ளார்.

    1996-ல் "கல்கி'' என்ற படத்தைத் தயாரித்தார் பாலசந்தர். கதாநாயகியை புரட்சிப் பெண்ணாகப் படைத்தார். அந்த வேடத்தில் ஸ்ருதி நடித்தார்.

    10 ஆண்டுகள் கழித்து சொல்ல வேண்டிய கருத்தை, மிகவும் முன்னதாக சொன்னதால், அதை ரசிகர்கள் ஜீரணிக்க முடியவில்லை. படம் தோல்வி அடைந்தது.

    பாலசந்தர் தயாரித்த சில படங்களை வேறு டைரக்டர்கள் டைரக்ட் செய்தனர். அவற்றில் முக்கியமான படம் "ரோஜா'' (1992). மணிரத்தினம் இயக்கிய இந்தப் படத்தின் மூலமாகத்தான் இசை அமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் அறிமுகமானார்.

    காஷ்மீர் தீவிரவாதிகளைப் பற்றிய இப்படத்தில், அரவிந்தசாமியும், மதுபாலாவும் ஜோடியாக நடித்தனர். தமிழில் வெளிவந்துள்ள மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக "ரோஜா'' மதிப்பிடப்படுகிறது.

    இந்தக் காலக்கட்டத்தில், டெலிவிஷன் சீரியல்கள் தயாரிப்பதில் பாலசந்தர் கவனம் செலுத்தினார்.

    "ரெயில் சினேகம்'', "கையளவு மனசு'', "காசளவு நேசம்'', "காதல் பகடை'', "ப்ரேமி'', "அண்ணி'', "சஹானா'' உள்பட சுமார் 12 மெகா சீரியல்களை உருவாக்கியுள்ளார். இவற்றில் "அண்ணி'' 338 நாட்களும், "சஹானா'' 317 நாட்களும் ஒளிபரப்பாயின.

    பாலசந்தரின் நீண்ட திரை உலகப்பயணத்தில், 1982-ம் ஆண்டு மே மாதம் 6-ந்தேதி நடந்த விபத்து, மிக பயங்கரமானதாகும்.

    நினைத்தாலே நெஞ்சை பதறச் செய்யும் அந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

    தமிழில் கமலஹாசன் - ஸ்ரீதேவி நடித்த "வறுமையின் நிறம் சிவப்பு'' படத்தை, இந்தியில் "ஜராசி ஜிந்தகி'' (வாழ்க்கையின் ஒரு துளி) என்ற பெயரில் தயாரித்தார், பாலசந்தர்.

    இந்தப் படத்தின் படப்பிடிப்பு இமாசலபிரதேசத்தில், இயற்கை அழகு மிக்க "குளு'' பள்ளத்தாக்கில் நடந்தது. படப்பிடிப்பு முடிந்ததும், பாலசந்தர், கமலஹாசன், ஒளிப்பதிவாளர் லோகநாதன் ஆகியோர் விமானம் மூலம் சென்னை திரும்பி விட்டனர்.

    படப்பிடிப்பு குழுவினர் ஒரு பஸ்சில் மலையிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தனர். பஸ்சில் 29 பேர் இருந்தனர்.

    வளைந்து வளைந்து சென்ற மலைப்பாதையில், பஸ் கீழே இறங்கிக் கொண்டிருந்தது. கடைசியாக இன்னும் ஒரே ஒரு வளைவுதான். அதைத் தாண்டிவிட்டால், சம வெளிக்கு வந்து விடலாம்.

    அந்த சமயத்தில்தான், எதிர்பாராத விதமாக பயங்கர விபத்து ஏற்பட்டது. எதிரே வந்த ஒரு காரின் மீது மோதி விடாமல் தடுக்க பஸ்சை திருப்பினார் டிரைவர்.

    பஸ் ஒரு பாறையில் மோதி, உருண்டு, அதள பாதாளத்தில் விழுந்தது.

    இந்த பயங்கர விபத்தில், ஒளிப்பதிவாளர் லோகநாதனின் சகோதரர் உள்பட 8 பேர் மாண்டனர். இணை இயக்குனர் அமீர்ஜான் படுகாயம் அடைந்தார். அப்போது உதவி நடன ஆசிரியையாக இருந்த கலாவும், உதவி இயக்குனராக இருந்த சுரேஷ்கிருஷ்ணாவும் அதிக காயம் இல்லாமல் தப்பினர்.

    இறந்தவர்களின் உடல்களை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர முடியாத நிலை. எட்டுப் பேர்களின் உடல்களும் அங்கேயே தகனம் செய்யப்பட்டன.

    இந்த பயங்கர விபத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீள பாலசந்தருக்கு நீண்ட காலம் பிடித்தது
    கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த குணசித்திர நடிகை உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதுவரை இல்லாத அளவாக இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

    ஒரே நாளில் புதிதாக நிறைய பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. அதுபோல், நிறைய பேர் கொரோனாவால் பலர் உயிர் இழந்து வருகிறார்கள்.

