என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகை சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் சமீபத்திய பேட்டியில் கொரோனா குறித்து கூறியதாவது: “நம்பிக்கை, நேர்மறை சிந்தனைகள் இரண்டும் எந்த மாதிரி கஷ்டமான நிலைமை வந்தாலும் நம்மை காப்பாற்றும். கொரோனா நம்மை சுற்றி முற்றுகையிட்டு இருக்கிறது. எல்லோருக்கும் மூச்சுத்திணறுவது மாதிரி எங்கு பார்த்தாலும் கொரோனா பயத்தில்தான் இருக்கிறார்கள். 

    அந்த வைரஸை எதிர்த்து போராட முடியும் என்ற தைரியம் எல்லோருக்கும் இருக்க வேண்டும். கஷ்டம் வந்து விட்டது என்று உயிரை மாய்த்துக்கொள்வது, கொரோனா வந்து விட்டது என்று தற்கொலை செய்து கொள்வது என்றெல்லாம் செய்யக்கூடாது. தைரியத்தை மட்டும் இழக்கவே கூடாது.

    சமந்தா

    கொரோனா தடுப்பு மருந்து எல்லோருக்கும் கிடைக்கும். கொரோனா தடுப்பு ஊசி எல்லோரும் போட்டு முடிக்கிற காலமும் விரைவில் வரும். முக கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடித்து எச்சரிக்கையாக இருந்தால் நாம் கொரோனாவை ஜெயித்து விடலாம். நாம் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம். அதை தாண்டி வருவோம்’' என்றார்.
    தங்கர் பச்சான் இயக்கத்தில் விஜித் பச்சான், மிலனா நாகராஜ், அஸ்வினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ படத்தின் முன்னோட்டம்.
    கிராமத்துப் பின்னணியையும் கிராமத்து வாழ்க்கையின் யதார்த்தையும் தனது திரைக்கதையின் மூலம் அழுத்தமாக பதிவு செய்த இயக்குநர் தங்கர் பச்சான், சென்னை நகரத்தை மையமாகக் கொண்டு நகைச்சுவைப் படத்தை இயக்குகிறார். அப்படத்திற்கு 'டக்கு முக்கு டிக்கு தாளம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. 

    பல முன்னணி கதாநாயகர்களை மாறுபட்ட பாத்திரத்தில் காண்பித்த தங்கர் பச்சான் இப்படத்தின் மூலம் தனது மகன் விஜித் பச்சானைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார். முதல் படத்திலேயே தன் மகனை நகைச்சுவைப் பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.

    டக்கு முக்கு டிக்கு தாளம் படக்குழு

    விஜித் பச்சான் நாயகனாக நடிக்க, மிலனா நாகராஜ், அஸ்வினி இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். மன்சூர் அலிகான், ஸ்டண்ட் சில்வா, யோகிராம் மூவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - தங்கர் பச்சான். இசை - தரண்குமார். ஒளிப்பதிவு - பிரபு, தயாளன், சிவபாஸ்கரன் படத்தொகுப்பு - சாபு ஜோசப், கலை - சக்தி செல்வராஜ், நடனம் - தினேஷ், சண்டைப்பயிற்சி - ஸ்டன்ட் சில்வா.
    தமிழில் உருவாகி உள்ள மாநாடு படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.
    சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    மாநாடு படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்த நிலையில், தற்போது அடுத்தக்கட்ட பணிகளை தொடங்கி உள்ளனர். அதன்படி மாநாடு படத்தின் டப்பிங் பணிகளை இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். மேலும் பூஜையின் போது படக்குழுவினருடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

    மாநாடு படக்குழு

    தமிழில் உருவாகி உள்ள மாநாடு படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ‘ஒரு தலை ராகம்’ படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளருமான இப்ராஹிம், உடல்நலக் குறைவால் இன்று காலமானார்
    1980-ல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் ‘ஒரு தலை ராகம்’. டி.ராஜேந்தர் எழுதியிருந்த, இப்படத்தின் கதையை படமாக இயக்கி, தயாரித்திருந்தார் இப்ராஹிம். இப்படம் வெற்றி பெற்றதோடு, டி.ராஜேந்தர் எனும் பன்முக திறமை கொண்ட கலைஞனையும் உருவாக்கியது. அதன்பின் ஓரிரு படங்களை மட்டும் தயாரித்தார் இப்ராஹிம். 