    அபிலாஷா பட்டீல்

    இந்த தொற்றுக்கு பிரபலங்களும் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல இந்தி குணசித்திர நடிகை அபிலாஷா பட்டீல் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். இவர், சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த சிச்சோரே, அக்‌ஷய்குமார் நடித்த குட் நியூஸ், பத்ரிநாத் கி துல்ஹானியா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். டிவி சீரியல்களில் நடித்திருக்கிறார். இவரது மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
    பிரபல நடிகையின் மகள் சமூக வலைத்தளத்தில் ரசிகர் கேட்ட கேள்விக்கு நடிக்கும் எண்ணம் இதுவரை இல்லை என்று கூறியிருக்கிறாராம்.
    இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, நடிகை ரோஜா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு அன்சுமாலிகா என்ற மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். மகள் அன்சுமாலிகா சினிமாவில் நடிக்கப் போவதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன. 

    அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் சினிமாவில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், 

    ரோஜாவின் மகள்

    “வருங்காலத்தில் எனது மனம் என்ன சொல்கிறதோ அதன்படிதான் நடப்பேன், இதுவரைக்கும் நடிக்கும் எண்ணம் இல்லை” என்று அவர் பதில் அளித்து இருக்கிறாராம்.
    கமலின் 2வது மகளும் நடிகையுமான அக்ஷரா ஹாசனின் புதிய கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக் குவித்து வருகிறார்கள்.
    கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் ஷமிதாப் என்னும் இந்தி படத்தில் அறிமுகமானார். தமிழில் விவேகம், கடாரம் கொண்டான் படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார். தந்தை கமலுக்காக தேர்தலில் வீதியில் இறங்கி குத்தாட்டம் போட்டார்.

    அக்ஷரா ஹாசன்

    இந்நிலையில் அக்‌ஷரா ஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார்கள். மேலும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளருமான கேபிரில்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    நடன நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் கேபிரில்லா. இதையடுத்து இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான '3' படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்து அசத்தினார். இதன் பின் ஒரு சில திரைப்படங்களில் நடித்த கேபி பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

    கேபிரில்லா

    தற்போது இவர் பிக்பாஸ் ஜோடிகள் என்ற புதிய நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் கேபி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் 'தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தான் வந்தேன். ஆனாலும் கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. உங்களது அன்பிற்கு நன்றி. நான் நலமுடன் தான் இருக்கிறேன். தயவுசெய்து நீங்களும் பாதுகாப்புடன் இருங்கள், அன்பை மட்டுமே பரப்புங்கள் கொரோனாவை பரப்பாதீர்கள்' என்று பதிவிட்டுள்ளார்.
    கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற வானதி சீனிவாசனை அஜித் ரசிகர்கள் விடாமல் துரத்தி வருகிறார்கள்.
    கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டவர் வானதி சீனிவாசன். சமூக வலைத்தளத்தில் அஜித் ரசிகர் ஒருவர் ‘வலிமை அப்டேட் எப்போது கிடைக்கும் என்று ஒருநாள் கேட்டு இருந்தார். அப்போது வானதி சீனிவாசன் அதற்கு பதிலளிக்கையில் ’நான் வெற்றி பெற்றவுடன் நிச்சயமாக வலிமை அப்டேட் கிடைக்கும் தம்பி’ என பதிலளித்திருந்தார்.

    இந்த நிலையில் தற்போது வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு வாழ்த்துக் கூறிய அஜித் ரசிகர்கள் ’நீங்கள் வாக்குறுதி கொடுத்தபடியே ’வலிமை’ அப்டேட்டை கேட்டு சொல்லுங்க’ என்று விடாமல் கேட்டு வருகின்றனர். 

    வலிமை

    அஜித் ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ’வலிமை’ அப்டேட்டை வானதி சீனிவாசன் தருவாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தனது 31வது படத்தின் படப்பிடிப்பை பூஜை போட்டு தொடங்கி இருக்கிறார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தற்போது எனிமி படத்தில் நடித்து வருகிறார். ஆனந்த் சங்கர் இயக்கும் இப்படத்தில், விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கிறார். கதாநாயகியாக மிருனாளினி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. 

    எனிமி படத்துக்கு பிறகு விஷாலின் 31-வது படத்தை, புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர் குள்ளநரி கூட்டம் இயக்குனர் பாலாஜி, தேன் பட இயக்குனர் கணேஷ் விநாயக் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். எது தேவையோ அதுவே தர்மம் என்ற குறும்படத்தையும் இயக்கி பல விருதுகளை பெற்றார்.

    விஷால் படகுழுவினர்

    தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. ‘அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் ஒரு சாமானியன்’ என்ற கதை கருவில் இப்படம் தயாராக இருக்கிறது.
    ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகிவரும் ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
    பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. 

    மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

    ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினர்

    இந்நிலையில் ஆர் ஆர் ஆர் படத்தின் இயக்குனர் ராஜமவுலி, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், அலியா பட் ஆகியோர் கொரோனா விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதில் பொது மக்கள் பாதுகாப்புடன், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், கொரோனா தடுப்பூசி அனைவரும் போட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.

    ×