    இந்நிலையில் இயக்குனரும், தயாரிப்பாளருமான இப்ராஹிம், உடல்நலக் குறைவால் இன்று காலமானார். ஒரேநாளில் நடிகர் பாண்டு, பாடகர் கோமகன், தயாரிப்பாளர் இப்ராஹிம் என அடுத்தடுத்து மூன்று பேர் மரணமடைந்தது, தமிழ் திரையுலகினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    டி.ராஜேந்தர்

    இப்ராஹிம் மறைவுக்கு டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “1980ல் வெளியான என் முதல் படமான ‘ஒரு தலை ராகம்’ படத்தின் தயாரிப்பாளர் இப்ராஹிம் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி என் இதயத்தில் ஈட்டியாய் பாய்கிறது. மீளா அதிர்ச்சிக்கு உள்ளானேன். காரணம் அவர் அரங்கக்குடியில் பிறந்தவர். என்னை திரையுலகிற்கு அரங்கேற்றம் செய்தவர். 

    வடகரை பக்கத்தில் வாழ்ந்தவர். என் திரையுலக வாழ்க்கை படகை கரை சேர்த்தவர். இன்று ஏன் மறைந்தார். இந்த உலகை விட்டு பிரிந்தார். கண்ணீர் கண்களை நனைக்கிறது. என் மனம் கடந்த காலத்தில் அவரோடு வாழ்ந்த காலத்தை நினைக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை கூறிக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
    நட்சத்திர தம்பதிகளான சமந்தா - நாக சைதன்யா ஜோடியின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
    2010ல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சமந்தா. அதன்பின் சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும், அவரை தெலுங்கு திரையுலகம்தான் முன்னணியில் கொண்டு வந்தது. தொடர்ந்து அங்கு பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். 

    பின்னர் தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா, திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். 

    சமந்தா, நாக சைதன்யா

    இந்நிலையில், சமந்தா - நாக சைதன்யா தம்பதியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இத்தம்பதியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.122 கோடியாம், இதில் சமந்தாவின் சொத்து மதிப்பு ரூ.84 கோடி என்றும், நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு ரூ.38 கோடி என்றும் கூறப்படுகிறது.
    புதிய இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கு தனது ஓடிடி தளம் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என நமீதா தெரிவித்துள்ளார்.
    கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் திரையரங்குகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், புதுப் படங்களை ஓடிடி தளங்களில் வெளியிட முனைப்பு காட்டி வருகின்றனர். இதனால் மக்களிடையே ஓடிடி தளங்களுக்கான மவுசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதனை கருத்தில் கொண்டு நடிகை நமீதா, புதிதாக ஓடிடி தளம் ஒன்றை தொடங்கி உள்ளார். ‘நமீதா தியேட்டர்’ என பெயரிடப்பட்டுள்ள அந்த ஓடிடி தளத்தில் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படங்களை மட்டும் வெளியிட அவர் திட்டமிட்டுள்ளார்.

    நமீதா

    மேலும், புதிய இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கு இந்த ஓடிடி தளம் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என தெரிவித்துள்ள நமீதா, சிறு பட தயாரிப்பாளர்களும் இத்தளத்தில் படங்களை திரையிடலாம் என கூறியுள்ளார். நமீதாவின் இந்த புதிய ஓடிடி தளம் அடுத்தமாதம் முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளதாம்.
    நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கும் நிலையில், தற்போது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
    தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. நடிகை மட்டுமல்லாமல் இவர் சிறந்த பாடகியும் ஆவர். நடிகை ஆண்ட்ரியா ‘வடசென்னை’ ‘தரமணி’ போன்ற படங்களில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார். இவர் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் ‘பிசாசு 2’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    ஆண்ட்ரியாவின் இன்ஸ்டாகிராம் பதிவு

    இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது: “கடந்த வாரம் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. என்னை கவனித்துக்கொண்ட நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் நன்றி. தற்போது நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறேன். நன்றாக குணமடைந்து வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.
    விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகர் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிப்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
    மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் 2017-ல் வெளிவந்த படம், ‘விக்ரம் வேதா’. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற, இப்படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆக இருக்கிறது. மாதவனாக சயீப் அலிகானும், விஜய் சேதுபதியாக அமீர் கானும் நடிப்பதாக இருந்தது. பின்னர் அமீர் கான் இப்படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக ஹிருத்திக் ரோஷன் நடிக்க ஒப்பந்தமானார்.

    ஹிருத்திக் ரோஷன்

    இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கொரோனா பாதிப்பு தணிந்ததும் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் நடிகர் ஹிருத்திக் ரோஷன், கொரோனா பரவல் குறைந்ததும் பைட்டர், கிரிஷ் 4 மற்றும் டிஸ்னி நிறுவனம் தயாரிக்கும் தொடரில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். இதனால் விக்ரம் வேதா ரீமேக்கிற்கு கால்ஷீட் ஒதுக்க முடியாத சூழல் உருவாகி உள்ளதால், அவர் இப்படத்தில் இருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது.
    ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடலில் நடிகை சினேகாவுடன் நடித்த மாற்றுத்திறனாளியான கோமகன், கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளார்.
    சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் படத்தில் இடம்பெற்ற ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடலில் நடிகை சினேகாவுடன் நடித்தவர் மாற்றுத்திறனாளியான கோமகன். இவர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளார்.

    பார்வையற்றவரான கோமகன் ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடலில், ‘மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும் அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்’ என்ற வரியை உணர்ச்சிப்பூர்வமாக பாடி இருப்பார். இந்தப் பாடல் தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்தது. இதனால் கோமகன் பிரபலம் அடைந்தார். அவர் இசை பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். 2019-ம் ஆண்டு தமிழக அரசின் விருதினை பெற்றார்.

    இந்நிலையில், கோமகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஐ.சி.எப்.பில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கோமகன்

    பாடகர் கோமகன் மறைவுக்கு இயக்குனர் சேரன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ‘வார்த்தைகள் இல்லை, மனதிலும் குரலிலும் முழுக்க தன்னம்பிக்கை கொண்ட மனிதர். அவருடைய குழுவில் உள்ள 25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கியவர். காலையில் எழுந்ததும் கேள்விப்பட்ட இந்த செய்தி நெஞ்சை நொறுக்கியது. கோமகனின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
    கொரோனா பாதிப்பின் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் பாண்டு காலமானார். அவருக்கு வயது 74.
    கொரோனா பாதிப்பின் காரணமாக நகைச்சுவை நடிகர் பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை நடிகர் பாண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மனைவி குமுதா, தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். பாண்டு - குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய 3 மகன்கள் உள்ளனர். 

    பாண்டு

    கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்த நடிகர் பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து வந்தார். அதிமுக கட்சியின் கொடியை வடிவமைத்ததும் பாண்டு தான் என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டுவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார் தீபிகா படுகோனே.
    கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. முன்னணி நடிகர், நடிகைகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும் தற்போது கொரோனா தொற்றில் சிக்கி உள்ளார். 

    கடந்த ஒரு மாதமாக பெங்களூருவில் தனது பெற்றோருடன் தீபிகா படுகோனே வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு தீபிகா படுகோனேவின் தந்தை பிரகாஷ், தாய் உஜ்ஜால, தங்கை அனிஷா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    குடும்பத்தினருடன் தீபிகா படுகோனே

    இந்நிலையில் தீபிகா படுகோனேவுக்கு தற்போது பரிசோதனை செய்ததில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். தீபிகா படுகோனே கொரோனா தொற்றில் சிக்கி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் விரைவில் குணமடைய வாழ்த்தி வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.
    கடந்தாண்டு கொரோனா லாக்டவுன் போடப்பட்ட சமயத்தில் இருந்து தற்போது வரை ஏழை மக்களுக்கு எண்ணிலடங்கா உதவிகளை செய்துள்ளார் சோனு சூட்.
    தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சோனு சூட். இவர் ஏராளமான பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்தாண்டு கொரோனா லாக்டவுன் போடப்பட்ட சமயத்தில் இருந்து ஏழை எளிய மக்களுக்கு எண்ணிலடங்கா உதவிகளை செய்துள்ளார். 

    தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா தீவிரமாக பரவிவரும் நிலையில் நடிகர் சோனு சூட்டிடம் உதவி கேட்டு ஏராளமான அழைப்புகள், மெசேஜ்கள் குவிந்தவண்ணம் உள்ளது. அவர்களுக்கு தன்னால் இயன்றவரை உதவி வருகிறார் சோனு சூட்.

    சோனு சூட்

    அந்தவகையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில், கொரொனா நோயாளிகள் 22 பேர் ஆக்ஸிஜன் இல்லாமல் உயிருக்கு போராடி வருவதாகவும், அவர்களைக் காப்பாற்ற உதவி கேட்டு நடிகர் சோனு சூட்டை அணுகி உள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு உடனடியாக ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கிடைக்க ஏற்பாடு செய்து கொடுத்து 22 பேரின் உயிரைக் காப்பாற்றி உள்ளார் சோனு சூட். அவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
    ×